Thaniperum Thunaiye-32
தனிப்பெரும் துணையே – 32
ப்ரியாவை பார்த்தவுடன், செழியன் மனதில் ஆயிரம் ஆசைகள் தடம்புரண்டோட, அனைத்தையும் பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்த பின் சாதாரணமாக பேச ஆரம்பித்தான்.
ஆனால் அவளோ சரியாக பேசாமல், தயங்கி தயங்கிப் பேச, ‘இசைக்கு தயக்கமா? நம்ப முடியலையே’ மனதுக்குள் அவளை ரசித்தபடி, அவளுடன் பேசினான்.
அவளை ட்ரைனிங் நடக்கும் ஹாலில் விட்டுவிட்டு, அவன் டிபார்ட்மென்ட்’டுக்கு சென்றவுடன், குமார் பிடித்துக்கொண்டான்.
“என்ன இளா. செம்ம குஷியா இருக்க. வந்தாச்சா கேர்ள் ஃபிரண்ட்” என்றவுடன்… “ஐயோ அண்ணா. நீங்கவேற. அவ முன்னாடி ஏதாச்சும் சொல்லிடாதீங்க. அவ பாய் ஃபிரண்ட்’ன்னு சொன்ன விஷயம் எனக்கு தெரியும்னு காட்டிக்காதீங்க” என்றான் செழியன்.
ஏன் என்று புரியாமல் குமார் பார்க்க, ” நாங்க ரெண்டு பேரும் லவ் அப்படி இப்படின்னு’லாம் எதுவும் சொல்லிக்கல. ஆனா எனக்கு அவளதான் பிடிக்கும்னு அவளுக்கு தெரியும். அவளுக்கு என்ன தான் பிடிக்கும்னு எனக்கு தெரியும். அவளோ தான். ஒரு flow’ல அப்படியே போயிட்டிருக்கோம்” என்றதும் குமார் முகத்தில் குழப்பம்.
“என்னடா சொல்ற? லவ் சொல்லிக்கவே இல்லையா?” என்று கேட்டவுடன், “முன்னாடிலாம்… நான் படிச்சிமுடிச்சப்புறம் காதல் கல்யாணம் பத்தி பேசணும்னு இருந்தேன். இப்போ அவளும் நல்லா படிக்கணும். ஏன்ண்ணா… ஐ லவ் யு’ன்னு சொல்லிட்டு பேசிட்டா தான் லவ்’வா ண்ணா. சொல்லாமலே அது புரியறப்ப எதுக்கு சொல்லணும்” செழியன் சொன்னதும், ஒருமுறை தலையை நன்றாக குலுக்கினான் குமார்.
“முடியலப்பா தம்பி. நீ மட்டும் தான் ஒரு டைப்’னு நினச்சேன். அந்த பொண்ணும் அப்படி தானா. ஜாடிக்கேத்த மூடி. என்னமோ பண்ணுங்க. நல்லா இருந்தா சரிதான்” குமார் சலித்துக்கொண்டு சொன்னதும் புன்னகைத்தான் செழியன்.
அன்று மதியம் ப்ரியாவுடன் உணவு சாப்பிட கேன்டீன் சென்றபோது, ப்ரியா அவனிடம், ‘இன்னும் எவ்வளவு நாட்கள் வெளி சாப்பாடு சாப்பிடுவாய்’ என்று கேட்டதும், அந்த அக்கறை மனதிற்கு இதமாக இருந்தது.
திருமணத்திற்கு முன் கவிதா அவ்வப்போது கேட்பாள் அவனிடம். அதற்கு பின் இதுகுறித்து யாரும் பெரிதாக யோசிக்கவில்லை.
ப்ரியா எடுத்துக்கொள்ளும் உரிமையை நினைத்து சந்தோஷப்பட, “இனி மெஸ் சாப்பாடு கிடையாது. சமைத்துக்கொண்டு வா. உனக்கு மட்டும் இல்ல எனக்கும்” என்று அவள் சொன்னதும், சந்தோஷம் மறைந்து அதிர்ந்தான்.
‘எனக்கு தான் வராது என்று முன்னமே சொன்னேனே. இதென்ன கட்டளையிடுவது போல’ என மூளை முறிக்கிக்கொள்ள, “அதெல்லாம் வராது. கஷ்டம். என்னால முடியாது” என்றான்.
அதற்கு அவள் தந்த கவுண்டர்… “ஏன் முடியாது? என்ன கஷ்டம்? Thermal and fluid dynamics’ஏஹ் படிக்கமுடியுது. யூனிவர்சிட்டி செகண்ட் வரமுடியுது… சமைக்க முடியாதா? ஒழுங்கா செஞ்சு எடுத்துட்டு வரலைன்னா, நான் மதியம் எங்கயும் சாப்பிட மாட்டேன்” என்றதும், அவன் முறைத்தான்.
இருவரும் சாப்பிட்டு முடித்து ட்ரைனிங் இடத்திற்க்கு நடக்க… அவன் வெளியில் முறைத்தாலும், மூளை முறிக்கிக்கொண்டாலும், ‘உனக்காக அவள் எதுவெல்லாமோ செய்கிறாள். உன் நலத்திற்கு தானே சொல்கிறாள். உன்னால் சமைக்க முடியாதா’ என்றது அவன் மனம்.
புன்னகையுடன் திரும்பி அவளை பார்த்தான். அவளும் பார்த்து புன்னகைத்தாள். ‘மாலை சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டு இருவரும் அவரவர் வேலையில் மூழ்கினர்.
மாலை அவள் ஹாஸ்டல் வரை சென்றான். போகும் வழியில் டீ வாங்கிக்கொள்ள, அவள் ‘ப்ளாக் டீ’ குறித்து கேட்டாள்.
சின்னவயதிலிருந்து குடித்து பழகிவிட்டது என்று சொல்ல மனம் நினைத்தாலும், அதை தவிர்த்து, ப்ளாக் டீ’யின் நன்மைகளை மட்டும் சொன்னான்.
எங்கே தன் கடந்த காலத்தை சொல்லி, அவள் இயல்பாக இல்லாமல், தன்மேல் பரிதாபப்பட்டுவிடுவாளோ என்ற எண்ணம் அவனை தடுத்தது.
அன்று இரவு அடுத்தநாள் என்ன சமைப்பது என்று யோசிக்க, சின்ன வயதில் அடிக்கடி ஸ்வாமிநாதன் செய்துதரும் எலுமிச்சை சாதம் நினைவிற்கு வந்தது. அதையே செய்ய முடிவு செய்தான்.
கொஞ்ச நாட்களாக, பழைய ஆபீஸ் வேலை, ஆய்வறிக்கைக்கான வேலை, என கொஞ்சம் அதிகம் வேலை இருப்பதால், இரவு தூங்கும் நேரம் குறைய ஆரம்பித்தது. ஆனால் செய்யும் அனைத்து வேலையையும் விரும்பியே செய்தான்.
அடுத்தநாள் அவள் சொன்னதற்காக, தட்டுத்தடுமாறி, கையை சுட்டுக்கொண்டு, சுத்தமாக சுவையில்லாத சாதத்தை சமைத்து எடுத்துச்சென்றான்.
அவன் மறுத்தும் கேட்காமல், அவன் செய்ததை அவள் சாப்பிட்டாள்.
கை சுட்டுக்கொண்டதை பார்த்து அவள் முதலில் பதறினாலும் பின் சகஜமாக “முதல் முறை அப்படித்தான் இருக்கும்” புன்னகையுடன் சொன்னாள்.
செழியன் வெளியில் முறைத்தாலும், மனதில் சின்ன வயது நிகழ்வு நினைவிற்கு வர, ‘சுட்டுக்கொள்வது முதல் முறை அல்ல’ என நினைத்து புன்னகைத்தான்.
அடுத்து வந்த நாட்களும் அழகாக நகர்ந்தது. அவளுக்காக உணவு தினமும் எடுத்துச்சென்றான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் இருந்து சோர்வாக உணர்ந்த செழியன், வெளியில் சாப்பிடலாமா என்று யோசித்தபோது, வாசல் அழைப்பு மணி அடிக்க, அதை திறந்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. ப்ரியா வந்திருந்தாள்.
‘இவள் எங்கே இங்கே’ என அதிர்ச்சியுடன் பார்க்க, அவனிடம் ஒரு பையை கொடுத்துவிட்டு அவள் வீட்டினுள் வந்தாள்.
அந்த பையில் ரைஸ் குக்கர் இருந்தது. ‘ஐயோ அதே உணவை நான் இன்றும் சமைக்க வேண்டுமோ’ என அவன் பதற, அவள் உணவு செய்வதாக சொன்னாள்.
ஆனால் அதற்கு முன் டீ வேண்டும் என அவள் சொல்ல, அவளை பார்த்து முறைத்தவண்ணம் டீ போடச்சென்றான்.
தனக்காக அவள் வந்ததை நினைத்து மனதில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.
‘இதுபோதாதா இருவருக்கிடையில் இருப்பது காதல் தான் என்று சொல்வதற்கு’ என அவன் நினைக்கையில்… ஹாலில் இருந்து அவள்… “இந்த லேம்ப் இன்னும் யூஸ் பண்றயா இளா?” அவள் தந்த விளக்கை பற்றி கேட்டாள்.
உடனே கொஞ்சமாக வெளியில் அவன் எட்டிப்பார்க்க, அவள் முகம் ஆர்வத்துடன் அந்த விளக்கை பார்த்துக்கொண்டிருந்ததது.
அதை பார்த்து சிரித்த செழியன் வேண்டுமென்றே “ஹ்ம்ம் யூஸ் பண்ணுவேன். ஹால்’ல படிக்கடறப்ப, யூஸ் ஆகும்” என்று சொன்னதும் அவள் முகம் கோபத்துக்கு மாறியது.
அதை ரசித்துக்கொண்டே அவன் வெளியே வர, அவள் தலையில் அடித்துக்கொள்ளும்போது அவளிடம் டீயை நீட்டினான். அவளும் முறைத்தபடி வாங்கிகொண்டாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் செழியன். கோபத்திலும் அழகாக தெரிந்தாள் அவனுக்கு. அதுவும் அந்த கண்கள், பின் அந்த கன்னம். அதை கிள்ளி… ‘தினம் தினம் உன் ஞாபகத்தோட தான் இருக்கேன். இது உனக்கு தெரியாதா’ என்று சொல்லவேண்டும் என இருந்தது.
அவள் சமையலறைக்குள் சென்றதும், மறுபடியும் அவன் மனம் அலைபாய்ந்தது. ‘ஐயோ என்னதிது’ என தன்னையே திட்டிக்கொள்ள, அவள் சமையலறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள்.
அவன் உள்ளே சென்றதும், அவள் திரும்ப, இருவரின் கண்களும் நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது. அவள் கண்களில் தெரிந்த காதல், ஆசை, அவனுக்குள் பல புது உணர்வுகளை தட்டி எழுப்ப, அவள் கொஞ்சம் பின்னே நகர்ந்தாள்.
அடுப்பில் இருந்த சூடுதண்ணியில் மோதிவிடுவாளோ என பயந்து, பதறி அவளை தன்பக்கம் இழுக்க, அவளும் பயந்து அவன் மேல் பட்டும் படாமல் இடித்து நின்றாள்.
ஒரு நொடி… அவளின் ஸ்பரிசம், படபடத்த கண்கள், இருவரின் நெருக்கம், அவனை கொஞ்சமாக தன்னிலை இழக்கச்செய்தது. இதயம் வேகமாக துடிக்க, ஏதாவது தவறு நடந்துவிடுமோ என பயந்து, சட்டென பின்னே தள்ளிகொண்டான்.
பின் எதெது எங்கிருகிறது என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டாலும், இதயத்துடிப்பு மட்டும் சீராகவில்லை அவனுக்கு.
‘ச்ச. என்ன தவறான எண்ணங்கள். தன்னை நம்பி வீட்டிற்கு வந்திருக்கிறாள்’ என நினைத்து தன்னை சமநிலை படுத்திக்கொள்ள, மறுபடியும் அழைத்தாள் ப்ரியா.
‘ஐயோ இப்போதென்ன’ என நினைத்து, கவனமாக உள்ளே செல்லாமல், சமையலறை வாசலில் நின்று “என்ன” என்று கேட்டான்.
அவள் முகமும் கொஞ்சம் தடுமாற்றத்தை அவனுக்கு காட்டியது. இப்போது புன்னகைத்தான் அவளைப் பார்த்து. பின் அவள் சொன்ன பொருட்களை வாங்கிவந்து கொடுத்தபின், அவள் அவனுக்கு சின்ன சின்ன வேலைகளாக கொடுத்துக்கொண்டே இருந்தாள்.
மறுபடியும் ஒரே இடத்தில் இருந்து இருவரும் வேலை பார்க்க, அவள் பார்க்காதபோது அவளை பார்த்தான். எப்போதும்போல, மேலுதட்டை கடித்தவாறு, ஏதோ யோசித்துக்கொண்டே சமைத்துக்கொண்டிருந்தாள்.
அவன் மனம் மறுபடியும் தடுமாறியது. அவளிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தபின் தான் கொஞ்சம் மூச்சு சரியானது. ‘இனி எக்காரணம் கொண்டும் உள்ளே செல்லக்கூடாது’ என முடிவெடுத்து வெளியிலேயே இருந்துகொண்டான்.
அவளும் சமைத்து முடித்து, இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.
இத்தனை நாள் துறவற வாழ்க்கை போய், ஒரு அழகான இல்லறத்தை போல தெரிந்தது அவனுக்கு. இதுபோல கவிதா திருமணத்திற்கு முன், சிலசமயம் காஞ்சிபுரம் வரும்போது ஒன்றாக சாப்பிடுவார்கள் இருவரும்.
அதற்கு பின் இப்போது தான் இதுபோல நடக்கிறது. உணர்ச்சிகளின் பிடியிலேயே இருந்தான் செழியன். அவளிடம் மனம் விட்டு சொல்லிவிடுவோமா என.
அவளும் சிறிதுநேரம் இருந்துவிட்டு புறப்பட, அவனும் உடன் கிளம்பினான். அவன், அவளிடம் வந்ததற்கு, சமைத்துத்தந்ததற்கு மனமார நன்றி சொன்னபின்… அவனுக்குள் ஒரு சின்ன உந்துதல்.
‘நீ என்னுடனே இருந்துவிடேன் இசை. நீ வந்த பின் என்னால் தனியாக இருக்க முடியவில்லை’ என்று சொல்லிவிட ஒரு புறம் மனம் துடித்தது.
ஆனால் மறுபுறம்… ‘தன் தாய் தந்தை திருமணம் முடிந்து, வாழ்க்கையை நடத்த பணம் போதாமல், ஒவ்வொரு நாளும் எவ்வளவு சிரமப்பட்டார்கள். அதுபோல ஒரு வாழ்க்கையை இசைக்கு தான் தரவேண்டுமா? அவள் படும் துயரம் தன்னால் தாங்கிக்கொள்ளமுடியுமா?’ என மனம் மாறி மாறி யோசிக்க, நல்ல மனநிலை முற்றிலுமாக மாறி தலையில் பாரம் அதிகமானது அவனுக்கு.
அதே மனநிலையில் அவளை விட்டுவிட்டு வீடு திரும்பினான். மன உளைச்சல் அதிகமானதுபோல உணர்ந்தான்.
நாட்கள் இதுபோல சிந்தனைகளுடனே நகர, ப்ரியாவின் பிறந்த நாளும் வர இருந்தது.
அவனுடன் பேசும்போதெல்லாம் அவள் சொல்லும் Graphic Tablet பரிசளிக்க முடிவெடுத்தான். ஆனால் அதற்கு பணம் தேவை. சேமிப்பில் இருந்த பணத்தையெல்லாம் தொட மனம் வரவில்லை.
‘திடீரென அம்மா உடல்நல குறைவால், தங்களை விட்டு சென்றுவிட… பணம் இல்லாதது ஒரு காரணம்’ என்று ஒரு முறை தந்தை சொன்னதால், அந்த பணத்தை அவசர தேவைக்கு என வைத்திருந்தான்.
இப்போது பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்க, அவன் மூளையில் பளிச்சிட்டது பிரைவேட்’டாக செய்துதரும் ப்ராஜக்ட்ஸ்.
படிப்பு மற்றும் அது சார்ந்த வேலை, பின் பழைய நிறுவனத்தில் அவர்கள் தரும் வேலை, அதுவும் போதாது என்று சிறிய சிறிய ப்ராஜெக்ட்ஸ் எடுத்து கொஞ்சம் பணம் பார்க்கலாம் என முடிவெடுத்து அதில் இறங்கினான்.
குறுகிய காலத்தில் அதிக பணம்… அவனை மிகவும் கவர்ந்தது. அதற்கு அவன் பிணையம் வைத்தது, தூங்கா இரவுகளை. அவன் நினைத்ததுபோலவே ப்ரியாவிற்கு விலையுயர்ந்த Graphic டேப்லட் வாங்கினான். அவள் பிறந்தநாளும் வந்தது.
ஆசையுடன் அவளை பார்க்க சென்றான். கூடவே அவன் செய்த கேரட் ஹல்வாவையும் எடுத்துக்கொண்டு.
அவளை அழைத்து கீழே வரச்சொல்ல, அவளும் வந்தாள். அவள் கண்களில் மலர்ச்சியை பார்த்து ரசித்தபடியே, சுவீட்டை அவளுக்கு தந்தான். அவள் முகத்தில் சந்தோஷம். அதையும் உள்வாங்கிக்கொண்டான்.
பின் அகிலன் ப்ரியாவை அழைத்து பேசியபின், கவிதாவும் அவளுக்கு வாழ்த்து சொல்ல, மனதில் வின்னென்ற வலியுடன் ப்ரியாவை பார்த்தான் செழியன்.
‘தன் அக்கா… தனக்கு இதுபோல இரவில் எல்லாம் அழைத்து வாழ்த்து சொன்னதில்லயே. அப்படியே அவள் சொன்னாலும், அது சொல்லவேண்டுமே என்று சொன்னதுபோல இருக்கும். அம்மா இறந்த பின் தன் பிறந்தநாள் ஒரு வெறுமை நிறைந்த நாளாக மாறிவிட்டது’ என நினைத்து மனது ரணமானது.
அவன் முகமாற்றத்தை புரிந்துகொண்டவள் போல, அவனை திசை திருப்ப முயற்சித்தாள் ப்ரியா. அது அவனுக்கு புரிந்தது. அவனும் சகஜமாக இருக்க முற்பட்டான்.
பின் அவன் வாங்கிய Graphic Tablet அவளிடம் தர, அவள் கண்கள் காட்டிய மிதமிஞ்சிய ஆச்சர்யத்தை பார்த்தவன் மனதில்… ‘இதை பார்க்க … இந்த சந்தோஷத்தை அவளுக்கு தர… என்ன வேண்டுமானாலும் செய்யலாம். செய்வேன்’ என்றே தோன்றியது!!!
