Thaniperum thunaiye – 18
தனிப்பெரும் துணையே – 18
“என்ன இளா? இந்த டைம்’ல” ‘எதற்கு வந்திருக்கிறான்’ என்று தெரியும் இருந்தும் கேட்டாள்.
அவன் கொஞ்சம் யோசித்து பின், “இன்னைக்கு தானே உன் பர்த்டே” தயங்கி யோசனையுடன் கேட்க, புன்னகையுடன் தலையசைத்தாள் ப்ரியா.
“அப்பா அஃபிஷியல் பர்பஸ்’க்கு குடுத்த date’டா இருக்குமோன்னு நினச்சுட்டேன். ஹாப்பி பர்த்டே” என்றான் முகம் மலர.
“தேங்க் யு. பட் உனக்கு எப்படி தெரியும்?” இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி பேச ஆரம்பித்தனர்.
“உன் ID கார்ட் உன்கிட்ட இருந்ததைவிட என்கிட்ட தானே அதிகம் இருந்துருக்கு” புன்னகையுடன் அவன் சொன்னதும் அவள் முகத்தில் இன்னமும் புன்னகை அதிகமானது.
அவளுக்கு பிடிக்காத ஒன்று எந்நேரமும் கழுத்தில் அணிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லும் ID கார்ட். சென்னையில் படிக்கும்போது அணிந்ததில்லை. வேலைக்கு சென்றபோது கேட்கவே வேண்டாம். ஆனால் இன்னொரு வழக்கம் உண்டு. கழுத்தில் போடாமல் கையிலேயே வைத்துக்கொண்டு மறந்து எங்கேயாவது விட்டுவிடுவாள்.
இங்கு வந்ததும், செழியனுடன் இருக்கும்போதெல்லாம், அதை அவனிடம் கொடுத்துவிடுவாள் பத்திரமாக இருக்க வேண்டுமென.
“இதெல்லாம் போங்கு. உன் ID கார்ட் குடு… உன் பர்த்டே நானும் பார்க்கணும்” என அவள் பிடுங்கி அதை பார்க்க, நிறைந்த ஏமாற்றம். முடிந்து இரண்டு மாதம் கடந்திருக்கும்.
“ஏன் நீ சொல்லவே இல்ல?” அவனிடம் கோபப்பட, “நான் ஒருவேளை இன்னைக்கு விஷ் பண்ணலைன்னா, நீயா சொல்லிருப்பயா உன் பர்த்டே’ன்னு?” அவன் பதில் கேள்வி கேட்டவுடன், ‘சொல்லியிருக்க மாட்டேன்’ என்பதுபோல தலையசைத்தாள்.
“அது போல தான் நானும் சொல்லல. மோர்ரோவர் இட்ஸ் நாட் சோ இம்பார்ட்டண்ட்” என்றான் கொஞ்சம் வேறு தொனியில்.
‘நாம விஷ் பண்ணலன்னு வருத்தப்படறானோ’ என அவள் நினைக்கையில், “இந்தா” என ஒரு டப்பாவை நீட்டினான். புன்னகையுடன் ‘என்ன இது’ என்பதுபோல வாங்கி திறந்தாள். உள்ளே ஸ்வீட்.
“நீ செஞ்சதா?” கிட்டத்தட்ட அதிர்ச்சியுடன் அவள் கேட்க, அவன் ஆம் என தலையசைத்தான். “பெர்ஃபெக்ட் கேரட் ஹல்வா. வாவ். டேஸ்ட்டி. எப்படி?” ஆச்சர்யத்துடன் சுவைத்துக்கொண்டே கேட்டாள்.
“மூணு failed அடெம்ப்ட். அப்புறம் தான் வந்துச்சு” என்றவுடன், ப்ரியாவின் சந்தோசத்திற்கு அளவே இல்லை.
சரியாக அந்த நேரம் அகிலன் அழைத்தான் ப்ரியாவிற்கு.
“ஹலோ சொல்லுடா ண்ணா” முகத்தில் பிரகாசம் இன்னமும் அதிகமானது.
அகிலன் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவுடன், “தேங்க்ஸ் ண்ணா. சும்மா விஷ் மட்டும் பண்ணாத. நான் வர்றப்ப என்னை பலமா கவனிக்கணும்” குறும்பாக பேசினாள். செழியன் முகம் கொஞ்சம் புன்னகைத்தது.
“ஆமாம்டா ண்ணா. ஃபிரண்ட்ஸ் கூட தான் செலிப்ரேஷன்” செழியனை பார்த்து புன்னகைத்தாள்.
“ஆன் குடுண்ணா. ஹாய் அண்ணி” என்றதும் செழியன் சட்டென நிமிர்ந்து பார்த்தான். ப்ரியா புன்னகையுடன்… “தேங்க்ஸ் அண்ணி. அண்ணன்ட்ட சொன்னதுதான். நான் வர்றப்ப ரெண்டு பெரும் பெரிய பர்த்டே சர்ப்ரைஸ் தரணும். பெருசா….” கண்கள் அகல புன்னகையுடன் கேட்டாள்.
செழியன் முகம் கொஞ்சம் வாடியது. ஏன் என புரியவில்லை ப்ரியாவிற்கு. அகிலன் கவிதாவிடம் பேசிவிட்டு போனை வைத்தவுடன், ‘என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே. இரு உன்ன வழிக்கு கொண்டுவரேன்’ என நினைத்தபடி, இனிப்பை சாப்பிடும்போது, திடீரென…
“என்னை என்ன தீனி பண்டாரம்னு நெனச்சுட்டயா? பர்த்டே’க்கு இதை குடுத்து எஸ்கேப் ஆகலாம்னு பார்க்கறயா?” கண்களை உருட்டியபடி முறைத்தாள் ப்ரியா.
அதை கேட்டவுடன் நன்றாக சிரித்தான் செழியன். “இத கேட்க வேற வேணுமா? இங்க இருக்க பாணி பூரி கடைல இருந்து எல்லா கடக்காரனுக்கும் உன்ன தெரியுமே” என அவன் சிரிக்க… அவள் இன்னமும் முறைத்தாள் ஆனால் விளையாட்டாக.
அவன் சிரித்துக்கொண்டே… ” உன்னோட ஹிந்தி அப்படி. இந்தா” என அவன் எடுத்துவந்த பையை நீட்டினான். அவள் முறைத்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டாள்.
உள்ளே இருப்பதை பார்த்தவுடன், கைகள் தானாக வாயை மூடியது ஆச்சர்யத்தில்… அதிர்ச்சியில்.
அதனுள் Graphic Tablet இருந்தது. 3D அனிமேஷன் மற்றும் கேமிங்’கிற்கு பயன்படும் உயர் ரக, விலை உயர்ந்த சாதனம்.
ப்ரியா நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ப்ராஜெக்ட் Animation with Artificial Intelligence and Deep Learning மையமாக வைத்து ஒரு டூல் உருவாக்க வேண்டும் என்பது.
அதற்கு முதலில் High end graphic display tablet வேண்டும். வீட்டில் பேசி சீக்கிரம் வாங்க வேண்டும். இறுதியாண்டு ப்ராஜெக்ட்’க்கு இப்போதிருந்தே தயார் ஆக வேண்டும் என்று நிறைய ‘வேண்டுமை’ பற்றி கொஞ்ச நாட்களாக சொல்லிக்கொண்டிருந்தாள் செழியனிடம்.
ஆனால் அவனிடம் இருந்து வாங்கவேண்டும் என நினைத்து ஒரு நாளும் பேசியதில்லை. அவனிடம் பகிரவேண்டும் என்று நினைத்தே பேசினாள். ஒன்று, ஸ்டுடென்ட்ஸ் ப்ராஜெக்ட் டாக்குமெண்டேஷன் வேலை எடுத்து செய்து பணம் கொஞ்சம் பார்க்கலாம், இல்லையேல் வீட்டில் கேட்கலாம் என நினைத்தாள்.
இப்போது அதை பார்த்ததும், “என்ன இளா இது?” கண்கள் கலங்கிவிட்டது ப்ரியாவிற்கு.
அவள் எதிரில் உட்கார்ந்திருந்தவன் அவள் கண்கள் கலங்கியவுடன் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து, “ஹே என்ன ஆச்சு இசை. பர்த்டே அன்னைக்கு குடுக்கற கிஃப்ட் யூஸ்ஃபுல்’லா இருக்கணும் தோணுச்சு”
‘இசை’ என்று அவன் அழைத்ததெல்லாம் அவளுக்கு பதியவில்லை. “அதுக்குன்னு? உனக்கு வர்ற ஸ்டைபெண்ட் ஆல்ரெடி உன் செலவுக்கே கரெக்ட்’ஆஹ் இருக்கும். அதுல இது எப்படி? EMI யா?” கிட்டத்தட்ட சிவந்த கண்களுடன் அவள் பார்த்தாள்.
“ஹுஹும்ம். இல்ல. லாஸ்ட் வீக் ப்ரைவேட் காலேஜ் BTech ஸ்டுடென்ட்ஸ்’க்கு ஒரு ப்ராஜெக்ட் செஞ்சு குடுத்தேன். நாலு நாள்’ல வேணும். கொஞ்சம் அர்ஜென்ட்’ன்னு சொன்னாங்க. அதுனால ப்ராஜெக்ட் காஸ்ட்’டும் அதிகம். 35K” என்றான்.
அவளிடம் சரியாய் போன வாரம் அவன் பேசவில்லை. கேட்டதற்கு டிபார்ட்மென்ட்’டில் கொஞ்சம் வேலை என்றான். ஆனால் இதற்கு தான் என்று இப்போது புரிந்தது அவளுக்கு.
ஆக, இருக்கும் வேலையுடன், படிப்பு… அது இல்லாமல் இது கூடுதல் வேலை. முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ப்ராஜெக்ட் என்றால், அதற்கான வேலை கண்டிப்பாக அதிகமாக இருக்கும். இரவு பகல் பார்க்காமல் நாள் முழுவதும் வேலை பார்க்க வேண்டும். அழுகை இன்னமும் முட்டிக்கொண்டு வந்தது ப்ரியாவிற்கு.
அவள் கண்கள் கலங்குவதை தவிப்போடு அவன் பார்த்தான்.
“இருக்க டென்ஷன் பத்தாதுன்னு எக்ஸ்ட்ரா வேல உனக்கு இளா. நான் வாங்கணும்னு சொன்னேன், பட் வீட்ல கேட்கலாம்னு தான் இருந்தேன்” என்றவுடன்… “ஓ” என நிறுத்தி கண்களை மூடித் திறந்தான் செழியன்.
பின், “சரி. உன் வீட்ல வாங்கித்தர்ற வர இதை யூஸ் பண்ணு. இது எப்போ தேவைப்படாதோ, ரீஸேல் பண்ணிடு. உங்க டிபார்ட்மென்ட்’லயே வாங்க ரெடி’யா இருப்பாங்க” என்றான் மறுபக்கம் திரும்பிக்கொண்டு.
அவன் பேச்சிலேயே ஏமாற்றம் தெரிந்தது அவளுக்கு. ஆசையாக வாங்கித்தந்ததை இப்படி விவாதப்பொருளாக மாற்றக்கூடாது என நினைத்து, கண்களை துடைத்துக்கொண்டு…
“நான் ஏன் ரிஸேல் பண்ணனும்? இன்னைக்கு நைட்’டே ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணிடுவேன். வீட்ல வேற ஏதாச்சும் ஆட்டைய போட்டுக்கலாம்” அவள் சொன்னவுடன், அவன் முகத்தில் புன்னகை வந்தது.
திரும்பி அவளை பார்த்தான். அப்படியே அவனை அணைத்துக்கொண்டு நன்றி கூற வேண்டும் என்று தோன்றியது. இருப்பினும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, அவள் “தேங்க்ஸ்” என்றவுடன், “தேங்க்ஸ் சொன்னது போதும். ரிட்டர்ன் கிஃபிட் குடு” என்றான் அழகாக புன்னகைத்து.
“ஹ்ம்ம். ஒரு டென் மினிட்ஸ். நீ போய் ப்ளாக் டீ வாங்கிட்டு வா” கண்கள் மின்ன அவள் சொன்னவுடன், புருவங்கள் முடிச்சிட்டு அதே புன்னகையுடன் சென்றான்.
அவள் மொபைலில் ஏதோ செய்துகொண்டிருந்தாள். அவன் வாங்கி வந்தவுடன், இன்னும் கொஞ்ச நேரம் என கேட்டு, டீ குடித்துக்கொண்டே செய்ய நினைத்ததை செய்து முடித்து, அவன் பக்கம் போனை காட்டினாள்.
அதில் அவன்… ஆனால் கார்ட்டூன் வரைபடம் போல. திரையில் தெரிந்த செழியன், பல வித பாவனைகளை காட்டிக்கொண்டிருந்தான். செழியனுக்கு ஆச்சர்யம், ஆனந்தம் என கண்கள் விரிய அதைப்பார்த்தான்.
“இதெல்லாம் நீ நெஜத்துல பண்ணமாட்ட. பட் இந்த இளா பாரு… பின்றான்” ப்ரியா சொன்னவுடன், அவளை ஒரு நொடி பார்த்து பின், புன்னகையுடன் “இவ்ளோ ஷார்ட் டைம்’ல. வாவ். லவ்லி” மனமார பாராட்டினான்.
“தேங்க்ஸ். இப்போ நான் இந்த tab மேல எடுத்துட்டு போனா, அவங்களுக்கெல்லாம் பொகயுமே” பாவமாக அவள் சொல்ல, “யாரு உன் ரூம்மேட் காயத்ரி’யா?” செழியன் கேட்டான்.
டீயை குடித்துமுடித்த ப்ரியா… “ப்ச் இல்ல. அவ HSS (Humanities and Social Sciences). என் டிபார்ட்மென்ட்’லாம் வேற வேற ரூம்” என்றாள்.
“ஓ. அவங்கள கண்டுக்காத. இப்போ டீ குடிச்சா, தூக்கம் வராதே உனக்கு…” ஏதோ நல்ல மனநிலையில் இருப்பான் போலும். கொஞ்சம் அதிகமாகவே பேசினான். ப்ரியா புன்னகையுடன் “ஹ்ம்ம் வராது. எப்படி வரும்?” என்றாள் இரட்டை பொருள் கொண்டு.
அவன் புரியாமல் பார்க்க… ‘நீ பண்ணின வேலைக்கு நைட் ஃபுல்’லா நான் டூயட் பாடவே கரெக்ட்’டா இருக்குமே’ என்று மனம் நினைத்தாலும், “இன்னைக்கு ஃபுல் நைட் இத எக்ஸ்ப்லோர் பண்ணணுமே” என்றாள் tab’பை காட்டி.
“ரொம்ப நேரம் முழிச்சிருக்காத. காலைல தலைவலியா இருக்கும்” கண்களில் கனிவுடன் காதலும் தெரிந்ததோ அவனிடம்? அவளுக்குத் தெரிந்தது!
“அத நீ சொல்லாத. போன வாரம் தூங்கியிருக்கவே மாட்டையே. அப்போ தலைவலியோட தான் சுத்தின. இல்ல?” அவள் கேட்டதும், அவன் டேபிளை பார்த்து புன்னகைத்தான்.
“இனி இதுபோல வேலை எல்லாம் எடுத்து ஸ்ட்ரைன் பண்ணிக்காத இளா ப்ளீஸ்” அவள் கண்கள் கூட கெஞ்ச, சரி என்று தலையசைத்தான்.
ஒரு சில நிமிடங்களில் அவன் புறப்பட்டுவிட்டான். ப்ரியாவிற்குத் தான் இருப்புக்கொள்ளவில்லை. கனவில் கூட அவள் நினைக்காத ஒன்று செழியன் இதுபோல வாங்கித்தருவான் என்று.
அன்றைய இரவே உட்கார்ந்தாள் டூயட் பாட. ஆனால் கனவில் இல்லை. அவன் வாங்கித்தந்த tab’பில்… அனிமேஷனில்!
