maranthupo en maname1-20-22
மறந்துபோ என் மனமே(1) – 20,21,22
“இப்படி நான் பிஹேவ் பண்ணா அவரு என்ன நினைப்பாரு. அவருக்கு டைம் குடிக்க வேணாமா? எல்லாத்தையும் காலம் முடிவெடுக்கட்டும். ரெண்டு பேரும் ஒண்ணா இருப்போம்னு இருந்தா அது நடக்கும். இட் மே பி நாட் நௌவ். மே நாட் பி எட்” என்று நினைத்துக்கொண்டு கண்ணசந்தாள்
——-
“நான் அவகிட்ட தப்பா நடந்துக்கலயே. நான் தேவையில்லாம யோசிக்கறேனோ? ஒருவேளை உண்மையாவே தல வலியா இருக்கலாம். எதுவா இருந்தாலும் அவளை இனியாவது கஷ்டப்படுத்தாம இருக்கனும். அவ்ளோதான்”
சிந்தனை ஓட்டத்துடன் அவன் இரவு உணவு தயார் செய்தான்.
மெதுவாக அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாளா என்று எட்டிப்பார்த்த அவன் அவள் படுத்திருப்பதை பார்த்து “எழுப்பலாமா வேண்டாமா” என்று நினைத்தான்.
“சரி போய் அவளை எழுப்புவோம்” என்று அவள் ரூமிற்குள் சென்று “நந்தினி” என்று எழுப்ப அவள் எழுந்தாள்.
“ஓ ஸாரி, அப்படியே தூங்கிட்டேன். ரொம்ப நேரமா எழுப்பரீங்களா? இப்போல்லாம் படுத்த உடனே தூக்கம் வருது” என்று சொல்லிக்கொண்டு எழுந்தாள் அவசரமாக.
“பத்துநிமிஷம் டின்னர் செஞ்சுடறேன்” என்றாள்.
“கூல் கூல் அவசரமில்லை” என்றான் சிரித்துக்கொண்டு.
அவள் ரூமைவிட்டு வெளியே வந்து கிச்சனுக்குள் செல்ல அவனும் வெளியே வந்தான். அவன் முன்னமே செய்து வைத்து இருந்தான் என்பதை பார்த்து “திரும்ப நீங்க செஞ்சீங்களா? ஏன் இப்படி பண்றீங்க?” என்று முறைத்தாள்.
“கவலைப்படாத நல்லா தான் இருக்கும்” என்றான் கண்ணடித்துக்கொண்டு.
“இப்போ தலைவலி பரவாலயா நந்தினி?” என்று கேட்டான்.
அவள் சாப்பாட்டை டைனிங் டேபிளில் வைத்தவாறே “ஹ்ம்ம் பெட்டெர்” என்றாள். அவள் ப்லேட் எடுத்துவைத்து உட்காரும் போது அவன் அவளருகே அமர்ந்தான்.
“நான் தானே பிரிப்பர் பண்ணேன். சோ நான் தான் செர்வ் பண்ணுவேன்” என்று சொல்ல “ஐயோ நீங்க நிறைய போட்டுடுவீங்க” என்று சொன்னவுடன் “பரவால்ல சாப்பிடு” என்று பரிமாறினான். இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
——-
அவள் பாத்திரம் கழுவி சுத்தம் செய்துவிட்டு சின்ன சின்ன வேலைகளை முடித்துவிட்டு ஆசுவாசப்படுத்த சோபாவில் அமர்தாள்.
அவன் லேப்டாபில் பாட்டு பாடிக்கொண்டிருந்தது. அவன் அவள் அருகே வந்து நெருக்கமாக உட்கார்ந்து அவளை பார்த்தபடியே அவள் கைகளை எடுத்து ஒரு விரலால் வருடியவாறே
“நீ உடம்பு முடிலனு போனயோ இல்ல வேற ஏதாவதுவானு தெரில. நான் திரும்ப சொல்றேன், நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறாயோ, இல்ல நீ என்ன நினைக்கிறாயோ, சொல்லிடு. நான் என்ன மாத்திக்க கண்டிப்பா ட்ரை பண்றேன்.” என்றான்.
அப்படி அவன் சொல்லும்போது அவள் கண்கள் கலங்கி அவன் தோள் மீது சாய்ந்தவள் “அப்படிலாம் எதுவும் இல்ல ராம்” என்றாள். அவனும் அவள் தலைமேல் சாய்ந்தான் அவள் கைகள் பிடித்தவாறே.
சிறிது நொடிகள் கழித்து அவள் மெதுவாக அவனை பார்த்து “ரொம்ப தேங்க்ஸ். தேங்க் யு சோ மச் ஃபோர் கிவ்விங் மீ அஸுரன்ஸ் (Thank you so much for giving me assurance)” என்றாள்.
“ஐம் ஸாரி என்னால நீ ரொம்ப கஷ்டப்பட்டுருக்க” என்று சொல்ல, அவன் கைகளில் இருந்து அவள் கைகளை விடுவித்து அவன் வாயை மறித்து “இனி ஸாரி வேண்டாம். பழசும் வேண்டாம்” என்றாள். கையை எடுத்த அவள், அவன் கை மேல் வைத்து “நாம புது லைப் ஸ்டார்ட் பண்ணலாம்” என்றாள்.
அவள் அவன் கண்களையே பார்க்க அவனும் பார்த்தான். அவள் வெட்கத்தில் தலை குனிய
பேக்கிரௌண்ட்டில் பனி விழும் இரவு பாடல் மெல்லியதாய் கேட்க, இருவரும் கைகளை விலக்கிக் கொண்டனர் விருப்பமில்லாமல்.
சிறிது நேரம் கழித்து அவள் மௌனத்தை கலைத்தாள்.
“போய் தூங்கலாமா?” என்று கேட்க ஒரு க்ஷணம் அவன் அவளுடன் செல்ல நினைத்தவனை “நீங்க போய் படுங்க. நானும் போறேன்” என்றாள்.
“உன்கூட இருக்கப்ப ஐ பீல் பெட்டெர்” என்று நினைத்துக்கொண்டான். “நீ என்னுடன் இருப்பாயா” என்று அவனாலும் கேட்கமுடியாமல் அவளாலும் கேட்கமுடியாமல் தவித்தனர்!!
அவள் அடி எடுத்துவைத்தாள் அவள் அறைக்கு செல்ல.
Chapter 21::
“அவன் தடுப்பானா” என்று அவள் நினைக்க, “தவறாக எடுத்துப்பாளோ என்னுடன் வரச்சொன்னால்” என்று அவனும் தயங்க அவள் அறைக்கு சென்றாள்.
“ச்ச வரசொல்லிருக்கலாமோ” என்று அவனை அவன் கருவிக்கொண்டான்.
“இப்போ நான் மேலபோணுமா. இல்ல வேணாம். ரூம் ரொம்ப தூரமா இருக்கு அவள்ட்ட இருந்து. இங்கயே படுத்துடலாம். ஆமாம் நான் இங்கயே படுத்துக்குறேன்” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
அவள் நினைவாகவே இருந்த அவனை மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் நிகழ்வுக்கு கொண்டு வர, “இன்னைக்கு ஏன் மௌன ராகம் பாட்டே ஷஃப்ஃபில் (shuffle) ஆய்டுருக்கு. பரவால்ல நல்லா தான் இருக்கு” என்று புன்னைகைத்தவாறே சாய்ந்தான் சோபாவில்.
——–
ஓமணப்பெண்ணே பாட்டு அவளுடைய மொபைல் இயர் போனில் பாட, கண்மூடி ரசித்துக்கொண்டிருந்தாள். ஏதோ இனம் புரியாத சந்தோஷம். அவன் அவள் அருகில் இருப்பது போல், அவனே பாடுவது கற்பனை. அந்த சந்தோஷத்திலேயே உறங்கினாள்.
——–
அவன் சோபாவில் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து “ராம் ராம்” என்று அவனை எழுப்ப அவன் கண்திறந்தான்.
அவளின் அழகான முகம். அங்கும் இங்கும் பறக்கும் கூந்தல். மென்மையான சிரிப்பு. அவன் அப்படியே மயங்கி அவள் முகத்தை இரு கைகளால் தாங்கி அதை ரசிக்க
“ஆர் யு ஒகே? ராம் ராம்” என்று இன்னும் அழுத்தமாக நந்தினி உலுக்க, அவன் நினைவுக்கு திரும்பினான். “என்ன ஆச்சு? வெறித்து போய் பாக்குறீங்க. ஆல் ஒகே? ஏன் இங்க படுத்துருக்கீங்க? மேல போலயா நைட்?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க நினைவுக்கு வந்தவன்
“என்ன கேட்ட? ஸாரி எதோ நினைப்புல இருந்தேன்” என்றான்.
“சுத்தம். எந்திரிங்க. ஏன் இங்க படுத்துருக்கீங்க. மேல போலயானு கேட்டேன்” என்றாள்
“ஓ அதுவா அசதியா இருந்துச்சு அதான் அப்படியே படுத்துட்டேன்” என்றான் எழுந்துக்கொண்டே.
“சூப்பர் போங்க. காலைல ஆயிடுச்சு. கொஞ்ச நேரம் தூங்கணும்னா போய் மேல படுங்க” என்றாள்.
“தட்ஸ் ஒகே. நான் ரெடி ஆறேன்” என்று அவளை பார்த்து படியேறி மேலே சென்றான். அவனை பார்த்து சிரித்தவள் “என்ன ஆச்சு இவருக்கு” என்று வேலை செய்வதற்கு ஆயத்தமானாள்.
——-
தயாராகி வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவள் சிரித்துக்கொண்டே பரிமாற அவன் “நீயும் உட்காரு” என்றான்.
“இல்ல நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்” என்றாள். “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாடீங்களே?” என்று அவள் கேட்க “நீ என்ன நினைக்கிறயோ அத கேளு. அதுதான் எனக்கு வேணும்” என்றான் அழுத்தமாக.
“விக்ரம் சார்லாம் லஞ்ச்க்கு வீட்டுக்கு வராரு. நீங்களும் வரீங்களா. நீங்க வந்தீங்கனா நான் சூடா பண்ணிவெக்கறேன். இந்த கிளைமேட்டுக்கு கூட நல்லா இருக்கும்” என்றாள் தயக்கமாக.
“ஹ்ம்ம் வரேன். நானே இந்தியன் ஃபுட் ஆர்டர் பண்ணி தான் சாப்டுட்டு இருந்தேன். இன்னைலருந்து வந்துடறேன். நான் வரேன்னு சிரம படுத்திக்காத. நீ உனக்கு என்ன செய்வயோ அதேயே செய். ஒகே வா” என்றான்.
சின்னதாக சிரித்தவள் “நான் சாப்பிடறது தான்னா அப்போ பிரேக்ஃபாஸ்ட் தான் சாப்பிடணும் லஞ்ச்க்கும் ஒகே வா?” என்றாள்
“வாட்?” என்றான் சுருங்கிய முகத்துடன்.
“ஐயோ உண்மையா சொல்லிட்டோமோ” என்று நினைத்தவள் “இல்ல, நத்திங்” என்றாள். “அப்படினா இத்தனை நாள் நீ லஞ்ச் செய்யவே இல்லையா?” என்றான் கேள்வியுடன்.
“எனக்கு மட்டும் என்ன சமைச்சிக்கிட்டு ஏதோ ஒன்னு சாப்பிட்டுக்குவேன்” என்றாள் தலைகுனிந்துகொண்டு.
“ஐம் ஸாரி. எனக்கு இது தெரியாது. நான் ஒரு முட்டாள். இதுகூட தெரியாம. ஆல்ரைட். இனிமே நல்லா நிறைய பிரிப்பர் பண்ணு. நம்ம சாப்பிடலாம்” என்றான்.
அவள் தலையசைத்தாள். “அப்பறம் இன்னைக்கு ஆபீஸ்ல ஃபங்க்ஷன் கெட் டுகெதர் மாதிரி. நீயும் வரையா?” என்று கேட்டான். “நான் போய் அங்க வந்து என்ன செய்வேன் நீங்க போய்ட்டு வாங்க” என்று சொல்ல அவன் குறுக்கிட்டு “சரி நான் கம்பெல் பண்ணல. நீ முடிவு பண்ணி சொல்லு” என்றான்.
——-
“ஒழுங்கா பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடு. மதியம் பன்னிரண்டு மணிக்கு வரேன். நம்ம லஞ்ச் சாப்பிடலாம்” என்றான் கிளம்பும்போது “ஹ்ம்ம். டேக் கேர் பை” என்றாள். “யு டூ டேக் கேர். சி யு” என்று புன்னைகைத்துவிட்டு புறப்பட்டான்.
சிறு சிறு வேலைகளை முடித்துவிட்டு அம்மாக்கு போன் பண்ணலாம் என்று லேண்ட்லைன் போன் எடுத்தாள். “யு ஹவ் டூ அன்றெட் வாய்ஸ் மெயில்ஸ் (You have 2 unread voice mails)” என்று மெசேஜ் வந்தது.
“யாராயிருக்கும்” என்று அதை ஓபன் செய்தாள்.
முதல் மெசேஜ்: “ஹே ராம் என் என்னோட கால் எடுக்கமாட்டேங்கற? உன்னோட மொபைல் நம்பர் எவளோ தடவ கால் பண்ணேன் தெரியுமா. ஆனா நோ ரெஸ்பான்ஸ். யு நோ வாட். நா இப்போ 8 Bit ல இருக்கேன்”
“என் இப்டி பண்ற ராம்? நான் எப்படி உன்ன மறக்க முடியும்? உன்னால அதா எப்படி அவளோ ஈசியா சொல்லமுடியுது? உன்ன நான் ரொம்ப மிஸ் பண்றேன். என்ன மறந்துடல? அவளோ ஈசியா என்னால முடியல ராம். ஆனா ரொம்ப ஹாப்பியா இருக்கேன். உன்ன நான் ஃபங்க்ஷன்ல பாப்பேன்னு. என்ன அவாய்ட் பண்ணிடாத ராம். ப்ளீஸ்..”
கண்கலங்கி கேட்ட நந்தினி “8 bit என்றால் என்ன” என்று பார்த்தாள். அது ஒரு பப் (Pub). “அவரை நினச்சு குடிச்சுட்டு இருந்தாங்களா?” பல குழப்பங்களுடன் அழுதுகொண்டே இருந்தாள்.
அப்போதுதான் நினைவுக்கு வந்தது ராம் மதியம் சாப்பிட வரேன் என்று சொன்னது.
“அவரு நடிக்கிற மாதிரி தெரில. உண்மையா இருக்க மாதிரி தான் தெரியுது. பட் அவரை பத்தி என்ன தெரியும் எனக்கு. நடிக்கிறாரா இல்லையானு” குழப்பத்துடன் சமையல் செய்ய ஆரம்பித்தாள்.
——–
காலிங் பெல் அடித்தவுடன் அவள் கதவை திறக்க. சிரித்துக்கொண்டே அவன் உள்ளே வந்தான். வராத சிரிப்பை வரவழைத்து அவளும் சிரித்தாள்.
ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவன் “எவரித்திங் ஒகே?” என்று கேட்டான் அவளைப்பார்த்து.
“ஹ்ம்ம்” என்றாள். “இப்படியே சாப்பிட வரீங்களா இல்ல ரெஃப்பிரேஷ் ஆயிட்டு வரீங்களா?” என்று ஏதோ வேலை செய்துகொண்டே கேட்க “நந்தினி இங்க வா” என்று கூப்பிட்டான்.
“என்னனு சொல்லுங்க” என்றாள். அவன் அவளிடம் சென்று அவளை கூட்டிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தனர்.
“என்ன ஆச்சு? சொல்லு. நோர்மல்லா இருக்க மாதிரி தெரில” என்று கேட்க “ஒன்னும் இல்ல ராம். நீங்க வாங்க சாப்பிடலாம்” என்று எழ அவன் மறுபடியும் அவள் கைகளை இறுக்கமாக பற்றி உட்காரச்சொல்ல
“ஏதோ சரியில்ல. என்னனு சொல்லு?” என்று கேட்டான் அழுத்தமாக. “நீங்க நான் பாவம்னு எனக்காக இதெல்லாம் பண்றீங்களா? இல்ல நான் சந்தோஷமா இருக்கணும்னு பண்றீங்களா?” என்று கேட்டாள்.
ஒன்னும் புரியாமல் “எனக்கு புரியல” என்றான்.
“நீங்க இன்னும் அவங்கள நினைச்சுட்டு இருக்கீங்களா? அப்படினா சொல்லுங்க. நான் உங்க லைஃப்ல இருந்து போய்டறேன்” என்று சொல்ல “வாட்?” என்று புருவம் சுருங்கிக்கொண்டு கேட்டான். அருகில் டேபிள் மேல் இருந்த போனைஎடுத்து வாய்ஸ் மெயில்லை போட்டு காட்டினாள்.
Chapter 22 ::
“சோ இதுனால தான் உனக்கு சந்தேகம் இல்லையா? லெட் மீ க்லேறிஃபய் யு (Let me clarify you). நான் கடைசியா அவளை மீட் பண்ணப்ப அவளை எல்லாத்தையும் மறக்க சொன்னேன்” என்று அன்றைக்கு நடந்ததை நந்தினிக்கு விரிவாக சொன்னான்.
“இப்போ ஒகே? இல்ல நான் இன்னும் அவளை நெனச்சுட்டு உன்கூட பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறயா?” என்று சற்று அழுத்தமாக கேட்டான். அவளிடம் பதில் ஏதும் வரவில்லை.
“ஹ்ம்ம் நீ இன்னும் நம்பலை ரைட்!” அவள் முகம் பார்த்துக்கேட்க, பதில் பேசாமல் தலையைக்குனிந்துகொண்டு இருந்தாள்.
“நான் இதல்லாம் நீ பாவம் அதுனால செய்றேன்னு நினைக்கறல?” என்றவன் கோபத்துடன் வேகமாக படி ஏறி அவன் அறைக்கு சென்று ஒரு சிறிய பெட்டியை எடுத்துவந்தான்.
“இந்தா ஓப்பன் பண்ணு” என்று அவள் அருகில் அதை கோபத்துடன் வைத்துவிட்டு திரும்பி சென்று டைனிங் டேபிளில் சாய்த்து நின்றான்.
எதுவும் பேசாமல் அதை அலட்சியமாக திறந்தாள். உள்ளே இருப்பதை பார்த்தவுடன் அவள் கண்கள் மளமளவென கலங்கின. அவனை பார்த்தாள் அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.
ஓடி சென்று அவனை அணைத்தும் அணைக்காதது போல் அவன் மார்பின் மேல் முகம் புதைத்து “ஐம் சோ ஸாரி ராம்” என்றாள். அவள் தோள்களை அவன் கைகளால் பின் தள்ளியவரே
“இத நான் சிகாகோல Sue கூட இருந்தப்பவே வாங்கினேன். உன்மேல இருக்குற பரிதாபத்துல வாங்கினேன்னு நினைக்கிறயா?” என்றான் அவளை உலுக்கியவாறே.
அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள். “இப்போ நம்பறயா என்ன?” என்றான். ஆம் என்பதுபோல் தலையசைத்தாள் கண்கள் கலங்கியவாறே.
அவன் கைகளால் அவள் முகத்தை தூக்கி “அழாத. இதை நான் சரி பண்றேன். பட் இது மாதிரி இன்னோரு தடவை பேசாத. நீ வேண்டாம்னு நினச்சுருந்தா உன்கிட்ட நல்லா பேசமுடியுமா என்னால? நீ இங்க இருந்து போகணும்னு நினச்சுருந்தா உன்ன இங்க கூப்பிட்டே வந்துருக்கமாட்டேன்.” என்றான்.
அவளால் பேசமுடியவில்லை. கண்கள் கலங்க அவன் மார்போடு சாய்ந்துகொண்டாள்.
அவன் மெதுவாக அவளை கட்டிக்கொண்டான். அந்த அரவணைப்பு அவள் மனதை ஆறுதல் படுத்தியது.
சிறிது வினாடிகள் கழித்து சுதாரித்துக்கொண்ட அவன் “எனக்கு பசிக்குது சாப்பிடலாமா” என்றவுடன் அவசரமாக அவனிடத்தில் இருந்து விலகி “ஓ ஐம் ஸாரி. வாங்க” என்று சாப்பாடு தட்டில் பரிமாறினாள்.
பரிமாறி விட்டு அவளும் அருகில் அமர்ந்தாள். சந்தோஷமாக அவனை பார்த்துக்கொண்டே “தேங்க் யு. இதை நான் எதிர்பார்க்கவே இல்ல” என்றாள்.
“ஹ்ம்ம் இதை நான் அப்பறமா தரலாம்னு இருந்தேன். பரவால்ல” என்றான் சாப்பிட்டுக்கொண்டே.
“சோ இன்னிக்கி வரல்ல.” என்று கேட்க “இல்ல நான் வரல. ஏதோ வேணாம்னு இருக்கு” என்றாள் மனதில் எப்படியும் சுஷீலா வருவாள். எதற்காக அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று.
“ஹ்ம்ம்” என்றான் எதுவும் அதற்கு மேல் பேசாமல். “நீ வராததும் ஒருவகைல நல்லது தான் நந்தினி. Sue வந்து என்கூட பேசினா உனக்கு கஷ்டமா இருக்கும். திரும்ப ஃபீல் பண்ணுவ. ஆனா இதுக்கு இன்னிக்கு ஒரு முடிவு பண்ணிடறேன்” என்று நினைத்துக்கொண்டான்.
“க்ரிஷ் இன்னைக்கு கோவிலுக்கு போறேன்னு சொன்னான். நீ வேணும்னா அவன்கூட போயிடு வாயேன். இங்க தான் இருக்கு பக்கத்துல” என்றான்.
“ஹ்ம்ம்” என்றாள் பதிலுக்கு. சாப்பிட்டு முடித்துவிட்டு சில ஃபார்ம்ஸ் எடுத்து “SSN ஃபிரஸ்ட் அப்ளை பண்ணிடலாம். அப்படியே EAD’யும் அப்ளை பண்ணிடலாம். இதை பத்தி க்ரிஷ் கிட்ட நான் பேசிட்டேன்” என்று அவளிடம் கொடுத்தான்.
அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு டிபேன்டண்ட் விசாவில் சென்றவர்களுக்கு EAD மற்றும் SSN இருக்க வேண்டும்.
“உனக்கு ஃபில் பண்ண முடிஞ்சத ஃபில் பண்ணிவை. மீதியை நைட் பாத்துக்கலாம்” என்றான். ஹ்ம்ம் என்றாள் பதிலுக்கு.
“சரி நான் கிளம்பறேன். ரொம்ப எதையும் யோசிக்காத. அண்ட் சீக்கரம் சாப்பிடு” என்றான் கிளம்பிக்கொண்டே.
“ஒகே” என்றாள் மனதில் மகிழ்ச்சியுடன். அவனால் அதை பார்க்க முடிந்தது.
இருந்தாலும் அந்த வாய்ஸ் மெயில் நினைவிற்கு வந்துகொண்டே இருந்தது. “பை” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். அவள் அவனையே பார்த்தவாறு உள்ளே வந்து அந்த கிப்ட்டை மறுபடியும் பார்த்தாள். மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.
——–
மந்தமான சூரியன் அஸ்தமனத்திற்கு தயாராக, அவனும் தயாரானான் கோவில் செல்வதற்கு.
நல்ல உயரம், குறுந்தாடியடன் ஆஜானுபாவமாய் தெரிந்தான். அந்த பிரைட் ரெட் கலர் ஷர்ட் அவனின் முகப்பளபளப்பை இன்னும் தூக்கலாக காட்டியது. அமெரிக்காவிலே வளர்ந்தவனாயிற்றே.
இந்திய சாயல் இருந்தாலும், அந்த ஊர் காரர்களின் நிறத்துக்கு சளைத்தவனில்லை என்பதுபோல் அவர்களை போலவே இருந்தான். ஆனாலும் சுத்தமான இந்திய ஆண்மகன்.
அவனின் கூரிய கண்கள், அந்த ஆளுமைக்கு மயங்கிய பெண்கள் பலர்.
“வாடா இன்னிக்காவது பாக்க ஒழுங்கா இருக்கியே. இப்போகூட நீ ஷேவ் பண்ணமாட்டியா?” என்றார் பார்வதி.
காதில் விழுதும் விழாமலும் “பாரு மை சுவீட்டி” என்றான் அம்மாவின் கன்னத்தை கிள்ளியவாறே.
“நான் பேசுனா கேக்காதே. கெட் லாஸ்ட்” என்றார் பார்வதி போலியான கோபத்துடன்.
“சரி நாங்க கிளம்பறோம். நைட் எப்போ வருவோம்னு தெரில. டின்னர் சாப்பிடாம இருந்துடாத” என்றார். “உம்ம்ம் ஒகே. ராம் கூப்பிட்டான். நந்தினியை கோவிலுக்கு கூட்டிப்போக சொல்லி..” என்றான்.
“ஏன் அவளை ஃபங்க்ஷன்க்கு கூட்டிட்டு வரலையா அவன்?” என்று கேட்க “அவ வரலன்னு சொல்லிடாபோல. சுஷீலா வருவானு போலன்னு நினைக்கறேன்” என்றான்.
“ஓ கரெக்ட். அவளுக்கு கஷ்டமா இருக்கும்” என்றார் பார்வதி.
“பாரு கிளம்பலாமா?” என்று ஹாலில் இருந்து விக்ரம் கேட்க “கமிங்” என்றார். “சரி நான் கிளம்பறேன். எல்லாம் சரியாயிடும் சொல்லி சமாதான படுத்து அவளை” என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில் விக்ரம் பார்வதி இருவரும் புறப்பட்டனர்.
——
காலிங் பெல் அடித்தவுடன் நந்தினி கதவை திறக்க வெளியே க்ரிஷ் நின்றுகொண்டிருந்தான். “வாங்க க்ரிஷ்” என்று அழைத்தாள்.
“வாவ் கார்ஜியஸ். யு லுக் ப்ரெட்டி டுடே” என்றான். “இதுவேறயா?” என்றாள் பதிலுக்கு சிரித்துக்கொண்டு.
“என்ன உண்மையா சொல்றேன். நீ உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடி இங்க இருந்துருந்தன்னா, நான் உன்ன ப்ரொபோஸ் பண்ணிருப்பேன்” என்றான் புருவத்தை உயர்த்தியவனாய்.
“ஹாஹா நீங்க சொல்றதுக்கு முன்னாடியே, நான் ராமை போர்போஸ் பண்ணிருப்பேன்” என்றாள் புன்னகையுடன். “முடியல. கிளம்பலாமா?” என்றான் சிரித்துக்கொண்டே.
இருவரும் புறப்பட்டனர் கோவிலுக்கு.

Super