Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperumthunaiye-42

தனிப்பெரும் துணையே – 42

#trigger_alert #Not_for_weak_hearted #Readers_discretion_advised #pregnant_woman_please_avoid

ப்ரியா செழியன் கை ஓங்கியதையெல்லாம் பார்க்கவே இல்லை. அவள் பார்த்தது கண்முன்னே உடைந்திருந்த லாம்ப் மற்றும் அவள் கேட்டது, அவன் உதிர்த்த வார்த்தைகள் மட்டுமே.

பயந்து அவனை பார்த்தாள் முதல் முறை. அதை பார்க்க பார்க்க அவன் இதயத்தை யாரோ ஊசியால் குத்திக்கொண்டே இருப்பதை போல உணர்ந்தான்.

முதல் முறை அவளை கவிதாவுடன் பார்த்தபோது அவள் கண்களில் அன்பை பார்த்தான்.

பின் அவனை யார் என்று தெரியாமல் பேசியபோது கண்களில் அலட்சியத்தை பார்த்தான்.

கவிதா கல்யாணத்தின் போது அவள் கண்கள் காட்டிய ஆச்சர்யத்தை பார்த்தான்.

பின் அவனிடம் பேசிய சில சமயங்களில் கண்களில் குறும்பை பார்த்தான்.

அவள் ட்ரைனிங் என்ற பெயரில் அவன் வீட்டிற்கு முதலில் வந்தபோது, அவள் கண்களில் ஆசையை பார்த்தான்.

அவள் அலுவலகத்தில் அவளை சந்தித்தபோது அவள் கண்களில் காதலை பார்த்தான்.

அவனுக்கு உடம்பு சரியில்லாதபோது, பார்த்து பார்த்து அவள் செய்த ஒவ்வொன்றிலும் கனிவை பார்த்தான்.

ஆனால் இப்போது இந்த பயம், அழுகை அவனை ஏதோ செய்தது. அவன் நெஞ்சை பிசைந்தது. இதுவல்ல அவன் அவளிடம் பார்க்க நினைத்தது. தன்னுடனான வாழ்க்கையில் இந்த கண்களில் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கவேண்டும் என நினைத்திருந்தான். ஆனால் இப்போது?!

ப்ரியா கண்களில் கண்ணீருடன்… “இளா. நீயா பேசற இப்படியெல்லாம்? உன்ன நான் ஒருபோதும் குறைச்சலா நினைச்சதே இல்ல. நான் ரொம்ப அட்மையர் பண்ற ஒரு ஆள் நீ. நீ படிச்ச படிப்புக்கு நீ நினைச்சிருந்தா எவ்வளவோ தற்பெருமை பட்டுருக்கலாம். ஆனா ஒருநாளும் உன்கிட்ட அதை நான் பார்த்ததில்லை. எனக்கு அது ரொம்ப ரொம்ப பிடிக்கும். பட் என் இளா கொஞ்ச நாளா ரொம்ப தற்பெருமையோட பேசறான். ஆனா அதை கூட நான் ரசிச்சேன் இளா. ஆனா வர வர நீ ரொம்ப ஹெர்ட் பண்ற வார்த்தையால. யு ஆர் ஹெர்டிங் மீ எ லாட். ரொம்ப வலிக்குது இளா” அவள் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசினாள்.

அவன் எதுவுமே பேசவில்லை. அவள் பேசியதை அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டான்.

“எனக்கு மூட் சரியில்ல. ப்ராஜக்ட் ஒர்க் கொஞ்சம் இருக்கு. நான் காலேஜ் வரை போயிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு அமைதியாக குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.

செழியன் அமைதியாக உட்கார்ந்தான். அவள் சொன்ன ‘யு ஆர் ஹெர்டிங் மீ எ லாட். ரொம்ப வலிக்குது இளா’ மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ப்ரியா வெளியே வந்தது… கிளம்பியது… புறப்படுகிறேன் என்று சொன்னது… எதுவுமே அவன் காதுகளை அடையவில்லை. அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது… ‘யு ஆர் ஹெர்டிங் மீ எ லாட்’ மட்டுமே.

ப்ரியா சென்றுவிட்டாள். அவனுக்கு ‘ஹெர்டிங்’ என்ற வார்த்தை சம்மட்டியால் அடிப்பதுபோல ஒரு உணர்வு.

அமைதியாக குளியலருக்குள் சென்றான். ஹீட்டர் ஆன் செய்தான். சில நிமிடங்கள் அப்படியே நின்றான். பின் கொதிநிலையில் இருந்த சூடு தண்ணீரை திறந்தவன், அவளை அடிக்க ஓங்கிய கையை அதில் காட்டினான். கை தகித்தது. பின் சிவக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக நிலைகுலைந்தது.

அவன் கையில் ரணம் அதிகமானது. கண்களில் கண்ணீர் கோடாக வந்தது. ஆனால் அவளுக்கு இதுவரை தந்த வலியை காட்டிலும் இது பெரிதல்ல என்றே தோன்றியது.

இப்போது சூடு தண்ணீர் தீர்ந்து, குளிந்த தண்ணீர் வர, கையை எடுத்தான். பின் வெளியே வந்தவன், முகத்தை துடைத்துக்கொண்டு உடை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான். கை ரணத்துடனே அனைத்து வேலையும் செய்ததால், கொப்புளம் ஆகிவிட்டது. அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவேயில்லை.

முதலில் அவளிடம் மன்னிப்பை கோரவேண்டும் என நினைத்து, அவள் டிபார்ட்மென்ட்’க்கு சென்றான். அங்கு அவளை பார்க்கமுடியவில்லை. பின் லைப்ரரியில் இருப்பாளோ என நினைத்து அங்கு சென்றான்.

ப்ரியாவோ, அவனிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு வந்தவள், ப்ராஜக்ட் வேலை செய்ய மனமில்லாமல், லைப்ரரி சென்றாள். சொல்லமுடியாத வலி அவள் மனதில்.

யாரிடமேனும் சொன்னால் கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கும் என நினைத்து, முன்பு அவள் ஹாஸ்டல் அறைத்தோழி காயத்ரியை லைப்ரரிக்கு வரச்சொன்னாள்.

அங்கே காயத்ரியுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். அவள் மராத்தி. தமிழ் தெரியாது.

ப்ரியாவின் முகமே காயத்ரிக்கு காட்டியது ஏதோ சரியில்லை என.

காயத்ரி ‘என்ன ஆயிற்று’ என்று கேட்க, முதலில் தயங்கிய ப்ரியா, பின் அனைத்தையும் சொல்லாமல், செழியனின் கோபம்… கோபத்தின் போது அவன் பேசுவது என்பதை மட்டும் சொன்னாள். காயத்ரிக்கு செழியன் மேல் கோபம் கோபமாக வந்தது.

“என்னன்னே தெரியல காயு. இளா கிட்ட கொஞ்சம் சேஞ்சஸ் தெரியுது இப்போல்லாம்” என்றதும்… “நான் அப்போவே சொன்னேன். எல்லாம் அளவோட இருக்கணும்னு. நீ ரொம்ப அவன் மேல ஆசை வெச்சு இப்போ பாரு கஷ்டப்படற. டூ மச் அஃப் எனிதிங் இஸ் குட் ஃபோர் நத்திங். அது இதுபோல லவ்’கும் பொருந்தும்” கோபத்துடன் காயத்ரி பேச பேச, அவர்கள் உட்கார்ந்து பேசும் மரத்தடியில் ப்ரியாவை பார்த்ததும் செழியனும் வந்தான்.

காயத்ரி சொன்னது அனைத்தும் மரத்திற்கு அந்த பக்கம் நின்றிருந்த செழியனுக்கும் கேட்டது. அவன் அப்போது தான் வந்தான். தன்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்ததும்… மனதின் அழுத்தம் அதிகமானது.

காயத்ரி பேசியபின் ப்ரியா மெளனமாக கண்ணீருடன் இருக்க… அதை பார்க்க பொறுக்காமல் “ஹி மஸ்ட் பி எ சைக்கோ” என்றாள் காயத்ரி கோபத்தின் மிகுதியில்.

அந்த வார்த்தை… ‘சைக்கோ’ என்றது நடு மண்டையில் ஆணி அடித்தாற்போல இருந்தது செழியனுக்கு. அதற்கு மேல் அவர்கள் பேசியது எதுவுமே அவனுக்கு கேட்கவில்லை.

‘அது உண்மையோ!’ மூளை யோசிக்க, கண்கள் கலங்கியது. ‘இல்லவே இல்லை’ என்று கதறியது அவன் மனது. ‘இல்ல நான் சைக்கோ’ மறுபடியும் அதே ஒலி கேட்டது அவனுள்.

கத்தியால் குத்தியோ… இல்லை பெரிய கடப்பாரை கொண்டு அடித்தால் மட்டும் தான் அதுபோல வலி வருமா என்ன? அந்த ஒரு வார்த்தை ‘சைக்கோ’ அவனுக்கு மனதில் அந்த வலியை தந்தது. துவண்டுவிட்டான். கைகாயமெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது.

அதையே யோசித்துக்கொண்டு ஒரு ஜடத்தை போல அங்கிருந்து நகர்ந்தான்.

காயத்ரி ‘சைக்கோ’ என்று சொன்னதும், “காயு. மைண்ட் யுவர் வெர்ட்ஸ்” என்று கிட்டத்தட்ட கத்திவிட்டாள் ப்ரியா.

அதேநேரம் பக்கத்தில் இருந்த மராத்தி பெண், காயத்ரியின் தோழி ஆங்கிலத்தில்… ” “காயத்ரி நம்ம ஹுயுமானிட்டிஸ் ஸ்டுடென்ட்ஸ். இதுபோல ஒருத்தரை கவுன்செல் செய்யாமல் சைக்கோ என்று சொல்லலாமா?” என்றாள் கூர்மையாக.

ப்ரியா அந்த பெண்ணை பார்க்க… “உங்க ப்ராப்லம் என்னன்னு தெரியல. பட் டோன்ட் கம் டு எனி கண்க்ளுஷன் வித்அவுட் ப்ரோபர் கன்சல்டேஷன்” என்றாள் அந்த பெண். ப்ரியா அதை கேட்டுக்கொண்டாள்.

காயத்ரி பின் “ஸாரி ப்ரியா. நீ கஷ்டப்படறத பார்க்க முடியல. அதான் அப்படி சொல்லிட்டேன். பட் என்ன சொன்னாலும் ஹி இஸ் ராங். உன் அருமை அவனுக்கு தெரியல. நீ கொஞ்ச நாள் அவன் கூட பேசாத. இல்ல ஊருக்கு போ. அப்போதான் அவனுக்கு புரியும்” என்றாள்.

ப்ரியாவிற்கு குழப்பமாகவே இருந்தது. காயத்ரியிடம் பேசிவிட்டு, மறுபடியும் டிபார்ட்மென்ட் சென்றுவிட்டாள்.

செழியன், அங்கிருந்து நடக்க ஆரம்பித்தவன் தான். கண்கள் வெறித்து… எங்கு செல்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. கால்கள் தானாக மூளையின் அறிவுறுத்தலில் வீட்டிற்கு போகும் வழியில் சென்றது.

ரோட் க்ராஸ் செய்தான். ஆனால் இருபுறமுமெல்லாம் பார்த்து செல்லவில்லை. கிட்டத்தட்ட வண்டியில் மோதும் அளவிற்கு அவன் எதையும் பார்க்காமல் நடந்தான். மனது முழுவதும் ‘நான் சைக்கோவா’ என்ற கேள்வியே.

பலபேரின் திட்டெல்லாம் கேட்கவில்லை. காயத்ரி சொன்னதுமட்டுமே கேட்டது. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவன், கதவை தாழிட்டுக்கொண்டு படிக்கையில் உட்கார்ந்தான்.

மனதில் கதறி அழவேண்டும் என்று தோன்றினாலும், அழுகை வரவில்லை. கண்ணுக்குமுன் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் தெரிந்தது. பார்ட்டி சென்றபோது அவர்கள் எடுத்தது.

அவளின் சிரித்தமுகம் அதில் தெரிய… தீடீரென ஒரு உருவம் கண் முன்னே ஓடியதுபோல உணர்வு. சுற்றிப்பார்த்தான். ஒன்றும் இல்லை.

இப்போது தீடீரென குரல் கேட்டது. ‘பார் அவள் சிரித்தமுகத்தை பார். உனக்காக அதை தொலைத்துவிட்டு இப்போது நிற்கிறாள் பார்’ என்று சத்தமாக கேட்டது. அதுகேட்டவுடன் பதறிக்கொண்டு ஒரு மூலையில் சென்று பயத்தில் உட்கார்ந்தான்.

கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. சுற்றியும் பார்த்தான் யாருமில்லை. இப்போது மறுபடியும் ஒரு உருவம் அவன் முன்னே ஓடிமறைந்தது. கண்களை மூடிக்கொண்டான்.

‘கண்களை மூடிக்கொண்டால்? நீ செய்ததெல்லாம் இல்லை என்றாகிவிடுமா’ அதே குரல் மறுபடியும். காதை அடைத்துக்கொண்டு அவசரமாக கண்களை திறந்தான். யாருமில்லை.

சிலநொடிகளில் மறுபடியும் ஒரு உருவம் ஓடிச்சென்றது. கண்களை மூடிக்கொண்டு காதை அடைத்துக்கொண்டான். கை சுட்டதின் வலி வேறு ஒருபக்கம். இருந்தும் கையை எடுக்கவில்லை. எங்கே எடுத்தால் அந்த ஒலி கேட்குமோ என்று.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ, வாசல் கதவு அதிரும் படி தட்டும் சத்தம் கேட்டு வியர்த்து விறுவிறுத்து அவசரமாக எழுந்தான்.

அவன் கதவை திறக்க, அவன் முன்னே நின்றாள் ப்ரியா. அவளை பார்த்ததும் இவ்வளவு நேரம் சீராக இல்லாத மூச்சை இப்போது நன்றாக வெளியிட்டான்.

அவனை பார்த்துவிட்டு அவனை கடந்து உள்ளே சென்றாள் ப்ரியா.

சமையலறை உள்ளே சென்றவள், அதேவேகத்தில் திரும்பி வந்து… “சாப்பிடவே இல்லையா இளா? சமைக்கவே இல்லையா? என் இப்படி பண்ற… இரு நான் ஏதாச்சும் பண்றேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இவ்வளவு நேரம் வராத கண்ணீர், அழுகை இப்போது கொட்டியது. கத்தி அழவேண்டும் என்பதுபோல இருந்தது.

குளியல் அறைக்குள் புகுந்துகொண்டவன், தண்ணீர் குழாயை திறந்துவிட்டு சத்தமாக கத்தி அழுதான்.

‘தன்னை இப்படி பார்த்துக்கொள்ளும் அவளுக்கு தான் செய்ததென்ன? அவளுக்கு தந்ததெல்லாம் மனவருத்தம் தான்’ தொண்டை வறண்டுபோகும்வரை அழுதான்.

பின் ‘சைக்கோ’ என்பது மறுபடியும் ஞாபகம் வர, அவசரமாக தன்னிடம் இதுநாள்வரை தெரிந்த மாற்றங்கள் அனைத்தையும் யோசித்துப் பார்த்து ஒவ்வொன்றாக கூகிளில் பார்த்தான்.

ஒவ்வொன்றையும் படிக்க, மனது இன்னமும் ரணமானது. கண்டிப்பாக தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று முடிவெடுத்தான்.

‘தனக்கு ஆனது இருக்கட்டும்… ஆனால் இசையின் நிலை? தன்னை காதலித்தது தவிர வேறு எந்த தவறையும் அவள் செய்யவில்லையே. அவளுக்கு தன்னுடன் வாழும் தண்டனை தேவையா?’ என்று அந்த கோணத்தில் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

இப்போது அமைதியாக வெளியே வந்தான். அவள் சமையலறையில் தான் இருந்தாள். மனது முழுவதும் பல கேள்விகள்.

எதற்காக இசை இதெல்லாம் பொறுத்துக்கொண்டு தன்னுடன் வாழவேண்டும்? இதுபோல செயல்கள் ஓரிருமுறை செய்வதே தவறு. ஆனால் அடிக்கடி செய்தால் அது மனதளவில் அவளை எவ்வளவு பாதிக்கும்? இப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு தேவையா? தன் அக்காவிற்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்திருந்தால் எவ்வளவு கோபம் வந்திருக்கும் தனக்கு. அதேகோபம் தானே வரவேண்டும் இசையை நினைக்கும்போது?

கேள்விகளுக்கான பதில்களும் யோசித்தான்.

இப்படி ஒரு வாழ்க்கை இசைக்கு தேவையே இல்லை. ‘அவன் சைக்கோவாக இருப்பானோ’ என்ற எண்ணம் எப்படியும் ஒரு மூலையில் அவளுக்கு வந்திருக்கும். அது அப்படியே இருக்கட்டும். நான் சைக்கோவாகவே இருந்து கொள்கிறேன். அவள் நன்றாக இருக்கவேண்டும். ‘இதுபோல ஒருவனுடன் வாழவேண்டுமா’ என்று அவள் நினைக்கவேண்டும். ‘இதுபோல ஒரு வாழ்க்கை வேண்டாம்’ என முடிவெடுக்கவேண்டும். நான் வேண்டாம் அவளுக்கு. என்னைவிட்டு செல்லட்டும் என்று முடிவெடுத்தான்.

எப்படி அவளிடம் பேச வேண்டும்… என்ன பேசவேண்டும் என்பதையும் முடிவெடுத்தான்.

அதே நேரம் சீக்கிரம் உணவு தயார் செய்த ப்ரியா, “இளா சாப்பாடு ரெடி. வா சாப்பிடலாம்” என்று அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

அவளின் அந்த அன்பான முகம்… ‘இதை இனி பார்க்கமுடியதா?’ என்ற ஏக்கம் மனதில் எழுந்து… தொண்டை அடைத்தாலும், அழுத்தம் அதிகமானாலும்… முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு… “வேலை செய்றப்ப தொல்லை பண்ணாதன்னு எவ்ளோ டைம் சொல்றது. கண்முன்னாடி நிக்காத போ” என்றான்.

இது அவளுக்கு புதிதில்லையே. அமைதியாக… “சரி சாப்ட்டுட்டு செய்” என்றாள். உடனே கோபம் கொண்டு எழுவதுபோல அவன் எழுந்தான். அவன் உட்கார்ந்திருந்த சேர் இரண்டு அடி தள்ளி சென்று கீழே விழுந்தது.

ப்ரியா அதிர்ந்து அவனை பார்க்க, “எப்போ உன்னை கல்யாணம் பண்ணேனோ அப்போவே எல்லாம் போச்சு. இன்னும் உன்னால நான் எதுவெல்லாம் இழக்க போறேனோ. இப்போ சாப்பாடு தான் முக்கியமா?” என்று அவன் கத்த, அந்த வார்த்தைகள் ப்ரியாவை நிலைகுலையச்செய்தது.

“இளா” பரிதவிப்போடு பார்த்தாள் ப்ரியா அவனை.

ஒருவன் மனதளவில் அழுதுகொண்டு, வெளியில் கடுமையாக இருப்பதுபோல காட்டிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை நேர்த்தியாக செய்தான் செழியன். அவளின் அந்த பரிதவிப்பு அவனை சுத்தமாக உள்ளுக்குள் வதைத்தது.

இருந்தும்… “என்ன? உண்மைய சொன்னா கஷ்டமா இருக்கா?” என்றான் அதே கோபத்துடன் இருப்பதுபோல.

ப்ரியா அப்படியே நிற்க, “அக்காக்காகன்னு ஒன்னொன்னும் பண்ணி என் வாழ்க்கை போனது தான் மிச்சம்” என்று அவள் காதில் படும்படியே முனகினான்.

“என்ன சொன்ன இளா? எதா இருந்தாலும் சத்தமா சொல்லு.” கூர்மையாக அவனை கேட்டாள்.

‘நான் சொல்றத நம்பாத இசை. ப்ளீஸ்’ அவன் மனம் தவித்தாலும்… “எனக்கு சொல்ல பயமா என்ன? அக்கா வாழ்கைக்காகத்தான் உன்ன கல்யாணம் பண்ணிட்டேன். எங்க முடியாதுனு சொல்லி உங்க அண்ணன் என் அக்காவை கஷ்டப்படுத்துவாரோன்னு தான் சம்மதிச்சேன். போதுமா?” என்றான் இறுகியமுகத்துடன்.

இதை சொன்னபோது அவன் மனதளவில் உடைந்துவிட்டான்.

ப்ரியா அதை கேட்டவுடன் எந்த உணர்ச்சியயும் காட்டாமல்… “ஓ. அப்போ நீ என்னை லவ் பண்ணவே இல்ல… அப்படித்தானே. உன் அக்காக்காகத்தான் கல்யாணம் பண்ணிட்ட?” அவள் கேட்ட… “இதுல சந்தேகம் வேற இருக்கா? உன்னை பிடிக்கும் அவ்ளோ தான். அது லவ் எல்லாம் இல்ல” திடமாக பதில் தந்தான்.

“ஹ்ம்ம். சரி இளா. பிடிக்காத ஒரு வாழ்க்கை நீ வாழவேண்டாம். நான் போய்டறேன். நீ இழந்தது எல்லாமே திரும்பி வந்துடும்” இதை சொன்னபோது, ப்ரியா அழவில்லை. கோபப்படவில்லை. மனது இறுகிப்போனது.

“பட் நான் ரெக்ரெட் பண்றேன் இளா. உன்னை போய் அவ்ளோ லவ் பண்ணேனானு… நீ தந்த அளவுக்கு சந்தோஷத்தை எனக்கு யாரும் தந்ததில்லை. உன்னை தவிர என்னை யாரும் இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தியதும் இல்ல” கண்களில் கண்ணீர் இப்போது வரப்பார்த்ததோ. மூச்சை ஆழ இழுத்து வெளியிட்டாள் ப்ரியா.

செழியன் அவள் பேசியபின் ஒரு ஏளனப்புன்னகையை உதிர்த்தான் அவளைப் பார்த்து. இப்போது அவள் முன் நிற்பது வெறும் உடல் கூடு மட்டுமே. எப்போது அவள் காதலித்ததுக்காக வருந்தினாலோ, அப்போதே அவன் உயிர் போய்விட்டது.

அவனின் அந்த புன்னகை அவளை வெகுவாக தாக்க, துணிகளை எடுத்துவைக்க ஆரம்பித்தாள்.

செழியன் அங்கே நிற்காமல் பால்கனி’க்கு சென்று கதவை மூடி உட்கார்ந்தான்.

கைக்கொண்டு வாயை இறுக மூடிக்கொள்ள, அவன் அழும் சத்தம்… ஏன் மூச்சு விடும் சத்தம் கூட யாருக்கும் கேட்காது.

மனம் விட்டு அழுவது வேறு, ஆனால் மனம் விட்டு அழவேண்டும் அதுவும் எந்த சத்தமும் இல்லாமல் என்பது… தொண்டை கிழியும் அளவிற்கு வலியை ஏற்படுத்தும்.

இப்போது… ஒரு உருவம் அவன் பக்கத்தில் வந்தது. அவனை பார்த்து சிரித்தது. ‘நீ அவளை சந்தோஷமா வச்சுப்பயா? அவளே சொல்லிட்டா உன்ன லவ் பண்ணது தப்புனு’ அந்த உருவம் பேச, செழியன் பயத்தில் மூச்சு விடக்கூட சிரமப்பட்டான்.

ப்ரியா பால்கனி கதவை தட்டியவுடன், தன்னை சமநிலை படுத்திக்கொண்டு கதவை திறந்தான். இருந்தும் அழுது கண்கள் சிவந்திருந்தது.

ஆனால் அவளோ, ‘எங்கே அவன் முகம் பார்த்தால் மறுபடியும் மனம் இளகிவிடுமோ? அவனுக்கு தொல்லையாக இருந்துவிடுவோமோ?’ என நினைத்து அவன் முகம் பாராமல், “நான் கிளம்பறேன்” என்றுவிட்டு வேறெதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.

அவள் சென்ற ஐந்து நிமிடங்கள் கழித்து… கதவை மூடியவன்… கிட்டத்தட்ட பித்துப்பிடித்தவனை போல கத்தினான். அழுதான்.

**********************************************

டைரியில் அதற்கு மேல் எதுவும் இல்லை. ப்ரியா அந்த டைரியில் முகம் புதைத்து கதறி அழுதாள்.

‘எவ்வளவு மனதளவில் போராட்டம் அவனுள்? அந்த நிலையிலும் தனக்காக யோசித்திருக்கிறானே? ஒரே ஒரு முறை தன்னிடம் சொல்லியிருந்தால் அவனுக்காக நான் இருந்திருக்க மாட்டேனா? குழந்தையை கலைத்துவிடு என்று இதற்குத்தான் சொன்னானா?’ அவள் அழுது அழுது ஒரு கட்டத்தில் நேரம் ஆகிக்கொண்டே போக, மணியை பார்த்தாள். இரவு எட்டு மணி ஆகியிருந்தது.

செழியன் காலையில் சென்றவன் இன்னமும் வரவில்லை. கதவை திருந்து வெளியே எட்டிப்பார்க்க, பக்கத்துக்கு வீட்டுப்பெண் அவளை பார்த்து ‘இவ்வளவு நாள் எங்கே சென்றாய்’ என்று விசாரித்தாள்.

ப்ரியாவும் பதில் தந்துவிட்டு, உள்ளே வர, ஏதோ ஒன்று மனதில் பொறித்தட்ட… அந்த பெண்ணிடம்… “நான் இல்லாதப்ப ஏதாச்சும் நடந்ததா வீட்ல?” என்று கேட்டதும், அந்தப்பெண் கொஞ்சம் தயங்கி பின்…

“சிலசமயம் சத்தம் கேட்டுச்சு ப்ரியா. என்னன்னு தெரியல. அப்பறம் ரெண்டு நாள் முன்ன, இவர் ஷிஃப்ட் முடிஞ்சு வர்றப்ப, உன் கணவன் யாரோடவோ வெளிய போனார். மணி நைட் ஒரு பதினொன்னு இருக்கும்” என்றாள்.

செழியனுக்கு தெரிந்தவரா? அதுயார்? யாருடன் பேசுவான்? என்று ப்ரியா யோசிக்க, அவள் மூளையில் பளிச்சிட்டது குமாரின் முகம்.

அவசரமாக மொபைலில் அவன் போட்டோவை அந்த பெண்ணிடம் காட்ட… அந்த பெண் அவன் தான் அழைத்துச்சென்றான் என்றாள்.

உடனே கிளம்பினாள் ஹாஸ்டலுக்கு. குமாரின் அறைக்கதவை தட்ட, கதவை திறந்த குமாருக்கு அதிர்ச்சி.

“எங்கண்ணா இளா” வேறெதுவும் கேட்காமல் விஷயத்தை கேட்க, சற்று தயங்கிய குமார்… அவளை அழைத்துச்சென்றான் IIT’க்குள் இருந்த மருத்துவமனைக்கு.

ப்ரியாவின் மனது பதறியது. அவனுக்கு எதுவும் இருக்கக்கூடாது என்று. குமார் ஒரு இடத்தில் நிற்க, அங்கிருந்து பார்த்தவளுக்கு தன்னைமீறியும் அழுகை வர, அவள் கண்ணெதிரில் துவண்டு போய் படுத்திருந்தான் செழியன்!

18 thoughts on “Thaniperumthunaiye-42

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved