Thaniperum Thunaiye -14
தனிப்பெரும் துணையே – 14
அவளை பார்த்த செழியன், கேள்வியுடன் “இன்டெர்வியூ’வா?” என கேட்க… புன்னகையுடன் ஆம் என தலையசைத்தாள்.
ஒரு நொடி ஆழ்ந்து அவளையே பார்த்தான்.
பின் கண்களை இறகமூடி, முகத்தை இடதுபுறம் திருப்பி மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டபடி, மறுபடியும் அவளை பார்த்து “போலாமா” என கேட்க, அவன் முக மாற்றத்தை புரிந்துகொள்ள அவனையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா, அவன் கேட்டவுடன் சரி என்பதுபோல தலையசைத்தாள்.
மெயின் கேட்’டிற்கு அவளை அழைத்துச்செல்லும்போது அவன் மௌனமாகவே இருக்க… அவள், “நான் கால் பண்ணப்ப இங்க தான் இருந்தயா?” என பேச்சை ஆரம்பித்தாள்.
“ஹ்ம்ம். லேக்சைட் கேட் வழியா தான் உள்ள போவேன். நீ கால் பண்ணப்ப தான் உள்ள என்டர் ஆக இருந்தேன்” அவளை பார்த்து சொன்னபோது, சட்டென நடையை நிறுத்திவிட்டு அவள் முகத்தையும், அவளையும் மேலும் கீழும் பார்த்தான்.
அவள் புரியாமல் ‘என்ன’ என்பதுபோல பார்க்க… மறுப்பாக தலையசைத்து “சாப்பிட்டயா?” என அவன் கேட்க…
முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு “ப்ளேன்ல மொக்கையா ஒரு சான்விச். உவாக். நல்லாவே இல்ல… லைட்’டா பசிக்குது” என்றவுடன் அவளை பார்த்து புன்னகைத்துக்கொண்டே “பேக் குடு” என வற்புறுத்தி அவளிடம் வாங்கிக்கொண்டு நடந்தான்.
“நீ டைய்லியும் வீட்ல இருந்து நடந்தே வந்துடுவயா?” அவள் கேட்க… “ஹ்ம்ம். ஒரு ஹாஃப் என் அவர் வாக். அவ்ளோதான்” என்றான்.
இருவரும் மெயின் கேட் வந்ததுவுடன், அவளுடைய டாக்குமென்டன்ஸ் சரிபார்க்கப்பட்டு, ID கொடுத்து உள்ளே அனுப்பப்பட்டாள்.
முதலில் அவளை சாப்பிட அழைத்துச்சென்றான். அவளுக்கு மட்டும் அவன் வாங்கிவர, “உனக்கு” அவள் கேட்க… “மெஸ்ல சாப்டுட்டேன்” என்றான் அவளையே பார்த்துக்கொண்டு.
‘மொதல்ல இந்த மெஸ் ஹாபிட் ஸ்டாப் பண்ணனும்’ மனதில் நினைத்துக்கொண்டே சாப்பிட, அவளை பார்த்துக்கொண்டிருந்தவன் “என்ன திடீர்னு? மாஸ்டர்ஸ்’கு ப்ளான்? கேட் ஸ்கோர் என்ன?” அவளை கேட்டான்.
‘ஆரம்பிச்சுட்டானா கேள்வி கேட்க’ மனதில் சலித்துக்கொண்டாலும்… அவளுடைய ஸ்கோர்’ரை சொல்லிவிட்டு, “திடீர் ப்ளான்’லாம் இல்ல. ஒரு வருஷம் வேலைக்கு போய்ட்டு படிக்கணும்ன்னு ஆல்ரெடி முடிவு பண்ணதுதான்” என்றாள் சாப்பாட்டில் இருந்து தலையை தூக்காமல்.
“மெட்ராஸ் அட்டென்ட் பண்ணியாச்சா?” அடுத்த கேள்வி வந்தது. ‘அடேய் என் வீட்ல கூட சமாளிச்சுட்டேன் டா. உன்ன சமாளிக்கிறது பெரிய கஷ்டம் போலயே’ அதே மைண்ட் வாய்ஸ். “ஸ்கோர் பத்தல” என்று அவன் முகம் பாராமல் பதில் தந்துவிட்டு, “ஹாண்ட் வாஷ் எங்க?” என கேட்டாள்.
அவன் காட்டியபின் விட்டால் போதும் என ஓடிவிட்டாள்.
அவள் வந்தபின்பு, “நல்ல ஸ்கோர். கண்டிப்பா விகரஸ்’ஸா பிரிப்பர் பண்ணிருக்கணும். காங்ராட்ஸ்” என்றான் புன்னகைத்துக்கொண்டே.
‘பின்ன சும்மாவா. மூணு ட்ரைனிங் சென்டர்ல கோச்சிங். ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம் தான் தூக்கம் மகனே’ என நினைத்துக்கொண்டு… “தேங்க்ஸ்” என்றாள்.
இருவரும் வெளிய வந்தவுடன்… செழியன் அவளிடம்,”எத்தனை மணிக்கு ரிட்டன் டெஸ்ட்?” என கேட்க… “டென்’க்கு” என்றாள். “ஒரு நிமிஷம்” என்றவன், யாரையோ அழைத்துப்பேசினான் ஹிந்தியில். அவளுக்குப் புரியவில்லை.
“சரி. இன்னும் 40 மினிட்ஸ் தான் இருக்கு. போலாம்… டைம் சரியா இருக்கும்” அவளை அழைத்துச்சென்றான் தேர்வு நடக்கும் இடத்திற்கு. அவளுடன் அவனும் காத்திருக்க… “உனக்கு வேல இல்லையா இன்னைக்கு? நீ போ நான் பார்த்துக்கறேன்” என்றாள்.
“பரவால்ல நான் இருக்கேன். இப்போதான் பேசினேன் ப்ரொஃபஸர்’ட்ட. ஈவினிங் டு நைட் வேல பார்த்துப்பேன். இல்ல நாளைக்கு ஓவர் டைம் பார்த்துப்பேன்” என்றான்.
“எதுக்கு சிரமம்” அவள் முடிக்கும்முன்… “ஓரளவுக்கு ப்ரஷ் அப் (brush up) பண்ணிட்டல்ல? ரொம்ப கஷ்டமா இருக்காது. பட் பேஸிக்ஸ் ஸ்ட்ராங் ஆஹ் இருக்கணும். இன்டெர்வியூ தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்” என்றான்.
“ஹ்ம்ம்” என்றாள். அடுத்த சில நிமிடங்களில், உள்ளே அழைத்தார்கள்.
ப்ரியா ஒருமுறை செழியனை பார்க்க… “ஆல் தி பெஸ்ட்” என்றான் புன்னகையுடன். அவளும் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள். அடுத்த மூன்று மணிநேரம். இரண்டு தேர்வுகள். ஒருவழியாக முடித்துவிட்டு வெளியே வந்தாள் ப்ரியா.
வாசலையே பார்த்துக்கொண்டிருந்த செழியன் இவள் வந்ததும், இவள் அருகில் வர, “நல்லா பண்ணிருக்கேன்” என்றாள்.
அவனும் புன்னகைத்து… “குட். வா. எப்படியும் ஒன் அவர் மேல ஆகும் ரிசல்ட் வர… போய் சாப்பிடுவோம்” என அவளை அழைத்துச்சென்றான்.
இருவரும் சாப்பிட உட்காரும்போது… “ஹே இளா. என்ன எப்பவும் தனியா சாப்பிடுவ. யாரிது” என கிண்டலுடன் கேட்டபடி ஒருவர் வந்தார்.
அவரை அங்கு எதிர்பார்க்காத செழியன், ஒரு நொடி அதிர்ந்து ப்ரியாவை பார்த்துவிட்டு… “அண்ணா… ரிலேட்டிவ் ணா. இன்டெர்வியூ’க்கு வந்துருக்காங்க” என்றான். “ஓ சூப்பர் மா. எந்த கோர்ஸ்” என கேட்க, ப்ரியா பதில் சொன்னாள்.
“நம்ம தமிழ் சர் தான் இன்டெர்வியூ பேனல்’ல இருக்காருன்னு நினைக்கறேன். எனிவேஸ் ஆல் தி பெஸ்ட்” சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
ப்ரியா செழியனை பார்க்க… “இவர் இங்க டாக்டரேட் முடிச்சிட்டு இங்கயே ரிசெர்ச் ஒர்க் பண்றாரு. சேலம் அவர் ஊரு. அவர் சொன்ன தமிழ் சர், இங்க பத்து வருஷமா வேல பார்க்கறாரு. அவர் உன் பேனல்’ல இருப்பார் போல” என்றான்.
ப்ரியா தலையசைத்துக்கொண்டாள். ஆனால் மனதில்… ‘எப்போடா கேர்ள் ஃபிரண்ட்’ன்னு சொல்லுவ. ஹ்ம்ம்… நான் சொல்ல மாட்டேன் உன்ன சொல்ல வெக்கறேன்’ என நினைக்கும்போது…
“இங்க நம்ம சாப்பாடு சுமாரா தான் இருக்கும். உனக்கு எப்படி இதெல்லாம் செட் ஆகும்?… நேத்தே வந்திருக்கலாமே? ஹாஸ்டல்’ல கூட ஸ்டே பண்ணிருக்கலாம்…” செழியன் கேள்வி படலத்தை ஆரம்பித்தான். ப்ரியாவும் சளைக்காமல் பதிலளித்தாள்.
இப்படியே நேரம் செல்ல, முதல் சுற்றுக்கான ரிசல்ட் வந்தது. ப்ரியா இன்டெர்வியூ’வுக்கு தேர்வாகி இருந்தாள்.
இப்போது கொஞ்சம் படபடப்பும் அவளிடம் ஒட்டிக்கொண்டது. எப்படியும் மாற்றுப்பிரிவு இருக்கிறது. ஆனாலும் இது அவள் விருப்பப்படும் பாடப்பிரிவு.
ஒவ்வொருவராக உள்ளே சென்று முப்பது நிமிடம் குறையாமல் வெளியே வரவில்லை. முடித்துவிட்டு வந்த சிலர் முகம் சோகத்தை காட்டியது.
ப்ரியா இன்டெர்வியூ லிஸ்ட் சென்று பார்த்தாள். அதில் பெயர்கள் பக்கத்தில் இருந்த கேட் ஸ்கோரை பார்த்தாள். இவளை விடவும் அதிகம் ஸ்கோர் செய்த நிறைய பெயர்கள் இருந்தது. அதைப் பார்த்து முகம் வாடிப்போய், அவன் அருகில் அமர்ந்தாள்.
கைகள் இரண்டும் பிசைந்தபடி இருக்க, அவளையே பார்த்தான் செழியன். சில நொடிகளுக்குப் பின், ஆதரவாக அவளின் ஒரு கையை பற்றிக்கொள்ள, திடுக்கிட்டு செழியனை பார்த்தாள்.
“டென்ஷன் வேணாம். ஈசியா ஃபேஸ் பண்ணு. இந்த ரவுண்ட்ல உன்னோட ப்ரெசன்ஸ் ஆஃப் மைண்ட் ரொம்ப முக்கியம். டென்ஷனா இருந்தா, சிம்பிள் கொஸ்டின்’க்கு கூட அன்சர் பண்ணமுடியாம போய்டும்” என அவளை தேற்றினான். அவளும் புன்னகைத்துக்கொண்டே தலையை ஆட்டினாள்.
இது அவளுக்கு தெரிந்த விஷயம் தான். இந்த சுற்று அறிவுத்திறன் – mental ability பற்றியது என்று. இருந்தும் கொஞ்சம் படபடப்பு இருந்தது. இப்போது செழியன் பேசியதும், அதுவும் அந்த ஆறுதல், அவளை கொஞ்சம் லேசாக உணரச்செய்தது.
அவன் அவள் கையை விடவில்லை. அவளும் விலக்கிக்கொள்ளவில்லை. அந்த தொடுகை வேறு எந்த ஒரு எண்ணத்தையும் அவர்களுக்கு விளைக்கவில்லை.
சில நிமிடங்கள் கழித்து ப்ரியா அழைக்கப்பட்டாள். அவள் செழியனை பார்க்க… பற்றியிருந்த அவள் கையில் அழுத்தம் தந்து… “குட் லக்” என்றான்.
அவனின் அந்த முகம்… அதை மனதில் நிறுத்திக்கொண்டாள். முழு நம்பிக்கையுடன், உள்ளே செல்ல, அங்கே நான்கு பேர் இருந்தனர் அதில் ஒரு பெண்மணி.
இவளுடைய resume பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இவளை உட்காரச்சொன்னார்கள்.
பின், அடுத்த முப்பது நிமிடம்… டெக்னிகள் கேள்விகள் கேட்கப்பட்டது. தைரியமாக பதில் தந்தாள். ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை. ஆனால் மற்ற பதில்களில் ஓரளவிற்கு அவர்கள் திருப்தி அடைந்தனர்.
அது முடிந்தபின்… அங்கிருந்த ஒருவர் ஆங்கிலத்தில்… “ஏன் பாம்பே? மெட்ராஸ் கூட கிடச்சுருக்கமே” கேட்டார் அதே கேள்வி!
ப்ரியா ‘மறுபடியுமா? இன்னும் எத்தனை பேர்’ என நினைத்து புன்னகையுடன்… “நான் உண்மைய சொல்றதா? இல்ல இன்டெர்வியூ’காக அன்சர் பண்றதா?” என கேட்க… அங்கிருந்தவர்கள் முகத்தில் குழப்பத்துடன் புன்னகை.
“உண்மைய சொன்னா சான்செஸ் அதிகம்” என்றார் கேள்விகேட்டவர்.
முதல் முறை உண்மையை சொல்ல அவள் மனம் மற்றும் மூளை இரண்டுமே வலியுறுத்தியது. “என்னோட பாய் ஃபிரண்ட் இங்க தான் ரிசெர்ச் பண்றாரு. முன்னாடி இதுபோல சான்ஸ் கிடைக்கல. இப்போ… இதை மிஸ் பண்ண விரும்பல” என்றாள் நேராக.
சில நொடிகளுக்குப்பின்… “அன்எக்ஸ்பெக்டட் அன்சர்” என புன்னகைத்தார் ஒருவர். “ஓகே. வி ஆர் டன். யு மே லீவ்” என்றதும் ப்ரியா நன்றிகூறிவிட்டு திரும்பி நடக்க…
“Get prepared to study for the next two years with your boyfriend” என்றார் அங்கிருந்த பெண்மணி. ப்ரியா கண்கள் மின்ன திரும்பி அவர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு வெளியேறினாள்.
அங்கே செழியன் இவள் வருகைக்காக காத்திருந்தான். இவள் கண்களில் தெரிந்த சந்தோஷம் அவன் கண்களிலும் தொற்றிக்கொண்டது!
