உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -1B
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 1B:
இதுவரை ரேபன் சன்க்ளாஸ் மட்டுமே பார்த்திருந்தவளுக்கு, அவனின் பவர்க்ளாஸ் வித்தியாசமாக இருந்தது. அவன் முகத்திற்கு பொருத்தமாகவும் தெரிந்தது.
அவனைப் பார்த்தபோது, அக்கணம் அவள் மனதில் தோன்றியது… ‘சார்மிங்!’
அவள் பார்வையை அவன் கவனிக்கவில்லை. அவளின் திடமான பதில்கள், மற்றும் அணுகுமுறையே நிச்சயமாக பணிக்கு தகுதியான நபர் என அவனை முடிவெடுக்க வைத்தது.
இருந்தும் அடுத்து, அவள் கையில் ஒரு பேப்பரை தந்து, இன்னமும் கொஞ்சம் யோசிக்கும்படியான கேள்வியைக் கேட்டு அதற்கான விளக்கத்தை எழுதச்சொன்னான்.
நிச்சயமாக பதிலை எழுதிவிடுவாள் என்ற முழு நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அவளும் யோசித்தாள். அதை பார்த்தபடி இருந்தான் ராஜீவ்.
இடது கையால் பேனாவை லேசாக சுழற்றி அவள் பேப்பரை பார்த்து யோசித்து, பின் ஓரிருமுறை பேனாவை லேசாக தட்ட, அதை பார்த்து அவன் விரல்களும் மடிக்கணினியை தாளமிட்டது.
பதிலுக்கான சின்ன தடயம் அவளுக்கு பளிச்சிட்டவுடன், சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இப்போதும் அவள் கண்களுக்குத் தெரிந்தது, அவன் முகத்திற்கு பொருத்தமான கண்ணாடியே!
எதிர்பாராத அவளின் பார்வையில் ஒரு நொடி அதிர்ந்தாலும், அதை அவள் கண்டுகொள்ளும் முன், அவளை பார்த்திருந்த விழிகளை மட்டும் மடிக்கணினி பக்கம் உடனே திருப்பிவிட்டான்.
இருவருக்குள்ளும் மற்றவர் மீது லேசான ஈர்ப்பு இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
அடுத்து அவளும் பதில் எழுத ஆரம்பிக்க, அந்நேரம் கதவு தட்டப்பட்டு, உள்ளே ஒருவன் நுழைந்தான், “சாரி டா ஆர்கே… டிஸ்டர்ப் பண்றதுக்கு” என்றபடி.
“அண்ணயா… எப்போ வந்தீங்க?!” விளித்தபடி ராஜீவ் எழுந்து, அவனை வெளியே அழைத்துச்செல்லப் பார்க்க, மன்னிப்புக் கேட்டவனை திவ்யா பார்த்தாள்… அவள் பார்வை சுமந்த செய்தி, ‘நேர்காணலின் போது யார் இப்படி உள்ளே நுழைவது’ என்று.
அதை எண்ணித்தான் ராஜீவ்வும் வெளியே செல்ல நினைத்தான்.
ஆனால் அவள் பார்வையின் பொருள் புரிந்ததுபோல உள் நுழைந்தவன், “சாரி மிஸ், டூ மினிட்ஸ்” அவளிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு, “ஏர்போர்ட்’ல இருந்து நேரா இங்க வந்துட்டேன் ஆர்கே… ஊருக்கு இப்போ கிளம்பறேன் டா” என்றான் தெலுங்கு தெளித்த தமிழில்.
பின், “இந்தா” என்று சில சாக்லேட் பேக்கெட்களை நீட்ட, அதைப் பார்த்து புன்னகைத்த ராஜீவ், “என்னோட டெஸ்க்’ல வச்சுட்டு போயிருக்கலாமேணா. இதுக்காகவா இவ்ளோ தூரம்?” என்றபடி வாங்கிக்கொண்டான்.
“உனக்கு தெரியாதா? அங்கே வச்சுட்டு, திரும்பறதுக்குள்ள காலி பண்ணிடுவாங்க ஆர்கே. அதான் இன்டர்வியூனு பார்க்காம உள்ள வந்துட்டேன். ஏன்னா, கிளைன்ட் பாசத்தோட, ஸ்பெஷலா உனக்கு கொடுக்க சொன்னது”
‘பாசம், ஸ்பெஷல்’ என்பதை இழுத்துக் கிண்டலாக சொல்லிவிட்டு கண்ணடித்தவனைப் பார்த்து, “பாசமா இல்ல பிரைப் (bribe) ஆஹ் ணா!” புன்னகைத்தபடி கேட்டான் ராஜீவ்.
‘கேள்விக்கான பதிலை எழுத விடாமல் தொல்லை செய்கிறார்களே’ என்று கடுப்பாக இருந்தது திவ்யாவுக்கு. ஆனால் இவளை கண்டுகொள்ளாமல் அவர்களின் பேச்சு தொடர்ந்தது.
“எப்படியாச்சும் உன்னை திரும்ப ஆன்சைட் வரவைக்க பிரைப்’னும் சொல்லலாம்… இல்ல அந்தம்மாவுக்கு உன்மேல தனி பாசம்னும் சொல்லலாம்” சிரித்துக்கொண்டே சொன்னவன், “சரி ஆர்கே. நான் கிளம்பறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல ட்ரெயின்” ஓரிரு வார்த்தைகள் ராஜீவ்வுடன் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
“டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரிங்க…” சொன்னபடி இருக்கையில் உட்கார்ந்த ராஜீவ்வின் குரலில் நிமிர்ந்தாள் திவ்யா.
அவன் பேசியது இப்போது அவள் கவனத்தை ஈர்த்தது. அவன் அவளிடம் பேசிய முதல் தமிழ் வாக்கியம். மலையாள சாயல் கலந்த தமிழ்… அழகாக வெளிவந்தது போல இருந்தது. பதிலுக்குப் புன்னகைத்தாள். அடுத்து அவள் கண்ணில் பட்டது, அவன் மேசை மேல் வைத்த சாக்லேட் பேக்கெட்.
அதில் அவள் கண்கள் பதிந்து ஓரிரு நொடிகள் பார்த்ததை உணர்ந்த ராஜீவ், அதைப் பிரித்து அவளிடம் நீட்டினான்.
‘இப்படி அப்பட்டமாகவா பார்த்து வைக்கவேண்டும்’ மானசீகமாகத் தன்னையே திட்டிக்கொண்டு, “இல்ல வேண்டாம். தேங்க்ஸ்” என மறுத்தாள்.
அவன் விடவில்லை. வற்புறுத்தி எடுத்துக்கொள்ளச் செய்தான். கூடவே அவள் தேர்ந்தெடுத்த சாக்லேட் வகையும் கண்ணில் பட்டது. லேசாக புன்னகை அரும்பியது.
சில நிமிடங்களில் அவன் கேட்ட கேள்விக்கு அவள் பதில் எழுதித் தந்துவிட, அவன் அதை வாங்கி பார்த்தபடி… “ஓகே மிஸ் திவ்யபாரதி! வி ஆர் டன் ஃபார் தி டே! மோஸ்ட்லி அடுத்து ஹெச் ஆர் ரவுண்ட் தான். ஒருவேளை தேவைன்னா இன்னொரு டெக்கனிகள் ரவுண்ட் இருக்கும்”
கொஞ்சம் நிறுத்தி, “உங்களுக்கு ஏதாவது கேட்கணுமா?” கேள்வியாக பார்த்தான்.
“ஒருவேளை நான் செலக்ட் ஆனா, இந்த பிரான்ச்’ல தான் ப்ராஜக்ட் இருக்குமா?!” அவளும் கேள்வியாகப் பார்க்க, ‘அவள் இங்கு வரத்தான் விருப்பப்படுகிறாள்’ என எண்ணி, மனதில் எழுந்த லேசான பரபரப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல்…
அவன், “எஸ், எங்க ப்ராஜெக்ட்’க்கு தான் இந்த ரிக்வயர்மெண்ட். சோ, இங்க தான் வருவீங்க” என்றான் புன்னகையுடன்.
அவளும் தலையசைத்துவிட்டு, கிளம்பிவிட்டாள்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் வினய் முன் நின்றான் ராஜீவ். “ஃபர்ஸ்ட் அனுப்பின கேண்டிடேட் ஓகே ஓகே, அப்புறம் தேர்ட் கேண்டிடேட் பெட்டர்… நல்லா” என்று ராஜீவ் முடிக்கும் முன்…
“நினைச்சேன் ஆர்கே, அந்த பொண்ண நீ செலக்ட் பண்ணுவன்னு… சொந்தமமும் இல்லனா அப்போ…” இப்போது வினய்யின் பேச்சை அப்படியே நிறுத்த, அவன் முன் ஒரு பேப்பரை நீட்டினான் ராஜீவ்.
“அந்த பொண்ணு கிட்ட நான் கேட்ட லெவல் 3 கஷ்டமான ப்ரோக்ராம்மிங் கொஸ்டின் அண்ட் அதுக்கான அவங்களோட ஆன்ஸர். ஆனா நாம அவங்கள லெவல் 2’க்கு தான் எடுக்க போறோம்”
வினய் இப்படிக் கேட்பான் என எண்ணியே அந்த கேள்வியை திவ்யாவிடம் கேட்டான். அவளின் அனுபவத்திற்கும், அவளை வேலைக்கு எடுக்கப் போகும் நிலைக்கும் அந்த கேள்வி அதிகம் என தெரிந்து தான் கேட்டான். இருந்தும் அவள் சரியான பதில் எழுதி இருந்தாள்.
வினய் அந்த பேப்பரை பார்க்க, ராஜீவ்…”வேணும்னா நீ இன்னொரு ரவுண்ட் இன்டர்வியூ பண்ணு. பட், மார்க் மை வேர்ட்ஸ்! அந்த பொண்ணு கண்டிப்பா கிளியர் பண்ணிடுவாங்க” திடமாகச் சொன்னான் ராஜீவ். காரணம் திவ்யா தந்த பதில்கள்!
“ஓகே ஓகே நீ சொன்னா சரியா தான் இருக்கும்” சட்டென சமரச கொடியைக் காட்டிய வினய், “எப்படி அந்த பொண்ணு உன்ன இவ்ளோ இம்ப்ரஸ் பண்ணுச்சாம்?” கேலியாக பார்த்தான்.
எப்போதும் போல மென்னகையுடன் ராஜீவ், “திறமையான பெர்சன், அண்ட் நம்ம ப்ராஜெக்ட் கொஞ்சம் ஹெக்ட்டிக்கான ப்ராஜெக்ட். அத பாஸிட்டிவா அப்ரோச் பண்ணா ஈஸியா சமாளிக்கலாம். அவங்ககிட்ட அந்த பாசிடிவிட்டி இருக்கு”
எப்படியும் தன் ப்ராஜெக்ட்’க்கு தான் வருவாள் என்ற நம்பிக்கையுடன், அவளின் திறமைகளை வினய்யிடம் சொல்லிக்கொண்டிருந்தான் ராஜீவ்!
ஆனால் அவன் எண்ணத்திற்கு எதிர்மாறாக தன் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தாள் திவ்யா.
“இன்டர்வியூ முடிஞ்சது காயு. நீ சாப்பிட்டியா?….. ஹ்ம்ம் நல்லா பண்ணியிருக்கேன். அண்ட் அந்த இன்டர்வியூவர் பாஹ்! ஹேண்ஸம்! செம்மயா இருந்தான் காயு. மலையாளீ போல!”
இதைச் சொன்னபோது அவள் மனதில் ராஜீவ்வின் கண்ணாடி அணிந்த முகம் வந்து சென்றது. புன்னகைத்துக்கொண்டாள்.
அடுத்து அழைப்பின் மறுமுனையில் தோழி காயத்ரி கேட்ட கேள்விக்கு, “ஸ்மார்ட் தான்! அதுக்காக?? சும்மா சைட் அடிக்கவெல்லாம் இங்க சேர முடியுமா? ஒன்றர மணிநேர டிராவல் காயு!
பேக் சீட் டேமேஜ் தான் ஆகும். PG பக்கத்துல இருக்கிற ப்ரான்ச்னா ஓகே சொல்வேன்… இல்ல வேற கம்பெனி பார்க்க வேண்டியதுதான்” அலட்டிக்கொள்ளாமல் பதில் தந்தாள் திவ்யா.
ஆனால் எந்த இடத்தை தூரம் என்று நிராகரிக்க முடிவெடுத்தாளோ, அதே இடத்தில் வேலை பார்க்கப் போகிறாள் என்பதை அவள் அப்போது அறியவில்லை.
அடுத்து ஓரிரு நாட்களில் வினய்க்கு ஹெச்ஆர் இடமிருந்து அழைப்பு வந்தது.
‘யார் யார் அவர்களுடைய ப்ராஜெக்டில் சேரப்போகிறார்கள்’ என்ற பட்டியலை அவர்கள் தர, அதை ராஜீவ்விடம் காட்டினான்.
அதில் திவ்யபாரதி பெயர் இல்லாததைப் பார்த்தவுடன், அது குறித்து ஹெச்ஆர் இடம் ராஜீவ் கேட்டபோது… ‘அவளுக்கு இங்கே சேர விருப்பமில்லை’ என்ற பதில் வந்தது.
‘தன் ப்ராஜெக்டில் சேர விருப்பமில்லையா!’ என்ற கேள்வி மனதில் ஒரு ஓரத்தில் மெல்லிய ஏமாற்றத்தைத் தந்தாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
அவனுக்கும் அப்போது தெரியவில்லை அவளுடன் சேர்ந்து வேலை செய்யப்போகும் நாளும் வரும்! வேலையுடன் நில்லாது அவர்களுக்குள் உறவு அடுத்தகட்டத்தை அடையுமென!

Nice 👍
Thank you 🙂
Absolutely amazing writeup.. good going da
Thanks a lot da 😊