உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 6
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 6:
ராஜீவ்விடம் மாலினி திவ்யாவின் விஷயத்தை சொன்னவுடன் முற்றிலுமாக அதிர்ந்தான் ராஜீவ்.
உணவு நேரத்தின் போது, அவளிடம் தெரிந்த வித்தியாசத்திற்கான காரணம் இப்போது புரிந்தது. அதுவும் அவளை பின்னிருந்து அழைத்தபோது அவள் பார்த்த அந்த பார்வை! அது சுமந்த செய்தி, அதுவும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
ஆனால் அதற்காக அவள் மேல் வருத்தமோ, கோபமோ வரவில்லை. இவ்வளவு பெரிய பிரச்சனையை… பயந்தோ, படபடப்புடனோ இல்லை அவசரத்துடனோ கையாளாமல்… நிதானமாக, தெளிவாக கையாண்ட விதம் அவள் மேல் அவனுக்கு தனி மதிப்பை ஏற்படுத்தியது. கூடவே இவ்வளவு கீழ்த்தரமான காரியத்தை செய்தவன் மேல் அளவில்லா கோபம்.
இதை பற்றி எண்ணியபடி மாலினியின் இடத்தை அடைந்தான்.
அவனுக்காக காத்திருந்த மாலினி, திவ்யா சொன்னதை அனைத்தையும் சொன்னாள். கூடவே அவள் தந்த ஆதாரங்களையும் காட்டினாள். கோபம் தலைக்கேறியது ராஜீவுக்கு.
“ஆர்கே! எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் யாருனு கண்டுபிடிக்கணும். திவ்யபாரதி கம்பளைண்ட் பண்ணது அவனுக்கு தெரிஞ்சிருக்காதுனு நினைக்கிறேன்.
அவனுக்கு தெரியவும் கூடாது. நம்ம டீம்ல கூட, நான் யார்கிட்டயும் இப்போ எதுவும் சொல்ல போறதில்ல. ஆனா, நம்ம டிலே பண்ண பண்ண திவ்யபாரதிக்கு அவன் வேற மாதிரி டார்ச்சர் கொடுக்க ஆரம்பிப்பான்” என்றாள் மாலினி.
“ஹ்ம்ம்!” என்ற ராஜீவ்வுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது தன்னை சமநிலைப் படுத்திக்கொள்ள. ஓரிரண்டு குறுஞ்செய்தியை மேலோட்டமாகத் தான் பார்த்தான். அதுவே அவனுக்கு BP’யை ஏற்றியது.
பின் இருவரும் கூர்ந்து வந்த குறுஞ்செய்திகளை கவனித்தார்கள். அனுப்பிய அனைத்துமே அனானிமஸ் (யார் என்றே தெரியாமல்) ஆக தான் வந்திருந்தது. அந்த எடிட் செய்த போட்டோ அனுப்பிய லிங்க்கில் கூட எந்த தகவலும் எடுக்க முடியவில்லை.
“IP மாஸ்க் ஆகி வந்திருக்கு மாலினி. அது கண்டுபிடிக்கணும்னா சைபர் கிரைம் டிபார்ட்மென்ட் கிட்ட தான் கேட்கணும்”
அவன் முடிக்கவில்லை, “அந்த பொண்ணு போலீஸ் கம்பளைண்ட் பத்தி எதுவும் சொல்லல ஆர்கே. சோ சைபர் கிரைம் ரூல்ட் அவுட்”
அதைக்கேட்டவுடன் திவ்யா மீது லேசான வருத்தம் வந்தாலும், அவள் நிலையில் இருந்து யோசித்தால் அது சரியே என்றும் தோன்றியது. மறுபடியும் கூர்ந்து கவனித்தான்.
நேரம் சென்றுகொண்டே இருந்தது. அப்போதுதான் பார்த்துக்கொண்டிருந்ததில் ஒரு குறிப்பு அவன் கண்களில் பளிச்சிட்டது.
“மாலினி! அவனுக்கு பாரதியோட அப்பா நம்பர் தெரிஞ்சிருக்கு. ஒன்னு பாரதியே அவன்கிட்ட குடுத்திருக்கணும் இல்லை ஆஃபீஸ் பர்சனல் டீடெயில்ஸ் டேட்டாபேஸ்ல இருந்து எடுத்திருங்கணும்” என்றான் யோசனையுடன்.
“அது திவ்யபாரதிகிட்ட தானே கேட்கணும்… அவங்க யார்கிட்ட அவங்க அப்பா நம்பர் ஷேர் பண்ணாங்கன்னு தெரியலையே. புது நம்பர் வாங்கிட்டு எனக்கு இன்ஃபோர்ம் பண்றேன்னு சொன்னாங்க ஆர்கே”
“தட்ஸ் ஓகே. பொறுமையா தரட்டும். ஆல்ரெடி ரொம்ப டிஸ்டர்ப்ட்’ஆஹ் இருப்பாங்க. இப்போ தொல்லை பண்ண வேணாம். அதுவும் இல்லாம ப்ராஜெக்ட்ல யார்கூடவும் இன்னமும் சரியா பழகலனு சொன்னாங்க. சோ அவங்களா நம்பர் தந்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன்.
நாம என்ன பண்ணுவோம், அவங்க கிட்ட கேட்கறதுக்கு முன்னாடி… இந்த இன்ஃபோ கலக்ட் பண்ணி வெச்சுப்போம் மாலினி.
பாரதி ஒர்க் பண்றது இன்டெர்னல் ப்ராஜெக்ட். அதாவது எம்ப்ளாயீ மேனேஜ்மென்ட் சிஸ்டம் ப்ராஜெக்ட். வேலை பார்க்கறவங்களோட எல்லா தகவலும் அங்க இருக்கும்.
பட், அவங்க ப்ராஜெக்ட்ல பர்சனல் டீடெயில்ஸ் டேட்டாபேஸ் அக்ஸஸ் சிலருக்கு மட்டும் தான் இருக்கும்னு நினைக்கறேன். ஏன்னா அதெல்லாம் கான்ஃபிடென்ஷியல் இன்ஃபோர்மேஷன். எல்லாருக்கும் அக்ஸஸ் தரமாட்டாங்க. சோ மொதல்ல யாருக்கெல்லாம் அக்ஸஸ் இருக்குன்னு பாரு மாலினி”
“வாவ்… ஆவ்ஸம்! இது போதுமே ஆர்கே! எனக்கு அந்த டேட்டாபேஸ் அக்ஸஸ் இருக்கு. சோ யாருக்கெல்லாம் இருக்குனு கண்டுபிடிச்சுடலாம். ஓரளவுக்கு நெருங்கிட்டோம் ஆர்கே” மாலினியின் முகத்தில் நம்பிக்கை.
ராஜிவ்வுக்கு முகத்தில் இறுக்கம். அவனுக்கு அந்த பாதகன் யார் என்று தெரிய வேண்டும். அவ்வளவே.
பெரும்பாலான நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களின் தகவல்கள் அனைத்தும் டேட்டாபேஸ் எனப்படும் சில தரவுத்தளத்தில் தான் இருக்கும். ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள், அவர்களின் வேலை மற்றும் வேலைத்திறன் பற்றிய தகவல்கள், ஊதியம் தொடர்பான தகவல்கள் என ஒவ்வொன்றும் பொதுவாகவே ஒவ்வொரு தரவுத்தளத்தில் இருக்கும்.
அனைவராலும் அந்த தரவுத்தளத்தில் தகவல்களை பார்க்க இயலாது. வெகு சிலருக்கு மட்டுமே உள்நுழைய அனுமதி இருக்கும். மாலினி ‘ஹெச்ஆர் ஹெட்’ என்பதால் அவளுக்கு அனுமதி இருந்தது.
அவள் பார்க்கும் நேரத்தில் காஃபி குடிக்க சென்ற ராஜீவ், திரும்பிய போது மாலினிக்கு சேர்த்து எடுத்துவந்திருந்தான்.
அதற்குள் மாலினியும் தகவல்களைத் திரட்டி இருந்தாள்.
“ஆர்கே! அவங்க ப்ராஜெக்ட்ல இருக்க ரெண்டு ப்ராஜெக்ட் லீட்ஸ், அப்புறம் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜர்க்கு இருக்கு. அதில்லாம ஹெச்ஆர்ல மூணு பேருக்கும், பைனான்ஸ்ல ரெண்டு பேருக்கும், சில ஹையர் மேனேஜ்மென்ட்ல இருக்கவங்களுக்கும் இருக்கு”
“வெரி குட் மாலினி! என்னோட கணிப்பு சரினா அவங்க ப்ராஜெக்ட்ல இருக்கவங்களோட வேலையா தான் இருக்கும். வேற யாரும் ஸ்பெசிஃபிக்’கா பாரதியை டார்கெட் பண்ணுவாங்களானு தெரியல” என்றவன் சற்று நிறுத்தி…
“ஒருவேளை பாரதி ரிப்போர்ட் பண்ற ராகேஷ்? அவனுக்கு அக்ஸஸ் இருக்குல்ல?” என கேள்வியுடன் பார்த்தான்.
“ஹ்ம்ம் இருக்கு! பட், அப்படியேனாலும் எவிடென்ஸ் வேணுமே ஆர்கே”
மறுபடியும் தடுக்கி நின்றதுபோல உணர்வு ஏற்பட்டது இருவருக்கும். தெரியாமல் ஒருவனை கை காட்ட முடியாதே!
அதற்குள் திவ்யா மாலினிக்கு தன் புது எண்ணிலிருந்து தகவல் அனுப்பியிருந்தாள். அவளிடம், அவள் அப்பா எண் யாருக்காவது கொடுத்தாளா என்பதை மாலினி கேட்டாள். இல்லை என்ற பதில் தான் வந்தது. ஆக, அந்த டேட்டாபேஸில் இருந்து தான் தகவல் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஓரளவிற்கு ஊர்ஜிதம் ஆனது.
ராஜீவுக்கு அவனுடைய ப்ராஜெக்டில் இருந்து முக்கியமான கிளைன்ட் கால் என்ற தகவல் வர, வேலையைப் பார்க்க செல்ல வேண்டியதாயிற்று.
இருவரும் யோசிப்போம் ஏதாவது துப்பு கிடைக்கிறதா என பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான் ராஜீவ்.
வேலையில் கவனம் முழுவதுமாக செலுத்த நினைத்தாலும், அவ்வப்போது கருத்தினில் திவ்யாவே வந்து சென்றாள். அவளை சந்தித்த பொழுதுகளில் பேசியதெல்லாம் யோசித்தபடி இருந்தான்.
வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பியும்விட்டான். ஆனால் எதுவும் புலப்படவில்லை. மாலினியும் அவளாலான அனைத்து வழிகளிலும் முயன்றாள். ஆனால் பயனில்லை.
ஹரிணி பற்றி பேசியதெல்லாம் நினைத்துப்பார்த்தான் ராஜீவ். பின் திவ்யா அவள் ப்ராஜெக்ட் பற்றி சொன்னதை கடினப்பட்டு நினைவுகூர்ந்தான். அப்போது அவள் சொன்ன ஒரு தகவல் இப்போது நினைக்கையில் பகீர் என்றது.
‘எங்க ப்ராஜெக்ட்ல விமன் எம்ப்ளாயீஸ் ரொம்பவே கம்மி. டைமிங் செட் ஆகலையானு தெரியல’ என்று அவள் சொன்னது இப்போது வேறுவகையில் அவனை யோசிக்க வைத்தது. மாலினியை நடு இரவு என பாராமல் அழைத்தான். தகவலைச் சொன்னான்.
தூக்கத்திலிருந்த மாலினி, அது முற்றிலுமாக கலைந்ததுபோல… “மை காட்! என்ன ஆர்கே சொல்ற? இதுபோல முன்னாடியே அவன் பண்ணிருக்கான்னா?” அதிர்ந்தாள் மாலினி.
“இருக்கலாம் மாலினி. ஒரு கெஸ் தான்” இருவருக்கும் தூக்கம் தூர போனது.
அப்போது மாலினிக்கு ஒரு யோசனை வர, “ஆர்கே! ஒரு ஐடியா. ஜஸ்ட் எ ட்ரை. ஓல்ட் விமன் எம்ப்ளாயீஸ்க்கு ஒரு மெயில் அனுப்புவோம். எதுனால அவங்க ரிசைன் பண்ணாங்க… அவங்களோட நிறை குறை எதுவா இருந்தாலும் ஷேர் பண்ண சொல்லி கேட்போம்.
கூடவே, வொர்க்பிளேஸ் பற்றி கேட்போம். ஏதாவது இல்ல யாராவதுனால பிரச்சனை இருந்ததானு கேட்போம். அவங்க சொல்ற கருத்து, கம்பெனி நலனுக்கும் கூடவே அவங்க தரப்போற தகவல் இப்போ இருக்க பெண்களுக்கு பெரிய உதவியா இருக்கும்னு சொல்வோம்.
சர்வேல, அவங்க பேர் சொல்ல வேண்டாம். ப்ராஜெக்ட் மட்டும் சொன்னா போதும்னு சொல்வோம் ஆர்கே. அப்போ தெரிய வாய்ப்பு இருக்கு இல்லையா?”
ஒரு நொடி யோசித்தான். பின், “ஒண்டர்ஃபுல் மாலினி! இது ஒரு நல்ல லீட். பார்ப்போம்”
இருவரும் பேசிமுடித்து வைத்தவுடன், மாலினி உடனே ஒரு மெயில் டிராப்ட் செய்தாள்.
அடுத்தநாள் மேலதிகாரியிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு, அனைவருக்கும் அந்த ஈமெயிலை அனுப்பினாள்.
அதற்கு தேவையான பலன் வந்ததா என்றால் அன்றைய மதியம் வரை இல்லை என்றே சொல்லலாம். சிலர் ஊதியம் போதவில்லை என்றும், சிலர் பாகுபாடு அதிகம் எனவும், சிலர் கல்யாணம் என்றும் சொல்லி இருந்தனர்.
ஆனால் வேறு சில ப்ராஜெக்ட்டில் வேலை பார்த்த பெண்கள் அவர்களுக்கு நடந்த கசப்பான தகவல்களை, சில மேலதிகாரிகள் செய்த தொல்லைகளைப் பகிர்ந்துகொள்ள, அதை பார்த்த மாலினிக்கு திக் என்றது.
திவ்யாவிற்காக செய்த காரியம், வேறு சில புல்லுருவிகளை வெளிச்சம் காட்டியது. கடைசியாக அடுத்தநாள் திவ்யாவிற்கும் பலன் கிடைத்தது.
உடனே ராஜீவை வரச்சொல்லி அழைத்தாள். இதை முடிக்க வேண்டி, அவனும் அந்த கிளையில் தான் இருந்தான்.
அவன் வந்தவுடன், அவளின் வெளிறிய முகத்தைப் பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்க, “பேர் சொல்லி ஒரு பொண்ணு, சொல்லாம ஒரு பொண்ணு ராகேஷ் மேல கம்பளைண்ட் பண்ணிருக்காங்க ஆர்கே!” என்றதும் கோபத்தால் நாற்காலியின் கையில் அறைந்து தட்டினான் ராஜீவ்.
“திவ்யா போலவே ரெண்டு பேரையும் டார்ச்சர் பண்ணியிருக்கான். அவனுக்கு பயந்து கொஞ்ச நாள்ல ரிசைன் பண்ணதா சொல்லியிருக்காங்க. வெளிய யார்கிட்டயாவது சொன்னா, போட்டோஸ் லீக் பண்ணிடுவேன்னு மிரட்டிருக்கான். அவங்களும் சொல்லலையாம்”
“****” ஆங்கில பீப் வார்த்தையை முனகிய ராஜீவ், “நினைச்சேன் மாலினி. அவனா இருக்கும்னு” என்றவனது கோபம் முகத்தில் தெரிந்தது.
இருவரும் மேலதிகாரியிடம் கலந்தாலோசித்த பின், திவ்யாவை அழைத்தார்கள். ராஜீவ், ‘தனக்கு விஷயம் தெரியும்’ என்பது திவ்யாவிற்கு தெரியவேண்டாம் என சொல்லி, அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
திவ்யாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, ராகேஷ் வருவதற்காக ரௌத்திரத்துடன் காத்திருந்தாள்.
வேலை குறித்து பேசவேண்டும் என ராகேஷை அழைத்திருந்தார்கள். அந்த மீட்டிங் அறையுள் நுழைந்தவன் அங்கே திவ்யாவை எதிர்பார்க்கவில்லை. லேசாக அதிர்ச்சி அவன் முகத்தை சூழ்ந்தது.
மாலினியின் மேல் அதிகாரி, அவனிடம் விஷயத்தைப் பற்றி கேட்க, ஏதோ உத்தமன் போல நாடகத்தை அரங்கேற்றினான். அதுவரை பொறுமையைக் கையிலெடுத்திருந்த திவ்யா, விரைந்து ராகேஷிடம் சென்றாள்.
எவரும் உணரும்முன் அவன் கன்னத்தை நன்றாக பதம் பார்த்திருந்தாள் திவ்யா.
“உன் வைஃப் கன்சீவா இருக்கறதா சொன்னல்ல? உன்ன நம்பி… தினமும் நீ வேலை பார்க்க தான் போறனு நினைச்சுட்டு இருப்பாங்கல்ல? அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க நிலைமை?” அவனை அருவருப்பாகப் பார்த்தாள் திவ்யா.
அப்போது மாலினி, “எல்லா எவிடென்ஸ் இருக்கு. உன் ப்ராஜெக்ட்ல முன்ன வேலை பார்த்தவங்க கூட நீ செய்ததெல்லாம் சொல்லிட்டாங்க. போலீஸ் கம்ப்ளைண்ட் தான் உன்னக்கெல்லாம் சரி” என்றவுடன், அவன் அதிர்ந்தான்.
மாட்டிக்கொண்டுவிட்டோம் என புரிந்தது. “ப்ளீஸ் போலீஸ்லாம் வேணாம்” என்ற அவனின் பயமே அவனை காட்டி கொடுத்துவிட்டது. திவ்யாவும் போலீஸ் வேண்டாம் என சொல்லியிருக்க, ராகேஷை உடனடியாக வேலையை விட்டு நீக்கினார்.
இதற்கு பின் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களான ஐடி/ஐடிஇயெஸ் நிறுவனங்களில் வேலை பார்க்க முடியாதபடி, அவனை முடக்க வழி செய்தார்கள்.
பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் ஒருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் முன், அவர்களை பற்றி பேக்கிரவுண்ட் வெரிஃபிகேஷன் செய்தபின் சேர்த்துக்கொள்வார்கள். அப்படி செய்யாத சிற்சில நிறுவனங்களில் அடுத்த வேலை இதேபோன்றவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புகளும் உண்டு.
அவனை அனுப்பி வைத்தபின் திவ்யாவிடம் பேசினார்கள்.
அவள் கொஞ்சம் தெளிவாகவே தான் இருந்தாள். எண் மாற்றியபின், மாலினி மற்றும் வீட்டைத் தவிர யாருக்கும் தரவில்லை. ராகேஷ் அவளுடைய பழைய எண்ணை தொடர்புகொள்ள முயன்று முடியாமல் போனது. அவன் அவளிடம் கேட்கும்முன் அனைத்தும் முடிந்துவிட்டது.
மாலினி, “திவ்யபாரதி, உங்களுக்கு ப்ராஜெக்ட் சேஞ் இல்ல லொகேஷன் சேஞ்?” என சொல்லிமுடிக்கும்முன் “எதற்கு?” என கேட்டிருந்தாள் திவ்யா.
“இல்ல, அரசல் புரசலா விஷயம் எப்படியும் உங்க ப்ராஜெக்ட்ல தெரிய வரும். அதான்”
“தெரிஞ்சிட்டு போகட்டும் மாலினி. தப்பு பண்ணினது அவன். நான் ஏன் மாறணும்?” என்று திடமாகக் கேட்ட திவ்யா, மறுபடியும் மாலினிக்கு வித்தியாசமாகத் தெரிந்தாள்.
“உங்களுக்கு ஓகேனா நோ ப்ரோப்லம்” புன்னகைத்த மாலினி, “ஏதாவது ஹெல்ப் வேணும்னா ரீச் அவுட் டு மீ!” என்றாள். புன்னகையுடன் நன்றி கூறிவிட்டு வெளியேறினாள் திவ்யா.
நிம்மதியான மூச்சு இப்போதுதான் திரும்பியதுபோல இருந்தது திவ்யாவுக்கு.
திவ்யா சென்ற சில நிமிடங்களில், ராஜீவை தேடி மாலினி அவன் இடத்திற்கு சென்றாள். நடந்த அனைத்தையும் சொன்னாள். அவனுக்கும் நிம்மதி. ‘அதே ப்ராஜெக்ட்டில் இருக்கிறேன்’ என்று திவ்யா சொன்னது, அவனையும் ஆச்சரியப்பட வைத்தது. இம்முறையும் அவனை ஈர்த்தாள் திவ்யா!
மாலினி அவனிடம், “சரி! இப்போ சொல்லு ஆர்கே… யார் அந்த பொண்ணு? இங்க நீ எப்பவும் தனியா தான் இருப்ப. இப்போ கொஞ்ச நாளா இந்த பொண்ணு உன்கூட… ஹ்ம்ம்? அதுவும் பார்க்கணுமே… பாரதி பாரதினு!” புருவம் உயர்த்தி புன்னகையுடன் கேட்டாள்.
“ஹாஹாஹா” சத்தமாக சிரித்த ராஜீவ், “நீ நினைக்கற மாதிரியெல்லாம் இல்ல மாலினி”
“நான் என்ன நினைக்கறேன்னு கொஞ்சம் எனக்கு புரியறமாதிரி நீயே சொல்லேன்!” வேண்டுமென்றே வம்பிழுத்தாள். ராஜீவ் முகமே மலர்ந்தது.
பின், “ஓய்! போதும்… அவங்கள நான் தான் இன்டெர்வியூ பண்ணேன். என் ப்ரோஜெட்க்கு தான் எடுத்தேன். பட், டிஸ்டென்ஸ்னு அவங்க அக்செப்ட் பண்ணல. இங்க பார்த்தப்புறம் ஒரு சின்ன கனெக்ட்… அவ்ளோதான்”
அவன் முடிக்கவில்லை, அதற்குள் “சின்ன கனெக்ட் தானா ஆர்கே? ஆனா உன் முகம் வேற ஏதோ சொல்லுதே!” மாலினி விடுவதாக இல்லை.
“சரி சரி! ஒரு சின்ன அட்ராக்ஷன்” அவன் சொன்னதும், அவன் மனமே, ‘அட்ராக்ஷன் மட்டுமா ஆர்கே?’ மாலினி செய்த வேலையை அது செய்தது. மனவோட்டத்தை எண்ணி சிரித்தான். பார்க்கும் யாரையும் வசீகரிக்கும்!
மாலினி, “பார்றா! ஹ்ம்ம் அட்ராக்ஷன்… பட் பாரதி… குட் சாய்ஸ் ஆர்கே!” என்றவள், “இதேபோல பாரதிகிட்ட சிரிச்சிட்டே இருந்தன்னா, சீக்கிரம் அவங்க ஃப்லாட்!”
இது முடிவதாக இல்லை என நினைத்த ராஜீவ், அவளைக் கேட்க ஆரம்பித்தான். “என்னை விடு. ஸ்ரீ எப்படி இருக்கார்?” என்றதுமே அவள் முகம் போலியான கோபத்திற்கு மாறியது. ஸ்ரீ என்கிற ஸ்ரீஜித் மாலினியின் காதலன்!
“பேச்ச மாத்துறையா?” என்றவள், ஸ்ரீ ஊரில் இல்லை என்பதை சொன்னாள். இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு, அவரவர் வேலையில் கவனத்தை திருப்பினர்.
அந்த வாரம், மன நிம்மதியோடு திவ்யா ஊருக்கு சென்று திரும்பியிருந்தாள். நடந்ததை பற்றி வீட்டில் சொல்லவில்லை. சொன்னால் நிச்சயம் வருந்துவார்கள்; அதுதான் அனைத்தும் முடிந்துவிட்டதே! அப்படியே இருக்கட்டும் என நினைத்தாள் விட்டுவிட்டாள்.
அந்த திங்கள்கிழமை எப்போதும்போல வேலைக்குச் செல்ல, எல்லாம் சரியாக நடப்பது போல் தான் தெரிந்தது அவளுக்கு. ஒரே ஒரு மாற்றம், ராகேஷ் இல்லை. அவனுக்கு பதில் வேறு ஒருவனை நியமித்திருந்தார்கள்.
ஆனால் அடுத்தநாள் திவ்யாவை அழைத்தார் அவளுடைய மேலாளர். அவள் செல்ல, அங்கே மாலினியும் இருந்தாள்.
அடுத்து என்ன என்பதுபோல் பார்த்த திவ்யாவிடம், “திவ்யபாரதி, வி ஃபீல் திஸ் ப்ளேஸ் இஸ் நாட் ரைட் ஃபோர் யூ நொவ்!” என்ற மாலினி… “உங்களை முதல்ல இன்டெர்வியூ பண்ண ப்ராஜெக்ட்டுக்கு மாத்த முடிவு பண்ணிருக்கோம்” என்றாள். அதைக்கேட்டு அதிர்ந்தாள் திவ்யா.
இந்த இடம் அவளுக்கு பொருத்தம் இல்லை என மாலினி சொன்னதற்கான காரணம், முந்தைய தினம், மேலாளர் காதுபடவே ராகேஷ் திவ்யா இருவரையும் சேர்த்து வைத்து சிலர் நக்கல் செய்ததுதான். ஏற்கனவே ராகேஷ் திவ்யா குறித்து சில பேச்சுக்கள் இருந்த நிலையில்… இப்போது அதற்குத் தீனி போட்டதுபோல் ஆகிவிட்டது. இன்னமும் கொடுமை, ஏதோ ராகேஷ் மிகவும் நல்லவன், இவள் தான் திட்டமிட்டு அவனை அனுப்பிவிட்டதுபோல ராகேஷ் உடைய சகாக்கள் அவனுக்காகப் பேசினார்கள்.
திவ்யா இவர்களுடன் தான் வேலை பார்க்க வேண்டும். இப்படி ஒரு சூழலில் வேலை பார்த்தால் நிச்சயம் அவள் இன்னமும் உளைச்சலுக்கு ஆளாவாள் என எண்ணினார் அவளின் மேலாளர்.
அவளுடைய ரெகார்டஸ் எடுத்துப் பார்க்கையில், அவளை ராஜீவ் அவன் ப்ராஜெக்ட்டுக்கு நேர்காணல் செய்தது தெரிய வந்தது. நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கும் தெரியும் என்பதால், வேலை பார்க்கும் ஒரு நல்ல சூழலை அவன் அங்கே அமைத்துத்தருவான் என நம்பினார்.
மாலினியை அழைத்து ராஜீவ்விடம், ‘திவ்யாவை எடுத்துக்கொள்ள முடியுமா?’ என கேட்க சொன்னார். முடியாது என்பானா ராஜீவ்! அவ்வளவுதான்.
திவ்யாவிற்கு கோபம் ஒருபக்கம் இயலாமை மறுபக்கம். அவளிடம் கருத்துகூட கேட்காமல் அவர்களே முடிவு செய்தது கோபம் என்றால்… சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில், இப்போது வேறு நிறுவனத்திற்கு மாறுவது கூட கடினம் என்ற இயலாமை… இரண்டும் சேர்த்து அவளை இறுக்கியது.
தன்னை கேட்காமல் இவர்கள் செய்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றாலும்… ஒரே ஒரு விஷயம் அவளுள் எழுந்த நொடி… பணி மாற்றத்திற்கு சரி என சொல்லிவிட்டாள்.
அந்த விஷயம்… ராஜீவ்! அவன் இருக்கிறான்… அங்கே எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற எண்ணம் அவளுள் துளிர்த்த நொடி… அவளையும் மீறி சம்மதிக்க வைத்தது. இருந்த மனநிலையில் ஏன் என்ற காரணத்தை அறிய விரும்பவில்லை. நூலிழை தான் என்றாலும், அவள் அறிந்தோ அறியாமலோ அவள் எண்ணங்களுள் நுழைந்திருந்தான் ராஜீவ்!
