என்னோடு நீ உன்னோடு நான் – 14

என்னோடு நீ உன்னோடு நான் – 14

வள்ளி அங்கிருந்து செல்லும்முன், நிலாவிடமும் ஆதியிடமும் கண்களாலேயே ‘கவனம்’ என எச்சரித்துவிட்டு சென்றாள்.

இருவரும் பூசாரி ‘என்ன சொல்லப்போகிறார்?’ என அவரை பார்த்தார்கள்.

“உங்கள பத்தி நான் எதுவும் தலைவர்கிட்ட சொல்லிக்கல. உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். ஆனா, இங்கயேவச்சு எதுவும் அதிகம் பேச முடியாது.

நான் இப்போ முனீஸ்வரன் கோவிலுக்கு திரும்ப போயாகணும். காலைல வந்துடுவேன். வந்து பேசறேன்” என்றவர், அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து இருவரையும் வள்ளியின் வீட்டில் விடச் சொல்லிவிட்டுச் சென்றார்.

இருவரும் அவர் பேச பேச, குழப்பத்துடனும், ஆச்சரியத்துடனும் நின்றிருந்தார்கள்.

“இப்படி ஒரு ரியாக்ஷனை இவர் கிட்ட இருந்து எதிர்பார்க்கல நிலா. என்னவா இருக்கும்? எதை பத்தி பேசப்போறாருனு தெரிலயே”

“நானும் பயந்தே போய்ட்டேன் ஆதி! இன்னிக்கி நைட் நமக்கு சமாதி தான்னு நினச்சேன். ஒருவேளை நாளைக்கு கூப்பிட்டு வச்சு, இங்க இருந்து கிளம்புங்கன்னு மிரட்டுவாரோ?” பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர்.

“அவர் பேசினதை பார்த்தா அப்படி தெரியல. என்னமோ போ! இந்த ஊரே மர்மமா இருக்கு!”

வள்ளியின் வீட்டை அடைந்தவுடன், இவர்களைப் பார்த்த வள்ளி, “எப்படியோ தலைவர் நம்பிட்டாரு. பூசாரி என்ன சொன்னாரு தனியா கூப்பிட்டு?” எனக் கேட்டாள்.

நிலா ஏதோ சொல்லவர, ஆதி அவளை தடுத்தான்.

“அதுவா… காப்பாத்தினதுக்கு நன்றி சொன்னார். அப்புறம் ஏதோ முனீஸ்வரன் கோவிலுக்கு போறேன்னு சொன்னார்” என்று நிறுத்திய ஆதி,

“ஏதோ திருவிழாவாமே” என்று பீடிகையுடன் கேட்டான். ‘இது அவர் சொல்லவே இல்லையே?!’ நிலா அவனைச் சந்தேகத்துடன் பார்த்தாள். பின் புரிந்தது. திருவிழா எங்கு நடக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள விழைகிறான் என்று.

“திருவிழா பத்தி அவரே சொன்னாரா? பரவால்லயே!” என்றாள் வள்ளி சற்று யோசனையுடன்.

“ஏன் என்ன ஆச்சு?” அவன் அவளை உற்று நோக்கிக் கேட்க, “திருவிழா பத்தி வெளி ஆட்கள் கிட்ட சொல்லமாட்டோம். உங்க கிட்ட சொல்லி இருக்காரே… அதான் யோசிச்சேன்” என்றாள் வள்ளி.

‘ஓ அப்போது திருவிழா முனீஸ்வரன் கோவிலில் தான்’ என இருவரும் நினைத்துக்கொண்டார்கள்.

வள்ளியின் யோசனை முகம் பார்த்து, “உங்க சொந்தம்னு சொன்னீங்கல்ல அதுனால எங்ககிட்ட சொல்லியிருப்பார் போல” என்று அவனே எடுத்துக்கொடுத்தான் .

“இருக்கும். சரி வாங்க சாப்பிடுங்க” என்று அவள் உணவு எடுத்து வைத்தாள்.

“அக்கா! நீங்களும் உட்காருங்க. சேர்ந்து சாப்பிடலாம்” நிலா வள்ளியையும் அழைக்க, நிலா அக்கா என்று கூப்பிட்ட சந்தோஷத்தில் வள்ளி.

“நீங்க சாப்பிடுங்க, நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கறோம்” என்றாள்.

“இருக்கட்டும் நமக்குள்ள என்ன! வாங்க” ஆதி முனியையும் அழைத்து உட்காரவைத்து, பின் நால்வரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

ஆதி சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்ததுபோல, “எப்போ திருவிழா அந்த கோவில்ல?” என ஆரம்பித்தான்.

“எந்த கோவில் திருவிழா? ஓ முனீஸ்வரன் கோவில் திருவிழாவா… நாள மறுநாள்” என்றாள்.

அவள் சொல்வதில் ஏதோ ஒன்று நிலாவிற்கு பொறி தட்டியது.

‘அன்னிக்கி கோவிலுக்கு வர்றப்ப அந்த டிரைவர் ரெண்டு மூணு கோவில் இருக்குனு சொன்னார். இவங்க எந்த கோவில் திருவிழான்னு கேட்கறாங்க. அப்போ வேற கோவில்லயும் ஏதாச்சும் திருவிழா நடக்குமோ… இது இல்லாம?’ என்று யோசனையில் மூழ்கினாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன், வள்ளி… “முனி நீ மணி வீட்ல போய் படுத்துக்கோ. நான் போயிட்டு சீக்கரம் வந்துடறேன்” என்றாள்.

சரி என்று முனி சொன்னவுடன், இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டாள் வள்ளி.

“இப்போ எங்க போறோம்?” நிலா கேட்க, “உங்க நிலா இரவுக்கு தான்” என்று சிரித்துக்கொண்டே சென்றாள் முன்னே.

“எல்லாம் உன்னால தான் ஆதி. நீ முடியாதுனு அவருகிட்ட சொல்லி இருக்கலாம்ல” முறைத்தாள் நிலா.

 “பார்றா! நான் வேண்டாம்னு தான் சொன்னேன். உடனே உன்ன கேட்டாங்க. நீ தான் அப்போ ஏதோ உளறின” என்றான் ஆதியும் விடாமல்.

அவள் முகம் காட்டும் லேசான தயக்கத்தைப் பார்த்த ஆதி, “விடு நிலா பார்த்துப்போம்! டூ நைட்ஸ் தனியா தானே இருந்தோம். இந்த நிலா இரவெல்லாம் டஸ்ன்ட் மேக் எனி டிஃப்ரெண்ஸ்” கொஞ்சம் தேற்றினான்.

அருவியின் நடுவில் மரப்பாலம் அமைத்திருந்தனர். அதன் வழியே அருவியின் அந்த பக்கம் கூட்டிச்சென்றாள் வள்ளி. அங்கே சிறிய குடில்கள் இருந்தது. அது நிஜ கொடிகள் மற்றும் அதன் பூக்களினால் ஆன குடில் போல இருந்தது

அதில் ஒன்றின் அருகில் இருவரையும் அழைத்துச்செல்ல, அங்கே சில பெண்கள் இவர்களுக்காகக் காத்திருந்தனர்.

அவர்களின் சடங்குகளை முடித்து ஆதியையும் நிலாவையும் உள்ளே அனுப்பி வைத்தனர்.

அன்றைய இரவு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் விரிசல் விழக் கூடிய அளவிற்கு இருக்கப்போகிறது என்பதை அறியாமலேயே அந்த இரவை கழித்தனர்.

பொழுதும் விடிந்தது. வள்ளி அழைக்கும் சத்தம் கேட்டு, இருவரும் காலையில் எழுந்தனர். இருவரும் தாங்கள் இருந்த கோலத்தைப் பார்த்து சற்றே பதட்டம் அடைந்தாலும், வள்ளியின் அழைப்பில் உடனே கிளம்பினார்கள்.

அதற்குப் பின் இருவருக்கும் தனியே பேசத் தருணம் அமையவில்லை.

காலை வேலைகளை இருவரும்  முடித்து இருக்க, பூசாரி வள்ளியிடம் இவர்களுடன் கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது என்று நேராக தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

வீட்டிற்கே அழைத்துச்சென்றதால், இருவர் மனத்திலும் பூசாரியின் மேல் இருந்த சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.

அவர் மனைவி இருவருக்கும் பானகம் குடிக்கக் கொடுத்தார்.

“நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ தூரம் இந்த ஊருக்கு வருவீங்கனு நான் நினைக்கல. இப்போகூட எதுக்கு வந்துருக்கீங்கனு தெரியல. ஆனா, இங்க வந்து எங்களுக்கு உதவி பண்ணீருக்கீங்க” சற்று நிறுத்திய பூசாரி,

“இந்த பொண்ணு கோவிலுக்கு வந்தப்ப… திருவிழா நடக்குதா, நடந்தா ஆபத்துன்னு சொல்லுச்சு. நீங்க எங்க ஊரு திருவிழாவ நிறுத்த தான் வந்திருக்கீங்களோனு நினச்சசேன்.

எங்க ஊருல ஒன்பது வருஷம் கழிச்சு நடக்கற திருவிழா இது. இத்தனை வருஷமா ஏதோ ஒரு தடங்கல் வந்துட்டே இருந்தது. ஊரை காக்கிற கடவுளுக்கு திருவிழா எடுக்க முடியாம போகுதேனு எங்களுக்கு வருத்தம். 

இப்போகூட தேதி குறிக்கறப்ப ஜோசியர், பல தடங்கல் வரும்… நின்னு கூட போக வாய்ப்பு இருக்குனு சொன்னாரு. ரொம்ப பயந்து தான் செய்யறோம். அதுக்கு ஏத்த மாதிரி இந்த பொண்ணு வந்து சொல்லுச்சு.

இதெல்லாம் பத்தாதுன்னு இங்க புது விதமான வியாதி வேற… இந்த திருவிழா நிக்கக்கூடாது… அதான் அன்னிக்கி உன்னை திட்ட வேண்டியதா போச்சு” நிலாவை பார்த்துச் சொன்னார் பூசாரி.

“பரவால்லைங்க. யாரா இருந்தாலும் அப்படி தான் யோசிப்பாங்க” என்றாள் நிலா.

அவர் பேசியதை வைத்து அவரிடம் இன்னமும் தெரிந்துகொள்ள முயன்றான் ஆதி.

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்கல்ல?” ஆதி கேட்க ‘இவன் அவனை பத்தி கேட்கக்கூடாதே!’ என்று நினைத்துக்கொண்டே, சொல்லுங்க என்பது போல் தலையசைத்தார்.

“முனியரசன் சார்க்கு என்ன ஆச்சு?” 

‘அவனைப் பற்றி கேட்கவில்லை’ என்பதை நினைத்து சின்னதாக நிம்மதி அடைந்த பூசாரி, “அவருக்கு என்னாச்சுன்னு தெரில. நீங்க கோவிலுக்கு வந்த அன்னிக்கி, பொழுது போனப்புறம் கோவில்லயிருந்து நாங்க கிளம்பினோம்.

வர்றப்ப ஏதோ மண்டையெல்லாம் வலிக்குதுனு சொன்னாரு. எப்படியோ இங்க வந்துட்டோம். ஆனா அடுத்தநாளு சுயநினைவில்லாம போய்டுச்சு” என்று வருத்தத்துடன் முடித்தார்.

“நீங்க வெளியூர் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கலாமே?”

“அது எங்க ஊரு பழக்கம் இல்ல தம்பி” அவர் சொன்னதும், ‘இதையே எல்லாரும் சொல்லுங்க. அப்புறம் உயிர் போகுதுனு வருத்தம் வேற!’ என்று மனதில் கறுவிக்கொண்டான் ஆதி.

சில வினாடி கழித்து, “நான் கோவிலுக்கு வந்தப்ப உங்ககூட இன்னொருத்தர் இருந்தாரே அவர்?” நிலா ஆரம்பித்தாள்.

அவர் முகத்தில் ஒரு சின்ன பதற்றம் தென்பட, அதை இருவரும் கவனிக்கத் தவறவில்லை.

“யாரு…” தடுமாறியவர் தொடர்ந்து, “அப்படி யாரும் இல்லையே… நானும் அரசனைய்யாவும் தான் இருந்தோம்” என்றார் பேச்சில் சின்ன நடுக்கத்துடன்.

“இல்ல… முனியரசன் சார் கொஞ்சம் லேட்டா தான் வந்தார். ஆனா, அவர் வர்றதுக்கு முன்னாடி உங்ககூட இருந்த யாரோ என்னை மிரட்டினாங்க. நீங்களும் பார்த்தீங்க” நிலா விடாமல் கேட்டாள்.

“அப்படி எதுவும் எனக்கு ஞாபகம் இல்லையே. அங்க வேற யாராச்சும் சும்மா வந்து பேசியிருப்பாங்க” என்று மழுப்பினார்.

அவர் அதைச் சொல்லும்போது எதேச்சையாக ஆதி அவருடைய மனைவியைப் பார்த்தபோது அந்த பெண் கண்களில் கண்ணீருடன் அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.

நிலா இன்னும் பேச முற்படும்போது… அவர் வீட்டின் கதவை யாரோ தட்ட, அவர் திறந்தார்.

“சாமி… அரசனைய்யா இறந்துட்டாரு” என்று ஒருவன் பதற்றத்துடன் சொல்ல… “அப்படியா… மாரியம்மா… நான் இதோ வரேன்” என்ற பூசாரி வீட்டிற்குள் அவசரமாக நுழைந்தார்.

“இப்போ தான் அவரை பத்தி பேசினோம். அதுக்குள்ள” வருத்தத்துடன் சொன்னவர்,

“ஏம்மா கிளம்பு. அங்க போகணும்” என்று அவர் மனையிடம் சொல்லிவிட்டு, நிலா மற்றும் ஆதியிடம்,  “சரி நீங்க கிளம்புங்க. நான் அப்புறம் பேசுறேன்” என்றார்.

“நாங்களும் வரலாமா?” ஆதி கேட்க, அரைமனதுடன் சரி என்றார்.

நால்வரும் அங்கே சென்றனர்.  நிலாவும் ஆதியும் சற்று தள்ளி நின்று கொள்ள, நிறைய பெண்கள் கூப்பாடு போட்டு அழுதுகொண்டிருந்தனர்.

“இங்க விழா நடக்க போகுது… ஆனா சந்தோஷம் இல்லையே. எல்லாத்தையும் எடுத்துட்டு போறியா மாரியம்மா!” என்று அழுது கொண்டிருந்தனர்.

நிலாவிற்கு இங்கு நடப்பவையும், மற்றும் முனியரசன் அவளிடம் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்துகொண்டே இருக்க, கண்கள் கலங்கியது. அதைப் பார்த்த ஆதி, அவளைத் தேற்றினான்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் பார்த்தேன் ஆதி. இந்த மாதிரி அவ்ளோ ஈஸியா உடம்புக்கு ஏதாவது வருமா? அவரை பார்த்தா அப்படி தெரியவே இல்ல. நல்லா வாட்ட சாட்டமா தான் இருந்தார்”

“இவர நானும் பார்த்தேன் நிலா. NOC சைன் பண்றப்ப அந்த ஆஃபீஸ்ல இருந்து வெளிய போனார். யாருக்கு எப்போ என்னவாகும்ன்னு சொல்ல முடியாது. லைஃப் இஸ் சோ அன்செர்டன் நிலா” என்றான்.

“நீ நினைக்கிறயா… இது நேச்சுரல் டெத்னு” அவனை ஏறிட்டுக் கேட்டாள்.

“எனக்கும் அந்த டவுட் வராம இல்ல. பட், உடம்பு சரியில்லாம கூட போயிருக்கலாம். இதுக்கு பூசாரி மட்டும் தான் இப்போ ஹெல்ப் பண்ண முடியும். ஆனா அவர்கிட்ட இருந்து எந்த விஷயமும் வர மாட்டேங்குதே!” என்றான்.

அழுதுகொண்டிருந்த முனியரசன் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பூசாரியும் அவரது மனைவியும் திரும்பி வீட்டிற்குப் புறப்பட, ஆதியும் நிலாவும் அவரை பின்தொடர்ந்தனர்.

வீட்டை அடைந்தவுடன், நிலா “சார் இங்க நடக்கறது எதுவும் சரியா படல. வெளிய இருந்து வந்த எங்களுக்கே தெரியுது… உங்களுக்கு புரியலையா? இல்ல இப்படி நடக்கிறதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கா? எங்களுக்கு அப்படி தான் தோணுது”  பூசாரியிடம் சீறினாள்.

அவளை அமைதிப்படுத்திய ஆதி, “சார் நாங்க இங்க ரிஸ்க் எடுத்து தான் வந்திருக்கோம். எங்கள ரெண்டு தடவ வழிலயே தடுத்தாங்க. கொல்லப்பார்த்தாங்க.

அதெல்லாம் தாண்டி தான் வந்திருக்கோம். எதுக்குன்னா, உங்க பிரச்சனைக்கு எங்களால ஏதாவது உதவி பண்ண முடியுமானு தான். இப்போக்கூட முனியரசன் சார்க்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அன்னிக்கி பார்க்கிறப்ப நல்லா தான் இருந்தார்.

நீங்க என்னடான்னா உங்ககூட இருந்த ஒருத்தன பத்தி கேட்டா பதில் கூட சொல்ல மாட்டேங்கறீங்க” ஆதி அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இரு பெண்கள், “தம்பி தம்பி” என்று அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே வந்தனர்.

ஆதி அவர்களைப் பார்க்க, “இன்னோரு பையனுக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு” என்றனர் பதட்டத்துடன்.

“என்னது!” என்ற பூசாரி அதிர்ந்து, “இப்போ யாருக்கு?” என்று கேட்க “நம்ம பிச்சையோட பையனுக்கு” என்றாள் வந்த ஒரு பெண்.

“சீக்கிரம்  வாங்க தம்பி… போகலாம்” ஆதி, நிலா மற்றும் பூசாரியும் அப்பெண்களுடன் விரைந்தனர்.

அந்த சிறுவன் மயங்கிக் கிடந்தான். ஆதி அவனருகே சென்று முதலுதவி அளிக்க, அருகில் கூடியிருந்த அனைவரும் இறைவனை வேண்டிக்கொண்டிருந்தனர்.

அந்த சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கண் விழிக்க, அனைவரும் சத்தமாக இறைவனுக்கு நன்றி சொன்னார்கள்.

ஆதி அச்சிறுவனுக்குக் காற்று வருவதற்காக, சுற்றி இருந்தவர்களை விலகச்சொன்னான். அந்த சிறுவனின் அம்மா ஓடிவந்து ஆதியின் காலில் விழுந்தாள்.

“தம்பி, எனக்கு தெரிஞ்சு நீங்க தான் எங்க தெய்வம். நீங்க இல்லன்னா என் பையன் இப்போ போய் சேர்ந்திருப்பான்” என்று அழ, “நீங்க முதல்ல எந்திரிங்க, பையனை பாருங்க” சொல்லிக்கொண்டே நகர்ந்தவன்,

பூசாரி அருகே சென்று மெதுவாக… “இப்போவே உங்ககிட்ட நான் பேசணும். உங்கவீட்டுக்கு போகலாமா?” அவரை கோபத்துடன் கேட்க, அவரும் தலையசைத்தார்.

வீட்டை அடைந்தவுடன் , “நிலா சொன்ன மாதிரி, உங்க மேலதான் சந்தேகமா இருக்கு. நீங்களும் இதுக்கெல்லாம் உடந்தையோனு” கோபத்துடன் ஆதி சீற…

“நாங்களே எங்க பொண்ணு அவன் பிடியில இருக்காளேனு நொந்து போயிருக்கோம் தம்பி. நீங்க வேற பேச்சால எங்களை கொல்லாதீங்க” என்று அவர் மனைவி கோபத்துடனும் வருத்தத்துடனும் அழுதார்.

“யாரு அவன்தான… உங்க கூட கோவில்ல இருந்தானே?” ஆதி கேட்க, ஆம் என்பதுபோல கண்ணீருடன் தலையசைத்தார் பூசாரி.

“யாரவன்? இப்பவாவது சொல்லுங்க? எதுக்காக உங்க பொண்ண பிடிச்சு வச்சிருக்கான்னு சொல்லுங்க? இது எல்லாத்துக்கும் அவன் தான் காரணமா இருப்பானோன்னு தோணுது” ஆதி கோபத்துடன் சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டான்.

பூசாரி பேச ஆரம்பித்தார். “அவன் பேரு கருணா. இதுக்கு முன்னாடி அரசனைய்யா கோவிலுக்கு வரமாட்டாரு. தலைவரோட மச்சான் ராமசாமி தான் வருவான். கணக்கு வழக்கு எல்லாம் அவன் தான் பார்த்துக்கிட்டான்.

ராமசாமி கோவிலுக்கு வர்றப்ப இந்த கருணாவோட பழக்கம் ஆச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ செய்துட்டே இருப்பாங்க. திடீர்னு அரசனைய்யா கோவில் கணக்கு சரியா பார்க்கலைனு கண்டுபிடிச்சு தலைவர்கிட்ட சொல்ல, அவரு ராமசாமியை இனிமே கோவிலுக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாரு.

கருணாவும் அவனும் கூட்டு சேர்ந்து என்ன பண்ணாங்கன்னு தெரில. திடீர்னு ஒரு நாள் என்கிட்ட வந்து கருணாவை இதோ இவளோட (பூசாரி மனைவி) சொந்தம்னு சொல்லி ஊருக்குள்ள கூட்டிட்டு போக சொன்னான்.

நான் முடியாது, தலைவர்கிட்ட சொல்லுவேன்னு சொன்னேன். அப்போ ஃபோன் மாதிரி ஒன்னுல என் பொண்ணோட படத்தைக் காட்டினான். அதுல அவ ஏதோ சாப்பிடறா… அப்புறம் கொஞ்ச நேரத்துல பித்து பிடிச்ச மாதிரி ஆயிட்டா.

ரொம்ப பயந்து போய்ட்டேன்” என்று சொல்லும்போது பூசாரிக்குத் தொண்டை அடைத்தது. கட்டுப்பாடில்லாமல்  முகம் மூடி அழுதார்.

பின் அவர் மனைவி, “அது ஏதோ போதை பொருளாம். அந்த பாவி ராமசாமி என் பொண்ணுக்கு அதை கொடுத்து பழக்கியிருக்கான். அது இல்லாம அவளால இருக்க முடியாதுங்கற அளவுக்கு கொண்டுப்போய்ட்டாங்க” என்றார் அழுது கொண்டே.

பூசாரி தொடர்ந்தார்… “அப்புறம் தான் புரிஞ்சது… அந்த பாவி கருணா ஊருக்குள்ள வர்றதுக்கு, அவன் பண்ண சதி இதுன்னு. வேற வழி இல்லாம, அவனை ஊருக்குள்ள கூட்டிட்டு வந்தேன்.

தலைவர்கிட்ட எனக்கு துணைக்கு கூட்டிட்டு வந்தேன்னு சொன்னேன். அவன் ஊர விட்டு தள்ளி ஒரு குடிசை கட்டிட்டு இருக்கான். அந்த இடத்தை அவன் முன்னாடியே பார்த்து வச்சிருப்பான் போல… எல்லா வசதியும் அவனுக்குன்னே செய்த மாதிரி இருக்கும். அந்த இடத்துல போன் கூட பேசுவான்.

அப்புறம் என் பொண்ணு… என் பொண்ணு” என்று மறுபடியும் அழத்தொடங்கினார் பூசாரி.

“சார் அழாதீங்க. உங்க பொண்ணு இப்போ எங்க இருக்கா? நான் அவளை கூட்டிட்டு வரேன்” ஆதி அவரிடம் சமாதானம் சொன்னான்.

“பொண்ணு அவன் இடத்துல தான் இருக்கா தம்பி. நான் இவங்க விஷயத்தை வெளிய சொல்லக்கூடாதுனு சொல்லி… மிரட்டி, அவளை அங்க வச்சிருக்கான். சொன்னா, என் பொண்ண முடிச்சுடுவேன்னு சொல்றான்.

இங்க இருக்கிறவங்கக்கிட்ட இவ அம்மா அப்பாவை பார்க்க பொண்ண அனுப்பி வச்சிருக்கேன்னு சொல்லியிருக்கேன்” என்றார் அழுகையின் ஊடே.

“அவன் எதுக்காக இங்க வந்திருக்கான்னு தெரிமா?” நிலா கேட்க, “தெரியாதும்மா. அந்த ராமசாமிக்கு தெரியும்னு நினைக்கறேன்” என்றார் பூசாரி.

“இப்போ எங்க இருக்கான் அந்த ராமசாமி?” கேட்டான் ஆதி.

“அவன் தலைவர் வீட்ல இல்லாட்டி கருணா கூட தான் இருப்பான்” என்றார்.

அவர் அருகே சென்ற ஆதி, “அவன் ஏதோ பெரிய பிளான்’னோட வந்திருக்கான்னு நினைக்கறேன். தயவு செய்து சொல்லுங்க, உங்க ஊர்ல எப்போ எங்க திருவிழா நடக்குதுன்னு?

யாரோ போன்ல பேசுனத நிலா கேட்டிருக்கா… இந்த ஊர் திருவிழால ஏதோ அழிவு ஏற்படுத்த போறாங்கன்னு. அதுக்கு தான் கோவில்ல உங்ககிட்ட பேச வந்தா. நீங்க சொல்றதுல தான் எல்லாமே இருக்கு.

இப்பவும் நாங்க இந்த ஊருக்கு கெடுதல் செய்ய வந்திருக்கோம்னு நீங்க நினைச்சீங்கன்னா, நாங்க இப்பவே கிளம்பறோம்” என்றவன் நிலா கையை பற்றிக்கொண்டு வெளியே செல்ல முற்பட… “இருங்க தம்பி” தடுத்தார் பூசாரி.

“நாளைக்கி எங்க கோவில் கிராம விழா. முனீஸ்வரன் கோவில் கரையையொட்டி இருக்கு. ஆம்பளைங்க மட்டும் போவோம். இங்க இருக்க மாரியம்மன் கோவிலுக்கு அடுத்த நாள் பூஜை ஆரம்பிக்கும்” என்றார்.

“நீங்க எப்போ அந்த கருணாவை பார்க்க போவீங்க?”

“இன்னிக்கி பொழுது போனவுடனே போய் பொண்ண பார்த்துட்டு வருவேன் தம்பி” என்றார்.

“நீங்க சாயங்காலம் போக வேண்டாம். இப்போவே போங்க. நான் ஒன்னு யோசிச்சிருக்கேன்” என்றான் அவரிடம். அவரும் தலையசைத்தார்.

ஆதி சொன்னதை போல், மகளைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினார் பூசாரி.

ஊர் மக்கள் சோகத்திலிருந்தாலும், ஊர் திருவிழாவிற்காக ஆயத்தம் ஆனார்கள்.

ஆதியும் நிலாவும் வள்ளியின் வீட்டின் பின்புறம் அருவியை ஒட்டி பேசிக்கொண்டிருந்தனர்.

முனி ஆதியின் பையிலிருந்து சில பொருட்களை எடுத்துவந்து “அண்ணா இது என்ன?” “அது என்ன?” என்று கேட்டுத் தெரிந்துகொண்டான்.

“ஆதி நினைச்சது போல நடக்குமா?” 

“நாளைக்கு என்ன நடக்கப்போகுதுனு தெரியல நிலா. ஒருவேள இங்க ஏதாச்சும் பிரச்சனைனா நம்மளும் சேஃப்’அ சென்னை போக முடியுமானு தெரியல. லெட்ஸ் ஹோப் ஃபோர் தி பெஸ்ட்” என்றான்.

அவன் கையை பற்றிக்கொண்டு, அவன்மீது சாய்ந்த நிலா… “ஐம் வெரி ஸாரி. என்னால தான் நீயும் இங்க மாட்டிக்கிட்ட ஆதி” 

“எதுவும் நடக்காது நிலா. நேத்து நடந்த நிலா இரவு மாதிரி இன்னொரு நைட் நடக்கும்… சென்னை போன உடனே!” கண்ணடித்தான் அவளைப் பார்த்து.

“ச்சீ… ஐ நோ! நேத்து எதுவும் நடக்கல” மறுத்தாள் அவனின் கையை அடித்தவாறே.

“அதையே நான் சொல்லித்தான் நீ நம்பின. உனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல. மறந்திடாத” சத்தமாகச் சிரித்தான் ஆதி. அவளும் சிரித்தவண்ணம் அவன் மேல் சாய்ந்து பேசிக்கொண்டிருக்கையில்…

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வாங்க சீக்கிரம்… படுக்கலாம்” என்று வள்ளி அழைத்தவுடன், இருவரும் எழுந்து உள்ளே சென்றனர்.

அதிகாலை சீக்கிரமே எழுந்து விட்டான் ஆதி. அவன் நேற்று பூசாரி செல்லும்போது அவருடன் சென்றிருந்தான், அந்த கருணாவின் இடத்தை தெரிந்து கொள்வதற்கு.

அந்த பாதையில் ஆதி செல்ல, கொஞ்ச நேரத்தில் கருணாவின் வீட்டை அடைந்தான்!

———

வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தார் பூசாரி. பார்த்தவர் கண்களில் மிகுந்த சந்தோஷம்.

“அம்மாடி வந்துட்டயா!” அவரின் மகளைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

கண்களில் மிகுந்த அயர்வுடன் காணப்பட்ட அந்த சின்ன பெண், பக்கத்திலிருந்தவனை காட்டினாள்.

“உள்ள வாங்க தம்பி” என்று ஆதியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் பூசாரி. அவரின் மனைவி எழுந்து பார்க்க, ஆனந்தத்தில் அழுது கொண்டே மகளை அவரும் தழுவிக்கொண்டார்.

“நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன் தம்பி!” கைக்கூப்பி அழுதார் பூசாரி.

“இனி எந்த பிரச்சனையும் இல்ல சார். உங்க பொண்ண ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்ததா சொல்லிடுங்க” என்றான் ஆதி புன்னகையுடன்.

“அந்த கருணா?” பூசாரி கொஞ்சம் பயத்துடன் கேட்க, “அவன் தொல்லை இனி இருக்காது” என்ற ஆதி,

“உங்க பொண்ணுக்கு என்ன டிரீட்மென்ட் பண்ணனும்னு நீங்க பூங்கொடி கோவிலுக்கு வர்றப்ப நான் சொல்றேன்” அவரை தேற்றிவிட்டுக் கிளம்பினான்.

காலை விடிந்திருந்தது. வள்ளியின் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆதி, தன் கண்ணில் பட்டத்தைப் பார்த்து அதிர்ந்தான்.

யாரோ ஒருவன் வள்ளியின் முடியைப் பற்றிக்கொண்டு இழுத்து வந்தான். கூடவே ஒரு பெண் நிலாவை இழுத்துக்கொண்டு வந்தாள்!

1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved