Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye26

தனிப்பெரும் துணையே – 26

அகிலன் திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. மேல்தளத்தில், அவன் அறையில் இருந்த பையை எடுக்க வந்தபோது, சில பெண்களில் குரல் வெளியே கேட்க, அதில் ப்ரியாவின் குரலை மட்டும் கண்டுகொண்டான்.

அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது உள்ளே. அதுவும் அவனைப்பற்றித்தான்.

‘அண்ணியின் தம்பி ஏதோ நேற்று தான் வயதிற்கு வந்ததைப் போல, கண்ணில் படவே இல்லை… அவனை இதுவரை பார்த்ததில்லை’ என ப்ரியா அவள் சகாக்களுடன் பேசிக்கொண்டிருக்க… ‘என்ன வாயிடா…’ என எண்ணிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான் செழியன்.

ப்ரியாவும், அவள் உடனிருந்தவர்களும் அவனைப் பார்த்தார்கள். அவன் ப்ரியாவை பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர, அங்கு அடுத்த பேச்சுவார்த்தை ஆரம்பித்தது ‘அவன் பார்க்க எப்படி இருக்கிறான்’ என்பதை குறித்து.

‘அவன் சுமாரா இருக்கானா? உன் டேஸ்ட் ஏன் இவ்ளோ மட்டமா போச்சு’ அந்த பேச்சுவார்த்தைக்கான முடிவை ப்ரியா தர, சட்டென திரும்பிப்பாத்தான் செழியன்.

அனைவர் முகத்திலும் ‘தாங்கள் பேசியது அவன் காதில் விழுந்திருக்குமோ’ என்ற ஒரு சின்ன கலக்கம் தெரிய, ப்ரியா மட்டும் ‘கேட்டா கேட்டுப்போகட்டும். எனக்கென்ன’ என்பதுபோல பார்த்தாள்.

‘உடம்பு முழுக்க திமிர்’ என நினைத்துக்கொண்டே அவன் படியிறங்க, ஏனோ அவளின் அந்த அலட்சியத்தை தவறாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை. ஒருவேளை அந்த அலட்சியம் பிடித்ததோ அவனுக்கு?

அன்றைய இரவு, அகிலன் குடும்பம் கிளம்பத் தயாராகிக்கொண்டிருக்க… மேலே இருந்து ப்ரியாவும், அவளுடன் இருந்தவர்களும் இறங்கும்போது, அவர்களுக்கு வழியை விட்டான் செழியன்.

அப்போது ப்ரியா அவனை கடந்து செல்லாமல், திடீரென நின்றாள்.

‘ஒருவேளை பேசியதற்கு மன்னிப்புக் கேட்பாளோ’ என நினைக்க, அவள் நின்ற தோரணையில் ‘மன்னிப்பா இவளா’ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

அவன் நினைத்துபோலவே, அவள் அவனிடம் நீளமாக பேசிவிட்டு, ‘கல்யாணத்திற்கு நன்றாக உடை அணிந்தால் பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாராவாவது இருப்பாய்’ என கிட்டத்தட்ட ‘செய்தே ஆகவேண்டும்’ என்பதுபோல சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் கூறியவற்றை எண்ணிக்கொண்டே மேலே சென்றான்.

அவள் ‘இளா’ என்றழைத்தது, அவள் காலையில் ‘அவனை வேலை செய்பவன்’ என்று பேசியதற்கு விளக்கமளித்தது, ‘சொந்தம்’ என்ற உரிமைமையுடன் பேசியது, பின் ‘அவள் சொன்னதை மறக்கவேண்டாம்’ என்று சொன்னது, என்பதை அவன் நினைக்கையில் முகத்தில் ஒரு கீற்றகாக புன்னகை படர்ந்தது.

‘அவ்ளோ மோசமாவா இருக்கேன்’ என்று கண்ணாடி முன் நின்று பார்த்தான். அவனுக்கே அப்போது தான் தெரிந்தது. சட்டை மிகவும் பழையது என.

‘ஏன் இத போட்டோம்…’ என யோசித்தான். பதில் தெரியவில்லை. ‘அக்காகூட எதுவுமே சொல்லவில்லையே’ என நினைக்கும்போது…. ‘அவள் இருக்கும் மனநிலையில் மறந்திருப்பாள்’ என்ற முடிவுக்கு வர, இப்போது அகிலன் நினைவிற்கு வந்தான்.

‘அக்கா அவனால் தான் இப்படி சுற்றம் மறந்து இருக்கிறாள்’ என்று அவன் மீது கோவம் வர, அடுத்த நொடி ‘அவன் தங்கை ப்ரியா கொஞ்சம் வாய் அதிகம் பேசினாலும், அண்ணைப்போல இல்லை’ என்று ப்ரியாவிடம் வந்து நின்றது அவன் மனம்.

திருமணத்திற்கு தந்தை எடுத்துக்கொடுத்த உடையை பார்த்தான். அடர் சிவப்பு நிறச்சட்டை.

‘இதை அணிந்தால் நன்றாக இருப்பேனா?’ என நினைக்கத்தோன்ற, ‘இதுபோலவெல்லாம் இதற்கு முன் நினைத்ததில்லையே. இதென்ன புதிதாக’ மூளை யோசிக்க, மனதில் மறுபடியும் ப்ரியா.

இவ்வாறாக அடுத்த ஓரிரு நாட்களும் ப்ரியா நினைப்பு எப்போதாவது வந்தாலும் கல்யாண வேலைகள் அவனை சூழ்ந்தது.

அதிகாலை திருமணத்திற்காக கோவிலுக்கு கிளம்பத் தயாரானான். தந்தை எடுத்துத்தந்த சட்டை ஏதோ மைனர், ஜமீன்தார் உடுத்துவதுபோல இருத்தது.

‘இதை அணிந்து மறுபடியும் அவள் கிண்டல் செய்ய வாய்ப்பு தரக்கூடாது’` என நினைத்து… இந்துமதியுடன் சென்றபோது எடுத்த ஒரு லினன் சட்டையை அணிந்தான்.

இப்போது இந்துமதி மனதில் வந்து நின்றாள். அக்காவின் கல்யாணத்திற்கு அவளை அழைக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தான். ஆனால் அவளுக்கே திருமணம் முடிந்தது.

அவள் மாமியார் கொஞ்சம் கடுமையானவர் என்று சொன்னாளே. அக்காவின் மாமியார் எப்படிப்பட்டவராக இருப்பார்? அக்காவை கஷ்டப்படுத்துவாரோ… கல்யாணத்திற்கு பின் அக்கா எப்படி இருக்கிறாள் என்ற எப்படி தெரிந்துகொள்வது, என நினைக்கையில், ப்ரியா மறுபடியும் மனதில் வந்தாள்.

ப்ரியாவிடம் கேட்கலாமா என ஒருபுறம் நினைக்கத் தோன்றினாலும், ஏதோ தயக்கமும் இருந்தது.

கோவில் சென்றடைந்த கொஞ்ச நேரத்தில் அகிலன் குடும்பம் வந்துவிட்டது என்ற செய்தி வர, செழியனையும் வரவேற்க அழைத்துச்சென்றார் ஸ்வாமிநாதன்.

முதலில் அகிலன் வந்த கார் நிற்க, அவன் கண்கள் தானாக ப்ரியாவை தேடியது. அவள் அடுத்த காரில் வந்திறங்கியவுடன், ஒரு நொடி அவளை பார்த்தான்.

அவள் கண்கள் அவனைப்பார்த்ததும் ஒரு சின்ன மலர்ச்சியை தந்தது. அது அவனுக்கு இதமாக இருந்தது.

மறுபடியும் அவளை பார்க்க, இப்போது அகிலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். முதல் முறை ஒரு பெண் அவன் கண்களுக்கு அழகாகத் தெரிந்தாள். இதுபோன்ற நினைப்பெல்லாம் இதுவரை வந்ததில்லை.

அளவான ஒப்பனை, அழகான புடவை, தேவைக்கேற்ப நகை, ஆடம்பரமில்லாத அழகுடன் இருக்கிறாள் என அவன் எண்ணங்கள் ஓட, அது அவனுக்கு புரிந்ததும், தன்னையே திட்டிக்கொண்டான்.

அவன் அந்த இடம்விட்டு நகர்ந்தவாறு, ‘தறிகெட்டு சிந்தனைகள் செல்கிறதே. இதுபோல நினைப்பதெல்லாம் தவறு. இது அவளுக்கு தெரிந்தால்… ஐயோ’ என நினைக்கையில்… “அண்ணி எங்க இருக்காங்க. என்னை கூட்டிட்டுப்போங்க” என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்தாள் ப்ரியா.

நொடிப்பொழுது அவளைப்பார்த்து நின்றாலும், உடனே அவளை அழைத்துச்சென்றான்.

மறுபடியும் அவள் ஆரம்பித்தாள் பேசுவர்தற்கு… கூடவே அவனை கிண்டல் செய்துகொண்டே இருக்க… மனதில் அவள் பேசுவதை ஒரு பக்கம் ரசித்தாலும், ரசிக்கும் தன் மனதை திட்டிக்கொண்டே அவளுடன் நடந்தான்.

திடீரென அவன் முன் நின்று… “பேச வருமா வராதா” என அவள் திட்ட ஆரம்பிக்க, அவளை நிறுத்தச்சொன்ன செழியன், கவிதா இருக்கும் இடத்தை காட்டினான்.

அதில் கடுப்படைந்த ப்ரியா, அவனை திட்டிவிட்டு கோபமாக நடக்க… புடவை தடுக்கி தட்டுத்தடுமாறி நடந்தாள்.

அவளின் செய்கை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. ‘குட்டிச் சாத்தான் பேசிட்டே இருக்கு. புடவை கட்டிட்டு எங்கயாச்சும் விழாம இருந்தா சரி’ என சிரித்துக்கொண்டே அவன் செல்ல, அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

இந்துமதி முதலில் அழைத்திருந்த எண்கள்.

உடனே எடுத்தான். அந்தப்பக்கம் “செழியா. அக்காக்கு என்னோட விஷஸ் சொல்லிடுடா. இன்னைக்கு தான் லாஸ்ட் எக்ஸாம். மறுபடியும் காலேஜ்’க்கு செர்டிபிகேட் வாங்க தான் வருவேன்” என்றதும், இதற்கு முன் இருந்த மனநிலை மாறி… “நீ எப்படி இருக்க இந்து” என்றான் கவலையாக.

“இருக்கேன் டா. இருபத்திநாலு மணிநேரத்துல பதினஞ்சு மணிநேரம் வீட்டு வேலை. எப்பவும் இதுதெரியல அதுதெரியலன்னு திட்டு. ஏதோ போகுது. அக்கா கல்யாணம் பண்ணி போகப் போற குடும்பம் பரவால்லயா செழியா” இந்துமதி கேட்க, முன்புபோல இருந்திருந்தால் அகிலனைப் பற்றி சொல்லியிருப்பான்.

ஏனோ அந்த வீட்டில் ப்ரியா இருப்பது ஒரு சின்ன மனநிறைவை தர, பதிலுக்கு நல்ல குடும்பம் என்றான்.

அவளும் சில வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிட்டாள். ஆனால் செழியன் இந்துமதிக்காக மிகவும் வருந்தினான். அவள் குரலே காட்டியது அவள் சந்தோஷமாக இல்லை என.

அதே எண்ணங்களுடன் அவன் இருக்க, மணமேடையில் கவிதா சிறு துளி புன்னகையில்லாமல் உட்கார்ந்திருந்தது, இன்னமும் மனவருத்தம் தந்தது. ‘அக்காவும் இந்துமதிபோல கஷ்டப்படுவாளோ?’ என நினைத்தபோது, கவிதா பக்கத்தில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள் ப்ரியா.

அவளை கவிதாவுடன் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு சின்ன மனநிறைவு அவனிடம் வந்தது. கடவுளிடம் மனமார வேண்டிக்கொண்டான் கவிதாவுக்காகவும் இந்துமதிக்காகவும்.

அடுத்தநாள் அகிலன் வீட்டு குலதெய்வம் கோவிலுக்கு இருக்குடும்பமும் சென்றிருக்க, செழியனுக்கு நிறைய வேலை இருந்தது. தண்ணீர் சாப்பாடு மறந்து வேலை செய்துகொண்டிருந்தான்.

மனதில் கவிதாவுக்காகவும் இந்துமதிக்காகவும் வருந்திக்கொண்டிருக்க, அவனிடம் ஒரு சிறுவன் வந்தான்… கையில் உணவு தட்டுடன்.

“யாருடா தந்தா” என கேட்க, அவன் கவிதாவை காட்டினான். அக்காவை நினைத்து புன்னகையுடன் சாப்பிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கினான்.

ஒருவழியாக பூஜைகள் சடங்குகள் முடிந்த போதுதான், கவிதாவுக்கு செழியனிடம் பேச நேரம் கிடைத்தது.

அவனிடம்… “நீ சாப்பிட்டயாடா? சுத்திட்டே இருந்தயே. நானும் சரியா கவனிக்கவே இல்ல. இரு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றதும் கொஞ்சம் குழம்பினான் செழியன்.

‘அக்காதானே உணவு கொடுத்தனுப்பினாள். எதற்கு இப்படி சொல்லவேண்டும்?’ என நினைத்து… தான் சாப்பிட்டதாக சொல்லிவிட்டு அவசரமாக அந்த சிறுவனை தேடி கண்டுபிடித்தான்.

அவனை நிறுத்தி… “யாரு எனக்கு சாப்பாடு குடுத்தது” என செழியன் கேட்க, அவன் கவிதாவை கை காட்டினான். செழியன் முறைத்ததும், அவன் கொஞ்சம் பயந்து, கையை ப்ரியாவிடம் நிறுத்தினான்.

நெற்றி சுருக்க அதிர்ந்த செழியன் மனதில் சொல்ல முடியாத பல உணர்வுகள். சந்தோஷத்தினால் வந்த ஒரு சின்ன படபடப்பு. ப்ரியாவை பார்த்திருந்த கண்கள், கொஞ்சம் கண்ணீரில் பளபளக்க, முகத்தில் மனநிறைவுடன் புன்னகை வந்தது!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved