Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 19

தனிப்பெரும் துணையே – 19

இருவரும் படிப்பில் ஒரு கட்டத்தில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டனர். ப்ரியாவிற்கு காலை மற்றும் மதியம் அவன் உணவு செய்துகொண்டுவருவான்.

இருவரும் உண்ணும்போது சந்தித்துக்கொள்வார்கள் பின், மாலையில் கல்லூரி நூலகத்தில் அல்லது அவர்கள் எப்போதும் உட்காரும் மரத்தடியில் சில மணி நேரம் கழித்துவிட்டு அன்றைய தினத்தை முடிப்பார்கள்.

இப்படியாக மாதங்கள் வெகு சீக்கிரமாக நகர்ந்தது. ப்ரியாவும் முதலாம் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டிற்கு வந்திருந்தாள்.

அப்படியிருக்க ஒரு நாள், அவன் காலையில் இருந்து மாலை வரை அழைக்காமல் போக, அவனையும் தொடர்புகொள்ள முடியாமல் போக, அவனுடைய டிபார்ட்மெண்டில் விசாரித்தபோது, அவனுக்கு உடம்பு சரியில்லை என்பது தெரியவந்தது.

அவன் மேல் எல்லையற்ற கோபம். தன்னிடம் சொல்வதற்கென்ன என. அடுத்தநாள் காலையிலேயே புறப்பட்டாள் மழையையும் பொருட்படுத்தாமல்.

அவன் வீட்டுக் கதவு திறக்கப்பட்டவுடன், “அறிவில்ல இளா உனக்கு?” என அவனைப் பார்க்க, ஆள் அடையாளம் தெரியாமல் சோர்ந்து போய் தெரிந்தான்.

இருந்தும் அவன் கண்கள் ஆச்சர்யத்தை காட்டியது. அவன் கோலம் பார்த்து பதறிய ப்ரியா, “இளா. என்ன ஆச்சு? உடம்பு சரியில்லைன்னா சொல்ல மாட்டயா?” அவன் நெற்றியை தொட்டுப்பார்த்தாள். கொதித்தது.

“பெருசா ஒன்னும் இல்ல. அதான் சொல்லல” தயங்கி வந்தது அவன் வார்த்தைகள்.

“வாய மூடு. கோபத்துல ஏதாவது பண்ணிடப்போறேன்” உட்சபட்ச கோபத்தில் இருந்த ப்ரியா, “இந்த கொதி கொதிக்குது ஒன்னுமில்லயா உனக்கு? ஏதாச்சும் சாப்பிட்டயா?” என்று கேட்டபடி சமையலறைக்குள் சென்றாள்.

எல்லாம் காலியாக இருந்தது. வெளியே வந்து அவனைப்பார்த்தாள்.

“மெஸ்ல தான் நேத்தி சப்பாத்தி சாப்பிட்டேன். எதுவுமே செய்ய முடியல. நீ ஏன் இந்த மழைல வந்த?” அவன் கேட்க… “அறிவேயில்லையா உனக்கெல்லாம்? இந்த டைம்ல மெஸ்ல சாப்பிடுவயா? அதுவும் சப்பாத்தி” பதில் கேள்வி கேட்டாள்.

“அங்க நைட் வேற எதுவும் கிடைக்காது” என்றவன் நிற்க முடியாமல் ஹாலில் இருந்த பெட்டில் உட்கார்ந்தான்.

அவனை பார்க்க பார்க்க, நெஞ்சம் வலித்தது. மிகவும் சோர்வாக தெரிந்தான். “என்கிட்ட சொல்லவேண்டியதுதானே. ஏன் இளா… காலைல ஏதாச்சும் சாப்பிட்டயா? டாக்டர்’ட்ட போனயா?” ப்ரியா பரிதவிப்புடன் அவன் அருகில் சென்று கேட்டாள்.

அந்த நிலையிலும் அவன் முகத்தில் சின்ன புன்னகை.

“இந்த மழைல எங்க போகறது? நானே டேப்லட் போட்டுட்டேன். காலைல தோசை தான் இருக்குன்னு சொன்னாங்க. கொஞ்சம் சாப்பிட்டேன் வாந்தி வந்துடுச்சு… விட்டுட்டேன்” அவனால் பேசமுடியவில்லை இருந்தும் பேசிமுடித்தான்.

“தோசைய போய் சாப்பிட்டயா?” முதலில் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தவள், “நீ மொதல்ல படு” என்று அவள் சொன்னதும்… “வேற எதுவும் அங்க சாப்பிட இல்ல. நீ கிளம்பு. மழை அதிகமாயிட்டு இருக்கு” என்றான்.

“கெட்ட வார்த்தை ஏதாச்சும் சொல்றதுக்கு முன்னாடி படுத்துரு” என்றாள் கோபத்தில் பற்களை கடித்துக்கொண்டு.

அவனும் கோபப்பட முயன்றான் ஆனால் முடியவில்லை. படுத்துவிட்டான்.

அவன் அறைக்குள் சென்ற ப்ரியா, அலமாரியில் ஏதாவது துணி இருக்கிறதா என்று பார்க்க, அவனின் சில கைகுட்டைகள் இருந்தது.

உடனே அதை எடுத்துக்கொண்டு, ஹாலில் தரையில் போடப்பட்டிருந்த பெட்டின் பக்கத்தில் மண்டியிட்ட ப்ரியா, கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து அவன் நெற்றியில் வைத்தாள்.

சோர்வில் கண்கள் சொருகியிருந்தவன், கண்விழிக்க, “கொஞ்ச நேரம் நெத்தில இருக்கட்டும். நான் போய் சாப்பிட ஏதாச்சும் செய்றேன்” என்றதும் அவன் எதுவும் பேசவில்லை. அவளையே பார்த்தான்.

அவள் சமையலறைக்கு சென்று கஞ்சியை காய்ச்சி அவனிடம் கொடுக்க… “மிக்ஸி இல்லையே எப்படி செஞ்ச” என்று சாப்பிட்ட்டுகொண்டே கேட்க, அவள் முறைத்தாள்.

“இல்ல நேத்து செய்யலாம்னு யோசிச்சேன். எல்லா ரெசிபி’யும் மிக்ஸில அறைக்கணும்னு இருந்துச்சு. ஆல்ரெடி முடியல அதான் மெஸ்ல சாப்பிட்டேன். சாரி” என்றான்.

“என்கிட்ட உனக்கு சொல்ல என்ன இளா? அப்போ அவ்ளோதானா?” கோபத்துடன் பல பொருள் கொண்டு கேட்க, “அப்படியில்ல. மழையா இருந்துச்சு. தொல்லை பண்ணவேண்டாமேன்னு தான் சொல்லல” என்றான் அவள் முகம் பாராமல்.

“சரி சாப்பிடு. டேப்லட் போட்டு ஒரு நாலு மணிநேரம் இருக்குமா?” அவள் கேட்டவுடன், இருக்கும் என தலையசைத்தான். “இப்போ இன்னொன்னு போட்டுக்கோ. குறையலன்னா டாக்டர்ட்ட தான் போகணும்” என்றாள்.

அவனும் அவள் சொன்னதை செய்தான். பின் அவனை படுக்கச்சொல்லிவிட்டு, மறுபடியும் ஈரத்துணியை நெற்றில் போட்டுவிட்டாள். கொஞ்ச நேரத்தில் காய்ச்சல் குறைந்தது போல தெரிந்தது.

மதியத்திற்கு ரசம் வைத்துக்கொடுக்க, அவனும் சாப்பிட்டுவிட்டு தூங்கினான்.

நேரம் செல்ல செல்ல மழை அதிகமானது. மாலை நேரம் ஆனதும், மீண்டும் காய்ச்சல் திரும்ப வர, “டாக்டர்’ட்ட போலாம் இளா. பயமா இருக்கு” என்றாள் கொஞ்சம் பதட்டத்துடன்.

“இன்னும் ரெண்டு டோஸ் மருந்து சாப்டா சரியாகிடும். நீ எப்படி கஞ்சி வைக்கறதுன்னு சொல்லு போதும். நான் பாத்துக்கறேன் நீ கிளம்பு. டைம் ஆச்சு” என்றான்.

“உன்ன தனியா இப்படியே விட்டுட்டு” என அவள் சொன்னவுடன், “நிறைய தடவ இப்படி ஆகியிருக்கு. அப்போல்லாம் தனியா தான் இருந்தேன். நான் பாத்துக்கறேன். ஆட்டோ அண்ணாக்கு போன் பண்ணு. மழை இன்னும் அதிகமாகறதுக்கு முன்னாடி கிளம்பி” என்றான்.

என்ன செய்வதென்று அவள் யோசிக்கும்முன் அவர்கள் அடிக்கடி செல்லும் ஆட்டோக்காரரை அழைத்தான்.

ஹிந்தியில் அவரிடம் வரச்சொல்ல… அவர் என்ன சொண்னாரோ இவன் முகம் பதட்டத்தை காட்டியது. ப்ரியா புரியாமல் பார்த்தாள். அவன் போனை வைத்தவுடன், ப்ரியாவை பார்த்து முறைத்தான்.

பின் அவனுடன் வேலைப்பார்க்கும் சேலத்தை சேர்ந்த குமாரை அழைத்தான்.

“அண்ணா. என்ன ஆச்சு? ஹாஸ்டல்’குள்ள இப்போ போக முடியாதா?” என கேட்டான். ப்ரியாவிற்கு இப்போது தான் கொஞ்சம் புரிந்தது. திடுக்கிட்டாள்.

“இல்ல… அது… வந்து… இசை எனக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்க வந்தா. இப்போ எப்படி…” செழியன் யோசனையுடன் பேசினான். அந்த பக்கம் அவர் என்ன சொன்னாரோ, தயக்கத்துடன் சரி என்றுவிட்டு போனை வைத்தான்.

“உனக்கு என்ன தெரியும் மும்பை மழ பத்தி? இப்போ எப்படி போவ?” அவன் கொஞ்சம் கோபத்துடன் கேட்டதும் ப்ரியா முழித்தாள். அவளுக்கும் தெரியவில்லை என்ன செய்வது என்று.

“அதிக மழைனால லேக்’ல இருந்து கேம்பஸ்’குள்ள தண்ணி வந்துடுச்சு, இப்போ உள்ள வர்றது safe இல்லனு குமார் அண்ணா சொன்னாரு. ஆட்டோக்காரரு, இந்த தெரு தாண்டி போக முடியாதுன்னு சொல்றாரு” என்று பேசிக்கொண்டே தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான்.

காய்ச்சலால் உடல் சோர்வு ஒருபக்கம் இப்போது இது வேறு.

அவன் அல்லல் படுவதை பார்த்த ப்ரியா “இன்னும் வெளிச்சம் இருக்கு. நான் வேணும்னா குடை எடுத்துட்டு நடந்தே போயிடட்டுமா?” யோசித்தபடி கேட்டாள்.

நிமிர்ந்து பார்த்து அவளை முறைத்தான். அந்த பார்வையே பல திட்டுகளுக்கு சமம் என்பதுபோல இருந்தது ப்ரியாவிற்கு.

அதில் கோபம்கொண்டு… “நான் என்ன நினச்சேனா மழ என்னை பழிவாங்கும்னு? காலைல வர்றப்ப, brim விட கொஞ்சம் கீழ தான் ஏரில தண்ணி இருந்துச்சு” என நொடிந்துகொண்டாள்.

என்ன யோசித்தாலும் பயனில்லை என்று உணர்ந்தவன் போல, “வேற வழியில்லை. வார்டன்’க்கு போன் பண்ணி சொல்லிடு. வெளிய மாட்டிட்டேன்னு. மோஸ்ட்லி ப்ரோப்லம் இருக்காது” என்றான் அவளைப் பாராமல்.

அவளுக்கும் வேறு வழிதெரியவில்லை. அவன் சொன்னதற்கு சரி என்றவள் விஷயத்தை சொல்லிவிட்டு, “அவங்களும் எங்க இருக்கேனா அங்கேயே இருக்க சொன்னாங்க” என்றாள்.

அவனும் தலையை ஆட்டினான். பின் ரூமிற்குள் சென்று ஏதோசெய்துவிட்டு வெளிய வந்த செழியன், “உள்ள பாத்ரூம் இருக்கு. ரெஃப்ரெஷ் பண்ணிக்கோ. வந்ததுல இருந்து அப்படியே இருக்க” என்றான் மறுபடியும் அவள் முகம் பாராமல்.

இதுவரை இங்கு வந்தபோதெல்லாம் அதை அவள் உபயோகித்ததே இல்லை. ஆனால் இன்று. மறுபடியும் அறையை ஏனோ ஒருமுறை பார்வையிட்டாள். பால்கனி வழியாக பார்க்க, வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது.

மழை எப்போது விடும் என தெரியவில்லை. இங்க எப்படி இரவு முழுவதும்? படுக்க இடமில்லை. மாற்று துணியில்லை. தனக்கென்று தனியாக எதுவுமே இல்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு சொல்லமுடியாத பயம்.

இப்படியாக யோசனையுடன் அவள் ரெஸ்ட்ரூமிற்குள் தயக்கத்துடன் நுழைய, அவ்வளவு சுத்தமாக, அவளுக்கென தனியாக அனைத்தையும் வைத்திவிட்டு தான் வந்திருந்தான். இவனுடன் இருக்கையில் எந்த பயமும் தேவையில்லை என நினைத்து சில நிமிடங்கள் கழித்து வெளியே வர, அவனால் முடியாமல் படுத்திருந்தான்.

மறுபடியும் கஞ்சி காய்ச்சி கொடுத்துவிட்டு, அவன் உறங்கியபின், நேரத்தை கடத்த, பால்கனியில் மழையை பார்த்தவண்ணம் ‘இரவு என்ன செய்வது’ என யோசித்துக்கொண்டிருந்தாள். ஏனோ அவனுடனும் சகஜமாக இருக்கமுடியவில்லை அவளால்.

சில்லென்ற காற்றுடன், மழை சாரல் அவள் மீது பட்டு பட்டு அவளை கொஞ்சம் கொஞ்சமாக நனைத்தது.

“இசை. உள்ள வா. மழைல நெனஞ்சு உனக்கும் காய்ச்சல் வர்றதுக்கா?” என்ற அவன் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

“இது என்னோட புது நைட் சூட் தான். துவச்சு மட்டும் வெச்சுருக்கேன். உனக்கு டிரஸ் சேன்ஜ் பண்ணணும்னா யூஸ் பண்ணிக்கோ… கொஞ்சம் பெருசா இருக்கும்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

‘என்னடா இது’ என்றிருந்தது ப்ரியாவிற்கு. என்னதான் தெரிந்தவனாக, மனதிற்கு பிடித்தவனாகவே இருந்தாலும் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. தயக்கமும் கூட.

அதே தயக்கத்துடன் உடை மாற்றிக்கொண்டு வந்தாள். அவன் முன் சென்று இந்த உடையுடன் நிற்க வேண்டுமே என நினைக்கையில் சங்கடமாகவும் இருந்தது. இவளை பார்த்தவுடன், அவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக மிகவும் சாதாரணமாக இருந்தான்.

தனக்காகத்தான் சகஜமாக இருக்க முற்படுகிறான் என புரிந்தது அவளுக்கு.

இரவு உணவு சாப்பிட்டபின், படிக்கும் அறையில் அவளுக்கு படுக்கை விரித்தவன், “இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. எனக்கிட்ட spare எதுவும் இல்ல. அதான் comforter விரிச்சிருக்கேன். என்னோட ப்ளாங்கெட் தான் இருக்கு. யூஸ் பண்ணிக்கோ. இந்த ரூம் warm’ஆஹ் தான் இருக்கும்” என்றவுடன் அவள் வேண்டாம் என மறுத்தாள் அவனுக்கு வேண்டும் என நினைத்து. ஆனால் அவன் கேட்கவில்லை.

பின் அந்த அறையில் இருந்து டைரி போல ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். ‘டைரி எழுதுவானோ?’ என ப்ரியா நினைத்துக்கொண்டு ஹாலிற்கு செல்ல, டைரி தான் எழுதிக்கொண்டிருந்தான்.

சிறிதுநேரம் கழித்து, ஹாலில் அவன் நன்றாக உறங்கும் போது, அவனுக்கு போர்த்திவிட்டுவிட்டு, அங்கிருந்த பீன் பேக்’கிலேயே அவள் உறங்கிவிட்டாள்.

காலை அவள் எழுந்தவுடன், மறுபடியும் அவள் மேல் போர்வை இருந்தது. அவனை புன்னகையுடன் பார்க்க, நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

மழை கொஞ்சம் நின்றிருந்தது. அவனுக்காக உணவை செய்துவிட்டு, கஞ்சி காய்ச்சி தயாராக வைத்தபின், அவனை எழுப்பினாள்.

உறக்கத்தில் கண்விழித்தவன் அவளையே பார்த்தான், பின் சுதாரித்துக்கொண்டு எழ, அவன் நெற்றியை தொட்டு பார்த்த ப்ரியா…

“காய்ச்சல் குறைஞ்சிடுச்சுன்னு நினைக்கறேன் இளா. மழ கொஞ்சம் விட்டுருக்கு. காயு’ட்ட கேட்டேன். தண்ணி கொஞ்சம் வடிஞ்சிட்டதா சொன்னா. மறுபடியும் மழ அதிகமாகறதுக்கு முன்னாடி கிளம்பறேன். உனக்கு மதியத்துக்கு, நைட்க்கு கூட ரெடி பண்ணிட்டேன். மறக்காம மருந்து சாப்பிடு நானும் ரிமைன்ட பண்றேன்” அவள் சொன்னவுடன், சரி என தலையசைத்தான்.

இன்னும் கொஞ்சம் அறிவுரைகள் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில், அவனுக்கு காய்ச்சல் முற்றிலுமாக போயிருந்தது.

ஆனால் ப்ரியாவிற்கு காய்ச்சல் வந்துவிடும் போல ஆகிவிட்டது அகிலன் அவளை சென்னைக்கு வர சொன்னவுடன். அதுவும் அவன் சொன்ன காரணம் இன்னமும் பீதியை கிளப்பியது!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved