ThaniperumThunaiye-47
தனிப்பெரும் துணையே – 47
தனக்காக பேசும் மனைவியை நினைத்து பெருமிதத்துடன் அவன் இருக்க, மாடிப்படியில் இருந்து இறங்கினாள் வெண்பா.
“வெண்பாகுட்டி. இங்க என்ன பண்றீங்க…” கேட்டபடி வெண்பாவை கூட்டிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான் செழியன்.
அவனை ப்ரியா எதிர்பார்க்கவில்லை. அவன் வெண்பா என்று விளிக்கும்போதே கண்களை அவசரமாக துடைத்துக்கொண்டு ‘அவன் அனைத்தையும் கேட்டிருப்பானோ? மறுபடியும் இது மன உளைச்சல் தந்துவிடுமோ?’ என்று பயந்தாள்.
அதேநேரம் மற்ற மூவரும் கலக்கத்தில் இருக்க, ப்ரியா செய்கையாலேயே ‘தெரியவேண்டாம்’ என்றாள் மூவரிடமும்.
“வாங்க ப்பா. அக்கா… நல்லா இருக்கயா?” இருவரையும் கேட்க, தங்களை மீறி வரும் கண்ணீரை கட்டுபடித்துக்கொண்டு இருவரும் தலையசைத்தனர்.
“வாங்க” என்று அகிலனிடம் சொல்லிவிட்டு… ப்ரியாவிடம், “கதவை திறந்துவச்சுட்டா இருப்பீங்க… பாரு வெண்பா மேல போய்ட்டா. ஏதாச்சும் குடுத்தயா எல்லாருக்கும்?” என்று கேட்க, ப்ரியா ஆயிற்று என்பது போல தலையசைத்தாள்.
“ஒரு டூ மினிட்ஸ். ரெஃப்பிரேஷ் ஆயிட்டு வந்துடறேன்” அவன் பொதுவாக சொல்லிவிட்டு உள்ளறைக்குள் சென்றான்.
மருத்துவர் அனைத்தையும் ப்ரியாவிடம் சொல்லிவிட்டார் போல என நினைத்தான். அதை நினைத்து அவன் வருந்தவில்லை. தன்னைக்குறித்து ப்ரியாவிற்கு கண்டிப்பாக தெரியவேண்டும் என நினைத்தான். இப்பொது மனதில் ஒரு நிறைவு.
ப்ரியா அவன் உள்ளே சென்றதும் மெதுவாக, “அவன்கிட்ட சகஜமா இருங்க. ஏதோ பறிபோனமாதிரி நடந்துக்காதீங்க” என்றாள் கொஞ்சம் அழுத்தமாகவே.
அதே நேரம் உள்ளறையில் இருந்து… “இசை. கொஞ்சம் டவல் எடுத்துத்தர்றயா?” என்று அவன் அழைக்க… ‘இதென்ன புது பழக்கம்’ என்று பற்களை கடித்துக்கொண்டு உள்ளே சென்றவுடன், அடுத்தநொடி அவளை கட்டிக்கொண்டான் செழியன்.
ப்ரியா புரியாமல் அதிர்ந்தது நிற்க, அவன் அணைப்பு இறுகியது.
‘அனைத்தையும் கேட்டுவிட்டான் போலவே… தாங்கிக்கொள்ளமுடியவில்லையோ?’ என்ற படபடப்பில், அவன் பின்புறத்தை தட்டிக்கொடுத்து “இளா” அழைத்த நொடி…
“அப்பா நீங்க அம்மாவை ஹக் (hug) பண்றதுபோலவே மாமா அத்தைய பண்றாரு” என்று சத்தமாக சொல்லி வாயில் கைவைத்து சிரித்தாள் வெண்பா.
வெண்பாவின் பேச்சு ஆரம்பிக்கும்போதே சட்டென விலகினான் செழியன். ப்ரியாவை அசட்டுப்பார்வை பார்க்க, வெண்பா முடிக்கும்போது… ப்ரியா செழியனை பார்த்து முறைத்தாள். இல்லை முறைக்க முற்பட்டாள்.
அங்கிருந்த சூழ்நிலை வெண்பாவின் பேச்சால் கொஞ்சம் இலகுவானது. வெளியில் இருந்த மூவருக்கும் புரிந்துவிட்டது ‘எதற்காக… என்ன நடந்திருக்கும்’ என்று. உடனே கவிதா வெண்பாவை அங்கிருந்து அழைத்தாள்.
ப்ரியாவுக்கு வெண்பா பேசியபின் தர்மசங்கடமாகிவிட்டது. செழியனை அவள் முறைக்க, அவள் கண்களில் பலநாட்களுக்கு பின் உயிர்ப்பை பார்த்தவன் மனது நிறைவானது.
கண்கள் மின்ன, அவள் மூக்கை பிடித்து ஆட்டியபடி குளியலறைக்குள் சென்றுவிட்டான்.
அவனின் இந்த செய்கை அவளின் மனநிலையை சுத்தமாக மாற்றியது. முறைக்க முயன்று தோற்றுப்போய் இப்போது புன்னகை வந்தது.
தன்னை சமநிலை படுத்திகொண்டு வெளியே சென்றாள். அங்கு மூவரும் சிந்தனையில் இருக்க, ப்ரியா சாதாரணமாக இருக்க முற்பட்டாள்.
“மாமா கொஞ்சம் காபி போடறேன். அண்ணா அண்ணி உங்களுக்கு ப்லாக் காபி தானே. டூ மினிட்ஸ்” புன்னகையுடன் சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.
கவிதா பின்னோடு உள்ளே வர, “அண்ணி நீங்க போய் உட்காருங்க. நான் போடறேன். அங்க வீட்ல தான் எப்பவும் வேல. இங்க அமைதியா இருங்க நான் பார்த்துக்கறேன்” என்றாள்.
கவிதா மிகுந்த தயக்கத்திற்கு பின், “ஸாரி ப்ரியா” என்றாள் மனதில் இருந்த வலியின் வெளிப்பாட்டில்.
“எதுக்கண்ணி ஸாரி’லாம். தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாம் நடந்தாச்சு. சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன். ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்றாள் நிஜமாக.
“ச்ச கண்டிப்பா இல்ல. நீ சொல்லலைனா என் தப்பு எனக்கே தெரிஞ்சிருக்காது” என்று பேசும்போது… அகிலனும் அங்கே வந்தான்.
ப்ரியா இப்போது இதை பற்றி பேசவேண்டாம் என நினைத்து… “ஏய் அண்ணா. அண்ணிய கொஞ்ச நேரம் தனியா விடமாட்டயே. போங்க ரெண்டு பெரும் போய் உட்காருங்க உங்களுக்கு என் காபி தான் பனிஷ்மென்ட்” என்றதும் இருவரும் புன்னகைத்துக்கொண்டே முகப்பிற்கு வரும்போது செழியனும் வந்தான்.
இதுவரை யாருக்கும் தெரியாது அவனுக்கு மட்டும் தெரிந்தது. மிகவும் சிறிய வீடு. சில fiber chair ஒரு சிறிய டேபிள் மற்றும் படுக்கை என ஹாலில் இருக்க, கொஞ்சம் நெரிசலாக இருந்தது. ‘பெரிய வீட்டுக்கு சீக்கிரம் போகணுமோ’ என்று மனதில் தோன்றியது.
பொதுவாக அங்கிருந்தவர்களிடம்… “ரொம்ப கன்ஜஸ்ட்டட்’ ஆஹ் இருக்குல்ல” என்றவன் படுக்கையை எடுக்க “இருக்கட்டும் செழியா விடு” என்றான் அகிலன்.
“பரவால்ல” என நிறுத்திய செழியன் பின், சில நொடிகளுக்குப்பின் “பரவால்ல மாமா” என்றான் ப்ரியாவின் படுக்கையை எடுத்தவண்ணம்.
இதுவரை அதிகம் அகிலனிடம் பேசியதில்லை. கேட்பதற்கு பதில் அவ்வளவே. அப்படி பேசும்போது மரியாதை நிமித்தம் பேசுவான். ஆனால் முறைவைத்தெல்லாம் அழைத்ததில்லை. அதுதான் அந்த சில நொடிகளுக்கான காரணம். அகிலன் புரிந்துகொண்டான். அவன் மட்டுமல்ல, கவிதாவும் ப்ரியாவும் கூட அதை கவனித்தனர்.
அகிலன் கவிதா புன்னகைத்தனர் என்றால், ப்ரியாவிற்கு கண்ணீர் துளிர்த்தது. ‘அவன் மாறுகிறான்’ என்று நினைத்து. அவள் மனம் மகிழ்ச்சியில் கொஞ்சம் வேகமாவே துடித்தது.
உடனே அகிலன் அடுத்த படுக்கையை எடுக்க… “ஐயோ நீங்க எடுக்காதீங்க. நானே வர்றேன்” என்று செழியன் முடிப்பதற்குள், அகிலன் “இருக்கட்டும் செழியா” என்று அவன் பின்னால் சென்றான் மற்றொரு படுக்கையை எடுத்துக்கொண்டு. வேண்டாமென மறுத்தும் கவிதா அந்த இடத்தை சுத்தம் செய்தாள்.
அவ்வளவு தான்… மற்ற சொந்தங்கள் எப்படியோ… உடன் பிறந்தவர்களுடன் ஏற்படும் கோபம்… மனக்கசபெல்லாம் அதிக நேரம் நீடிக்காது என்பதற்கு உதாரணம்போல அங்கே அனைவரும் நடந்துகொண்டனர்.
ஸ்வாமிநாதன் இறுக்கத்துடனே இருந்தார். எதிலுமே கலந்துகொள்ளவில்லை. சேரில் இருந்து கீழே உட்கார்ந்துகொண்டார். வீட்டிலும் அவர் அதிகம் அப்படியே இருப்பார் என அனைவருக்கும் தெரியும்.
இப்போது பார்ப்பதற்கு உட்கார கொஞ்சம் இடம் இருப்பதுபோல இருந்தது செழியனுக்கு.
ப்ரியா தனியாக இருக்கிறாள் என நினைத்து சமையலறைக்குள் சென்றான். அங்கே ப்ரியா புன்னகையுடன் மேலுதட்டை கடித்தவண்ணம் உள்ளேவந்தவனை பார்க்க, அவன் கண்கள் சட்டென அவள் இதழ்களில் நிலைத்தது.
அதை புரிந்துகொண்டு ஒரு நொடி விழி விரித்தவள், உடனடியாக முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவனும் புன்னகைத்துக்கொண்டே காபி’யை கொடுக்க எடுத்துச்சென்றான்.
கவிதா அகிலனுக்கு கொடுத்தபின், ஸ்வாமிநாதனுக்கு தந்தான் செழியன். அவனை பார்த்து அவர் கண்கள் கலங்கியது. அவன் ‘கூடாது’ என்பதுபோல புன்னகைத்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.
அனைவரும் கீழே உட்கார்ந்திருக்க. பின் ப்ரியா தனக்கும் செழியனுக்கும் எடுத்துவந்தாள். அவளும் உட்கார வரும்போது, அதை மறுத்து மேலே உட்காரச்சொன்னான் செழியன்.
அவள் முறைக்க… “டாக்டர் சொன்னாங்கல்ல… ஸ்ட்ரைன் பண்ணிக்கக்கூடாதுனு” அவன் அழுத்தமாக சொன்னான்.
முதலில் அவள் முறைத்தாலும், பின் அவன் அன்புக்கட்டளையில் அமைதியாக மேலே உட்கார்ந்தாள். அதைக்கண்டவுடன் அகிலனுக்கு மனதில் நிறைவு. கவிதாவிற்கு பெருமிதம்.
செழியன் மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. ‘தன் வீட்டிற்கு இத்தனை பேர் வருகை’ என நினைத்து.
திடீரென அங்கு ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது. ‘யார் அடுத்து என்ன பேசவேண்டும்’ என. ப்ரியா அதை உணர்ந்து பேசவரும்முன்…
“என்ன மன்னிச்சிடுடா செழியா” முற்றிலுமாக உடைந்தார் ஸ்வாமிநாதன்.
“அப்பா” என செழியன் பதற, கவிதாவும் பதறிக்கொண்டு அவர் அருகில் சென்று உட்கார்ந்தாள்.
அகிலனும் அவரை சமாதானம் செய்ய நினைக்க… ப்ரியாவிற்கு மனதில் சின்ன நெருடல் ‘தான் பேசியதாலோ’ என்று நினைத்து.
இருந்தும் அதில் தவறில்லை என திடமாக நம்பினாள். பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் இதற்கு என்று நினைத்து அவள் அமைதியாக இருந்தாள். அவள் அமைதி அகிலனுக்கு புரிந்தது. பெருமையாக பார்த்தான் தங்கையை.
“உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கஷ்டப்படுத்திடேன்ல” ஸ்வாமிநாதன் தடுமாறி பேச, “என்னப்பா இதெல்லாம்” என்று கவிதா சமாதானம் செய்யப்பார்த்தாள்.
“இல்ல கவி. அம்மா இல்லாத பசங்கள இன்னமும் நல்லா பார்த்துட்டு இருத்திருக்குமோனு… ப்ரியா பேசினதுக்கப்புறம் தோணுது. தப்பு பண்ணிட்டேன்” அவர் கிட்டத்தட்ட மனமுடைந்து பேசினார்.
“அப்படியெல்லாம் இல்லப்பா. நீங்க நினைச்சுருந்தா வேற ஒரு கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா எங்களுக்காகவே வாழ்ந்தீங்களே பா” செழியன் அவரை அமைதிப்படுத்த பேசினான்.
“இன்னொரு கல்யாணமா? என் மதி இருந்த இடத்துல வேற ஒருத்தர நினைச்சு பார்க்கமுடியுமா என்னால? என் கண்ணுமுன்னாடி அவ கண்மூடினத பார்த்தேன். அப்போவே என் உயிர் பாதி போச்சுடா. ஆனா அவ போறதுக்கு முன்னாடி சொன்னதெல்லாம் நிறைவேத்த மீதி உயிரை பிடிச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்” கண்ணீர் மல்க சொன்னவர் நினைவுகள் பின்னோக்கிச்சென்றது.
**************************
மதுமதியின் சிறு வயதில் அவர் பெற்றோர் விபத்தில் இறந்துவிட, தாய் வழி பாட்டியின் உதவியுடன் வளர்ந்தார். மிகவும் கஷ்டப்படும் குடும்பம். அவர் வளர வளர, படிப்பின் மேல் இருந்த ஆர்வத்தினால் நன்றாக படித்து, கல்லூரிவரை வந்திருந்தார்.
ஸ்வாமிநாதன் கொஞ்சம் மேற்தட்டு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து மதுமதி சேர்ந்த அதே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அம்மா தம்பி மட்டுமே.
கல்லூரியில் ஒரு நாள் மதுமதியை பார்க்க நேர, பார்த்ததும் பிடித்துப்போய், சில நாட்களுக்கு பின் அவர் மதுமதியிடம் மனம் திறந்தார். முதலில் தன்னிலை நினைத்து மறுத்தார் மதுமதி.
ஒரு வருடம் கழித்து தன்னை பார்த்துக்கொண்ட பாட்டியும் தவறிவிட, சொந்தங்களின் ஆதரவு அதிகம் இல்லாமல் இருந்த மதுமதிக்கு ஸ்வாமிநாதன் காட்டிய அன்பு, அவர் மனதை மாற்றச் செய்தது. இருவரும் காதலித்தனர்.
இது ஸ்வாமிநாதன் வீட்டில் தெரியவர, அவர் அம்மா இவர்கள் காதலை ஏற்கவில்லை. படித்துமுடித்த சுவாமிநாதனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.
இது சுவாமிநாதனுக்கு தெரியவர, பலவிதமாக யோசித்து, மதுமதி மறுத்தும் கேட்கமால், வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டார்.
அதில் ஆத்திரம் கொண்ட ஸ்வாமிநாதன் தாயார், அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப, அங்கு ஆரம்பித்தது அவர்கள் வாழ்வின் போராட்டம்.
ஒரு சின்ன வேலையில் ஸ்வாமிநாதன் சேர்ந்த பின், மதுமதியும் ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.
முதலில் அழகாக சென்ற அவர்கள் வாழ்க்கை, இரண்டு குழந்தைகள் என்று ஆனபின், கொஞ்சம் திண்டாட்டம் காண ஆரம்பித்தது. இருந்தும் இருவரும் நேர்த்தியாக சமாளித்தனர். ஸ்வாமிநாதனுக்கு மதுமதி என்றால் உயிர். மதுமதிக்கும் அதுவே.
இதற்கிடையில் ஸ்வாமிநாதன் தம்பி விஸ்வநாதனுக்கு திருமணம் செய்துவைத்த அவர்கள் தாயார், சொத்து முழுவதையும் விஸ்வநாதன் பெயரில் மாற்றிவிட்டு உடல் நலம் குன்றி காலமானார்.
விஸ்வநாதன் கள்ளம் கபடமில்லாதவர். ‘அண்ணனின் பங்கு’ என சொத்தை தர நினைக்க, அதை மறுத்துவிட்டனர் ஸ்வாமிநாதனும் மதுமதியும்.
மதிமதிக்கு உதவி என்று யாரிடமும் நிற்பதற்கு பிடிக்காது. என்னதான் கஷ்டம் என்றாலும் அவர்களே சமாளிக்க வேண்டும் என்று நினைப்பவர். வீட்டை அழகாக நடத்திச்சென்றார்.
இப்படியாக அவர்கள் வாழ்க்கை நகர, இடியாய் வந்தது மதுமதியின் உடல் உபாதை. முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கை வைத்தியம், சில மாத்திரைகள் என்று அவரே எடுத்துக்கொண்டார். மருத்துவமனை போவதை தவிர்த்தார். அதற்கு முக்கிய காரணம், ‘அதற்க்காக என்று பணம் எடுத்துவைக்கவேண்டுமே’ என நினைத்து.
நாட்கள் செல்ல செல்ல வயற்றுவலி அதிகமானது. முதலில் அதை பொறுத்துக்கொண்டாலும், ஒரு கட்டத்தில் முடியாமல் போக மருத்துவரிடம் சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் ‘அவருக்கு வயற்றில் புற்றுநோய்… அதுவும் அதிவேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்தலும் பயனிருக்குமா என்று தெரியவில்லை. உடனடியாக அட்மிட் ஆகவேண்டும் இல்லையேல் நெஞ்சுவலி எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று சொன்னவுடன், முற்றிலுமாக அதிர்ந்தார் மதுமதி.
திருமணமான பல பெண்கள் செய்யும் தவறு. தங்கள் உடலை பார்த்துக்கொள்ளாமல், குடும்பம் மட்டுமே என நினைத்து, எந்த அறிகுறிகளையும் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். அது கடைசில் இதுபோல வந்து நிற்கும்.
இப்படி இருக்கும் என மதுமதி நினைக்கவே இல்லை. கணவனிடம் சொல்லலாமா என்று யோசித்தார். இதை சொல்லி இருக்கும் கஷ்டத்தில் இன்னமும் கஷ்டம் தரவேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது.
ஸ்வாமிநாதன் ‘என்ன ஆயிற்று? மருத்துவர் என்ன சொன்னார்?’ என்று கேட்டபோது… பெரிதாக ஒன்றுமில்லை என்று பொய் சொன்னார்.
குழந்தைகளை பார்க்க நெஞ்சம் வலித்தது. ‘இவர்கள் நிலை’ என்ற எண்ணம் தோன்ற மனதளவில் முற்றிலுமாக உடைந்தார். அதன் விளைவு… உடலில் உபாதைகள் அதிகமானது.
தனக்கு நாட்கள் குறைவு என நினைத்து கணவனுடனும் குழந்தைகளுடனும் நிறைய நேரம் செலவிட்டார். ஆனால் அவர் எதிர்பார்க்காதது… நாட்கள் அல்ல… மணிநேரங்கள் தான் மீதம் என்று.
செழியன் பிறந்தநாளுக்கு முன்தினம், வயற்று வலியுடன் நெஞ்சுவலியும் சேர்ந்துகொள்ள, மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்பட்டார். ஸ்வாமிநாதன் பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, அப்போதுதான் ஸ்வாமிநாதனுக்கு மதுமதியின் நிலை தெரியவந்தது.
அதை கேட்டு அதிர்ந்தவர், அடுத்து தம்பியை நாடினார் பண உதவிக்கு. மதுமதியை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்ய, மதுமதிக்கு புரிந்துவிட்டது ஸ்வாமிநாதன் தம்பியிடம் உதவி கேட்டிருப்பார் என. அதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஸ்வாமிநாதனை பேசுவதற்காக அழைத்தார். அவரால் முடியவில்லை இருந்தும் கஷ்டப்பட்டு பேசினார்.
அவர் சொன்னது… ‘யார் உதவியையும் நாடக்கூடாது. பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்கவேண்டும். நல்ல வேலையில் அமர்த்தவேண்டும். கல்யாணம் குழந்தை என அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுதான் தன் ஆத்மாவை அமைதிப்படுத்தும்’ என்று சொல்லி சில நிமிடங்களில், அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் உயிர் நீத்தார்.
தன் ஆசை காதலி அன்பு மனைவி கடைசிவரை தன்னுடன் வாழப்போகிறாள் என்று நினைத்த மதுமதியின் உயிர் அவர் கண்முன்னால் பிரிந்தது.
************************************
பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்த ஸ்வாமிநாதன்… கண்ணீருடன் கவிதாவிடமும் செழியனிடமும்… “இதுவரை மதிக்கு இப்படி ஆச்சுன்னு உங்ககிட்ட கூட நான் சொல்லல. சொல்லி உங்கள கஷ்டப்படுத்தக்கூடாதுனு விட்டுட்டேன்”
“மதி சொன்ன ஒவ்வொன்னும் இன்னமும் என் காதுல கேட்டுட்டே இருக்கு. அவ போனதுக்கப்புறம் உங்களுக்காக மட்டும் தான் வாழ்ந்தேன். இது எல்லாத்துக்கும் காரணம் பணம். அதுயில்ல எங்ககிட்ட. இருந்திருந்தா அவ இப்போ நம்ம முன்னாடி இருந்திருப்பா”
“அந்த பணத்தை தேடி ஓடினேன். எதுவும் அவ்ளோ சீக்கிரம் நடக்கல. இருந்தும் விடாம போராடினேன். தம்பி கூட சொன்னான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோணா. முப்பத்தி அஞ்சு வயசு தானே ஆகுதுன்னு. ‘நான் வாழறது… பசங்கள நல்ல படிக்கவெச்சு நல்ல நிலைக்கு கொண்டுவர்றதுக்கு தான். வேற எதுக்கும் இல்ல’னு சொன்னேன். எப்படியோ போராடி மதி ஆசைப்பட்ட வீடு… உங்கள நல்லா படிக்கவெச்சு… வேலைலயும் உட்காரவெச்சு பார்த்துட்டேன்”
” நீ வேலைல இல்லன்னு சொன்ன பாரேன் செழியா… என்னால தாங்கிக்கவே முடியல. நீ படிக்கறங்கறதெல்லாம் என் மனசுல ஏறவே இல்ல. உனக்கு வேலை இல்ல. நான் தோத்துட்டேன் அப்படிங்கற எண்ணம் தான் இருந்துச்சு. உன்ன கஷ்டப்படுத்தணும்னு நான் பேசலடா செழியா” மனம்விட்டு அழுதார் ஸ்வாமிநாதன்.
கவிதாவிற்கு மூச்சு விடக்கூட முடியாமல் அழுகை வந்தது. தன் அம்மாவின் நிலை அப்பாவின் நிலை நினைத்து. அகிலன் அவளை சமாதானப்படுத்தினான்.
ஸ்வாமிநாதன் பேச பேச செழியன் சுவற்றில் சாய்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கும் கண்களில் கண்ணீர். அவர் சொன்னதெல்லாம் அவன் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாட்கள்.
இதில் யாரை குற்றம் சொல்வது. வேறு யார் விதியைத் தான்!!!
ஸ்வாமிநாதன் பேசிமுடித்து அழுதவுடன், “அப்பா… நீங்க தோத்துப்போகலபா. அதுக்கு நான் விடமாட்டேன். நீங்க திடமா இருக்கணும். இன்னும் எவ்ளோ பார்க்க வேண்டியது இருக்கு. பாருங்க அக்கா எப்படி அழறா” என அவரை அவன் தேற்றினான்.
இதை அனைத்தையும் பார்த்த ப்ரியாவின் கண்கள் முதலில் கலங்கியது. அடுத்து அவள் பார்த்தது செழியனை. ‘எங்கே அவனுக்கு மனஅழுத்தம் அதிகமாகிவிடுமோ’ என நினைத்து.
ஆனால் அவன் தந்தையை தேற்றிய விதத்தை பார்த்து… அந்த கண்ணீரிலும் அவள் இதழ்கள் சின்னதாக புன்னகைத்தது ‘இனி செழியன் குறித்து கவலை அதிகம் வேண்டாம்’ என நினைத்து!

Tears r rolling…
Awww ☹️
Touching flashback of their mom.. Illa is back to form.. I’m happy 😀😀 bless you for your writing skill❤️❤️
Awww me blushing thanks much dear ❤️❤️❤️
Wow semma narration dear, feeling heavy, tears rolling out😭😭😭😭😭, can’t expect madhi flashback😭😭😭😭😭
True ☹️ heavy flashback … I wanted to show his dad’s part too.. that’s why… Thanks much ❤️
Aluthten sis. Very touching..
Sorry dear 😐
Akka.. if we see a scene from a film it’s ok to cry or laugh because the person in tv would cry which would indicate our emotions and then continued by the depth of the scenes.. when I read ur narration I couldn’t control my tears.. very great narration akka…love u loads..
Awwwe thank you so much dear … It means a lot to me :))))
Kavitha Vai pol enakum moochu Mutti vitathu… kan kalanga vachuteenga … great writing
Awwww thank you ji 🙂
Last two episode sema painful da… emotional for anyone… to kudos to you.. avlo alaga you are narrating.. words use pandrathula irunthu ellame niraiva iruku…
Thank you so much dear 🙂
Read panni mudikrapa kanner vanthuruchu…
Semma writing ….
Flashback read panrapa felt heavy…
Neraya per life la intha Mari nadanthurukum..
Money illathanala loved ones ah lose pannirupanga..
Finally Ela normal aguran…
Awwww thank you so very much dear 🙂
Sentimental episode da.. all burst out their feelings 😥😥😥
So true dear ..
Waiting to know how ur going to move it to climax…
Apdiye ellam kan munnadi nadakra mari iruku.m
Thanks a lot ji 🙂
Awesome..
Thank you da 🙂