Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-22

தனிப்பெரும் துணையே – 22

இரவு முழுவதும் மதியை எழுப்பி சோர்ந்துபோய், அவரின் பக்கத்திலேயே உறங்கிவிட்டான் செழியன்.

கவிதா துளியும் உரங்கமால், யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மூலையிலே உட்கார்ந்திருந்தாள் அம்மாவை பார்த்தவண்ணம் இரவு முழுவதும். கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.

அடுத்த நாள் செழியனின் பிறந்தநாள். அதிகாலை வேலையில், மதியின் உடல் தகனம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது.

செழியன் ஒரே மகன் என்பதால், ஸ்வாமிநாதனுடன் அவனையும் அழைத்துச்சென்றனர். செழியனுக்கு ஒன்றும் புரியவில்லை.

உடல் மேல் தகனம் செய்வதற்கு பொருட்களை வைக்க, பதறி ஓடிச்சென்று முதலில் தட்டிவிட்டான். அவனை வலுக்கட்டாயமாக அவன் சித்தப்பா விஷ்வநாதன் பற்றிக்கொண்டார்.

அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை தாயின் உடலில் தீமூட்டப்பட்டபோது. கத்தி அழுதான் வேண்டாம் என. திமிறிச்சென்றான் எரியும் உடல் பக்கத்தில்.

அனைத்து சடங்குகளும் முடிந்து வீடு திரும்ப, இப்போது செழியனும் கவிதவைப்போல செயலற்றிருந்தான். யாருடனும் பேசவில்லை.

இருவருக்கும் உணவு கொடுக்க மிகவும் சிரமப்பட்டார் மங்களம்.

ஓரிரு நாட்கள் சென்றவுடன் இப்படித்தான் இனி வாழவேண்டும்… எதுவும் மாறப்போவதில்லை. அம்மா வரப்போவதே இல்லை என்று செழியன் புரிந்துகொண்டான்.

காரியம் அனைத்தும் முடிந்த பின், செழியனும் கவிதாவும் பள்ளிக்குப் போக ஆரம்பித்தனர்.

ஒருநாள் மாலை பள்ளியில் இருந்து திரும்பிய இருவரும், சித்தியின் வீட்டிற்கு சென்று மாலை உணவை சாப்பிட்டுவிட்டு, படிக்க உட்கார்ந்தனர்.

கவிதா ஏதோ யோசனையுடனே இருக்க… “என்னக்கா ஆச்சு” என கேட்டான் செழியன்.

“செழியா… நமக்கு புது சித்தி வந்துடுவாங்களா டா? என் ஃபிரண்ட்ஸ் சொல்றாங்க, அப்பா புது சித்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்களாம். அவங்க அம்மா போட்டோவை தூக்கி மேல போட்டுவாங்களாம். நம்மள திட்டுவாங்களாம்… அடிப்பாங்களாம். ஹாஸ்டல் கூட அனுப்பிடுவாங்களாம்” என்றாள் கவலையுடன்.

“அப்படியெல்லாம் இருக்காது கா. நம்ம நைட் அப்பாட்ட பேசலாம்” என்றான் செழியன்.

அன்றைய இரவு… செழியன் அவன் எழுதிய டைரியை அப்பாவிடம் காட்டிவிட்டு, அவரின் ஒருபக்கம் கவிதாவும், இன்னொரு பக்கம் அவனும் படுத்திருக்க…  கவிதா ‘கேள்’ என்பதுபோல தம்பியிடம் செய்கையில் சொன்னாள்.

அவனும் ஆரம்பித்தான். “அப்பா… நம்ம வீட்டுக்கு புது சித்தி வந்துடுவாங்களா பா?” என்றதும் அதிர்ந்து ஸ்வாமி அவனைப்பார்த்தார்.

“அக்கா ஃபிரண்ட்ஸ்’லாம் சொன்னாங்களாம்… புது சித்தி அம்மா போட்டோவை எடுத்துடுவாங்கன்னு. அவங்ககிட்ட அத மட்டும் எடுக்க வேணாம்னு சொல்றீங்களா? அக்கா பாவம் பா. ரொம்ப பயப்படறா. என்னை அடிச்சா கூட பரவால்ல. நான் வாங்கிக்கறேன்” என்றான் தந்தையை பார்த்து.

ஸ்வாமிநாதனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

விட்டதைப் பார்த்தவாறு… “நம்ம வீட்டுக்கு யாரும் வரமாட்டாங்க டா செழியா. கவி… நீ பயப்படாத டா. அப்பா யாரையும் கூட்டிட்டு வரமாட்டேன். எனக்கு நீங்க போதும். உங்களை நல்லா படிக்கவைக்கணும் அது தான் அப்பாக்கு இப்போ முக்கியம். இதெல்லாம் யோசிச்சு நீங்க படிப்பை விட்டுடாதீங்க. அம்மா என்ன சொல்லிருக்கா… படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு இல்லையா. அத மறந்துடாதீங்க” என்றார் இருவரின் தலையை கோதியவண்ணம்.

இப்போதுதான் இருவருக்கும் நிம்மதி வந்தது. புது சித்தி வரமாட்டார்கள் என்று அப்பாவே சொல்லிவிட்டார் என.

இப்படியாக ஒரு சில நாட்களை நகர்ந்தது. மாலை நேரம் சித்தப்பா வீட்டுக்கு இருவரும் சென்றுவிடுவார்கள். ஸ்வாமிநாதன் வேலை முடித்து இரவு வந்து அழைத்துச்செல்வார்.

அப்படி ஒருநாள் அழைக்க வந்தபோது அங்கே ‘மதி முன்னமே சொன்ன’ வேலு அவர்கள் வீட்டில் இருந்தான். கவிதாவுடன் அவன் பேசிக்கொண்டிருக்க, செழியன் படித்துக்கொண்டிருந்தான்.

அதைப்பார்த்ததும் மதி சொன்ன அறிவுரை நினைவிற்கு வர, தம்பியிடம் இதுகுறித்து பேசலாமா என யோசித்தார். பின் இது அவர்கள் வீட்டில் பிரச்சனையை உருவாகிவிடும் என நினைத்து அதை தவிர்த்தார்.

பெண்ணை வீட்டில் வைத்திருப்பது… அதுவும் தாயில்லாமல், துணைக்கு யாருமில்லால் வைத்திருப்பது மிகவும் ஆபத்துக்குரியது என நினைத்து அவளை ஹாஸ்டலில் சேர்க்க முடிவு செய்தார்.

அதற்குப் பணம் தேவைப்பட்டது. இரவு பகல், வார இறுதி என பாராமல் வேலைப்பார்த்து, தேவையான பணத்தை சேர்த்து கவிதாவை ஹோஸ்டலில் சேர்க்க ஆயத்தமானார்.

கவிதாவிடம் அதுகுறித்து சொன்னபோது… “என்னை ஹாஸ்டல் அனுப்பிட்டு புது சித்தியை கூட்டிட்டு வரப்போறீங்களாப்பா?” என்றாள் வெடுக்கென.

அந்த பேச்சில் கோபமுற்ற ஸ்வாமிநாதன், “என்ன பேச்சு இதெல்லாம் கவி?” என கத்த, அவள் சித்தப்பா… “அண்ணா நாங்க தான் இருக்கோமே பார்த்துக்கமாட்டோமா? எதுக்கு இப்போ ஹாஸ்டலெல்லாம்” என்று உதவிக்கரம் நீட்டினார்.

“இல்ல விச்சு. விருந்தும் மருந்தும் நாலு நாளைக்கு நல்லது. நாள் ஆக ஆக அது தொல்லையா ஆகிடும். அந்த சங்கடத்தை நான் தர விரும்பல. இப்படி பேசறேனேன்னு தப்பா எடுத்துக்காத. மதி ஒருநாளைக்கும் இதை ஒதுக்கமாட்டா. அவளுக்கு உதவின்னு யார்கிட்டயும் கேட்கறது பிடிக்காதுடா. என்ன மன்னிச்சுடு” என அப்படியே முடித்தார் அந்தப் பேச்சை.

கவிதாவிற்கு பொறுக்க முடியவில்லை. கத்தி அழுதாள். ஆடம் பிடித்தாள். ஸ்வாமி அவளை சமாதானம் செய்தாரே தவிர அவர் முடிவில் திடமாக இருந்தார்.

செழியனுக்கோ அதற்குமேல் வருத்தம். கோபம். அம்மா சென்றபின் அக்கா தான் என இருந்தான். இப்போது அவளை… அதுவும் வெகு தூரம் தள்ளி இருக்கும் ஹாஸ்டலுக்கு அப்பா அனுப்ப முடிவு செய்தது அழுகையாக வந்தது.

அவனும் கெஞ்சினான். ஆனால் பயனில்லை.

இறுதி தேர்வுகள் முடிந்த பின், கவிதாவை தயார் செய்தார் ஹாஸ்டெலுக்கு அனுப்ப.

செழியன் யாரிடமும் பேசவில்லை. அழுகவில்லை. கவிதா கெஞ்சியும் அவளுடன் பேசவில்லை. கவிதாவை விட்டுவிட்டு வர அவனையும் அழைத்தார் ஸ்வாமிநாதன். ஆனால் வரவில்லை என்றுவிட்டான்.

கவிதாவும் சென்றுவிட்டாள். தனிமரமாக நின்றான் செழியன். அவன் துணை அவன் எழுதும் டைரி மட்டுமே. வருத்தம், அழுகை, கோபம், ஆதங்கம் அனைத்தையும் அதில் கொட்டித் தீர்த்தான்.

முன்பெல்லாம் தந்தையிடம் எழுதியது சரியாக உள்ளதா என கேட்பான். கவிதாவை அவர் அனுப்ப முடிவு செய்தபின், நிறுத்துக்கொண்டான்.

அவருக்கு இருந்த வேலை பளு, அவரையும் மறக்கச்செய்தது.

இரண்டு வேலை எடுத்து பார்த்தார் ஸ்வாமிநாதன். கூடவே கல்லூரியில் வேலை கிடைப்பதற்கு தேவையான தேர்வுகளையும் எழுத ஆயத்தமானார்.

காலை அவனை பள்ளிக்கு அனுப்பியபின், இரவு படுக்கும் போதுதான் மறுபடியும் பார்ப்பது.

செழியனுக்கு காலை மதியம் மாலை உணவு என மங்களம் செய்துகொடுத்தார். அதுவும் மிகவும் வற்புறுத்தி ஸ்வாமிநாதனிடம் சம்மதம் பெற்றார். அவரும் சில நாட்கள் மட்டுமே என சொல்லியிருந்தார்.

செழியன் இருந்த நிலைமையில் யாருடனும் அதிகம் பேசவேயில்லை. அமைதியாக இருப்பான்.

சித்தி மங்களம் மகன் விவேக்கும் அதிகம் செழியனுடன் பேசவில்லை. விவேக் செழியனை விட இரண்டு வயது பெரியவன். கவிதாவை விட இரண்டு வயது இளையவன்.

ஒரு நாள் வேலு விவேக் வீட்டிற்கு வந்தபோது, செழியனுக்கு அவன் சித்தி வற்புறுத்தி உணவு கொடுத்துக்கொண்டிருக்க, விவேக் அவனே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வேலு, மதியின் மேல் இருந்த காழ்ப்புணச்சியின் காரணமாக, தேவையில்லாமல் விவேக்கை ஏவிவிட்டான். அதன் விளைவு… சில நாட்களுக்குப் பின்…

செழியன் படித்துக்கொண்டிருக்கும் போது, விவேக் அவனிடம்… “நீ உன் வீட்ல இருக்கவே மாட்டயா? இங்கயே தான் இருப்பயா?” என கேட்க… செழியன் சட்டென அவனை பார்த்தான். கண்கள் கலங்கிவிட்டது. இருந்தும் எதுவும் பேசாமல் தலைகுனிந்து கொள்ள, அதில் இன்னமும் கோபமுற்ற விவேக்…

“என் அம்மா எனக்கு மட்டும் தான். உனக்கு இல்ல. என் அம்மாக்கு என் மேல தான் பாசம், உன் மேல இல்ல. சும்மா பாவமேன்னு உன்ன பார்த்துக்கறாங்க” என்றான். செழியன் நிமிரவேயில்லை. கண்களை மட்டும் துடைத்துக்கொண்டான்.

ஏனோ அவன் கைகளில் நடுக்கம். கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தான்.

விவேக் விடாமல்… “பார்க்கறயா என் அம்மாக்கு என் மேல தான் பாசம்னு?” என்றவன் சில நிமிடங்கள் கழித்து திடீரென சத்தமாக அலறினான்.

செழியன் பதறிக்கொண்டு ‘என்ன ஆயிற்று’ என்று அவன் அருகே சென்றவுடன், விவேக் கீழே விழுந்து… “வேணாம் செழியா” என கத்தினான்.

அதற்குள் மங்களம் அங்கு வந்துவிட்டார்.

தன் மகன் கீழே விழுந்து, வலியால் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, பதட்டத்துடன் என்ன ஆயிற்று என அவனை தூக்கிக்கொண்டே கேட்க, விவேக் நிற்கவே முடியாதது போல நடித்து…

“இவன் கிட்ட கலர் பென்சில் கேட்டேன் மா. தரமாட்டேன்னு ஃபோர்ஸ்’ஸா தள்ளி விட்டுட்டுட்டான். ஐயோ கால் ரொம்ப வலிக்குதே” என்று கத்தி அழுதான்.

இதைக் கேட்டவுடன் செழியனுக்கு அதிர்ச்சி. முன்னமே கலங்கியிருந்த கண்களில் இப்போது அழுகை. விவேக்கையும் மங்களத்தையும் மாறி மாறிப் பார்த்தான். ‘நான் ஒன்றும் செய்யவில்லை’ என்று சொல்ல கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

‘சித்தி நம்புவார்களா?’ என அந்த சின்ன மனம் படபடப்புடன் அவர் முகம் பார்த்திருந்தது.

மங்களமும் விவேக்கை சமாதனப்படுத்தி, எங்கு வலி என கேட்டுக்கொண்டே… செழியனைப் பார்த்து… “என்ன செழியா. உன் அண்ணா தானே. அவன் கேட்டா குடுக்க மாட்டயா? இனிமே இப்படி தள்ளி விடக் கூடாது. பாரு வலில அழறான்” என்றவர் மகனை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றுவிட்டார்.

ஆனால் செழியன்?! அதே இடத்தில் சலனமின்றி நின்றான். அழுகை மட்டும் நிற்கவில்லை. ‘தன் அம்மாவோ அக்காவோ இருந்திருந்தால் இந்த நிலைமை தனக்கு வந்திருக்குமா?’ என நினைத்து அந்த பிஞ்சு நெஞ்சம் வலியால் துடித்தது.

 

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved