Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 14

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 14:

சமீராவிடம் தீரன் நினைத்தது போலவே பேசுவதைக் குறைத்துக்கொண்டான். சமீராவால் அவனின் ஒதுக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தும் அவனிடம் சகஜமாகப் பேசவும் இயலவில்லை. 

படிக்க சம்மதம் வாங்கித்தரச் சொல்லி பாட்டியிடம் வேண்டியபோது அவர் சொன்னது, “படிக்க அனுப்புவேன்… ஆனா நீ உங்க அக்கா மாதிரி எந்த தப்பும் பண்ண மாட்டனு உன் அம்மா மேல சத்தியம் பண்ணு, நான் படிக்க சம்மதம் வாங்கித்தரேன்” என்றார். 

சமீராவுக்கு கண்களில் கண்ணீர் கோர்த்தது. தீரனின் முகம் கண்ணீர் திரையில் வந்து சென்றது. அவனை தன் மனம் விரும்புகிறது என்பதே சில நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தாள். தற்போது படிப்பு தான் முக்கியம் என்பது புரிந்து பாட்டியிடம் சரி என்றாள் சமீரா. 

தற்போது தீரனின் ஒதுக்கத்தை, பாராமுகத்தை பார்க்கும்போதெல்லாம், ஏதோ ஒன்றை இழந்ததுபோல மனது கிடந்து தவித்தது. அழுவது அறவே பிடிக்காதவள் கண்களில் அவ்வப்போது கண்ணீர் கசிந்தது. படிப்பில் நாட்டம் குறைந்துகொண்டே வந்தது. 

தீரனின் நிலையும் கிட்டத்தட்ட அவளின் நிலை தான். அவளிடம் பேச ஆரம்பித்த நாட்களிலிருந்தே அவனை ஏதோ ஒரு வகையில் பாதித்திருந்தாள் சமீரா. அவன் சொல்லித்தரக் கேட்டு, எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் அவனுக்கு கற்றுத்தந்ததில் ஆரம்பித்து, அவனை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்திருந்தாள். அது அவன் முற்றிலுமாக உணர்ந்துகொண்டது அவளை வற்புறுத்து தன் வீட்டிற்கு அழைத்துவந்த சமயத்தில் தான். 

முதலில் சமீரா அவன் வீட்டிற்கு வருவதற்கு மறுக்க, தீரனுக்கு ஏன் என்றே தெரியாத கோபம். அவன் முகத்தில் அது நர்த்தனம் ஆட, சமீராவுக்கு சிரிப்புதான் வந்தது. அவன் வீட்டிற்கு வருவதற்கு சம்மதித்தாள். தீரனுக்கு தன் செயல் விசித்திரமாக இருந்தது. சமீராவை தன் மனம் எவ்வளவு எதிர்பார்க்கிறது என்பது புரிந்த தருணம், தன் மனம் அவளை விரும்புவதைப் புரிந்துகொண்டான். 

இப்போது அவளிடம் இப்படி நடந்துகொள்வது அவனுக்கே பிடிக்கவில்லை. இருப்பினும் அவளின் நலனுக்காக என செய்தான். ஆனால் அடுத்து வந்த சிஏ உள்தேர்வில் சமீராவின் மதிப்பெண்களைப் பார்த்தவன்… போட்டுவைத்த பூட்டையெல்லாம் உடைத்து, அவள் முன் கோபமாக நின்றான். 

அவனை வெறித்துப் பார்த்தாள் சமீரா. பின் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அவள் நகரப் பார்க்க, அவள் கைப்பற்றித் தடுத்தான் தீரன். திகைத்து விழித்தாள் சமீரா. 

“கொன்னுடுவேன் சமி! அடுத்த எக்ஸாம்ல ஒழுங்கா மார்க்ஸ் எடுக்கிற. இல்ல…” என்றவன் சற்று நிறுத்த… விழி விரித்துப் பார்த்தாள். பின் அவன் முகம் காட்டும் பாவம் பார்த்துப் புன்னகைத்தாள்.  

“இல்லைனா என்ன பண்ணுவ தீரா?” அவள் புன்னகையில் பல நாட்கள் கழித்து உயிர்ப்பைப் பார்க்கிறான். அவ்வளவு ஏன் பல நாட்கள் கழித்து இருவரும் மற்றவரின் குரலை கேட்கின்றனர்.

பழைய சமீராவாக பேசியதைக் கேட்டபின், இலகுவான அவன் சொல்லவந்ததை விட்டுவிட்டு “உட்காரவெச்சு டியூஷன் எடுப்பேன்” என்றான். 

“அப்படியாச்சும் என்கிட்ட பேசுவல்ல தீரா?” அவள் கண்களில் தெரிந்த தவிப்பு அவனை இதயம் வரை தாக்கியது. அதைக் காண சகிக்காமல், கலங்கயிருந்த தன் கண்களை கட்டுப்படுத்தி… இனி இந்த பேசா படலமெல்லாம் வேண்டாம் என முடிவுக்கு வந்தவன், என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற இறுதி முடிவுக்கு ஓரிரு நொடிகளில் வந்துவிட்டான். 

“இனி நீயே என்னை பேசாதனு சொன்னாலும் நான் பேசாம இருக்கமாட்டேன் சமி” என்றான் அவள் கண்களை ஊடுருவி. சமீராவுக்கு மனதில் மகிழ்ச்சி மடைதிறந்தது. அது கண்களில் கண்ணீராக வெளியேறியது. 

பற்றியிருந்த அவள் கையில் லேசாக அழுத்தம் தந்த தீரன், “எனக்கு தெரிஞ்ச சமி, நான் பார்த்த சமி, எப்பவுமே இங்க எல்லாரையும் விட படிப்புல கெட்டி. இனி இந்த மாதிரி ஆச்சு நிஜமா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”

அவன் போலியாக மிரட்ட, மண்டையை அவசரமாக ஆட்டினாள் சமீரா. பின், “எனக்கு எக்ஸாம் கஷ்டமாலாம் இல்ல தீரா. மனசு சரியில்ல அதான் ஒழுங்கா எழுத முடியல. இனி பாரேன்” என்றவள் கண்கள் இப்போது மகிழ்வில் மின்னியது. அவளின் சந்தோஷம் அவனையும் தொற்றிக்கொண்டது. 

அடுத்து வந்த தேர்வில் இருவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தார்கள். 

தீரன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். எப்படியாவது தன் மனதை சமீராவிடம் சொல்லவேண்டுமென்று. அதற்கு தன் பிறந்தநாளையே உபயோகித்துக்கொண்டான். 

அவனின் பிறந்த தினத்திற்காக சமீரா என்ன வாங்குவது என யோசித்து யோசித்து முடிவில் பார்க்கர் பேனா ஒன்றை பரிசளித்து, அதை அவளே அவன் சட்டை பாக்கட்டில் வைத்து அழகுபார்த்தாள். 

“இது உன்கூடவே எப்பவும் இருக்கனும் தீரா” என எச்சரிக்கை செய்வதுபோல சொல்ல, அவளையே ஓரிரு நொடிகள் பார்த்தான் தீரன். பின், “இந்த பென் போலவே நீயும் எப்பவும் என்கூடவே இருப்பயா சமி?” ஏதோ ஒரு தைரியத்தில் கேட்டுவிட்டான். விழிகள் அகல பார்த்தாள் சமீரா. 

அவளால் மறுக்க முடியுமா?! அவள் மனம் அவனிடம் தஞ்சம் புக எண்ண, அவள் கண்முன் இப்போது வந்துமறைந்தது பாட்டியின் முகம். செவியில் அவர் சொன்ன வார்த்தைகள். 

லேசாக மூச்சுமுட்டுவதுபோல இருக்க, உடனே அங்கிருந்து செல்ல எண்ணி அவள் திரும்ப, அவளின் முக மாற்றத்தைப் பார்த்த தீரன்… 

“எது வந்தாலும் சேர்ந்து சமாளிக்கலாம் சமி” அவன் வார்த்தைகள் அவளை நிறுத்தியது. 

தொண்டை அடைக்க வார்த்தைகள் இடறிவந்தது சமீராவிடம் இருந்து… “என் வீட்ல நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க தீரா. என் வீட்டு சம்மதம் இல்லாம என்னால எதுவும் செய்ய முடியாது” 

தன் அத்தை சொன்ன ‘எந்த பொருக்கி கூட போக போறாளோ’ என்பது மனதில் வந்து சென்றது. தீரனை அந்த இடத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தன் பாட்டி தன்னிடம் சத்தியம் வாங்கி சொன்னது ‘எந்த தப்பும் செய்யக்கூடாது’ என்பது மனதை அழுத்தியது. அதை மனதில் வைத்தே அவனிடம் மறுத்தாள்.

ஆனால் அவனோ, “எவ்ளோ நாளானாலும்… வருஷமானாலும் நான் உனக்காகவே காத்திருப்பேன் சமி. என் வாழ்க்கைல எப்பவும் நீ மட்டும் தான்” அவன் கண்கள் கலங்கி இருக்க, திரும்பி அவனைப் பார்த்த சமீராவின் கண்களிலும் கண்ணீர்.   

“ஒருவேளை உன்னால காத்திருக்க முடியாதுனா, நீ” என அவன் முடிக்கவில்லை கண்களில் கண்ணீருடன் சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள் சமீரா. அவன் புன்னகைத்தான். 

பின் சில நொடிகள் கழித்து, “என் வீட்டால, உன் வீட்ல இருக்கவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுச்சுன்னா… எது வேணாலும் செய்வாங்க தீரா எங்க வீட்ல” ஒரு நிலையில்லாமல் அவள் கண்கள் அலைபாய… ஓரிரு நொடிகளுக்குப் பின் தீரன்…

“ஏற்கனவே உங்க வீட்ல இருந்து அப்பாவை பார்த்து பேசிருக்காங்க சமி” என்றான். தூக்கி வாரிப்போட்டது சமீராவுக்கு. 

“எங்க வீட்டுல யாரையும் எதுவும் செய்யமுடியாது. போலீஸ் மினிஸ்டர்… யாராலயும் சமி” என்றதும் புரியாமல் பார்த்தாள் சமீரா. 

அதை புரிந்துகொண்ட தீரன், “அப்பா பேங்க் எம்ப்ளாயி திருச்சி அஸோஸியேஷன் செகரட்டரி. பொதுவா இதுபோல கவர்ன்மென்ட் எம்ப்ளாயிய எதுவும் செய்ய யோசிப்பாங்க” 

அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, “இதெல்லாம் நானா சொல்லல… அப்பா தான் சொன்னார்” என்றான்.

“அப்போ உங்க வீட்ல?” சமீராவுக்கு வார்த்தைகள் வரவில்லை. 

தீரன், “நம்மள பத்தி தெரியும்!” என்றிட, “ஒன்னும் சொல்லலையா?” அதிர்ச்சி விலகாமல் கேட்டாள். 

“என்னோட சந்தோஷம் தான் முக்கியம்னு சொல்லிட்டாங்க சமி. அம்மா உன்னையும் தைரியமா இருக்க சொன்னாங்க. உனக்காக எல்லாரும் காத்துட்டு இருப்போம்னு சொன்னாங்க” என்றான் பெரிய விஷயத்தை மிகவும் எளிதாக.  

சில நிமிடங்கள் தேவைப்பட்டது சமீராவுக்கு அனைத்தையும் ஜீரணிக்க. அதுவும் அவன் வீட்டினர் கூட தனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னது, மனதை இன்பமாக வலிக்கச்செய்தது. 

அவளின் நிலை புரிந்து, “மொதல்ல படிச்சு முடிப்போம் சமி. அப்புறம் உன் வீட்ல பேசுவோம்” அவள் கரத்தை தன் கைகளுக்குள் இருத்திக்கொண்டு அவன் சொல்ல, தலையை ஆட்டினாள் சமீரா. 

அவர்கள் முடிவு செய்ததுபோலவே படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி, முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றனர் இருவரும். இனி அவள் சென்டர் வருவது கடினம் என அவனுக்கு தெரியும்.

 

அவள் வீட்டில் பிரச்சனை வரும் என்பதும் தெரியம். தைரியத்துடன் இருக்கும்படியும், எப்போது அவள் சொல்கிறாளோ, அப்போது தன் வீட்டிலிருந்து வந்து பேசுவார்கள் என சொல்லி அனுப்பிவைத்தான்.

அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே சமீராவின் வீட்டில் கல்யாண பேச்சை ஆரம்பித்தார்கள். தீரனிடம் சொன்னாள். தீரன் வீட்டிலிருந்து சென்றார்கள். அவர்களை வீட்டினுள் நுழையவே அனுமதிக்கவில்லை. வெளியே வந்த வீட்டு ஆண்கள், மிகவும் தரைகுறைவாக பேசினார்கள். வேறு வழியில்லாமல் திரும்பிவிட்டனர் தீரனின் பெற்றோர். 

கோபத்துடன் வீட்டில் நுழைந்தனர் அவ்வீட்டின் ஆண்கள்.

ஆணாதிக்க புத்தியை, தன் உடல் வலிமையால் காட்டினார் சமீராவின் தந்தை. பொறுத்துக்கொண்டாள். 

பாட்டி, “பாதகத்தி! எந்த தப்பும் செய்யமாட்டேன்னு உன் அம்மா மேல சத்தியம் பண்ணியே” என வசைபாட… “இப்பவும் நான் எந்த தப்பும் பண்ணல பாட்டி” என்றாள் திடமாக அவ்வளவு அடியையும் மீறி. 

“எவனையோ பிடிச்சிருக்குனு சொல்றது தப்பு இல்லையா” என அவள் முடியைப் பிடித்தார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள் சமீரா. 

“பிடிச்சிருக்குனு தானே சொன்னேன். ஓடிப்போய் கல்யாணமோ இல்லை உங்கள எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லலையே” என்றாள் அப்போதும் நிமிர்வாக. 

“செத்தாலும் நாங்க சம்மதிக்க மாட்டோம்” என்றார் அவள் அப்பா. 

“செத்தாலும் நானும் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றவள் பாட்டியின் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாக விலகி, “மீறி பண்ணிவச்சா என்ன செய்வேன்னு தெரியுமா? இதோ என்ன கட்டிக்கப்போறானே… அவன் சாப்பாட்ல விஷத்தை வச்சு கொல்லுவேன்… இல்ல என்கிட்ட வரும்போது”

சற்று நிறுத்திய சமீரா… “தினம் தினம் பயந்துட்டு என்கிட்ட வர முடியுமா… இல்லா நிம்மதியா சாப்பிட தான் முடியுமா?” செந்திலை நேராக நோக்கி கேட்டாள். 

அவனுக்கு கதிகலங்கியது. சமீரா தொடர்ந்தாள். 

“செய்யமாட்டேன்னு மட்டும் நினைக்காதீங்க. இந்த வீட்ல இருந்து இருந்து எவ்ளோ தரம் தாழ்ந்து யோசிக்கணும்னு கூட கத்துக்கிட்டேன்” என்றவள், “மீறி என்னை ஏதாவது செய்ய நினைச்சீங்க… உங்க எல்லாரையும் கொத்தா பிடிச்சுட்டு போய்டுவாங்க” ஒற்றை விரல் காட்டி எச்சரித்தாள்.

அனைவரும் அதிர்ந்து பார்க்க… சமீரா, “நான் சுயநினைவோடை கம்பளைண்ட் குடுத்துட்டு தான் வந்திருக்கேன். என் ஃபிரெண்ட் யாழ் அப்பா, சென்ட்ரல் zone IG. அவர்கிட்ட, ஏற்கனவே எங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்க அக்கா என்ன ஆனானு தெரியல… எனக்கும், தீரனுக்கும் அதே நிலைமை வரலாம். அப்படி ஏதாவதுனா… இந்த வீட்டு பெரி…ய மனுஷங்க தான் காரணம்னு எழுதி குடுத்துட்டு வந்திருக்கேன்” என்றாள் சட்டமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு. 

ஏற்கனவே சமீராவின் அக்கா விஷயத்தை மறைக்கப் படாதபாடு பட்டது அவர்களுக்கு தானே தெரியும். எவ்வளவு பணம் எவ்வளவு பேரிடம் கெஞ்சி, மன்றாடினார்கள் என்று. இன்னொருமுறை ஏதேனும் செய்தால் நிச்சயம் கம்பிக்குப் பின்னால் என்பது புரிந்தது. 

“அடியே!” பாட்டி சமீராவை போட்டு அடிக்க, அசராமல் அமர்ந்திருந்தாள் சமீரா. 

“நீ நல்லா இருப்பயா! வீட்டு ஆட்களையே மாட்டிவிட இருக்கியே… நீயெல்லாம் நாசமாதான் போவ” செந்திலின் அம்மா வார்த்தைகளால் தாக்கினர். சமீரா அசரவில்லை. 

“இப்பவும் சொல்றேன். உங்க சம்மதம் இல்லாம நான் கல்யாணம் பண்ண மாட்டேன். காலம் பூரா இப்படியே கல்யாணம் பண்ணாம இருந்தாலும் இருப்பேனே ஒழிய, நீங்க சொல்ற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” நேராக வந்தது அவள் வார்த்தைகள். 

‘சம்மதம் இல்லாமல் யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று அவள் சொன்னதே பாட்டிக்கு போதுமானதாக இருந்தது. நிச்சயம் அதை மீற மாட்டாள், வேறு எந்த இனத்தவரும், தங்கள் விருப்பமின்றி… தங்கள் வீட்டு மருமகன் ஆக முடியாது; இவள் கன்னிகழியாமல் இருந்தால் இருக்கட்டும்! என்ற எண்ணம் அவருக்கு ஒருவித குரூர நிம்மதியை தந்தது. 

அதனால், “இந்த வீட்டு தரித்திரம் எப்படியோ போய் தொலையட்டும்… விடுங்கடா” என்றார் மகன்களை பார்த்து. சமீராவிடம் இப்படி ஒரு பக்கத்தை எதிர்பார்க்காத வீட்டினரும்… ஆத்திரம் இருந்தாலும் சென்றுவிட்டனர். 

ஓரிரு மாதங்கள் வீட்டில் முடங்கிக் கிடந்தாள் சமீரா. தீரனிடம் அவ்வப்போது பேச மட்டும் செய்தாள். வீட்டில் யாரும் அவளிடம் பேசவில்லை. ஒரு பொருட்டாக மதிக்கவும் இல்லை. மாறுவதற்கான வாய்ப்பும் தெரியவில்லை. ஆகையால் சென்னையில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தாள். கிடைத்தது. 

தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு… எங்கே செல்கிறாள் என்ற தகவலையும் அனைவருக்கும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். அந்த அன்னையின் பெற்ற வயிறு… மகளின் நிலை எண்ணி தகித்தது. ஆனாலும் கையறு நிலை. அழுக மட்டுமே முடிந்தது. 

வெளியே வந்தவள் நேராக தீரன் வீட்டிற்கு சென்றாள். அவளைப் பார்த்ததும்… அம்மா அப்பாவை மறந்து, அவளை அணைத்துக்கொண்டு… மன்னிப்பை வேண்டினான். 

“தீரா… நீ ஏன் மன்னிப்பு கேட்கற…” என்ற சமீரா… “உன்ன, ஆண்ட்டிய, அங்கிள பார்த்து ஒரு விஷயம் பேசணும்னு தான் வந்தேன்” என்றாள். அவளை அமரச்செய்தான். 

அவள் கைகளில் வாஞ்சையாக தட்டிக்கொடுத்தார் தீரனின் அம்மா மீனாட்சி. கண்கள் கலங்கியது அவளுக்கு. 

பின் தன்னை சமநிலை செய்துகொண்டு, “ஆன்ட்டி… எங்க வீட்ல சம்மதம் தருவாங்களானு தெரியல… எனக்காக பாவம் தீரன் எதுக்கு காத்திருக்கணும்” அவள் முடிக்கும் நொடி… “வாய மூடு சமி! கொன்னுடுவேன்” என கர்ஜித்தான் தீரன்.

உடனே மீனாட்சி, “தீரா, என்ன பேச்சு இது” என அதட்டினார். 

“பின்ன என்னமா… இவளுக்காக காத்திருக்க வேண்டாமாம். பெருசா சொல்ல வந்துட்டா” என்றவன் முகத்தில் அவ்வளவு கோபம். 

தீரனின் அப்பா சங்கர் சமீராவிடம்… “எங்ககிட்ட அவன் உன்ன பிடிச்சிருக்குனு சொன்னப்பவே சொல்லிட்டான் மா… உனக்காக எவ்ளோ வருஷம் ஆனாலும் காத்திருப்பேன்னு… நாங்களும் அவன் விருப்பத்துக்கு ஒத்துக்கிட்டோம் ” என்றார். 

மீனாட்சி சமீராவிடம்… “ நீ சென்னைக்கு கண்டிப்பா போகணுமா டா? தனியா எப்படி இருப்ப? தீரனும் அங்கேயே வேலைக்கு வரட்டுமே” என்றார் சமீராவின் மீதுள்ள அக்கரையில். 

“இல்ல ஆன்ட்டி… உங்களுக்கு இங்க ஒரு பாதுகாப்பு வேணும். அதுவும் இல்லாம நான் தனியா தீரன் இல்லாம இருக்கேன்னா எங்க வீட்ல சந்தோஷம் தான் படுவாங்க” என்றாள் விரக்தி புன்னகையில்.  

பின், “அவனும் அங்க வந்துட்டா தேவ இல்லாத பிரச்சனை ஆண்ட்டி” என்றாள் எல்லாம் யோசித்ததுபோல. தீரன் அவளை முறைத்துக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தான். 

இருவரின் நிலையை எண்ணி அவர்களுக்கு தனிமையைத் தந்து பெரியவர்கள் தங்களது அறைக்குள் சென்றுவிட்டனர். அவன் ஊரென்றே இருக்க, அவன் பக்கத்தில் அமர்ந்த சமீரா… 

அவன் கைவளைவில், அவனோடு சேர்ந்து அமர்ந்துகொண்டு… “இப்போவே ஆசை தீர உன்கூட ஒன்னு ரெண்டு நிமிஷம் இருந்துக்கறேன் தீரா” என்றதும்… மனது அடித்துக்கொண்டது அவனுக்கு. கோபமெல்லாம் தூர எறிந்துவிட்டு, அவளை இறுக அணைத்துக்கொண்டான். இருவர் கண்களிலும் கண்ணீர் வெளியேறியது.  

“சமி… எந்த நிலைமைலயும் என்னை காத்திருக்க வேண்டாம்னு சொல்லக்கூடாது புரியுதா? நீ இல்லாம வேற ஒரு வாழ்க்கை என்னால யோசிச்சு கூட பார்க்க முடியாது சமி” என்று சொன்னவன் உடல் நடுங்கியது. 

அவளுக்கு அவனை எண்ணி மகிழ்வதா, மனம் வருந்துவதா என தெரியவில்லை. மனமே இல்லாமல் இருவரும் பிரிந்தார்கள். சமீரா சென்னைக்கு புறப்பட்டுவிட்டாள். 

————

கையிலிருந்த காஸ்ட் அக்கௌன்டிங் புத்தகத்தை வெறித்த படி இருந்த சமீராவை திவ்யாவின் குரல் நிகழ்விற்குக் கொண்டுவந்தது. 

“என்ன அண்ணி… அண்ணனோட ட்ரீம்ஸா” என்று கிண்டல் செய்ய… சமீரா முகத்தில் புன்னகை. இதோ தீரனை பார்த்த நாளிலிருந்து ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பெரிதாக மாற்றம் எதுவும் நடக்கவில்லை. 

முதலில் திவ்யா வேலைக்கு வந்தபோது சமீராவுடன் தங்குவதாக யோசித்திருக்க, சமீரா தான் மறுத்துவிட்டாள் தன் குடும்பத்தை எண்ணி.  

அவ்வப்போது தீரன் வருவது மட்டுமே அவளுக்குக் கிடைத்த பாக்கியம். சில சமயங்களில் திவ்யாவின் வருகை என காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறாள். 

அவள் திருச்சியிலிருந்து கிளம்பும்போது, எந்த தீரன் அவளிடம் ‘தன்னை காத்திருக்க வேண்டாமென்று அவள் இனி சொல்லவேகூடாது’ என்று சொன்னானோ, அவனே அவளை வேண்டாம் என சொல்லி அவள் மனதை நோகடிக்கப் போகிறான் என்பது இருவரும் இந்நாள் வரை அறியவில்லை. 

திவ்யாவுடன் அந்த வார இறுதியை மணமகழ்வுடன் கழித்தாள் சமீரா. ஞாயிற்றுக் கிழமை திவ்யா தன் இடத்திற்கு கிளம்பி இருந்தாள். 

சமீராவுடன் இரண்டு தினங்களைக் கழித்தாலும் ராஜீவின் எண்ணங்கள் வெகுவாக திவ்யாவை தாக்கியது. ஏனோ அவன் முகம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் மேலோங்கியது. 

திங்களன்று வேலைக்கு சென்றாள். அவள் விரும்பியபடி, அவளுக்காக முன்னமே வந்ததுபோல காத்திருந்தான் ராஜீவ்.  

அவனைப் பார்த்து சிரிக்க நினைத்தாள், ஆனால் சிரிக்க முடியவில்லை இருந்தும் கடினப்பட்டு புன்னகைத்தாள். அவளின் முக மாற்றத்தை வைத்தே அவளின் மனநிலையைக் கொஞ்சம் கணித்திருந்தான் ராஜீவ். 

அதனால் அவனே, “வீக்கெண்ட் எப்படி போச்சு பாரதி” என சகஜமாக்க நினைத்தான். அவளும் நன்றாகச் சென்றது என்றாள். 

“பாரதி போனது, பாரதி அண்ணிக்கு ஹேப்பியா?” 

“ஹ்ம்ம் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க ராஜீவ்” என்றவுடன், “நீங்களும் அப்போ ஹாப்பி” அவன் சொன்னதும் புன்னகைத்தாள். 

அடுத்தடுத்து வேலைகள் சூழ, இருவரும் வேலையில் கவனம் செலுத்தினர். அப்போது அவர்களின் மேனேஜர் ப்ராஜக்ட் ஏரியா நடுவில் வந்து கையை தட்டி அனைவரின் கவனத்தைத் திருப்பினார். 

அவர், “லாஸ்ட் டைம் ப்ரொடக்ஷன் இஷ்யூ வந்தப்ப எல்லாரும் ரொம்ப திறமையா ஹாண்டில் பண்ணீங்க. அதுக்கு கம்பெனில இருந்து உங்கள என்கரேஜ் பண்ற மாதிரி ஒன் டே ரிசார்ட்  ட்ரிப் நாளைக்கு அரேஞ் பண்ணிருக்காங்க. இன்டெர்ஸ்ட் இருக்கவங்க வரலாம்” என்றார். 

அனைவரும் குஷியில் இருக்க, ராஜீவ் திவ்யாவை பார்த்தான். அவளும் புன்னகையில் தன் சம்மதத்தைச் சொன்னாள். 

அடுத்தநாள் அனைவரும் அந்த ரிசார்ட்டுக்கு வந்திருந்தார்கள். முதலில் கிரிக்கெட் ஆடலாம் என ஆண்கள் முடிவெடுக்க, பெண்களை அந்த இடத்தை சுற்றிப்பார்க்கச் சொல்லி சொன்னார்கள். 

அதில் ஒரு சிலர் திவ்யா உற்பட, தாங்களும் கிரிக்கெட் விளையாடுவோம் என சொன்னவுடன்… பெண்கள் மூவரையும் ஒரு மூலையில் நிற்கவைத்தான் அந்த கேப்டன். உடனே திவ்யா, தான் ஸ்கொயர் லெக் ஏரியாவில் நிற்பதாக சொன்னாள். அவளுக்கு கிரிக்கெட் பற்றி தெரியும் போல என எண்ணி சரி என்றான். அவளுக்கும் ஓரளவிற்கு தெரிந்துதான் இருந்தது. 

ராஜீவ் அவளால் முடியுமா என்பதுபோல அவனிடத்தில் இருந்து பார்த்தான். புருவம் உயர்த்தி புன்னகைத்தாள். வேண்டாம் என்றான் சைகையில். அவள் கேட்கவில்லை. ஆடியே தீருவேன் என தலையை மேலும் கீழும் அசைத்தாள். அவளின் பதிலைப் பார்த்து சிரித்தான்.

முதல் சில பந்துகள் அங்குமிங்கும் என செல்ல, அந்த ஓவரின் கடைசி பந்து திவ்யா நின்றிருந்த இடத்தை நோக்கி வந்தது. ஒரு ஆர்வத்தின் வெளிப்பாட்டில், பிடித்துவிடவேண்டும் என்ற ஆசையில், பந்து செல்லும் திசையில் வலது கையை நீட்டினாள். நிச்சயமாகப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை. 

அந்த பந்து டென்னிஸ் பந்தாக இருந்தாலும் அது வந்த வேகத்தில் அவள் கையில் பட்டுப் பறந்தது. துடித்துப்போனாள் திவ்யா. கைகளை உதற, ‘ரதி’ என மனதில் திட்டியவண்ணம் ராஜீவ் அவளை நெருங்கி கைகளைப் பார்க்க, நான்கு விரல்கள் எட்டு விரல்களின் அளவிற்கு வீங்கி இருந்தது. 

அவனின் முறைப்பைப் பார்த்து திரு திருவென விழித்தாள். ஏற்கனவே வலியில் கண்கள் கலங்கி இருந்தது. அவன் ஊதினான். வினய் உடனே, “ஆர்கே உனக்கு ஃபர்ஸ்ட் எயிட் ரூம் தெரியும்ல… கூட்டிட்டு போ” என்றான் நண்பனை அறிந்தவனாக. 

தலையசைத்துவிட்டு ராஜீவ் முன்னே நடக்க… திவ்யா கைகளை உதறியவண்ணம் பின்னே சென்றாள். 

அதைப் பார்த்தவன் அவள் கையை பற்றிக்கொண்டு, “உதறாத!” என உரிமையில் திட்டினான். அவள் கண்கள் இன்னமும் கலங்கியது. 

அவளின் மென்மையான விரல்கள் ரத்த நிறத்தில் வீங்கியிருந்ததைப் பார்த்தவனுக்கு மனம் பொறுக்கவில்லை… “அறிவிருக்கா பாரதி… நல்ல தெரிஞ்சவங்களுக்கே ஸ்கொயர் லெக்ல சிலசமயம் அடிபடும்… பாருங்க இப்போ வீங்கிடுச்சு” என்றவன் ஊதியபடி அழைத்துச்சென்றான். 

“ஸாரி ராஜு” என்றாள். தன்னை மறந்து ‘ராஜு’ என்றாள். அவன் அதை புரிந்துகொண்டாலும்… அவள் குரலே காட்டிக்கொடுத்தது அவளின் அடக்கிய அழுகையை. தான் திட்டியதாலோ என எண்ணி, “ப்ச்… ஸாரி பாரதி. ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்” 

அங்கிருந்த ஒரு ஸ்ப்ரே எடுத்து அவள் விரல்களில் அடித்துவிட, அது தகித்தது. அவனின் மற்றொருகையை அழுந்த பிடித்துக்கொண்டாள். 

“ரிலாக்ஸ்… கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் பாரதி” என்றவன் ஒரு பட்டாம்பூச்சியை அதன் நிறம் அழியவிடாமல் எப்படி கையாள்வார்களோ அதைப்போல அவள் விரல்களை மென்மையாகக் கையாண்டான். 

அவளுக்கு வலி பொறுக்காமல் அதை அவன் கையில் தான் காட்டினாள். அவளிடம் பேச்சுக்கொடுக்க, “கிரிக்கெட் முன்னாடி விளையாடிருக்கீங்களா?” அவன் கேட்டான். இல்லை என பாவமாக தலையசைத்தாள். 

பின், “டிவில பார்த்த அசைல விளையாட நினைச்சேன்” என்றதும் “அதான் முதல்லயே வேண்டாம்னு சொன்னேன். ப்ராக்டிஸ் இல்லாம அப்படியே ஃபீல்ட்ல குதிச்சிட முடியுமா?” என்றான் பொறுமையாக. அவன் கையை அவள் விடவில்லை. 

அவனும் அதை உணர்ந்திருந்தான். வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. அவனும் ஊதி பின் முதல் உதவி செய்தவண்ணம் இருந்தான். 

கொஞ்ச நேரம் கழித்து வலி குறைந்தவுடன் தான் அவன் கையை பற்றி இருக்கிறோம் என்பதே உணர்ந்தாள் திவ்யா. அவள் முகத்திற்கு நேரெதிராக குனிந்து நெருக்கமாக நின்றிருந்தான். அவனுடைய சிகையில் ஆரம்பித்து நெற்றி, கண்கள், கண்ணாடி, மூக்கு என ஒவ்வொன்றாகப் பார்த்தவள் அதற்கு கீழ் பார்க்க எத்தனிக்க, அவன் நிமிர்ந்தான். 

உடனே தன்னிலைக்கு வந்தவள் தன் கையை பிரித்துக்கொண்டாள். அவனும் இப்போது தான் அவளை நேராகப் பார்க்கிறான். அவளின் மூச்சுக் காற்று அவனை வருடிச்செல்லும் அளவிற்கு நெருக்கம். அவளின் நறுமணம் நாசியை முட்டும் அளவிற்கு நெருக்கம். அவள் வழிகள் பேசிய காதல் மொழிகளை மனதில் மனப்பாடம் செய்ய முயன்ற சமயம், வினய் அங்கே வந்திருந்தான். 

அவள் கையின் நிலையைப் பார்க்க வந்தவன், அவன் பங்கிற்கு நாலு திட்டு திட்டிவிட்டுச் சென்றான். ராஜீவ் சிரிப்பை அடக்க, திவ்யா அவனை முறைத்தாள்.

அவளை அழைத்துக்கொண்டு தன் குழு உள்ள இடத்திற்கு அழைத்து சென்றான். அங்கே நடந்த சில நிகழ்வுகளில் ராஜீவ்வின் கவனம் இருந்தாலும், திவ்யாவைக் கவனிக்க தவறவில்லை. 

அவளும் தன் தோழிகளுடன் இருந்தாலும், அவள் கருத்தினில் கண்களில் ராஜீவ் மட்டுமே நிறைந்திருந்தான். 

அடுத்து வந்த வாரம்… புதன்கிழமை திவ்யாவிற்கு பிறந்தநாள்… அன்று அவளிடம் தன் காதலைச் சொல்ல எண்ணியிருந்த ராஜீவ்வுக்கு இடியாக வந்தது அந்த செய்தி. 

அது திவ்யாவை அன்று பார்க்க வந்திருந்த… அவள் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை. இதயம் சுக்குநூறான உணர்வு ராஜீவ்வுக்கு! 

3
1
2
1

2 thoughts on “உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 14

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved