வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 2
சாம்பலின் சாயல் – 1(2)
முனைவர் பட்டப்படிப்புக்கான ஆய்வறிக்கை நேர்காணலில் ஈடுபட்டிருந்தனர் ஆதவனும், மங்கையும்.
மிதுலா தற்போது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருந்தாள். தொளதொளவென முன்பு போட்டிருந்த உடையில்லாமல் அழகான முக்கால் கைவைத்த வெளிர் சந்தன நிற காட்டன் சுடிதார் அணிந்திருந்தாள். ஆயினும் எந்த ஒப்பனையும் இல்லை. முன்பு போல் துடைத்த முகம்.
“உங்களுக்கு நைட் என்ன ஆச்சு? எதுனால பயந்தீங்க? எப்படி மேடம் தனியாவே தான் இருந்தீர்களா? யார்கூடவும் பேசாம? நாலு சுவருக்குள்ள?” என்று கேள்விகளை இருவரும் வரிசையாக அடுக்க, அதற்கும் புன்னகையுடன் தலையசைத்து
“எனக்கு யார்கூடவும் பேச பிடிக்காது” என்றவள் அவள் கடந்த கால பற்றற்ற, நாட்டமில்லாத, மன அழுத்தங்கள் மட்டுமே நிரம்பிய, மங்கிய சாம்பல் வண்ணம் பூசிய பக்கங்களை மறுபடியும் புரட்ட ஆரம்பித்தாள்.
———————
MSG Exports மேலாளர் மைதிலி, இவளை பார்த்ததும் உள்ளே வரச்சொன்னார்.
அவர் புன்னகைக்க, அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் அவள் தைத்த துணிகளை அவரிடம் கொடுத்தாள். அங்கிருந்த ஒரு டேபிளின் மேல் வைக்கச்சொன்னவர் அவளை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச்சொல்லவிட்டு யாரையோ போனில் அழைத்தார்.
இத்தனை நடந்தும் எந்த முகபாவத்தையும் காட்டாமல் உட்கார்ந்திருந்தாள் மிதுலா. அவளும் பேசவில்லை அவரும் பேச்சுகொடுக்கவில்லை. சில மாதங்கள் முன் அவள் தன்னிடம் பேசி இந்த வேலை எப்படி வாங்கினாள் என்பதை மனதில் அசைப்போட்டார் அவர்.
தினமும் அவளை பார்க்கும் போது தோன்றும் நினைவுகள்.
சில மாதங்களுக்கு முன் ‘தனக்கு வேலை வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டு மிதுலா அவரை பார்க்க வந்திருந்தாள்.
“மேடம் எனக்கு தைக்க தெரியும். தையல் பயிற்சி எடுத்திருக்கேன். இப்போ நான் இருக்குற நிலைமைக்கு கண்டிப்பா ஒரு வேல வேணும்” என்று தையல் சான்றிதழ்களை அவரிடம் கொடுத்த்தாள்.
அவர் அவளைப்பார்க்க, அந்த நொடி அவர் மனதில் ‘நல்ல அழகு ஆனால் அதற்கு ஏற்றாற்போல் தன் தோற்றத்தை காட்டிக்கொள்ளவில்லை. முகம் அழுது வடிந்துகொண்டிருக்கிறது’.
ஏதோ ஒன்று அவர் மனதில்… அவளுக்கு உதவ வேண்டும் என்று ஆணித்தனமாய் சொன்னது.
சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு “சரி, நாளைலருந்து வேலைக்கு வந்துடு. காலைல ஒன்பதுமணிக்கு” என்று அவர் இன்னும் பேசவரும்முன் அவள் குறுக்கிட்டாள்.
“என்னால இங்க வந்து வேலை செய்யமுடியாது மேடம். நான் வீட்ல இருந்து வேல பாக்கறேன். எப்படியாச்சும் பிரயத்தனப்பட்டு, நீங்க நினைக்கிறத விட அதிகமா செய்துகாட்டுவேன். ஒரு வாய்ப்பு குடுங்க” என்றாள் ஒரு தோரணையில்.
ஏனோ அவள் திமிராக பேசுவதுபோல் அவருக்கு தெரியவில்லை. அவரின் அனுபவம் அவரை யோசிக்கவைத்தது. இருந்தாலும் அவளின் வெளிப்படையான இந்த பேச்சு சற்று இறுக்கத்தை கொடுக்க, அவளையே ஆழ்ந்து பார்த்தார் ‘மேலே சொல்’ என்பதுபோல்.
பின் அடுத்த ஒரு ஐந்து நிமிடம் அவள் என்ன சொன்னாலோ, அவர் பார்வையின் தன்மை இலகிக்கொண்டே இருந்தது. ஆனால் அதை சொல்லும்போது அவள் உணர்ச்சிவசப்படவில்லை. கெஞ்சலும் இல்லை. ஒரே நேர்ப்பார்வை.
“என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க. நீங்க சொல்றத விட என்னால அதிகமா வேல பாக்க முடியும். என்னோட வீட்டு அட்ரெஸ், ஒரிஜினல் அடையாள அட்டை எல்லாமே தரேன் உங்களுக்கு நம்பிக்கை வர்றதற்கு” என்றாள் திடமாக.
அந்த கண்களில் மறுபடியும் கெஞ்சல் இல்லை. ஆனாலும் தேவை தெரிந்தது.
“எனக்கு நான் பாதுகாப்பா நினைக்கறமாதிரி வேலை வேணும். நான் முன்ன செஞ்ச வேலைல அந்த பாதுகாப்பு கிடைக்கல. அங்க வேலைபாத்தப்ப ஒரு நாலாயிரம் ருபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். அத வைப்புத்தொகையா வெச்சுட்டு என்ன வேலைக்கு எடுத்துக்கோங்க” என்றாள் ‘கொடுங்கள் நான் செய்து காட்டுகிறேன்’ எனும் கூர்மையான பார்வையுடன் .
அவர் பதில் பேசாமல் இருக்க, அவளே தொடர்ந்தாள். “என் வீட்ல என்னோட மின்சாரத்துல என்னோட மெஷின்ல தைக்கறேன். அதற்கான பணத்தைக்கூட நான் கேட்க மாட்டேன்… ஆனா நீங்க… நான் வீட்ல இருந்து வேல பாக்க சம்மதிக்கணும். என்னோட வேலையப்பாத்துட்டு நீங்க சம்பளம் குடுத்தா போதும்”
அவள் பேசிய விதம், அவள் கொடுத்த வாக்குறுதி, அவளின் நம்பிக்கை அவரின் முகத்தில் புன்னகையின் படரச்செய்தது.
“உன்ன நான் நம்பறேன். என்னோட சொந்த பொறுப்புல உனக்கு வேல தரேன். ஒரு நாள் இங்க இருந்து என்ன தைக்கணும் எப்படி தைக்கணும்னு பாத்து புருஞ்சுக்கோ” என்றார் அதே புன்னகையுடன்.
அப்போதும் அவள் பதில் புன்னகையோ இல்லை நன்றியுடன் கண்கள் கலங்கவோ இல்லை. கைகூப்பி நன்றி தெரிவித்தாள் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன். ‘இவளிடம் ஏதோ இருக்கிறது’ என்று மட்டும் புரிந்தது அவருக்கு.
இதோ இன்று… அவர் முன் உட்கார்திருக்கிறாள். அதே நிமிர்வுடன். ஆனால் என்ன, வேலை பளு அவளை இன்னமும் சோர்வுடன் காட்டியது. இருக்காதா என்ன? ஒரு நாளில் ஒருவர் செய்யும் வேலயை விட மூன்று பங்கு அதிகமான வேலை எடுத்து செய்கிறாளே…
அவர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. வேலை மட்டும் மூன்று மடங்கு இல்லை. அவளின் சம்பாத்தியமும் கூட… இருந்தும் அவருக்கு புரியவில்லை ‘ஏன் இந்த கோலம். நன்றாக தன்னை காட்டிக்கொள்ளலாமே’ என்ற எண்ணம்.
அவரும் எதையும் கேட்கவில்லை. அவளும் அமைதியாக, அடுத்த நாள் வேலைக்காக பொருட்களைப் பெற்றுக்கொண்டு சென்றாள்.
வீடு திரும்பும் போது, இரண்டு நாட்களுக்கு தேவையான காய்கறி மட்டும் வாங்கிக்கொண்டாள். அதுவும் விற்பவனிடம் எதுவும் பேசாமல். ‘அழகா இருக்கான்னு திமிரு. அழுத்தக்காரி’ என்று நினைத்தான் அவன்.
‘உன் நினைப்பு என்னை ஒன்றும் செய்யாது’ என்பது போல் அலட்சியமாக தட்டிவிட்டுச்சென்றாள்.
வீட்டிற்கு சென்றவுடன்… மறுபடியும் தையல் மெஷின் முன். ஆக… ஒரு நாளில் அவள் காலைக்கடன்கள், அவசரத் தேவைகள், சாப்பிடுவது மற்றும் தூங்குவது தவிர மொத்த நேரமும் மெஷினின் முன்னால்…இப்படி இருந்தால் மூன்று மடங்கு வேலை ஏன் செய்யமுடியாது???
அன்றைய இரவும் தூக்கம் தடைபட்டது. அதே கத்தல். அதே பயம். அதே அமானுஷ்யம். அதே கவசம். ஆனால் நேற்றைய இரவு போல் தூக்கம் வரவில்லை. கவசத்தையே எவ்வளவு முறை பாடினாள்? தெரியாது…
ஆனால் சூரியஒளி வீட்டில் விழும்போது எழுந்து தன் தினசரி வேலையை.. அதுதான் வேறென்ன… தைப்பதைத் தொடர்ந்தாள்.
அன்றும் அதே போல் கம்பெனிக்கு சென்று பொருட்களை வாங்கிவரும்போது, நேற்றைய இரவு தூக்கமின்மையால் அவளால் சுறுசுறுப்பாக நடக்க முடியவில்லை.
அதுவும் அஸ்தமனமாகப்போகும் சூரியன் தன்னுடைய வேலையை ஓவர்டைம் செய்வது போல சுட்டெரித்துக்கொண்டிருந்தது.
எதிர் சூரியன். கண்கள் கூசியது. தூக்கமின்மை. கண்கள் சொருக பார்த்தது. கால்கள் அவள் நடையை ஏற்க மறுக்க, தலை கட்டுப்பாட்டையும் இழந்து, சுற்றப்போகும் நொடி, கீழே விழும்முன்… யாரோ அவள் விழாமல் தாங்கிப்பிடிக்க, சட்டென தலையை உலுக்கி தன்னிலைக்கு வர முயற்சித்தாள்.
கண்கள் செருகுனாலும், அவன் முகம் நன்றாகவே அவளால் பார்க்கமுடிந்தது!!!
———————
கதை கேட்டுக்கொண்டிருந்த ஆதவன் “மேடம். உங்களுக்கு பேச தெரியுமான்னு யோசிச்சேன். ஆனா, நீங்க வேல கேட்ட விதம், சான்ஸ்ஸே இல்ல. என்ன ஒன்னு, அவங்ககிட்ட என்ன சொன்னீங்கன்னுதான் தெரில” என சொல்ல, அவனைப் பார்த்து மிதுலா புன்னைகைத்தாள்.
“சூப்பர் மேடம். நெஸ்ட் கேரக்டர் என்ட்ரி. உங்க ஹீரோவா?” மங்கை கேட்க, இப்போது முறைப்புடன் கூடிய புன்னைகையை உதிர்த்தாள் மிதுலா.
