Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye – 28

தனிப்பெரும் துணையே – 28

இதுபோல ஒரு பெண் வாழ்வில் வருவதற்கு, எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது செழியனுக்கு.

அடுத்த ஓரிரு நாட்களில் அவன் ட்ரைனிங்’கில் பங்கேற்க சென்றுவிட்டான்.
அவன் ட்ரைனிங் முடிந்து வருவதற்கு இரண்டு நாட்கள் முன், ஸ்வாமிநாதனுக்கு உடல் நிலை மறுபடியும் சரியில்லாமல் போக, அகிலன் கவிதா வந்திருந்தார்கள்.

அவர்கள் வந்தபோது, அகிலன் ஏதோ ரிப்போர்டை மறந்து விட்டுவிட, செழியன் ஊர் திரும்பியதும், அதை சென்னைக்கு சென்று அகிலனிடம் தரும்படி சொன்னார்.

ப்ரியா செங்கல்பட்டில் தான் இருப்பாள் என்று தெரியும், ஒருவேளை சென்னையில் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்துக்கொண்டே கவிதா வீட்டிற்கு சென்றான். அகிலனும் கவிதாவும் வீட்டில் இருந்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிதாவைப் பார்க்கிறான். அவள் முகத்தில் பழைய சந்தோஷம் கொஞ்சம் திரும்பியதுபோல இருந்தது. அது நிம்மதியாகவும் இருந்தது.

அகிலன் ஏதேதோ பேசினான் செழியனிடம். ஆனால் அகிலனுடன் சாதாரணமாக பேசுவர்தற்கு மட்டும் ஏதோ ஒரு தடை இருந்துகொண்டே இருந்தது. அதிகமாக பேசவில்லை.

பின் அகிலன் வெளியே சென்றுவிட, அக்காவிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது. அவள் பேசும்போதே நன்றாக தெரிந்தது அவள் முன்பு போல இல்லை என்று.

இருவரும் மேலே இருந்த முகப்பில் பேசிக்கொண்டிருக்க, திடீரென மனதில் சில்லென்ற இசைச்சாரல் போல, அவள் குரல். ப்ரியாவின் குரல்.

ஏதோ பேசிக்கொண்டே மேலே வந்தாள்.

‘அவளுக்கு தெரியுமா நான் வந்தது? இல்லை தற்செயலான சந்திப்பா? எனக்கு தோன்றுவது போலவெல்லாம் அவளுக்கும் தோன்றுமா?’ என அவள் முகத்தை பார்ப்பதற்கு ஆவலாய் இருந்தான்.

அவள் மேலே வர, அவனைப்பார்த்ததும் ஒரு நொடி அப்படியே நின்றாள். அந்த கண்கள்… அதில் தெரிந்த திகைப்பு. அதை மனதில் பதித்துக்கொண்டான்.

அவன் முகத்தில் புன்னகை தானாக ஒட்டிக்கொண்டது. ப்ரியா அடுத்தநொடி சகஜமாக இருக்க முற்பட்டாள்.

‘அக்காவிற்காக ஏதோ அவள் அம்மா செய்துகொடுத்தனுப்பியது, அதை ப்ரியா எடுத்துவந்தது’ என்பது தெரியவர, ‘இந்த வீட்டில் அக்கா கண்டிப்பாக சந்தோஷமாக இருப்பாள்’ என்ற நம்பிக்கை கொஞ்சம் துளிர்த்தது அவனுக்குள்.

கவிதா டீ போட கீழே சென்றவுடன், என்றைக்கும் இல்லாத ஒரு புது வித உணர்வுகள் அவனுள்.

‘ப்ரியாவை கல்யாணத்தின் போது நேராக பார்த்தது. இப்போது மறுபடியும் தனியாக பார்க்க ஒரு தருணம் கிடைத்துள்ளது. எப்படியும் அவள் பேசுவாள். அதை கேட்கலாம்’ என்பதே அதற்கு காரணம்.

அவள் அறையில் இருந்து வெளிவருவதற்காக காத்திருந்தான். அவளும் வந்தாள். இவனும் அவளைப்பார்த்தாவுடன் பிரகாசமாக புன்னகைத்தான்.

அவள் கண்கள் படபடத்தது. ஆனால் எதுவும் பேசவில்லை. அவள் கண்கள் காட்டும் பரிமாணத்தை பார்த்தபடி… “எப்படி இருக்க…” முதலில் அவனே பேச்சை ஆரம்பித்தான் அவளை பேசவைக்க. ஆனால் அவளிடம் பதிலில்லை.

“ஏன் பேசமாட்டேங்கற? எப்படி இருக்க?” கேட்டான் மறுபடியும். அவள் எதுவுமே பேசாமல் அவனை பார்த்திருக்க…

“என்ன சௌண்டே காணம்? பேசறது கேட்குதா உனக்கு? மெசேஜ்ல மட்டும் தான் பேசுவயா?” அவள் பேசி கேட்கவேண்டும் என்ற ஆர்வம் அவனுள். ஆனால் ப்ரியா எதுவுமே பேசவில்லை.

அது அவனுக்கு கொஞ்சம் வருத்தம் தர, அவன் அடுத்து பேசுமுன் கவிதா ப்ரியாவை அழைத்தாள்… ப்ரியாவும் தப்பித்தோம் என்பதுபோல ஓடிவிட்டாள்.

செழியனுக்கு ஏமாற்றம்… அவளிடம் பேசமுடியவில்லையே என்று. அந்த ஏமாற்றம் கோபத்தை கூட்டியது.

அமைதியாக உட்கார்ந்திருந்தான். ‘ஏன் தன்னுடன் பேசவில்லை. ஒருவேளை தனக்கு தான் இதுபோலவெல்லாம் தோன்றுகிறதோ? அவளுக்கு இல்லையோ?’ என்ற யோசனை வந்தது.

கொஞ்ச நேரத்தில் கவிதா செழியனை சாப்பிட அழைத்தாள்.

அவன் கீழே சென்றபோது, ப்ரியா சகஜமாக கவிதாவுடன் பேசிக்கொண்டிருக்க, அவன் மனம் கொஞ்சம் வலித்தது ‘தன்னுடன் இப்படி பேசவில்லையே’ என்று. கோபம் வேறு ஒருபக்கம்.

பின் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது … ப்ரியா அவனை கிண்டல் செய்தவுடன், ‘இப்பொதுமட்டும் பேசுவாளா? ஏன் தனியாக இருக்கும்போது பேசவில்லை’ என்ற கோபத்தில் சட்டென எழுந்தான்.

கவிதா ‘என்ன ஆயிற்று’ என யோசிக்க, அவன் கோபத்தை பார்த்து… ப்ரியா கண்கள் பயத்தை காட்டியது.

அப்போதுதான் தன்னிலைக்கு வந்தான். அவன் கவிதாவின் வீட்டில் இருந்து புறப்பட்ட, மனதில் ஏதோ ஒரு நெருடல். ‘இதுபோலவெல்லாம் கோபப்பட்டதே இல்லை. இதென்ன புதிதாக’ என்று யோசிக்க…

‘அவள் தன்னிடம் காட்டிய அக்கறையை தவறாக புரிந்துகொண்டோமோ? முதலில் அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல், இனி அவளை தொந்தரவு செய்யக்கூடாது’ என முடிவெடுத்தபடி கிளம்பினான்.

அந்த முடிவு தன்னை வருத்தும் என்பது தெரியும். இருந்தும் வேறு வழி தெரியவில்லை. அதே மனவருத்தத்துடன் இருக்க, ப்ரியாவும் அதற்கு பின் எந்த ஒரு மெஸேஜும் அனுப்பவில்லை.

முடிவே செய்துவிட்டான் அவள் தன்னிடம் காட்டிய அக்கறை, பாவம் பார்த்துதான். அவளுக்கு வேறு எந்த ஒரு எண்ணமும் இல்லை என.

‘ஏமாற்றம் புதிதல்ல. முதலில் கொஞ்ச நாள் வருத்தம் இருக்கும். பின் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என நினைத்தான். இதே மனநிலையில் மகாராஷ்டிரா புறப்பட்டான்.

ஆனால் ப்ரியாவை மறக்க முடியவில்லை. காலையில் அவளுடைய குட் மார்னிங் மெஸேஜில் ஆரம்பித்து இரவு அவள் குட் நைட் அனுப்பிய பின் உறங்குவது என்பது தான் வழக்கம். ஆனால் அதுஎதுவும் இல்லாமல் நாட்கள் நகர்ந்தது.

மகாராஷ்டிரா சென்றவுடன், அவளுக்கு புது எண்ணில் இருந்து ‘ஹலோ’ என்ற முதல் மெசேஜ் அனுப்பினான். ‘ரிசல்ட் சொல்லவில்லை என்று கோபப்பட்டவள், நம்பர் தரவில்லை என்றால் இன்னமும் கோபப்படுவாள்’ என நினைத்து அனுப்பினான்.

ஆனால் அவளிடம் பதில் வரவில்லை. பின் ‘இது என் புது மகாராஷ்டிரா நம்பர்’ என்று அடுத்த மெசேஜ் அனுப்ப, அது அவளுக்கு செல்லவில்லை.

யோசனையுடன் அழைத்தான், அழைப்பு செல்லவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது ‘ப்லாக் செய்துவிட்டாளா?’ என்று யோசிக்க, இருக்காது என்றது அவன் மனம்.

இருந்தும் அவனுடைய ஆபீஸ் எண்ணில் இருந்து அவளை அழைத்தான். ரிங் சென்றது. உடனே வைத்துவிட்டான்.

ஏமாற்றத்தினால் வந்த புன்னகை அவன் முகத்தில். மனம் சுக்குநூறாக உடைந்தது. அவள் தன்னை ப்லாக் செய்துவிட்டாள் என்று புரிந்தது.

வேலையில் கொஞ்சம் கவனம் சிதற, அவன் இன்டெர்வியூ நடந்த போது பேசியது அவனுக்கே நினைவிற்கு வந்தது. கொஞ்ச நாள் இதனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, வேலையில் கவனம் செலுத்த முடிவெடுத்தான்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. அவள் அவனுக்கு மெசேஜ் அனுப்பியபோது, ஒரு வார்த்தையில் பதில் அனுப்பியவன், இப்போது பக்கம் பக்கமாக அவளுக்கு மெசேஜ் டைப் செய்வான்… ஆனால் அனைத்தும் drafts’ஸில் மட்டுமே இருந்தது. அனுப்பவில்லை.

யாருடனும் சரியாக பேசத்தோன்றவில்லை. வேலை வீடு என்று அவன் நாட்கள் போக, ஒருநாள் கவிதா கர்பமாகிவிட்டாள் என்ற செய்தி வந்தது.

கவிதாவை பார்க்க ஆசையாக இருந்தது செழியனுக்கு. ஒருவேளை ப்ரியா சென்னையில் இருந்தால் அவளையும் பார்க்க முடியும் என நினைத்து உடனே புறப்பட்டான்.

அவன் ஆசைப்பட்டதுபோலவே கவிதா வீட்டிற்கு வந்தவுடன், ப்ரியாவை பார்த்தான்.

பல ஆயிரம் இசைக்கருவிகள் இனிதாய் இசைப்பதுபோல ஒரு உணர்வு. அவள் பேசி கேட்கவேண்டும் என்ற ஆசை மறுபடியும். ஆனால் அவனை பார்த்ததும், அவள் கண்கள் கோபத்தை காட்டியது.

‘நான் என்ன தவறு செய்தேன் கோபப்பட’ என யோசிக்க, லட்சுமி அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

பின் அவர் கவிதா மேலே இருப்பதாக சொன்னவுடன், மேலே சென்றான் கவிதாவை பார்க்க. ஆனால் அங்கு கோபமே உருவாக பால்கனியில் நின்று தனியாக யாரையோ திட்டிக்கொண்டிருந்தாள் ப்ரியா.

அவள் தனியாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

அவளிடம் சென்று… “இப்போ என்ன கோபம்? நான் தான் கோபப்படணும் நீ என் நம்பர்’ர ப்லாக் பண்ணினதுக்கு” அவன் சொன்னதும், அவனைப்பார்த்த ப்ரியா… அவனை வசைப்பாட ஆரம்பித்தாள்.

அவனை ‘சுயநலவாதி… நம்பர் தரவில்லை… பொய் சொல்கிறாயா?’ என்று திட்ட, அவள் குரல் பல மாதங்கள் கழித்து கேட்கிறான். அவளையே அவன் பார்த்தவண்ணம், அவனுடைய மொபைல் எடுத்து அவளை அழைத்தான்… அழைப்பு செல்லவில்லை.

அவளிடம் “இதற்கு நீ என்ன பொய் சொல்லலாம் என்று யோசி” என்றுவிட்டு கவிதாவை பார்க்க சென்றுவிட்டான்.

ஆனால் மனதில் இத்தனை நாட்கள் இருந்த வருத்தம் கொஞ்சம் மறைந்தது… அவளுடைய மறுபடியும் அந்த உரிமையான பேச்சை நினைத்து.

கவிதா முன்புபோல இல்லாமல் மிகவும் சந்தோஷமாகத் தெரிந்தாள். மூச்சுக்கு நூறுமுறை அகிலன் பெயரைச் சொன்னாள். அவளை அனைவரும் நன்றாக பார்த்துக்கொள்வதாக சொன்னாள். அது இன்னமும் மனநிறைவை தந்தது.

அப்போது அவனுக்கு ஒரு மெசேஜ் வர, அது ப்ரியாவிடம் இருந்து… அவனுடன் பேசவேண்டும் என.

கவிதாவுடன் வெளியே வந்தவன், ‘ஒரு போன் செய்யவேண்டும்’ என்று கவிதாவை கீழே அனுப்பிட்டு திரும்ப, ப்ரியா அவன் முன் வந்து நின்றாள்.

அவன் ‘என்ன’ என்று கேட்டவுடன், அவள் மன்னிப்புக்கேட்க, அவள் கண்களும் மன்னிப்பை வேண்டியது. ‘இந்தக்கண்களில் எத்தனை மாற்றங்களை தான் காட்டுவாள்’ என நினைத்து அவளையே பார்த்தான்.

அவள் ப்லாக் செய்ததற்கான காரணத்தை சொன்னாள். இப்போது கோபமில்லாமல் பேசும் அவள் பேச்சை ரசித்தான். ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலிப்பதுபோல அதை உள்வாங்கிக்கொண்டான்.

அவள் ஒருவழியாக காரணங்களை சொல்லிமுடிக்க, இப்போது அவன் அக்காவை நன்றாக பார்த்துக்கொள்வதற்கு நன்றி சொன்னான்.

அவனை அவள் கிண்டல் செய்ய, இப்போது பழைய ப்ரியாவாக மாறியிருந்தாள். அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

‘நன்றாக பேசுகிறாள், நம்பர் தரவில்லை என்று கோபப்படுகிறாள். அவள் மனத்திலும் ஏதாவது இருக்குமோ?’ என அவன் மனம் யோசிக்க…

திடீரென அவள் அவனிடம், “தேங்க்ஸ் சொன்னதுபோதும் எனக்கு ஏதாச்சும் பெருசா கிபிட் வேணும்” என்றவுடன்… ‘என்னை உனக்கு பிடிக்குமா இசை?’ என்று கேட்கவேண்டும் என்பதுபோல இருந்தது அவனுக்கு.

‘ஆனால் அப்படியொரு எண்ணம் அவளுக்கு இல்லாமல்போய், அதை அவள் வாயாலேயே சொன்னால், தன் மனம் அந்த ஏமாற்றைத்தை தாங்குமா?’ என நினைக்கும்போது நெஞ்சம் வலித்தது. அவளிடம் தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

அதற்குபின் அவளும் நன்றாக பழையபடி மெஸேஜில் பேசினாள் அவனிடம். கொஞ்சம் நிம்மதி வந்தது அவனிடம். வேலையில் இன்னமும் அதிகம் கவனம் செலுத்தமுடிந்தது. நல்ல பெயர் வாங்கினான்.

அவளுடன் பேசிய தருணங்களை நினைத்து நாட்களை நகர்த்தினான். நாட்களும் செல்ல செல்ல, கவிதாவிற்கு வளைகாப்பு தேதி குறித்தனர்.

‘அக்காவிற்கு தன் பணத்தில் வளையல் வாங்கவேண்டும்’ என்று எண்ணி நகைக்கடை சென்றபோது… ப்ரியாவிற்கு என்ன வாங்குவது என்று அவன் யோசிக்க, அவன் கண்ணில் அடுத்தநொடி கைக்கடிகாரம் தென்பட்டது.

அதைப்பார்த்தவுடன் கண்கள் தானாக கலங்க, அம்மாவிற்கு வாங்கித்தருவேன் என்று சொன்னது… அம்மாவிற்குப்பின் ப்ரியாவிற்கு வாங்கித்தரவேண்டும் என்று தோன்றியது!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved