Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 6

மந்தகாச மஞ்சள் – 2(2)

ஆதவனும் மங்கையும் எதுவும் பேசாமல், கேட்காமல் மெளனமாக இருக்க, மங்கை அழுதுகொண்டிருந்ததை பார்த்து “மங்கை… பொண்ணுங்க அழக்கூடாது. கண்ண தொட” என்று போலியாக அதட்ட, மங்கையின் விசும்பல்கள் சற்று மட்டுப்பட்டது.

இப்போது மங்கையிடம் சொன்ன அதே வார்த்தகைகளை, தனக்கு தானே முன்பு சொல்லிக்கொண்டதுதான் நினைவிற்கு வந்தது. விட்ட பக்கத்தில் இருந்து தொடர்ந்தாள்.

———————

தன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது தெரிந்தவுடன் ‘அழக்கூடாது. நான் பலவீனமானவள் இல்லை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, அவசரமாக துடைத்து “சரி என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுடுச்சுல்ல. கிளம்பு. எனக்கு வேல இருக்கு” என்றாள் அவசரமாக.

அவன், அவள் சொன்னது எதையுமே கவனிக்கவில்லை.

தன்னை நினைத்துத்தான் இப்படி சிலையென இருக்கிறான் என்றுணர்தவள் “நான் சொல்றது கேட்குதா இல்லையா?” சற்று எரிச்சலுடன் கத்தினாள்.

“ஆங்…” என்று திரும்பி அவளை பார்க்க “வெளிய போன்னு சொன்னேன். பெருசா ஃபீல் பண்றயா? இவளோ நாள் என்ன ஆனேன்னு யோசிச்சிருப்பயா நீயெல்லாம்… வந்துட்டாரு பெருசா ஃபீல் பண்ணிட்டு” கொடுக்காக வார்த்தைகள் விழுந்தது.

அப்போது தான் அவள் முகத்தை பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அவ்வளவு ரௌத்திரம், கடுமை. இதுபோல் அவளை பார்த்ததில்லை.

அவளின் முகத்தை பார்த்து பதறிக்கொண்டு “மிது. ப்ளீஸ்… நான் சொல்றத கேளு.. இங்க” என்று அவன் ஏதோ சொல்ல வர அவனைத் தடுத்தவள்

“ஒன்னும் வேணாம்” கையெடுத்து கும்பிட்டு “கிளம்பு. தயவுசெஞ்சு” என்று அவள் கத்த, அவளை சமாதானப்படுத்த, எழுந்து அவளிடம் நெருங்கினான்.

‘யாரையும் நெருங்கவிடாமல், பரிதாப்படவிடாமல், பச்சாதாபம் எழ விடாமல்… தனக்கு தானே என்று இருந்தது போய், இப்போது இவன், தன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறான். சமாதான படுத்த வருகினான். வேண்டாம். யாரும் வேண்டாம்’ என்ற எண்ணமே மனதில் மேலோங்க…

“கிட்ட வராத. போ… ப்ளீஸ் போ” என்று உட்கார்ந்த வாக்கில் சுவற்றின் மூலையில் ஒடுங்கினாள்.

அதை பார்த்து பதறிப்போனான். இப்போது அருகில் செல்வதா? வேண்டாமா? பதட்டம் அவனுள்.

முகத்தை கால்களுக்கு இடையில் புதைத்துக்கொண்டாள். அவனுக்கோ அவளை பார்க்க… பார்க்க… வேதனை அதிகரித்தது. அப்படியே நின்றான் என்னசெய்வதென்று அறியாமல்.

அவள் ஏதோ முனகுவது போல் இருந்தது. அந்த மரண அமைதியில் அவள் சொல்வது தெளிவாக கேட்டது. ஆம்… கவசம்… அவன் சொல்லிக்கொடுத்த சஷ்டி கவசம்…

நொறுங்கிப்போனான்… இன்னமும் அவளை தேட முயன்றிக்கலாமோ என்று… கண்கள் கலங்கியது… அங்கே நின்றால் எங்கே அவளுக்கு சமாதானம் சொல்லமுடியாமல் உடைந்துவிடுவோம் என்றெண்ணி அவசரமாக வெளியேறினான்.

அவன் வெளியே சென்ற அரவம் கேட்டு, அவசரமாக கதவை தாளிட்டு அதன் மீதே சாய்ந்து உட்கார்ந்தாள்.

அழக்கூடாது அழக்கூடாது என்று தனக்குத்தானே மந்திரம் ஓதுவதுபோல் சொல்லிக்கொண்டிருந்தாள். எவ்வளவு நேரமோ அவளுக்கே தெரியாமல் உட்கார்திருந்தாள்.

தான் பட்ட கஷ்டம்… உடலளவும் மனதளவும் பட்ட காயங்கள்… ஒவ்வொரு நினைவும், தொண்டையில் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு.

அழக்கூடாது என்று பிரயத்தனப்பட்டாலும் எங்கே அழுதுவிடுவோமோ என்றெண்ணி எழுந்து மளமளவென தண்ணீர் குடித்தாள். எதையும் யோசிக்கக்கூடாது என்று மெஷின் முன் உட்கார்ந்த்து தைக்க ஆரம்பித்தாள்.

சக்தியோ அங்கே நிற்க முடியாமல் வெளியே சென்றான். அனால் அங்கிருந்து போகவும் முடியாமல், அவளை இனியும் தனியே இருக்க விட மனமில்லாமல், கதவின் அருகே இருந்த படியில் அப்படியே உட்கார்ந்தான்.

‘மன்னிப்பு கேட்கக்கூட நான் தகுதி இல்லாதவனோன்னு தோணுது மிது. நான் இப்போ இந்த நிலமைல இருக்கேன்னா அதுக்கு உன் அப்பாவும் அம்மாவும் தான் காரணம். என்னோட அம்மாக்கு அப்பறம் நான் சாமியா நினைக்கிறவங்க. ஆனா அவங்க பொண்ண இந்த நிலமைல… அதுவும் எந்த தப்பும் செய்யாதப்ப…’

‘ச்ச… நான் படிப்பை பாத்துட்டு சுயநலமா இருந்துட்டேனோ? இன்னுமும் உன்ன தேடியிருக்கலாமோ…’ கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.

எண்ணஓட்டத்தில் இருந்து அவனை நிகழ்விற்கு கொண்டு வந்தது வீட்டினுள் கேட்ட சத்தம். தடதடவென சத்தம். மெஷினின் சத்தம். ‘தைப்பாளோ?’ என்று நினைத்தான்  நேரங்கள் கடந்தது. சத்தம் நின்றபாடில்லை.

மணியை பார்த்தான். பதினொன்று. இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த சத்தம். ‘அப்போது சாப்பிடவில்லையா?’ என்ற கேள்வி அவன் மனதில். ‘கதவை தட்டுவோமா?’ என்ற யோசனை.

ஆனால் நேரத்தை பார்க்க, இப்போது தட்டினால் அது நன்றாக இருக்காது என்று எண்ணும்போது சத்தம் நின்றது.

ஏனோ அவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. தூக்கமும் தழுவவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது. ‘ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற மனது கடந்து அடித்துக்கொண்டது.

‘எப்படியாவது அவளிடம் பேசி இங்கிருந்து அழைத்துச்செல்லவேண்டும்’

‘ஆனால் எங்கே அழைத்துச்செல்வது? நெருங்கிய சொந்தங்கள் யாருமில்லையே.’

‘அதற்காக இப்படியே விட முடியுமா?’

‘மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுளாள். அதை எப்படி சரி செய்வது?’

பலகேள்விகள் அவன் மனதில் ஓடியபோது ‘வீர்…’ என்ற சத்தம் அவள் வீட்டில் இருந்து கேட்டது. பதறிக்கொண்டு எழுந்தான். ‘என்னவாயிற்று?’ என்று.

அழைப்பு மணி இல்லை. கதவை தட்டினான். ‘மிது மிது’ என்றழைத்தான். ஆனால் பதிலேதும் இல்லை. அவனது இதயத்துடிப்பின் டெசிபல் அதிகமானது. ‘என்னவாயிருக்கும் அவளுக்கு’ என்ற பதட்டம். இப்போது சத்தம் இல்லை.

‘கனவு கண்டிருப்பாளோ? இல்லை பயந்திருப்பாளோ? இவள் எப்படி இருந்திருக்க வேண்டியவள்? இறைவா அவள் தாய் தந்தை இருந்திருந்தால் இந்த நிலமை வந்திருக்குமா?’ அவன் இதயம் பாரமானது.

‘என்நிலைக்கு அவர்கள் தான் அடித்தளம் போட்டார்கள். நான் கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும்’ முடிவெடுத்தான். மறுபடியும் படியிலேயே அமர்ந்தான்.

விடிந்தது. அவள் கதவை திறக்கவில்லை. அவனும் நகரவேயில்லை.

மறுபடியும் மெஷின் சத்தம். மதியமானது. அவள் வெளியே எட்டிக்கூட பார்க்கவில்லை. மெஷினின் சத்தம் நின்றபாடில்லை.

‘சாப்பிடாமல் அப்படி என்ன வேலை’ தன்னிலை மறந்து அவளுக்காக யோசித்தான். அவனே தண்ணீர் குடிக்காமல், சாப்பாடு உண்ணாமல், ஆடை மாற்றாமல் அப்படியே இருந்தான்.

கண்கள் மெல்ல சொருகியது. ‘அவள் வரவேமாட்டாளா? கதவை தட்டுவோமா? மாலை ஆகிவிட்டது. காலையில் இருந்து வெளியே வரவில்லையே?’ என்று யோசிக்கும்போது கதவு திறந்தது.

ஆர்வமாக அவன் எழுந்தான். வெளியே வந்த அவள், அவன் நின்ற கோலத்தை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

அவ்வளவு கோவம். ஆத்திரம். சொல்லியும் கேட்காமல் அங்கேயே அவன் இருந்ததை பார்த்து!!

———————

“ஏன் மேடம் சக்தி ஸார் பாத்தவுடனே கோவப்பட்டீங்க? உங்களுக்காகத்தானே இருந்தார். திட்டிடீங்களா அவரை?” மங்கை கொஞ்சம் வருத்தத்துடன் கேட்க, அதற்கு புன்னகையை பதிலாக அளித்தாள் மங்கையை நினைத்து.    

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved