Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye 48

தனிப்பெரும் துணையே – 48

மனவருத்தத்துடன் இருந்த ஸ்வாமிநாதன், “முன்னாடிலாம் தெரியல. பசங்களுக்கு எல்லாம் செய்யணும் அப்படிங்கறது மட்டும் தான் மனசுல இருந்துச்சு. ஆனா வயசாக ஆக தான் தெரியுது வாழ்க்கைல நான் எவ்ளோ இழந்துருக்கேன்னு. இதோ வெண்பா குட்டிகூட விளையாடறப்ப தோணுது உங்ககூட நான் இப்படிலாம் இருந்தது இல்லையேன்னு. காலம் கடந்த புரிதல்” மனம் நொந்து பேசினார்.

அவரை செழியன் தேற்றினான். அவன் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போல ஒரு உணர்வு இப்போது. அவன் கண்கள் ப்ரியாவை பார்த்தது நன்றியுடன். அதுவரை அவனையே பார்த்த ப்ரியா, அவன் பார்த்தவுடன் பார்வையை வேறுபக்கம் மாற்றினாள்.

வெண்பா இவர்கள் பேச ஆரம்பித்தபோதே தூங்கிவிட்டாள்.

அங்கு ஒரு கனமான சூழ்நிலை நிலவ, ப்ரியா அதை மாற்ற எண்ணி… “மதிய சாப்பாடு சாப்பிட யாருக்கும் ஐடியா இல்லையா. சமைக்கணுமே” என்றதும், கவிதா கண்களை துடைத்துக்கொண்டு “ஆமா நீ ரெஸ்ட் எடு ப்ரியா. நான் சமைக்கறேன்” என்று எழுந்தாள்.

“அண்ணி அண்ணி. இருங்க. இன்னைக்கு உங்களுக்கும் எனக்கும் லீவ்” என்றதும் அனைவரும் ப்ரியாவை பார்க்க, செழியன்… “வெளி சாப்பாடு வேணாம் இசை இந்த டைம்ல” என்றான் கண்டிப்புடன்.

‘பார்ரா அத யாரு சொல்றதுன்னு’ என மனதில் நினைத்து அவனை முறைத்தவாறு… “எதுக்கு வெளிய? அதுதான் நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே. போய் சூப்பர் சாப்பாடு செய்வீங்களாம்” அகிலனையும் செழியனையும் பார்த்து சொன்னவள், “என்ன அண்ணி ஒகே தானே” என்றாள் கண்ணடித்து.

“சூப்பர் டபுள் ஒகே” என்றாள் கவிதா சிரிப்பை அடக்கிக்கொண்டு. ஸ்வாமிநாதன் முகத்தில் இப்போது சின்ன புன்னகை.

அகிலன் செழியன் ஒருசேர அவளை பார்த்து முறைத்ததும்… “சாதம், சாம்பார், பொரியல் போதும். அப்புறம் சாம்பார் நைட்கும் சேர்த்து வச்சுடுங்க தோசைக்கு தனியா சைட் டிஷ் செய்யவேண்டாம் பாருங்க” எது எவ்வளவு செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டாள் ப்ரியா.

செழியனுக்கு இப்போது சிரிப்பு வந்துவிட்டது. “நீங்க இருங்க நான் பண்ணிடறேன்” என்று அகிலனிடம் சொல்லிக்கொண்டே அவன் எழ, “இல்ல இல்ல இருக்கட்டும். இன்னைக்கு நம்ம திறமையை காட்டவேண்டியதுதான்” என்று அகிலனும் எழுந்தான்.

செழியனுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது அகிலனுடன் சேர்ந்து செய்யவேண்டும் என நினைத்து. ஆனால் அகிலன் சகஜமாக பேசிக்கொண்டே இருந்தான். செழியன் அதிகம் பேசவில்லை இருப்பினும் முன்பு போல அமைதியாகவும் இல்லை… ஓரளவிற்கு பேசினான்.

இங்கு கவிதாவும் ப்ரியாவும் வெளியில் இருந்தவாறே உள்ளே இருந்தவர்களை கிண்டல் செய்துகொண்டும் சாப்பாட்டின் மனம் நுகர்ந்துகொண்டும் இருந்தனர்.

ஒருவழியாக சமையல் முடித்து பாத்திரம் வரை அனைத்தையும் கழுவிவைத்துவிட்டு தான் வெளியே வந்தனர் செழியனும் அகிலனும்.

அனைவரும் சாப்பிட ஆரம்பிக்க, “பரவால்லயே நல்லா இருக்கே. அண்ணி நமக்கு கைவசம் ஒரு தொழில் இருக்கு. தரமான ரெண்டு குக் நம்ம கிட்ட இருக்காங்க” என்றாள் ப்ரியா கள்ளப்புன்னகையுடன். “அடிங்க” என்று மண்டையில் குட்டினான் அகிலன்.

செழியன் ப்ரியாவை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் அவன் பார்ப்பதை அவ்வப்போது பார்த்தாள். அவளின் பழைய கலகலப்பு துடுக்குத்தனம் மீண்டிருந்தது போல இருந்தது அவனுக்கு. ‘என்கிட்ட இப்படி பேசாத. இருக்கு இன்னைக்கு நைட்’ என புன்னகைத்துக்கொண்டே சாப்பிட்டான்.

அன்றைய மாலை வீடே களேபரமானது லட்சுமி வந்ததுவுடன். வந்ததும் கன்னத்தில் ஒரு அடி ப்ரியாவிற்கு. அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, அகிலன் லட்சுமியை தடுக்க வர, செழியன் “என்ன அத்த அவளை எதுக்கு அடிச்சீங்க?” என்று கோபத்தில் கேட்டான்.

ப்ரியா அம்மாவிடம் அடி வாங்கியதற்கெல்லாம் கவலை படவில்லை. அது அவள் எதிர்பார்த்ததுதான். ஆனால் செழியன் பேசியது தான் ஆச்சர்யம்.

ஜெயராமனுக்கும் இதில் வருத்தம் தான். அமைதியாக இருந்தார்.

“என்னப்பா பேசறீங்க? இதெல்லாம் மறைக்கக்கூடிய விஷயமா? ஒன்னில்லை ரெண்டு உயிர் உள்ள இருக்கு. அத சுமக்கற இவ உடம்பு அதைவிட முக்கியம். கடவுள் புண்ணியத்துல ஒன்னும் ஆகல. ஒரு அம்மாக்கு தான் தெரியும் அதோட வலி என்னனு. என்கிட்ட மறைக்கற அளவுக்கு என்ன? அப்போ அம்மா அவ்ளோதான் இல்லையா?” கோபத்தில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்தார் லட்சுமி.

அவர் கண்களில் கண்ணீரை பார்த்தவுடன், செழியனுக்கு ‘என்னடா இது’ என்றாகிவிட்டது.

ப்ரியா லட்சிமியை கட்டிக்கொண்டு, “அம்மா ஸாரி மா. மறைக்கணும்னு இல்ல. எனக்கே கொஞ்சம் டவுட். அதுவும் ப்ராஜக்ட் வேலை அது இதுனு” என்று எதையோ சொல்லி சமாளிக்க பார்த்தாள்.

அம்மா அப்பாவிற்கு செழியன் குறித்து தெரியவேண்டும் என நினைத்தாள். எங்கே தெரிந்து அது ஒரு பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று.

‘அவள் சமாளிக்கப்பார்கிறாள்’ என்று புரிந்தது செழியனுக்கு. அவன் முன்னமே முடிவெடுத்ததுதான். தன்னை குறித்து ப்ரியாவின் பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பது. அதற்கான தருணம் இதுதான் என நினைத்தான்.

“அவளை எதுவும் சொல்லவேண்டாம். தப்பு என் மேல தான்” என்றான் செழியன்.

“இளா” அழுத்தமாக அழைத்து கண்களால் வேண்டாம் என்றாள் ப்ரியா. செழியன் புன்னகையுடன் அவள் பார்வையை புறம் தள்ளிவிட்டு, “உங்க கிட்ட பேசணும்” என்றான் லட்சுமியையும் ஜெயராமனையும் பார்த்து.

“ப்ரியா. நீ போய் காபி போடு” என்று அவளை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தான்.

அவளும் முறைத்துக்கொண்டே நிற்க, “போன்னு சொன்னேன்” அழுத்தமாக சொன்னவன்… “நான் போன நாலு வாரம் ட்ரீட்மெண்ட்ல இருந்தேன். உங்க கிட்ட மறைக்கிறது தப்பு. உங்கப்பொண்ணோட வாழ்க்கை இது… அதுனால தான்” என்றான் ப்ரியாவின் பெற்றோரைப்பார்த்து.

அவர்கள் அதிர்ந்து என்ன ஆயிற்று என கேட்க, தனக்கு நடந்த பிரச்சனை பற்றி சொன்னான் செழியன். சமையலறையில் இருந்த ப்ரியாவின் கண்கள் கலங்கியது. ‘ஏன் இவன் இவ்வளவு நல்லவனாக இருக்க வேண்டும்?’ மனம் அடித்துக்கொண்டது.

அகிலன் ‘ப்ரியாவிற்கோ செழியனுக்கோ ஏதாவது பிரச்சனை என்றால் பேசுவோம்’ என்று அமைதியாக இருக்க, செழியன் சொல்ல சொல்ல கவிதாவிற்கும் ஸ்வாமிநாதனுக்கும் மனம் அழுத்தியது அவன் வாழ்க்கையை நினைத்து. ரத்த பந்தம் ஆயிற்றே!

செழியன் வெற்றுமுகத்துடன், “நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். இந்த வாழ்க்கை உங்க பொண்ணுக்கு வேண்டாம்னு நினைச்சாலும்” என்று அவன் முடிக்கும்முன் சமையலறையில் ‘தொம்’ என்ற ஒரு பெரிய பாத்திரம் விழுந்தது.

அவனுக்கு புரிந்தது அது அவனுக்கானது என்று. கோபத்துடன் வெளிய வந்த ப்ரியா… “இன்னொரு வார்த்தை பேசின உள்ள விழுந்தது உன் மண்டைல விழும். உண்மையா கொன்னுடுவேன்” அவள் கோபமாக தான் பேசினாள். ஆனால் செழியனுக்கு சின்ன புன்னகை.

அவன் தொடர்ந்தான். “மொதல்ல ரொம்ப பயந்தேன். இசை என்ன விட்டுட்டு போய் நல்லா வாழணும்னு நினச்சேன். நான் அவளுக்கு சரியான ஆள் இல்லனு தோணிச்சு. ஆனா டாக்டர் இது பெரிய விஷயம் இல்லனு சொன்னார். சமாளிக்கக்கூடியதுனு சொன்னார். ஆனா இது திரும்ப வரவே வராதுன்னு உறுதியா சொல்லமுடியாதுனும் சொன்னார். பட் எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் கவனமா இதை இனி ஹாண்டில் பண்ணுவேன்னு” என்று அவன் முடித்தான்.

லட்சுமி ஜெயராமன் முதலில் அதிர்ந்தனர். பின் அகிலனும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் மனஅழுத்தத்துடன் இருந்தவன் தான். அதன் வலி அவர்களுக்கு தெரியும்.

ஆனால் செழியன் பேசிய விதம், அதுவும் மறைக்காமல் பேசியது, மகள் வாழ்க்கை என நினைத்து பேசியது, அவர்களை நெகிழச்செய்தது. மனைவியின் நலனுக்காக தன் வாழ்க்கையை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாத இவனை விட வேறு யார் தங்கள் மகளை நன்றாக பார்த்துக்கொள்ளமுடியும் என்று தோன்றியது. அதையே அவனிடத்தில் சொன்னார்கள்.

ஆனால் ப்ரியா கோபத்துடனே இருந்தாள். பேசவும் இல்லை அவனை பார்க்கவும் இல்லை.

வீட்டில் வசதி குறைவு என்று சொல்லி, வற்புறுத்தி வந்தவர்களை ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்தான் செழியன்.

அவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பவும், உள்ளறையிலேயே படுக்க தயார் செய்து இருவரும் படுக்க, அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து பின்புறம் காட்டி படுத்தாள் ப்ரியா.

“என் மேல இன்னும் கோபமா?” அவன் கேட்க அவளிடம் பதிலில்லை.

“அக்கா என்கிட்ட பேசினா. அவ கல்யாணத்துல நடந்ததெல்லாம் சொன்னா. உன் அண்ணன் போல ஒருத்தர் கிடைக்க புண்ணியம் பண்ணிருக்கணும்னு சொன்னா. அதை கேட்க நிறைவா இருந்துச்சு இசை. இன்னைக்கு நான் எவ்ளோ நிம்மதியா இருக்கேன் தெரியுமா?” அவன் மனதில் இருப்பதை பேசினான்.

அவளுக்கும் மனதில் நிம்மதி. ஆனாலும் அவன் மேல் கோபம்… இன்று அவன் தன் பெற்றோரிடம் பேசியதை குறித்து. ‘அதெப்படி முடிவை அவர்களிடம் தரலாம்?’ என்ற கோபம்.

“இசை திரும்பமாட்டயா” அவன் மறுபடியும் கேட்க, அவளிடம் அசைவு மட்டும் இருந்தது ஆனால் பேசவில்லை.

“ஓ எங்க என்னை பார்த்தா கோபம் போயிடும்னு பயத்துல திரும்ப மாட்டேங்கறயா?” வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

“எனக்கென்ன பயம்” என்று கோபத்துடனே அவள் திரும்ப, அவன் கண்கள் கூட இப்போது சிரித்தது அவளின் கோபமான முகத்தை பார்த்து.

“கோபமா இருக்கயே சமாதானம் செய்யவா இசை?” என்றவன் குரல் இப்போது வேறு மொழி பேசியது. அவள் முகத்தில் புரண்ட முடியை அவன் ஒதுக்க… ப்ரியாவிற்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது.

தன்னை சமநிலை படுத்திகொண்டு… “எனக்கு டையர்ட்’டா இருக்கு. தூக்கம் வருது” என்றாள் திக்கி திணறி.

அவளின் முகமற்றதை ரசித்துக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டு… “இப்போ வேணா தூங்கு. எப்பவும் இப்படி எஸ்கேப் ஆகமுடியாது” என்றான் குறும்புடன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் ஆசையாக தந்த முத்தம். அவள் உடல் சிலிர்த்தது.

எங்கே தன் முகம் வெட்டவெளிச்சமாக தன் மனதை காட்டிவிடுமோ என நினைத்து உடனே திரும்பிபடுத்துக்கொண்டாள். இப்போது வெட்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்ததோ?

செழியனோ அவள் அவசரமாக திரும்பிப்படுத்ததை பார்த்து சிரித்துக்கொண்டே மனநிறைவுடன், உறங்க ஆயத்தமானான்.

அடுத்தநாள் காலை… குடும்பமே மறுபடியும் வீட்டிற்கு வந்தது. மதியம் கிளம்புவதாக இருந்தார்கள்.

லட்சுமி ப்ரியாவிடம்… “நான் வந்து இங்க இருக்கேன் ப்ரியா உன்ன பார்த்துக்க” என்றார். ப்ரியா இதை எதிர்பார்த்திருந்தாள். ஆகையால் முன்னமே ஒரு முடிவும் எடுத்திருந்தாள்.

“இருக்கட்டும்மா. வெண்பாவை யாரு பார்த்துப்பா? உங்கிட்ட அவ ரொம்ப பழகிட்டா” என்றாள்.

அவர் அதுவும் உண்மை தான் என நினைத்தாலும்… “இப்போ உனக்கு ஒரு ஹெல்ப் வேணும் ப்ரியா” என்று அவர் யோசிக்க, அகிலன், கவிதா ‘வெண்பாவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பேசவரும்முன்…

“அப்போ மாமா நீங்க வந்துடுங்க” என்றாள் ப்ரியா ஸ்வாமிநாதனை பார்த்து.

அனைவரும் ஸ்வாமிநாதன் உற்பட அதிர்ச்சி அடைய… “என்ன மாமா இங்க இருக்க மாட்டிங்களா? உங்க மருமகன் சொன்னா கேட்பீங்க ஆனா மருமக சொன்னா கேட்க மாட்டிங்களா?” போலியாக நொடிந்துகொள்ள, செழியனுக்கு அவள் பேசும் பொருள் புரிந்து புன்னகையுடன் கண்கள் கலங்கியது.

12 thoughts on “Thaniperum Thunaiye 48

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved