Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 45B

தனிப்பெரும் துணையே – 45B

செழியனை பார்த்ததும் ப்ரியா மனதில் பல நாட்களுக்குப் பிறகு நிம்மதி மீண்டது. பழையபடி மாறியிருந்தான். ஒரு சின்ன மூச்சை வெளியிட்டபடி புன்னகைத்தாள்.

செழியனுக்கு அவளைப் பார்த்ததும் மனது அடித்துக்கொண்டது. ஒரு வித வலியுடன் அவளை பார்த்தான்.

உடல் இடை குறைந்து, கண்களில் கருவளையம் என அவள் முன்பு இன்டெர்வியூ’வில் கலந்துகொள்ள எப்படி வந்திருந்தாலோ அதை விட சோர்வாகத் தெரிந்தாள். வயிற்றில் கொஞ்சமே கொஞ்சம் மேடு தெரிந்தது.

மருத்துவரை பார்த்ததும் ப்ரியா அவரை உள்ளே அழைத்து உபசரிக்க, செழியன் கண்கள் துளியும் அவளை விட்டு நீங்கவில்லை.

“சோ இசை. ஆர் யு ஹாப்பி… இளன் இஸ் பேக்” மருத்துவர் சொன்னதும் அவரைப் பார்த்து புன்னகையுடன் ஆம் என்று தலையசைத்தாள் ப்ரியா.

“நைஸ். உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசணும்னு தான் நானே வந்தேன். இளன்க்கு ட்ரீட்மெண்ட் நல்ல படியா முடிஞ்சது பட் டேப்ளட்ஸ் ஸ்கெட்யுல் படி சாப்பிடணும். எல்லாம் நார்மலா இருக்கேனு விட்டுடக்கூடாது. இசை நீங்களும் கொஞ்சம் பார்த்துக்கோங்க”

“தென் இளன்… தூக்கம் ரொம்ப முக்கியம். ட்ரீட்மெண்ட்ல உங்க ஸ்லீப்பிங் பேடெர்ன் எப்படி இருந்ததோ அதுவே கண்டின்யு பண்ணணும். எக்ஸ்ட்ரா ஒர்க் எடுத்து பண்ணாலும் நைட் அத பண்ணக்கூடாது” என்றவுடன்…

ப்ரியா, “இனி எக்ஸ்ட்ரா ஒர்க்’கெல்லாம் வேணாம் டாக்டர். எனக்கு எக்ஸாம்ஸ் வந்துடுச்சு. நான் டிபார்ட்மென்ட்ல டெம்ப்ரரி ரோல்’ல அஸோஸியேட் ஒர்க் பண்ணப்போறேன். சோ மேனேஜ் பண்ணிடலாம்” என்றாள் செழியனை பாராமல் மருத்துவரிடம்.

அவன் அவளை தவிர எங்கும் பார்க்கவில்லை. ‘ஏன் தன்னை பார்த்து பேசவில்லை?’ என்ற எண்ணம் தான் அவனுள்.

“குட். நீங்களும் உங்க உடம்ப பார்த்துக்கோங்க. அதுவும் முக்கியம்” அவர் சொன்னதும்… “இங்க செக் அப் போறதுக்கு நல்ல கைனோ (gynecologist) சொல்லுங்க டாக்டர் ” அவள் கேட்டவுடன்… ‘இதுநாள் வரை போகவே இல்லையா’ என்ற எண்ணம் அவனுள்.

மருத்துவரும் மகப்பேறு மருத்துவரை பற்றி சொல்லிவிட்டு… இருவருடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றார்.

அவள் கதவை தாழிட்டு திரும்ப, நொடியும் தாமதிக்காமல், அவளை அணைத்துக்கொண்டான் செழியன். அவனின் அணைப்பு இத்தனை நாட்கள் அவன் பட்ட துன்பம், தவிப்பை உணர்த்தியது அவளுக்கு.

அவன் கண்ணீர் அவள் கழுத்தை நனைக்க, “ஸாரி இசை ரொம்ப கஷ்டப்படுதிட்டேன்ல உன்ன. ரொம்ப ஸாரி” குரல் சரிவர வராமல் கரகரப்புடன் வந்தது.

அதை கேட்ட ப்ரியாவின் நெஞ்சம் அடைத்தது. அவளும் அவனுள் புதைந்துகொண்டாள். அவள் கண்களும் கலங்கியது. ஆனால் வரவிடாமல் தடுத்தாள் ‘தன் வேதனை அவனுக்கு தெரியவேண்டாம்… கஷ்டப்படுவான்’ என்று.

சில நொடிகளுக்கு பின், “ஏன் இசை இப்படி அயிட்ட… ஒழுங்கா சாப்பிடறயா?” அவளை விடுவித்தபடி கேட்க, அவள் தலையசைத்தாள்.

“பேச மாட்டயா? என் மேல கோபமா?” கலங்கிய கண்களுடன் அவன் கேட்க, மறுப்பாக தலையசைத்து… ” நீ சாப்பிட்டிருக்க மாட்ட. சாப்பிடலாமா?” கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவசரமாக தண்ணீரை குடித்தாள் கண்களில் கண்ணீர் வெளிவரக்கூடாது என்று. தன் கஷ்டம், கவலை அவனுக்கு தெரியக்கூடாது என்று.

இத்தனை நாட்கள் கிட்டத்தட்ட எதிலும் நாட்டம் இல்லாமல், அவன் நல்லவிதமாக திரும்பி வரவேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை. அந்த வீட்டில் எங்கு திரும்பினாலும் அவன் அங்கே பட்ட துன்பங்கள் மனதில் வந்து இம்சித்தது.

மனதளவில் இப்படி என்றால் உடளவில் இன்னமும் அதிகம்.

இரண்டாம் மாதம் முடியும் நிலை. காலை சோர்வு, ஏதுசாப்பிட்டாலும் வயற்றில் நிற்காமல் வெளிவந்துகொண்டிருந்ததது.

ஏனோ அவன் திரும்பி வந்ததும், மனம் மாறி வந்ததும், அவனே தன் குழந்தை என்று விரும்பி அழைத்து சென்றால் தான் செக் அப் செல்லவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். அவள் வீட்டிலும் சொல்லவில்லை.

சில நொடிகள் கழித்து அவள் பின்னே வந்த செழியன்… “டாக்டர்ட்ட போலாம் இசை” என்றான்.

அதை கேட்டதும் மனதுக்குள் அவன் மாற்றத்தை நினைத்து நெகிழ்ந்த ப்ரியாவிற்கு… சந்தோஷத்தில் இதுவரை கட்டுப்படுத்திய கண்ணீர் மடைதிறந்துவிடும் என்பதுபோல இருந்தது.

அழுகைக்கு துடிக்கும் தன் உதடுகளை கட்டுப்படுத்தி… உடனே சரி என்பதுபோல தலையசைத்தாள்.

அதிகம் அவள் பேசவில்லை. அவள் முடிவெடுத்தது அதுதான்.

‘அவன் மனம்விட்டு அவளிடம் பேசவேண்டும் என்றால், அவள் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தானாக அவன் பேசுவான்’ என்று நினைத்தாள்.

இதுகுறித்து மருத்துவரிடம் பேசியபோது அவர் முதலில் மறுத்தார். இது சில சமயங்களில் ஆபத்தாக முடியலாம் என்று.

ப்ரியா அவரிடம்… ‘தான் செழியனிடம் நன்றாக பேசியபோது, அவன் அதிகம் பேசவில்லை. அதுவே தான் அமைதியாக அவனை கவனித்தபோது, அவன் நிறைய பகிர்ந்துகொண்டான். சிலசமயம் அவன் பேசுவது சம்மந்தமில்லாமல் இருந்திருக்கலாம். அது அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பால் நடந்திருக்கலாம். ஆனால் பலசமயம், நன்றாக பேசினான். தன்னுடைய படிப்பை பற்றி, நட்பை பற்றி, இன்னமும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டான்’ என்றாள்.

மருத்துவர் அதிலுள்ள நிறை குறைகளை அவளுக்கு புரியவைத்தார். அவனிடம் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் இந்த முறையை உடனடியாக கைவிடவேண்டும் என்றார்.

ஆனால் ‘கண்டிப்பாக அவன் மாறுவான்’ என்று திடமாக அவள் நம்பினாள்.

ப்ரியா இருவருக்கும் உணவு எடுத்துக்கொண்டு வர, அவள் அமைதியை பார்த்த செழியன்… ‘தன்னுடைய சில செயல்களினால் அவள் மனம் துவண்டு போயிருக்கும். அதுதான் சரியாக பேசவில்லை. அவள் பழையபடி மாறும்வரை, காத்திருப்போம்’ என்று எண்ணினான்.

இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன், அவளை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச்சென்றான்.

மருத்துவர் ‘இதுவரை எந்த பரிசோதனையும் செய்யவில்லையா? அதுவும் முதல் மூன்று மாதங்கள் எவ்வளவு முக்கியம்? எப்படி இப்படி அலட்சியமாக இருக்கிறீர்கள்… படித்தவர்கள் தானே’ என்று கடிந்துகொண்டு…

“பை காட்ஸ் க்ரேஸ் எந்த பிரச்சனையும் விசிபில்’லா இப்போ தெரியல. உடனே ஸ்கேன் எடுத்துட்டு வாங்க. ஹார்ட் பீட்… மத்ததெல்லாம் செக் பண்ணணும்” என்றார்.

இருவரும் மருத்துவர் அறையில் இருந்து வெளிவர, செழியன் மனதில் சின்ன குற்ற உணர்வு. தன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என்று.

ஆனால் ப்ரியாவுக்கு நம்பிக்கை இருந்தது. உடலளவில் தவறாக எதுவும் இதுவரை தெரியவில்லை. அதனால் கொஞ்சம் தெளிவாக இருந்தாள்.

இருவரும் ஸ்கேன் செய்யும் இடத்திற்கு சென்றார்கள்.

செழியனும் உள்ளே சென்றான் அவர்கள் மறுத்தும் கேட்காமல். ப்ரியாவிற்கு உள்ளுக்குள் அவனின் ஆசையை பார்த்து சிரிப்பு வந்தாலும், அமைதியாக அவனை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தாள்.

செழியன் ப்ரியாவின் கையை பற்றிக்கொண்டான். அவனுள் ஒரு சின்ன பயம் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று.

“என்ன ஸார்… உள்ள வரக்கூடாதுன்னு சொல்லியும் கேட்காம சண்டை போட்டுட்டு உள்ள வர்றீங்க. இவ்ளோ ஆசை படறவர் ஏன் ஆறு வாரத்துல எடுக்கவேண்டிய ஸ்கேன் இப்போ எடுக்கறீங்க? ஏன்… நீங்க ஊர்ல இல்லையா இல்ல இப்போதான் ஆசை… ஞானோதயம் எல்லாம் வந்துச்சா?” ஹிந்தியில் கேட்டபடி ஸ்கேன் எடுக்க ஆரம்பித்தாள்.

அந்த பெண்ணிற்கு கடுப்பு… சொல்லியும் கேட்கமால் உள்ளே வந்தவனை பார்த்து. அதுவும் ஒவ்வொன்றையும் உற்று பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

ப்ரியா ‘என்ன பேச்சு இதெல்லாம்’ என்று கோபப்பட்டு திட்ட வரும்முன்… “ஹ்ம்ம். இப்போ தான் குழந்தையோட அருமை புரிஞ்சிருக்கு” என்றான் புன்னகையுடன்.

ப்ரியா அவனை பார்த்து முறைத்தவண்ணம்… “அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சு. தேவையில்லாத பேச்சு எதுக்கு இப்போ” என்றாள் அரைகுறை ஹிந்தியில். அந்த பெண்ணிற்கு புரியவில்லை.

ஆனால் செழியன் அவள் ஹிந்தியை பார்த்து கிண்டல் செய்வதுபோல சிரித்தான். ‘அப்பாடா எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதை பார்ப்பதற்கு’ ஆசையாக பார்த்தாள் அவனை. கண்கள் மறுபடியும் கலங்கப்பார்த்தது. அமைதியாக கண்களை திரையின் பக்கம் மாற்றினாள்.

அப்போது அந்த பெண் முகம் மலர்ந்து “ட்வின்ஸ்” என்றாள் இருவரையும் பார்த்து.

அந்த ஒரு வார்த்தை சொன்னதும் இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். வார்த்தையால் சொல்லமுடியாத சந்தோஷம் இருவருக்கும். ஒரேசமயம் இருவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.

செழியன் நன்றி கலந்த பார்வையுடன்… பற்றியிருந்த அவள் கைகளில் முத்தமிட்டான்!

20 thoughts on “Thaniperum Thunaiye – 45B

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved