என்னுள் நீ வந்தாய் – 14B

என்னுள் நீ வந்தாய் – 14B:

 

அவன் மேல் சாய்ந்த அடுத்த நிமிடம் என்ன தோன்றியதோ, சட்டென எழுந்துகொண்டாள். ஆனால் அந்த ஒரு நிமிடம் போதுமானதாக இருந்தது தன்னை சமன் படுத்துக்கொள்ள.

கண்களை துடைத்துக்கொண்டு, “அப்பாக்கு உடம்பு முடியலனவுடனே கிளம்பணும்ன்னு தோணுச்சே தவிர, அவர் உன்ன எதிர்பார்ப்பாருன்னு எனக்கு தோணல” திரும்பி அவனைப் பார்த்தவள்
“தேங்க்ஸ். அவர் முகமே நீ வந்தப்புறம் தான் நார்மல் ஆச்சு” என்றாள்.

“ஹ்ம்ம். நான் யோசிச்சேன். அவர் நம்ம ரெண்டு பேரையும் எதிர்பார்ப்பாருன்னு. விடு பேபி. எதுக்கு இவ்ளோ ஃபீலிங்ஸ்… மாமாக்கு ஒன்னுமில்ல. நீ கவலைப்படாத” என்றான் அவளைத் தேற்றும் விதமாக.

ஆனால் அவள் மனதை அரித்துக்கொண்டிருந்ததோ அவனின் செயல்கள் தான் என்று அவனுக்குத் தெரியவில்லை.

இருவரையும் அங்குப் பார்த்த ஒரு குருக்கள், “கவிதா… ஊருக்கு வந்துருக்கயா. சாரிம்மா உன் கல்யாணத்துக்கு வரமுடியாம போச்சு. ஆத்துல ஒரு காரியம் அதுதான். இவர் தான் உன் ஹஸ்பண்ட்’டா?” என விசாரிக்க… இருவரும் மண்டபத்திலிருந்து கீழிறங்கினர்.

கவிதா தயங்கி, “ஆமா அங்கிள்” என்றாள்.

அகிலன் அவரைப் பார்த்து புன்னகைக்க, “ஜோடிப்பொருத்தம் ஜோரா இருக்கு. கவிதா கற்பகிரஹத்துட்ட கேசரி சுண்டல் பிரசாதம் இருக்கு. போ வாங்கிட்டு வாம்மா” என்றார் அவள் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்து.

அவள் சரி என்று சென்றபின், அகிலனிடம் “உங்ககிட்ட பேசணும்ன்னு தான் அவளை அனுப்பினேன்” என்றவுடன் அவரை ‘ஏன்’ என்பது போலப் பார்த்தான் அகிலன்.

அதை புரிந்துகொண்டவர்… “ரொம்ப நல்ல பொண்ணு. தாயில்லாமயே வளர்ந்தா. சுவாமி அவர் மனைவி போனப்பறம் வேல வேலென்னே இருந்துட்டார்.

சின்ன வயசுல இருந்து லீவு விட்டா இங்க கோவிலுக்கு தான் வருவா அதிகமா. சிலசமயம் நாள் முழுசா இங்க உட்கார்ந்துருக்கா. மதியம் நட சாத்தனும்ன்னு சொன்ன கூட போகமாட்டா.

ஏன்னு நான் கேட்டப்ப, இப்போ உட்கார்ந்திருந்தீங்களே, அந்தத் தூண்… அதை காட்டி, அவ அம்மாவும் அவளும் அங்க தான் உட்காருவாங்க. அந்த தூண் தான் அவ அம்மானு சொல்லுவா. அப்போ சின்னப் பொண்ணு… காலம் போகப்போக மாறிடும்ன்னு நினச்சேன். ஆனா அதுவே அவளுக்கு பழக்கம் ஆயிடுச்சு.

பையன் அப்பாக்கூட இருந்தான்… ஆனா அவ விவரம் தெரிஞ்சு ஹாஸ்டல்னே இருந்துட்டா… அம்மா இல்லாமா ஒரு பொண்ணு வளர்றதுல இருக்கற கஷ்டம் இருக்கு பாருங்க… கொடும. எப்பயாச்சும் தான் காஞ்சிக்கே வருவா. அப்படி வந்தாலும் பாதி நேரம் இங்க தான் இருப்பா.

இப்போ கூட அவ கோவில்குள்ள வர்றப்ப பார்த்தேன். சரி இங்க தான் உட்கார்ந்துருப்பான்னு பூஜ முடிச்சிட்டு வந்தேன். உங்க ரெண்டுபேரையும் பார்த்ததும் மனசு நிறைவா இருக்கு.

அந்த பொண்ணு வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்ன்னு நம்பிக்கை வந்துடுச்சு. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்” என வாழ்த்தும்போது கவிதாவும் அங்கு வந்தாள்.

“கண்டிப்பா சார்” என்றான் அகிலன் புன்னகையுடன். “சரி கவிதா வீட்டுப்பக்கம் வந்துட்டுப்போ. மாமி கேட்டுட்டுருந்தா உன் சித்திட்ட உன்னப்பத்தி” கவிதாவும் தலையாட்ட அவர் சென்றார்.

“என்ன சொன்னாரு அவரு???” அவனிடம் அவள் கேட்க, என்ன சொல்வதென யோசித்தவன்…

“அதுவா… நம்ம கல்யாண சாப்பாடு சாப்பிட முடியலயேன்னு வருத்தப்பட்டாரு. நான் ‘அதுனால என்ன. பெரிய கிஃபிட்’டோட (gift) சென்னை வாங்க. என் பேபி கையால சமைச்சு போட சொல்றேன்’னு சொன்னேன். மனுஷன் பதறிட்டாரு” என்று விஷமமாகப் புன்னகைத்தான்.

அவனை பார்த்து முறைத்து சுண்டல் தொன்னையை அவன் கையில் திணித்துவிட்டு கேசரி இருந்ததை அவள் வைத்துக்கொண்டாள்.

“உனக்கு சுண்டல் வேணாமா?” கேசரியின் மீது ஒரு கண் வைத்தபடி அவன் கேட்க “எனக்கு இது மட்டும் போதும்” என நிறுத்தி “உனக்கு வேணுமானெல்லாம் கேக்க மாட்டேன்” என சொல்லிவிட்டு கருமமே கண்ணாயினார் என்று கேசரியை விழுங்கிக்கொண்டிருந்தாள்.

“ஸ்வீட்ன்னா ரொம்ப பிடிக்குமா பேபி?” தலையை மட்டும் ஆம் என்பதுபோல் ஆட்டினாள்.

சுண்டலை இரண்டுவாயில் முடித்தவன், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘பேச்சு மற்றும் சில நடவடிக்கைகள் தான் பெரிய மனுஷியைப் போல். ஆனால் சிலசமயம் செய்வதெல்லாம் பார்க்கும்போது சின்னப் பெண்ணே தோற்றுவிடும்’ என்று நினைத்துப் புன்னகைத்துக்கொண்டான்.

அவள் உண்பதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க, அவள் சாப்பிட்டு முடித்தாள்.

அவளைப் பார்த்துக்கொண்டிருந்த அகிலனிடம் கண்களால் ‘என்ன’ என கேட்க… இதழின் கீழே கேசரி துணுக்கு இருக்க, அதை அவனும் கண்களால் காட்டினான்.

அவள் பொதுவாக வாயை துடைக்க, அது அப்படியே இருந்ததால், அனிச்சையாக அவன் கை அவளின் இதழருகே சென்றது.

அதை பார்த்து விழிவிரித்து அதிர்ந்தவள், சட்டெனத் தலையை பின்னால் தள்ளிக்கொண்டாள். அவனோ மென்மையாகப் புன்னகைத்து, இதழருகே இருந்த இடத்தை சுட்டிக் காட்டினான் அவள் துடைத்துக்கொள்ள. அவளும் சின்னதாகப் புன்னகைத்தாள்.

அவள் எழுந்துகொள்ள, அவனும் அவளை பின்தொடர்ந்தான். ஏதோ ஒன்று இருவரையும் வீடு திரும்பும் வரை பேசவிடவில்லை. மௌனமாகவே வந்துசேர்ந்தனர்.

அன்றிரவு அகிலன் கிளம்பலாம் என நினைக்க, ஸ்வாமிநாதன்… “ஒரு நைட் இருந்துட்டு போங்க மாப்ள” என வற்புறுத்த, அவன் பேச ஆரம்பிக்கும்முன் கவிதா “அப்பா. அவருக்கு நம்ம வீடு வசதியா இருக்காதுப்பா” என்றாள் அவசரமாக.
அவர் முகம் வாடிப்போனது.

கவிதாவைப் பார்த்து முறைத்த அகிலன், பின் அவரிடம் “ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா. நான் இருக்கேன்” என்றான். இப்போது கவிதா முறைத்தாள். ஆனால் அவர் முகம் சந்தோஷத்தைக் காட்டியது.

இருவரும் கவிதாவின் அறைக்கு சென்றவுடன், அவள் அவனிடம் பேசுமுன்… “உனக்கு அறிவிருக்கா?” என கேட்டான் கதவை சாத்திவிட்டு.

அவள் முழிக்க, “அவர் என்ன நினைப்பார்? நம்ம வீடு வசதியா இல்லயோன்னு நினைக்கமாட்டாரு? அதுவும் நீயே இத சொல்றப்ப, கஷ்டமா இருக்காதா பேபி அவருக்கு” என அவன் கேட்டபோது தான் அவளுக்கும் புரிந்தது.

“சாரி. நான் அவ்ளோ யோசிக்கல. என்னோடது சின்ன ரூம். AC வெர்க் ஆகல. இது உனக்கு செட் ஆகுமான்னு” என அவள் தயங்க… அவளைப் பார்த்து இன்னமும் முறைத்தான்.

“இப்போ செங்கல்பட்டுல இருக்குற வீட்ட ஒரு ஆறு வருஷம் முன்னாடி தான் பெருசா கட்டினோம். அதுக்கு முன்னாடி அது இந்த வீட்ட விட சின்னது. நான் ஒன்னும் பெரிய ராயல் ஃபேமிலில இருந்தெல்லாம் வரல. புரியுதா” என்றான் அழுத்தமாக.

சரி என தலையசைத்து வெளியே சென்றாள்.

அப்போதுதான் அவனும் அவள் அறையைப் பார்த்தான். முதல் முறை அவள் அறைக்குள். ஏனோ அவளின் வாசம் அறைமுழுதும் நிரம்பியதைப் போல் இருந்தது.

சிறிய அறை. அவள் விழுவாள் என்பது தெரிந்து, தரையில் அளவில் இருந்து அரை அடி உயரத்தில் போடப்பட்டிருந்த மெத்தை.
அளவில் மிகவும் சிறியது. அவன் மனதில் தோன்றிய கேள்வி … ‘இதில் எப்படி இருவர் தள்ளித் தள்ளி படுக்க முடியும்?’ என்பதே.

‘கீழ கூட இடமில்லையே’ என யோசிக்கும்போது அவள் உள்ளே வந்தாள் உடை மாற்றிட்டு. கையில் ஒரு வேஷ்டி சட்டை துண்டு.

“அப்பா இத உன்கிட்ட குடுக்க சொன்னாரு. புதுசாமா… நீ வேணும்னா குளிச்சிட்டு வந்துரு… ஐயோ உனக்கு சோப்… இரு நான் போய் அப்பாட்ட வாங்கிட்டு வந்துடறேன்” அவனை பேசவிடாமல் அவள் சென்றுவிட்டாள்.

அவள் திரும்பிவரும்போது அவன் பாத்ரூமில் இருந்தான். “ஐயோ போய்ட்டானா…” கதவருகே சென்று தட்டினாள்.

அவன் என்ன என்று கேட்ட பின் “புது சோப் அப்பாட்ட இல்லயாம்… நான் வாங்கிட்டு வந்துடறேன். ஒரு அஞ்சு நிமிஷம்” என சொல்லிமுடிக்கும் முன் “பரவால்ல பேபி. நான் இங்க இருக்கறதயே யூஸ் பண்ணிக்கறேன்” என்றான்.

“ஐயோ அது என் சோப்” என அவள் சொல்லவரும்முன் குளிக்கும் சத்தம் கேட்டது.

சிறுது நேரத்தில் குளித்துமுடித்து அவன் வெளியே வந்தான். அவனிடம் அவளின் நறுமணம். ஏதோ புதுவிதமாக இருந்தது அவனுக்கு.

பழைய எண்ணங்கள் மறுபடியும் தொற்றிக்கொள்ளப் பார்க்க, தன்னை சமன் செய்துகொண்டு வந்தான்… வெளியே அவள் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள்.

கதவு சத்தம் கேட்டு திரும்பியவள் “என் சோப் எதுக்கு யூஸ் பண்ண… நான் தான் வாங்கிட்டு வரே…” என அவனை பார்க்க, அவன் வேஷ்டி கட்டிக்கொண்டு, துண்டை பாதிப் போர்த்திக்கொண்டு வெளியே வந்தான்.

ஒரு நொடி அவள் திடுக்கிட்டு அவனைப்பார்க்க… அடுத்த நொடி என்ன தோன்றியதோ… சட்டென அவனைப்பாராமல் திரும்பிக்கொண்டாள்…

———இன்று———

‘என்கூட நீ இல்லனாலும்… இப்போ நீ என் பக்கத்துலயே இருக்கற மாதிரி தான் இருக்கு பேபி. நீ இருக்கும்போது அந்த இடத்துல இருக்க உன்னோட அந்த வாசனை என்னைவிட்டு போகவே போகாது…’

பல எண்ணங்கள் அவனை ஆட்கொள்ள, உறங்கிப்போயிருந்தான். அடுத்தநாள் ஆர்வமாக கிளம்பினான். இன்று அவளைப் பார்த்துவிடவேண்டுமென… நேராக சந்திக்க முடியாது என்று தெரியுமே.

கவிதா அறியாமல் அவளைப் பார்க்க ஆசை எழுந்தது. லயாவிடம் பேசிவைத்திருந்தான். கவிதாவை எப்படியாவது சாப்பிட பேண்ட்ரி’க்கு (pantry) அழைத்து வரவேண்டுமென. அதற்காக லயாவிடம் அர்ச்சனைகளை வேறு வாங்கவேண்டியதாயிற்று.

ஆர்வமாக கிளம்பினான் அகிலன்…. கவிதாவைப் பார்க்க. ஆனால் அவள் வருவாளா?!

14
2

2 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 14B

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved