Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 11

காழ்ப்பின் கருமை – 3(2)

“பாத்தியா சக்தி. நீ சொல்லிக்கொடுத்த சஷ்டி கவசத்தோட மகிமையை. நிறைய சஷ்டி கவச ராத்திரிகள்” இதை மட்டுமே சொன்னாள். இப்போது அவள் கையை அவன் இறுக பற்றிக்கொண்டான்.

அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. கோவமோ, சோகமோ எதுவுமே!

“ஆனா சக்தி… பாவம் கிறிஸ்டிக்கா. அவங்களுக்கு தவறி குழந்த உருவாகிடுச்சு. அதுவும் இரட்டை குழந்தைகள். அழகா இருப்பாங்க தெரிமா… என்னோட பொழுதுபோக்கே அவங்க தான்”

“கூட்டி கழிச்சு பாத்தா எத்தனை தடவைன்னு சொல்ல தெரில. ஐநூறு இல்ல ஆயிரம் தொட்டுருக்குமோ? டே நைட் டூயுட்டி பாத்தோமே” விரக்தியுடன் சொன்னவள்

“என்ன போலவே தான் கிறிஸ்டி அக்காக்கும். ரெண்டு பேரும் கிட்ட தட்ட சிறை கைதிகள் போல தான் இருந்தோம். எத்தனை பேர் எங்கள போல இருந்தாங்கன்னுகூட தெரியாது”

“அக்கா நிலமை ரொம்ப பாவம். பிரசவம் கூட ஏனோ தானோன்னு அங்கேயே பண்ணிட்டாங்க. எங்க வெளிய விட்டா இந்த இடத்தை பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிடுவாங்கன்னு. முறை தவறி நடக்கற தொழில் இல்லையா. அதான்”

“ஆனா சக்தி ஒருத்தரோட வாழ்க்கை ஒரு நாள்ல மாறுமான்னு யோசிச்சிருக்கேன். ஆனா அது மாதிரி நடந்தப்ப, என்னால நம்பவே முடியல. ஒரு நாள் நைட் நான் புக் ஆனேன்” என்று சொல்ல ஆரம்பித்தாள்.

அன்று நடந்தது ஏனோ இப்போதும் கண் முன்னே ஓடியது அவளுக்கு.

———————

அன்று இரவு தனக்கு சஷ்டி கவச ராத்திரி என்று தெரிந்த பின், கட்டிலில் உட்கார்ந்திருந்தாள் மிதுலா.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு, யார் உள்ளே வந்தது என்று கூட பார்க்காமல், முந்தானையில் குத்தியிருந்த பின்னை கழற்றிவிட்டு, அதை தளர்வாக்கிக்கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அதுவே அவளின் வழக்கம். அதயே அன்றும் செய்தாள்.

படுத்தவள் கண்மூடிக்கொள்ள, கவசத்தை சொல்ல ஆயத்தமானாள். அதை தடுக்கும் விதமாக வந்தவன் பேசினான். “ஹலோ நீங்க படுக்கலாம் வேணாம். எந்திரிங்க” என்றான் தமிழில்.

கண்களை திறந்து அவனைப் பார்த்தவள் “ஓ தமிழா…  நான் இந்த மாதிரிதான்னு உள்ள வரப்ப சொல்லலையா அந்த ப்ரோக்கர்? என்னால வேற எதுவும் பண்ண முடியாது. எது வேணுமோ நீயே பண்ணிக்கோ” எரிச்சலில் பேசிவிட்டு கண்களை மூடிக்கொள்ள…

“ஐயோ இல்ல. நான் அத சொல்லல. எனக்கு இன்னிக்கி மூட் இல்ல” என்றான் தயங்கியவாறே.

அவன் சொல்லவருவதை புரிந்துகொண்டவள், விசித்திரமாக பார்த்துவிட்டு, எழுந்து முந்தானையை சரி செய்து கொண்டாள்.

“அப்போ மூட் இல்லனா கிளம்பு. உனக்கு மூடெல்லாம் என்னால ஏத்த முடியாது. அதுக்கு வேற ஆளப் பாரு” என்றவள் கட்டிலில் நன்றாக உட்கார்ந்துகொண்டாள் சம்மணமிட்டு.

ஏனோ அவள் நடவடிக்கைகள், இந்த பேச்சு, அவனுக்கு சுவாரசியமாக இருக்க “ப்ச்… அதுக்கெல்லாம் அவசியம் இல்ல. இப்போ வெளிய போனா ஃபிரன்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க… நீங்களும் நல்லா பேசறீங்க. ..வாங்க கொஞ்ச நேரம் பேசுவோம். அப்பறம் கிளம்பிடறேன்” என்றான் அவள் அருகில் உட்கார்ந்து.

அவளை கூர்ந்து பார்த்தபோது, அந்த விழிகள், யாரையும் ஈர்க்கும் விழிகள் ஆனால் அதில் உயிர் இல்லை. ஏதோ தொய்வு. இயங்கவேண்டுமே என்று அலைப்பாய்வது அவனுக்கு புரிந்தது.

அவனை ஏற இறங்க பார்த்தவள், “இது உனக்கு மொத தடவயா?” என்று சந்தேகத்துடன் கேட்க…

“ஹாஹாஹா… நீ நினைக்கற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது. இன்னிக்கி எனக்கு மூட் இல்ல. அவளோ தான். அதுவும் நீ ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் கேரக்டரா இருக்க. என் ஃபிரன்ட் வந்தப்ப கந்த சஷ்டி கவசம் சொன்னயாமே” என்றவன் பலமாக சிரித்தான்.

‘அவன் எவன்’ன்னு தெரிலயே’ மனதுக்குள் நினைத்தவள் “ஆமா. பொறம்போக்குங்க என்னை என்ன செய்யுதுன்னு தெரியக்கூடாது. அதுக்கு தான்” என்றாள் முகத்தை சுளித்துக்கொண்டு அருவருப்பாக.

“ஹ்ம்ம். அப்போ விருப்பம் இல்லாம இத நீ செய்றயா?” அவன் கேட்க “உனக்கெதுக்கு அதெல்லாம். தெருஞ்சுட்டு என்ன செய்யமுடியும் உன்னால?” ஏளனப்புன்னகையுடன் கேட்டாள்.

அவளின் பேச்சு இன்னமும் சுவாரசியத்தை தர “என்ன வேணா செய்வேன். என் செல்வாக்கு அப்படி” என்றான் கர்வமாக.

சத்தமாக சிரித்தவள், கண்களை உருட்டியபடி “பார்ரா…  அப்படி என்ன செல்வாக்கு?” நக்கலாக கேட்க “உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு. நான் செய்றேன். அப்போ தெரியும் என் செல்வாக்கு என்னன்னு” என்றவன் குரலில் ‘எதுவும் செய்யமுடியும்’ என்ற தோரணை தெரிந்தது.

“அப்போ என்னை இங்க இருந்து வெளிய கூட்டிட்டு போக முடியுமா?” புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க, ஒரு நொடி யோசித்தவன், ‘முடியும்’ என்பது போல் தோள்களை குலுக்கினான்.

‘ஒரு வேல முடியுமோ’ என்று நினைத்தவள், ஒரு நிமிடம் யோசித்தாள். “என்ன யோசனலாம் பலமா இருக்கு? எப்படி முடியும்ன்னு பாக்கறயா?” அவன் கேட்க “ப்ச்… இல்ல… என்ன கேட்கலாம்ன்னு யோசிச்சேன்” என்றவள்

“என்ன வெளிய கூட்டிட்டு போ வேணாம். என்ன தங்கை மாதிரி பாத்துக்கற ஒருத்தங்க இருக்காங்க. பக்கத்து ரூம் தான். அவங்களுக்கு தவறி ட்வின்ஸ் பொறந்துட்டாங்க. அதுவும் பொண்ணுங்க. இங்க இருக்கிறவன் அதுகளையும் இந்த தொழிலுக்கு இழுத்துக்குவானோன்னு பயப்படறாங்க. அவங்கள உன்னால வெளிய கூட்டிட்டு போக முடியுமா?” ஆர்வத்துடன் அவள் கேட்டாள்.

அவளயே வைத்தகண் வாங்காமல் பார்த்தான். அவள் கண்களில் அவன் கண்டது என்ன? கனிவா? கரிசனையா? இல்லை பெரியமனிதத்தனமா? இந்த நிலமையில், பிடிக்காத இடத்தில், ‘தன்னை வெளியே கூட்டிச்செல்’ என்று சொல்லாமல் வேறு ஒருவருக்காக யோசிக்கிறாளே… என்ற பல எண்ணங்கள் அவன் மனதில்.

அவன் அமைதியாக இருப்பதை பார்த்தவள் “அதுதான் சொன்னேன் உன்னால முடியாதுன்னு” சலிப்பாக அவள் சொல்ல…

“கண்டிப்பா முடியும். இப்போ என் ஃபிரன்ட் பக்கத்துக்கு ரூம்ல தான் இருக்கான். அது விஷயம் இல்ல. ஆனா ஏன் ‘நீ வெளிய போகணும்ன்னு சொல்லாம அவங்கள சொல்ற’ன்னு யோசிக்கிறேன்” என்றான் கேள்வியாக.

“இதுல என்ன பெருசா யோசிக்க இருக்கு? எனக்கு எல்லாமே முடுஞ்சு போச்சு. இனி நான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து என்ன ஆகப்போகுது? எட்டு வருஷம் ஓடிடுச்சு. அதுக குழந்தைக” என்று சொல்ல வரும்போது “ஹே என்ன எட்டு வருஷமா? அப்போ நீ இங்க எப்போ வந்த? உன் வயசு?” அதிர்ந்து கேட்டான்.

“இப்போ எதுக்கு அதெல்லாம். அது முடுஞ்சு போன கதை” என்று வரக்தியுடன் சொல்ல “இல்ல நீ சொன்னாதான் நான் ஹெல்ப் பண்ணுவேன். என்னால கண்டிப்பா முடியும்” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவளோ, அவளுக்கு நடந்ததை சலிப்புடன் சுருக்கமாக சொல்ல, அவன் மனம் அவளுக்காக துடித்தது.

அவளின் பேச்சு பெரிய பெண் போல் இருந்தாலும், முகம் இன்னமும் பசுமையாக இருந்தது. இவ்வளவு நடந்தும் தனக்காக கேட்கவில்லையே. அவன் மனதில் அவளைப் பற்றிய நல்ல எண்ணம் மேலோங்கியது.

“சரி. நீ கேட்டதுக்காக நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன். உனக்காக இன்னொன்னும் செய்யப்போறேன்” என்றவன் போனில் பக்கத்து அறையில் இருக்கும் நண்பனை அழைத்து பேசினான் சற்று தள்ளிச் சென்று.

பின்பு  இன்னொருத்தனுக்கு அழைத்து பேசினான். சிறிது நேரத்தில் அந்த இடத்தினுடைய சொந்தக்காரன் கதவைத் தட்ட, அவள் சென்று திறந்தாள்.

அவளை நிமிர்ந்து கூட பார்க்காதவன், “சொல்லுங்க வருண் தம்பி. கூப்பிட்டுருந்தீங்க. சரக்கு பிடிச்சிருக்கா? ஹைபிரிட் வெரைட்டி… சூப்பர் டீலக்ஸ்” என்றான் பெருமையாக மிதுலாவை பார்த்து.

அவளுக்கு அவன் பேச்சு அறுப்பருப்பாக இருக்க, வேறெங்கோ பார்ப்பதுபோல் முகத்தைத் திரும்பிக்கொண்டாள்.

வருண் “ஹ்ம்ம் நல்லாயிருக்கு” என்றவன் மிதுலையிடம் கண்களாலேயே மன்னிப்பு கேட்டுவிட்டு “எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும்” என்று பீடிகையோடு நிறுத்தினான்.

“சொல்லுங்க தம்பி. என்ன செய்யணும்” பணிவுடன் அந்த ப்ரோக்கர் கேட்க “ஒரு வாரம் ஸீ ஷோர் கெஸ்ட் ஹவுஸ் போறேன் என் ஃபிரன்ட்ஸ் கூட. அதுக்கு எனக்கு இவளும், அவன் இருக்கானே அந்த ரூம் பொண்ணும் ஒரு வாரம் வேணும்” என்றான் ‘கண்டிப்பாக வேண்டும்’ என்ற தொனியில்.

அதை அவன் சொன்ன அடுத்த நொடி மிதுலாவிற்கு தூக்கி வாரி போட்டது.

‘நல்லவன் மாதிரி பேசினானே’ என்று நினைத்தவள் “என்னது ஒரு வாரம் வேற எங்கயோவா? என்னால முடியாது” என்று அவசரமாக மறுக்க, ‘ஐயோ இவ காரியத்தை கெடுத்துடுவா போலயே’ வருண் நினைக்க, அவள் மறுப்பது ப்ரோகருக்கு கடுப்பைக் கிளப்பியது.

இதை வைத்து நிறைய பணம் பார்க்கலாம் என்றெண்ணியவன் “தம்பி நான் சொன்னேனே சூப்பர் டீலக்ஸ்ன்னு. காசு அதிகமாகும் அதுவும் பத்திரமா திருப்பி கொண்டு வந்து விட்டுடுவீங்களா?” என்று குழைவுடன் கேட்க

“எவளோ வேணுமோ வாங்கிக்கோ. எனக்கு ரெண்டும் வேணும்” என்று சொல்லும்போது தான் கிறிஸ்டியயும் அவன் கேட்டது நினைவிற்கு வர “தம்பி அந்த இன்னொரு சரக்குக்கு குழந்தைங்க இருக்கு. அதுகளை விட்டுட்டு அவ வர்றது கஷ்டம். வேற யாராச்சும் வேணும்னா…” இழுத்தான் தலை சொரிந்துகொண்டு.

“அதுகளையும் கூட்டிட்டு வரச்சொல்லு. ரெண்டு பேரும் பாத்துக்கட்டும். ஃபிரன்டுக்கு அவளை ரொம்ப பிடிச்சுருக்கு. ட்ரீட் குடுக்கறேன்னு சொல்லிருக்கேன். எனக்கு இவள பிடிச்சுருக்கு. இப்போவே மூட்டை முடுச்ச கட்ட சொல்லு ரெண்டுபேத்தயும்… கிளம்பனும்” என்று ஆணையிட்டான்.

மிதுலாவிற்கு அவன் என்ன செய்ய போகிறான் என்று சுத்தமாக புரியவில்லை. அவனோ ப்ரோக்கரை அழைத்துச்சென்று ஏதோ பேசி அனுப்ப, ப்ரோக்கர் இவளிடம் வந்து ஒரு வாரத்திற்கு தேவையானதை எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அவன் வெளியே செல்லும் வரை பொறுத்திருந்தவள் “ஏய்… உன்ன நல்லவன்னு நம்பினேன் ச்சை. புத்திய காட்டிட்டல. இங்க வர்றவனெல்லாம் நல்லவனாவா இருப்பான்?” வார்த்தைகளை எய்தாள் கோபத்துடன்!!!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved