Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 10

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 10:

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கழித்து கேரளா வீட்டிற்கு வந்திருந்தான் ராஜீவ். அந்த வாரம் சனி ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க, ராஜீவ் வீட்டில் அவனை வரும்படி சொல்லி இருந்தார்கள். 

பல மாதங்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் திலீப்பும், ஜானகியும். எங்கே சென்றால் திருமண பேச்சு எடுப்பார்களா என எண்ணி ஓரளவிற்கு தவிர்த்தான். ஆனால் இம்முறை அவனுக்கே அனைவரையும் பார்க்கவேண்டும் என்பதுபோல இருந்தது. 

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு அழைத்து பேசுவான். அவ்வளவு தான். வினய் அவனுடைய ஊருக்கு சென்றுவிடும் சமயமெல்லாம், தனிமை அவ்வப்போது ராஜீவ்வை தாக்கியது.

நிறைய நாட்கள் ஆன நிலையில், நிறைய பொருட்களை வாங்கியிருந்தான். 

அவனை வரவேற்த பவித்ரா அவனுக்கு உணவு செய்வதற்கு சென்றுவிட்டாள்.

‘ஏன் இத்தனை நாட்கள் வரவில்லை, இப்போதெல்லாம் வேண்டாதவர்களாகி விட்டோமோ?!’ என ஜானகி முகத்தை திருப்பியதற்கு, “ஜானுமா” என்று அவர் பக்கத்தில் உட்கார்ந்து, கையோடு கைகோர்த்து நிறைய மன்னிப்பு கேட்டான். 

திலீப் புன்னகையுடன் இருவரையும் பார்த்திருந்தான். 

ஜானகி அவனின் கனிவில் கனிந்தார். அவன் மேல் இருந்த கோபமெல்லாம் பறந்தோடியது. வாஞ்சையாக ஓரிரு நொடிகள் பார்த்தவர், அவனை உணவு சாப்பிடுவதற்கு தயார் ஆகி வரும்படி சொல்லி அனுப்பி வைத்தார். 

ராஜீவ் சென்றதும், சில நொடிகள் கழித்து திலீப் ஜானகியிடம், “மா… வந்ததும் வராததுமா இப்போ எதுவும் கல்யாணம் பத்தி பேச வேணாம்” என்றதும்… “எதுவும் பேசல சரியா!” என முகத்தைக் காட்டினார். 

திலீப் அதை பெரிசாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டான். சில நிமிடங்கள் கழித்து வந்த ராஜீவ், வாங்கிவந்த பொருட்களை வெளியில் எடுத்தான். 

“ஜானுமா… இந்தாங்க” என அழகான போச்சம்பள்ளி பட்டு புடவையை அவரிடம் நீட்ட, மனம் நெகிழ்ந்து போனது அவருக்கு. அவரின் முகத்தையும், புடவையை தன்மேல் வைத்துப்பார்த்து திருப்தி அடைந்த விதத்தையும் வைத்தே, அவருக்கு பிடித்துள்ளது என்பதை புரிந்துகொண்டான் ராஜீவ். 

இதுவரை திலீப்புக்கு அதிகமாக வாங்கியதில்லை. அவனுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் மீது ஒரு பிடித்தம் என்பதை தெரிந்துகொண்ட ராஜீவ், ஐபேட்  ஒன்றை அவனுக்கு கொடுத்தான். தன்னுடன் வேலை பார்ப்பவன் அமெரிக்காவில் திரும்பி வர இருக்க, அவனிடம் சொல்லி வாங்கி வர சொல்லி இருந்தான். 

அடுத்து “அண்ணி” என்றழைத்தவன், பவித்ரா வந்ததும் எழுந்து அவளிடம் அவளுக்கு வாங்கிவந்த புடவையை கொடுத்தான். கொடுத்ததும், “பிடிச்சிருக்கா அண்ணி?” ராஜீவ் கேட்டிட… மனம் நெகிழ்ந்தது அவளுக்கு. 

திருமணத்திற்கு பின் யாரும் அவளிடம் இதுபோலவெல்லாம் கேட்டதில்லை. வாங்கி கொடுப்பார்கள். வாங்கிக்கொள்வாள் அவ்வளவே. ராஜீவ் எப்பொழுதும் கேட்பான்.  இன்றும் கேட்டதும், சந்தோஷத்துடன் தலை அசைத்தாள். அமைதியாக இருந்தான் திலீப். 

அப்போது, “சித்தப்பா” என தூக்கத்திலிருந்து எழுந்து ஓடிவந்து ராஜீவ் மேல் உட்கார்ந்துகொண்டான் திலீப்பின் மகன் தருண். 

“குட் மார்னிங் தரு” என அவனை ராஜீவ் கட்டிக்கொள்ள, பல்கூட தேய்க்காமல் ராஜீவ்வுக்கு முத்தம் கொடுத்து எச்சில் செய்துவைத்தான் தருண். ராஜீவ்வுக்கு தன்னையே பார்ப்பதுபோல இருந்தது. 

தருணை அணைத்தபடியே, “ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது?” பதிலை கேட்டபடி அவனுக்கு வாங்கிவந்திருந்த லெகோ கேம்மை கொடுத்தான். “வாவ் லெகோ!” என அதிசயித்த தருண் மறுபடியும் முத்தங்களால் ராஜீவ்வை நனைத்தேன். 

பின் ரூபிக் க்யூப் ஒன்றை தருணுக்கு தந்ததும் இன்னமும் சந்தோஷம் அதிகமானது. 

உள்ளே சமைத்துக்கொண்டிருந்த பவித்ராவுக்கு அப்படி ஒரு ஆசுவாசம். திலீப் இதுவரை புடவையெல்லாம் எடுத்துக்கொடுத்ததில்லை. பணத்தை தன் அம்மாவிடம் கொடுப்பதோடு சரி. 

அவர் தன் மகள் ஹரிணியுடன் சென்று வீட்டிற்கே வாங்கிவருவார். அது பவித்ராவுக்கு பிடித்ததா என்ற கேள்வியெல்லாம் ஜானகி கேட்டதில்லை. கீர்த்தி கேட்க விட்டதில்லை. அதுவே தான் தருணுக்கும். 

திலீப் எடுத்துத்தரவேண்டும் என்று பவித்ரா எண்ணியதுமில்லை. தருண் ஏதாவது தன் தந்தையிடம் கேட்டால் திலீப் வாங்கித்தருவான். ஒருவேளை பவித்ரா திலீப்பிடம் கேட்டால் வாங்கித்தருவானோ. என்னவோ!

அவளின் எண்ணங்களை தடுக்கும் விதமாக சமையலறைக்குள் நுழைந்தான் ராஜீவ். 

“அண்ணி… என்ன செய்றீங்க?” என அவன் மேடையில் ஏறி உட்கார்ந்துகொள்ள, “சாப்பிடறீங்களா ஜீவா?” என்றபடி செய்துவைத்திருந்த இட்லி, உளுந்துவடையை அவனிடம் நீட்டினாள். கூடவே சின்ன கிண்ணத்தில் சட்னியும், சாம்பாரும். 

அவளுக்கு தெரியும் நிச்சயம் ராஜீவ் பாராட்டுவான் என்று. அதையே தான் செய்தான் ராஜீவ். “உங்க சமையல யாராலயும் அடிச்சிக்க முடியாது அண்ணி” என்றவன் அவசரமாக வெளியே எட்டிப் பார்க்க… அதற்கான காரணம் புரிந்து பவித்ரா சிரித்தாள். அவனும் சிரித்தான். 

அவன் மட்டும் தான் சாப்பிடவேண்டும் என்பதால் அங்கேயே சாப்பிட்டிருந்தான். 

அப்போது அங்கே வந்த தருண், “சித்தப்பா… ஹெல்ப் ஹெல்ப்!” என கேட்டபடி ரூபிக் கியூபை ராஜீவ்விடம் நீட்டி அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். 

ஓரிரு நிமிடங்கள் சென்றிருக்கும். வீடு இரண்டுபடும் அளவிற்கு சத்தத்துடன் உள்ளே வந்திருந்தாள் திலீப்பின் தங்கை கீர்த்தி. கூடவே அவன் மகன் கிஷன் மற்றும் மகள் திஷா.

ராஜீவ் பவித்ராவை பார்த்து புருவம் உயர்த்தியபடி வெளியே சென்றான். 

கீர்த்தி வந்ததுதான் தாமதம்… ராஜீவ் ஜானகிக்கு வாங்கித்தந்த புடவையை மடியில் வைத்து ஆராய்ந்தபோது, ராஜீவ்வை பார்த்ததும், “ஓ! வந்ததும் வராததுமா கிச்சனா?” என நக்கல் செய்தபடி… “என்ன புடவை இதுமா? இதை போய் ஆகா ஓகோனு சொல்ற” என்றாள் முகத்தை சுளித்து. 

“ஏன்டி?” என்று கேட்ட ஜானகியிடம், “காட்டன் போல இருக்கு, இது பட்டுப் புடவையா” என்றாள் கையிலிருந்த புடவையை ஒதுக்கியபடி. ஜானகிக்கே இப்போது அதைப் பார்க்கையில் காட்டன் போல தான் தெரிந்தது. அவரும் அதை ஒதுக்கினார். 

ராஜீவ் எதுவும் பேசவில்லை. இது எப்போதும் நடப்பதுதான். கணக்கு பார்க்காமல் தான் எப்போதும் செய்வான். ஏழாயிரம் ரூபாய்க்கு எடுத்தது என நிரூபிக்க ரசீதையா காட்டமுடியும்? அல்பமாக நடந்துகொள்ள பிடிக்கவில்லை.    

“இந்தா கீர்த்தி!” என்று அவளுக்கு ஒரு புடவையை நீட்டி ‘இதற்கு என்ன சொல்லப் போகிறாளோ!’ என நினைத்து கொடுத்தான். அதை அவ்வளவு இளப்பமாகப் பார்த்து, “இதை விட பார்டர் சின்னதா கிடைக்கல போல!” என்றாள்.  

இத்தனைக்கும் அசல் மைசூர் சில்க் தான் எடுத்துவந்திருந்தான். போன முறை பட்டு எடுக்கவில்லையா என அவள் கேட்டதற்கு தான் கொஞ்சம் பாந்தமாக இருக்கும் என மைசூர் சில்க் எடுத்தான். 

காஞ்சிபுரப்பட்டு அடிக்கடி எடுப்பதால் ஜானகிக்கும் கீர்த்திக்கும் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க, இப்போது இப்பேச்சு. பணமாக கொடுத்தாலும், சென்னையிலிருந்து வருகிறாய் எதுவுமே வாங்கவில்லையா என்ற கேள்வி வரும். எடுத்து வந்தாலும் பிரச்சனை தான். 

இதற்கு முன் நகை வேண்டும் என கேட்டு கேட்டு வாங்கிக்கொண்டாள். வீட்டுப் பெண்ணிற்கு வாங்கித்தருவதில் கணக்கென்ன என நினைத்து அவள் கேட்பதை எல்லாமே வாங்கித்தந்தான் ராஜீவ். அவளின் சில தேவைகளை ராஜீவ்விடமே கேட்டு பெற்றுக்கொள்வாள். 

அடுத்து திலீப்பின் மகன் தருணுக்கு வாங்கியதுபோலவே அவள் மகன் கிஷனுக்கும் வாங்கிவந்திருந்தான். அதற்கும் பேச்சு வரும் என தெரியும், அதே தான் நடந்தது.

“இதெல்லாம் இங்கயே கிடைக்கும்” என சலித்துக்கொள்ள… திலீப் அப்போது வந்தான். 

“உனக்கென்ன திலீ?” என்ற கீர்த்தியை பார்த்த திலீப் ராஜீவ்வை ‘மாட்டினடா’ என்பதுபோல பார்த்தான். ‘செத்தேன்’ என நினைத்தான் ராஜீவ். 

கீர்த்தி பொரும ஆரம்பித்தாள். “இந்த வீட்ல எனக்கு மதிப்பே இல்ல. கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா இது என் வீடு இல்லையா… ஆமா என் புருஷனுக்கு என்ன வாங்கின?” என்று கேட்டு ராஜீவ்வை பார்க்க, இதை அவன் யோசிக்கவே இல்லை. தவறு செய்துவிட்டோம் என எண்ணி அவன் முகம் தாழ்ந்தது.  

அவனின் முகத்தைப் பார்த்த கீர்த்தி, “ஓ! வாங்கவே இல்லையா. அண்ணிக்கு மட்டும் வாங்கிட்டு வந்திருப்பயே” சுள்ளென்று கேட்டாள். உள்ளே இருந்த பவித்ராவுக்கு அந்த புடவையே வேண்டாம் என்பதுபோல ஆகிவிட்டது. 

“கீர்த்தி, இவ்ளோ வாங்கிட்டு வந்திருக்கானே அது தெரியலையா? ஏன் இப்படி பேசற” என்ற திலீப்பை பார்த்த கீர்த்தி, “உனக்கு பெரிய பொருளா கொடுத்தவுடனே ‘ஆ’ன்னு வாங்கிட்ட… பத்தாததுக்கு உன் பொண்டாட்டிக்கும் வேற. நீ ஏன் பேச மாட்ட” என்றதும், திலீப்புக்கு ‘ச்சை’ என்று ஆகிவிட்டது. 

கீர்த்தி விடுவதாக இல்லை. “உன்ன எங்க வீட்ல மாப்பிள்ளைனு எப்படி நடத்துறாங்க திலீ. ஆனா எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் மதிப்பே இல்லை இந்த வீட்ல” என பேசிக்கொண்டே போன கீர்த்தியை திலீப்பின் செயல் அமைதியாகியது. 

கண்களாலேயே ராஜீவ்விடம் மன்னிப்பை வேண்டிய திலீப், “இதை போய் மாப்பிள்ளைக்கு கொடுத்துடு” என்று ஐபேட்’டை அங்கே வைத்துவிட்டு… “கொஞ்சம் வேலை இருக்கு” என வெளியே சென்றுவிட்டான். 

“தப்பு ஜீவா, பவிக்கு வாங்க தெரிஞ்ச உனக்கு… மாப்பிள்ளைக்கு வாங்க தெரிய வேண்டாமா…” ராஜீவ்வை கடிந்துகொண்ட ஜானகி, “கீர்த்தி இதை மாப்பிள்ளைக்கு குடுத்துடு” என்றார். 

பவித்ரா தன் வீட்டிற்கு வந்த பெண், அவளை கீர்த்தி போல தானே பார்த்துக்கொள்ளவேண்டும் என எண்ணி தான் வாங்கினான் ராஜீவ். இதுவரை கீர்த்தியின் கணவனுக்கு வாங்கியதேயில்லை. யாரும் அதைப் பற்றி பேசியதும் இல்லை. தலை வலி விண்ணென்றது. 

சோபாவில் கண்மூடி அவன் சாய்ந்தமர… இத்தனை நடந்த பின்னும் புடவை சரியில்லை, என்ன நிறம், என்ன தரம் என்பதை பிடித்துக்கொண்டு இன்னமும் ராஜீவ்வை வசைபாடினாள் கீர்த்தி.  

மதிய சமையலின் வாசம் நாசியைத் தொட்டு மீள, தப்பித்தேன் பிழைத்தேன் என ராஜீவ் சமையலறைக்குள் புகுந்துகொண்டான். 

“அண்ணி… எனக்காக சொல்லக்கூடாது. உண்மைய சொல்லுங்க சாரீ பிடிச்சிருக்கா?” பாவமாக பார்த்த ராஜீவ்வை பார்த்து வருத்தமாக இருந்தது பவித்ராவுக்கு. 

பவித்ரா இந்த வீட்டில் ஓரளவிற்கு ராஜீவ்விடம் மட்டும் தான் பேசுவாள். 

“உங்களுக்கு நல்ல டேஸ்ட் ஜீவா! கலர் கம்போ அவ்ளோ சூப்பர். அத்தைக்கு வாங்கின போச்சம்பள்ளி க்ளாசியா இருக்கு. எங்களுக்கு வாங்கின மைசூர் சில்க்… கேட்கவே வேணாம். சூப்பர்” என்றாள் மனமார.

அவனும் ஹ்ம்ம் கொட்டிக்கொண்டு, சமையலுக்கு உதவ… அந்நேரம் அவன் போன் அலறியது. 

ஏதோ புது எண். யோசனையுடன் எடுத்த ராஜீவ்வை அதிர்ச்சியுடன் குளிர்வித்தது அக்குரல்.

“ஹலோ ராஜீவ்… நான் பாரதி” என்ற குரலை கேட்டு ஒரு நொடி ஷாக் அடித்ததுபோல நின்றான் ராஜீவ். அவள் எண்ணை மாற்றியபின் இவனும் வாங்கவில்லை அவளும் தரவில்லை. ஆனால் அவளிடம் இவன் எண் இருந்ததே.

இவனிடம் எந்த பதிலும் வராமல் இருக்க, “ஹலோ! ஹலோ!” என்றாள் திவ்யா.

அவளும் ஊருக்குப் போவதாக சொல்லி இருந்தாளே என யோசித்தவன்… “ஆன்… பாரதி சொல்லுங்க. ஊருக்கு பத்திரமா போயிட்டீங்க தானே?” என்று கேட்டிட, “அதெல்லாம் வந்தாச்சு ராஜீவ். எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் ப்ளீஸ்” 

“என்னன்னு சொல்லுங்க பாரதி”

“நீங்க சொன்ன அந்த டிஷ்… அதுல உப்பு அதிகம் போட்டுட்டேன் போல ராஜீவ். நானும் ஏதேதோ பண்ணேன் ஒன்னும் வேலைக்கு ஆகல. ஏற்கனவே வீட்ல எல்லாரும் கிண்டல் பண்றாங்க. இப்போ அம்மாகிட்ட கேட்டா… அண்ணன் ரொம்ப ஓட்டுவான்” 

அவள் கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னாலும் ராஜீவ்வுக்கு வந்ததென்னவோ அடக்கமுடியாத சிரிப்பு தான். அவனின் இந்த சிரிப்பு பவித்ராவையும் திரும்பிப்பார்க்க செய்தது. 

“ஹலோ… உங்களை மதிச்சு உங்ககிட்ட ஹெல்ப் கேட்டா சொல்லணும். நீங்களும் கிண்டல் பண்ணக்கூடாது” அவளின் இந்த லேசான உரிமை பேச்சு கேட்பதற்கு கொஞ்சம் ஆனந்தமாகவே இருந்தது ராஜீவ்வுக்கு. 

உள்ளுக்குள் அதை ரசித்தான். அவனின் அமைதி திவ்யாவுக்கு கடுப்பை கிளப்ப, “நான் வக்கறேன்” என்று சொன்னதும், அது அழகாகவும்… இன்னும் அதிக சிரிப்பைத் தந்தது. 

இருந்தும், “இருங்க பாரதி… அண்ணிகிட்ட கேட்க தான் போயிட்டு இருக்கேன்” என்க… பவித்ராவின் பார்வை ‘அடப்பாவி இங்க தானே இருக்க’ என்பதுபோல பார்த்தது. 

கண்களைச் சுருக்கி புன்னகைத்த ராஜீவ், ஏதோ இப்போதுதான் பவித்ராவை பார்ப்பதுபோல, அந்த உணவைப் பற்றி சொல்லி, “அண்ணி… அதுல உப்பு அதிகம் ஆயிடுச்சுனு ஃபிரெண்ட் சொல்றாங்க. அதை எப்படி சரி பண்றது” என கேட்க,

பவித்ரா புன்னகையுடனே, “கொஞ்சம் தயிர் போட்டு லேசா கொதிக்க விட சொல்லுங்க ஜீவா. டேஸ்ட் கொஞ்சம் கம்மியா இருந்தாலும் நல்லா தான் இருக்கும்” என்றாள்.  

திவ்யாவும் அதையே செய்தாள். பின், “சரி ராஜீவ் நான் எப்படி இருக்குனு கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணி சொல்றேன். தேங்க்ஸ். உங்களுக்கும் உங்க அண்ணிக்கும்” சொல்லிவிட்டு போனை வைத்தாள். 

ஏனோ கடுகடுவென இருந்த தலைவலி இப்போது பறந்தே போனதுபோல இருந்தது ராஜீவ்வுக்கு. மொபைலையே பார்த்திருந்தவன், அவளின் இந்த புது எண்ணை புன்னகையுடன் ‘ரதி’ என சேவ் செய்தான்.   

அங்கே திவ்யா ஏதோ உருட்டும் சத்தம் கேட்டு, அங்கே வந்த அவளின் அப்பா ஷங்கர், அவள் ராஜீவ்வுடன் பேசுவதை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். 

அவள் பேசிவிட்டு வைத்து திரும்பிப்பார்க்க, அங்கே தந்தையைப் பார்த்ததும்… ‘மாட்டிக்கொண்டோமா’ என்பது போல சிரித்து வழிய… அவரும் சிரித்துவிட்டார்.

“அப்பா இங்க வாங்க” என்றவள் கொதித்துக்கொண்டிருக்கும் குருமாவை கொஞ்சம் எடுத்து அவருக்கு தந்து எப்படி இருக்கிறது என்று கேட்டாள்.

“வாரேவாஹ்!” சப்புகொட்டி உண்டவர், “நீ செய்ததுலயே இன்னைக்கு செய்ததுதான் பெஸ்ட் பாரதி. அந்த பையன் கெட்டிக்காரனா இருப்பான் போலயே” என்றார். 

“ஐயோ அப்பா… அவரே அவங்க அண்ணிகிட்ட கேட்டு தான் சமைப்பார் போல” என்றாள். 

தனக்கு அலுவலகத்தில் நடந்த கசப்பான நிகழ்வைச் சொல்லாமல், திடீரென ராஜீவ் ப்ராஜெக்ட்டுக்கு மாற்றப்பட்டதாக சொல்லி இருந்தாள். கூடவே ராஜீவ் வினய் பற்றியும் சொல்லி இருந்தாள்… அவர்கள் உணவு எடுத்துவருவார்கள் என்று.

“இந்த காலத்து பசங்களெல்லாம் வேற லெவல் பாரதி” என்றார் இருவரையும் புகழ்ந்தபடி. ஆனால் மகள் மீது நம்பிக்கை அதிகம் இருந்ததால், ராஜீவ் உடனான பேச்சை அவரால் வேறு எந்த கோணத்திலும் நினைக்கத் தோன்றவில்லை. 

ஏதாவது என்றால் திவ்யா நிச்சயமாக தன்னிடம் சொல்வாள் என்ற நம்பிக்கை. திவ்யாவுக்குமே ராஜீவ் மேல் ஈர்ப்பு கூடவே நல்ல நட்பு என்ற ரீதியில் தானே பேசுகிறாள் பழகுகிறாள். 

அன்றைய தினம் திவ்யா வீட்டில் கேலியும் கிண்டலுமாக கழிந்தது. 

அடுத்தநாள் சொந்தத்தின் திருமண நிகழ்வுக்கு ஷங்கர், மீனாக்ஷி, தீரன் மற்றும் திவ்யா என குடும்பமாக சென்றார்கள். அன்று ஜேசனின் திருமணத்திற்கு கட்டியிருந்த அதே புடவையை தான் இன்றும் கட்டி இருந்தாள். 

காலை அதை கட்டும்போது, மனதில் அழையா விருந்தாளியாக நுழைந்து திவ்யாவை இம்சித்தான் ராஜீவ். 

ஜேசன் திருமணத்தன்று ராஜீவ்வை பார்த்து அவனின் வசீகரத்தில் மயங்கி இருந்த திவ்யா… அன்று முழுவதும், ராஜீவ்வை பார்த்தபடி தான் இருந்தாள். இன்னமும் சொல்லப்போனால் அவனும் தான். 

இருவரும் திருமண நிகழ்வின் போது சேர்ந்து பேசிய தருணத்தை, எதார்த்தமாக எடுத்த சில புகைப்படங்கள் கேண்டிட் ஷாட் போல காட்டியது. பிக்சர் பெர்ஃபெக்ட் என்பார்களே அதுபோல இருத்தது அந்த பொருத்தம்.  

முதலில் அதை பார்த்து திவ்யா அதிர்ந்தாலும், அதுபோலவே நிறைய பேர் புகைப்படங்கள் இருந்ததை பார்த்து நிம்மதியானாள். இருந்தும் அப்படம் மனதில் லேசான இனிமையை தந்தது. அதை பார்த்த ஹரிணி திவ்யாவை கலாய்த்தாள் என்றால், ராஜீவ்வை வினய் ஓட்டி தள்ளிவிட்டான். 

இன்று அதே புடவையைக் கட்டியபோது, ராஜீவ்வின் புன்னகைத்த முகம் திவ்யாவின் மனதில் வந்து ஊஞ்சலாடியது. 

அப்போதுதான், நேற்று செய்த உணவு நன்றாக வந்திருந்ததை அவனிடம் சொல்லவில்லையே என்று தோன்ற, அதை ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு திருமணத்திற்கு கிளம்பி இருந்தாள்.

திவ்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் வீட்டில் ஆரம்பித்திருக்க, திவ்யா தன் பக்க விருப்பம்… நிபந்தனை என்று சொன்னது ஒன்றே ஒன்றை மட்டும் தான். அது திருமணத்திற்கு பின்பும் தான் வேலைக்கு செல்லவேண்டும் என்பது. 

ஆனால் தீரன் சமீரா விஷயத்தைச் சொல்லி வரன் தேடுவதால், கொஞ்சம் நேரம் எடுக்கிறது நல்ல வரன் அமைய. 

திருமணத்திற்கு குடும்பம் சகிதமாக சென்றிருந்தவர்களை உறவினர்கள் பலர் பார்த்தனர். அவர்களில் நிறைய பேருக்கு சமீரா விஷயமும் தெரியும், கூடவே திவ்யாவிற்கு வரன் தேடுவதும், அவளின் நிபந்தனையும் தெரியும். 

பெரியவர்கள் இருவரும் சொந்தத்துடன் பேசுவதற்கு சென்றுவிட, தீரனும் சமீராவுடன் பேசுவதற்கு வெளியே சென்றுவிட, திவ்யா தனித்து விடப்பட்டாள். 

அப்போது ராஜீவ் இடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. மனதில் மீண்டும் சாரலடித்தது. 

‘க்ளாட் டு நோ பாரதி. ஹவ்’ஸ் யுவர் வீகென்ட்’ என்று கேட்டிருந்தான். புன்னகையுடன் பதில் அனுப்ப இருந்தவளை பேச்சு சத்தம் திருப்பியது 

அப்பா வழி அத்தை. “எப்படி இருக்க திவ்யா” என்று கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தார். 

அவளும் நலம் என்பதை சொல்லி, நலம் விசாரித்தபின்… அந்த அத்தை, “என் சொந்தத்துல ஒரு வரன் பத்தி சொன்னப்ப, உன் அப்பா சொன்னான்… நீ கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போவேன்னு கண்டிஷனா சொல்லிட்டயாமே!” என்றதும் திவ்யா ஆம் என்பதுபோல தலையசைத்தாள். 

“அதென்ன அவ்ளோ பிடிவாதம் உனக்கு? பொண்ணுன்னா போக போற வீட்டுக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கணும். அதுதான் அழகு. ஏற்கனவே நல்ல நல்ல வரனெல்லாம் உங்க அண்ணன் கதையால தட்டிப்போகுது. இதுல நீயும் பிடிவாதம் பண்ணா என்ன செய்றது?” 

திவ்யாவுக்கு லேசாக கோபம் வந்தது. இதுபோல மற்றவரின் தனியுரிமையில் மூக்கை நுழைப்பது அறவே பிடிக்காது. 

ஆகையால், “அத்த, நீங்க சொல்றதுபோல… போக போற வீட்டுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கற அளவுக்கு ஒரு நல்ல குடும்பம் அமைஞ்சா, மனசு மாறுறது பத்தி யோசிக்கலாம். ஒன்னுமே தெரியாத அந்த  குடும்பத்துக்காக நான் ஏன் இப்போவே என்னை மாத்திக்கணும்?” அவள் சொன்னது நிஜமாகவே அவருக்கு மண்டையைக் குழப்பியது. கிறுகிறுவென்றது. 

அவரின் குழப்பம் அவர் முகத்தில் தெரிய, திவ்யாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. 

“என்னமோ போ! இந்த காலத்து பிள்ளைகளை…” என சலித்துக்கொண்டு சென்றுவிட்டார். அவர் திவ்யாவிற்கு அறிவுரை கூறும்போதே தீரன் வந்திருந்தான். 

அவர் சொன்ன, ‘ஏற்கனவே நல்ல நல்ல வரனெல்லாம் உங்க அண்ணன் கதையால தட்டிப்போகுது’ என்று சொன்னது ரணமாகக் குத்தியது. தன் வாழ்க்கையால் தன் தங்கையின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்று.

திவ்யாவிடம் தீரன், “சாரி டா” என்றிட, “என்னாச்சுணா” என்று கேட்டாள். அத்தை பேசியது… பின் தன்னால் தான் என்று அவன் வருத்தப்பட, “அண்ணா, வேண்டாம் ணா… உன் மூஞ்சிக்கு இது செட் ஆகல” என்றாள் குறும்பாக.

தீரன் முறைத்து பின் புன்னகைக்க… அவனின் புஜத்தோடு தன் கையை கோர்த்துக்கொண்ட திவ்யா, “டேய் தீரா ணா… நீயே சொல்லு. அண்ணியையும் உன்னையும் காரணம் காட்டி தட்டிப்போற வரன், மொதல்ல எப்படி நல்ல வரனா இருக்க முடியும்? இதுபோல குறுகிய மெண்டாலிட்டி இருக்க குடும்பத்துல நான் பின்னாடி எப்படி வாழ முடியும்?

அந்த அத்தை தான் ஏறுக்கு மாறா பேசுறாங்கன்னா நீயும் அதை கேட்டுட்டு சோக வயலின் வாசிச்சிட்டு… சில் ப்ரோ!” பற்களைக் காட்டி சிரிப்பதுபோல சிரித்தாள். 

திவ்யாவின் தெளிவான எண்ணங்கள் தன் அன்னையிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என மனதில் நினைத்து இருவரையும் மெச்சினாலும், நிகழ்வில் ‘டேய் தீரா’ என அவள் அழைத்ததற்கு மண்டையில் நங்கென்று குட்டினான். பதிலுக்கு அவளும் கொட்ட கையெடுக்க, சூழ்நிலை கருதி போரை ஒத்திவைத்தாள் திவ்யா. 

பின் கொஞ்ச நேரம் கழித்து ராஜீவ் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினாள் திவ்யா. 

அதை உடனே ராஜீவ்வால் பார்க்க முடியவில்லை. 

காரணம் அப்போதுதான் பெரிய வாக்குவாதம் அவர்கள் வீட்டில் போய்க்கொண்டிருந்தது. 

குவைத்தில் இருக்கும் தந்தையிடம் பேசிவிட்டு அன்றைய தினத்தை தள்ளிக்கொண்டிருந்தான் ராஜீவ். 

அப்போது ஏதோ வாக்குவாதம் ஆரம்பிக்க… கீர்த்தி எப்போதும் போல தன்னை யாரும் மதிக்கவே இல்லை என சண்டையிட்டாள். 

கீர்த்திக்கு படிக்கும்போதே திருமணம் ஆகி இருந்தது. அதற்கு காரணமும் அவள் தான். ஆனால் இப்போது… படிக்கவில்லை என்பதை பூதாகாரமாக்கினாள். 

அவளின் கூற்றை எதிர்த்த திலீப், “நீ படிக்கலைனா அதுக்கு நீ தான் காரணம் கீர்த்தி. நான் நல்லா படிச்சேன்… ராஜீவ் நல்லா படிச்சான். அதுனால நல்ல வேலைல இருக்கோம். தேவையே இல்லாம இதை பிரச்சனை ஆக்குற” என்றான் காட்டமாக. 

ராஜீவ் தலையிடவே இல்லை. அமைதியாக இருந்தான். இப்பேச்சு கடைசியில் தன்னை நோக்கி வரும் என்பது அவனுக்கு தெரியும்.

“அதை தான் நானும் சொல்றேன் திலீ. உங்க படிப்புக்கு செலவு பண்ணி படிக்க வச்சதுனால நீங்க கைநிறைய சம்பாதிக்கறீங்க. எனக்கு செலவே பண்ணலையே. அதுனால சம்பாதிச்சு வர வேண்டிய பணமும் வரலையே. எனக்குன்னு எதுவுமே இல்லை” என கண்ணீருடன் லேசாக கொக்கியைப் போட்டாள். 

கீர்த்தி கண்ணீர் விட்டதும், ஜானகிக்கு தாளவில்லை. 

“என்னடா அவளை அழ வச்சு பார்க்கறீங்க? அண்ணனா நீங்க பார்த்துப்பீங்கனு நினைச்சேனே” என அவர் தன் பங்கிற்கு எகிற, “அதை நாங்க செய்துட்டு தானே இருக்கோம்மா” என்றான் திலீப். 

இந்த பேச்சு நிறைய முறை வந்திருக்கிறது. ஆனால் இப்போது கீர்த்தி ஒரு முடிவோடு தான் திரும்ப ஆரம்பித்திருந்தாள். 

“வருஷா வருஷம் லட்ச லட்சமா சம்பாதிக்கறீங்களே, எனக்குனு அதுவும் இல்லை” கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினாள். 

பின், “சரி, தங்கச்சிக்கு சம்பாத்தியம் தான் இல்லை, வேற வகைல அவளுக்கு அது கிடைக்கறதுபோல பண்றீங்களா அதுவும் இல்ல. அப்போவே திலீ என் கல்யாண செலவை முழுசா பார்த்துட்டான். அவ்ளோ லட்சம் செலவு பண்ணி, பிரமாண்டமா பண்ணான் ஆனா நீ எனக்காக எதுவுமே பண்ணல ஜீவா. உனக்கு பண்ண விருப்பமும் இல்லை… மனசும் இல்ல!” என்றதும்…

“நீயே சொல்லு கீர்த்தி… நான் என்ன பண்ணனும்னு. அப்படியே செய்திடலாம்” ராஜீவ்வுக்கு இந்த பேச்சு எப்படியாவது முடிவுக்கு வர வேண்டும் என இருந்தது. இங்கே வரும் சமயமெல்லாம் இது நிகழ்கிறதே. 

ராஜீவ்வும் நிறைய செய்திருக்கிறான். நகையென்ன, பணமென்ன! ஆனால் இங்கே அதை பட்டியலிட அவனுக்கு பிடிக்கவில்லை. அதற்கான காரணங்களும் அவனிடம் இருந்தது. 

“வேறென்ன? இந்த வீடுதான் கடைசி காலத்துல எனக்கு சோறு போடும்” பட்டென்று சொன்னபோது, பக்கென்றது திலீப்புக்கு. என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. 

கீர்த்தியின் திட்டமே அந்த வீடுதான். நிலம் பூர்விக சொத்தாக இருந்தாலும், குவைத்தில் இருந்து கீர்த்தியின் அப்பா பணம் அனுப்பி, பெரிதாக கட்டி இருந்தார்கள். 

திலீப் தன் கணவனின் தங்கையை திருமணம் செய்திருக்கிறான், ஆகையால் இரண்டு பங்கிற்கான சொத்து ஒரே வீட்டில்… ராஜீவ்வை எப்படியாவது தன் கணவனின் மற்றொரு தங்கைக்கு முடித்து… இந்த வீட்டை முழுவதும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என நினைத்தாள். ஆனால் ராஜீவ் திருமணத்திற்கு மறுத்துவிட்டான். கீர்த்திக்கு வீட்டின் ஒரு பாகத்தை விட மனமில்லை.

அந்த வீட்டின் மதிப்பு நிச்சயம் கோடியை தாண்டும். அதற்காகத் தான் பணம் படிப்பு என பேசியபடியே இருப்பாள். கூடவே ராஜீவ்வை எங்கு அடித்தால் எது நடக்கும் என நன்றாகவே தெரியும் அவளுக்கு. 

ராஜீவ், “அவ்வளவுதானே கீர்த்தி… உன் கல்யாணத்துக்கு நான் எதுவும் செய்யல. எனக்கும் அந்த வருத்தம் இருக்கு. இந்த வீட்ல என் பங்கை நீயே எடுத்துக்கோ. பிற்காலத்துல உனக்கு இதுல இருந்து பணம் வரும்னா எனக்கு ரொம்ப சந்தோஷம்…” அவ்வளவுதான். அவன் சொல்லிவிட்டான்… அவள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது.

மகளின் தந்திரம் எல்லாம் ஜானகிக்கு முன்னமே தெரிந்திருந்தது. பேசி வைத்துதான் செய்தார்கள். அதனால் அவரும் அப்போது பெரிதாக பேசவில்லை. ராஜீவ்வுக்காக வருத்தப்பட்டது திலீப், பவித்ரா மட்டுமே! 

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved