Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye20

தனிப்பெரும் துணையே – 20

சனிக்கிழமை காலை. ப்ரியாவின் அம்மா அழைத்திருந்தார் ப்ரியாவை. முக்கியமான விஷயம்… வார இறுதி தானே… அகிலன் சென்னை வருவதற்கு டிக்கெட் போட்டுள்ளதாக சொல்லி அவளை உடனே வரச்சொல்லியிருந்தார். அவளும் சரி என்று சொல்லியிருந்தாள்.

அவர் பேசியபின் அகிலன் அவளை அழைத்து… “டிக்கெட் மெயில் பண்ணிருக்கேன்டா” என்றான்.

“என்ன திடீர்னு ண்ணா? என்ன ஆச்சு?” கொஞ்சம் பதட்டத்துடன் ப்ரியா கேட்டாள்.

“ஹ்ம்ம். அம்மா நேத்தில இருந்து ஒரே பிரச்சனைடா குட்டி. உன் ஜாதகத்தை ஜோசியர் கிட்ட காட்டினாங்களாம். அந்த ஆளு உனக்கு ஏதோ தோஷம் இருக்குன்னு சொல்லியிருப்பார் போல. கல்யாணம் பத்தி தான் பேச வரச்சொல்லியிருக்காங்க” என அவன் நிறுத்த, ஒரு நொடி இதயம் நின்றுவிட்டது ப்ரியாவிற்கு.

“நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன். கடைசியா உன்கிட்ட பேசாம எதுவும் முடிவு பண்ணவேண்டாம்னு மட்டும் தான் என்னால சொல்ல முடிஞ்சது. நீ தான்… உன் மனசுல… என்ன இருக்குன்னு சொல்லணும் ப்ரியா” ‘உன் மனசுல’ என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான்.

ப்ரியாவுக்கு தலையே சுற்றியது. மூச்சு அடைப்பது போல உணர்வு. எப்படி சமாளிக்கப்போகிறோம் என்கிற பீதி. அகிலனிடம் பேசி முடித்து வைத்துவிட்டு, கிளம்பத் தயாரானாள்.

‘இதுவரை செழியனிடம் காதலை கூட சொல்லவில்லை. இதில் எப்படி வீட்டில் அவனை காதலிக்கிறேன் என்று சொல்வது’ என்று யோசிக்கும்போது அழுகை கட்டுப்படுத்தமுடியாமல் வந்தது.

அதேநேரம் செழியன் அழைத்தான் ப்ரியாவை. என்றைக்கும் இல்லாத திருநாளாக வீடியோ காலில்.

“ஹே இன்னைக்கு நான் என்ன செய்திருக்கேன்னு பார்க்கறயா?” என்றபடி அடுப்பை காட்ட, அசைவ உணவு செய்திருப்பான் போலும்.

“இளா” அவள் அழைத்ததும் அவளை அப்போது தான் பார்த்தான்.

“என்னாச்சு இசை? ஏன் அழுகற?” படபடப்புடன் அவன் கேட்க… கண்களை துடைத்துக்கொண்டு, “இளா ஏதோ வீட்ல சரியில்ல. கல்யாணம் அது இதுன்னு சொல்றாங்க. இப்போ சென்னை வர சொல்றாங்க. நான் சொல்லிடப்போறேன், எனக்கு உன்ன தான் பிடிச்சுருக்குன்னு. ஒழுங்கா ஈவினிங்’குள்ள நீயும் சென்னை வர. வந்து பேசற. எனக்கு வேற வழி தெரியல” என்றவுடன், அதிர்ந்தான் செழியன்.

“வராம மட்டும் இருந்தன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது இளா. ஐ’ம் சீரியஸ். பை” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.

அவன் அழைத்தால் எடுக்கக்கூடாது என நினைத்தாள் ஆனால் அவன் அழைக்கவே இல்லை. இருக்கும் பயம் பத்தாதென்று, அடுத்த பயம்… ‘அவன் வருவானா… மாட்டானா’ என்பதும் சேர்ந்துகொண்டது.

வீட்டை அடைந்தவுடன், அனைத்தும் சகஜமகா நகர்ந்தது. அகிலன் வீட்டில் இல்லை. முக்கியமான மீட்டிங் என சென்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து, ப்ரியாவின் அம்மா அப்பா இருவரும் அவளை அழைத்தனர். கவிதாவும் அவர்களுடன் இருந்தாள். படிப்பைப் பற்றி கேட்டறியும் போது அகிலனும் சரியாக வந்தான். அவன் ப்ரியாவை நலம் விசாரிக்க, ஜெயராமன் அவனையும் உட்காரச்சொன்னார். ப்ரியா பக்கத்தில் உட்கார்ந்தான்.

“ப்ரியா. ஜோசியர்ட்ட உன் ஜாதகம் காட்டினேன். தோஷம் இருக்கு, கட்டம் சரியில்லன்னு சொன்னாரு” லட்சுமி ஆரம்பித்ததும், ப்ரியா ஏதோ பேசவந்தாள்.

“இரு நான் முடிச்சுடறேன். உனக்கு வர பர்த்டே’குள்ள கல்யாணம் பண்ணலன்னா, அடுத்து முப்பத்தி ரெண்டு வயசுல தான் ஆகும்னு சொல்றார்” இதை கேட்டவுடன் அகிலன் “உஃப்” என மூச்சை வெளியேற்றினான். ‘இதையெல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் நம்புவீர்கள்’ என்பதை போல.

“என்ன அகில்? நம்பமாட்டல்ல. அதே ஜோசியர் தான் உங்க கல்யாணத்த ஆறு மாசம் கழிச்சு நடத்தச்சொன்னார். இல்லைனா பிரச்சனை வரும்னு சொன்னார். நீ கேட்கல. என்னவெல்லாம் நடந்துச்சுன்னு உனக்கே தெரியும்” என்றதும் கவிதாவிற்கு சங்கடமாகிவிட்டது.

அதை பார்க்கமுடியவில்லை அகிலனால். நெற்றியை தேய்த்துக்கொண்டு… “இப்போ எதுக்குமா தேவையில்லாத போஸ்ட் மார்ட்டம்” என்றான் அந்த பேச்சு பிடிக்காமல்.

“குத்திக்காட்ட சொல்லல அகில். இதுவரை இதை நான் தேவையில்லாம சொன்னதும் கிடையாது. அவர் சொல்வாக்கு கண்டிப்பா நடக்கும்னு சொல்றேன்” என்றார் நிதானமாக.

அதற்கு மேல் அவனாலும் பேசமுடியவில்லை. தன் பாடு திண்டாட்டம் தான் என நினைத்துக்கொண்டாள் ப்ரியா.

நிலைமையை சரிசெய்யவேண்டும் என நினைத்து தவறான நாணயத்தை நகர்த்திவிட்டாள். “அம்மா நான் படிச்சு கூட முடிக்கல இன்னும். படிச்சு முடிச்சு இன்னும் பெரிய வேலைக்கு போகணும்” என்றதும், ஜெயராமன்…

“நீ சொல்றது சரிதான்டா. இதெல்லாம் யோசிக்காம இருப்போமா? என்னோட ஃபிரண்ட் ரகுநாத் பையன் சிவா தெரியும்ல உனக்கு. அவன் கலிபோர்னியா’ல புதுசா ஸ்டார்ட் அப் ஆரம்பிச்சுருக்கான். முன்னாடியே உன்ன கேட்டாங்க…

நீ படிக்கறன்னு சொல்லியிருந்தேன். இதை பத்தி அவர்கிட்ட பேசினப்ப தான் அவர் ஒரு ஐடியா தந்தாரு. கல்யாணம் உங்க ரெண்டு பேருக்கும் இப்போ முடிச்சிடலாம். நீ படிச்சு முடிச்சப்பறம் US போனா போதும்னு சொன்னாரு.

சிவாவும் உன் டெக்னலாஜி’ல தான் வேலை பார்க்கறான். சோ உனக்கும் ரொம்ப நல்ல ஸ்கோப் இருக்கு. உன்ன கட்டாய படுத்தி சம்மதிக்க வைக்க விரும்பலடா. உன்னோட சம்மதம் வேணும் அவ்ளோ தான். ஜோசியர் எப்படியும் உனக்கு இப்போவே கல்யாணம் ஆகிடும்னு திடமா சொல்றாரு” என்றதும் தூக்கிவாரி போட்டது ப்ரியாவுக்கு. படபடப்பு அதிகமானது. அகிலனைப் பாத்தாள்.

அகிலனுக்கும் அதிர்ச்சி. இது அவனுக்கும் தெரியாது. அவனும் ப்ரியாவைப் பார்த்தான்.

அகிலன் அவரிடம், “அதெல்லாம் சரிப்பா. அவ்ளோ தூரம் அனுப்பணுமா? எதுனாலும் உடனே போகக்கூட முடியாதே. இங்கயே பார்க்கலாம். இல்ல மும்பைலயே பார்க்கலாமே” என்றான் ப்ரியாவைப் பார்த்து. அவள் கண்கள் கலங்கியது.

“இதென்ன அவ்ளோ ஈஸி’யான விஷயமா அகில்? மும்பைல பையன நாங்க எங்க போய் தேட?” கேள்வியாக பார்த்தார் லட்சுமி.

“உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு ப்ரியா” அழுத்தமாக ஆனால் மெதுவாக அவள் கேட்கும்படி சொன்னான் அகிலன்.

இருக்கும் சாமியெல்லாம் துணைக்கு அழைத்து… தைரியத்தை வரவழைத்து… “அம்மா எனக்கு அண்ணி தம்பி இளஞ்செழியனை பிடிச்சுருக்கு” என்றாள் தலைகுனிந்து.

அவள் அம்மாவும் அப்பாவும் திகைத்தனர். அவர்கள் உடனே கவிதாவைப் பார்க்க, கவிதா என்ன சொல்வதென்று யோசிக்கும்முன்… அவளை யாரேனும் எதுவும் கேட்கும்முன், அகிலன், அவன் முன்பே யூகித்ததை அவர்களிடம் சொன்னான்.

“எதுவும் சரியா தெரியாம சந்தேகப்படக்கூடாதுன்னு சொல்லலப்பா” என்று முடித்தான் அகிலன். ப்ரியாவிற்கு அதிர்ச்சி. அகிலனுக்கு தெரியுமா என்று. அழுகை வந்துவிட்டது.

“ஏன்டா… அதுக்கு தான் நீ அவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சு, பாம்பே செலக்ட் பண்ணயா” ஜெயராமன் ப்ரியாவிடம் கேட்க, அவள் கண்ணீருடன் ஆம் என தலையசைத்தாள்.

லட்சுமி கோபத்தில் ப்ரியாவை “ஏன்டி என்ன தைரியம் இருந்தா இவ்ளோ பெரிய காரியத்தை பண்ணிட்டு…” என திட்ட ஆரம்பிக்க, ஜெயராமன் தடுத்தார்.

காதலுக்காக படிப்பை சவாலாக ஏற்று… படிப்பிலும் பிரகாசிக்கும் தன் மகளை திட்டத் தோன்றவில்லை அவருக்கு.

சரியாக அப்போது வெண்பாவும், கவிதாவின் தந்தை ஸ்வாமிநாதனும் வந்தனர் டான்ஸ் கிளாஸ் முடிந்து. ஸ்வாமிநாதன் கவிதாவின் வீட்டின் பக்கத்தில் தான் வீடெடுத்து தங்கியிருக்கிறார் பணி ஓய்வுக்குப்பின்.

ப்ரியாவுக்கு திக் என்றது. இந்த நாளில் இன்னும் எதெல்லாம் பார்க்கப்போகிறோமோ என நினைத்து.

அவர் வந்தவுடன், அனைவரும் சகஜமாக இருக்க முற்பட்டனர். ஸ்வாமிநாதன் ப்ரியாவிடம் சாதாரணமாக பேசினார்.

வெண்பாவுடன் சிறிதுநேரம் அவர் விளையாடிக்கொண்டிருக்க… அதற்குள் ஜெயராமனும் லட்சுமியும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர்.

பின் ஸ்வாமிநாதன் கிளம்ப நினைக்கையில், ஜெயராமன் அவரிடம் தயங்கி நடந்ததை அனைத்தையும் சொல்லி பேச ஆரம்பித்தார்.

“இதை தள்ளி போடவேணாம்னு தான் இப்போவே பேசினேன். பொண்ணு சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் சம்மந்தி. செழியனும் ரொம்ப நல்ல பையன். அவங்களுக்குள்ள பிடிச்சுருக்கு அப்படிங்கறப்ப, எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.

பிடிக்காம வேற கல்யாணத்த பண்ணிவெச்சு, அவள இந்த வீட்ல இருந்து மனசு வருத்தத்தோட அனுப்ப நாங்க விரும்பல. அவ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இங்க இருந்து போகணும். நீங்க சொல்லுங்க என்ன பண்ணலாம்னு” என்றவுடன், அகிலன் ப்ரியாவை பார்த்து ‘இனி என்ன எல்லாம் சுபமே’ என்பதுபோல புன்னகைத்தான்.

ஸ்வாமிநாதன் வேண்டாம் என்பாரா??? மனதிற்கு மிகவும் பிடித்த மாப்பிள்ளை அகிலனின் தங்கை. மனதார சம்மதித்தார்.

ப்ரியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியாத நிலை. சந்தோஷம் அதிகமாகும்போது கூட அழுகை வரும். அந்த நிலையில் அவள். ஆனால் அதிக சந்தோஷம் ஆபத்தானதே.

அடுத்த பிரச்சனை செழியன் வடிவில் வீட்டு வாசலில் வந்து நின்றது. ப்ரியா அழைத்ததன் பேரில் வந்திருந்தான். அவன் படிப்பது ப்ரியாவை தவிர இங்குள்ள யாருக்கும் தெரியாதே!

அவனைப் பார்த்ததும் தான் ப்ரியாவிற்கு உரைத்தது அவனை அழைத்தோமே என. அப்போதுதான் மூளையில் சுள்ளென்று தட்டியதுபோல அவன் படிப்பது நினைவிற்கு வந்தது!

அவன் வந்தது யாருக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ப்ரியாவிற்காக, தங்கள் காதலுக்காக பேச வந்திருக்கிறான் என நினைத்தார்கள். அவனை வரவேற்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

நடந்ததை அவனிடம் சொல்லவேண்டுமே எப்படி என ப்ரியா யோசித்துக்கொண்டே இருக்க, செழியன் பார்வை மட்டும் ப்ரியாவை பட்டு பட்டு மீண்டது. கொஞ்சம் கோபமும் தெரிந்ததோ அவளுக்கு?!

அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க… ஜெயராமன் செழியனிடம் பேச ஆரம்பித்தார்.

“அப்புறம்பா வேலையெல்லாம் எப்படி போகுது” என ஆரம்பிக்க, திடுக்கிட்டு ப்ரியாவை பார்த்தான் செழியன். அந்த பார்வையில் அவள் கண்கள் கலங்கிவிட்டது.

ஒரு முறை ஆழ மூச்சிழுத்து… “அங்கிள் நான் ஒர்க் பண்ணல. IIT பாம்பேல PhD பண்றேன்” என்றான். ப்ரியாவின் குடும்பத்தில் அனைவரின் பார்வையும் ப்ரியா பக்கம் திரும்ப, கவிதாவும் ஸ்வாமிநாதனும் அதிர்ந்து செழியனைப் பார்த்தனர்.

“என்னடா சொன்ன நீ? இந்த வயசுல படிக்கறயா? வேலைல இல்லையா?” அதிர்ந்து ஸ்வாமிநாதன் எழுந்து கிட்டத்தட்ட அடிப்பதுபோல சென்றுவிட்டார்.

அனைவரும் பதறிக்கொண்டு எழ, செழியன் நகராமல் அப்படியே நின்றான். கண்கள் ப்ரியாவை விட்டு நீங்கவில்லை. அவள் நடப்பவை அனைத்தையும் பார்த்து ஆணி அடித்தாற்போல அப்படியே சிலையென நின்றாள். அழுகை நிற்காமல் கொட்டியது. கண்கள் மன்னிப்பை யாசித்தது அவனிடம்.

ஜெயராமன் மற்றும் அகிலன் தான் ஸ்வாமிநாதனை தடுத்தனர்.

அகிலன் குற்றம் சாட்டும் பார்வையை பார்த்தான் ப்ரியாவை. இதுகுறித்து என்னிடமாவது முன்னமே சொல்லியிருக்கலாமே என்ற மனவருத்தம் அவனுக்கு.

அடுத்த சில மணிநேரங்கள், வீட்டில் அனைவரும் வெண்பாவை தவிர, ஒரு வழியாக பேசி முடிவு செய்து, இருவருக்கும் திருமண செய்துவிட முடிவு செய்தனர்.

என்ன நடந்தது, எப்படி சம்மதித்தனர், அனைவரின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் போகப்போக பார்க்கலாம்!

அனைத்தும் ஒருவழியாக சரிசெய்யப்பட்டு, ப்ரியாவிற்கும் செழியனுக்கும் திருமணம் இனிதே முடிவடைந்தது!

——————————————

ப்ரியாவின் அறைக்கதவு தட்டப்பட, கடந்தகால நினைவோட்டத்தில் இருந்த ப்ரியா, நிகழ்வுக்கு வந்து, கதவை திறந்தாள்.

லட்சுமி தான் வந்திருந்தார் அவளை எழுப்ப. அவரை அனுப்பிவிட்டு, கண்ணாடி முன் நின்று வயிற்றை தொட்டுப்பார்த்தாள். கண்கள் கலங்கியது. அவள் காதலால் முளைத்த துளிர் கருவாக வயிற்றில். ஆனால் அவன் காதல்? அதை யோசிக்கும்போது ஏனோ கசந்தது.

காலை வேலைகளை முடித்துவிட்டு, ஏதோ முடிவெடுத்தவள் போல அகிலனிடம் பேச உட்கார்ந்தாள் ப்ரியா.

“அண்ணா” என்று இழுக்க… “என்ன வேணும் குட்டி பிசாசு…” அவளை நன்றாக புரிந்துகொண்ட அவள் அண்ணன் கேட்டான்.

“எனக்கு மாமாகிட்ட கேட்டு அவங்க வீட்டு சாவி வாங்கித்தாண்ணா. எதுக்குனு கேட்காத ப்ளீஸ். சொல்ற நிலமைல நான் இல்ல. யார்கிட்டயும் நான் கேட்டேன்னு சொல்லாத. எனக்கு இப்போவே வேணும் ப்ளீஸ்” கிட்டத்தட்ட கெஞ்சினாள் தங்கை.

சில நொடிகள் ப்ரியாவையே பார்த்தான் அகிலன். தன்னிடம் செல்லகூடாத அளவிற்கு ஏதோ உள்ளது என்பதை உணர்ந்து, “என்கிட்டயே ஒரு சாவி இருக்கு டா. எப்போ போணும்?” என கேட்டான்.

“சூப்பர்ண்ணா. எனக்கு தர்றயா? நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பறேன்” என்றவுடன்… “என்னது இப்பொவேவா… அப்போ நானும் வரேன்” அதிர்ச்சியுடன் சொல்ல…

“இல்லண்ணா. நீ வந்தா அண்ணிட்ட சொல்லணும். அவங்களுக்கு கூட தெரியவேணாம். கொஞ்சம் முக்கியமான விஷயம். நான் போயிட்டு வரேனே ப்ளீஸ்… ஈவினிங்குள்ள வந்துடறேன். ப்ளீஸ். ப்ளீஸ்…” என ஒருவழியாக அகிலனை சம்மதிக்க வைத்துவிட்டாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் புறப்பட்டு கிளம்பியும்விட்டாள். தன் அம்மாவிடமும் கவிதாவிடமும் தோழியை சந்திக்க செல்வதாக சொல்லியிருந்தாள்.

அடுத்த 100 நிமிடங்களில் செழியனின் காஞ்சிபுரம் வீட்டின் முன் அந்த டாக்ஸி நின்றது.

திருமணமான போது இவ்விடத்திற்கு வந்தது… அதற்கு முன் செழியனை முதல் முறை அகிலனின் கல்யாண சடங்கில் சந்தித்தது… என்று பல நினைவுகளுடன்…. தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததும், படியேறி மேலே சென்றாள் செழியன் அறைக்கு. அந்த படிகள் கூட கதைகள் சொன்னது அவளுக்கு.

அறைக்குள் சென்றவுடன் அவள் கண்கள் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரி பக்கம் சென்றது. அதை அவசரமாகத் திறக்க… அவர்கள் இருவரின் கல்யாண புகைப்படம் உள்ளே இருந்தது. இருவர் முகத்திலும் நிறைந்த புன்னகை.

கண்கள் அவளையும் மீறி இப்போது கலங்கியது… இதில் இருக்கும் சிரித்த அவன் முகமும், சண்டையிட்டு பிரியும்போது மனதில் பதிந்திருந்த அவன் முகமும் மாறி மாறி வந்து செல்ல, புகைப்படத்தை மறைவாக வைத்தாள் கண்ணில் படாமல் இருக்க.

பின் அவசரமாக மேல் அடுக்கில் இருந்த சிலவற்றை மெதுவாக எடுத்தாள். வரிசையாக ஆண்டு வாரியாக டைரிகள் அடுக்கப்பட்டிருந்தது.

அவனுடன் கல்யாணத்துக்குப்பின் சேர்ந்திருந்தபோது, சொல்லியிருக்கிறான் அவளிடம். எழுதக் கற்றுக்கொண்ட காலத்தில் இருந்தே பழகிய பழக்கம் இது என்று.

முதல் டைரியை எடுத்தாள். பல வாக்கியப்பிழைகளுடன், கையெழுத்து முத்துமுத்தாக இருந்தது. அந்த சிறு வயதிலேயே.

ஏதோ ஒரு அழுத்தத்துடன் ப்ரியா படிக்க ஆரம்பித்தாள்……

அதே நேரம்… மும்பையில் செழியன்……

“வாழ்க்கைனா எப்படி இருக்கணும்னு உதாரணமா சொல்ற அளவுக்கு, அழகான வாழ்க்கை என்னோடது. இசை… எனக்கு அந்த இனிமையான வாழ்க்கைய தந்தா” ‘இசை’ என்று சொன்னபோது… அவன் கண்களில் அவ்வளவு ஆசை, காதல்.

“பட், ஒருத்தங்களோட வாழ்க்கை எப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கும் என் வாழ்க்கை தான் உதாரணம்” அவன் கண்களில் ஆசை, காதலெல்லாம் மறைந்து வெறுமை சூழ்ந்தது.

மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான் செழியன்!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved