Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் #ENV

என்னுள் நீ வந்தாய் – 22

என்னுள் நீ வந்தாய் – 22

———இன்று———

அதே நள்ளிரவு… துபாய் அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில் இடைவிடாது நீந்திக்கொண்டிருந்தான் அஜய். எவ்வளவு நேரம் என அவனுக்கே தெரியாமல் மனம் ஒருநிலையில் இல்லாமல் அங்கும் இங்கும் நீந்தினான்.

ஒரு கட்டத்தில் மனச்சோர்வையும் தாண்டி உடல் சோர்வடைந்தது. தண்ணீரில் இருந்து வெளியே வந்தவன் அவன் அபார்ட்மென்டுக்கு சென்றான்.

இரண்டு நாட்களுக்கு முன் கவிதாவை இங்கே ஹோட்டலில் சந்தித்தது நினைவிற்கு வந்தவண்ணம் இருந்தது.

அதே நினைவுடன் குளித்துவிட்டு, மொபைல் பார்த்த போது, தங்கை அனிதா பதிவிட்டிருந்த பள்ளி காலப் புகைப்படங்களைப் பார்த்தான்.

அதில் ஒன்று அனிதா அவளது தோழி ஜெனி உடன் எடுத்த புகைப்படம்!

கவிதாவை அன்று காபி ஷாப்பில் பார்த்துவிட்டு சொந்த ஊரான திருச்சிக்குச் சென்றிருந்த போது, ஜெனியை சந்தித்தது இப்போது நினைவிற்கு வந்தது.

———அன்று———

ஒரு மாலை பொழுது… திருச்சி முக்கொம்பு அணை. நீர் கட்டுக்கடங்காமல் அணையில் சலசலத்துக் கொண்டிருந்தது. அணையின் மதில்மேல் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த அஜய்யின் மனதும் ஒரு நிலையில் இல்லை. துபாயில் இருந்து வந்திருந்தான். அவன் அம்மாவின் உடல்நிலை கருதி.

திருச்சி வரும்முன் கவிதாவை சந்தித்திருந்தான் அவள் சந்தோஷமாக இருக்கிறாளா என தெரிந்துகொள்ள.

தான் நினைத்ததை விட அவள் முகத்தில் தெரிந்த அந்த நிறைவு, தனக்கு நிறைவைத் தந்தாலும், ஒரு புறம் மனம் விரும்பியவள் மனதில் மருந்துக்கும் தானில்லை என்பது மனபாரத்தைத் தந்தது. அதற்கு தானே காரணம் என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தற்போது அவள் மற்றொருவனின் மனைவி. ஒரு க்ஷணம் அவளை மனதில் வேறொரு எண்ணத்தில் நினைத்தால் கூட அது தவறு என நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

இருந்தும் அவள் நினைவுகள் அவ்வப்போது வந்து இம்சித்தது.

இன்றும் அவன் அம்மா, ‘இப்படியே எத்தனை நாட்கள் இருக்கப்போகிறாய்?’ என வருந்தினார்.

பதிலுக்கு, “இது நீங்க எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த வாழ்க்கை. நீங்கெல்லாம் சந்தோஷமா இருக்க என் சந்தோஷத்தை தொலச்சுட்டு நிக்கறேன். இனி இப்படித்தான். என்னை பார்த்து சந்தோஷப்படுங்க” என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டு வந்திருந்தான்.

தாயிடம் அப்படிப் பேசியதை நினைத்து வருத்தமாக இருந்தாலும், அவர் மேல் அளவுகடந்த கோபமும் இருந்தது… அவர் மகளின் வாழ்க்கைக்காக மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார் என.

அவன் வாழ்க்கையை இனிமைப்படுத்த இருந்த அவனின் ‘இனி’… இனிமேல் இல்லை என்ற எண்ணம் இறுக்கத்தைத் தந்தது. அணையில் இருந்து வரும் சத்தத்தைக் காட்டிலும் கத்த வேண்டும் என்பது போல இருந்தது.

‘எப்படியாவது முயற்சி செய்து கவிதாவின் கரம் பிடித்திருக்கலாம்’ என அவன் அறிவு அறிவுறுத்திய போதெல்லாம்… அவன் மனது அதே அறிவிடம் கேட்கும் சில கேள்விகள்….

‘கவிதாவே வேண்டாம்’ என்று சொல்லும் பெற்றோர்களைப் பகைத்துக்கொண்டு ஒருவேளை கவிதாவை கல்யாணம் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அனிதா அவள் புகுந்தவீட்டில் இருந்து திரும்பி அனுப்பப்பட்டிருக்கலாம்… அதை ஜீரணிக்க முடியாமல் பெற்றோர்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கலாம். அப்படியேதாவது நடந்தால் கவிதாவும் தானும் சந்தோஷமாக இருக்க முடியுமா?

ஒருவேளை அனிதாவின் குடும்பத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்… கவிதாவை வேண்டாம் என்று சொன்ன பெற்றோர்களை கவிதாவால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? இல்ல கவிதாவை தான் அவர்கள் ஏற்றுக்கொள்ளமுடியுமா?

விடுதி வாழ்க்கையே வாழ்ந்தவள் எப்பொழுதும் விரும்பியது ஒரு அழகான குடும்ப வாழ்க்கை… மனவருத்தத்துடன் சந்தோஷமான வாழ்க்கையை எப்படி வாழ முடியும்?

அந்த வலியை கவிதாவிற்குத் தர மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்கு ஒரே முடிவு… மற்றவர்கள் நல்வாழ்விற்காக தன் வாழ்க்கையைப் பணயமாக்கினான்.

அவனுக்கு கவிதாவை நன்கு தெரியும். ஏமாற்றப்படுவது அவளால் என்றுமே ஜீரணிக்கமுடியாத ஒன்று. அதை அவன் செய்தால் நிச்சயமாக அவனை வெறுப்பாள் என்று நன்றாவே தெரிந்து அதையே செய்தான்.

அகிலன் நல்ல மனிதனாகத் தெரிந்தான். அவனுடன் அவள் வாழ்க்கை அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவனிடம் நடந்தவற்றைச் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொள்ளச்சொன்னான்.

இப்போது அவள் வாயாலேயே சந்தோஷமாக இருப்பதைத் தெரிந்துகொண்டான். இருப்பினும் அவளை மறக்க முடியவில்லை. மறக்க நினைக்கவும் இல்லை. அவள் நினைவுகளுடனே இருக்கும்போது….

“ஹலோ அஜய்! எப்படி இருக்கீங்க…” திடீரென சத்தம் கேட்க … திரும்பிப்பார்த்தான்.

நன்கு பரிச்சயப்பட்ட முகம்… அவன் பதில் சொல்லுமுன், “இங்க உட்காரலாமா?” அவன் பக்கத்தில் இருந்த இடத்தைக் கண்களால் காட்டி கேட்க… புன்னகையுடன் “ப்ளீஸ்” என்றான்.

“எப்படி இருக்க ஜெனி?” பக்கத்தில் உட்கார்ந்த பெண்ணைப் பார்த்து கேட்டான் அஜய்.

“பரவால்ல… என்னை ஞாபகம் இருக்குமான்னு யோசிச்சேன்…” அவனைப் பார்த்துச்சொல்லிவிட்டு தண்ணீரைப் பார்த்தாள்.

“உன்னை எப்படி ஞாபகம் இல்லாம போகும்? நீயும் அனிதாவும் ஸ்கூல் வர ஒன்னா தானே படிச்சீங்க. சேம் ஸ்கூல் சேம் டியூஷன். அவளோட நல்ல ஃபிரெண்ட்” அவன் சொல்லுமுடிக்கும்முன், அவனைப் பார்த்து…

“அனிதா மட்டும் இல்ல. நீயும் தான் சேம் ஸ்கூல் அண்ட் டியூஷன்” என்றுவிட்டு மறுபடியும் தண்ணீரைப் பார்த்து, “அவகூட ஸ்கூல்ல மட்டும் தான் படிச்சேன். ஆனா உன்கூட காலேஜ்ல படிச்சேனே” என்றவள்…

பின் விரக்தியுடன், “ஓ… காலேஜ்ல என்னை பார்க்க உனக்கு எங்க நேரம் இருந்துச்சு” என வெற்றுப்புன்னகை உதிர்த்தாள்.

அஜய்க்கு புரியவில்லை. ‘ஏன் இவளைப் பார்க்கவேண்டும்? அனிதாவின் தோழி. கல்லூரியில் சேரும்போது உதவினான், அனிதா கேட்டுக்கொண்டதற்காக. அதையும் தாண்டி என்ன?’ என யோசித்தான்.

அதை புரிந்துகொண்டவள், அவன் முகம் பாராமல்… “உனக்கு தெரியுமோ தெரியாதோ அஜய்… அப்போ நான் எய்த் படிச்சேன். அனிதா கூட எய்த். என் ஸ்கூல்ல ரொம்ப நாட்டி’யா ஒரு பையன் இருப்பான். அவன் நைன்த்…

எல்லா டீச்சர்ஸ்’கும் அவனைப் பிடிக்கும். இத்தனைக்கும் படிப்புல அவ்ளோ ஒன்னும் இல்ல. இருந்தாலும் எல்லாருக்கும் அவனை பிடிக்கும். அதுபோல தான் எனக்கும். அவனை ரொம்ப பிடிக்கும். ரொம்ப…”

திரும்பி அவன் முகம் பார்த்தாள். அவன் முகம் அதிர்ச்சியைக் காட்டியது. மறுபடியும் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“தங்கச்சி அனிதா கூட அப்போ ஒரு டியூஷன் போவான் அவன். அவனை பார்க்கணும்னே நானும் போய் சேர்ந்தேன். அங்க எல்லாரும் கேட்பாங்க… நீ நல்லா படிக்கறயே எதுக்கு டியூஷன்னு? அவங்ககிட்ட சொல்லவா முடியும்… நான் அந்த பையன பார்க்கவரேன்னு?

அப்படியே போச்சு… நாலு வருஷம். தூரத்துல இருந்து அவனை பார்க்கற சுகமே சுகம் அப்போல்லாம். அவன் கண்ணு… அந்த ஷார்ப் அயிஸ். அத பார்த்துட்டே இருக்கணும்னு தோணும். இதெல்லாம் அவன் டுவெல்த் படிக்கறவரை. அப்புறம் அவன் போய்ட்டான், காலேஜ் படிக்க வேற ஊருக்கு. அவ்ளோ அழுதேன்”

சொன்னவள் கண்கள் கலங்கியது இப்போது. கலங்கிய கண்களுடன் அவனை பார்த்தாள். அவன் இன்னமும் அதிர்ந்தான்.

“அடுத்த ஒரு வருஷம் அவனை பார்க்கமுடியாம அவ்ளோ ஃபீல் பண்ணேன். நல்லா படிச்சிட்டுயிருந்த எனக்கு, சுத்தமா படிப்புல இன்டெரஸ்ட் போய்டுச்சு. ரொம்ப கம்மி மார்க் எடுத்தேன். இருந்தும் வீட்ல அடம் பிடிச்சு அவன் சேர்ந்த அதே காலேஜ் மேனேஜ்மென்ட் கோட்டா’ல சேர்ந்தேன்”

இப்போது அஜய்யால் அவளை பார்க்க முடியவில்லை. இது எதுவும் அவனுக்குத் தெரியாது.

அவள் தொடர்ந்தாள்.

“அவன்கூட காலேஜ் படிக்கப்போறோம் அப்படிங்கற நினைப்பே அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. அங்கயும் அவன் படிக்கல. பாக்ஸிங், ஸ்போர்ட்ஸ்’ன்னு இருந்தான். அப்பவும் எனக்கு அவனை ரொம்பப் பிடிச்சது. நான் பண்ணின தப்பு… எதையும் சொல்லாம, எல்லாத்தையும் தூரத்துல இருந்து பண்ணினது”

இப்போது கண்ணீர் கோடாக வந்தது அவள் கண்களில் இருந்து…

“செகண்ட் இயர்’ல ஒரு பெரிய இடி என் தலைல விழுந்தது” என சொல்லும்போது அவளுக்குத் தொண்டை அடைத்தது. அவனுக்குப் புரிந்தது அவள் என்ன சொல்லவருகிறாள் என.

“அவனும் என்னோட ஃபிரண்ட் கவியும் லவ் பண்றாங்கன்னு தெரிஞ்ச சமயம், செத்துடலாம்ன்னு தோணுச்சு. ஆனா அதுக்கும் தைரியம் வேணும் பாரேன்” அவள் சொல்லச் சொல்ல படபடத்த இதயத்துடன் அவளைப் பார்த்தான் அஜய். அவள் கண்கள் சிவந்திருந்தது.

இந்தப் பெண்ணைப் பற்றி “கவிதாவின் வகுப்புத்தோழி” என்று அத்தியாயம் நான்கில் சொல்லப்பட்டிருக்கும்.

அனிதாவும் ஜெனியும் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். அனிதாவும் கவிதாவும் டிப்ளமோ (பத்தாம் வகுப்புக்குப்பின்) ஒன்றாகப் படித்தவர்கள். கவிதாவும் ஜெனியும் ஒரே வகுப்பில் படிக்க நேர, அனிதா என்ற துருப்பு சீட்டால் இருவரும் தோழிகள் ஆயினர்.

ஜெனி தொடர்ந்தாள்.

“காலேஜ்’ல நிறைய பேர் என்னை பார்க்கறாங்கன்னு கவியே சொல்லுவா. ஆனா நான் மனசுல நினைச்சவன்… என் மனசுக்கு பிடிச்சவன் என்னை கொஞ்சம் கூடப் பார்க்கலைன்னு தெரிஞ்சப்ப… என் முகத்தை கண்ணாடில பாக்கறதுக்குக் கூட அசிங்கமா இருந்துச்சு”

ஆம்… ஜெனி அப்போது மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பெண். பேரழகி. ஒல்லியாகவும் இல்லாமல்… பருமனாகவும் இல்லாமல், உயரமாகவும் இல்லாமல்… உயர கம்மியாகவும் இல்லாமல்… பொன்னிறத்துடன் எல்லாம் சரிவர பொருந்திய அழகி என்பதே மாணவர்களின் கருத்து.

“சாகவும் முடியாம… என் கண்ணு முன்னாடி ஜோடியா இருக்குற ரெண்டு பேரையும் பார்க்கவும் முடியாம, நொந்துபோன காலம் அது. ஒரு கட்டத்துல… என்னை நானே சமாதானம் பண்ணிட்டேன். கவிதான் அவனுக்கு சரியான ஆள்னு.

ஆனாலும் மனசு கேட்காது. எப்பவும் போல பார்த்துட்டே தான் இருந்தேன், அவன் காலேஜ் முடிக்கறவரை” அஐய்யை பார்த்து சொல்ல… அஜய்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“சொல்லாத காதல் செல்லாது. இல்லையா… அதுபோல நானும் ஒரு செல்லாக்காசு மாதிரி தான் இருந்தேன். இருக்கேன்”

அஜய் இன்னமும் அதிர்ந்தான். அதை அவன் முகம் காட்டியது. அவள் சொன்ன ‘இருக்கேன்’ ஏதோ செய்தது. ஆனால் என்ன என்று புரியவில்லை.

“கொஞ்ச மாசம் முன்னாடி தான் கவிக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். உனக்கும் அவளுக்கும்னு நினைச்சிட்டு இருந்தப்ப தான் எனக்கு தெரியவந்துச்சு… அவ வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டான்னு. அவமேல அவ்ளோ கோவம். போன் பண்ணி திட்டலாம்னு நினைச்சேன்.

உன்னமாதிரி ஒருத்தன விட்டுட்டு எப்படி இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கமுடியும்? மனசாட்சி இல்லையான்னு நாலு வார்த்தை கேட்கணும்ன்னு நினச்சேன்”

அஜய் ‘கவிதாவிடம் இவள் கேட்டுவிட்டாளோ’ என நினைத்து பதறி ஜெனியை பார்த்தான்.

“அப்போதான் அனிதாவ பார்த்து பேசினேன். எல்லாம் புரிஞ்சது. கவிதாவுக்கு பிடிச்சு கல்யாணம் நடக்கல… அதுவும் நீ சொல்லிதான் நடந்ததுனு. அப்புறம் உன் வீட்ல நடந்தது முழுசும் தெரிஞ்சுட்டேன்.

நீ இப்போகூட கவிதாவை நினைச்சு வருந்திட்டு இருக்கன்னு அனிதா புலம்பினா. இன்னமும் செல்லாக்காசா இருக்கவேணாம்னு உன்னை பார்க்க வந்தேன்” அவன் கண்களை ஊடுருவியது அவள் கண்கள் முதல் முறையாக.

“உன் காதல் ஒரு ஆறு வருஷம் இருக்குமா…? என் லவ்’க்கு வயசு பதிமூணு. எனக்கு தெரியும்… நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ லவ் பண்ணீங்கன்னு. பக்கத்துலயே இருந்து பார்த்திருக்கேனே…

ஆனா என்னால ப்ரூவ் பண்ணமுடியும் அஜய்… நீ கவிதாவை லவ் பண்ணதைவிட நான் உன்ன அதிகமா விரும்பறேன்னு. ஆனா அத நிரூபிக்கக்கூட எனக்கு ஒரு சான்ஸ் இல்லாம… எல்லாப்பக்கமும் எல்லாக்கதவும் மூடியிருக்கு. எனக்காக ஒரு சான்ஸ் தருவயா? என் காதல உனக்கு புரியவெக்க” அவனைப் பார்த்து நேராக கேட்டாள்.

அவனால் முடியவில்லை. நெஞ்சின் மேல் ஒரு பெரிய பாரம் இறக்கப்பட்டது போல் உணர்ந்தான். மிகவும் வலித்தது. அவள் முகம் பார்க்கமுடியவில்லை.

இத்தனை ஆண்டுகள் இவள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என ஒரு துளியும் அவன் நினைத்து பார்த்ததில்லை.

தனக்குத் தெரியாமல் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருகிறாள்… ஆனால் தன்னால் என்ன செய்யமுடியும்? கவிதாவை மறந்து மற்றொரு வாழ்க்கையா? தன்னால் முடியுமா?

இல்லை… கவிதா தான். வேறு யாருக்கும் இடமில்லை. ஆனால் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் இந்தப்பெண்? என பல கேள்விகள், பதில்கள், நியாயங்கள் என அவன் மனதை வெகுவாக வலிக்கச்செய்தது.

சிறிதுநேர மௌனத்திற்குப்பின், “என்னால இப்போ எதுக்கும் பதில் சொல்லமுடியும்னு தோணல ஜெனி! ரொம்ப வலிக்குது. இங்க!” என தன் இதயம் இருக்கும் இடத்தைக் காட்டினான்.

“கவிதாவை என்னால மறக்க முடியாது. மறக்கணும்னு நினைக்கற நினைப்பே ரொம்ப வலிக்குது. நீ ஏதேதோ சொல்ற. ரொம்ப அழுத்தமா இருக்கு. இதையெல்லாம் ஜீரணிக்கவே நேரம் தேவைப்படும். சோ…” தயக்கத்துடன் வந்தது வார்த்தைகள்.

“ப்ளீஸ் டோன்ட் ஸ்ட்ரெஸ் யுவர்ஸெல்ப்! கட்டாயத்தால வர்றது காதலா இருக்கமுடியாது. மனசார வரணும். உன்னால கவிதாவை எப்படி மறக்க முடியாதோ, அதே மாதிரி என்னாலயும் உன்ன மறக்க முடியாது அஜய். நான் காத்துட்டு இருப்பேன்… உனக்காக. நீ சம்மதம் சொன்னாலும் சரி. இல்லாட்டியும் சரி. நான் இப்படியே தான் இருப்பேன்” சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ஒருவேளை கவிதா அவன் வாழ்க்கையில் வரும்முன் ஜெனி அவனிடம் காதலைச் சொல்லியிருந்தால்? ஜெனி நினைத்தது நடந்துருக்குமோ? விதி வலியது!!!

8
2
4

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved