உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 7
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 7:
அடுத்தநாள் புதன்கிழமை திவ்யா ராஜீவ்வின் கிளையில் சேருவதற்காக வந்திருந்தாள். ஆனால் ராஜீவோ, டோஸ்ட்மாஸ்டர்ஸ்’காக திவ்யா வேலை செய்த பழைய கிளைக்கு சென்றிருந்தான்.
அங்கு சென்றிருந்தாலும் அவன் நினைவுகளை ஓரளவிற்கு திவ்யா ஆக்ரமித்திருந்தாள்.
முந்தைய புதன்கிழமை அவளை காண வேண்டும் என எழுந்த உந்துதல், உணவகத்தில் அவளை பார்த்தவுடன் அவனுள் ஏற்பட்ட மாறுதல், அவளுக்கு ஒன்று என்றதும் அவனின் தவிப்பு என இந்த மாற்றங்கள் அவனுக்கே புதிதாக இருந்தது.
இதையே தான் ஓரிரண்டு நாட்களாகவே யோசித்துக்கொண்டு இருக்கிறான். திவ்யாவை தனது ப்ராஜெக்ட்டுக்கு எடுத்துக்கொள்ள சொல்லி, அதற்கான காரணங்களை மாலினி சொன்னபோது; திவ்யாவுக்கு அதில் விருப்பமிருக்காது என தெரிந்தும் சரி என்றான்.
அவள் அந்த கிளையிலேயே வேலை பார்த்தால் நிச்சயம் அங்கு நடப்பவை அவளை வருத்தும், எதற்காக அப்படி ஒரு நிலை அவளுக்கு வரவேண்டும் என எண்ணினான். திவ்யா என்ற ஒரு பெண்ணிற்காக நிறைய யோசிக்கிறோம் என்பதும் அவனுக்கு புரிந்தது. இருந்தும் அதை காதல் நேசம் என்ற வரையறைக்குள் யோசிக்க முடியவில்லை.
இப்படி யோசனையில் அவனிருக்க, அங்கே திவ்யா வினய்யிடம் தன் வேலை நிமித்தமாகப் பேசி இருந்தாள். அவளுக்கான இடத்தை காட்டி… பின், அங்கே கணினி மற்றும் இதர பொருட்களை அவளுக்கென அமைத்துத்தந்தார்கள்.
அவள் எண்ணங்களும் அவ்வப்போது ராஜீவ்வை தொட்டு மீண்டது. அவன் எப்படியும் இன்று இங்கே வரமாட்டான்; அந்த கிளையில் தான் இருப்பான் என்பது அவளுக்கு தெரியும். அவள் மனதின் ஒரு மூலையில் ராஜீவ் இங்கு இல்லையே என்ற ஏமாற்றம் ஏற்படாமல் இல்லை.
அன்று மாலினி, ‘இந்த ப்ராஜெக்ட்டுக்கு அனுப்பப்போகிறோம்’ என்று சொன்னபோது திவ்யாவுக்கு கோபம் எழுந்ததென்னவோ உண்மை தான். ஆனால் ராஜீவ்விடம் பேசி பழகிய அளவிற்கு கூட, அவள் இருந்த ப்ராஜெக்ட்டில் யாரிடம் அவள் பேசவில்லை என்பதை மனது எடுத்துக்காட்டியது.
அவள் வேலை செய்த இடத்தில்… அவரவர் தன் வேலை, தன் குழு என்று இருந்தார்கள். பொதுவாகவே பெரிய கூட்டம் என்றால் கொஞ்சம் தயங்கும் திவ்யாவுக்கு, அவ்வளவு சீக்கிரமாக அக்குழுவில் பொருத்திக்கொள்ள முடியவில்லை. அவர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது போல தெரிந்தது. கூட்டத்திலேயே தனித்துவிடப்பட்ட உணர்வு. அது பிடிக்கவில்லை.
அப்போதுதான் ஹரிணியுடன் உணவு நேரங்களில் மட்டும் பேசி பழகி இருந்தாள். ஹரிணியும் அச்சமயம் சென்றிருக்க, மீண்டும் தனித்துவிடப்பட்டாள்.
பின் ராஜீவ்வுடன் மதிய உணவு நேரங்கள், அவனுடன் இருந்த தனிமையான தருணங்கள்… அது ஏனோ பிடித்திருந்தது. அவனும் பேசினான்; அவளையும் பேசவிட்டான். இருவரும் மற்றவருக்கான இடத்தை கொடுத்தது போன்ற உணர்வு திவ்யாவினுள்.
அவனை காணும் நேரமெல்லாம், மனம் எப்போதும் லேசாவதுபோல உணர்ந்தாள். நிச்சயமாக அப்படி ஒரு நபருடன் வேலை பார்க்கும்போது, சலிப்பு தட்டாமல் வேலை பார்க்க முடியும் என்று நம்பினாள்.
அந்த எண்ணம் தான் அவளை ராஜீவ் ப்ராஜெக்ட்டுக்கு சரி என்று சொல்ல வைத்தது. ஆனால் இங்கு வந்த பின் தான் தெரிந்தது, இந்த இடமே லைவ்லின்ஸ் என்பார்களே, அதுபோல ஒரு வித புத்துணர்ச்சியுடன் தெரிந்தது.
வினய் திவ்யாவிற்கு தேவையான அனைத்தையும் செய்தபின், அவள் இடத்திலேயே நின்று கைகளை தட்டி, “ஹே கைய்ஸ் அட்டென்ஷன் ப்ளீஸ்!” என்றதும், சுற்றி இருந்த அனைவரும் சத்தம் வந்த இடம் நோக்கி, திரும்பிப்பார்த்தார்கள்.
வினய், “இவங்க திவ்யபாரதி. நம்ம ப்ராஜெக்ட்டுக்கு நியூ ஜாயினி” என்றதும், தூரத்தில் சில “ஹை திவ்யபாரதி… ஹலோ திவ்யபாரதி” என்ற குரல்கள். திவ்யா பக்கத்திலிருந்த ஓரிருவர், அவளிடம் கைகுலுக்கிவிட்டு சென்றார்கள். அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள் திவ்யா.
அந்நேரம், “ஹலோ திவ்யா. நைஸ் டு சி யூ ஹியர்!” ஒருவன் குரல் கேட்டு நிமிர்ந்த திவ்யா… புன்னகையுடன், “ஹலோ… இங்க ஜாயின் பண்ணிட்டீங்களா?” என்றாள்.
திவ்யாவுடன் நேர்காணலின் போது வந்திருந்தவன் தான் கவின். அன்று அவளிடம் நேர்காணல் குறித்து சில விஷயங்கள் பேசினான். பின், அவன் வேலை பார்க்கும் நிறுவனம் குறித்து பேசினான், திவ்யா வேலை பார்க்கும் இடம் குறித்தும் தெரிந்து கொண்டான். அவனின் கபடமில்லா பேச்சு திவ்யாவையும் அவனுடன் நன்றாகவே பேச வைத்தது. திவ்யா இங்கே சேருவது கடினம் என அவனிடம் சொல்லி இருந்தாள்.
அவன் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு இங்கே சேர்த்திருக்க, இப்போது திவ்யாவை பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பேசவந்திருந்தான் கவின்.
திவ்யா கேட்டதற்கு ஆம் என்று சொன்ன கவின், “நீங்க இங்க சேர மாட்டேன்னு சொன்னீங்களே திவ்யா?” என்ற கேள்வியைக் கேட்டுவைத்து, நடந்த கசப்பான நிகழ்வுகளின் தூசியை திவ்யாவினுள் லேசாகத் தட்டி எழுப்பிவிட்டான் கவின்.
வரவழைத்த புன்னகையுடன், அவள் பதில் சொல்ல வரும்போது… “ஹேய் திவ்யா!” என அங்கே வந்திருந்தாள் ஹரிணி.
ஹரிணியை பார்த்ததும் கவின், “ஓகே நீங்க பாருங்க திவ்யா. நாம அப்புறம் பேசுவோம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்ன இங்க பார்க்க திவ்யா” என்றாள் முக நிறைய புன்னகையுடன் ஹரிணி. பதிலுக்கு புன்னகைத்த திவ்யா, “உன் டைமிங் இதுதானா ஹரிணி?” என்று கேட்டாள்.
“ஆமா திவ்யா. பதினொன்னுல இருந்து எட்டுமணி வரை” என்ற ஹரிணி, “நீ எப்படி இங்க? அந்த ப்ராஜெக்ட் என்ன ஆச்சு?” கவின் கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்டாள்.
“அது ஒரு பெரிய கதை… அத விடு” என்ற திவ்யா அவளிடம் கொஞ்ச நேரம் வேறு விஷயங்களை பற்றி பேசினாள். ஹரிணியும் பேசிவிட்டு அவள் இடத்திற்கு சென்றுவிட்டாள். இவர் இருக்கைக்கும் இடையில் நல்ல இடைவெளி இருந்தது.
மதிய நேர உணவிற்காக ஹரிணியிடம் திவ்யா கேட்க, “திவி, டைமிங் மாறினதுனால, ரெண்டு மணிக்கு மேல தான் இப்போல்லாம் சாப்பிடறது… நான் உனக்கு கம்பெனி தரேன்” என எழ இருந்தவளை, அமர்த்தி… “பரவால்ல ஹரிணி… நீ வேலை பாரு” என்று மறுத்துவிட்டு உணவகம் சென்றாள்.
தனியாகத் தான் சென்றாள். ஆனால் ஏன் என தெரியவில்லை, அழையா விருந்தாளியாக ராஜீவ் அவள் மனதினுள் எட்டிப்பார்த்தான். மொபைலை பார்த்தபடி உணவு சாப்பிட இருந்தவளை, கவினின் வருகை திசை திருப்பியது.
அவள் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் நண்பனுடன் வந்து பேசி… அவள் உடனே உணவு சாப்பிட்டான் கவின்.
அதே நேரம்… திவ்யா வேலை செய்த பழைய கிளையில் ராஜீவ் மீட்டிங் முடிந்து உணவு சாப்பிடச் சென்றான். அவனுள்ளும் திவ்யா எண்ணங்கள் வந்து சென்றது. அத்துடனே உணவை சாப்பிட்டான்.
எப்போதும் புதன் என்றால் அங்கேயே தான் இருப்பான், தன் ப்ராஜெக்ட் கிளைக்கு வந்ததில்லை. ஆனால் இன்று?! திவ்யா எண்ணங்கள் வந்தவண்ணம் இருக்க, அவள் எப்படி அங்கு இருக்கிறாள் என்ற யோசனை வர, இதோ உணவு சாப்பிட்டவுடன் கிளம்பி விட்டான்!
ஏற்கனவே கடந்த வாரம் மூன்று நாட்கள் அந்த கிளையிலேயே ராஜீவ் இருந்தான், பின் கூடவே திவ்யா இங்கே வருகிறாள் என்று ராஜீவ் சொன்னதும் வினய் ஓட்டி தள்ளிவிட்டான்.
இன்று ராஜீவ் வந்தததுதான் தாமதம்… புதன்கிழமைகளில் இங்கே வராதவன், இப்போது வந்தவுடன் வினய் விடுவானா?!
“ஆர்கே… இங்கவா” என்ற வினய், ராஜீவ் கைகள் சிவக்க கிள்ளி வைத்தான்.
“டேய் லூசா நீ?” என்று தேய்த்துக்கொண்ட ராஜீவ்வை பார்த்த வினய், “ஓ நிஜம் தானா! கனவோனு நெனச்சேன்” என்றதும், முறைத்தான் ராஜீவ்.
“சரி புதன் கிழமை உனக்கு இங்க என்ன வேலை?” வினய் வம்படியாக கேட்க… ‘வினய் புரிந்துகொண்டான்’ என்று தெரிந்ததும் ராஜீவ் முகத்தில் அடக்கமுடியா புன்னகை.
அதை பார்த்த வினய், ஒரு மாதிரியாக பார்த்து… “ஆர்கே, வெட்கப்படறேன்னு மட்டும் சொல்லிடாத டா! சகிக்கல” வேண்டுமென்றே சொல்ல, ராஜீவ் சுற்றி பார்த்தபடி, “எங்க பாரதி சீட் வினய்?” என்று கேட்டான்.
“என்னது பாரதியா?!” வினய்யின் ‘பே’ என்ற முகத்தை பார்த்து சிரித்த ராஜீவ், அவன் வயிற்றில் குத்தி… “நானே பார்த்துக்கறேன்” என்று சென்றுவிட்டான்.
கண்களை அங்குமிங்கும் அலையவிட்டபடி அவனிடத்திற்கு செல்ல, அவனுக்கு தவறாமல் காட்சியளித்தாள் திவ்யா. அதுவும் அவனுக்கு diagonal’ஆக, அடிக்கடி கண்கள் எட்டும் தூரத்தில் பார்த்துக்கொள்ளும்படி இருந்தது அவளின் இருக்கை. மனதில் வினய்யிக்கு நன்றி சொல்லியபடி தன்னிடத்திற்கு நெருங்கினான்.
அங்கே திவ்யா கணினியில் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க, பக்கத்தில் அரவம் தெரிந்து நிமிர்ந்தாள். அங்கே ராஜீவ்வை பார்த்தவுடன், விழி விரித்துப் பார்த்தவள் கண்களில் ஏதோ ஒன்றை கண்டான் ராஜீவ்.
தன் மனதினுள் துள்ளிக்குதித்த உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மென்மையாகப் புன்னகைத்த ராஜீவ், “வெல்கம் பாரதி!” என்றான் பார்வையை அவளிடம் இருந்து விலக்காமல், மடிக்கணினியை பையிலிருந்து வெளியே எடுத்தபடியே.
அவள் நிச்சயமாக அவனை எதிர்பார்க்கவில்லை. இன்று வரமாட்டான் என தான் நினைத்திருந்தாள்.
அவனின் திடீர் வருகை, பின் அவன் கண்ணாடி வழி தெரிந்த கண்கள்… அது செய்த மாயம், அந்த மாயத்திற்கு வடிவம் தருவது போல மயக்கும் அவன் குரல்… அதில் கட்டுண்டு, தலை முதல் பாதம் வரை சிலிர்த்த உணர்வுடன் புன்னகைத்தாள். அவ்வளவு தான் அப்போது முடிந்தது.
அவளிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் தெரியாமல் இருக்க, ‘இப்படி இங்கே வரவழைத்துவிட்டார்களே!’ என எண்ணுகிறாளோ என நினைத்து… அவளை சகஜமாக்க, “காஃபி?” என்றான்.
அவளுக்கு இப்போது குடிக்கவேண்டும் என்பது போல இல்லை… ஆனால் அவனை மறுக்கவும் மனம் வரவில்லை.
புது இடம் என்பதால் அவனை பின் தொடர்ந்தாள். முதலில் அவன் எடுத்து அவளுக்கு கொடுத்தபின் தனக்கு எடுத்துக்கொண்டான்.
அதிகமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அந்த மௌனம் கூட இருவருக்கிடையில் அழகாக இருந்தது. அதற்கு இன்னமும் அழகு சேர்ப்பது போல தோன்றியது அவன் கூட்டிச்சென்ற இடம்.
அவன் அங்கே வந்த ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்க, திவ்யா விழி விலகாமல் அவ்விடத்தை பார்த்திருந்தாள்.
இரண்டு சிறிய கட்டிடங்களின் முதல் தளத்தை இணைக்கும் ஒரு பாதை. அதன் மேலே ட்ரான்ஸ்பெரண்ட் ரூஃபிங். லேசான மழை சாரல், மற்றும் காற்று சில்லென்று அங்கே வீசும்படி, பக்கவாட்டில் வெறும் தடுப்பு மட்டுமே.
இரண்டுமே அவர்களின் அலுவலகம் தான், அதில் ஒரு கட்டிடம் பச்சை பசேலென இருந்த சிறிய மலைக்குன்றை குடைந்து அதன் மேல் கட்டியதுபோல இருந்தது.
இதுவரை பலமாடி உயர் கட்டிடங்களில், இயற்கையான மரம் செடிகளுக்கே வழியில்லாத இடங்களில் வேலை பார்த்திருந்தவளுக்கு… இந்த இடம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகை காட்டியது.
அனைத்தையும் மறந்து… இந்த இட மாற்றம் இவ்வளவு நிம்மதியைத் தரும் என அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
கையில் பட்டு தெறித்த மழைத்துளியை, கையை உயர்த்தி இதமாக வீசும் காற்றின் போக்கில் ஊதியவள் மனதில், அவளையும் மீறி,
‘நேற்று இல்லாத மாற்றம் என்னது! காற்று என் காதில் ஏதோ சொன்னது!’ என்ற பாடல் வரிகள் ஓட, அவள் பக்கத்தில் அவளை பார்த்தபடி ரைலிங்கில் சாய்ந்து நின்றான் ராஜீவ்.
பாடலின் அடுத்தடுத்த வரிகள் மேல் கவனம் செல்லாமல் அப்படியே நின்றுவிட, அந்தரத்தில் உயர்த்தி இருந்த கையையும் அவசரமாகக் கீழிறக்கி புன்னகைத்தாள்.
“மேக் யுர்செல்ஃப் கண்ஃபர்டபிள் பாரதி!” புன்னகையுடன் சொன்ன ராஜீவ், “இந்த லொகேஷன் உங்களுக்கு தூரம் தான், பட் கண்டிப்பா யூ வில் நாட் ரெக்ரெட்!”
‘அவன் சொன்னது உண்மை தானே!’ அவளுக்குள் தோன்ற, “தேங்க் யூ!” முகம் மலர புன்னகையுடன் சொன்னாள் திவ்யா.
பார்வையை நிறைக்கும் பசுமை, மனதை மகிழ்த்தும் மழை, நாசியை முட்டும் மண்வாசனை, உடலை வருடும் வாடைக்காற்று, கையில் கதகதக்கும் காஃபி, கூடவே அருகினில் ராஜீவ்… நடந்த அனைத்தையுமே மறந்து… இப்போது அருகில் அனைத்துமே இதமாக இருந்தது திவ்யாவிற்கு!
———–
அன்றைய மாலை பொழுது தீரன் சென்னை வந்திருந்தான். அவனுடனும், சமீராவுடனும் படித்த தோழனுக்கு திருமணம். சமீராவை அழைத்துக்கொண்டு அங்கே செல்வதெனத் திட்டம்.
சமீரா தனது வீட்டிலிருந்து கிளம்பி வர, தெரு முனையில் காரில் காத்திருந்தான் தீரன். சைட் மிரர் வழியாக அவள் வருவது தெரிந்தவுடன் உள்ளிருந்து இறங்கினான்.
அழகான அடர் பச்சை நிறத்தில் மெல்லிய சரி வைத்த பனாரசி பட்டுப் புடவை உடுத்திக்கொண்டு, சின்ன பொட்டு, கொஞ்சம் மல்லி என மிதமான ஒப்பனையுடன் வந்துகொண்டிருந்தாள். தீரன் கேட்டுக்கொண்டதற்காக முடியை கருமை நிறத்திற்கு மாற்றி இருந்தாள்.
பொதுவாக எதுவும் சொல்லமாட்டான். ஆனால் திருமணத்திற்கு வரும் நட்புகள் இது பற்றி தேவையில்லாத பேச்சுக்கள் பேசுவார்கள், சமீராவை அது பாதிக்கும் என்று நினைத்துத்தான் சொன்னான்.
அவளையே பார்த்திருந்த திறனை நெருங்கிய சமீரா, “சாரி தீரா, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. பாரதி ரெண்டு சாரீ குடுத்தா… எது கட்டுறதுனு ஒரே குழப்பம்” குனிந்து தன்னை மறுபடியும் சரி செய்துகொண்ட சமீரா… அவனை பார்க்க, அவள் பேசியது எதுவுமே அவன் சிந்தையை அடையாமல், அவன் அவளை கண்களில், மனதில், தன் கருத்தினில் பதித்துக்கொண்டான்.
இனி எப்போது இவளை இப்படி பார்க்கமுடியுமா என்ற எண்ணம் தான்!
அவனின் பார்வை அவளை லேசாக முகம் மலரச்செய்தது. அவனை பார்த்தாள். முப்பது வயதைக் கடந்தவன் என்று சொன்னால் நம்புவது கடினமே! வெள்ளை சட்டை வெளிர் பழுப்பு நிற பேண்ட் கச்சிதமாக அவனுக்கு பொருந்தி இருந்தது.
“போதும் டா! கார் எடு” சன்னமான குரலில் சொன்ன சமீராவை புன்னகையுடன் பார்த்தபடியே வண்டிக்குள் ஏறி, காரை எடுத்தான்.
அவளையும், சாலையையும், நொடிக்கு ஒரு முறை பார்த்த தீரன், “சமி! இப்படியே எங்கயாவது ஓடிப்போய்டலாமா” குறும்புடன் கேட்க, கலகலவென சிரித்தாள் சமீரா.
அவளின் நறுமணமும், அவள் வைத்திருந்த பூவின் மனமும் காரை நிறைத்திருக்க, அவளின் சிரிப்பு அவன் இதயம் வரை சென்று மனதை நிறைத்தது. அதன் வெளிப்பாடாக, “ரொம்ப அழகா இருக்கடி” என்றான் ரசனையுடன்.
இதுபோல பேச்செல்லாம் கேட்டு நாளாகி இருந்தது சமீராவுக்கு. வெட்கம் லேசாக தலைதூக்க, அதை அவனுக்கு காட்டாமல், ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
அவனுக்கு கிடைக்கும் இதுபோன்ற நேரங்களில், அவளின் செயல்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் அடுத்த முறை அவளை பார்க்கும்வரை, அவனுக்கு மருந்தாக இருந்து கவலையை மறக்கச்செய்யும்.
அதனால், “சமி டெர்ன்” என்றான் முதலில் கெஞ்சலாக. அவள் மறுக்க, “டெர்ன் நவ் சமி!” என்றான் கடுப்புடன் கொஞ்சம் குரலை உயர்த்தி.
அவள் கேட்கவில்லை. “இப்போ நீ திரும்பல, அப்படியே பிரேக் போட்டு காரை நடு ரோட்ல நிறுத்திடுவேன்” அவன் மிரட்ட, அவனை முறைக்க முயன்று முடியாமல் புன்னகைத்த சமீரா, “பெரிய மௌனராகம் கார்த்திக்னு நினைப்பு” என்க…
“அந்த கேரக்டர் வேண்டாம் சமி! கடைசி வரைக்கும் சேரமாட்டாங்க” அவன் சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால் அதை கேட்ட சமீராவுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அதை பார்த்ததும், தன்னையே திட்டிக்கொண்ட தீரன்… அவளை முடிந்த வரை சமாதானம் செய்து கூட்டிச்சென்றான்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக நுழைந்தார்கள். அவள் கையை தன் கையுக்குள் வைத்துக்கொண்டு நடந்தான் தீரன். பார்க்கும் எவருமே ரசிக்கும் பொருத்தத்துடன் இருந்தனர் இருவரும்!
