Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 23

தனிப்பெரும் துணையே – 23

வீட்டில் இப்படி என்றால், பள்ளியில் வேறு விதம். இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மனநிலையில், யாருடனும் பேசாமல், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என சரியாக கவனிக்காமல் இருந்தான்.

ஆனால் அன்று வகுப்பில் மற்ற மாணவர்களை பார்த்தான். முந்தைய வருடம் அவனுடன் படித்தவர்கள் தான். நன்றாக பேசியவர்கள் தான். ஆனால் தற்போது யாரும் அவனுடன் பேசவில்லை. அவனாக சென்று பேசினாலும், அவனை தவிர்த்தார்கள்.

உணவு சாப்பிடும்போது கூட தனியாகவே சாப்பிட்டான். ஏன் தன்னை தவிக்கிறார்கள் என்று தன் கடந்த வருட நண்பனிடம் கேட்ட போது… “உன்கூட பேசினா உன்னப்போலவே எங்களுக்கும் அம்மா இல்லாம போய்டுவாங்கன்னு விபின் சொன்னான். அதுனால நாங்க யாரும் உன்கிட்ட பேசமாட்டோம் பா” என்றுவிட்டு அந்த சிறுவன் சென்றுவிட்டான்.

சொல்லத்தெரியாத ரணம் மனதில் உருவானாலும்… எதிர்த்து வாதிட, போராட சக்தியில்லை என நினைத்து, செழியனும் யாரிடமும் பேசாமல் ஒதுங்கிவிட்டான்.

ஓரிரு நாட்களுக்குப்பின், “அப்பா. நான் ஸ்கூல் முடிஞ்சு வந்து, இனி நம்ம வீட்லயே இருக்கட்டா பா?” தந்தையின் பக்கத்தில் படுத்திருந்த செழியன் கேட்டான்.

“என்ன ஆச்சு செழியா? யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா?” பதட்டத்துடன் அவர் கேட்க…

“இல்ல இல்லப்பா. எனக்கு நம்ம வீட்லயே இருந்து பழகிடுச்சு. நான் சமத்தா இங்கயே இருக்கேன். ஒகே வா ப்பா” என்று தன்மையாக பேசினான்.

“சரிடா. ஆனா யாரு சாயந்தரம் உனக்கு பால் பிஸ்கட் தருவா?” ஸ்வாமிநாதன் யோசித்துக்கொண்டே கேட்டவுடன், “நீங்க சொல்லிக்குடுங்க பா. நானே பார்த்துக்கறேன்” என்றான்.

ஏதோ நடந்துள்ளது ஆனால் மகன் தன்னிடம் சொல்லவில்லை என்று புரிந்தது அவருக்கு. அவரும், தம்பி வீட்டில் ‘உதவி செய்கிறோம்’ என்று சொன்னபோது மனமில்லாமல் தான் சம்மதித்திருந்தார்.

அடுத்த நாள் காலை, மகனை அழைத்து எப்படி பால் சூடு செய்து குடிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்து, அவனுக்கு உணவு செய்துதந்து பள்ளிக்கு அனுப்பினார்.

விஷயத்தை விஷ்வநாதனிடமும் மங்களத்திடம் சொன்னார். அவர்களுக்கு மனவருத்தம். விவேக் முகத்தில் வெற்றிப்புன்னகை.

செழியன் அன்றைய மாலை, பள்ளியில் இருந்து வந்தவுடன், தண்ணீரில் வைக்கப்பட்டிருந்த பாலை… மண்ணெண்ணெய் அடுப்பில் வைத்து காய்ச்ச, திடீரென பால் பொங்கி வழிந்தவுடன், என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவசரமாக பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுக்க கையை வைத்தவுடன்… கையை சுட்டுக்கொண்டான். பால் முற்றிலும் பொங்கிவிட்டது. கையில் ஏற்பட்ட எரிச்சலை விட, ‘தந்தை திட்டுவாரோ’ என்ற பயம் தான் உள்ளுக்குள்.

கண்களில் கண்ணீருடன் கையை கூட கவனிக்காமல் உட்கார்ந்திருந்தான்.

அன்று கொஞ்சம் சீக்கிரமே வந்துவிட்டார் ஸ்வாமிநாதன்.

“செழியா. இந்த பூட்டை இனி போட்டுட்டு உள்ள இருடா. அப்பா வந்து சாவி கேட்டா மட்டும் தரணும் சரியா” என்று சொல்லிக்கொண்டே அவர் உள்ளே வர, முகத்தில் பயத்துடன், கண்களில் கண்ணீருடன் இருந்த மகனை பார்த்தவர், பதட்டத்துடன் என்ன ஆயிற்று என கேட்க, அழுதுகொண்டே நடந்ததை சொன்னான் செழியன்.

“ரொம்ப சாரி பா. பால் வேஸ்ட் பண்ணிட்டேன்” அவன் அழுக, பதறிக்கொண்டு ஸ்வாமிநாதன் அவன் கையை பார்த்தார். அந்த சின்ன கையில் கொப்புளம் ஆகியிருந்தது. அவரின் கண்களும் கலங்கிவிட்டது.

அவர் மனதில் சொல்லமுடியாத வலி. மனைவியின் போட்டோவை தான் பார்த்தார்.

பின் அவசரமாக அவனை அழைத்துக்கொண்டு மருந்து வாங்கி போட்டுவிட்டவர், உடனே ஒரு flask மற்றும் ஹார்லிக்ஸ் வாங்கிக்கொண்டார்.

அவற்றை வாங்க அவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்து, அது பத்தாமல் போக, கடன் வைத்ததையும் பார்த்தான் செழியன்.

இரவு வீட்டில் உணவு செய்து செழியனுக்கு ஊட்டிவிட்டபடியே, “நாளைக்கு அப்பா சூடு தண்ணி போட்டு flask’ல வெச்சுடறேன். நீ ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே தண்ணில ஹார்லிக்ஸ் கலந்து குடி. கட்டி ஆகறதுக்குள்ள கலக்கிடணும். அப்பா சீக்கிரம் வந்துடறேன்” என்றார் கலங்கிய கண்களுடன்.

செழியனும் சரி என்றான்.

இரவு ஸ்வாமிநாதன் அவருக்கு டீ போட்டுக்கொண்டிருக்கும்போது, சமையலறைக்குள் சென்று பார்த்த செழியன், பாலில்லாமல் அவர் போடும் செய்முறையை மனதில் குறித்துக்கொண்டான்.

அடிக்கடி ஹார்லிக்ஸ் வாங்க தந்தை கஷ்டப்படுவார். அந்த கஷ்டம் தரக்கூடாது என மனதில் நினைத்துக்கொண்டான்.

நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நகர்ந்தது.

ஸ்வாமிநாதனுக்கு கல்லூரியில் வேலை கிடைத்துவிட்டாலும், இரண்டாவதாக இன்னொரு வேலையையும் எடுத்து செய்தார்… மதி சொன்ன வீட்டை வாங்குவதற்கு.

ஹாஸ்டல் சென்றபின், வருடத்திற்கு ஒரு முறை கவிதா வந்தாள். அவள் வந்தபோதெல்லாம், அவளிடம் நிறைய மாற்றத்தை கண்டான் செழியன்.

எப்போதும் துறுதுறுவென இருப்பவள், தற்போது அமைதியாக… ஏதோ இழந்ததைப்போலவே இருந்தாள். அடிக்கடி கைலாசநாதர் கோவிலுக்கு சென்றுவிடுவாள்.

முதலில் அதற்கான காரணம் புரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல தான் அவனுக்கு புரிந்தது.

தனக்காவது தந்தை உடன் இருக்கிறார்… ஆனால் அவள், வீட்டிலுள்ளவர்களை விட்டு பிரிந்து எங்கோ தனியாக இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. கஷ்டமாகவும் இருந்தது. இருந்தும் எதுவும் செய்யமுடியாத நிலை.

கேலண்டரில் வருடங்கள் மாறியதே தவிர, செழியன் வாழ்க்கை மாறாமல் அப்படியே தான் இருந்தது. மனதில் ஒரு அழுத்தம் எப்போதும் இருந்தாலும், அதனுடன் வாழக் கற்றுக்கொண்டான்.

ஆரம்பத்தில், பள்ளியில் அவனை ஒதுக்கியே வைத்தனர் உடன் படிப்பவர்கள். அவர்கள் பேச்சில் எப்போதும் ஒரு ஏளனத்தை கண்டான்.

வெகு சிலரே அவனிடம் பேசினார்கள். இருந்தும் தோழமை என்ற உணர்வில் பேசினார்களா என்று தெரியவில்லை செழியனுக்கு.

ஸ்வாமிநாதன் அவருக்கு தெரிந்த உணவை சமைத்துக்கொடுப்பார். அதைப்பார்த்து கேலி செய்தனர்.

பள்ளி சீருடை, அவனுடைய பேக், என்று அனைத்தையும் பார்த்து கிண்டல் செய்தனர். முதலில் அழுகை வந்தாலும், போக போக எதையும் காதில் வாங்காமல் இருக்க கற்றுக்கொண்டான்.

எதற்காக அனைவரும் தன்னை இப்படி ஒதுக்குகிறார்கள் என்று முதலில் புரியவில்லை. பின் நாட்கள் செல்ல செல்ல, அதற்கு காரணமானவன் அந்த வேலு… அவன் தம்பியின் மூலம் இப்படி செய்கிறான் என புரிந்துகொண்டான்.

காரணம் என்ன என்று தெரியவில்லை தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. சுற்றியிருப்பவர்களை வெறுத்தான். தனிமையையே விரும்பினான்.

படிப்பில் எப்போதுமே முதலிடம்.

சிலர் மனப்பாடம் செய்து படித்து முதல் மதிப்பெண் எடுப்பார்கள். இன்னும் சிலர், மதிப்பெண் பற்றியெல்லாம் கவலைப்படாமல் படிப்பதை புரிந்துகொண்டு படிப்பார்கள். ஆனால் செழியன், கலவையாக இருந்தான்.

புரிந்து படித்து… மூளையில் ஏற்றி… கடினமாக படித்து… முதலிடம் வருவான்.

பல தருணங்களில் மனதின் அழுத்தம் அதிகமாகும்போதெல்லாம், எதற்கு இந்த வாழ்க்கை என நினைக்கும்போதெல்லாம், இப்படி ஒரு வாழ்க்கை வேண்டுமா என யோசிக்கும்போதெல்லாம்… கவனத்தை படிப்பில் திருப்பினான்.

அவனின் மன அழுத்தத்துக்கு, ஒரே ஆறுதல்… படிப்பு மட்டுமே என்று இருந்தான்.

சில வருடங்களில், மதி ஆசைப்பட்ட வீட்டை லோன் எடுத்து வாங்கினார் ஸ்வாமிநாதன்.

செழியன் தனக்கு மொட்டைமாடியில் உள்ள தனி அறை தான் வேண்டும் என கேட்டு வாங்கிக்கொண்டான். அது அவனை இன்னமும் தனிமை படுத்தியது. அதை விரும்பவும் செய்தான் அவன்.

ஸ்வாமிநாதன் கிட்டத்தட்ட, ஒரு இயந்திரம் போல சுற்றிக்கொண்டிருந்தார். மகள் கவிதா பாலிடெக்னிக்’கில் படிப்பதற்கு, செழியன் படிப்பிற்கு, வீட்டுக்கடன் என நிறைய செலவுகள் இருக்க, வேலையிலேயே தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார்.

செழியன் நன்றாக படித்து, பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தான்.

யாருடனும் ஒட்டாமல் தனிமை மட்டுமே என்று இருக்க, அவன் வாழ்க்கையில் அழகாக நுழைந்தாள் இந்துமதி.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் பள்ளியில் சேர்ந்தாள்.

செழியன் தான் பள்ளியில் முதலிடம் என தெரிந்து, அவனிடம் பேச வந்தாள். அவனை முதலில் கவர்ந்தது அவள் பெயர். இந்துமதி. மதி… தன் அம்மாவின் பெயர்.

அதிகம் பேசாத செழியன் அவளிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசினான். அவளும் அவனுடைய கடந்தகால வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்காமல், நன்றாக பேசினாள்.

நாட்கள் செல்ல செல்ல, அவளுடன் கொஞ்சம் அதிகமாகவே பேசினான். அவளுக்கு படிப்பில் உதவினான். அவளும் அவனுக்காக வீட்டு உணவு, சின்ன சின்ன பரிசுகள் என கொடுப்பாள்.

முதலில் வேண்டாம் என மறுத்தான். பின், அவள் வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக்கொண்டான். இருவருக்குள்ளும் அழகான நட்பு வளர்ந்தது.

இதுவரை தன் வாழ்வில் தோழமை என்று யாரும் இல்லாமல் இருக்க, இந்துமதியை மிகவும் பெரிதாக நினைத்தான். பொக்கிஷமாக காத்தான். அவளுடன் இருக்கும் தருணங்களில், அவன் மனம் லேசாக இருப்பதாக உணர்ந்தான்.

மனதளவில் ஏற்பட்ட பல கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதாக அவன் நினைக்க, தன் வாழ்வில் அடுத்த ஏமாற்றம் அடுத்த இழப்பு காத்திருக்கிறது என்று தெரியாமல் பள்ளிப்படிப்பை முடிக்க தயாரானான்!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved