Thaniperum Thunaiye 33
தனிப்பெரும் துணையே – 33
முதலில் ஆச்சர்யத்தில் விரிந்த ப்ரியாவின் கண்கள், அடுத்து கலங்கியபடி ‘எப்படி பணம் கிடைத்தது?’ என கேட்டவுடன், முதல் முறை அவள் கண்களில் கண்ணீரை பார்த்த செழியன்… மனம் பொறுக்காமல் அவள் அருகில் சென்று உட்கார்ந்து அவளை சமாதானப்படுத்தினான்.
அதுஎதுவும் கேட்காததைப்போல, அவள் “பணம் எப்படி வந்தது?” என கேட்க, அவன் வேலை செய்ததால் வந்த பணம் என்று சொன்னதும், அவள் அழுகும் நிலைக்கு செல்ல, அவனால் அதை சுத்தமாக பார்க்கமுடியவில்லை.
‘சந்தோஷப்படுவாள் என தான் நினைத்து செய்தது அவளுக்கு அழுகையை தந்துவிட்டதே’ என தவிப்புடன் அவளை பார்த்தான்.
பின் அவள், “நான் வீட்ல தான் கேட்கலாம்னு இருந்தேன்” என்றதும் அவன் மனதில் சுள்ளென்று சின்ன குத்தல்.
‘அப்போ நான் யார் உனக்கு’ என்ற கேள்வி மனதில் எழ, அவளிடம் ‘வீட்டில் வாங்கித்தரும் வரை உபயோகித்துவிட்டு விற்றுவிடு’ என்றான் கோபத்தில் அவள் முகம் பார்க்காமல். அவளிடம் தன் கோபமான முகத்தை காட்டக்கூடாது என நினைத்து.
அவன் கோபம் புரிந்தது போல அவள் அவனிடம் பேச்சை மாற்ற, அவன் முகத்தில் புன்னகை வந்தது. ‘தன் ஓவ்வொரு உணர்வுகளையும் புரிந்துகொள்கிறாளே’ என நினைத்து அவளை பார்க்க, அவள் கண்கள் அழுது சிவந்திருந்தாலும், முகத்தில் அந்த புன்னகை அழகாக இருந்தது அவனுக்கு.
கொஞ்ச நேரத்துக்கு பின், அவனை கார்ட்டூன் வடிவில் மொபைலில் வரைந்து, அவனிடம் காட்ட, செழியன் கண்கள் விரிய பார்த்தான்.
“இதெல்லாம் நீ நெஜத்துல பண்ணமாட்ட. பட் இந்த இளா பாரு… பின்றான்” ப்ரியா சொன்னதும்… அவளை பார்த்தான்.
‘மனதில் உள்ள ஆசை வரைபடமாக வரைத்திருக்கிறாள். என்னால் மற்றவர்களைபோல இருக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அவளுக்கு ஏற்றாற்போல நடந்துகொள்ள முயற்சிப்பேன்’ என நினைத்துக்கொண்டு அவள் வரைந்ததை பாராட்டினான்.
அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவன் கிளம்பினான்.
நாட்கள் தன்போக்கில் நகர்ந்தது. அவன் அவ்வப்போது சிற்சில வேலைகளை எடுத்துசெய்தான். அவளுக்காக என சேமிக்க ஆரம்பித்தான்.
எதுசெய்தலும் படிப்பு மட்டும் பாதிக்காமல் பார்த்துக்கொண்டான். நிறைய நேரம் அவளுடன் கழித்தான். அப்போதும் கூட இருவரும் படிப்பில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தினார்கள்.
எப்போதுவும் மழைக்காலம் வந்தால் கொஞ்சம் உடல் உபாதைகளை தரும் அவனுக்கு. மும்பையில் மழைக்காலம் ஆரம்பிக்க, சளி இருமலில் ஆரம்பித்தி தன்னை சரியாக பார்த்துக்கொள்ளாததால், காய்ச்சலில் வந்து நின்றது.
கையில் இருந்த மருந்துகளை போட்டுகொண்டு சரியாகிவிடும் என்றிருந்தான். சாப்பிடவும் சரிவர கிடைக்காமல் போக, மிகவும் சோர்வுடன் இருந்தான்.
‘ப்ரியாவிடம் சொன்னால் கண்டிப்பாக வருகிறேன் என்பாள். இன்னும் ஒருநாள் காய்ச்சல் குறைந்தவுடன் பேசிக்கொள்ளலாம்’ என அவன் நினைத்திருக்க, அடுத்தநாள் காலை வீட்டு வாசலில் வந்து நின்றாள் ப்ரியா.
அவனை பார்த்ததும் அவள் அர்ச்சனையை ஆரம்பிக்க, அவன் மனதில் உணர்ச்சிகளின் பெருக்கில் இருந்தான். ‘இவளால் தன்னை நினைக்காமல் இருக்கமுடியாதா’ என்ற அவன் யோசிக்க, அவள் அவன் நெற்றியை தொட்டு பார்த்து அதிர்ந்தாள்.
‘என்ன சாப்பிட்டாய்’ என கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் சென்றவேகத்தில் திரும்பி வந்து முறைத்தாள் அவன் சரியாக எதுவும் சாப்பிடவில்லை என்று தெரிந்ததுவுடன்.
“என்னிடம் சொல்லமாட்டாயா?” என அவள் கோபப்பட, ‘சொல்லாமலே வந்துவிட்டாயே’ என நினைத்து அவன் முகத்தில் புன்னகை.
பின் அவன் சரியாக சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் அவள் நன்றாக திட்ட, அவனால் பதிலுக்கு பேச உடல் ஒத்துழைக்காமல் படுத்துவிட்டான்.
கொஞ்ச நேரத்தில் ஈர துணியை அவன் தலையில் அவள் வைக்க, அவளையே பார்த்தான் செழியன். அவள் கஞ்சிக்காய்ச்ச சென்று விட்டாள்.
அவன் மனதில்… ‘ஒரு சேயை, பார்த்துக்கொள்ளும் அன்னையை போல’ அவள் செய்ததை நினைத்து பார்க்க, கண்கள் கலங்கியது. பழைய ஞாபகங்கள் வந்து வந்து செல்ல, கண்களை மூடிக்கொண்டான்.
அவள் செய்த கஞ்சியை குடித்தபின், நாவில் கொஞ்சம் கசப்பு குறைந்ததுபோல இருந்தது. சோர்வாகவே இருந்ததால் மருந்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்கிவிட்டான்.
மதியம் அவள் ஏதோ சாப்பிட தந்தாள் என்பது மட்டும் புரிந்தது. மாத்திரையின் வீரியம் அவனை மயக்கித்திலேயே வைத்திருந்தது. கொஞ்சம் காய்ச்சல் குறைந்ததுபோல இருக்க, அவ்வப்போது அவள் நெற்றியை தொட்டு பார்ப்பது மட்டும் உணர முடிந்தது.
மாலை நேரம் ஆனபோது, மறுபடியும் உடல் கொதிக்க, கொஞ்சம் பதட்டத்துடன் அவனை டாக்டரிடம் செல்லலாம் என அழைத்தாள். மழை நின்றபாடில்லை. அவள் மறுபடியும் ஹாஸ்டல் செல்வது கடினம் என நினைத்து அவளை கிளம்பச்சொன்னான்.
அவள் செல்ல மனம் வராமல் யோசிக்க, அவனே ஆட்டோ டிரைவரை அழைத்தான். அவரோ, வ’ழியெல்லாம் வெள்ளம் போல தண்ணீர் ஓடுகிறது. இதில் எங்கே ஆட்டோ எடுத்துக்கொண்டு வர’ என்றதும் கொஞ்சம் அதிர்ந்தான்.
அவளை அனுப்பவது கடினம் என புரிந்தது, இருந்தும் குமாரை அழைத்து கேம்பஸ் நிலவரம் குறித்துக்கேட்க, குமாரோ செழியன் ப்ரியாவுடன் இருப்பதை தெரிந்துகொண்டு கிண்டல் செய்து, இப்போது அவளை அனுப்புவது சரிவராது என்றான்.
‘அவளுடன் எப்படி ராத்திரி இருக்க முடியும்’ என்று யோசித்து… அவள் ஏன் வந்தாள் என முதலில் கோபப்பட்டான்.
பின் ‘தன் கோபம் அபத்தமானது, அவள் இருந்ததால் தான் கொஞ்சம் உடல் சரியாகிவுள்ளது. ஒரு இரவு தானே பார்த்துக்கொள்வோம்’ என முடிவெடுத்து, அவளை வார்டனிடம் பேசச்சொன்னான்.
பின், ரெஸ்ட் ரூம் சென்று அவளுக்கென அனைத்தையும் புதிதாக எடுத்துவைத்துவிட்டு அவளை ரெஃப்பிரேஷ் செய்துகொள்ளச்சொன்னான்.
அவள் மாலை நேரம் மறுபடியும் அவனுக்கு உணவு தந்த பின், அவனும் கொஞ்ச நேரம் உறங்கி எழுந்தான்.
எழுந்தவன் கண்களில் தெரிந்தது பால்கனியில் எதையோ யோசித்துக்கொண்டு மழை சாரல் மேலே படுவதுபோல உட்கார்ந்திருந்த ப்ரியா.
உடை மாற்ற முடியாமல் அவள் படும் கஷ்டம் புரிய… அவனுடைய புது துணியை அவளிடம் தந்தான்.
அவள் தயங்கி தயங்கி நடந்துகொள்வது ஏதோ போல இருந்தது. மாலையில் இருந்து பக்கத்தில் கொஞ்சம் கூட வரவில்லை அவள். அவனிடம் இருந்து தள்ளியே இருந்தாள்.
‘நான் தவறேதேனும் செய்துவிடுவேனோ என பயப்படுகிறாளோ? அந்த பயம் அவளுக்கு இருக்க கூடாது’ என்று எண்ணிக்கொள்ள, அவன் தந்த உடையில் வெளியே வந்தாள்.
அவளுடைய சின்ன தேகத்துக்கு, கொஞ்சம் பெரிதாகாவே இருந்தது அந்த உடை. இப்போதும் அவள் முகத்தில் தயக்கம் தெரிய, அவளிடம் எவ்வளவு சாதாரணமாக இருக்க முடியுமோ அப்படி இருந்தான்.
இரவு உணவு சாப்பிட்டபின், அவளை உள்ளறையில் படுக்க சொல்லிவிட்டு ஹாலில் படுத்தவன் மனது முழுதும் ப்ரியாவே நிறைந்திருந்தாள். அன்றைய தினம் முழுவதும் தூங்கியதால், தூக்கம் சுத்தமாக வரவில்லை.
கண்கள் மூடி நடந்ததை நினைத்துப்பார்த்தான்.
‘அவள் இன்று எடுத்துக்கொண்ட சிரத்தை, காட்டிய அக்கறை, கோபம், உரிமை, பின் அவளது தயக்கம்’ என ஒவ்வொன்றும் அவளின் அன்பை காட்டியது. தான் இழந்ததாக நினைத்த அனைத்துமே திரும்பி வந்ததது போல இருந்தது.
தீடீரென ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் ‘எங்கே முழித்திருப்பது தெரிந்தால் மறுபடியும் தயங்குவாளே’ என நினைத்து தூங்குவதுபோல் இருந்துகொண்டான்.
வெளியே வந்தவள், அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டுவிட்டு, அவன் முடியை கோதிவிட்டவுடன், மூடிய கண்களுக்குள் கண்ணீர் வெளிவர காத்திருப்பதுபோல உணர்ந்தான். கைகளில் சின்ன நடுக்கம் அவள் செய்வதை நினைத்து.
‘இப்போது கண்ணைத் திறந்தால் கீழ்த்தரமாக நினைத்துவிடுவாளே’ என நினைத்து கட்டுபடித்துக்கொண்டு படுத்திருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து திரும்பிப்படுப்பதுபோல, மெதுவாக கண்திறந்து பார்க்க, அவனெதிரில் இருந்த இருக்கையில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.
மெதுவாக அவள் அருகில் சென்று அவள் காலடியில் அமர்ந்து, அவளையே பார்த்தான். என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு அழுத்தம் அவனுள்.
பாலைவனமாக இருந்த வாழ்வில், சின்ன துளிர் விட்டு வளரும் செடிபோல, அவன் வாழ்வில், அவளுடனான இந்த உறவு கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை போல இருந்தது அவனுக்கு.
‘கண்டிப்பாக இது விருச்சமாக வளர என்னென்ன செய்யவேண்டுமோ… அதை செய்வேன்’ என நினைத்து அவள் பக்கத்திலேயே அவள் காலில் சாய்ந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவன், பின் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டுவிட்டு அவனும் படுத்துகொண்டான்.
அடுத்தநாள் விடிந்த விடியல், அவள் முகம் பார்த்து விடிந்தது. அவ்வளவு அழகான… மனம் நிறைந்த விடியல், இதுவரை அவன் அனுபவித்ததில்லை.
அவள் கிளம்புதாக சொன்னவுடன் கொஞ்சம் வருந்தினாலும், அவளை அனுப்பிவைத்தான்.
அன்றே காய்ச்சல் நன்றாக குறைந்தது அவனுக்கு.
சனிக்கிழமை… வாரயிறுதி… கண்டிப்பாக அவள் வருவாள் என்று நினைத்து காலையிலேயே அவளுக்காக முதல் முறை அசைவ உணவு சமைத்தான்.
அவளுக்கு ஆசையாக அழைக்க, அவள் கண்களில் கண்ணீருடன்… “இளா ஏதோ வீட்ல சரியில்ல. கல்யாணம் அது இதுன்னு சொல்றாங்க. இப்போ சென்னை வர சொல்றாங்க. நான் சொல்லிடப்போறேன், எனக்கு உன்ன தான் பிடிச்சுருக்குன்னு. ஒழுங்கா ஈவினிங்’குள்ள நீயும் சென்னை வர. வந்து பேசற. எனக்கு வேற வழி தெரியல” என்று சொன்னதும், முதலில் அதிர்ந்தான்.
அவள் போனை வைத்துவிட்டாள். ஆனால் அவன் முகத்தில் இப்போது புன்னகை. ‘காதலை இதுபோல இதுவரை யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள்’ என நினைத்து ‘என்ன ஆனாலும் பரவாயில்லை’ என புறப்பட்டான்.
அவளுக்கு கண்டிப்பாக பெரிய இடம் பார்த்திருப்பார்கள். ‘உன்னிடம் என்ன தகுதி இருக்கிறது’ என்று கேட்டால் என்ன சொல்வது… அவன் படிப்பதும் தெரியவரும்… என்ன சொல்வது என மனதில் அவனே பல கேள்விகளை கேட்டு அதற்கு பதிலும் சொல்லிக்கொண்டு மாலை நேரம் ஆகும்போது கவிதா அகிலன் வீட்டிற்கு வந்தான்.
அங்கே தன் தந்தையை பார்த்ததும் சின்ன அதிர்ச்சி. பின் ப்ரியாவை பார்த்ததும்… மனதுக்குள் மலைச்சாரல். அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆனால் எதிர்பார்த்ததை போல இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது. அவனிடம் அனைவரும் சகஜமாக பேசினார்கள்.
பின் ப்ரியாவின் அப்பா ஜெயராமன் அவனிடம் வேலை குறித்து கேட்க… செழியன் ப்ரியாவை பார்த்தான்.
‘இவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லையே. ஒரு மெஸேஜ் அனுப்பக்கூடாது… என்ன நடந்தது என்று’ என நினைத்து அவளை பார்த்து முறைத்தான்.
‘படிக்கும் விஷயத்தை இப்போது மறைத்தால் சரிவராது’ என எண்ணி அதை சொன்னவுடன், அவன் எதிர்பார்த்ததுபோல ஸ்வாமிநாதன் திட்டிக்கொண்டே பாய்ந்து வந்தார் அவனிடம்.
தன் மேலே தவறிருப்பதால் அமைதியாக நின்றான் செழியன். ஆனால் ப்ரியாவை பார்த்தான். அவள் கண்கள் கலங்கியது.
‘இப்போது எதற்கு அழவேண்டும்? தைரியமாக எதிர்கொள்ளவேண்டாமா?’ என அவளைப் பார்த்து முறைத்தான்.
ஆனால் அவனுக்கு தெரியாது …ப்ரியாவின் அடுத்த பிறந்தநாளைக்குள் திருமணம் நடக்க வேண்டும் என்பது.
அகிலனும் ஜெயராமனும் ஸ்வாமிநாதனை சமாதானப்படுத்த, ஜெயராமன்… “என்னங்க சம்மந்தி. இந்த காலத்து பசங்க வீட்ல சொல்லாம என்னென்னமோ செய்றாங்க, நம்ம பையன் படிக்கிறான். எவ்வளவு பெரிய விஷயம். இதுக்குப்போய் கோபப்படலாமா?” என்றார்.
“இல்லைங்க சம்மந்தி. வேலைதானே பசங்களுக்கு முக்கியம். அதை தொலைச்சுட்டு நிக்கறானே” என்று கோபம் பொங்க பேச…
இப்போது செழியன்… “நான் DRDO ஸ்பான்செர்ஷிப்’ல டாக்டரேட் பண்றேன். முடிச்சவுடனே வேலை. Higher கிரேட் சயின்டிஸ்ட். இவ்ளோ சீக்கிரம் யாருக்கும் அந்த பொசிஷன் கிடைக்காது” என்றான் தந்தை பேசியப்பேச்சில் கோபம்கொண்டு.
அது பற்றி அதிகம் தெரியாத ஸ்வாமிநாதன்… “அதுசரி இப்போ என்ன வருது? உன்ன நம்பி இப்போ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேனே” என தலையில் கைவைத்து உட்கார்ந்துகொண்டார்.
செழியன் ‘இப்போது கல்யாணமா?’ என புரியாமல் ப்ரியாவை பார்க்க… அவளுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“சம்மந்தி இவன் வேணாம். சரிவர சம்பளம் இல்லாத இவன் வேணாம். நீங்க சொன்ன அந்த அமெரிக்கா மாப்பிள்ளை தான் சரி” என்றதும் செழியன் மனதில் கத்தியால் கீறிய வலி.
தன் தந்தையின் வாயால் இப்படி ஒரு வார்த்தை கேட்டபின் … அதுவும் மற்றொருவனுடன் ஒப்பிட்டு தன்னை தாழ்த்தி விட்டாரே என நினைத்து மனம் முழுவதும் வலி.
அங்கு மிகவும் கடினமான சூழ்நிலை நிலவ, அகிலன்… “இப்போ படிச்சா என்ன? கொஞ்ச நாள் தானே. ரெண்டு பேரும் படிக்கட்டும். கல்யாணத்தை மட்டும் இப்போ முடிச்சிப்போம்” என்றான் தந்தையையும் தாயையும் பார்த்து.
அகிலன் சொல்வதும் சரியே என நினைத்தார் ஜெயராமன். செழியன் படிப்பதாக சொன்னபோது அதுவும் DRDO ஸ்பான்சர்ஷிப்’பில்… அவனை இன்னமும் பிடித்துவிட்டது. மனைவியை பார்த்தார். லட்சுமியும் ஆமோதித்தார்.
“நீ என்ன சொல்ற செழியா” அகிலன் கேட்டான்.
‘தன் நிலை இப்படி விவாதப்பொருளாக ஆகிவிட்டதே’ மண்டை வெடிப்பதுபோல செழியனுக்கு இருக்க… மூச்சை உள்ளிழுத்தபடி… ” என் சம்பளம் நாற்பத்தி ஐந்தாயிரம். நான் தனியா ப்ராஜெக்ட் எடுத்து வேலை பார்க்கறேன். ஒரு ப்ராஜெக்ட் வேள்யூ 20K ல இருந்து 40K… சிலசமயம் அதுக்கும் மேல. என்னால பார்த்துக்க முடியும்னு நீங்க நினச்சா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. வேணும்னா படிச்சு முடிக்கறவரை அவ ஹாஸ்டல்’லயே இருக்கட்டும்” என்றான்.
ப்ரியா முறைப்பது அவளை பார்க்காமலேயே புரிந்தது செழியனுக்கு.
ஒருவழியாக அனைவருக்கும் ஒரே அலைவரிசையில் வர, அனைத்தும் சுமூகமாக முடிந்தது.
அதிக நாட்கள் தள்ளிப்போடாமல் இருவரின் படிப்பை, தேர்வை கருத்தில் கொண்டு திருமண தேதி சீக்கிரம் குறிக்கப்பட்டது.
***********************************************************
அதுவரை டைரியில் இருந்த ஒவ்வொன்றையும் படித்துக்கொண்டிருந்த ப்ரியா, செழியன் சின்ன வயதில் பட்ட துன்பத்தை நினைத்து அவனுக்காக அவள் மனம் துடித்தது.
எப்போது செழியனும் தன்னை காதலித்தான் என்று தெரிந்ததோ, அவனுக்காக துடித்த மனதில், கட்டுக்கடங்காத ஆத்திரம் பொங்கியது.
டைரிக்கள் அனைத்தையும் தூக்கி எரிந்து, கண்களில் கண்ணீருடன், தரையில் சரிந்தாள்.
அவனுடன் கடைசியாக சண்டையிட்டது நினைவிற்கு வர… “இவ்ளோ காதலிச்சிட்டு அப்பறம் ஏன்டா ‘அக்காகாகத்தான் உன்னை கல்யாணம் பண்ணிட்டேன். வேறெதுவும் இல்ல’ன்னு அன்னைக்கு சொன்ன?!” என கத்தி அழுதாள்!
