Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye – 29

தனிப்பெரும் துணையே – 29

செழியன் கவிதாவின் வளைகாப்புக்கு புறப்பட்டான். ப்ரியாவை பார்த்தும் சில மாதங்கள் ஆகியிருந்தது.

அவளை பார்க்கப்போகிறோம் என்பதற்காவே, புதிதாக ஹேர்கட் செய்துகொண்டு, கிளம்புமுன் பலமுறை தன்னை கண்ணாடியில் பார்த்து மனதிற்கு திருப்தி ஆகும்வரை சில பல உடைகளை மாற்றி, நன்றாக தயாராகி கிளம்பினான்.

அவனின் இந்த பரிமாற்றம் அவனுக்குமே பிடித்தது. ஆவலாக அகிலன் கவிதா வீட்டிற்கு வந்தடைய, வாயிலை பார்த்தவாறே இருந்த ப்ரியாவை முதலில் பார்த்தான்.

அவனைப் பார்த்ததும், அவள் கண்கள் காட்டிய ஆச்சர்யத்தை ரசித்தவாறு அவளைப்பார்த்தான். அவளும் அழகான ஒரு புடவை கட்டிக்கொண்டு அவனை ஆசையாக பார்க்க… அவளிடம் ‘இப்போ பார்க்க சுமாராவாவது இருக்கேனா’ என்று கேட்கவேண்டும் போல இருந்தது.

அவளைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டே உள்ளே வர, கவிதாவும் அகிலனும் பூஜையில் இருந்தனர். அகிலன் சின்ன சின்ன விஷயத்திற்குக்கூட கவிதாவை பார்த்துக்கொண்டது மனநிறைவாக இருந்தது. தற்செயலாக பார்ப்பதுபோல ப்ரியா நின்றிருந்த இடத்தை பார்த்தான் அவள் அங்கு இல்லை.

எங்கு சென்றாள் என்று யோசிக்கும்போது, சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் செழியனை ஓரிருமுறை பார்த்தவாறு. ஏதோ தரையில் புரளும் பாவாடையை தூக்கிப்பிடித்து நடப்பதுபோல புடவையை தூக்கிப்பிடித்தவாறு வந்தாள்.

அதை பார்த்தவனுக்கு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை. அவளின் செய்கைகளை ரசித்தபடி அவன் இருக்க, அவள் கவிதாவிற்கு நலுங்கு வைத்து, அவள் பக்கத்திலேயே நின்றுகொண்டாள். இப்போது இருவரின் கண்களும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டது.

செழியனை அழைத்தபோது, அவன் வாங்கிவந்திருந்த வளையலை கவிதாவுக்கு அணிவித்தான். அக்காவிடம் தன் சொந்த பணத்தில் வாங்கியதாக சொல்லி அணிவிக்க, இருவர் கண்களும் கலங்கியது.

பின் கடைசியாக அகிலன் கவிதாவிற்கு அணிவித்துவிடும்போது, அவர்களுக்குள் இருந்த அழகான புரிதல் அவனுக்கு நிம்மதியை தந்தது. தந்தையை பார்த்தான் அவர் உடல்மொழியும் நிம்மதியை காட்டியது.

பல நாட்கள், இல்லை வருடங்கள் கழித்து ஒரு இதமான சூழ்நிலை அவர்கள் குடும்பத்தில் அரங்கேறியதாக இருந்தது.

ஒருவழியாக பூஜைகள் முடிந்தவுடன், கவிதாவை அகிலன் மேலே அழைத்துச்சென்றுவிட, செழியனின் சித்தி, கவிதா சாப்பிடுவர்த்தற்கு என்று ஒரு டப்பாவை செழியனிடம் கொடுத்த்தார்.

அதை தர மேலே சென்றபோது, அகிலன் கவிதாவிடம் பேசிக்கொண்டிருந்தது காதில்பட, அக்காவின் வாழ்க்கை குறித்து இனி கவலை வேண்டாம் என்றே தோன்றியது.

அவர்களை தொந்தரவு செய்யவேண்டாம் என நினைத்து செழியன் அங்கிருந்து நகரும்போது, ப்ரியா அவன் எதிரில் நின்றாள்.

அவளைப் பார்த்தவுடன், அவன் கண்கள் பிரகாசமானது. ‘எப்படி அவளுக்கு வாங்கிவந்ததை தருவது’ என அவன் யோசிக்க… அவளே கொஞ்ச நேரத்தில் ‘எங்கே கிபிட்’ என கேட்டாள்.

முகத்தில் புன்னகையுடன் அவன் நீட்டினான். அவள் கண்கள் திகைத்து அவனை பார்க்க, அந்த விழிகள் காட்டிய பாவத்தை மனதுக்குள் பதித்துக்கொண்டான்.

‘பிடிக்குமோ அவளுக்கு’ என்ற ஆவலுடன் அவன் கொடுக்க, அவனிடமிருந்து வாங்கி அதை பிரித்த ப்ரியாவின் கண்களில் இப்போது அதிர்ச்சி.

“பிடிச்சிருக்கா?” அவன் கேட்க, அவளிடம் பதில்லை. மறுபடியும் அவன் கேட்க, அவள் கண்களின் ஓரத்தில் சின்னதாக கண்ணீர் கோர்த்து ஆம் என்று தலையசைத்தாள்.

அவளை கையில் அணிந்துகொள்ள சொல்லி அவன் கேட்க நினைக்க… அப்போது கவிதாவின் அறைக்குள் அகிலனுக்கும் கவிதாவுக்கும் வாக்குவாதம்.

செழியன் அதைக்கேட்டு பதறிக்கொண்டு ‘என்ன நடக்கிறது’ என்று பார்க்க, அவர்களுக்குள் இருக்கும் இணக்கம் புரிந்து அவன் மனதை நெகிழச் செய்தது.

கவிதாவின் காலடியில் அகிலன் அமர்ந்து, அவளுக்கு சேவகம் செய்துகொண்டிருந்தான்.

‘கண்டிப்பாக மனைவியை பிடிக்காதவன் செய்யும் காரியமில்லை அது’ அகிலனை முதல்முறை தன் சொந்தம் என்ற வளைவுக்குள் பார்த்தான்.

அதே நிம்மதியுடன் வெளியே வர, அங்கே ப்ரியா கைகளில் அவன் தந்த கடிகாரத்தை கட்டி அவன் முகத்திற்கு நேராக காட்டினாள்.

அவ்வளவு அழகாக இருந்தது. அந்த கரத்தை பற்றிக்கொண்டு ‘என் வாழ்க்கை முழுதும் உன் கை கோர்த்து இருக்கனும்ன்னு ஆசை. அந்த ஆயுள் பரிசு எனக்கு கிடைக்குமா?’ என்று கேட்கத்தோன்ற, அவள் அவனிடம் கிஃபிட் தந்ததற்கு ‘நன்றி’ சொன்னாள்.

உடனே மனதில் நினைத்ததை மறைமுகமாக… “தேங்க்ஸ் சொன்னது போதும். பதிலுக்கு ஏதாச்சும் நீ கிஃபிட் குடு” என புன்னகைத்து அங்கிருந்து சென்றுவிட்டான். எங்கே இன்னும் இருந்தால் நேராக அவளிடம் கேட்டுவிடுமோ என்ற பயம் அவனுக்கு.

ஆனால் அன்று முடிவெடுத்தான். ப்ரியா தன் வாழ்வில் வந்தால் எந்த ஒரு குறையும் இல்லாமல் அகிலன் அக்காவை பார்த்துக்கொள்வதைப்போல, ப்ரியாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்று.

செல்வநிலை… அகிலன் அளவிற்கு உயர்த்த முடியமா என்று தெரியவில்லை, ஆனால் ப்ரியாவை நன்றாக பார்த்துகொள்வதற்கு தேவையான அளவிற்கு உயரவேண்டும் என்று தோன்றியது.

அதற்கு ஏற்றாற்போல, டாடா பவர் நிறுவனத்தில் மேல் படிப்பு படித்துக்கொண்டே வேலைப்பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்க, அதை விட மனமில்லை.

கண்டிப்பாக முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், இன்னமும் பெரிய வேலையில் அமரலாம் என்று நினைத்தான்.

‘தந்தையிடம் சொல்லலாமா?’ என்று யோசிக்க, கண்டிப்பாக வேண்டாம் என்று தான் சொல்வார் என தெரியும். அவருக்கு வேலை தான் முக்கியம் படிப்பு இல்லை இப்போது.

அக்காவிடம் சொல்லலாம் என்றால் அவள் கண்டிப்பாக அப்பாவிடம் சொல்லிவிடுவாள். அதனால் கவிதாவிடமும் சொல்லவில்லை.

ப்ரியாவிடம் என யோசிக்கும்போது, ‘மறைக்கவேண்டுமா?’ என்று தோன்றியது.

ஆனால் படிக்கப்போகிறோம் என்றால் எங்கே அவளும் வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என யோசிக்க, ‘மும்பையில் புது வேலை கிடைத்துள்ளது’ என்று மட்டும் இப்போதைக்கு சொல்வோம் என முடிவெடுத்தான்.

அதே போல அவன் சொல்ல, ப்ரியாவிற்கு மிகுந்த சந்தோஷம். இருவருக்கிடையில் மெசேஜ் பரிமாணம் அதிகமானது. செழியனும் கொஞ்சம் நன்றாக இப்போதெல்லாம் பேசினான்.

நாட்கள் வேகமாக நகர, IIT பாம்பேயில் மாஸ்டர்ஸ் படிக்க விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்த படலம் ஆரம்பித்ததது. வேலை, படிப்பு… இரண்டையும் பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், அதை பழகிக்கொள்ள முயற்சித்தான்.

இப்படியாக நாட்கள் நகர, தீடீரென ஒரு நாள் காலை நேரம் கல்லூரியில் இருக்கும்போது ப்ரியா அழைத்தாள்.

எப்போதும் அழைத்தெல்லாம் பேசமாட்டார்கள். ஆனால் இப்போது அவள் அழைத்ததும் ஆச்சர்யத்துடன் அவன் எடுக்க, ‘அவள் மும்பை வந்திருக்கிறாள்’ என்று சொன்னதும் அதிர்ச்சியில் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.

அவனை அதிர்ச்சியில் இருந்து மீட்டது அவள் குரல். அவனை மெரைன் டிரைவ் வரச்சொன்னாள். அவளை பார்க்கப்போகிறோம் என்று நினைக்கையில், மனதில் ஆயிரம் வயலின்கள் வாசிப்பதுபோல இருந்தது.

‘எப்படியும் இரண்டு மணிநேரம் ஆகும்’ என்று சொன்னான். அவள் காத்திருப்பதாக சொன்னவுடன், உடனே கிளம்பினான் டாக்ஸியில்.

ட்ரைவரை படாதபாடு படுத்தி எவ்வளவு சீக்கிரம் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றான்.

எதிர் திசையில் அவன் இறங்க, தூரத்தில் அவள் கைகளை கட்டிக்கொண்டு, ரைலிங்’கில் சாய்ந்தவாறு அவனுக்காக காத்திருந்தாள்.

‘என்ன பெண்ணடா. யாருக்கு அமையும் இதுபோல’ என்ற பெருமை அவனுள். காதலை சொல்லவில்லை இருவரும்… ஆனால் இருவருக்குள்ளும் அது இருப்பதைப்போல உணர்ந்தனர்.

கிட்டத்தட்ட ஓடிச்சென்று அவள் முன் நிற்க, அவள் கண்களில் அவ்வளவு கள்ளத்தனம். அந்த கள்ளத்தனம் கூட அழகே. கைகளில் அவன் தந்த கைக்கடிகாரம்.

உடனே அவன் “எனக்கு கிஃபிட் எங்க” என கேட்க, “நான் வந்ததே கிஃபிட் தான்” என்றாள் புன்சிரிப்புடன். அவன் பொய்யாக முறைக்க, மனதிலோ… ‘இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?’ என்றே தோன்றியது.

பின் அவள், அவனை வீட்டிற்கு அழைத்துச்செல்ல சொன்னவுடன் அதிர்ந்தான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சநேரம் அவனுடன் இருப்பாள் என நினைத்தான்.

‘இத்தனைத்தும் தனக்காகவா?’ என நினைக்கையில்… இதயம் சந்தோத்தில் தடதடக்க, பேரின்பம் மனதில்.

இருப்பினும் அவள் வீட்டில் தெரிந்துவிட்டால் என அவன் நினைக்க… ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்பதுபோல இருத்தது அவளின் செயல்கள். அனைத்தையும் சரியாக திட்டமிட்டே வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

அவளை அழைத்துக்கொண்டு டாக்ஸியில் ஏறினான். அவன் மனதில் வெளியில் சொல்லமுடியாத, பதில் தெரியாத பல கேள்விகள்…

‘இதெல்லாம் கனவில்லயே? இந்த அன்பிற்கு தான் தகுதியானவனா? இந்த அளவு அன்பை தன்னால் பதிலுக்கு அவளிடம் காட்டமுடியுமா?’ என கேள்விகள் ஓட, அமைதியாக இருந்தான். ப்ரியா கொஞ்ச நேரத்தில் ஜன்னலில் சாய்ந்து உறங்கிவிட, அவளைப்பார்த்தான்.

தூங்கும்போது ரசிக்கக்கூடாது என்பார்கள். ஆனால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை அவனால். அப்போது ஒரு வேகத்தடையில் வண்டி செல்ல, அவள் ஜன்னலில் முட்டிக்கொண்டாள்.

அதைப்பார்த்தவுடன் அவன் கைகள் பரபரத்தது. அவளை தன் மீது சாய்த்துக்கொள்ளவேண்டுமென…

மறுபடியும் அவள் இடித்துக்கொள்ள, ஓட்டுனரிடம், நேரம் ஆனாலும் பரவாயில்லை. மெதுவாக செல்லும்படி சொன்னான். அவளும் தொந்தரவின்றி நன்றாக உறங்கினாள்.

வீடுவந்ததும் அவளை உள்ளே அழைத்துச்செல்ல, அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். பின் அவன் படிப்பதாக தயங்கித்தயங்கி சொன்னவுடன், அவள் முகத்தில் தெரிந்த ஒப்புதலுக்கான புன்னகை, அவனை இன்னமும் மகிழ்வித்தது.

அவளுக்கு குடிப்பதற்கு டீ போட்டுக்கொண்டிருக்கும்போது… அவள் எடுத்துவந்த கிபிட்’டை அவனிடம் கொடுக்க… அவன் திகைப்புடன் ‘இந்தநாள் இன்னும் என்னென்ன இன்பஅதிர்ச்சிகள் தர காத்திருக்கிறதோ’ என எண்ணிக்கொண்டு வாங்கினான். உள்ளே அழகான இரண்டு காபி கப்ஸ்.

“அழகாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு… “எதற்கு இரண்டு” என கேட்டான்.

அவனுக்கு புரிந்தது அதற்கான அர்த்தம் என்ன என்று. ‘கண்டிப்பாக நேராக பதில் சொல்லமாட்டாள்’ என்று அவன் நினைக்க… அதேபோல அவளும் ‘ஒன்று உனக்கு மற்றொன்று உன் மனைவிக்கு’ என்றாள்.

அவள் கண்களில் அப்பட்டமாக காதல் தெரிந்தது அவனுக்கு.

அவளை பார்த்தவாறு, ‘அதானே. நேராக சொல்லவேண்டும் என்றால் எப்போதோ சொல்லியிருக்கலாம். இப்போது மட்டும் சொல்வாளா என்ன’ என நினைத்துக்கொண்டு டீயை வேறு குவளையில் ஊற்றினான்.

அதை பார்த்ததும் அவள் அவனை புதிய கப்’பில் குடிக்க சொல்ல… ‘நீ மட்டும் தான் மறைமுகமாக சொல்வாயா’ என நினைத்து… “நீ சொன்ன இதுக்கு சொந்தமானவங்க அந்த உரிமையோட வர்றப்ப, நான் இதை யூஸ் பண்றேன்” என்றான்.

அவள் முகத்தில் குழப்பத்தை பார்த்தவன் மனதில்… ‘வாயாடிக்கு வாய் மட்டும் தான் பேசவரும்போல… நீ என்னோட மனைவி, நான் உன்னோட கணவன் என்கிற உரிமையோட நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கும்போது சேர்ந்து குடிப்போம்’ என எண்ணி புன்னகைத்துக்கொண்டே டீயை அவளுக்கு கொடுத்தான்.

இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க, மற்றொரு பெட்டியை நீட்டினாள் ப்ரியா. அவன் மறுபடியும் ஆச்சர்யத்துடன் பிரிக்க, அதில் ஒரு லாம்ப் இருந்தது.

அதை பற்றி அவள் விளக்கம் தர, அவனுக்குள் ஏதோ ஒன்று இடித்தது.

‘கண்டிப்பாக இதில் வேறு ஏதோ இருக்கிறது… இதை பரிசோதிக்க வேறு வழியா இல்லை? என்ன என்று கண்டுபிடிப்போம்’ என நினைத்துக்கொண்டு அவள் சொல்வதற்கெல்லாம் தலையை மட்டும் ஆட்டினான்.

அவளும் அதை முழுவதுமாக செட் செய்ய, அதை நன்றாக பார்த்துக்கொண்டான்.

பின் கொஞ்ச நேரம் இருவரும் பேசிவிட்டு, அவள் கிளம்பத்தயாராக, ‘அவள் கிளப்புகிறாள்’ என்றதும் அவன் முகம் வாடியது. அவளுடன் தானும் வருவதாக சொல்லி கிளம்பினான்.

இருவராலும் பேசமுடியவில்லை. அவனுக்குள் ஒரு அழுத்தம் அவள் கிளம்புவதை நினைத்து. இருவரும் டாக்ஸி நோக்கி செல்லும்போது எதிரே அவளை நோக்கி வந்த பந்தை பார்த்து… அவளை தன் பக்கம் இழுக்க, அவன் மேலே மோதி நின்றாள் ப்ரியா.

அவன் கரம் அவள் கரத்தை பற்றியிருக்க… அதில், அவள் உணராவண்ணம் அழுத்தம் தந்து… ‘என்னோடவே இரேன் இசை… நீ வர்றவரை தனியா இருக்க விருப்பப்பட்டு தான் தனியா இருந்தேன். ஆனா இப்போ எனக்கு அந்த தனிமை பிடிக்கல. என்னோடவே சீக்கிரம் வந்துடேன்’ என மனம் வலிக்க அவளை பார்த்தான். அவள் கண்களில் ஆசையை தேக்கிவைத்துக்கொண்டு அவனை பார்த்தாள்!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved