Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

thaniperum thunaiye 13

தனிப்பெரும் துணையே – 13

ப்ரியா விண்ணப்பித்தால் தானே… IIT மெட்ராஸிற்கு விண்ணப்பிக்கவே இல்லை. அவள் தேர்வுசெய்தது பாம்பே மற்றும் புனே மட்டுமே. கண்டிப்பாக இந்த கேள்வி எழும் என்று தெரியும் அவளுக்கு.

பெரும்பாலும் மும்பையில் கிடைத்தால் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும், மெட்ராஸில் கிடைத்தால் மும்பையிலும் கிடைக்கும். ஆனால் ப்ரியா தேர்வு செய்த பிரிவு, IIT மெட்ராஸில் பிரபலமான மற்றும் மிகச்சிறந்த பிரிவு. நிறைய விண்ணப்பங்கள் குவியும் அந்த பிரிவுக்கு. அது அவளுக்கு சாதகமாக அமைந்தது.

“என்னோட கட் ஆஃப் இந்த கோர்ஸ்’க்கு பத்தலண்ணா, அடுத்து நல்ல காலேஜ் பாம்பே தான். அது கூட கிடைக்குமான்னு தெரியல. செகண்ட் ரவுண்ட், அப்புறம் டைரக்ட் இன்டெர்வியூ கூட இருக்கும்” என்றாள்.

அகிலன் அவள் பேசுவதையே பார்த்தான். பின் புன்னகைத்துக்கொண்டே தலையசைத்தான்.

ப்ரியா திடமாக நம்பினாள் அகிலனுக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை என்று. செழியன் இன்னமும் அதானி குரூப்ஸ்’ஸில் வேலைப்பார்க்கிறான். அதுவும் மும்பையில் இருந்து பல மையில் தூரம் தள்ளி வேலைப்பார்க்கிறான். அதனால் அந்த கோணத்தில் அகிலன் யோசிக்க வாய்ப்பில்லை என நம்பினாள்.

ஆனால் அப்போது அவள் அறியாதது… அகிலனுக்கு ப்ரியாவின் மேல், ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது என்று.

கவிதாவின் வளைகாப்பு அன்று, அவர்கள் அறையில் கவிதாவிற்கு அவன் வளையல் அணிவித்த பின், கீழ் அறையில் மறந்துவைத்துவிட்டு வந்த மொபைலை எடுப்பதற்கு அறையில் இருந்து வெளிவந்தபோது, ப்ரியாவும் செழியனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நின்றிந்த இடத்தில் இருந்து அகிலனை பார்க்க முடியாது, ஆனால் அகிலனால் பார்க்க முடிந்தது. அதை பார்த்த பின், சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என விட்டு விட்டான்.

அடுத்து, புனே இண்டஸ்ட்ரியல் விசிட் என்றபோது கூட சந்தேகம் வரவில்லை. ஆனால் அவுரங்காபாத் மற்றும் மும்பையில் சுற்றுலா என்றபோது ஏதோ பொறி தட்டியது. அதனால் தான் கல்லூரியில் ஏற்பாடு செய்ததா என கேட்டான்.

இருந்தும் மனதில் தோன்றிய இன்னொரு விஷயம்…

தானாக தங்கையிடம் வெளிப்படையாக கேட்டு, அப்படி ஒன்றும் இல்லாதபட்சத்தில், அவளை சந்தேகப்பட்டதாக நினைத்துக்கொள்வாள். எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என நினைத்தான்.

ஒருவேளை அப்படியே ப்ரியாவிற்கு செழியனை பிடித்திருந்தாலும் அதில் தவறில்லை. கவிதாவின் தம்பி, ஒழுக்கமுடையவன், நல்லவன். நல்ல வேலையில் உள்ளான் என நினைத்தான். இதுகுறித்து தன் மனைவி கவிதாவிடம் கூட பேசியுள்ளான்.

மேலும் ப்ரியாவின் மீதும் செழியனின் மீதும் நம்பிக்கை இன்னமும் அதிகம். தவறாக எதுவும் செய்யமாட்டார்கள் என நிச்சயமாக நம்பினான்.

ப்ரியாவிற்கு மேல் படிப்பு படிக்க ஆசை என்று அவனுக்கும் தெரியும். ஆனால் அதற்கு இவ்வளவு சிரத்தை எடுப்பாள் என அவன் நினைக்கவில்லை.

அவளை இப்போது பார்க்க, மிகவும் மெலிந்து, கண்களை சுற்றி கருவளையம் என இருந்தாள். காரணத்தை கேட்டபோது வேலைப்பளு என்றாள்.

இவ்வளவு கஷ்டப்பட்டது செழியனுக்காக என்றால் கண்டிப்பாக தடையாக இருக்கக்கூடாது எனவும் நினைத்துக்கொண்டான்.

ஆனால் அகிலன் அறியாதது… செழியன் மும்பையில் தான் இருக்கிறான். அங்குதான் படிக்கிறான். வேலையில் இல்லை என்பது.

“அம்மா அப்பா கிட்ட பேசறயாண்ணா… ப்ளீஸ். உனக்கே தெரியும் ஹையர் ஸ்டடீஸ் படிக்கணும்ங்கறது என் ஆசைன்னு” கெஞ்சும் தொனியில் அவள் கேட்டவுடன், தன்னிலைக்கு வந்த அகிலன்… “பேசறேன் டா. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ போய் தூங்கு காலைல பேசுவோம்” என்றான்.

ப்ரியாவும் புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டாள். ஆவலுடனும், கொஞ்சம் பயத்துடனும் காத்திருந்தாள்.

அடுத்தநாள் காலை, அகிலன் பேச்சை ஆரம்பித்தான்.

“என்னது படிக்கணுமா? அதுவும் எதுக்கு மும்பைலாம்” லட்சுமி மறுக்க, ஜெயராமன்… “லச்சு, படிக்கறதுல என்ன தப்பு? எவ்ளோ பேர் இதுபோல காலேஜ்லாம் கிடைக்கலன்னு இருக்காங்க தெரியுமா? நம்ம பொண்ணுகிட்ட திறமை இருக்கு அது வெளிவரனும்” என்றார்.

ஜெயராமன் எப்போதும் பெண்கள் தனியாக நின்று, யாரையும் சாராது, வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என நினைப்பவர். கவிதாவுக்காக நிறைய மனைவியிடம் பேசியுள்ளார். இப்போது பெண்ணிற்காக.

லட்சுமி, “அதெல்லாம் சரி. மும்பை ஏன் போகணும். இன்னும் ரெண்டு வருஷம்? அப்போ கல்யாணம் ரெண்டு வருஷம் கழிச்சு…” என்றதும்… “அத்த அவ சின்ன பொண்ணு? இப்போவே கல்யாணமா?” என்றாள் கவிதா.

“இப்போவே இல்ல கவிதா. ஆனா இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பேசறதா தானே முடிவு பண்ணோம். இப்போ ரெண்டு வருஷம் ஆகுமே. நான் மொதல்ல இவ ஜாகதகத்தை ஜோசியர் கிட்ட காட்டறேன்” என்றார்.

ஜாதகம் ஜோசியம் கல்யாணம் என்றதும் ப்ரியா முகம் வாட, அதை பார்த்த அகிலன்… “அம்மா. அவளைப்பாருங்க. இதுக்காக எவ்ளோ கஷ்ட பட்டுருக்கான்னு. படிக்கட்டும் மா. இப்போ தேவையில்லாம ஜோசியம் எல்லாம் வேணாமே ப்ளீஸ் ” என்றான்.

“ஜாதகம் மட்டும் தானே பார்க்க போறேன் அகில். உடனே கல்யாணம் பண்ணனும்னா சொல்றேன்” லட்சுமி சொன்னதும்…

“அகில் சொல்றது கரெக்ட் லச்சு. எல்லாம் கொஞ்ச நாள் போகட்டும். இப்போ ஏதாவது பார்த்து, அதுல ஏதாவது அவங்க சொல்லி, தேவ இல்லாத பிரச்சனை. அவ தலைல என்ன எழுதிருக்கோ அது தான் நடக்கும். படிக்கணும்ன்னு இருந்தா படிக்கட்டும். ரெண்டு வருஷம் கழிச்சுனாலும், பெருசா வயசாயிடாதே. விடுமா படிக்கட்டும்” ஜெயராமன் சொன்னதும், லட்சுமி அரை மனதாக தலையசைத்தார்.

“தேங்க்ஸ் ண்ணா” தன் அண்ணனை கட்டிக்கொண்டு நன்றி சொன்னாள் ப்ரியா.

“நான் பேசினதை விட, அப்பா தான் செம்ம சப்போர்ட்” என்றான் அகிலன்.

தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் உட்கார்ந்த ப்ரியா, “தேங்க்ஸ் ப்பா. கண்டிப்பா நல்லா படிப்பேன் நானு” என்றதும்… “அது எனக்கு தெரியாதா ப்ரியா… கொஞ்ச நாள்ல இவ்ளோ எஃபோர்ட் போட்ருக்கயே. நல்லா படிடா” என்றார்.

பின் தன் மனைவி ஊரென்று உட்கார்ந்திருப்பதை பார்த்து, ப்ரியாவிடம் கண்ஜாடைக்காட்ட… அவள் அம்மா மேல் சாய்ந்துகொண்டு… “அம்மா ரெண்டு வருஷம் தான் மா. ப்ளீஸ்… ப்ளீஸ் மா” என கெஞ்ச, அவரும் புன்னகையுடன் சரி என்றார்.

“அண்ணி” என சொல்லிக்கொண்டே கவிதாவிடம் வந்த ப்ரியா… “தேங்க்ஸ் அண்ணி அம்மாகிட்ட பேசினதுக்கு. எப்படியோ எல்லாரும் ஒகே சொல்லியாச்சு. இப்போ குடுங்க அந்த பூஸ்ட்’ட” என மேடையில் உட்கார்ந்தபடி கேட்டாள் ப்ரியா.

அவளுக்கு குடிக்க கொடுத்த கவிதா… “எப்போ நெஸ்ட் ரவுண்ட் ப்ரியா” என கேட்டாள்.

“கமிங் மண்டே அண்ணி” என்றதும் அங்கே வந்த அகிலன்… “சரி டா அப்போ ஃபிலைட் டிக்கெட் போட்டுடறேன். நானும் கூட போய்ட்டு வந்துடறேன் பேபி” என்று கவிதாவை பார்த்து அகிலன் சொன்னதும், ப்ரியா திருதிருவென முழித்தாள். கவிதா அகிலன் இருவரும் அவளுக்கு தெரியாமல் புன்னகைத்துக்கொண்டனர்.

“அண்ணா. இப்போ வெறும் ரிட்டன் டெஸ்ட், இன்டெர்வியூ தான்… மேக்ஸிமம் ஃபோர் டு சிக்ஸ் அவர்ஸ். நான் காலைல போய்ட்டு நைட்’குள்ள வந்துடறேன். ஃபிலைட் தானே. சீட் கிடைச்சா, சேர போகும்போது நீங்க வந்து விடுங்க” என்றாள் கெஞ்சலாக.

அகிலன் புன்னகைத்துக்கொண்டே… “சரி டா. பார்த்து போய்ட்டு வா. எல்லாம் நல்லபடியா பாசிட்டிவ்’வா நடக்கும்” என்றான்.

ப்ரியாவும் புன்னகைத்துக்கொண்டே சரி என்றாள்.

கிளம்பும் நாளும் வந்தது. செழியனுக்கு தெரியாமல் மும்பை வந்திறங்கினாள் ப்ரியா. பின், ஏர்போர்ட்’டில் இருந்து IIT இருக்கும் பவய் வந்தடைந்தபின், செழியனுக்கு அழைத்தாள்.

“எங்க இருக்க” அவள் கேட்க… “காலேஜ்குள்ள என்டர் ஆகறேன். என்ன ரொம்ப நாள் கழிச்சு திடீர்னு கால் பண்ணிருக்க” செழியன் கேட்டான்.

“ஹ்ம்ம். நான் லேக் சைட் கேட் கிட்ட இருக்கேன்” என்றதும், அந்தப்பக்கம் சத்தம் இல்லை. அவன் கண்டிப்பாக ஷாக் ஆகியிருப்பான் என புரிந்தது அவளுக்கு.

அவள் அடுத்து பேசும்முன், காதில் இருந்து போனை இறக்கியபடி, என்ன என்று முகத்தில் கண்டுகொள்ள முடியாத உணர்வுடன் அவள் பக்கவாட்டில் வந்துகொண்டிருந்தான் செழியன்.

அவனை பார்த்ததும், மறுபடியும் இதயம் தடதடக்க ஆரம்பித்தது அவளுக்கு.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved