Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 12

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 12:

அலுவலகமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளிக்கிழமை மதிய வேலையில்… அந்த ப்ராஜக்ட்டில், திடீரென ஒரு பெரிய பிரச்சனை வந்துவிட, கிட்டத்தட்ட அனைவரும் பரபரப்பாக இருந்தனர். 

சில நாட்கள் முன்பு செய்த ஏதோ ஒரு மாற்றம் மொத்த ப்ராஜக்ட்டயே பாதித்திருக்க, பெரிய நஷ்டம் ஏற்படும் தருவாயில் இருந்தது. 

பொதுவாகவே மென்பொருள் நிறுவனங்களில், இதுபோல சில பிரச்சனைகள் வரும் சமயம், குறித்த நேரத்தில் சரி செய்யாவிடில் அந்த கிளைன்ட் நிறுவனத்துக்கும் நஷ்டம் ஏற்படும், அவர்களுக்காக சேவை செய்து வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படும். சில சமயம் அந்த ப்ராஜக்ட் கையை விட்டு போகும் நிலை கூட ஏற்படும். 

இப்போது தலை போகும் பிரச்சனை இல்லை என்றாலும், நிச்சயம்… சீக்கிரம் சரி செய்தாகவேண்டிய பிரச்சனையில் இருந்தனர் ராஜீவ் ப்ராஜக்ட் மக்கள். 

அன்று காலை வேஷ்டி சகிதம் வந்த ராஜீவ் திவ்யாவை கண்டபோது லேசான ஏமாற்றம் அடைந்தாலும், சாதாரணமாகவே இருந்தான். காரணம், திவ்யாவின் இந்த தோற்றமும் அவனைக் கவர்ந்தது. 

பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தாள். அவளின் கவனமும் அவ்வப்போது ராஜீவ் மேல் பட்டு மீண்டது.  

ஏற்கனவே தாமதமாக வந்ததால் ராஜீவ் வேலையில் கவனம் செலுத்த, மதிய வேலை நெருங்கிய போது தான் ‘கிரிட்டிகள் ப்ரொடக்ஷன் இஷ்யூ’ என்ற அலெர்ட் வந்தது.  

அவர்களின் குழுவால் பிரச்சனை இல்லை என்றாலும், தவறான தரவுகள் அதாவது டேட்டா’வை உபயோகித்தால், அதை கண்டுபிடித்து சரி செய்யவேண்டிய நெருக்கடி இருந்தது.

அவசரமாக அனைவரையும் அழைத்த ராஜீவ், பிரச்சனை பற்றி சொல்லி, பின் இருவருக்கு ஒரு வேலை என ஒப்படைத்தான். எப்போதும் போல திவ்யாவுடன் கவின்னை சேர்த்து செய்ய சொல்லி இருந்தான்.

கவினுக்கு திவ்யாவுடன் வேலை பார்ப்பது மனதில் சந்தோஷத்தைத் தந்தாலும், வேலையில் கவனம் சற்றும் குறையவில்லை. அடுத்த கொஞ்ச நேரம் உணவை மறந்து கூட ஒரு சிலர் வேலையில் மூழ்கி இருக்க…

அதை கண்ட ராஜீவ், “கைய்ஸ்… ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க. மொதல்ல சாப்பிட்டுட்டு வாங்க. தென் யூ கேன் ப்ரொசீட்” என்றவன் மறுபடியும் வேலையில் கவனத்தைத் திருப்பினான். 

திவ்யா மனதில் அவனும் உண்ணவில்லையே என்று தோன்றியது. ஒரு பக்கம் ஸ்பீக்கரில் கான்ஃபெரென்ஸ் அழைப்பு மறுபக்கம் லேப்டாப் என பரபரப்பாக இருந்தவனை அழைக்கவும் யோசனையாக இருந்தது.  

எட்டி வினய் இருக்கும் இடத்தை பார்த்தாள். அவனும் ராஜீவ்வை போலவே சீரியஸாக இருந்தான். 

உடனே, “கவின் நீ போய் மொதல்ல சாப்பிட்டுட்டு வந்துடு. நீ வந்ததுக்கு அப்புறம் நான் போறேன்” என்றாள். அவனும் சென்றுவிட்டான். 

கவின் சென்றவுடன் சில நிமிடங்கள் கழித்து, ராஜீவ் இடத்திற்கு சேரை சுழற்றியபடி சென்ற திவ்யா… ஸ்பீக்கர் அழைப்பை ‘மியூட் (Mute) ’ செய்யும்படி சைகை செய்தாள். 

அவன் செய்துவிட்டு, “சொல்லுங்க பாரதி” என்க, “ராஜு… நீங்களும் வினய்யும் இன்னும் சாப்பிடல. ” என்றாள் சாதாரணமாக. 

அவன் கண்கள் தானாக விரிந்தது. ஒரு நொடி அவன் கேட்ட வார்த்தையை உள்வாங்கிக்கொள்ள நினைத்தான். இதயம் படபடத்தது. ‘ராஜு’ என்றா அழைத்தாள் என்று. சட்டென அவளை பார்த்தான். பார்த்தவன்… “ஹ்ம்ம்?” என்று கேள்வியுடன் நிறுத்த… அவளும் தான் சொன்ன வார்த்தையை உணர்ந்துகொண்டாள். ஐயோ என்றாகிவிட்டது. 

‘அவனுக்கு கேட்டிருக்குமோ?!” என்ற பீதி அவள் கண்களில் அப்பட்டமாக தெரிய… இது அனைத்தையும் அவன் அவளை பார்த்த ஓரிரு நொடிகளில் நடக்க… அவளின் முகம் பார்த்தே அவள் சொன்னதை புரிந்துகொண்டான். அவளின் தவிப்பைப் பார்த்து சிரிப்பை அவனுக்கு அடக்க  முடியவில்லை. 

அவள் காட்டிய முகமாற்றங்களை ரசித்தவாறே… ‘அச்சோ சோ ஸ்வீட் ரதி!’ என எண்ணிய ராஜீவ், “நீங்க போய் சாப்பிடுங்க பாரதி… வினய்யயும் கூட்டிட்டு போங்க. எனக்கு இந்த கால் இருக்கு” என்றான் சாதாரணமாக. 

அவனிடம் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை என்றாலும், ஒருவித கலக்கத்துடன் அமைதியாக தன் இடத்திற்கு சென்றாள் திவ்யா. குழப்பமாகவே அவள் இருக்க, அவன் வேலைப்பளுவுக்கு நடுவினிலும் அவளின் உரிமை பெயரை எண்ணி உல்லாசமாக இருந்தான். 

அன்றொருநாள் அவள் கேட்ட, ‘ராஜீவ்வுக்கு எத்தனை பெயரோ?!’ என்பது நினைவுக்கு வந்து, முகத்தை மலரச்செய்தது . 

கவின் வந்தபின், அமைதியாக உணவருந்த திவ்யா சென்றாலும், திரும்பி வரும்போது லேசாக வயிற்றை நிரப்புவது போல…  வினய்யுக்கு அவன் சாப்பிடும் ‘ரோல் மற்றும் ட்ரின்க்’ மற்றும் ராஜீவ்வுக்கு ‘சாண்ட்விட்ச் வித் லெமனேட்’ வாங்கி வந்திருந்தாள்.

இருவருக்குமே அப்போது பசி இருந்தாலும், அந்த கான்ஃபெரென்ஸ் அழைப்பின் நடுவில் செல்ல முடியாமல் இருந்தனர். திவ்யா வாங்கி வந்தது அவர்களின் மனதையும் வயிற்றையும் நிறைத்தது. 

ராஜீவ்வுக்கு அவளின் ஒவ்வொரு செயலும் உள் வரை தாக்கியது. இருவருக்குள்ளான நெருக்கம் அதிகமாவது போலவே இருந்தது. 

அந்த நெருக்கடியான வேலை அனைத்தும் முடிவதற்கு இரவு ஆக, ராஜீவ், வினய்,  மேனேஜர் மற்றும் சிலர் மீட்டிங்கில் இருந்தனர். 

ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பிக்க,  ஹரிணி வீடு பக்கத்தில் என்பதால் திவ்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அதே போல மற்ற பெண்களும் கிளம்பி இருந்தார்கள். திவ்யா மற்றும் கவினின் வேலை முழுவதும் முடியும் போது… மணி ஒன்பதரை ஆக காத்திருந்தது. 

எப்போதும் அவள் பொது போக்குவரத்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இன்று மணி ஆகிவிட்டது. அதுவும் மெயின் கேட் சென்று பேருந்து எடுப்பதற்கு பத்தாகிவிடும். ‘விடுதி செல்ல ஒன்றரை மணி நேரம்’ என்ற எண்ணம் லேசான தயக்கத்தை ஏற்படுத்தியது. 

சில நிறுவனங்களில், இரவு குறிப்பிட்ட மணிக்கு மேல் ஆகிவிட்டால், அலுவலகத்தின் கேப் (cab) வசதியை பெண்கள் உபயோகித்துக்கொள்ளலாம்.

உடனே போக்குவரத்து அட்மினை அழைத்தாள் திவ்யா. தன் இடத்தை சொல்லி ‘அடுத்த கேப் கிடைக்குமா?’ என கேட்டபோது, குறிப்பைப் பார்த்து… ‘ஒன்பதரை வண்டி கிளம்பிவிட்டதாகவும், பத்தரை மணிக்கு அடுத்த வண்டி புறப்படும், கடைசியாக இறக்கப்படுவாள்’ என்றான் அந்த அட்மின். 

பொது பேருந்துக்கு… நிறுவனத்தின் வண்டி பரவாயில்லை என எண்ணி திவ்யா கிளம்ப, அவள் பேசுவதைக் கேட்ட கவின் “நான் ட்ராப் பண்ணட்டுமா திவ்யா?” என கேட்டான். 

“இருக்கட்டும் கவின். ஆஃபீஸ் கேப் இருக்காம். அதுல போய்க்கறேன்” என புன்னகையுடன் மறுத்துவிட்டாள். ராஜீவ் இடத்தை பார்க்க, அவன் இன்னும் வரவில்லை. அங்கேயே காத்திருக்கலாமா இல்லை கீழே செல்லலாமா என யோசித்து பின் வெளிக்காற்று சுவாசிக்க எண்ணி புறப்பட்டுவிட்டாள். 

ராஜீவ், வினய் மற்றும் சிலர் மீட்டிங் முடிந்து வர, ராஜீவ் திவ்யா இடத்தை பார்த்தான். ‘நல்லவேளை, இன்னமும் வேலை செய்யாமல் கிளம்பிவிட்டாள்’ என எண்ணி அவன் வினய்யுடன் கிளம்பினான். 

இருவரும் கீழே வந்தபோது, அங்கே திவ்யாவைப் பார்த்ததும் வினய்யை கிளம்பச்சொன்ன ராஜீவ், திவ்யாவிடம் வந்தான். 

“இன்னும் நீங்க கிளம்பலையா பாரதி?” அவனின் கணீரென்ற குரல் கேட்டு திரும்பினாள் அவள். 

“இல்ல… இந்த டைம்ல பஸ்ல, டாக்ஸில போக யோசனையா இருந்தது ராஜீவ். பத்தரை மணிக்கு கேப் வருமாம்… அதுல கிளம்பறேன்”

“பத்தரையா?” மணியைப் பார்த்த ராஜீவ், “இன்னும் அம்பது நிமிஷம் இருக்கே” என்றான் யோசனையுடன். 

அவளோ புன்னகையுடன், “ஆமா… பரவால்ல ராஜீவ்”

‘தவறாக எண்ணுவாளோ?!’ என தோன்றினாலும், “நான் ட்ரோப் பண்ணவா?” என்று கேட்டான். 

கவின் கேட்டபோது மறுத்தாள். அதையே ராஜீவ் கேட்கும்போது ஒரு நொடி தேவைப்பட்டது… மறுக்க. அவள் மறுத்தவுடன், “ஓ! சரி. கேப் வர்றவரை நான் வெயிட் பண்றேன்” அவள் பக்கத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டு உட்கார்ந்துவிட்டான். 

தனக்காக அவன் காத்திருக்கிறான் என்பது… ஒருவித இனிமை, படபடப்பு, தயக்கம், மலர்ச்சி என ஒன்று சேர்ந்து அவளை இம்சித்தது. 

கண்கள் மூடி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, “இல்ல ராஜீவ் நான் பார்த்துகிறேன். நீங்க கிளம்புங்க” என்றாள். அவன் கண்களை நேராக சந்திக்க, அவளுள் புது வித உணர்வுகள் பல எழும்பின. 

அவளுக்கு வெறும் புன்னகையைப் பதிலாக்கிவிட்டு, வினய் எண்ணுக்கு அழைத்த ராஜீவ்… “வினய், நான் வர கொஞ்சம் லேட் ஆகும்… நீ…” கொஞ்சம் பேசிவிட்டு வைத்துவிட்டான். 

‘ஏற்கனவே இன்று வேலையால் களைத்து போயிருப்பான். இப்போது இது வேறு’ என எண்ணி திவ்யா, “சரி, நான் பஸ்லையே போய்க்கிறேன். நீங்க கிளம்புங்க” என்றவுடன், அவளை முறைத்த ராஜீவ், “சரி வாங்க நானும் உங்ககூட பஸ்ல வரேன்” என்றான். 

‘ஐயோ விட மாட்டேன் என்கிறானே’ என்பதுபோல பார்த்தாள் திவ்யா. அவனுக்கு அவள் முகம் பார்த்து சிரிப்பு வந்துவிட்டது. 

பின் அவளின் தயக்கம் புரிந்து, “கேப் வந்தாலும் நீங்க பிஜி போக பன்னெண்டு ஆகிடும் பாரதி. மோஸ்ட்லி உங்க ஏரியா தான் லாஸ்ட் ட்ராபா இருக்கும். சொன்னா கேளுங்க… நான் ட்ராப் பண்றேன்” என்றவன்… சற்று நிறுத்தி, “யூ கேன் ட்ரஸ்ட் மீ!” என்றான் நேராக. 

அவனின் முதல் வாக்கியத்துக்கு மறுக்கத் தோன்றினாலும், அவன் முடித்த சொற்கள் அவளை மறுக்க விடவில்லை. ‘அவன் மீது நம்பிக்கை இல்லாமலா?! வாய்ப்பே இல்லை!’ என்றது அவள் மனம். 

“சரி கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டாள். அழகாகப் புன்னகைத்தான். 

அவன் சாதாரணமாக இருந்தால் அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இதுபோல சிரிக்கும்போதும், இருவரின் கண்கள் நேருக்கு நேராகச் சந்திக்கும்போதும், அவளுள் ஏற்படும் மாற்றம் தான் அவளின் தயக்கத்திற்கு முக்கிய காரணம். அவனை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள். ஆனால் முடியுமா?!

இருவரும் வண்டி நிறுத்தத்திற்கு சென்ற போதுதான், அவன் அணிந்திருந்த உடையே அவனுக்கு ஞாபகம் வந்தது. ஒரு நொடி வண்டியின் அருகில் நின்று யோசித்து, பின் திவ்யாவை பார்க்க, அவன் எண்ணம் புரிந்து… இப்போது அவள் சிரிப்பை தவிர்க்க முயற்சித்தாள். அது அவனுக்கு புரிந்தது. முறைப்புடன் புன்னகைத்தான். 

அவள் இல்லையென்றால் வேஷ்டியை மடித்துவிட்டு வண்டி ஓட்டலாம். இப்போது முடியாதே! சிரத்தை எடுத்து வண்டியில் ஏறிய ராஜீவ், மணியை பார்த்துவிட்டு… “சீக்கிரம் போனா ஃபார்ட்டி மினிட்ஸ்ல உங்க ஏரியா போய்டலாம். ஸ்பீடா போறப்ப சிங்கிள் சைட் உங்களுக்கு ஓகேனா எனக்கு ஓகே பாரதி” என்றான். 

பெரும் தயக்கம் இருந்தாலும், சென்னை சாலையை எண்ணி எதற்கு ரிஸ்க் என அவள் இரண்டு பக்கம் கால்களைப் போட்டு உட்கார, அவன் தன்னுடைய பையை அவளிடம் தந்தான். அதன் பொருள் புரிந்தது அவளுக்கு. புன்னகையுடன் இருவருக்கிடையில் அதை வைத்தாள். 

புல்லட்டை கிளப்பினான் ராஜீவ். எந்த ஒரு தங்குதடையும் இல்லாமல், அதிகம் பேசிக்கொள்ளாமல் கவனத்துடன் வண்டியை வேகமாக செலுத்தினான். 

மதியம் அவள் அவனை ‘ராஜு’ என்று அழைத்த போது, அவளுக்கும் அவனை ஏதோ ஒரு வகையில் பிடித்துள்ளது என்பதை புரிந்துகொண்டபோதே அவன் மனம் சந்தோஷத்தில் தளும்பியது. 

இப்போது இந்த இதமான காற்று… அவன் உடலை சிலிர்க்கச் செய்ய, ‘அவள் தன் வண்டியில்’ என்ற எண்ணம் அவன் மனதை சிலிர்க்கச் செய்தது. ‘இந்த பயணம் இப்படியே தொடராதா?!’ என்ற ஆசை மனதை இன்பமாக இம்சித்தது… இனிக்கச்செய்தது!

திவ்யாவும் கிட்டத்தட்ட அவன் நிலையில் தான் இருந்தாள். அவளின் தயக்கம் ஒவ்வொன்றையும்… அவள் சொல்லாமலேயே அவன் புரிந்துகொண்டு, அதற்காக எடுக்கும் சிரத்தை அவளை முற்றிலுமாக அசைத்தது. ஒரு வித இணக்கம் அவனுடன் உண்டாவதுபோல இருக்க, அது பிடித்தது… படபடப்பையும் தந்தது! 

இது ஏதோ புரியா உணர்வு… இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது… ஒரு பனிமலை ஒரு எரிமலை… விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்…’ எப்போதோ கேட்ட நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் தனக்காகவே எழுதியதை போல உணர்ந்தாள். 

திவ்யா வசிக்கும் இடம் வரவும், அவளிடம் எப்படி செல்வது என்ற வழியைக் கேட்டு வண்டியை அதன்படி செலுத்தினான். சொன்னபடி மணி பத்தரை ஆகி இருந்தது.

“ஆன், இங்க தான் ராஜீவ்” என்றவள் இறங்கிக்கொள்ள…  இருவருக்குள்ளும் பலவாறான உணர்வுகள். பிரிய மனமே இல்லை.

“என்னால உங்களுக்கு சிரமம்… ஸாரி அண்ட் தேங்க்ஸ் ராஜீவ்” அவளின் குரல் சன்னமாகவே கேட்டது. 

“லேட் ஆயிடுச்சு. நீங்க போய் சீக்கிரம் சாப்பிடுங்க பாரதி. நானும் இங்க ஹோட்டல்ல சாப்பிட்டு கிளம்பறேன். டேக் கேர்!” என்று அவன் புன்னகைத்தான். 

ஏனோ அவன் முகம் பார்க்கப் பார்க்க பல எண்ணங்கள் அவளுள் மேலோங்க, தலையசைத்துவிட்டு திரும்பிப்பாராமல் சென்றுவிட்டாள். அவள் உள்ளே செல்லும்வரை அவளையே பார்த்திருந்த ராஜீவ், மனதில் ஒரு நிறைவுடன் கிளம்பினான். 

ஆனால் திவ்யாவுக்கு தான் இதை மாற்றங்களை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியவில்லை. அவன் செய்யும் ஒவ்வொன்றும் அவள் கவனத்தை ஈர்த்தது. 

அடுத்தவாரம் ஓரளவிற்கு சாதாரணமாகவே இருக்க முற்பட்டாள். ஆனால் அவன் தன் செயல்களால் முற்றிலுமாக அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தான். எவ்வளவு முயன்றும் அவளால் அவனைத் தவிர்க்கமுடியவில்லை. 

ஒருநாள் வெள்ளி மாலை அவள் கிளம்பும் சமயம் ராஜீவ் அவனிடத்தில் இல்லை. 

மெயின் கேட் வரை நடந்தே சென்று, வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி திவ்யா நடக்க, காதில் இன்னிசையாய் சில பாடல் வரிகள், மனதில் அந்த வரிகளுக்கு வடிவமாய் ராஜீவ்! முகம் முழுவதும் முறுவல்! 

வேலை முடித்து அங்கே இருந்த நாயர் டீ கடையில் தான் ராஜீவ் மற்றும் சிலர் இருந்தனர். திவ்யா செல்வதைப் பார்த்ததும், அவர்களிடம் சொல்லிக்கொண்டு அவள் பின்னே விரைவாகச் சென்ற ராஜீவ், பின்னிருந்து “ஹலோ” என்றிட, அவளுக்கு கேட்கவில்லை. 

அவளின் பக்கவாட்டில் குனிந்து கையசைக்க, அவள் கண்கள் காட்டிய அதிர்வை பின் ஆச்சரியத்தை கண்டு ரசித்த ராஜீவ், “கிளம்பியாச்சா?!” என்றான் சம்பந்தமே இல்லாமல். காதல் கிறுக்கு என்பார்களே… இதுதான் போல.

அவனை நினைத்தபடி தான் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். இப்போது அவனையே பார்த்தவுடன் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு, பரபரப்பு. காதிலிருந்து இயர்செட்டை எடுத்தவள், புன்னகைத்தாள். 

“பாட்டு கேட்க பாரதிக்கு ரொம்ப பிடிக்குமோ? வேலை பார்க்கும்போது கூட கேட்டு பார்த்திருக்கேன்” 

அவள் புன்னகையுடன், “ரொம்ப பிடிக்கும். அதுவும் நா முத்துக்குமார், வைரமுத்து, தாமரை, சாங்ஸ் ரொம்ப பிடிக்கும். யுவன் மியூசிக் பாஹ்… எனக்கு அது ஒரு போதை மாதிரி” என்றாள் தன் கையிலிருந்த இயர்செட்டை காட்டி. 

பதிலுக்கு புன்னகைத்த ராஜீவ், அவளுடன் நடக்க… பேருந்து நிறுத்தம் வந்தது. இருவரும் அங்கிருந்த மேடையில் உட்கார்ந்தவுடன், அவள் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. 

ராஜீவ்விடம் இரண்டு நிமிஷம் என சைகை செய்தவள், தன் இயர்செட்டை திட்டின் மேலே வைத்துவிட்டு வீட்டிற்கு பேசினாள். ‘பிஜி சென்றவுடன் அழைக்கிறேன்’ என சொல்லி வைத்தவள், ராஜீவ்விடம் கொஞ்ச நேரம் பேசினாள். எவ்வளவு முறை அவள் பேசி கேட்டாலும் அவனுக்குச் சலிக்கவில்லை. காதல் படுத்தும் பாடு!

அவளுடைய பேருந்து வருவது தெரிந்தவுடன், “பஸ் வந்துடுச்சு ராஜீவ். நான் கிளம்பறேன்!” என விடைபெற்றுக்கொண்டு பஸ்ஸை நோக்கி செல்ல, அவளைத் தொடர்ந்து நிறைய பேர் ஏறினார். அப்போது தான் அவளின் இயர்பீஸ் மறந்துவிட்டாள் என்பதைப் பார்த்து, அவன் அவளை அழைத்தான். அவளுக்கு கேட்கவில்லை. 

இது அவ்வளவு முக்கியம் இல்லை தான். இதை கொடுப்பதற்காகவெல்லாம் யாரும் அரக்க பிறக்க பேருந்தில் ஏற மாட்டார்கள். ஆனால் அவன் ஏறினான். அவளுடன் அடுத்த கொஞ்ச நேரம் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்குமே.

திவ்யா ஏறியவுடன் நடுவில் சென்றுவிட, கடைசியாக ஏறிய ராஜீவ் படியின் பக்கத்தில் நின்றபடி, சமயம் கிடைக்கும்போதெல்லாம் உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தான். 

பேருந்தில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. திவ்யா பாடல் கேட்கலாம் என் எண்ணி இயர்பீஸை தேட, அதை மறந்துவிட்டோமே என்பது புரிந்து தலையில் அடித்துக்கொண்டாள். ‘இப்போது இந்த கூட்டத்தில் ஒன்றரை மணிநேரத்தை எப்படி கழிக்க?!’ என்ற எண்ணம் சலிப்பை, எரிச்சலை தந்தது.   

அப்போதுதான், பின்புறம் எவனோ ஒருவன் நெருக்கமாக நிற்பதை உணர்ந்தவுடன் கொஞ்சம் நகர்ந்து நிற்க முற்பட்டாள். ஆனால் அவனும் முன்னேறிக்கொண்டே சென்றான். அந்நேரத்தில் ராஜீவ்வும் திவ்யா அருகில் கிட்டத்தட்ட வந்திருக்க…

ஒருகட்டத்தில் திவ்யா பொறுக்காமல், இடைஞ்சல் தந்தவன் காலில் தன் கையை வைத்து குத்தினாள். அவன் வலியை அவன் கண்கள் காட்டியது. மறுபடியும் அதையே செய்தாள் திவ்யா. ஆனால் பக்கத்தில் இருப்பவருக்கு கூட தெரியாமல் செய்தாள். 

அவனால் முடியாமல் நகர்ந்து சென்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட, அவனுடன் சேர்ந்து இன்னமும் நிறைய பேர் இறங்கினர், முக்கிய பேருந்து நிறுத்தம் என்பதால். 

அப்போது, “பிரேவ் ஆக்ட் பாரதி!” என்ற ஆழமான குரல் கேட்டு அதிர்ந்து திரும்பினாள் திவ்யா. யாரென்று தெரியும்! ஆனால் சுத்தமாக எண்ணிக்கூட பார்க்கவில்லை, ராஜீவ் இங்கே இருப்பான் என்று.  

லேசாக இதழ்கள் பிரிந்து, கண்கள் அகல பார்த்தவளை… புன்னகையுடன் மனதில் நிறைத்துக்கொண்டு, கையை நீட்டினான். அதில் அவள் இயர்பீஸ்.

‘இதற்காகவா?’ என்றது அவளின் பார்வை. “கண்டிப்பா இதை மிஸ் பண்ணுவீங்கன்னு தெரியும். அதான்” என்ற பதிலை தந்தான்… அவள் பார்வையின் கேள்விக்கு. கண்களில் அவ்வளவு ஆர்வம். 

அதை எதிர்கொள்ள முடியாமல் புன்னகையுடன் முகத்தை திருப்பியவாறே லேசாக மூச்சை வெளியிட்ட திவ்யா, “யூ ஆர் கிரேசி ராஜு!” மிகவும் மெதுவாக முணுமுணுத்தாள். 

அடுத்த நிறுத்தத்தில் ஆண்கள் பெண்கள் என உட்காரும் இடத்தில் முழு இருக்கை ஒன்று காலி ஆனதும், அவளை அவன் உட்கார சொல்ல… முதலில் தயங்கினாலும் ‘ராஜீவ் இருக்கிறான்’ என எண்ணி உட்கார்ந்துவிட்டாள்.

அவன் உட்காராமல் நின்றிருப்பதை பார்த்து… “வேற யாரவது எனக்கு கம்பெனி குடுக்கறதுக்கு முன்னாடி நீங்களே குடுத்திடுங்க” என்றாள் பக்கத்திலிருந்த இருக்கையைக் காட்டி. 

கொஞ்சம் சத்தமாகவே சிரித்தபடி பட்டும் படாமல் உட்கார முயன்றான். முடியவில்லை. நெருக்கம் இருவருக்குள்ளும் ஏதேதோ செய்தது. இருவருமே சாதாரணமாக இருக்க முற்பட்டனர்.   

“பை தி வே, செம்ம ஷாட் பாரதி! அவனை என்ன பண்ணீங்க?” என்று கேட்கவும் அவனை பார்த்து குறும்பாக சிரித்தாள். பின் தன் மோதிரத்தைக் காட்ட, அதை இப்போதுதான் அவன் பார்க்கிறான். 

“ஆஃபீஸ்ல இருந்து கிளம்பும்போது இதை போட்டுப்பேன்” என்றவள் அதன் மேல் இருந்த முத்து மணியைக் கொஞ்சமாக திருகி எடுக்க, அதற்குள் கூரான முனை. அதில் லேசான ரத்தத்தின் சுவடு. அதில் ஒருமுறை குத்தினாலே ரத்தம் பீறிடும் அளவிற்கு கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அவளை ஆச்சர்யமாக, பெருமையாக பார்த்தான். “முன்னெல்லாம் பொண்ணுங்க சேஃப்டி பின் வச்சி குத்துவாங்க ராஜீவ். பட் அதெல்லாம் பத்தாது இந்த ****” ஆங்கில கெட்ட வார்த்தை சேர்த்தாள். அவன் புன்னகைத்தான். 

அவளும் புன்னகைத்தாள். அவளுள் விழுந்து… மூழ்கி, எழ மனமில்லாமல், பார்வையை விலக்க பிடிக்காமல் அவளையே அவன் பார்த்திருக்க, அவன் மனமோ… ‘ஐம் லூஸிங் மைசெல்ஃப் இன் யூ ரதி’ என அரற்றியது. தன்னையே முழுவதுமாக அவளிடம் தொலைத்த உணர்வு அவனுள். 

அவன் பார்வையின் அர்த்தம், அது தன்னுள் நிகழ்த்தும் மாற்றம்… அதை தாள முடியாமல் ஜன்னல் பக்கம் பார்த்த திவ்யா, லேசாக உதட்டை மடித்து தன்னை சமநிலை படுத்திக்கொண்டாள்.

இருவரும் அவரவர் உணர்வுகளுடன் சஞ்சரித்திருக்க… சில நொடிகளுக்கு பின் ராஜீவ் அத்தருணத்தை சகஜமாக்க எண்ணி, “வீகென்ட் என்ன பிளான் பாரதி?” என கேட்டான்.  

அவளும் கொஞ்சம் மீண்டு, “அண்ணி வீட்டுக்கு போகப்போறேன் ராஜீவ்” என்றாள்.

அடுத்து அவன் கேட்ட, ‘“ஓ! அண்ணா அண்ணி இங்க தான் இருக்காங்களா?” என்ற கேள்விக்கு உடனே என்ன பதில் சொல்வது என தெரியாமல் ஓரிரு நொடிகள் அவனை பார்த்தாள் திவ்யா.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved