என்னுள் நீ வந்தாய் – 23

என்னுள் நீ வந்தாய் – 23A

———இன்று———

ஜெனியும் அனிதாவும் இருந்த புகைப்படத்தைப் பார்த்தவனுக்கு ஜெனியுடன் பேசியது நினைவிற்கு வந்தாலும், அது பெரிதாக அவனைப் பாதிக்கவில்லை.

தான் துபாய் வந்த வேலையை முதலில் முடிக்க வேண்டும். தந்தையின் தொழிலை மீட்டாக வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருந்தான்.

அஜய் அவ்வாறாக யோசித்துக்கொண்டு உறங்க சென்றிருக்க… இங்கே அகிலனும் கவிதாவும் பேசிப் பேசி, ஒருவழியாகக் களைத்துப் போய்… விடிய சிலமணிநேரங்களே இருக்கும்போது உறங்கினர்.

அடுத்தநாள் இருவரும் இந்தியா புறப்பட்டனர்.

அவள் அகிலனைக் காண துபாய் தான் சென்றிருக்கிறாள் என்று அவன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தெரியாது. வேலை விஷயமாக ஹைதெராபாத் செல்வதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டிருந்தாள்.

‘இருவரும் சேர்ந்தெப்படி?’ என்று கேட்டால், அவன் ஹைதெராபாத் சென்று இருவரும் சேர்ந்து வந்தாகச் சொல்லிவிடலாம் என்றெல்லாம் முடிவெடுத்தனர்.

ஆனால் வீட்டில் இறங்கும்போது, ஜெயராமன் மட்டுமே இருந்தார். லட்சுமியும் ப்ரியாவும் வந்திருக்கவில்லை.

அன்றைய தினம் அவனுக்கு வேலை இருந்ததால், பால்கனியில் உட்கார்ந்து அதை செய்துகொண்டிருக்க, அவனை செய்யவிடாமல், அவனருகில் உட்கார்ந்து மொபைலில் ஏதேதோ காட்டிக்கொண்டிருந்தாள்.

“அகி… இங்க பாரேன். லயாவோட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்” என மொபைலை காட்ட, அதில் விஜயுடன் லயா எடுத்திருந்த பலவிதமான புகைப்படங்கள் இருந்தது.

அதை பார்த்தவன், “ஹ்ம்ம் நைஸ் பேபி!” என்றுவிட்டு வேலையைப்பார்க்க… “இத பாரு அகி… க்யூட்’டா இருக்காங்கல்ல” என மற்றொன்றைக் காட்ட, அதைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறுபடியும் வேலையை செய்தான்.

சில நிமிடங்கள் மொபைலை பார்த்தவள், கொஞ்ச நேரத்தில் அதுவும் சலிப்புத்தட்ட… பின் அவன் லேப்டாப்’பை பார்த்து “ப்ச். போர் அடிக்குது அகில்!” என்றாள்.

“கொஞ்ச நேரம்டா… முடிச்சுடறேன். ரெண்டு நாள் வேலை செய்யாம தள்ளிபோய்டுச்சு. ஆஸ்திரேலியா காரன் ரிமைண்டர் மெயில் போட்டுட்டான். முடிக்கலைன்னா காண்டாயிடுவான்” என்றான் வேலையில் கவனம் வைத்துக்கொண்டு.

“சரி எனக்கு சொல்லித்தா இதெல்லாம் எப்படி பண்றன்னு” அவனை விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள்.

“ஏன்? உனக்கு இருக்க வேலை பத்தாதா பேபி? இதுவேறயா? வேணும்னா சொல்லு… அம்மா வந்ததும் ரெண்டு வேலை சேர்த்து தரச்சொல்றேன்” நக்கலுடன் நகைக்க, அவனை பார்த்து முறைத்து, இடுப்பில் நன்றாகக் கிள்ளிவிட்டாள்.

“ஆஹ்!” என வலியில் அவன் சிரித்துக்கொண்டே கத்த… “நான் எவ்ளோ ஆசையா இருந்தேன்… இன்னும் உன்கிட்ட நிறைய பேசணும்ன்னு. நீ என்னடான்னா வேலைபார்த்துட்டே இருக்க” கொஞ்சம் ஆசையுடனும், கொஞ்சம் கோபத்துடனும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ஸ்வீட்டி!! இன்னைக்கு ஒரு நாள்… ப்ளீஸ்டா. நாளைல இருந்து ஃபிரீ. ரெண்டு நாள் பெண்டிங் ஒர்க் பேபி” என்று கிட்டத்தட்ட கெஞ்ச, “ப்ச்… நீ என்னமோ பண்ணு. நான் உள்ள போறேன்” என எழ…

“தூங்கிடு பேபி சீக்கிரம். ரொம்ப நேரம் முழிச்சிருக்காத. குட் நைட்!” என்றவுடன்… “ஒன்னும் தேவையில்லை” முகத்தைத் திருப்பிக்கொண்டு கோபமாக உள்ளே சென்றுவிட்டாள்.

வேலை முடித்து உள்ளே வந்தவன், டேபிள் மேல் இருந்த ஒரு டைரியை பார்த்தான். எடுக்கலாமா வேண்டாமா என்று மூளை யோசிக்க… கை தானாகப் புரட்ட ஆரம்பித்தது. அதில் நிறைய நிறையக் குட்டி குட்டி ஹைக்கூக்கள்.

அவனை நினைத்து அவள் எழுதியது. மனம் நெகிழ்ந்து அவளைப் பார்த்தான்… நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் முன் குனிந்து, “லவ் யு டா பேபி!” என்றவன் நெற்றியில் முத்தமிட்டான்… அதில் அவன் ரோமம் பட்டு, அவள் தூக்கம் கொஞ்சம் தடைபட, மெதுவாகத் தட்டிக்கொடுத்தான். மீண்டும் உறங்கிவிட்டாள்.

அடுத்தநாள் காலை விடிந்தது. அன்று கோகுலாஷ்டமி. செங்கல்பட்டு வீட்டில் காலையில் பூஜை முடித்துவிட்டு, மாலை லட்சுமி மற்றும் இசைப்பிரியா சென்னை வருவதாக இருந்தனர்.

கவிதா களைப்பாக இருந்ததால், அலுவலகம் செல்லவில்லை. அகிலன் மட்டுமே சென்றான்.

மாலை நேரம் நெருங்கும்போது கவிதா… அழகாக ஒரு காட்டன் புடவை உடுத்தி… அன்றைய கிருஷ்ண ஜெயந்திக்காக, வீட்டை தயார் செய்ய ஆரம்பித்தாள்.

அரிசிமாவை கலந்து வாசலில் கோலமிட்டு, பின் சிறியதாக கிருஷ்ணர் பாதங்களைப் போட்டுக்கொண்டிருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்க, கதவை திறந்தாள். அகிலன் வந்திருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

தலையில் ஈரத்துணியுடன், கட்டியிருந்த புடவையை தூக்கி சொருகிக்கொண்டு அவன் முன் நின்றவளை மெய்மறந்து பார்த்தான்.

‘பார்வையே சரியில்லையே!’ என நினைத்து உள்ளே செல்ல திரும்பியவள், சட்டென ஏதோ தோன்ற அவன் பக்கம் திரும்பினாள்.

திரும்பிய வேகத்தில் அவன் மேல் மோதியும் மோதாமல் தடுமாற, அவள் விழாமல் இருக்க, இடை சுற்றிப் பிடித்துக்கொண்டு…

“என்ன பேபி?! ஒரு மார்க்கமா இருக்க…” அவளை நெருக்கமாக வைத்துக்கொண்டு… “சென்னை வந்தாச்சு… அதே ஞாபகமா…ஹ்ம்ம்?!” புருவத்தை உயர்த்தி புன்னகையுடன் கேட்டான்.

“ஐயே நினைப்பு தான்… யாரோ எப்பவும் ஆஃபீஸ்ல இருந்து வர டைம்’க்கு முன்னாடியே வந்துட்டாங்க. இதுல என்னை சொல்றாங்க” அவனைக் கிண்டல் செய்து…

“கீழ பாதம் போட்டுருக்கேன்… மிதிச்சிடாதான்னு சொல்ல வந்தேன்… விடு” என நெளிந்தாள் அவனின் கைக்குள்ளே. அவன் விட்டபாடில்லை.

பார்வையை மெதுவாக அவனைத் தாண்டிப் பார்த்து… “அத்த வாங்க…” என்றாள் ‘அவன் அம்மா வந்துவிட்டார்கள்… விட்டுவிடுவான்’ என நினைத்து.

அவனோ சத்தமாகச் சிரித்தான்.

“பேபி… அவங்க கொஞ்ச நேரம் முன்னாடி தான் கிளம்பினாங்க. வர நேரம் ஆகும்” என்றான் அவளை விடாமல் மற்றொரு கையால் அவள் முகத்தில் கோலமிட்டபடி.

அவன் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மனம் கவிழ்வதை உணர்ந்து…

“அகில்… நான் இப்போ தான் குளிச்சேன். டெர்ட்டி பண்ணாத. போய் குளிச்சிட்டு வா” மெல்லியகுரலில் சொல்ல, “அப்படியா சொல்ற… இதோ போறேன். வந்து பார்த்துக்கறேன்” அவளை ரசனையாகப் பார்த்துக்கொண்டே விடுவித்தான்.

விட்டால் போதும் என்று அடுப்பங்கரைக்கு ஓடியே விட்டாள்.

அவனும் குளித்துமுடித்துக் கீழே வந்தான். பூனைபோல் அவளை எட்டிப் பார்க்க, அவள்… “அலைபாயுதே கண்ணா” என்று பாடிக்கொண்டு இல்லை இல்லை “கண்ணா” என்பதை மட்டும் இழுத்து இழுத்துக் கத்திக்கொண்டிருந்தாள்.

அதை பார்த்து சிரித்தவன், உள்ளே வந்து அவளைப் பின்னோடு அணைத்துக்கொண்டு… “பேபி… சூப்பரா பாடறயே. தயவுசெஞ்சு இன்னிக்கி சாமி முன்னாடி பாடிடாத! ப்ரியா உன்ன ஓட்டியே தீத்துடுவா!” என சொல்லி நக்கலாக சிரித்தான்.

முதலில் அவன் அணைத்ததில் திடுக்கிட்டாலும், பின் அவன் பிடியிலேயே இருந்து திரும்பி…

“ஓவர் சீன் வேணாம். உன் குரல், உன் பாசமலர் குரலை விட என்னோடது நல்லா தான் இருக்கு. என் பாட்டுக்கு என்ன கொறச்சல்” என்றாள் முகத்தைத் திருப்பி…

“பேபி… பேபி! பாட்டு தான் உன்கிட்ட படாதபாடு படுது… பட் கவிதை செம்ம! எவ்ளோ எழுதிருக்க எனக்காக…” என்று சொன்னவுடன்… “அச்சோ பார்த்துட்டயா?!” என்றாள் விழிகள் அகல.

“ஹ்ம்ம்…” என்றவன் அவள் முகத்தில் இருந்த முடிக்கீற்றைக் காதின்பின் தள்ளி… “ஒன்னொன்னும் பாஹ்…” என்றான் அவளின் விரிந்த கண்களைப்பார்த்து.

அவனின் நெருக்கம்… அப்போதுதான் குளித்துவிட்டு வந்ததால் அவனிடம் இருந்து வந்த நறுமணம்… அவன் கைகள் அவள் இடையில் புரியும் யுத்தம்… என அவளை தன்னிலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச்செய்ய, அதை புரிந்துகொண்டவன், மென்மையாக அவள் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான்.

“விடு அகில்! கிருஷ்ண ஜெயந்தி பூஜை முடியல!” என்றாள் ஆனால் குரல் சுத்தமாக வரவில்லை.

அவனோ ஹஸ்கி குரலில்… “இதுகூட கிருஷ்ணரோட லீலைல ஒரு பார்ட் பேபி…” என்றவன், அவள் காதருகில் சென்று… “இந்த சிட்டுவேஷன்’னுக்கு ஒரு இன்ஸ்டன்ட் கவிதை சொல்லேன்…” என்றான் சின்னதாகக் காதில் ஒரு முத்தம் பதித்து. உடல் முழுதும் சிலிர்த்தது அவளுக்கு.

கண்கள் மெதுவாக மூட, அவன் காதருகில், அவள் இதழ்கள் முணுமுணுத்தது…

‘உன் அருகாமை தந்த வெட்கத்தில் மூடியது என் கண்ணிமை…

விழித்ததோ என் பெண்மை!’

அதை கேட்டவுடன், மயக்கும் புன்னகையுடன் அவள் இதழ்களை நெருங்கும்போது அடித்தது அழைப்புமணி!

9
3
7

4 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 23

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved