Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 4

தனிப்பெரும் துணையே – 4

ப்ரியாவின் கண்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் காட்ட… செழியன் தொடர்ந்தான்.

“இதை உங்ககிட்ட சொல்லலாமானு தெரியல” என்றுவிட்டு… மறுபடியும் அவன் சுற்றியும் பார்க்க… ப்ரியாவின் மனம் படபடத்தது.

‘ஏதாவது விவகாரமாக சொல்லப்போகிறானோ… இந்த அமைதியான பசங்கள நம்பவே கூடாது’ என அவள் யோசிக்க…

“அக்கா முகத்துல சந்தோஷமே இல்ல. ஏதாச்சும்ன்னா நீங்க அவங்க கூட இருப்பீங்களா?” என்றவுடன்… நிம்மதி பெருமூச்சு விட்டாள் ப்ரியா. கூடவே புன்னகையும் எட்டிப்பார்த்தது.

மனதிலோ ‘இவனை பத்தி தெரிஞ்சே நீ கண்டதையும் யோசிச்சயே ப்ரியா’ என நினைத்து…

“என்னை வா போன்னே சொல்லுங்க. நான் சின்ன பொண்ணு தான்” என்றாள் அவன் மரியாதையை நிமித்தமாக பேசுவதை பார்த்து.

“ம்ம்… உங்கண்ணன் ஏதாச்சும் பிரச்சனை பண்ணா சொல்வயா? அக்கா பாவம்… எனக்கு அவர் மேல நம்பிக்கையே இல்ல, ஏதாச்சும் பண்ணுவாருன்னே தோணுது. பிடிக்காம ஒரு விஷயத்தை…” என சொல்லிமுடிக்கும் முன்…

“ஹலோ ஹலோ… என்ன பேசிட்டே போறீங்க? என் அண்ணன் உங்களுக்கு வில்லனா? என்னமோ கிழக்கு சீமையிலே படத்துல வர நெப்போலியன் ரேஞ்சுக்கு அவரை சொல்ற? அவர் எப்பவுமே ஹீரோ தான். எதை வெச்சு என் அண்ணன் பிரச்சனை பண்ணுவான்னு சொல்ற?” என சீறினாள் ப்ரியா. மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது.

அவன் முகம் மாறியது.

“உனக்கு நடந்ததெல்லாம் தெரியுமான்னு தெரியல. சரி ஒன்னும் வேணாம் விடு. நானே வேற வழி பாத்துக்கறேன்” என்று அவன் நகர்ந்து செல்ல…

அவன் கண்களில் என்ன கண்டாலோ… “இரு இருங்க. நீ… நீங்க சொல்லலைனாலும் நான் எங்க அண்ணிய பார்த்துப்பேன்” என்றாள் தோள்களை குலுக்கி.

“தேங்க்ஸ். நீயும் வா போன்னே சொல்லு. பரவால்ல. அப்புறம்… எனக்கு இங்க வேற யாரோட நம்பர்’ரும் தெரியாது. அக்கா எடுக்கலைனா உன்ன கூப்பிடலாமா?” அவன் தயங்கி கேட்டவுடன்…

“நம்பர் வேணும்னு நேராவே கேட்டிருக்கலாம்” என்று புன்னகையுடன் அவள் எண்ணை கொடுத்தாள்.

அவன் மறுபடியும் நன்றி சொன்னவுடன் “இங்க பாருங்க… நம்பர் இருக்குனு சும்மா குட் மார்னிங்… குட் நைட் ஃபார்வேர்ட்’லாம் அனுப்பக்கூடாது. ஒகே?” என கொஞ்சம் சீரியஸாக சொல்வது போல புன்னகையுடன் அவள் சொல்ல… சரி என்பது போல சின்னதாக தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான்.

‘ஆஹ்’ என அவனைப் பார்த்தாள் ப்ரியா.

இப்படி வேறு ஒருவனிடம் சொல்லியிருந்தால் ஒன்று கோபப்பட்டிருப்பான் இல்லை பதிலுக்கு கவுண்ட்டர் கொடுத்திருப்பான். இவன் மண்டையை ஆட்டிவிட்டு செல்கிறானே என நினைக்கும்போது ஏனோ அவள் முகத்தில் இன்னமும் புன்னகை அதிகமானது.

அன்றைய இரவு செழியனும் அவன் குடும்பமும் காஞ்சிபுரம் புறப்பட்டனர் அவனுக்கு இன்டெர்வியூ இருப்பதால். அதை தெரிந்துகொண்ட ப்ரியா…

அடுத்தநாள் காலையில் பெற்றோருடன் கோவிலுக்கு புறப்பட்டு செல்லும்போது… அவனுக்கு “குட் லக். ஐ நோ யு டூ வெல்” என்ற ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அவளே தான் அவனிடம் சொன்னாள் ‘தேவையில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடாது’ என்று. அதை எண்ணிப்பார்க்க… ‘இது தேவையில்லாததல்லவே. நட்புடன் அனுப்பியது’ என தனக்கே பதில் சொல்லிக்கொண்டாள்.

அவனுக்கு மெசேஜ் டெலிவெரி ஆனது ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. அவனைப் பற்றி அவளுக்கு தெரியாதா? இந்த ஓரிரு நாட்களில் கொஞ்சம் அவனை புரிந்துகொண்டாள்.

அவனிடமிருந்து பதில் வந்தால் ஆச்சர்யம் தான் என நினைத்துக்கொண்டு சுவாமி சன்னதியை அடைந்தபோது மொபைல் வைப்ரேட் ஆனது. அவனிடமிருந்து ‘தேங்க் யு’ என்ற பதில்.

அதைப் பார்த்து ஆச்சர்யத்துடன் புன்னகைத்துக்கொண்டே சுவாமியிடம் ‘அவன் தேர்வாகவேண்டும்’ என அவனுக்காகவும் வேண்டிக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து, விபூதியை கையில் வைத்தவாறு ‘விர்ச்சுவல் ப்ளெஸ்ஸிங்ஸ்’ என்று அந்தப் புகைப்படத்தை அனுப்ப… உடனே பதில் வந்தது. புன்னகைப்பதுபோன்ற ஒரு ஸ்மய்லி. அவளுக்கும் புன்னகை ஒட்டிக்கொண்டது.

‘எதற்காக அவனுக்கும் வேண்டினோம்’ என யோசித்தபோது ‘அது தன்னுடைய இயல்பு. தெரிந்தவனுக்கு இன்று முக்கியமான நாள். அதற்காக வேண்டிக்கொண்டேன்’ என சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

அன்றைய தினம் அப்படியே கழிய… அவனின் நினைவு அவ்வப்போது வந்து வந்து சென்றது. இன்டெர்வியூ என்ன ஆயிற்று நன்றாக செய்தானா என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

இரவு ஆனபோது அவனை கேட்கலாம் என நினைத்து ஒரு குறுஞ்செய்தி ‘ஹொவ் வாஸ் யுவர் டே’ என்று அனுப்பிய தருணம்… அவளுக்கு ஒரு செய்தி வந்தது. ‘ஐ ஹவ் காட் செலக்ட்டட்’ என்று அவனிடமிருந்து. சந்தோஷம் அவள் மனதில்.

முன்பு அவனிடம் ‘கிழக்கு சீமையிலே நெப்போலியன் மாதிரி எங்க அண்ணன் என்ன வில்லனா?’ என அவனிடம் கேட்டது நினைவுக்கு வர, குறும்புப்புன்னகையுடன் ‘கங்ராட்ஸ்… நெப்போலியன் வைஃப்’க்கு சொல்லியாச்சா’ என கேட்டாள்.

அவனிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் இவள் முகத்தில் புன்னகை குறையவில்லை. ‘இதுவரை பலபேரிடம் கடலை போட்டுள்ளேன். இது ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே’ என நினைத்து புன்னகைத்துக்கொண்டாள்.

அவனிடம் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொன்னவள், எல்லோருக்கும் அனுப்புவதுபோல அவனுக்கும் ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.

சில சமயம் அவனிடம் இருந்து ஸ்மய்லி பதில் வரும். பெரும்பாலும் அவன் கேட்பது கவிதாவை குறித்தே இருக்கும்.

சில நாட்கள் கழித்து ஒருமுறை கவிதா ப்ரியாவிடம் பேசும்போது செழியனை பற்றி சொன்னாள்…

“தம்பி தனியாவே வளர்ந்ததுனாலவோ என்னவோ கொஞ்சம் ரிசெர்வ்ட் டைப். அதிகமா யார்ட்டயும் பேசமாட்டான். என்னோட கூட அளவா தான் பேசுவான்” என்றபோது…

‘எனக்கு தெரியாதா… நான் மட்டும் தானே மெசேஜ் அனுப்பறேன். அந்தப்பக்கம் காத்து தான் வருது’ என நினைத்து சலித்துக்கொண்டாள்.

இவர்கள் மெசேஜ்’ஜில் பேசிக்கொள்வது… இல்லை இல்லை ப்ரியா அனுப்புவது யாருக்கும் இங்கே தெரியாது.

“ஆமா அண்ணி. உங்க தம்பி இந்த இயர் டிகிரி ஃபினிஷ் பண்றாருல்ல” என ஒன்றும் தெரியாததுபோல் கேட்டாள்.

“ஹ்ம்ம் முடிச்சிட்டான். யூனிவர்சிட்டி ரேங்க் செவென்த். ஒரு சப்ஜெக்ட்’ல டாப்பர்… கான்வகேஷன்’ல மெடல் தரப்போறாங்களாம்” என்றவுடன்… ப்ரியாவிற்கு ஒருவகையான ஏமாற்றம். கோபம். தனக்கு தெரியவில்லையே இந்தத் தகவல். அவன் சொல்லவில்லையே என்ற வருத்தம்.

பின் அதிகமாக பேசாமல் அறைக்கு வந்தவுடன் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

‘ஐ வோண்ட் மெசேஜ் யு எனிமோர்’ என்று கோபத்துடன் அனுப்பினாள்.

அவன் ‘ஏன் என்று கேட்பான்’ என காத்திருந்து பதில் வராமல் போக… கடுப்புடன் இருந்தபோது… சில நிமிடங்கள் கழித்து ‘என்ன ஆச்சு. அக்காக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே’ என்ற பதில் வர, அதை பார்த்ததும் கோபத்தில் …

‘எவ்ளோ செல்ஃபிஷ் நீ? இனி நானும் உன் அக்கா விஷயம்னா மட்டும் மெசேஜ் பண்றேன். ஐம் சச் அ ஃபூல். நான் உனக்கு எக்ஸாம்’க்கு விஷ்’லாம் பண்ணேன். பட் நீ உன் ரிசல்ட்ஸ் பத்தி சொல்லவே இல்ல எங்கிட்ட. உன்னைப்போல நானும் இனி விஷயத்தை மட்டும் பேசணும்’ என பெரிய மெசேஜ் அனுப்பிவிட்டு மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்த்துவிட்டாள்.

‘ஏன் இவ்வளவு கோபம். அவன் எதற்காக அனைத்தையும் இவளிடம் சொல்லவேண்டும்’ என்றெல்லாம் நினைக்கவே இல்லை.

எப்படியும் அவனிடம் இருந்து பதில் வராது என நினைத்து கோபமாக இருந்தவள் கோபத்திலேயே தூங்கிவிட… நடு இரவில் முழிப்பு வந்து எப்பொழுதும் போல மொபைலை பார்த்தாள்.

அது உயிர்ப்பின்றி இருப்பதைப் பார்த்தபோது, அவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி நினைவிற்கு வர, அவன் செய்கையை நினைத்து சலிப்புடன் கண்களை கூட சரியாக திறக்காமல் சுவிட்ச் ஆன் செய்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் ஓரிரு பீப் சத்தம். ஆர்வமில்லாமல் என்ன வந்திருக்கிறது என்று பார்க்க, அவனிடம் இருந்து செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்ததும் ஆச்சர்யம். தூக்கமெல்லாம் தூரம் பறந்தது. கோபமும் கூட!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved