என்னோடு நீ உன்னோடு நான் – 13
என்னோடு நீ உன்னோடு நான் – 13
“என்ன ஆச்சு முனியரசன் சார்க்கு?” ஆதி குழப்பத்துடன் கேட்டான்.
“நேத்து அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. அவங்க பொஞ்சாதி மருத்துவர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவங்க மருந்தெல்லாம் குடுத்து பாத்தாங்க. ஆனாலும், அவரு மூச்சு பேச்சு இல்லாம படுத்து கெடக்கறாரு” என்று பெருமூச்சு விட்டு நிறுத்தினாள் அப்பெண்.
“அப்போ அவரை பார்க்க முடியாதா?” ஏமாற்றத்துடன் நிலா கேட்க, முடியாது என்பது போல் தலையசைத்தாள் அந்த பெண்.
“உடம்பு முடியலைன்னா, இந்த ஊர்ல ஹாஸ்பிடல் இல்லனா என்ன? வேற ஊருக்கு கூட்டிட்டு போக வேண்டியதுதானே?” ஆதி சற்று கோபத்துடன் கேட்டான்.
“ஐயா நான் அப்போவே சொன்னேன். இங்க அதெல்லாம் பண்ண மாட்டாங்க” அந்த பெண் சொன்னதை ஆதியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
“உண்மைய சொல்லணும்னா இதுவரைக்கும் இந்த மாதிரி வியாதியெல்லாம் இங்க வந்தது கூட கிடையாது. இப்போ தான் புதுசு புதுசா என்னன்னமோ ஆகுது”
அவள் சொல்லும்போது இதையெல்லாம் படுத்தபடி கேட்டுக்கொண்டிருந்த சிறுவன், “ஆமாயா ரெண்டு நாள் முன்னாடி என்கூட வெளயாடற பையன் நெஞ்சு வலி வந்து போய்ட்டான்”
“போய்ட்டான்னா?” ஆதி அதிர்ந்து கேட்க, “இறந்து போயிட்டான்” என்றாள் அந்த பெண்மணி சற்று வருத்தத்துடன் .
ஆதியால் சுத்தமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. “திஸ் இஸ் புல்ஷிட்! வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்?”
“நீங்க என்ன சொல்றீங்கனு புரியலைங்கய்யா. ஆனா இங்க நடந்ததுக்கு கோவப்படறீங்கனு தெரியுது”
“ஆமாங்க. எப்படி இவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்கீங்கனு தெரில?”
“என்னவா இருக்கோம்?” என்று அவள் புரியாமல் கேட்க, “கண்டுக்காம இருக்கீங்களேனு சொன்னேன்” என்றான்.
அந்த வார்த்தையைக் கேட்டவுடன், “கண்டுக்காம இல்லங்க. எங்க ஊருல சரி பண்ணமுடியாத வியாதி இதுவரைக்கும் இருந்ததில்லை. இப்போதான் இப்படி எல்லாம் ஆகுது” சற்று கோபத்துடனும், விரக்தியுடனும் சொன்னாள் அந்த பெண்.
ஆதி யோசனையுடன், “முனியரசன் சார் வைஃப்-அ பார்க்கலாமா?” என்று கேட்க “அவங்க பொஞ்சாதியா?” என்று கேட்டாள். அதற்கு நிலா ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
“நீங்க பேச வந்தது அவருகிட்டல? அந்தம்மாட்ட என்ன பேசுவீங்க?” கேள்வியோடு கேட்டு, “இப்போ நீங்க இங்கிருந்து போனீங்கன்னா எப்படி உள்ள வந்தீங்கனு கேட்பாங்க? அப்புறம் ஊரவிட்டே அனுப்பிடுவாங்க… இல்ல வேற ஏதாச்சும் கூட பண்ணிடலாம்”
“நான் முனியரசன் சார ஊர் எல்லை கோவில்ல பார்த்தேன். அதைப்பத்தி பேசலாம்னு வந்தேன்” என்றாள் நிலா.
“எந்த எல்லை கோவில சொல்றீங்க?” அந்த பெண் வினவ, “மலைக்கு அந்தப்பக்கம் இருக்கே அதுதான்” என்றாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, ஆதி அவன் பையிலிருந்து மொபைலை வெளியே எடுத்தான். அந்த பெண், “இதெல்லாம் இங்க வேலை பார்க்காதுங்க” என்றாள்.
அவன் மொபைலை பார்க்க, சிக்னல் இல்லை. மறுபடியும் அதை பவர் பேங்க்’கில் போட்டான்.
“நீங்க இங்கிருந்து போய்டறது நல்லதுங்க. இல்லாட்டி வீண் பிரச்சனையில மாட்டிப்பீங்க” எச்சரித்த அந்த பெண்ணிடம், நிலா “ஒரு நிமிஷம்” என்று கூறிவிட்டு ஆதியிடம் திரும்பினாள்.
“ஆதி இவங்கக்கிட்ட திருவிழா பத்தி கேட்கறயா?” என்று ஆங்கிலத்தில் கேட்க, அது சரி என்று பட்டது ஆதிக்கு.
“இங்க ஊர்ல ஏதாச்சும் திருவிழா நடக்குதா?” ஆதி கேட்க “அதெப்படி உங்களுக்கு தெரியும்?” என்று சீறினாள்.
அவள் கோபமாகக் கேட்பதைப் பார்த்த நிலா, “அது… முனியரசன் சார்தான் சொன்னார்” என்று மழுப்பினாள்.
‘அவர் சுயநினைவில்லாம இருக்கிறது இப்போ நமக்கு சாதகமா போச்சு!’ என்றும் நினைத்துக்கொண்டாள்.
“அவர் எதுக்கு உங்ககிட்ட சொன்னாருனு தெரிலயே” என்று யோசனைக்குள்ளானாள் அந்த பெண்.
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நிலா, “நாங்க அந்த கோவிலுக்கு போனப்ப அவருகிட்ட பேசினோம். அப்போ அவர் தான் திருவிழா பத்தி சொன்னார். கொஞ்சம் கவலையா பேசினார்” வரிசையாகப் பொய்களை அடுக்கினாள்.
“இங்க நடக்கிற இது போல வியாதி பத்தி கூட சொன்னார். அவரை அதுக்கு தான் பார்க்க வந்தோம்” என்றான் ஆதி நிலாவை தொடர்ந்து.
“நீங்க மருத்துவரா?”
‘சொல்லலாமா வேண்டாமா’ என்று யோசித்த ஆதி, “ஏன் கேட்கறீங்க?” என்றான்.
“ஒருவேளை இங்க சிலருக்கு உடம்பு முடியாம போகுது, இன்னும் சிலரை காப்பாத்த முடியாம போய்டுச்சு, உங்களால ஏதாச்சும் உதவி கிடைக்குமோனு, உங்ககிட்ட சொல்லியிருப்பாரோ?” அந்த பெண் யூகிக்க,
“இருக்கலாம். எனக்கு கொஞ்ச கொஞ்சம் மருத்துவம் தெரியும்னு அவருக்கு தெரியும்”
“அவரு தான் இந்த ஊரு தலைவருக்கு அடுத்தபடியா இருந்தாரு. அவருக்கு இப்படி ஆயிடுச்சு” வருத்தப்பட்டுப் பேசும்போது, கதவு தடதடவென அடிக்கும் சத்தம் கேட்டு மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
“இப்போ உங்கள யார்னு கேட்டா நான் என்ன சொல்வேன்?!” என்று பதறினாள் அந்த பெண். அந்த சத்தம் பலமாகக் கேட்கத் தொடங்கியது.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத் திறக்க, “அடியே வள்ளி! முனிக்கு என்னாச்சு? மேலுக்கு முடியலனு பையன் சொன்னான்…” என்று சில பெண்கள் கேட்க, “அதுவா” என்று வள்ளி சொல்லவரும்முன்… “யாரு உள்ள இருக்காங்க? புதுசா இருக்கே” என்று சொல்லிக்கொண்டே வள்ளியை தள்ளிவிட்டு உள்ளே வந்தனர்.
ஆதியும் நிலாவும் என்ன சொல்வதென்று தெரியாமல் எழுந்தனர்.
“அவங்க…” என்று இழுத்த வள்ளி, “அவங்க என்னை பார்க்க, எங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்க. அவ என்னோட சித்தப்பா பொண்ணு… அது அவளோட புருஷன்” என்றாள் வள்ளி, நிலாவையும் ஆதியையும் காட்டி.
அப்படி சொன்னவுடன் ஆதிக்கு சட்டென சிரிப்பு. நிலாவை பார்த்தான். அவளும் புன்னகைத்தாள்.
“உன் ஊர்ல இருந்தா… எப்படி வந்தாங்க?” வந்தவர்களில் ஒருவர் கேட்க, “எப்படி வர்றதுனு தெரியாம, ஊர சுத்தி மல ஏறி வந்திருக்காங்க” மழுப்பினாள் வள்ளி.
“அப்படியா!” என்றவர்களிடம், “இவங்க தான்… வர்றப்ப முனியை நெஞ்சு வலியில பார்த்த உடனே உதவி பண்ணி காப்பாத்தியிருக்காங்க” என்றும் சொன்னாள் வள்ளி.
“என்னது நெஞ்சு வலியில இருந்து காப்பாத்திட்டாங்களா?” வந்தவர்கள் கண்களில் ஆச்சரியம்.
“ஆமா இவரு தான்” என்று வள்ளி ஆதியை காட்ட, கூட்டத்திலிருந்த இன்னொரு பெண், “தம்பி நீங்க ஒரு ரெண்டு நாள் முன்னாடி வந்திருந்தீங்கன்னா என் பையனையும் காப்பாத்தி இருக்கலாம். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்” என்றாள் மனதில் வலி பொறுக்காமல். கண்கள் கலங்கியது.
“அக்கா அழாதீங்க” என்று ஆசுவாசப்படுத்தினாள் வள்ளி.
அந்த அழுகை நிலாவை ஏதோ செய்தது. அப்போது இன்னொரு பெண், “இதுவரைக்கும் 5 பிள்ளைங்க போய்ட்டாங்க. அந்த மாரியாத்தா தான் உங்கள இங்க அனுப்பிருக்காங்க” கொஞ்சம் நிம்மதியுடன் கூறியவர்,
“சரி வள்ளி. அவங்கள தலைவர்ட்ட கூட்டிட்டு போய்ட்டு வந்துரு” என்றதும், “இப்போவே போறேன் கா” என்றாள் வள்ளி.
“இப்போ முடியாது. பெரியவரும் பூசாரியும் முனீஸ்வரன் கோவிலுக்கு போயிருக்காங்க. பொழுது போனதுக்கப்புறம் பெரியவர் மட்டும் வருவாரு” என்று அந்த பெண்மணி சொல்லும்போது நிலா ஆதியை பார்த்தாள்.
‘பூசாரி இன்னிக்கி வரமாட்டார் போல’ மனதில் குறித்துக்கொண்டாள். அது புரிந்ததுபோல, ஆதியும் அவளைப் பார்த்தான்.
“அவங்கள இந்த துணியோட கூட்டிட்டுப்போகாத. அவரு ஏதாச்சும் சொல்லுவாரு” என்று சொல்லிவிட்டு அனைவரும் புறப்பட்டனர்.
அவர்கள் சென்றதும், கதவை தாளிட்ட வள்ளி, “எப்படியோ ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன்” என்று நிம்மதி பெருமூச்சு விட, “ஏன் நீங்க எங்களை உங்க சொந்தம்னு சொன்னீங்க?” என்று கேட்டாள் நிலா.
“நீங்க அரசனையாவை பார்க்க வந்திருக்கீங்கன்னா சந்தேகப்படுவாங்க. இப்போ இவரு இங்க இருந்தா, ஏதாச்சும்னா எங்களுக்கு உதவியா இருக்கும்னு சொன்னேன்” என்றாள் வள்ளி ஆதியை பார்த்து.
“அதுவும் இல்லாம நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்தப்பவே புருஷன் பொஞ்சாதியா தான் இருக்கணும்னு நினைச்சேன்” என்று சொல்லவும், இப்போது மறுக்கமுடியாது, மேலும் தேவையில்லாததும் கூட என இருவரும் எண்ணினர்.
பின், “நீங்க இந்த ஊர் இல்லையா?” ஆதி கேட்க, “இல்ல நான் நாகப்பட்டினம் கடலோர கிராமத்தில இருந்தேன். ரெண்டு வருஷம் முன்னாடி வந்த புயல்ல, அவரு வந்த படகு எங்க ஊரு பக்கம் கரை ஒதுங்குச்சு. படகுல உயிருக்கு போராடிட்டு இருந்தாரு.
நான் கடலுக்கு போனப்ப அந்த படக பார்த்தேன். அவரை தூக்கிட்டு போய், எங்க ஊரு ஆரம்ப சுகாதார மையத்துல சேர்த்தேன். பொழச்சுட்டாரு.
“அப்புறம்…” என்று தயங்கிய வள்ளி, லேசான வெட்கத்துடன், “என்னை பிடிச்சு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டாரு… தம்பிக்கு நான் மட்டும் தான்னு தெரிஞ்சு அவனும் நம்மளோட இருக்கட்டும்னு சொன்னாரு. அப்புறம் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டோம்” என்று முடித்தாள்.
“இப்போ எங்க அவர்?” என்று நிலா கேட்க “இந்த ஊருல வாரா வாரம் பிரிஞ்சு மீன் பிடிக்க போவாங்க. இந்த வாரம் இவர் மீன் பிடிக்க போயிருக்கார். அதான் இங்க இல்ல” என்ற வள்ளி தொடர்ந்து,
“எங்க ஊர்ல சுகாதார மையமாவது இருந்துச்சு. இந்த ஊர்ல அப்டி ஒன்னு இருந்திருந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு ஒரு ரெண்டு வாரமா தான் தோணுச்சு. இதுக்கு முன்னாடி எல்லா வியாதியையும் மருத்துவர்களே பார்த்துக்கிட்டாங்க.
இப்போ கொஞ்ச நாளா இந்த புது பிரச்சனை. நீங்க அவனை காப்பாத்தின உடனே தோணுச்சு, உங்க உதவி இங்க தேவைனு. அதான் என் சொந்தம்னு சொன்னேன். அப்படி சொன்னா, உங்கள இங்க இருக்கவைக்க சம்மதிப்பாங்கனு தான் சொன்னேன்” நீளமாக பேசி முடித்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்” என்றான் ஆதி.
“சரி நீங்க இருங்க, நான் போய் பக்கத்து வீட்டு அக்கா கிட்ட புது துணி வாங்கிட்டு வரேன். என்கிட்டே புதுசா எதுவும் இல்ல” என்றவுடன் நிலா, “பரவால்ல உங்களோடதே குடுங்க” என்றாள்.
“இல்ல இருக்கட்டும் நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.
அவள் தம்பியும், “அக்கா நானும் வரேன்” என்று பின் சென்றான்.
அவர்கள் சென்றதும், அந்த தருணத்தை உபயோகித்துக்கொண்ட ஆதி, கதவை மெதுவாகச் சாத்திவிட்டு நிலா அருகில் வந்து அவளை அணைத்தபடி, “ஹே மை பொஞ்சாதி! முனியரசன் சார் விஷயத்துல, வள்ளிக்கு சந்தேகம் வராத மாதிரி, நல்லா சமாளிச்ச!” என்றான்.
“என்னது பொஞ்சாதியா? விடு ஆதி! அவர் மட்டும் எந்திரிச்சிட்டாரு, நம்ம காலி. அப்புறம் அந்த பூசாரி இன்னிக்கி வரல போல. நம்மள கோவில்ல பார்த்ததுல, அவரும் ஒருத்தர். அவரு வர்றதுக்குள்ள ஏதாச்சும் பண்ணணும்” என்றாள் நிலா லேசாகத் திமிறினாலும் அவன் அணைப்பில் இருந்தவாறே.
“யோசிப்போம்” அவன் சொல்லவும், கதவு திறக்கவும் சரியாக இருந்தது. அவசரமாக அவளை விடுவித்தான்.
உள்ளே வந்த வள்ளி, “இந்தாங்க. இதை கட்டிக்கோங்க” அவனுக்குச் சட்டை வேஷ்டி, அவளுக்கு புடவையை நீட்டினாள். அவன் வாங்கிக்கொள்ள, நிலா தயங்கினாள்.
“நீங்க கொஞ்சம் அந்தப்பக்கம் வர்றீங்களா?” வள்ளியை தள்ளி அழைத்துச்சென்று , “எனக்கு புடவை கட்ட தெரியாது. உதவி பண்ண முடியுமா” என்று தயக்கத்துடன் கேட்க, வள்ளி சட்டெனச் சிரித்தாள்.
“உங்க புருஷனுக்கு தெரியாதா உங்களுக்கு கட்ட தெரியாதுனு” கொஞ்சம் சத்தமாக வள்ளி கேட்க, “ஐயோ மெதுவா!” என்று அவள் சொல்லும்முன், அதை கேட்டுவிட்ட ஆதி, சிரித்துக்கொண்டே…
“நீங்க அவளுக்கு கட்டிவிடுங்க. வீட்டுக்கு பின்னாடி இடம் இருக்கா?”
“இருக்குங்க. முனி அவரை கூட்டி போய் காட்டு” என்றாள் வள்ளி.
சிறிது நேரம் கழித்து கதவு திறக்க, வள்ளியுடன் நிலா வெளியே வந்தாள். புடவை அவர்கள் ஊரில் கட்டும் விதத்தில் கட்டியிருந்தாள்.
ஆதி அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து, ‘நல்லா இருக்கு!’ என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி புன்னகைத்துக்கொண்டே செய்கையால் சொல்ல, நிலா அவனைப் பார்த்து முறைக்க முயன்று முடியாமல்போய் மென்மை எட்டிப்பார்த்தது.
இருவருக்கும் வள்ளி சமைத்துக்கொடுத்தாள். அவர்கள் உணவு, பழக்கவழக்கம் எல்லாம் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த இருவரும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உண்டனர்.
வள்ளி நிலாவை தன்னுடனே வைத்துக்கொள்ள, நிலாவும் ஆதியும் தனிமையில் பேசுவதற்கான தருணம் அமையவில்லை.
சாயங்கால நேரம் எட்டிப் பார்க்கும்போது, வள்ளி இருவரிடமும் ‘ஊர் தலைவரை பார்க்க செல்லலாம்’ என்று அழைத்தாள்.
“நீங்க அதிகமா பேசவேண்டாம். நானே பேசறேன். அவரு நீங்க என் சொந்தம் இல்லனு கண்டுபிடிச்சுட போறாரு. அதுக்கு தான்”
அதுவும் சரி தான் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.
தலைவர் வீடு மலையின் கீழே இருந்தது. வீட்டை அடைந்தவுடன், “நான் போய் மொதல்ல விஷயத்த சொல்லிட்டு வந்து உங்கள உள்ள கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு, வள்ளி உள்ளே சென்றாள்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள், இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றாள்.
உள்ளே சென்றவர்கள், அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் அங்கு இருந்த பூசாரியைப் பார்த்து.
“நீங்க வள்ளியோட சொந்தம்முன்னு சொல்லுச்சு. நல்லது. நீ மருத்துவனா தம்பி” தலைவர் கேட்க, அவர் பேசுவது எதுவும் கேட்காமல் இருவரும் பூசாரியையே பார்த்துக்கொண்டிருந்தனர். பூசாரியும் இவர்களைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
“தம்பி!” அழுத்தமாக மறுபடியும் தலைவர் அழைத்தார்.
இருவரும் அவர் பக்கம் பார்வை திருப்ப, ‘என்ன கேட்டார் என்ன சொல்லவேண்டும்?’ என்று தெரியாமல் விழித்தனர்.
“இவரு அங்கிருக்கற சுகாதார மையத்துல வேல பார்க்கறாரு” என்றாள் வள்ளி இவர்களின் அமைதியைப் பார்த்து.
“அது சரி” என்ற தலைவர், “இவங்க புதுசா கல்யாணமானவங்கனு சொன்னேல வள்ளி”
“ஆமாய்யா. அது” என்று இழுத்து… “போன வாரம் தான் ஆச்சாம்” என்று பொய் மேல் பொய் சொல்லி சமாளித்தாள்.
இதை சொன்னவுடன், நிலா ஆதி இருவரும் அவளைப் பார்த்தனர். அவளும் அவர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.
நிலா அவ்வப்போது பூசாரியைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.
‘இவர் ஏன் எதுவும் ரியாக்ட் பண்ணல? இவர பார்த்த உடனே எல்லாம் முடிஞ்சதுனு நினைச்சேன். பட் அமைதியா இருக்காரே” அவள் மனம் யோசனையில் இருக்க, ஆதி உலுக்கவும், தன்னிலைக்கு வந்தாள்.
‘என்ன ஆச்சு?’ என்பதைப் போல நிலா பார்த்தாள்.
தலைவர் பேசிக்கொண்டிருந்தார். “நீங்க எங்க ஊரு பையன காப்பாத்தியிருக்கீங்க. அதில்லாம புதுசா கல்யாணமானவங்க வேற. எங்க ஊரு வழக்கப்படி புதுசா கல்யாணமானவங்களுக்கு பௌர்ணமி அப்போ நிலா இரவு நடத்துவோம். அதா உங்களுக்கும் பண்ணலாமானு தம்பி கிட்ட கேட்டேன்” என்றான் தலைவர்.
நிலா அவசரமாக, “ஐயோ அதெல்லாம் வேணாங்க. இதுக்காக மெனக்கெடவேண்டாம்” என மறுத்தாள்.
உடனே தலைவர், “உங்களுக்காக பண்ணல. இங்க கல்யாணமான சிறுசுகளுக்கு இன்னிக்கி பண்றோம். உங்களுக்காக மட்டும் தனியா பண்ணல. சரி வள்ளி நீ போய் ஆக வேண்டிய வேலையப்பாரு” என்ற தலைவர், அந்த இடத்தைவிட்டு செல்ல, மூவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
“எப்படியோ அவருக்கு உங்க மேல சந்தேகம் வரல” வள்ளி சொல்லிக்கொண்டே முன் நடக்க, ஆதி கையை இறுக்கமாகப் பிடித்து நிறுத்தினாள் நிலா.
“என்ன ஆதி பூசாரி ரியாக்ட் பண்ணவே இல்ல. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு”
“எனக்கும் அதே தான் உறுத்தலா இருக்கு நிலா. என்ன பிளான் பண்றாருனு தெரிலயே” இருவரும் பேசிக்கொள்ளும், “வள்ளி” என்று ஒரு சத்தம் அவர்கள் பின்னால் இருந்து வந்தது.
சற்று அதிர்ந்த ஆதியும் நிலாவும் திரும்பிப்பார்க்க, வள்ளியும் திரும்பினாள். “சொல்லுங்கயா” என்றாள் வள்ளி தன்னை அழைத்த பூசாரியைப் பார்த்து.
“நீ போய் வேலையப்பாரு. நான் இவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்!