Preethi S KarthikShort Story

Ninaivu Nigalvu

நினைவு நிகழ்வு:

#No_Character_Names

“அச்சோ விடுங்க. என்னதிது” என சிணுங்கினாள். “உனக்கு ஹெல்ப் பண்றேன்டி பொண்டாட்டி. தனியா சப்பாத்தி ரெடி பண்றல” அவளின் பின்னால் நெருங்கி நின்று உதவுவது போல் அவன் கைகளை அவள் கைகளுடன் இடித்து சீண்டிக்கொண்டிருந்தான்.

அவன் சீண்டல்களில் அவன் புறம் திரும்பி “இது உதவி இல்ல.. உபத்திரவம்… சமைக்கணுமா… வேண்டாமா??? தள்ளுங்க” அவள் தள்ள, அவனோ கிறக்கத்துடன் “வேணாமே… நான் கேட்டேனா செய்ய சொல்லி” என கைகளில் வாகாக இருந்த அவளை, இன்னும் நெருங்கி அப்படியே இடையுடன் அணைத்துக்கொண்டான்.

அவள் நெளிந்துகொண்டு, “அப்போ சாப்பிட வேணாமா. பசிக்காது? விடுங்க” என கெஞ்சியும் கொஞ்சியும் கேட்க “வேணாம். நீ என்கூட இருக்கப்ப நீ மட்டும் போதும்” அவன் பார்வை அவள் இதழ்களை வருடி கண்களில் நிற்க, அவள் வெட்கத்தோடு பார்க்க,”பார்த்தே கொல்றயே” என்றவன் இன்னும் நெருங்கி அவள் இதழோடு இதழ் பதித்தான்.

முதலில் அதில் லயித்தாலும், சட்டென அவனை தள்ளி “உங்களுக்கு வேணாம். எனக்கு வேணும். பசிக்குது” என்றவுடன் “நீ இரு” என்று அவளை லாவகமாக தூக்கி மேடையில் உட்காரவைத்து அவன் மாவை தேய்த்து சுட ஆரம்பித்தான்.

‘ஆஹ்’ என வாய்திறந்து பார்த்தாள். அவள் கன்னத்தில் செல்லமாக மாவால் கோடிட்டு “கேம்ப்ல அவசரத்துக்கு செஞ்சு பழக்கம்” என்றான் அவளின் ஆச்சர்யத்தை பார்த்து கண்ணடித்து.

அவன் செய்து, தட்டில் போட்டு அவளின் பக்கத்தில் மேடையில் சாய்ந்து நின்றுகொள்ள, அவள் ஒற்றைக்கைக்கொண்டு அவன் இடை சுற்றி அணைத்துக்கொண்டாள். அவளுக்கு ஊட்டிக்கொண்டு அவனும் சாப்பிட,

“கேப்டன்” என்ற அழைப்பில் நிகழ்விற்கு வந்தான். கைகளில் சப்பாத்தி அல்ல; சுட்ட ரொட்டி. இடையில் சுற்றியிருந்தது அவளின் கை அல்ல; தோட்டாக்கள் ஏந்திய துப்பாக்கி பெல்ட். அது சமையலறை அல்ல; ராணுவ கூடாரம். அழைத்தவனிடம் ஏதோ சொல்லி அனுப்பி, மனதில் “லவ் யு பொண்டாட்டி. சீக்கரம் வரேன் உன்னை பார்க்க. பாப்பேன்னு நம்பறேன்” என்றான் சிறிய புன்னகையுடன்.

அவள் டிவி பார்க்க, அனைத்து செய்தி சேனல்களிலும் ஒரே செய்தி. “கடந்த ஒரு வாரமாக எல்லையில் பதட்டம். ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் எதிரியின் கூடாரம் அழிக்கப்பட்டது. நமது ராணுவத்தில் இருவர் நிலைமை பற்றி தகவல் தெரியவில்லை”

அதையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் நினைவுகளில் மனம் பாரமாக, சமயலறைக்கு சென்றால் அங்கேயும் அவன் ஞாபகம். பசி எடுக்கவில்லை, ஆனால் அவனிடம் கொடுத்த வாக்குறுதிக்காக சமைக்க ஆரம்பித்தாள். மனது அவனுக்காக வார்த்தைகளை கோர்க்க ஆரம்பித்தது.

நான் இங்கே பிடிக்கிறேன் கரண்டியை வீட்டின் சமையலுக்கு… நீ அங்கே பிடிப்பாய் துப்பாக்கியை நாட்டின் நலனுக்கு… காத்திருக்கிறேன் உன் வரவுக்கு… வருவாய் என்ற நம்பிக்கையுடன்…! கண்கள் நிறைய காதலுடன்…! மனது முழுக்க உன் நினைவுடன்…!

சில மாதங்கள் கழித்து அதே சமையலறை… அவள் அருகில் அவளின் அவன்… அதே நெருக்கம்… இது கனவா?! நினைவா?! நிகழ்வா?!

12 thoughts on “Ninaivu Nigalvu

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved