Preethi S KarthikShort Story

New Short story

“மாமா…! மா..மா!” ஆசையுடன், காதலுடன், குறுங்கோபத்துடன், ஏக்கத்துடன், தவிப்புடன், இயலாமையுடன் அவளின் ஒவ்வொரு விளிப்பும் ஒவ்வொரு ஒலிப்பில் வெளிவந்தது.

“தேனு… என்னடா!” என்ற அந்த உழைப்பால் உரமேற்றிய ஆண்மகனின் குரலும் மிகவும் தன்மையாக, குழைவாகவே வெளிப்பட்டது.

“உன் தங்கச்சி… அவ புருஷனோட வந்திருக்கு மாமா” அவள் குரல் இறங்கி ஒலித்தது கூட அவனுக்குப் புரியவில்லை.

“தேனு… அதென்ன என் தங்கச்சி! முறை சொல்லி கூப்பிடுனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!” லேசான கோபத்துடன் சொன்னான். அவள் சன்னமாக முனகுவது அவனுக்கும் கேட்டது. ஆனால் வேறு பேச்சு எதுவும் இல்லை.

சில நொடிகள் அவளிடம் மௌனத்தைப் பார்த்த வேலு, “தேனு! சரி… சாப்பிட்டயா?” கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் கழித்து அவளிடம் பேசுவதால், அவனே சமாதானம் பேசினான்.

அப்போது தான் அவளும் உணர்ந்தாள், ‘இந்த கேள்வியை கடந்த முறை அழைத்தபோது அவன் கேட்டது தான். அதற்கு பின் யாரும் கேட்கவில்லை!’ மனதில் ரணம் சூழ்ந்தது.

தேன்மொழியுடன் திருமணமாகி இரண்டு மாதத்தில் வேலைக்காக வேலூரிலிருந்து அமீரகம் வந்தவன்தான் வேலு. இதோ கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது. சிலசமயம் வேலை நிமித்தமாகத் தொடர்ந்து பதினைந்து முதல் ஒன்றரை மாதம் வரை சைட்டில் வேலை பார்ப்பான்.

அது முடிந்து, கொஞ்ச நாட்கள் விடுமுறை கிடைக்கும். பிறகு அதேபோல தொடர் வேலை. அவன் சைட்டில் இருக்கும் சமயத்தில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. விடுமுறை நாட்களில் தான் பேச்சுக்கே வழி கிடைக்கும்.

பிரிவின் தாக்கம் அவள் மனதிலும், தேகத்திலும் அதிகரிக்கும்போதெல்லாம், அவனின் அருகாமையை வேண்டி மனம் தவிக்கும்போதெல்லாம், அவளின் மாமா என்ற அழைப்பே பல அர்த்தங்களை ஏந்தி நிற்கும். சிலசமயம் அவனின் குரல் மட்டுமே அவளுக்கு மருந்து… மனதிற்கும், உடலிற்கும்.

அவன் அவளுடன் பேசும் தருணங்கள், அவளின் அட்ரினலினின் அளவை அதிகரிக்கும் வல்லமை வாய்ந்தவை!

“தேனு!” அவனின் குரலில் கலங்கியிருந்த கண்களைத் துடைத்தபடி, “சாப்பிட்டேன் மாமா. நீ என்ன சாப்பிட்ட?”

“வேறென்ன அதே பரோட்டா தான்!” அமீரகத்தில் கேரளா கடைகளில் குறைந்த விலையில் வயிறு நிரம்ப சாப்பிடக்கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. அப்படி சேர்த்தால் தானே வீட்டிற்குப் பணம் அனுப்ப முடியும்!

தங்கை திருமணத்திற்காக வாங்கிய கடன், தந்தை விட்டுச்சென்ற கடன் என அனைத்தையும் அடைக்க அமீரகம் சென்றவன், திருமணம் செய்துகொண்டதென்னவோ முப்பதுக்குப் பின் தான்!

“அதை அதிகம் சாப்பிடாத மாமா. வயத்துக்கு கெடுதல். வீட்ல கொஞ்சம் சோறு வடிச்சு சாப்பிடேன்” தன் நிலையெல்லாம் மறந்து அவனுக்காகப் பேசினாள்.

“உன் மீன் கொழம்பு சாப்பிடணும்போல இருக்கு தேனு!” இதற்கு என்ன சொல்வாள் அவள்? மறுபடியும் கண்கள் குளமானதுதான் மிச்சம். இப்போது அவளிடம் மறுபடியும் மௌனமே நிறைந்திருக்க, அவன், “தேனு என்னடா! ஏதாவது பேசேன்”

ஆனால் அவளுக்கு பேச முடியவில்லை. வீட்டில் இன்று அவளைச் செய்யச்சொன்ன உணவு மீன்குழம்பு! ஆனால் அதை விரும்பி உண்பவன் இங்கு இல்லை. தொண்டை அடைத்தது. கரகரத்த குரலில், “எப்போ வருவ மாமா?”

அப்போது சரியாக, “அடியே தேனு!” இதுவரை அவன் தேன்போல அழைத்த அவள் பெயரை, அதற்கு எதிர்மாறாக அழைத்தார் வேலுவின் அம்மா மரகதம்.

அவர் குரலின் அளவை அளக்க எளிய வழி! அலைபேசி வழியாக அமீரகத்துக்கே கேட்டுவிட்டதே!

“தேனு! அம்மா கூப்பிடறாங்க போல. ஏதாவது சொல்ல போறாங்க. நீ போ!” என்றான் அவசரமாக. வெளிவந்த கோபத்தை மூச்சை இழுத்து அடக்கினாள் தேன்மொழி.

அவனுக்கோ, எங்கே தன் அன்னை அவளை இதைச் சாக்கு வைத்து திட்டுவாரோ என்ற எண்ணம். அவளுக்கோ, கிடைக்கும் இந்த கொஞ்ச நேரத்தில் கூட கட்டியவனுடன் பேசமுடியவில்லையே, கூடவே இவனும் அவருக்காகப் பேசுகிறான் என்ற கோபம்.

பதில் பேசாமல் அழைப்பைத் துண்டித்து அவள் வெளியே சென்ற நொடி, “எப்போ வருவன்னு அவனை கேட்கற? அவன் இங்க வந்துட்டா… உன் அப்பன் கடனை அடைக்க பணம் தருவானா?”

ஈட்டியைப் போல குத்தியது அவர் வார்த்தைகள். ஒருமையில் தன் வீட்டினரை அழைத்தது, பற்றாததற்கு சொந்த மகனைப் பணம் தரும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பது, தேன்மொழிக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. ஆனால் வேலுவிற்காக அமைதியாக இருந்தாள்.

காரணம், சின்னதாக எதிர்த்துப் பேசினால் கூட, வேலுவை அழைத்து, ‘நீ தரும் இடம் தான். மனைவி வந்தபின், உனக்கு அம்மாவெல்லாம் முக்கியம் இல்லை’ என கரித்துக்கொட்டுவார். இருக்கும் விடுமுறை நாளில் கூட அவனுக்கு நிம்மதி போய்விடும் என்பதால் தேன்மொழி அமைதியாகவே கடந்துவிடுவாள்.

இதோ இப்போதும் அவள் அமைதியாக இருக்க, அவரால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. எதிர்த்துப் பேசினால் பதிலுக்கு வாதிடலாம், அமைதிக்கு என்ன பதில் தருவது.

“ஊமகொட்டான் மாதிரி இருந்துட்டு எல்லாம் வேலையும் செய்றது” என கடிந்துகொண்ட அவர், “போ, மருமகனுக்கு சோறு எடுத்துவை” அதட்டலுடன் முடித்தார்.

மாமியாருக்கு, நாத்தனாருக்கு, மற்றும் அவ்வீட்டின் மருமகனுக்கு உணவைப் பரிமாறியபின், மீதம் இருந்த சாதத்தைச் சாப்பிட உட்கார்ந்த தேன்மொழிக்கு அந்த சாதம் இறங்கவில்லை.

நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் வேலுவின் பேச்சே காதில் ஒலிக்க, பெயருக்கு சாப்பிட்டுவிட்டு, அடுப்பங்கரையில் மற்ற கைவேலைகளை  முடிக்கும் சமயம், கேட்டது அந்த கிசுகிசுப்புகள்!

அந்த இரவின் மயான நிசப்தத்தில், சமையலறை ஜன்னல் ஒட்டிய பக்கத்து அறை ஜன்னல் வழியாக, நாத்தனார் மற்றும் அவள் கணவனின் கிசுகிசுப்புக்கள் காதில் கேட்க, மனமும், தேகமும் தானாக வேலுவை நாடியது.

ஒற்றை அரை வீடு. இவ்வறையை அவளும் வேலுவும் திருமணமான பின் உபயோகப்படுத்தினார்கள். அச்சமயம் அவனுடன் அங்கே அரங்கேறிய நிகழ்வுகள் நினைவுகளாய் தேன்மொழியை குடைய ஆரம்பித்தது. உணர்வுகள் மேலோங்க, அதன் வெளிப்பாடு, உடல் இறுகி, கண்கள் கண்ணீரை ஏந்தியது.

இதுபோல சிலமுறை இதற்கு முன்னே நடந்ததால் தான், வேலுவிடம் பேசும்போது தம்பதிகளாக அவன் தங்கை மற்றும் அவள் கணவன் வந்திருப்பதைச் சொன்னாள். ஆனால் அதன் பொருள் அவனுக்கும் உரைக்கவில்லை, இவளாலும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

கிசுகிசுப்புக்கள் காதில் பட்டவுடன், எப்போது அங்கிருந்து வெளியே ஓடுவோம் என அவசரமாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர எண்ணிய தேன்மொழியை தடுத்தது மரகதத்தின் அதட்டல் குரல்.

“ஏய், தேனு! பாலை காய்ச்சி… உறை ஊத்திட்டு, நாளைக்கு பூசைக்கு அடுப்பு, மேடை, கீழயெல்லாம் தொடச்சு, முழுகி வச்சிட்டு வந்து படு!”

அங்கிருந்து தப்பிச்செல்ல எண்ணிய அவள் மனது ‘ஐயோ’ என அலறியது. இப்போது கிசுகிசுப்பின் சத்தம் குறைந்துகொண்டே இருந்தாலும், குரல் அபஸ்வரமாக ஒலிக்க ஆரம்பித்தது.

தேன்மொழி முன் இருபதுகளில் இருக்கும் பெண்! அதிக விபரம் தெரியாமல் இருந்தவளுக்கு, திருமணமான பின், தனிமையையே மறக்கச்செய்து, அனைத்தையும் அக்குவேறு ஆணிவேராகக் கற்றுக்கொடுத்துவிட்டு தான் சென்றிருந்தான் வேலு.

அவன் சென்ற சில நாட்களிலேயே மனதளவில் மட்டுமில்லாமல், தேகமும் அவனை நாடியது. பல இரவுகள் உறக்கமற்றுப்போனது. தன்னுள் எழும் உணர்வுகள் சரியா தவறா என பலமுறை குழம்பித் தவித்து போயிருக்கிறாள்.

இப்போதும்கூட பக்கத்து ஜன்னலிலிருந்து சத்தம் கேட்காமலிருக்க, காதுகளை இறுக மூடிக்கொண்டாலும், மனதை முடிந்தளவுக்குக் கடிவாளமிட முயன்றாலும், எதுவுமே முடியாமல் போனது. தேகம் தகிப்பது போல ஒரு உணர்வு. மனதும் உடலும் பரபரவென்றது.

விளைவு, பொங்கிவரும் பாலின் பாத்திரத்தை பரபரத்த வெறும் கையில் பிடித்துவிட்டாள். வலியும் எரிச்சலும் சேர்ந்து கத்தவேண்டும் என தோன்றினாலும், ஏனோ அந்நொடி அந்த எரிச்சல், மனதில் எழுந்த உணர்வுகளுக்கு வடிகாலாய் இருந்தது.

அந்த சூடு ஏற்படுத்திய எரிச்சல், கண்கள் சொருகி காதுகளைக் கூட அடைத்துவிட்டதுபோலும். எந்த சத்தமும் கேட்கவில்லை.

அவ்வலி மறைவதற்குள் விரைவாக வேலைகளை முடித்துவிட்டு முகப்பிற்கு வந்திருந்தாள் தேன்மொழி. அங்கே குறட்டை விட்டபடி உறங்கிக்கொண்டிருந்தார் மரகதம்.

கையில் மருந்திட்டு, படுக்கை விரித்து அங்கே படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. விட்டத்தை வெறித்தபடி வேலுவின் நினைவுகளில் தன்னையே மறந்திருந்தாள்.

அடுத்தநாள், மகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார் மரகதம். மூச்சுவிடுவதற்கு நேரம் கிடைத்தது போல உணர்ந்த தேன்மொழி, வேலுவை உடனே அழைத்தாள்.

அழைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் அழைத்த வேலுவின் குரலைக் கேட்டபின் தான் மனதில் நிம்மதியே வந்தது தேன்மொழிக்கு.

“மாமா!” என்றவளின் குரலிலேயே அவள் சரியில்லை என்பது அவனுக்கும் புரிந்தது.

“என்னடா தேனு?!  ஏதாச்சும் அம்மாகூட பிரச்சனையா?”

“மாமா நான் வேலைக்கு போறேன் மாமா! ப்ளீஸ். பக்கத்தில காப்பகத்துல பிள்ளைகளை பார்த்துக்கற வேலையாம். வீட்ல உன் ஞாபகம் ரொம்ப அதிகமா இருக்கு… எங்கயாச்சும் வேலைக்கு போனா கொஞ்சம் மாறுதலா இருக்கும் மாமா!”

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகக் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறாள். வேலைக்குச் சென்றால்…  மனதும் உடலும் மொத்தமாகக் களைப்புறும். அப்போது இதுபோன்ற எண்ணங்களைத் தவிர்க்கலாம் என நினைத்தாள்.

வேலுவும் தன் அம்மாவிடம் கேட்டுப்பார்த்தான். ஆனால் அவரோ முடியவே முடியாது என மறுத்துவிட்டார்.

மகனை விட மிகவும் வயது குறைந்த பெண். பார்க்க லட்சணமாக இருப்பவள். ஏதோ அவள் குடும்பத்தில் கஷ்டம், நான்கு பெண்கள் என்பதால் வயதில் மிகவும் பெரியவனானாலும் வேலுவுடன் அவளுக்குத் திருமணம் நடந்தது.

இதெல்லாம் மரகதம் மனதில் வேறூன்றி நிற்க, அனைத்திலும் கட்டுப்பாடு விதித்தார். எங்கே வயது கோளாறால் ஏதாவது தவறாக நடந்துவிடுமோ என்ற எண்ணம். வெளியே அனுப்புவதற்கே பயம். யாருடன் பேசினாலும் சந்தேகம். வீடியோ கால் பேசக்கூடிய மொபைலை உபயோகிப்பதற்குக்கூடத் தடை. எங்கே அதன்வழி அவள் வழி தவறிவிடுவாளோ என்ற யோசனை. இப்படி பல!

வேலைக்கு சொல்லட்டுமா என்று தேன்மொழி கேட்டதற்கு வேலு, “அம்மா ஏதாவது சொல்வாங்க தேனு. உன்னைய ரொம்ப திட்டுவாங்களே” என்றான்.

“ஏதாவது சொல்லி சம்மதம் வாங்கிக்குடு மாமா. என்னால முடியல!” வெளிப்படையாக தன் எண்ணங்களைச் சொல்லாமல், வேலுவிடம் வேண்டினாள்.

அவளிடம் பேசிவிட்டு தன் அம்மாவிடம் பேசினான் வேலு. பணம் என்ற ஒற்றை விஷயத்தை வைத்து, பல நிபந்தனைகளுடன் சம்மதமும் வாங்கித்தந்தான்.

மரகதம் வீட்டிற்கு திரும்பியதும், தேன்மொழியை வசைபாடிவிட்டு, “காலைல வேலைக்கு போறதுக்கு முன்னாடி, வீட்டை சுத்தம் பண்ணிட்டு, மதியத்துக்கும் சேர்த்து சமையலை முடிச்சி வச்சிட்டு போகணும். எனக்கு கால் குடைச்சல்ல சமைக்க முடியாது.

மக வர்றதே ஒரு வாரத்துக்கு தான். ஏற்கனவே அவ வீட்ல வேலையா செய்து, ஓடா தேஞ்சு போய் வர்றவள… இங்கயும் வேலை வாங்க முடியாது” என்று அவர் சொன்ன வார்த்தைகள் தேன்மொழிக்கும் பொருந்தும் என தோன்றவுமில்லை. யோசிக்கவும் விரும்பவில்லை.

வேலைக்கு செல்வதே பெரிய விஷயம் என்பதால், அவர் சொன்னதற்கு தேன்மொழி சரி என்பதுபோல தலையசைத்தாள்.

அடுத்து அவர் கொஞ்சமும் தயங்காமல், “சம்பளம் வாங்கி என்கிட்ட தான் தரணும்! பணம் கைல இருந்தா, உனக்கு திமிர் ஏறிடும்! நானா பார்த்து தின செலவுக்கு பணம் தர்றேன்” என்றார்.

அவரையே வெறித்தாள் தேன்மொழி. பணம் அதுதான் பிரதானம் அவருக்கு! என்பது அவளுக்கு தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. மறுக்கவா முடியும்?! மறுத்தால் வேலைக்கு தான் செல்லமுடியுமா?!

அவளுக்காக பேச யாரேனும் இருந்தால் எதிர்த்துப் பேசலாம். கணவன் பக்கத்தில் இல்லை. பெற்றவர்கள் இருந்தும் இல்லை. எங்கே பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டால் என்ற பயத்தில் தேன்மொழியிடம் பொறுத்துக்கொள்ள தான்  சொல்வார்கள்.

தற்போது வேலைக்கு செல்ல அனுமதித்ததே நிம்மதி என அனைத்துக்கும் எந்த ஒரு மறுவார்த்தையும் சொல்லாமல் சரி என்றாள்.

இதோ, இன்று முதல் நாள். வீட்டில் ஒரு துரும்பு வேலையையும் விடாமல் அனைத்தையும் செய்துவிட்டு கிளம்பியிருந்தாள். மனதினுள் ஒரு புத்துணர்ச்சி!

காப்பகத்தின் உரிமையாளர்களான விஜய், ராதா தம்பதிகளை சந்தித்து, வேலையை கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்திருந்தாள்.

வீட்டில் கிடைக்காத தனிமையான தருணம், வேலைக்கு நடுவில் கிடைக்க, மனமகிழ வேலுவுடன் பேசினாள். நிறைவாக நகர்ந்தது அன்றைய தினம்.

தினங்கள் இப்படியே நகர்ந்தது. ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு சென்ற சமயம், வேலுவின் தங்கை அடுப்பங்கரையில் இருக்க, அவள் கணவனும் அங்கே! வேலை செய்வதற்காக சென்ற தேன்மொழி, அங்கே அவர்களின் நெருக்கத்தைக் கண்டு கூசி நின்றுவிட்டாள்.

அமைதியாக அறைக்கு சென்று தாளிட்டவள் மனது அமைதியற்று இருந்தது. தேகம் விறுவிறுத்து, மூச்சிரைத்தது. உடலிலும் மனதிலும்… ஒவ்வொரு அணுவும் வேலுவின் அருகாமையை நாடியது. தவித்துப்போனாள். அழுகையே வந்துவிட்டது. அவன் குரலையாவது கேட்டுவிட எண்ணி, போனை எடுத்த நொடி, அவள் மாமியாரின் குரல்.

அலைபாயும் மனதையும் உடலையும் கடினப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தாள். அடுத்தநாள் மத்திய இடைவேளையில், ஆசை தீர வேலுவுடன் பேசி, மனதை நிம்மதியாக்கிக்கொண்டாள்.

ஆனால் இந்த அமைதியும் சில நாட்களே என்பது போல இடைவேளையில் அவள் வேலுவுடன் மிக நெருக்கமாக, அந்தரங்க பேச்சுக்கள் பேசுவதை ஓரிருமுறை அக்காப்பகத்தின் உரிமையாளன் விஜய் கேட்டிருந்தான்.

சின்ன வயது, கணவனில்லாமல் தனியாக வாழும் பெண், அதை சாதகமாக்கிக்கொள்ள நினைத்தவன், அவளை வேலை விஷயமாக பேச அலுவலகத்துக்கு அழைத்தான்.

ஏதோ கடனே என்று சிலதை பேசியவன், மேசைக்கு அந்தப்பக்கம் நின்றிருந்தவள் பக்கத்தில், மேசையில் சாய்ந்து நின்று பேச, லேசாக அவன் பேச்சில் மாற்றத்தை உணர்ந்தாள்.

“இள வயசு! உன் கஷ்டம் புரியுது! உனக்கு சம்மதம்னா” என்றவன் அவளை ஒருமாதிரி மேலும் கீழும் பார்த்தான். தேன்மொழிக்கு பதறியது.

“யாருக்கும் தெரியாம அமைதியா நடத்திக்கலாம். உனக்கு உன் வேலையை நிச்சயம் பண்ணிடலாம். இது என்னோட பண்ணை வீடு அட்ரஸ்” என்று ஒரு கார்டை நீட்டி, “நாளைக்கு காலைல பத்து மணிக்கிட்ட வந்திடு” அவள் கையில் திணித்தான்.

மனதில் வேலுவின் எண்ணங்கள்… கண்களில் கண்ணீர் தடம். அந்த கார்டை வெறித்தபடி நின்றிருந்தாள் தேன்மொழி.

அடுத்தநாள்! அந்த அறையின் கட்டிலில் இருவர். அவளை தோளோடு அணைத்து அடுத்த காரியத்தை அவன் செய்யும்முன், அவன் போன் அலறியது. அதை பார்த்தவன் புருவங்கள் முடிச்சிட்டாலும்…

முகத்தில் லேசான குற்ற உணர்ச்சி இருந்தாலும், “என்னடா தேனு! காலைலயே கூப்பிட்டிருக்க? வேலை இல்லையா?” அவன் கைகள் தானாக அணைத்திருந்த அந்த பாலியல் தொழிலாளியிடம் இருந்து விலகியது!

வேலு அழைப்பை எடுத்த நொடி, தலையில் அடித்து, கதறி அழுதாள் தேன்மொழி. பதற்றமடைந்தான் வேலு! “என்ன ஆச்சு தேனு?” என்ற அவன் கேள்வியெல்லாம் அவள் காதில் விழவில்லை.

“முடியல மாமா! இந்த மனசும் உடலும் உன்னை தேடுது மாமா! வீட்ல உன் தங்கச்சியும் அவ புருஷனும்! அதை தப்பு சொல்ல மாட்டேன், ஆனா என்னால அதையெல்லாம் பார்த்துட்டு தாங்கிக்க முடியல மாமா.

இந்த எண்ணங்கள் தப்போன்னு அசிங்கமா இருக்கு. இந்த நினைப்புல இருந்து தப்பிக்க தான் வேலைக்கு போனேன்… ஆனா அங்க… அங்க” என்ற தேன்மொழியின் குரல் அழுகையில் விக்கியது. வேலுவின் இதயம் கிட்டத்தட்ட நின்றேவிட்டது!

“அந்த முதலாளி… பண்ணை வீட்டு அட்ரஸ் குடுத்து…! போடா உன் வேலையும் வேணாம் மண்ணும் வேணாம்னு முகத்துல எறிஞ்சிட்டு வந்துட்டேன்! மாமா! நீ வா மாமா! ஒருதரம் வா மாமா” என்று அழுத தேன்மொழியின் குரல் அச்சு பிசகாமல் வேலுவின் இதயம் வரை சென்று தாக்கியது.

குற்ற உணர்ச்சியில் கூனிகுறுகிப்போனான். தன்னை எண்ணி அருவருப்பாக இருந்தது. நண்பன் ஒருவன் காட்டிய ஆசையில், உணர்வுகள் எல்லையை மீறிய தருணங்களில், ஓரிருமுறை இதுபோல வந்ததுண்டு. ஆனால் ஒருபோதும் மனைவியின் இடத்திலிருந்து யோசித்ததில்லையே!

தேன்மொழியின் உணர்வுகள், வேலுவின் உணர்வுகள்! இரண்டும் சரியே! ஏனெனில் உடலும் உணர்வுகளும் ஒட்டிப்பிறந்தவை. ஆனால் அவைகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதுதான் திறமையே!

நன்னெறிக் கோட்பாடுகள் பெண்களுக்கு மட்டும் தானா என்ன?!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved