என்னுள் நீ வந்தாய் – 24A

என்னுள் நீ வந்தாய் – 24A

அழைப்புமணி சத்தம் கேட்டவுடன் சட்டென விலகினர். இருவரும் அசடு வழிய, மறுபடியும் அழைப்புமணி.

லட்சுமி, இசைப்பிரியா அவர்களை அழைக்கச் சென்ற ஜெயராமன் என்று அனைவரும் வந்திருந்தனர்.

வந்தவர்களை புன்முறுவலுடன் வரவேற்றாள் கவிதா.

கொஞ்ச நேரத்தில் மாமியாரும் மருமகளும் அடுப்பங்கரையைக் குத்தகை எடுத்துக்கொண்டு அவசரமாக சில பலகாரங்களை செய்தனர்.

கவிதா அவரிடம் அதிகம் பேசாவிட்டாலும், பேசின போதெல்லாம் நன்றாக பேசினாள்.

சிறிது நேரத்தில் பூஜை அறையை அலங்காரம் செய்துகொண்டிருந்தனர் கவிதாவும் ப்ரியாவும்.

அந்த நேரம் உள்ளே வந்த லட்சுமி, மேலே இருக்கும் படங்களுக்கு பூ வைத்துக்கொண்டிருந்த கவிதாவை பார்த்தவுடன் அகிலனை அழைத்தார்.

அவனை மேலிருக்கும் படங்களுக்கு பூ வைக்கசொல்லிவிட்டு, பலகாரங்களை சுவாமி முன் வைத்து பூஜைக்கு ஆயத்தமாக…

“கவிதா. நீ பாடுவியா? ஒரு கிருஷ்ண கானம் பாடலாம்ல” என்று மருமகளை கேட்க… பூ வைத்துக்கொண்டிருந்த அகிலன் சட்டென அவளை பார்த்தான்… அவளும் அவனைப் பார்த்தாள்.

“இல்லத்த. எனக்கு சுமாரா தான் பாடவரும்” என்றவுடன், அந்த பதிலை கேட்டு சிரித்துக்கொண்டே செருமினான்.

அவள் ‘சுமார்’ என்று சொன்னதை அவன் நக்கல் செய்வதுபுரிய, அவனை பார்த்து முறைத்துக்கொண்டு, “ப்ரியா இல்லாட்டி அவங்க அண்ணனை பாட சொல்லுங்க” என்று வேண்டுமென்றே அவனை வம்பிழுத்தாள் ‘என்னை கிண்டல் செய்கிறாயா’ என நினைத்து.

“ஐயோ அண்ணி! நான் பாடினா, வீட்டுக்குள்ள வர்ற கிருஷ்ணர் அப்படியே பின்பக்கமா ஓடிப்போய்டுவார். அதெல்லாம் அண்ணனுக்கு தான் வரும்” என்று ப்ரியா சொல்ல…

“நானும் அவனை பாடச்சொல்லி எவ்வளவோ தடவ கேட்டுட்டேன். ப்ச்!” என சலித்துக்கொண்டார் லட்சுமி.

‘என்ன இந்த குரல் வச்சுட்டு இவன் பாடுவானா? இவங்க சொல்றத பார்த்தா நல்லா பாடுவான் போலயே… பாடினா எப்படி இருக்கும்?’ என்று அவனை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே அவள் யோசிக்க, அவனும் அவளை பார்த்துக்கொண்டே வெளியே சென்று கதவில் சாய்ந்து கைகளைக் கட்டி நின்றுகொண்டான்.

கண்கள் மட்டும் அவள் மீது நிலைத்தது. அவளின் அந்த ஆச்சர்யம் கலந்த மைவிழிகள் வேறெங்கும் அவனை பார்க்கவிடவில்லை.

பின்… லட்சுமி பாட ஆரம்பிக்க, அந்த இடமே ரம்மியமாக தெரிந்தது.

அவளுக்கு இன்னமும் ஆச்சர்யம் இவ்வளவு இனிமையாக அவர் பாடுவாரா என… பின், ‘இவரே அகிலன் பாடுவான் என்று சொன்னால், ஒருவேளை நன்றாக பாடுவானோ…’ என யோசித்து அவன் மீது அவள் கண்கள் பட்டுப்பட்டு மீண்டது.

சரியாக அந்த நேரம் லட்சுமி, “அலைபாயுதே கண்ணா” என்று ஆரம்பிக்க…

கவிதாவின் கண்கள் மறுபடியும் அவனை பார்த்தது. இப்போது புரிந்தது அவன் ஏன் தன்னை நையாண்டி செய்தான் என.

அதை புரிந்துகொண்டவன் கவிதாவை பார்த்து சிரிப்பை அடக்க முயற்சித்து, முடியாமல் சின்னதாக சிரிக்க… அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

தெளிந்த நிலவு பட்டப்பகல்போல் எரியுதே–உன்

திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

அந்த அழகிய வரிகள் அவன் குரலில் இருந்து வந்த நேரம், சுற்றம் மறந்து, வாய்திறந்து கண்கள் விரிய அவனைப் பார்த்தாள் கவிதா!

‘அட! இந்த பாட்டு மேல் வாய்ஸ்ல இவ்ளோ நல்லா இருக்குமா… இப்போ தானே கேட்கறேன்! என்ன வாய்ஸ்டா…’ என்று அவள் பார்வை ஆச்சர்யத்திலிருந்து ரசனையாக மாறியது. கிட்டத்தட்ட யேசுதாஸ் போல கணீரென வெளிவந்தது அவன் பாடல்.

அவளின் விரிந்த கண்களையும்… திறந்த இதழ்களையும் மாறி மாறி பார்த்து புன்னகைத்துக்கொண்டே பாட, அதை உணர்ந்தவள் சட்டென வாயை மூடிக்கொண்டாள்.

அவன் அதை கண்டுக்கொண்டது போல் மெதுவாகத் தலையசைக்க, முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்… செவியை மட்டும் அவன் பாடலுக்கு அடிமையாக்கிவிட்டு.

இந்த மௌன மொழிகள் அனைத்தையும் ஒரு பார்வையாளர் போல் பார்த்துக்கொண்டிருந்தார் லட்சுமி.

இவ்வளவு வருடங்களாக பாடச்சொல்லி அவனைக் கேட்டிருக்கிறார். ஒரு முறை கூட அவன் இசைந்து கொடுக்கவில்லை. ஆனால் இன்று?

அவர் கண்கள் தானாக கவிதாவை பார்த்தது.

அவள் முகம் வெட்கத்தையும் சந்தோஷத்தையும் மாறி மாறி பிரதிபலித்தது. அவனின் இந்த மாற்றம் இவளால் தான் என புரிந்தது. அவன் சந்தோஷம் இப்போது இவளிடத்தில் என தெரிந்தது.

இருவரும் சேர்ந்து வந்தனர் என தன் கணவன் சொன்னபோது கொஞ்சம் புரிய, இன்று வீட்டினுள் வரும்போதே இருவரின் முகமாற்றமும் வெளிப்படையாகத் தெரிய…

இப்போது உறுதி ஆனது. மகன் வாழ்க்கை கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை தந்த நிறைவு, கண்களின் வழியாக கண்ணீராகக் கிருஷ்ணரை அடைந்தது.

ஒருவழியா பூஜை முடிய… கவிதாவின் மனதுக்குள் லட்சுமி சொன்னதே ஓடிக்கொண்டிருந்தது.

ஏன் பல வருடங்களாக அவன் பாடவில்லை? ஏதாவது மனவருத்தமாக இருக்குமோ? அவனிடம் கேட்டால் வருந்துவானோ?’ என்று நினைத்து லட்சுமியிடம் சென்றாள்.

“அத்த… ப்ரியா ரொம்ப நாளா லீவைஸ் ஜீன்ஸ் கேட்டுட்டு இருந்தா… இன்னையோட ஆஃபர் (offer) முடியுது. நாங்க போயிட்டு வந்துடறோம்” என சொல்ல… அதைக்கேட்ட ப்ரியா அம்மாவை நச்சரித்தாள்.

கவிதா தன் குடும்பத்தோடு ஒட்டுவது புரிய, மறுக்காமல் சரி என்றார்.

‘எங்கே அகிலனிடம் சொன்னால், தானும் வருவேன் என்று நிற்பானோ’ என நினைத்து லட்சுமியிடம் கேட்டாள்.

இதை தெரிந்துகொண்ட அகிலன் தானும் வருவதாக சொன்னான். எப்படியோ சரிகட்டிவிட்டு அவன் காரை கேட்க, அதற்கு பல அறிவுரைகள் அவனிடம் இருந்து.

“கவனமாக ஓட்டு. மெதுவாக செல். ஓரமாக செல்” என்று அவன் சொல்ல, “மெதுவா போணும்னா வேணும்னா காரை தள்ளிட்டு போகட்டுமா? அஞ்சு வருஷமா ஓட்டறேன்” என அவள் வாக்குவாதம் செய்ய…

அவனை சமாளித்துவிட்டு கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது கவிதாவிற்கு.

கவிதா காரை எடுத்தவுடன்… “என்ன அண்ணி… திடீர்ன்னு. என்ன தெரிஞ்சுக்கணும் அண்ணனை பத்தி” புன்னகையுடன் பேச்சை ஆரம்பித்தாள் ப்ரியா.

அவளின் இந்த வெளிப்படையான பேச்சு தான் மிகவும் பிடிக்கும் கவிதாவிற்கு.

“உன் அண்ணன்கிட்டயே கேட்கலாம். ஆனா ஃபீல் பண்ணுவானோன்னு தான் உன்கிட்ட கேட்கறேன்” என்றாள் கவிதா.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணமான நாள் முதல் ஏதோ பிரச்சனை, இருவரும் இணக்கமாக இல்லை என்று கொஞ்ச நாட்கள் முன்பு ஒருமுறை தாய், தந்தையிடம் பேசும்போது கேட்டிருக்கிறாள். ஆனால் தெரிந்துகொண்டதுபோல் இதுவரை காட்டிக்கொள்ளவில்லை.

“சொல்லுங்க அண்ணி என்ன தெரிஞ்சுக்கணும்?”

“உங்கண்ணன் ஏன் இவ்ளோ நாளா பாடலை? அத்த சொன்னாங்கல்ல?”

“ஹ்ம்ம்!” கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்த ப்ரியா பின், “அண்ணன் சின்ன வயசுல இருந்தே நல்லா பாடுவான். ஸ்கூல்ல நிறைய பாடிருக்கான்னு சொல்வாங்க. காலேஜ் படிக்கும்போது அவன்… அவனோட ஃபிரண்ட்ஸ் சேர்ந்து ‘தி ஃபீனிக்ஸ்’னு ஒரு பேண்ட் (band) வச்சிருந்தாங்க.

அதுல அண்ணா, அரவிந்த் அண்ணா, லோகேஷ் அண்ணா, அப்புறம் பானு அக்கா… இவங்க நாலுபேரும் தான். செம்ம ஃபேமஸ் காலேஜ் சர்க்ள்ஸ்’ல. இப்போகூட எங்க காலேஜ் ஆர்ட்ஸ் அண்ட் லிட்ரேச்சர் கிளப்ல இவங்க பேண்ட் போட்டோ இருக்கு.

இவங்களுக்கு எப்பவுமே ஆபோனென்ட் Zinx Band. ஒரே காலேஜ் ரெண்டு பேண்ட்’டும்.

எல்லாம் ஓகேவா போயிட்டு இருந்துச்சு. பட் நாங்க நினைச்சதே இல்ல… பானு அக்கா… அவங்களால இவன் பாட்டு பாடறதயே நிறுத்திடுவானு” என பெருமூச்சு விட்டு நிறுத்தினாள் ப்ரியா.

கவிதா அதைக்கேட்டு புரியாமல் பார்த்தாள் ப்ரியாவை.

“இவனுக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப கோவம் வரும்ன்னு அம்மா சொல்வாங்க. ஸ்கூல் படிக்கிறப்ப நிறைய கம்பளைண்ட்ஸ் வருமாம். ஆனா நல்லா படிக்கறான்னு பெருசு பண்ணாம விட்டுடுவாங்கலாம்.

பானு அக்காவும் இவனும் ரொம்ப க்ளோஸ். எங்ககிட்ட ஷேர் பண்ண கூட யோசிப்பான், ஆனா அக்காகிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்கற அளவுக்கு க்ளோஸ். அவங்களால மட்டும் தான் இவன் கோவம் கண்ட்ரோல் ஆகும்.

இவனுக்கு எனக்கு தெரிஞ்சு ஒரு பொண்ணு ஃபிரண்ட்’னா அது அந்த அக்காதான். அவங்க மதுரைல இருந்து வந்து இங்க படிச்சாங்க.

அவங்களும் இவனும் தான் பேண்ட்’ல பாடுவாங்க. இவங்க நாலுபேரும் பெருசா ஃபீனிக்ஸ் டாட்டூ கூட முதுகுல போட்டுருப்பாங்க.

அந்த அக்காவும் Zinx பேண்ட்’ல இருந்த ஒரு அண்ணாவும் லவ் பண்ணாங்களாம்…

அந்த அக்கா ஒரு வீக்எண்ட் ஊருக்கு போக பிளான் போட்டிருந்தாங்க போல. ஆனா காலேஜ்ல இந்த ரெண்டு பேண்ட்’கும் பெரிய சண்டையாகி இவங்க தான் நடுல நின்னு சமாதானம் பண்ணாங்களாம்.

அப்போல்லாம் இவனுக்கு கோவம் வந்தா பேசவே மாட்டான்… அடிதடின்னு இறங்கிடுவான். அன்னைக்கு அக்கா இவன்கிட்ட ‘இனி நீ கோவப்பட்டா, நான் பாடறத நிறுத்திடுவேன். நான் பாடறது உன் கைல தான் இருக்கு’னு சொன்னாங்களாம்.

காலைல ஊருக்கு கிளம்ப வேண்டியவங்க, இந்த பிரச்சனைனால போக முடியாம, நைட் பஸ்’ல கிளம்பினாங்களாம். அப்போ நடு ராத்திரி பஸ் ஆக்சிடென்ட் ஆகி… அக்கா” என நிறுத்தினாள் ப்ரியா.

சில நொடிகள் எடுத்து தன்னை நிதானித்துக்கொண்ட பிரியா…

“அப்போலிருந்து அண்ணனுக்கு… அவன் சண்டை போட்டதால தான் அக்கா காலைல போகாம நைட் போகவேண்டியதா போச்சு. அதுனால தான் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு நினைச்சு ரொம்ப டிப்ரெஸ்ஸட்’டா இருந்தான்.

அவங்க இல்லாத இடத்துல பாட கூட பிடிக்காம அந்த பேண்ட் அப்படியே டிசால்வ் ஆகிடுச்சு. அதுக்கப்பறம் அண்ணன் பாடினதே இல்ல. இன்னக்கி தான் பாடறான். கிட்டத்தட்ட எட்டு ஒன்பது வருஷம். அக்காகாக கோபத்த கூட சுத்தமா விட்டுட்டான். யார்கூடவும் சண்டை அதிகமா போடமாட்டான்.

அவனை அகிலா’ன்னு சொல்லி கூப்பிடற ஒரே ஆளு அவங்க தான். அவங்க கூப்பிட்டா தான் சண்டைக்கு நிக்கமாட்டான். இப்போகூட திடீர்னு அவங்க ஞாபகம் வந்துச்சுன்னா கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிடுவான்” என பல விஷயங்கள் சொன்னாள் ப்ரியா.

பானுவை நினைத்து எவ்வளவு மனம் வருந்தியிருப்பான் என கவிதாவால் புரிந்துகொள்ள முடிந்தது.

இவ்வளவு வருடங்கள் பாடாமல் இருந்தவன் இன்று பாடினான் என்றால்… யாரால் என யோசிக்காமல் இருக்க முடியவில்லை. சீக்கிரம் சென்று அவனை பார்க்கவேண்டும் என்ற ஆசையும் வந்தது கவிதாவிற்கு.

9
5

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved