Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-41

தனிப்பெரும் துணையே – 41

ப்ரியா இரவு உணவு தயார் செய்ய ஆரம்பிக்க, செழியன் மனதில் ப்ரியா சொன்ன ‘பர்த்டே’ ஓடிக்கொண்டே இருந்தது. தேதியை பார்த்தான். மனதில் இனம்புரியாத வலி.

பழைய நினைவுகள்… சிறுவயது நினைவுகள் அவனை தாக்க, அமைதியாக எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருந்தான்.

ப்ரியா சமையல் முடித்திருக்க, அவனை சென்று அழைக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் மெதுவாக அறைக்குள் எட்டிப்பார்க்க, அவன் வேலையில் இருந்தான்.

“இளா சாப்பிடலாம் வா” ப்ரியா அவனை அழைக்க, “நீ சாப்பிடு இசை. சாப்பிட்டு படு. எனக்கு இந்த ப்ராஜக்ட் முடிக்கணும். இல்ல ரெட் அலெர்ட்’க்கு போய்டும். ஆல்ரெடி ப்ளூ’ல இருக்கு” என்றான் கணினியின் திரையை பார்த்துக்கொண்டு.

செழியன் ப்ராஜக்ட் எடுத்து செய்யும் ஃபிரீலான்ஸ் தளத்தில், ப்ராஜெக்ட் வேலை பார்ப்பவர்களுக்கு மதிப்பீடுகள் இருக்கும். அதில் அதிக மதிப்பீடு யாருக்கிருக்கிறதோ அவர்களுக்கே அதிக ப்ராஜக்ட்ஸ் கிடைக்கும். இதுவரை அந்த தளத்தில் செழியன் எப்படியும் முதல் மூன்று இடத்தில் இருப்பான்.

உரிய நேரத்திற்கு முன் டெலிவரி செய்பவர்களுக்கு, அந்த ப்ராஜக்ட் குறியீட்டில் பச்சை சிக்னல் இருக்கும். டெலிவரிக்கான நேரம் நெருங்க நெருங்க நிறம் நீலத்திற்கு மாறும். தேதியை தவறவிட்டுவிட்டால் சிவப்பிற்கு மாறிவிடும். செழியனின் பெயர் ஒரு முறை கூட பச்சையில் இருந்து மாறியதில்லை. ஆனால் இந்த சில நாட்களாக கவனம் அதிகம் சிதறுவதுபோல உணர்ந்தான்.

“ப்ளீஸ் இளா” அவன் கேட்டதும், திரும்பி அவளை பார்த்த செழியன், “புரிஞ்சிக்க மாட்டயா இசை? சொன்னா கேளு. போய் சாப்பிடு” கடுகடுத்துவிட்டு திரும்பிக்கொண்டான்.

‘கோபமாக உள்ளானா? இல்லை சாதாரணமாக இருக்கிறானா’ என்று யோசித்தபடி உணவை சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் பால்கனியில் உட்கார்ந்திருந்தாள் ப்ரியா.

செழியன் வேலை பார்த்துக்கொண்டே உணவை சாப்பிட்டுவிட்டு, வெளியே வர, அவள் தனியாக பால்கனியில் எங்கோ வெறித்துப்பார்ப்பது, அவன் மனதை குத்தியது. ‘இவளை இப்படி வைத்துகொள்ளவா திருமணம் செய்துகொண்டோம்’ என.

அவள் அருகில் வந்து அவனும் உட்கார்ந்துகொண்டான்.

ப்ரியா அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். அவளின் நிலைக்கு தான் தான் காரணம் என புரிந்து… “ஸாரி” என்றான் வானத்தை பார்த்து.

எதற்கு என்று அவள் கேட்கவில்லை. அந்த ஒரு மன்னிப்பு, அவள் மனதை அமைதிப்படுத்தியது. அவன் மேலே அவள் சாய்ந்துகொள்ள, அவன் அவளை கைவளவிற்குள் வைத்துக்கொண்டான்.

அந்த அணைப்பு, அனைத்தயும் மறக்கச்செய்தது. அவன் நெஞ்சில் முகம் புதைத்து, அதில் முத்தம் பதித்தாள். பின், நிமிர்ந்து அவனைப் பார்த்து… “சமாதானம்???” என்று கேட்டவுடன்… அவளைப் பார்த்து புன்னகைத்த செழியன், இன்னமும் இறுக கட்டிக்கொண்டான்.

அந்த புன்னகை… அதைத் தான் இந்த இரண்டு நாட்களாக அவள் பார்த்திருக்கவில்லை. இப்போது அந்த புன்னகையை பார்த்த அவள் மனம் சாந்தமடைந்தது. அந்த மிதமான இரவு பனிக்காற்றில் இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தனர்.

“சரி இசை… போய் படு. எனக்கும் வேலை இருக்கு” மெதுவாக அவன் சொல்ல, நிமிர்த்து அவனைப்பார்த்தாள்.

“யாரோ ரெண்டு நாளைக்கு முன்னாடி பெர்மிஷன்’லாம் கேட்டாங்க. இப்போ கண்டுக்கவே மாட்டேங்கறாங்க” மறைமுகமாக அவனிடம் கேட்டாள். இரண்டு நாட்காளாக தூக்கம் இல்லாதவனை எப்படியாவது தூங்கவைக்க வேண்டும் என்பதற்காக.

அது புரிந்து அவன் புன்னகையுடன்… “மறக்கல இசை. ஆல்ரெடி ப்ளூ’க்கு போய்டுச்சு ப்ராஜட் ஸ்டேட்டஸ். டூ டேஸ்’ல குடுக்கலைனா, ரெட்’க்கு போய்டும். அப்புறம் ப்ராஜக்ட்ஸ் கிடைக்கறது கஷ்டம் ஆகிடும்” என்றான் அவன் நிலையை புரியவைக்க.

அதற்கு மேல் பேசாமல் அவளும் தலையசைத்துக்கொண்டாள். இருந்தும் தானாக கேட்டு அவன் மறுத்தது கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. அவளும் சென்று படுத்துக்கொள்ள, அவன் வேலை பார்க்க சென்றுவிட்டான்.

அடுத்தநாள் அவள் எழும்போது, அவன் உறங்கிக்கொண்டிருந்தான். அவன் கையில் அவளின் உடை. ‘இது எதற்கு’ என்று புன்னகையுடன் யோசித்துக்கொண்டே காலை வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

அவன் தூங்கிக்கொண்டே இருக்க, கல்லூரிக்கு நேரம் ஆகிவிட்டது என்று அவனை எழுப்பினாள். தூக்கத்தில் கண்விழித்தவன்… அவள் முகம் பார்த்ததும், புன்னகையுடன் எழுந்தான்.

அவள் அவன் கையில் பற்றியிருந்த அவள் உடையை பார்க்க, அதன் பொருள் புரிந்து அவன், ” நாலு மணிக்கு தான் படுத்தேன் இசை. உன்கிட்ட படுக்கலாம்னு தோணுச்சு பட் உன்ன டிஸ்டர்ப் பண்ணவேணாம்னு தான்” என்றான் அவள் உடையை பார்த்து.

அன்றைய தினம் அழகாக விடிந்ததுபோல இருந்தது இருவருக்கும். இருவரும் கிளம்பி கல்லூரிக்கு சென்று திரும்பினார்கள்.

செழியன் வந்ததும் வராததுமாக வேலையில் மூழ்கிவிட, ப்ரியாவும் அவன் நிலை புரிந்து எதுவும் சொல்லவில்லை.

அவளும் ஒரு சின்ன வேலை எடுத்து செய்ய ஆரம்பித்தாள் அவனிடம் சொல்லாமல். ‘சொன்னால் கண்டிப்பாக வேண்டாம் என்பான்’ என நினைத்து.

இருவரும் இப்படியாக அவரவர் வேலையில் இருந்தனர். செழியன் அந்த ப்ராஜக்ட்’டை நேரத்திற்குள் முடித்துவிட்டான். எப்பொழுதும் எடுத்துக்கொள்ளும் நாட்களை விட இம்முறை அதிக நாட்கள் எடுத்துக்கொண்டான்.

அவன் தேதி பார்க்கும்போதெல்லாம் மனதில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போனது. சிலசமயம் மூச்சு முட்டுவதுபோல இருக்கும். அப்படி ஒருமுறை அவன் மன அழுத்தம் அதிகமாக, அவளிடம் கேட்டுக்கொண்டு அவள் பக்கத்தில் படுத்தான்.

‘தீடீரென இன்று என்ன ஆயிற்று? ஒருவேளை அதுவோ…’ ப்ரியாவிற்கு நேராக கேட்க கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. இருந்தும் அவனிடம் பொறுமையாக ‘தனக்கு அந்த நான்கு நாட்கள்’ என்றாள்.

முதலில் அவனுக்கு புரியாவிட்டாலும், பின் யோசிக்கும்போது அது புரிய, “எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்’டா இருக்கு இசை. அதுக்கு தான் வேறெதுவும் இல்லை” என்றான் ‘அதிலெல்லாம் நாட்டம் இல்லை’ என்பதுபோல.

படுத்த சில நிமிடங்களில், அவளை கட்டிக்கொண்டு உறங்கிவிட்டான்.

ப்ரியாவிற்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. தன்னுடன் இருக்கும்போது, கவலைகள், கோபங்கள் மறந்து, அவன் உடனே உறங்கிவிடுகிறான் என்று.

அடுத்து வந்த நாட்களில் செழியன் ‘மிகவும் குறிகிய நேரத்தில் முடிக்கும் கடினமான ப்ராஜக்ட்’ ஓன்று எடுத்து செய்ய ஆரம்பித்தான்.

அறுபத்தி ஐந்தாயிரம் அதன் மதிப்பு. சில காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் அதை செய்ய ஆரம்பித்து அவர்களால் முடியாமல் போக, கடைசியாக செழியனிடம் வந்தது அந்த வேலை.

முதலில் செழியனுக்குள் ஒரு சின்ன பயம். ‘முன்பு இதுபோல வேலை முடிப்பதற்கு வெகு சில நாட்கள் போதும். ஆனால் இப்போதெல்லாம் கவனம் அதிகம் சிதறுகின்றது. முடிக்க முடியுமா? அதுவும் அந்த நாள் வேறு வருகிறதே’ என்றது தான் அவன் பயமே. ஆனால் அந்தத் தொகை அவனை ஈர்த்தது. ஒப்புக்கொண்டான்.

மாலை இருவரும் வீடு வந்ததும் வேலையில் இறங்கினான். ப்ரியா சிலசமயம் பேச்சுக்கொடுத்தாலும், அவள் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்வான். வேறேதும் அதிகமாக பேசவில்லை. அது ப்ரியாவிற்கு ஒருவகையான ஏமாற்றத்தை தந்தது.

நாட்கள் இப்படியாக நகர, ப்ரியாவும் தன் இறுதியாண்டு ப்ராஜக்ட் முடிக்கும் தருவாயில் இருக்க, கொஞ்சம் வேலை பளு அதிகமானது. அவளும் அதில் கவனம் செலுத்தினாள்.

செழியனுக்கோ, வேலை பளு ஒரு பக்கமிருந்தாலும், அந்த தேதி, அவன் மனதை வெகுவாக அமைதியிழக்கச்செய்தது.

இத்தனை வருடங்கள் அந்த தேதி வரும்போதெல்லாம் மனதின் அழுத்தம் அதிகமாகி நெஞ்சுவலியே வருவதுபோல உணர்வான். ஆனால் இந்த ஓரிரு வருடங்கள் ப்ரியா அவனுடன் பகல் பொழுதில் உடன் இருந்தது கொஞ்சம் அமைதியுறச்செய்தது.

அதுவும் இப்போது ப்ரியா கூடவே இருக்க, அமைதியை தேடி அவளிடம் சென்றான். அவள் பால்கனியில் உட்கார்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் பக்கத்தில் உட்கார்ந்த செழியன், அவளை வேலை செய்யவிடாமல் அவள் கையை இறுக பற்றிக்கொள்ள, அவள் முதலில் புரியாமல் பார்த்தாள்.

செழியன் மனது மிகவும் படபடத்தது. அவள் கைகளில் அழுத்தம் தந்தான். ப்ரியா அவனிடம்… ” உன் வேலை முடிஞ்சதா இளா? எனக்கு தான் இன்னும் முடியல” பட்டும்படாமல் சொல்ல, அவளை ஆழமாக பார்த்தான்.

அவன் மனதில், ‘ஓ நான் சொன்னதை எனக்கே சொல்கிறாள். போ என்று சொல்லாமல் சொல்கிறாள்’… நெஞ்சம் வலித்தது. இருந்தும்… “சரி… நீ வேலை பாரு” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான் உடனே.

ப்ரியாவிற்கு ‘தவறாக சொல்லிவிட்டோமோ’ என்று தோன்றினாலும், ‘வேலை என்றால் இருவருக்கும் ஒன்று தானே. தவறாக எடுத்துக்கொள்ளமாட்டான்’ என நினைத்து வேலையில் மூழ்கினாள் மறுபடியும்.

மணி பனிரெண்டு ஒன்று இரண்டு என கடக்க, மொபைலை பார்க்காமல் வேலை செய்தவள் அப்போது தான் அதை பார்த்தாள்.

கவிதாவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘இந்த நேரத்திலா’ என்று யோசித்து அதை பார்க்க, அதிர்ந்து போனாள் ப்ரியா.

கவிதா அனுப்பிய செய்தி… ‘இன்று செழியனின் பிறந்தநாள். எங்கள் அம்மாவின் இறந்தநாள். அவனுக்கு வாழ்த்து சொன்னால்… அவனை கஷ்டப்படுத்துவது போல இருக்கும். அதனால் சொல்லவில்லை’ என்றிருந்தது.

அதை படித்த ப்ரியாவின் கண்களில் கண்ணீர் வெளிவந்தது. ‘அவன் எந்த மனநிலையில் அவளிடம் இரவு வந்திருப்பான்’ என்று புரிந்தது.

அவன் ID கார்டில் வேறு தேதி பிறந்தநாளாக இருந்ததால் அவளுக்கு தெரியவில்லை. அவசரமாக உள்ளே சென்றாள். அவன் கையை முகத்தின் குறுக்கே வைத்துக்கொண்டு படுத்திருந்தான்.

‘தூங்கிவிட்டானோ’ என நினைத்து… “இளா” என்றாள் மெதுவாக. அவன் தூங்கவில்லை போலும். “ஹ்ம்ம்” என்றான் முகத்தில் இருந்து கை எடுக்காமல்.

அவள், அவனருகில் சென்று கையை எடுக்க முற்பட, அவன் விடவில்லை. இருந்தும் தன் பலம்கொண்டு அவள் இழுக்க, அவன் கண்கள் சிவந்திருந்தது. அதை பார்த்து அதிர்ந்த ப்ரியாவின் மனது பதைபதைத்து.

“இளா” இப்போது அவள் குரல் தழுதழுத்தது.

‘அவளுக்கு தெரியுமோ… அதுதான் இப்படி அழைக்கிறாளோ… பரிதாபப்படுகிறாளோ’ என்ற பல கேள்விகள் அவன் மனதில் எழ, “போய் படு இ…” என்பதற்குள், அவனை இறுக கட்டிக்கொண்டாள் ப்ரியா.

“ஒன்னுமில்லை இசை… போய் படு” என்று அவன் உதடுகள் சொன்னாலும் அவன் மனவலி, தவிப்பு அவளுக்கு புரிந்தது.

அந்த நொடி ‘அவனுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும். அவனை மறந்து அவன் இருக்கவேண்டும்’ இதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை அவளுக்கு.

அவள் மெதுவாக அவன் முகம் பார்க்க, அவன் கண்கள் மூடியபடி இருந்தான். ஆனால் கண்ணுக்குள் கண்மணிகள் ஓயாமல் அங்கும் இங்கும் நகர, அவனின் படபடத்த இதயத்துடிப்பு அவளால் உணர முடிந்தது.

அவன் கைகளில் நடுக்கம் தெரிந்தது. அவனை தன்னிலை படுத்த அவள் மனதில் ஒன்றே ஒன்று தான் தோன்றியது. சரியா தவறா, செய்வோமா வேண்டாமா… என்றெல்லாம் அவளுக்கு யோசிக்க முடியவில்லை.

அடுத்து அவன் பேசும்முன் அவன் இதழ்களை அணைத்தாள் அவளிதழ் கொண்டு.

அவனுக்கு இத்தனை நேரம் கட்டுப்படுத்திய கண்ணீர்… மூடிய கண்களில் இருந்து வெளியேற, அவனின் தவிப்பு அவளின் கண்களில் கண்ணீரை தந்தது.

அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவள் முன்னேற, அவனை கொஞ்சம் மீட்டிருந்தாள் ப்ரியா.

முதலில் ஆறுதலுக்காக என்று ஆரம்பித்த கூடல்… பின், ஆசையாக மாறி, இத்தனை நாட்களின் தவிப்பு மேலோங்க, கொஞ்சம் கொஞ்சமாக எல்லைகளை தளர்த்தினார்கள் இருவரும். அவளுக்காக என்று அவனும், அவனுக்காக என்று அவளும் ஒருவருக்கொருவர் இனிதே சங்கமித்தனர்.

காலைப்பொழுதும் புலர்ந்தது. நேரம் கழித்து, முதலில் விழித்தெழுந்தான் செழியன். இரவின் களைப்பு ப்ரியாவை நன்றாக உறக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.

அவளை பார்த்தவன் கண்களில் கண்ணீருடன் புன்னகை. அவள் நெற்றில் அவன் முத்தமிட, அது அவளின் தூக்கத்தை கலைக்க… கொஞ்சமாக கண்திறந்த ப்ரியா, “தூக்கம் வருது இளா” என்று முணுமுணுத்தாள்.

“தூங்கு. லீவ் தானே இன்னைக்கு” என்று அவளுக்கு போர்த்திவிட்டுவிட்டு, அவன் காலைவேலைகளை செய்ய சென்றுவிட்டான். ப்ரியாவும் உறங்க முயற்சித்தாள்.

சிறிது நேரம் கழித்து, அவன் லேப்டாப் முன் உட்கார, ப்ரியாவும் தூக்கம் தடைப்பட்டதால் எழுந்து உள்ளே வந்தாள்.

அவளை பார்த்தவுடன், ஆழமாக பார்த்து, மனமார அவன் புன்னகைத்தான். அந்த பார்வை, அந்த புன்னகை அவளை ஏதோ செய்ய, உடனே குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

செழியன் இருவருக்கும் டீ போட்டுகொண்டு வந்து, மறுபடியும் லேப்டாப்’பில் வந்த ஈமெயில்ஸ் பார்க்க ஆரம்பித்தான்.

அதில் ஒன்றை பார்த்தவன் கண்களில் இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை போய், கோபம் கொப்பளித்தது.

அந்த ஈமெயிலில்… அவன் வேலை சரியான நேரத்திற்கு முடிக்கமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. மதியத்திற்குள் முன்னேற்றம் தெரியவில்லை என்றால், ப்ராஜக்ட்டை ரத்து செய்வதாக வந்திருந்தது.

ப்ரியாவும் அதேநேரம், வெளியே வந்து… அவன் வேலை ஆரம்பித்துவிட்டானே என நினைத்து… அவன் கழுத்தை பின்னால் இருந்து கட்டிக்கொள்ள, “விடு இசை” என்றான் அதே கோபத்துடன்.

“என்ன ஆச்சு” என்று கேட்டபடி அவளும் அந்த ஈமெயிலை பார்க்க… “அப்பாடா. உன்னால முடியாதுன்னு சொல்லிட்டாங்களா. விட்டுத்தொலை” …… ‘நிம்மதியாக இன்றைய தினத்தை களிக்கலாம்’ என்று அவள் சொல்லிமுடிக்கும்முன்… ‘உன்னால முடியாதுன்னு சொல்லிட்டாங்களா…’ என்பதை மட்டும் அவன் கேட்ட மாத்திரத்தில், கோபம் தலைக்கேறி, சட்டென அவன் எழும்போது, அவன் கைபட்டு, அவள் வாங்கித்தந்த லாம்ப் கீழே விழுந்து உடைந்தது.

“என்ன சொன்ன? என்னால முடியாதா? ஓ அப்போ யாரால முடியும்? நான் அவ்ளோ இளக்காரமா போய்ட்டேனா? அப்பறம் எதுக்கு நேற்று…” என்றவன் பேச்சை நிறுத்தி… தன்னை மறந்து அவன் செய்ய நினைத்த காரியம் அவனுக்கு புரிந்து, அவன் அதிர்ந்தான்.

ப்ரியா… அவன் பேசுவதை கேட்டபடி, விளக்கு உடைந்ததை அதிர்ந்து பார்க்க, அவன் செய்ய வந்ததை அவள் பார்க்கவில்லை.

ஆனால் அவனுக்கு அதிர்ச்சி துளியும் குறையவில்லை. ‘தானா இந்த செயலை செய்ய நினைத்தது? அதுவும் என் இசையையா? என்ன காரியம் செய்ய இருந்தேன். மனிதனா நான்?’ அவன் மனம் வெதும்பி அடிக்க ஓங்கிய கையை கீழிறக்கினான்!

18 thoughts on “Thaniperum Thunaiye-41

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved