என்னுள் நீ வந்தாய் – 20B

என்னுள் நீ வந்தாய் – 20B

லயா அதிர்ச்சியில் இருக்க… “என்ன சௌண்டே காணம்? இதெல்லாம் அவகிட்ட சொல்லலாம்ல?” கேட்டான் விஜய்.

அவன் கேட்டதில் தன்னிலைக்கு வந்தவள், எப்பொழுதும் போல் துடுக்குத்தனமாக…

“அது உன் இஷ்டம்! ஆனா அவளுக்கு யோசிக்கணுமாம்… நீ செட் ஆவயா மாட்டயானு புரிஞ்சுக்க. சோ நீ வா… வந்து இம்ப்ரஸ் பண்ணு அவளை” என்றாள் கள்ளத்தனமாகப் புன்னகைத்துக்கொண்டு.

“அவ்ளோதானே… அவ ஆல்ரெடி இம்ப்ரஸ்’லாம் ஆயிட்டா. ஒழுங்கா ஈவினிங் அஞ்சுமணிக்கு ஏர்போர்ட்’க்கு வர சொல்லிடு. அவளை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. லாஸ்ட் டைம் பார்ட்டி போனப்ப, லைம் யெல்லோ டிரஸ்’ல க்யூட்’டா இருந்தா. முடுஞ்சா, அத போட சொல்லு. சரி. சரி. நான் கிளம்பனும். ஆள் கிடைச்சா போதுமே… மொக்க போட ஆரம்பிச்சுடுவ. பை” அவள்பதில் பேசுமுன் வைத்துவிட்டான்.

லயா முகத்தில் புன்னகை. கவிதாவும் புன்னகைத்தபடி, “ஸ்மார்ட்! உனக்கேத்த ஆள் தான்” என்றாள்.

லயாவுக்குத் தனிமை கொடுத்து, காலை உணவு சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்றாள் கவிதா.

மாலை வரை நன்றாக உறங்கினான் அகிலன். கவிதாவும் உடலளவில் தேறியிருந்தாள்.

அதன் பின் இரவு உணவை முடித்துக்கொண்டு, மறுநாள் சென்னை புறப்படுவதற்கு வசதியாக, அகிலனும் அவளும் அவள் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவன் தங்கியிருந்த இடத்திற்கு சென்றனர்.

அவள் உடலளவு தேறியிருந்தாலும், அவ்வப்போது ஏன் என்றே தெரியாமல் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது.

அவளுக்கு பிடிக்காத ஒன்று எப்போதும் அழுதுகொண்டேயிருப்பது. ஆனால் இப்போது அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல் கண்கள் அதன் வேலையைப் பார்த்தது.

அதை பார்த்தவன், அவளை தொல்லை செய்யாமல் தனிமை கொடுக்கவேண்டும் என நினைத்து, அவள் வருவதற்காகக் காத்திருந்தான். உடை மாற்றிக்கொண்டு அறைக்கு வந்தாள் கவிதா.

அவள் வந்தவுடன், “பேபி. இங்க ரெண்டு பில்லோ தான் இருக்கு. நான் கட்டில wall ஒட்டி போட்டுடறேன். சோ நீ ரெண்டு பில்லோ வெச்சு மேனேஜ் பண்ணிடலாம். நான் ஹால்ல படுத்துகிறேன். நீ ரெஸ்ட் எடு” என நிறுத்தாமல் பேசி முடித்தான்.

அவனைப் பார்த்துக்கொண்டே, கட்டிலின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்தாள். அவன் புரியாமல் பார்த்தான்.

“தூக்கம் வருதா?” அவள் கேட்க, இல்லை என்று தலையசைத்து “ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நல்லா தூங்கினேன் பேபி” ‘உன்னால் தான்’ என்பதைப் போல் அவளைப்பார்த்தவன்… “ஆனா நீ தூங்கவே இல்ல சரியா… நீ தூங்கு” என்றான்.

“நான் ஒன்னு சொன்னா கேட்பயா மாட்டயா?” சம்பந்தமேயில்லாமல் அவள் கேள்வி கேட்க, புரியாமல் பார்த்தவன், அவள் அருகில் வந்து “சொல்லு” என்றான்.

“இங்கயே படுத்துக்கோ… ப்ளீஸ். ரொம்ப நாள் தனியா பேச ஆளில்லாம இருந்துட்டேன். கொஞ்ச நேரம் பேசலாம். தனியா இருந்தா எங்க அழுவேனோன்னு இருக்கு…” அவள் முடிப்பதற்குள் ‘அவ்வளவுதானே’ என்பதுபோல புன்னகைத்துக்கொண்டே எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டான்.

அவளும் படுத்துக்கொண்டாள். இருவருக்கும் இடையில் எந்தத் தடுப்பும் இல்லை. அவனையே அவள் பார்த்திருக்க, அவள் பேசுவாள் என்று அவனும் பார்த்திருந்தான்.

மறுபடியும் அவள் கண்கள் கலங்கியது.

“ப்ச் பேபி. எதுக்கு எதையெதையோ யோசிச்சு உன்ன வருத்திக்கற?” அவன் சொன்னவுடன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். இருந்தும் கண்கள் கலங்கியது.

இப்படியே விட்டால் இன்னமும் வருந்துவாள் என்று நினைத்தவன் “சரி சொல்லு. நான் அங்கேயிருந்து கிளம்பின அன்னைக்கு ஏதோ பேசணும்னும் நினச்சேன்னு சொன்னல்ல. அதென்ன?” அவனே ஆரம்பித்தான்.

“உனக்கு ஏன் என்ன பிடிக்கும்?” பதில் சொல்லாமல் அவள் கேள்வி கேட்க, அதை எதிர்பார்க்காதவன் ‘என்ன சொல்வது’ எனப் பார்த்தான்.

“வேற யாராவதா இருந்தா, லவ் பண்றேன்னு சொன்னவுடனே போயிருப்பாங்க… இல்லனா, நான் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்துக்கிட்ட விதத்துல, ‘நீயும் வேணாம் உன்கூட வாழ்க்கையும் வேணாம்’ன்னு போயிருப்பாங்க. ஆனா நீ எனக்காக எல்லாமே பாத்து பாத்து செஞ்ச. ஏன்?”

அவன் என்ன பதில் சொல்வான். அவனுக்கே தெரியாதே. அவளைப் பிடிக்கும். மிகவும் பிடிக்கும். அவள் அவளாகவே பிடிக்கும். எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் அவளைப் பிடிக்கும்.

காரணம் தெரிந்து வருவதா காதல்? அவன் அமைதியாக இருக்க…

“நீ என்கிட்டே கேட்டயே ‘உன்மேல கொஞ்சம் கூட எனக்கு எதுவும் தோணலையா’ன்னு”

“உன்ன ரொம்ப பிடிச்சது. ஆனா அத புரிஞ்சுக்க கொஞ்ச காலம் ஆச்சு. நீ அன்னைக்கு என்கிட்ட கேட்டப்ப, வாய் வர வந்துருச்சு. நீ தான் என் மனசு முழுக்க இருக்க ஆனா ஏதோ ஒன்னு தடுக்குதுன்னு. அந்த ஏதோ ஒன்னு என்னனு இதுவரை தெரியல”

“ஆனா உன்கூட சந்தோஷமா வாழனும்னு மட்டும் மனசு அடிச்சுக்குது. நீ அங்க இல்லாதப்ப, உன் ஞாபகம் படுத்தியெடுத்துடுச்சு. ஒருத்தர மனசார பிடிச்சா மட்டுமே அது மாதிரி தோணும்”

அவள் பேசப் பேச கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.

“அன்னைக்கு கோவில்க்கு… நீ வந்தயே, என்ன பார்க்க. அப்போதான் நான் உணர்ந்தேன். நீ என் வாழ்க்கைல இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்ன்னு. எப்பவுமே அங்க அம்மா இருக்க மாதிரி நெனைச்சுப்பேன். வேற யாரும் மனசுல வரமாட்டாங்க வந்ததில்லை… யாருமே”

“ஆனா ஃப்ர்ஸ்ட் டைம் எனக்கு இதுவரை கிடைக்காத ஒரு அம்மாவோட அன்ப, அரவணைப்பை அங்க உணர்ந்தேன். உன்கிட்ட இருந்து” சொல்லும்போது அழுகை அதிகமானது.

‘தன்னை தாயிற்கு அடுத்து நினைக்கிறாளா?’ அந்த எண்ணமே அவன் மனதை நிறைத்தது. ‘தன்னுடைய பாசம் அவளுக்கு புரிந்துள்ளது’ என நினைக்கும்போது, ஆனந்தத்தைத் தந்தது.

ஆனால் குழந்தைப் போல் அழுபவளை எப்படி சமாதானப்படுத்துவது எனப் புரியவில்லை. இதுவரை அவள் இப்படி அழுது பார்த்ததில்லை. கோபப்படுவாளே தவிர அழுததில்லை.

அழாதே என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவன் அருகில் சென்று அவள் கண்களைத் துடைக்க…

“என்கூடவே இரு ப்ளீஸ்…” கெஞ்சும் கண்களில் கேட்டாள்.

“இப்படி நீ கேக்கறதுதான் கஷ்டமா இருக்கு பேபி. மனசைப்போட்டு கொழப்பிக்காத. நீ கொஞ்சம் தூங்கு. நான் கீழ இங்கயே படுத்துகிறேன். ஓகே?” என்க…

“ம்ம்ஹும்” அவள் மறுக்க, அவன் ‘இப்போ என்னசெய்வது’ என்பதைப் போலப் பார்த்தான்.

“நான் கீழ விழுகாம நீ பாத்துக்க மாட்டயா…?” கலங்கிய கண்களுடன் கேட்க, அவன் புரியாமல் பார்த்தான்.

பின், “சரி நான் முழிச்சு பாத்துக்கறேன். நீ தூங்கு” ஒரு முடிவுக்கு வந்தவன் போலச் சொல்ல, பதில் பேசாமல் இருந்தாள்.

“என்ன டா… நான் இருக்கேன். தூங்கு. மருந்து வேற சாப்பிட்டுருக்க. திரும்ப உடம்பு முடியாம போய்டப்போகுது. ஆல்ரெடி ரொம்ப வீக்’கா வேற இருக்க. ப்ளீஸ் பேபி” என்று சொன்னதுதான் தாமதம்…

மீண்டும் அழுதுகொண்டு நீட்டியிருந்த அவன் கையின் வளைவில் முகத்தைப் புதைத்து…

“நான் உன்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்திருக்கேன்ல. கீழ படு வெளிய போன்னு சொல்லியெல்லாம்”

அவள் தலைமுடியை மென்மையாக வருடி “நீ சொல்லாம வேற யாரு என்ன சொல்வாங்க?” என்றான் ஆறுதலாக.

அவன் டீ ஷர்டை பற்றிக்கொண்டு, அதே கலங்கிய கண்களுடன், நிமிர்ந்து அவன் முகம் பார்த்து…

“உனக்கு ஏன் என்ன பிடிக்கும்? லவ் பண்ண ஒருத்தன், அவனால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டு… நீங்க பண்ணிக்கறீங்களானு கேட்டா, யாருமே தயங்குவாங்க… சரின்னு சொல்ல மாட்டாங்க”

அவள் பேச பேச, அதிர்ந்து அவளைப் பார்த்தான். ‘இவளுக்கு எப்படித் தெரிந்தது’ என. அஜய்யின் மீது கோபம் வந்தது. எதற்கு இதைச் சொல்லவேண்டுமென…

அவள் தொடந்தாள். “ஆனா நீ… அத எதையுமே சொல்லாம, நான் செஞ்சதெல்லாம் பொறுத்துட்ட. நீ சொல்லிருக்கலாம்ல”

அவளை அணைவாகக் கட்டிக்கொண்டு…

“பேபி… நல்லா லவ் பண்ணவங்க, ரிஜெக்ட் பண்ணா அதோட வலி ரொம்ப அதிகமா இருக்கும்டா. ஆல்ரெடி நீ அப்போ ரொம்ப மனசொடஞ்சு போயிருந்த. இத சொன்னா இன்னமும் ஃபீல் பண்ணுவ. அதான் சொல்லல”

‘என்னவிதமான அன்பு இது’ என்றே தோன்றியது கவிதாவுக்கு. பின் எதேச்சையாக அவள் கண்ணில் பட்டது அவன் கையில் போட்டிருந்த டாட்டூ.

டி ஷர்ட் மறைத்த இடம் போக கண்ணில் பட்டதைப் பார்த்தவள், அதை விலக்கிப் பார்த்தபோது… அதில் தெரிந்தது “கவி” என்ற குத்தப்பட்ட டாட்டூ. தமிழ் எழுத்து ‘க’வுடன் ஆங்கில எழுத்து ‘v’ இரண்டும் சேர்த்து அழகாக வரையப்பட்டிருந்தது.

வார்த்தை வரவில்லை… அதையே பார்த்தாள். மெல்ல வருடி அவனைப் பார்க்க, அழகாகப் புன்னகைத்தான்.

“எனக்கு டாட்டூ’னா பிடிக்கும் பேபி. உன்ன சொல்லத்தெரியாத அளவுக்கு பிடிக்கும்… அதான்” அவன் சொல்லிமுடிக்கும்முன், அந்த டாட்டூ’வை நனைத்தாள் கண்ணீர் கலந்த முத்தத்தில்!

‘தந்தையைப்போல் கணவன் வேண்டும் எனக் கேட்டேன் கடவுளிடம்…

அவன் கொடுத்ததோ தாயில்லாத எனக்கு தாயுமானவனான துணைவனை!!!’

8
3
Subscribe
Notify of
4 Comments
Inline Feedbacks
View all comments
Pappu Divya
2 years ago

Beautiful preethi😍

Saro Kumaran
6 months ago

Very nice 👏👏👏

error: Content is protected !! ©All Rights Reserved
4
0
Would love your thoughts, please comment.x
()
x