Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 1

சாம்பலின் சாயல் – 1(1)

நள்ளிரவு. சென்னையின் புறநகர். ஆங்காங்கே தெருவிளக்குகள் எரிய, ஊரே அமைதியைத் தழுவி இருந்தது. எங்கோ நாய்கள் கூட்டமாக ஊளையிடும் சத்தம் சன்னமாகக் கேட்டது.

அந்த நள்ளிரவில் பரந்த வான்வெளியில் துணைக்கு நட்சத்திர பட்டாளம் இல்லாமல் தனியே விழித்திருந்தது அரை வட்ட நிலா. அதே போல் நான்கு சுவர்கள் மட்டும் இருக்கும் ஒற்றை அறை வீட்டில் தனியே துயில் கொண்டிருந்தாள் அவள்.

நல்ல ஆழ்ந்த உறக்கம். அதை அவளின் சுவாசம் பிரதிபலித்தது. அவ்வளவு சீக்கிரம் எதற்கும் எழும் நிலையை தாண்டிய ஆழ்ந்த உறக்கம்.

உறங்கும்போது ரசிக்கக்கூடாது என்பார்கள். அனால் உறங்கும்போதே நிலவிற்கு போட்டிபோடும் அழகு என்றால் விழித்திருக்கும் போது?

வெளுத்தாற்போல் இல்லாமல் இந்திய கோதுமை நிறம். பார்த்ததும் ஈர்க்கும் முகவாக்கு. எதுவும் பூசாமல் சிவந்தாற்போல் இதழ்கள். அளவான ஆனால் கூர்மையான நாசி.

கண்கள்… அதை மூடிக்கொண்டிருந்ததால் வர்ணிக்கமுடியவில்லையே. நல்ல வேலை அவள் உறங்குகிறாள். வர்ணிப்பது தெரியாமல் போனது. தெரிந்தால்? தெரிந்தால் என்ன நடக்கும் என்பது போகப்போக பார்க்கலாம்.

அட… ஏதோ அசைவு. மூடிய கண்களுக்குள் கண்மணிகள் திடீரென அலைபாய்ந்தது. அதன் அசைவு அதிகமானது. ‘வீர்ர்ர்….’ என்று கத்திக்கொண்டு கண்விழித்தாள். மூச்சு இரைத்தது.

மூச்சை கட்டுப்படுத்த முயற்சித்தாள். எழுந்து கால்கள் மடித்து உட்கார்ந்தவள், கண்ணிமைகளை இறுக பூட்டிக்கொண்டாள். காதுகளைக் கைகளால் அழுந்த மூடிக்கொண்டாள். முகத்தை இரு கால் இடையில் புதைத்துக்கொள்ள, எதையும் பார்க்கக்கூடாது, எதுவும் கேட்கக்கூடாது என்பது போல் இருந்தது அவளின் செயல்.

மிகுந்த மௌனம் அவளுள் பரவ, முகத்தை மெல்ல தூக்கி கண்களை மெதுவாக திறந்தாள். அவளுக்குள் மறுபடியும் அதே போராட்டம். எலும்புக்கூடு முகமூடி அணிந்து பல உருவங்கள் அவளை தாக்குவது போல் இருந்தது.

வார்த்தைகள் வரவில்லை. மூச்சுக்காற்றுக்கு கஷ்டப்படுவதுபோல் மூச்சை இழுத்து இழுத்து விட்டாள். அது சமன் படவில்லை. இன்னமும் அந்த அமானுஷ்யங்கள் அவளை சுற்றுவதுபோல் இருந்தது.

கஷ்டப்பட்டு தடதடவென பக்கத்தில் இருந்த பொருட்களை உருட்டியவள், தேடி தண்ணீர் குவளையை எடுக்க முற்பட்டாள். சரியாக எடுக்காமல் பதட்டத்தில் எடுக்க, தண்ணீர் முழுவதும் கொட்டியது. அது கீழே விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் படர, படுக்கை ஈரமானது.

அந்த ஈரம் மெதுவாக அவளை அடைய, அது கொடுத்த குளுமையில் மூச்சிரைப்பு சற்று மட்டுப்பட்டது. பதட்டத்துடன் காலியான குவளையை கையில் எடுத்து, கால்கள் நடுக்கத்துடன் மெல்ல எழ முயற்சித்து, தட்டுத்தடுமாறி தண்ணீர் இருக்கும் இடத்தை அடைந்தாள்.

உள்ளே சென்ற தண்ணீர் அவளை சற்று ஆசுவாசப்படுத்தியது. மூச்சு சீராக இல்லாவிட்டாலும், மூச்சிரைப்பு இல்லை. மெதுவாக எழுந்து முகம் கழுவிக்கொண்டு, சாமிப்படங்கள் தொங்க விடப்பட்ட இடத்தில் சம்மணமிட்டு சாமியை பார்த்தவாறு உட்கார்ந்தாள்.

இப்போதுதான் அவள் கண்கள் நன்றாக தெரிந்தது. எதிரே இருந்த சாமியை சாதாரணமாக பார்த்தாளா… இல்லை வெறித்து பார்த்தாளா…  தெரியவில்லை.

ஆனால் அந்த பார்வை. அந்த கண்கள். என்ன விழிகள் அது? அதுவும் அந்த கண்மணி!?! ஹேய்ஸல் (Hazel) என்று சொல்லப்படும் விழிகள். யார் பார்த்தாலும் அதில் மயங்குவது நிச்சயம். ஆனால் அந்த மயக்கும் கண்மணிகளில் இப்போது அசைவில்லை.

சில மணித்துளிகள் கழித்து… இப்போது அசைவு தெரிந்தது. கண்களில் அல்ல, அவள் உதட்டில். ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் அது கந்த சஷ்டி கவசம் என்று. என்ன ஆயிற்று இவளுக்கு? ஏன் இந்த பதட்டம்?

இதையெல்லாம் யோசிக்கும்முன் அப்படியே கவசம் சொன்னபடி சுருண்டு வெற்றுத் தரையில் படுத்துக்கொண்டாள். உறக்கம் அவளை மறுபடியும் ஆட்கொண்டது. ஒருவேளை கவசம் சொன்னது மனதை சமன் படுத்தவோ?

எவ்வளவு நேரம் அப்படியே உறங்கினாலோ, காலை ஜன்னலின் வழியில் வந்த வெளிச்சம், வீட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தை விட உள்ளே பரவ, உறக்கம் தடைபட்டு கண்கள் லேசாக திறந்தது.

மெல்ல எழுந்தவள், கண்களை சுற்றியும் ஓடவிட்டாள். படுக்கை பாதி ஈரமாகவும் பாதி காய்ந்தும் இருந்தது. படுக்கை பக்கத்தில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. மெதுவாக அதை சீர்செய்தாள்.

பின் ஈரமான படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த ஒற்றை அறையில் இருந்த பால்கனியில் விரித்து காயப்போட்டுவிட்டு, அன்றாட காலைக் கடன்களை முடித்து, அடுப்பு இருந்த இடத்திற்கு சென்றாள்.

காலை காஃபியில் ஆரம்பித்து, அடுத்தவேலையாக தையல் மெஷின் முன் அமர்ந்தாள். மதிய நேரம் எட்டும் வரை ஓயாமல் எதையோ தைத்துக்கொண்டிருந்தாள்.

பின் சாப்பிட வேண்டுமே என்று ஏதோ சமைத்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தையல் மெஷின் முன்!!!

‘என்னடா இவள்?’ என்று தான் தோன்றும். ‘கை வலிக்காதா? கால் வலிக்காதா? சலிப்பு தட்டாதா? எவ்வளவு நேரம் இப்படியே? பல கேள்விகள்.’ ஆனாலும் தைத்துக்கொண்டே இருந்தாள்.

மாலை நேரம் நெருங்கும்போது, ஒரு வழியாக மெஷினில் இருந்து எழுந்தவள், அவளை ரெஃப்பிரேஷ் செய்துகொண்டு, இவ்வளவு நேரம் போட்டுக்கொண்டிருந்த பழைய நைட்டியில் இருந்து வேறு உடைக்கு மாறினாள்.

அவள் தயாரானபின், அவளை பார்த்தால் ‘அட என்ன உடை இது?’ என்றே தோன்றும். ஆள் ஒடிசலாக இருந்தாள் ஆனால் உடையோ ஏதோ ஹேங்கரில் தொங்கவிடப்பட்டது போல தொளதொளவென தளர்ந்து இருந்தது.

முகத்தில் ஒன்றுமே இல்லை. ஒரு பொட்டோ பவுடரோ ஏதுமில்லை. மளமளவென தைத்த துணிகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தாள். அன்றைய தினத்தில் முதல் முறை வெளியே!!!

கதவை தாளிட்டு படி இறங்கி கீழே வர, அங்கே அந்த குடியிருப்பில் இருக்கும் பெண்கள் ஒரு மார்கமாக பார்த்தார்கள். ஆனால் இவள் யாரையும் பார்க்கவேயில்லை.

கண்களை அலையவிடாமல் நேராக நடக்க, அவள் கால்கள் நின்ற இடம் “MSG Exports”.

படியேறி அந்த இரண்டு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்த மேலாளர் அறைக்கு சென்றாள். அவள் கதவை தட்டிக்கொண்டு உள்ளே செல்ல, இவளை பார்த்த மேலாளர் மைதிலி, “வா மிதுலா” என்றார் புன்னகை முகத்துடன்!!!

———————

“மேடம் இப்போ தான் உங்க கதைல மைதிலின்னு இரண்டாவது கேரக்டர் என்ட்ரி குடுத்துருக்காங்க” என்று நேர்காணலில் ஈடுபட்டிருந்தவள் சொல்ல, தன் வாழ்க்கையின் கடந்தகால பக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த மிதுலா சிறிய புன்னகையுடன் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved