Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 8

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 8:

வரவேற்பு நிகழ்விற்கு வந்தவுடன், தீரன் மற்றும் சமீராவை பார்த்த மாப்பிள்ளை மேடையிலிருந்தே மகிழ்ச்சியில் கையசைக்க, இருவரும் புன்னகையுடன் தலையசைத்து அதை ஏற்றுக்கொண்டார்கள். 

அவரவர் தங்கள் வேலையில் பரபரப்பாக இருக்க, யாருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டாம் என எண்ணிய இருவரும்… மேடையிலிருந்து சற்று தள்ளி ஒரு ஓரத்தில்… பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்தார்கள். 

ஆனால் வரவேற்புக்கு வந்திருந்த சிலரின் பார்வையை தீரனும் சமீராவும் தங்கள் புறம் திருப்பாமல் இல்லை. 

இருவரும் மற்றவர் கண்ணோடு கண்ணோக்கி பேசியது, அவ்வப்போது அவள் அவனை கிண்டல் செய்ய… அவன் முகத்தில் பூத்த அடக்கிய மென்னகை, அதை அவள் தலைசாய்த்து பார்த்த விதம். 

அவளை அவன் ரசித்துப் பேசுகையில் அவளின் முகமாற்றம், பேச்சுக்கிடையில் அவள் கையோடு தன் கைகளைக் கோர்த்த தீரன், அவள் விரல்களை லேசாக ஒவ்வொன்றாக பிடித்துவிட்டது என பார்ப்போரைப் பெருமூச்சு விட செய்தது. 

மற்றவரின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற நிச்சயமாக செய்யவில்லை. இருவரும் தங்களை மறந்து வேறு உலகத்தில் சஞ்சரித்திருந்தார்கள். அங்கே சுற்றத்தில் யாரும் இல்லை… இவர்கள் இருவர் மட்டுமே இருப்பதுபோல ஓர் உணர்வு. 

அப்போது சரியாக மாப்பிள்ளையின் அம்மா இருவர் பக்கத்தில் வந்தமர்ந்தார். சமீரா கையை விலக்கிக்கொள்ள நினைக்க, தீரன் சாதாரணமாக அவள் கையை பற்றிக்கொண்டு விடவே இல்லை.

வந்திருந்தவர், “உங்க ரெண்டுபேரையும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. பொண்ணு வீட்ல சென்னைல கல்யாணத்தை வச்சுட்டாங்க. இங்க வச்சுருக்கோமே, நீங்க வருவீங்களோ மாட்டிங்களோனு பையன் சொல்லிட்டே இருந்தான்” 

திருச்சியில் அவர் மகனுடன் சிறுவயதிலிருந்தே உடன் படித்திருந்தான் தீரன். மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்களில் தீரனும் ஒருவன். தீரன் சமீரா பற்றிய முழு விவரத்தையும் அவர் அறிந்திருந்தார். 

“இவன் கல்யாணத்தை மிஸ் பண்ணுவோமா ஆன்ட்டி” என்றான் தீரன். அவர் புன்னகையுடன் சமீராவை பார்த்தார். பின், “லட்சணமா இருக்கமா” என்றார். 

சமீரா புன்னகைத்தாள். அதற்குள் அவர்களின் நண்பர்கள் பட்டாளம் வந்துவிட்டது. தீரனுக்கு தான் பக்கென்றது. எங்கே எவரேனும் மனம் நோகும்படி பேசிவிடுவார்களோ என்று. தனக்காக இல்லை, அது சமீராவை பாதித்து விடக்கூடாது என எண்ணினான். 

ஆனால் அவர்கள் மிகவும் கண்ணியமாக இருவருடனும் பேசினார்கள். கூடவே இருவரையும் கிண்டல் கேலி செய்து அன்றைய பொழுதை மிகவும் இனிமையாக்கினர். 

பரிசு வழங்க மேடை ஏறியபோது, சமீரா மணப்பெண்ணுடன் நிற்க சென்றவளை, தீரன் தன்னுடனே நிறுத்திக்கொண்டான். அவள் தோளோடு கைபோட்டபடி, அவள் உயரத்திற்கு தலைசாய்த்து அவன் நிற்க, சமீராவுக்கு கண்கள் எவ்வளவு முயன்றும் முடியாமல் கலங்கியது. 

இரவு உணவு வரை அங்கேயே முடித்துக்கொண்டு இருவரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். 

அன்றைய தினம் அவ்வளவு அழகாக இருவருக்கும் கழிந்தது. நேரம் ஆகிவிட்டதால் இரவில் பயணம் வேண்டாம் என சமீரா மறுக்க, தீரன் அங்கேயே ஒரு ஹோட்டலில் தங்கிக்கொள்ள முடிவெடுத்தான். 

சமீராவை அவள் வீட்டில் விடுவதற்கு மனமே இல்லை. காரில் இருவரிடத்திலும் கனத்த மௌனம். முன்பு காரில் இருந்த அந்த மகிழ்ச்சி இப்போது சுத்தமாக இல்லை. எப்போதும் போல பிரிவால் ஏற்படும் பாரம் மனதை அழுத்தியது.

இறுகி இருந்த தீரனின் முகம் சமீரா வதைக்க, தவிப்பான கலக்கத்துடன் இருந்த அவளின் முகம் அவனையும் தாக்கியது. 

எதுவும் பேசாமல் அவள் இறங்க முற்படும்போது, அவளை இறுக அணைத்துக்கொண்டான் தீரன். இவ்வளவு நேரம் கட்டுப்படுத்திய அழுகை வெளியேறியது சமீராவுக்கு. 

அவளை அவன் தடுக்கவில்லை. அவன் கண்களிலும் கண்ணீர். அவனின் அணைப்பிலிருந்த சமீரா, “அடுத்து எப்போ வருவ தீரா?” கண்ணீரின் ஊடே கேட்க… என்ன பதில் சொல்வது என தெரியவில்லை அவனுக்கு. 

அவனின் மௌனத்தைக் கண்டு நிமிர்ந்த சமீரா, அவன் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்து படபடப்புடன் தன்னை மீட்டுக்கொண்டு, “தீரா இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரி ஆகிடும்” என்றாள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, அவனை தேற்றும் விதமாக. 

கசந்த புன்னகையை உதிர்த்த தீரன், “நேரமாச்சு சமி! பக்கத்துல இருக்கவங்க ஏதாவது நினைப்பாங்க. நீ உள்ள போ” என்றான். 

மனமேயில்லாமல் அவனை பார்த்தவண்ணம் உள்ளே சென்றாள் சமீரா. அவனும் அங்கிருந்து போக விரும்பாதவனாய் அவள் வீட்டிலிருந்து சற்று தள்ளி காரிலேயே இருந்தான். 

கொஞ்ச நேரம் கழித்து, அவளை அழைத்த தீரன், எப்போதும் கேட்கும் கேள்வியை கேட்டான். “சமி, ஒரு டைம் போய் கிரில், டோர் எல்லாம் லாக் பண்ணிருக்கியானு பார்த்துடு” என்றான்.

வந்தவுடன் அவனின் நினைப்பிலேயே இருந்த சமீரா, அவன் சொன்ன பின் தான் கதவை தாழிட்டாள். 

பின், “நீ ஹோட்டலுக்கு போயிட்டு இருக்கியா தீரா? போயிட்டு கால் பண்றயா?”  என்று கேட்டவுடன் தான் அங்கிருந்தே அவன் கிளம்பினான். 

அதற்குள் சமீரா தன்னை சுத்தமாகிக்கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். அவனும் சிறிது நேரத்திற்கு பின் அழைத்தான். இருவரும் பேசினார்கள். எவ்வளவு நேரம் என்பதெல்லாம் கடந்து பேசினார்கள். 

சில நாட்களாகவே அவனிடம் கேட்கும் அதே கேள்வியைக் கேட்டாள் சமீரா. அவளுடன் வேலை பார்க்கும் பெண், ஏதேதோ சொல்லி சமீராவை கலங்க வைத்திருந்தாள். 

“தீரா… அவங்க சொன்ன மாதிரி நமக்கு குழந்த பிறக்க கஷ்டமாகிடுமா? வயசு ஆகிட்டே போனா சிரமம் சொல்றாங்க” மன அழுத்தத்தின் வெளிப்பாடாக, கலக்கத்துடன் கேட்டாள்.

‘குழந்தைக்கு முன் அவர்கள் முதலில் வாழ்க்கையில் சேரவேண்டுமே!’ என்ற எண்ணம் தீரனுக்கு வர, சமீரா கேட்டதற்கு நிஜமாகவே சிரிப்பதா நொந்துகொள்வதா என அவனுக்கு தெரியவில்லை. 

ஆனால் அவளின் நிலை நிஜமாகவே பாவமாக தான் இருந்தது. உடன் வேலை பார்ப்பவள், சமீராவிடம்… ‘முப்பது வயது ஆகிவிட்டது. குழந்தை எல்லாம் இருபதுகளிலேயே பிறந்தால் தான், இல்லையேல் மிகவும் சிரமம்’ என சொல்லி சொல்லி, அதை கேட்ட சமீரா மனதளவில் தளர்ந்துவிட்டாள். 

“சமி! சமி… அதெல்லாம் நடக்கும்போது கண்டிப்பா நடக்கும்டி. கண்டதையும் யோசிச்சு வருத்தப்படாத” என்றான். 

“ப்ச்!” சலித்துக்கொண்ட சமீரா, “என்னமோ போ டா. எதுவுமே பிடிக்கல தீரா. நீ அங்க நான் இங்க…. இப்படி தனியா இருக்கிறது பிடிக்கவே இல்லை”    

அதை கேட்டவுடன் சுரீரென்றது தீரனுக்கு. அவளின் தனிமைக்கு தானும் ஒரு காரணம் என்பது அவனுக்கு எப்போதுமே ஒருவித குற்ற உணர்ச்சியைத் தரும். 

உடனே, “நீ லேப்டாப்ல வா” என்ற தீரன் சிறிது நேரம் கழித்து அவளை வீடியோ காலில் அழைத்தான். 

கட்டிலில் இருந்தபடியே அவள் எடுத்து பேச, அவனும் படுத்திருந்தான். அவனை பார்த்தவுடன், அனைத்துமே அவளுக்கு மறந்துவிட்டது. 

அவனை பார்த்தபடி அவள் இருக்க, அவளை ரசித்து பார்த்தான் தீரன். 

“போதும் தீரா… உனக்கு இதெல்லாம் செட் ஆகல. நீ இப்படி பார்க்கறப்பெல்லாம், நம்ம சென்டர் டேஸ் தான் ஞாபகம் வரும். மொதல்ல எப்போபாத்தாலும் உர்ருனு இருப்பயே!” அவள் சொன்னவுடன் அவன் சிரித்தான். 

இருவரும் கடந்த கால நினைவுகளில் தங்களைத் தொலைத்தார்கள். 

அந்த பயிற்சி நிலையத்தில் சமீராவை தீரனுடன் வைத்து சமீராவின் சகாக்கள் அவளை கிண்டல் செய்த சமயங்களில், தீரனுக்கு கோபமாக வந்தது. 

அப்படி ஒரு முறை அவர்கள் கிண்டல் செய்தபோது, அவ்விடத்திற்குச் சென்றான் தீரன். 

சமீராவிடம், “அவங்க இப்படி பேசறாங்கன்னா, நியாயப்படி நீ தான் அவங்கள தடுக்கணும். ஆனா நீ… நீயெல்லாம் என்ன பொண்ணோ” என்று அவன் முடிக்கும்முன், “கொஞ்சம் நிறுத்துறீங்களா!” என்றிருந்தாள் சமீரா. 

அவன் கோபத்துடன் அவளை முறைக்க, அவளும் முறைத்து, “அவங்க சும்மா தான் கிண்டல் பண்றாங்கன்னு எனக்கு தெரியும். மோரோவர் இதுவர அவங்க என்னை தான் கிண்டல் பண்ணாங்களே தவிர உங்கள இல்ல!” என்றதும் தான் அவனுக்கும் புரிந்தது, அவளைத்தானே அவர்கள் கிண்டல் செய்தார்கள், தன்னை இல்லையே என்று.  

“அப்புறம் நீங்க அவ்ளோலாம் ஒர்த் இல்ல. அதுனால இதை கிண்டலோட நிப்பாட்டிகணும் எனக்கு தெரியும்” என்றாள் வெடுக்கென. 

அவள் பேசிய விதம் கடுப்பாக வந்தது தீரனுக்கு. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பக்கத்திலிருந்த தோழர்களிடம் சமீரா “இனி இந்த கேரக்ட்டர் கூட என்னை கிண்டல் பண்ணி, என்னை டீக்ரேட் பண்ணாதீங்க” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். 

தீரனுக்கு கோபம் தலைக்கேறியது. அவள் ‘ஒர்த் இல்லை’ என்று சொன்னது கோபமா இல்லை, ‘டீக்ரேட் பண்ணாதீங்க’ என்று சொன்னது கோபமா, இல்லை இப்படி எடுத்தெறிந்து பேசுகிறாளே என்பதாலா என தெரியவில்லை. 

ஆனால் சமீரா மீது கோபம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அன்று முழுவதும் அவளையே தான் நினைத்து கரித்துக் கொட்டிக்கொண்டிருந்தான். 

அடுத்தநாள் சென்டருக்கு அவன் வந்தவுடன், என்ட்ரி நோட்புக்கில் பெயர் எழுத அவன் எடுத்தபோது, அதில் சமீராவின் பெயர் ‘சமீரா தர்மலிங்கம்’ முதலில் இருக்க, கோபத்துடனே அதை பார்த்தவண்ணம் தன் பெயரை எழுதினான். 

அன்று யாருமே தீரனை இல்லை இல்லை… சமீராவை கிண்டல் செய்யவில்லை. முகத்தை உர்ரென்ற வைத்துக்கொண்டிருந்தான் தீரன். 

அவனை பார்க்கும் தருணம் அமையும்போதெல்லாம் அவளும் முறைத்தாள். ஆனால் அவனை போல் மனதினில் திட்டவெல்லாம் இல்லை. 

அன்று அனைவரும் பயிற்சி முடித்து, கிளம்பும் சமயம், அந்த சென்டரின் நடுப்பகுதியில் சமீரா கையைத்தட்டி அனைவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினாள். 

“எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க” என்றாள். 

அனைவரும் அவள் சொன்னவுடன் அப்படியே நிற்க, தீரன் மட்டும் ‘நீ சொல்லி நான் கேட்கவேண்டுமா’ என்பதுபோல உதட்டைச் சுளித்து வெளியே கதவின் பக்கம் அவளைப் பார்த்தபடி செல்ல, அவனின் செயலை பார்த்த சமீரா கோபத்துடன் ‘இடியட்!’ என பற்களைக் கடித்து முணுமுணுத்தாள். 

அவள் உதட்டசைவு அவனுக்கும் புரிந்தது. அதை சட்டை செய்யாமல், வெளியில் தன் நண்பனுக்காக அவன் நிற்க, உள்ளே பேசுவது கேட்டது. 

“நம்ம சென்டர் ஹெல்ப் அக்கா உங்க எல்லாருக்கும் தெரியும்ல…” என்றவள் அங்கு நின்றிருந்த அந்த பெண்மணியைச் சுட்டி காட்டினாள்.  

“அவங்க ஹஸ்பண்ட்… அந்த இடியட் இருக்கானே” என்றபோது வெளியே கேட்டுக்கொண்டிருந்த தீரன் தலையில் அடித்துக்கொண்டான். 

அந்த பெண்மணிக்கே வயது நாற்பது இருக்கும், அவள் கணவன் என்றால் நிச்சயமாக வயது இருக்கும். அந்த மனிதனும் இடியட் தானா? என்ற எண்ணம். 

சமீரா தொடர்ந்தாள். “அவன்… வீட்ல நமக்காக ஒரு குடும்பம் இருக்கேனு யோசிக்காம… குடிச்சிட்டு போய் தண்ணிலாரில விழுந்து செத்துட்டான். அவன்னால இப்போ இவங்க நிலைமை தான் பாவமாகிடுச்சு”

இதுவரை ஏனோதானோ எனக் கேட்டுக்கொண்டிருந்த தீரனின் கவனம் இப்போது முழுமையாக உள்ளே பேசுவதை கேட்பதில் பதிந்தது. 

சமீரா, “பையன் டவெல்த் முடிச்சிட்டான். ஒரு பொண்ணு டென்த், இன்னொன்னு எய்த். பையன மேல படிக்க வைக்க வசதி இல்லை. இவங்க சம்பளம் வீட்டுக்கே சரியா இருக்கு. நாம தான் அவங்க குடும்பத்துக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்”

கொஞ்சம் நிறுத்திய சமீரா, பின் “இவ்ளோ தான் தரணும்னு இல்ல… ஒரு அம்பதோ இல்லை ஐநூறோ இல்லை ஐய்யாயிரம்னா கூட ஓகே!” குறும்பாகப் புன்னகைத்தவள்,  “உங்களால எவ்ளோ முடியுமோ குடுங்க. கடனா குடுத்தா கூட சரினு தான் சொன்னாங்க. 

சோ, நாளைக்கு நம்மளால முடிஞ்சது அவங்களுக்கு தருவோமே” என்று அவள் சொல்லி முடிக்க, தீரனுள் முதல் முறை சமீராவின் மேல் இருந்த எண்ணம் கொஞ்சமாக மாறியது. இதுவரை இருந்த உர்ரென்ற முகத்தில் புன்னகை அரும்பியது. 

அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். 

அடுத்த ஓரிரு நாட்கள் கழித்து, சமீரா தீரன் முன் வந்து நின்றாள். கைகளைக் கட்டிக்கொண்டு இப்போதென்ன என்பதுபோல அவன் பார்க்க… “தேங்க்ஸ்” என்றாள் அவள். 

பின், “உங்க வீட்ல சொல்லி அந்த அக்காக்கு பேங்க் லோன் வாங்கித்தர உதவி பண்ணிருக்கீங்க… அந்த பையன் நல்ல காலேஜ்ல சேர சீட் கிடைக்க வழி பண்ணிருக்கீங்க. அதுக்கு தான் தேங்க்ஸ்” என்றவள் அவனைப் போலவே உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு கிளம்ப திரும்பினாள்.

அந்த உதவிசெய்யும் பெண் பற்றி அன்று சமீரா சொன்னவுடன், சமீரா மீது நல்லெண்ணம் வந்தது ஒரு புறம் என்றால், அந்த பெண்மணியை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது தீரனுக்கு. தன் அம்மா அப்பா இருவரும் வங்கியில் வேலை பார்ப்பதால், அவர்களிடம் இது பற்றி சொன்னான். 

அதற்கு அவன் அம்மா மீனாக்ஷி, “கலெக்டர போய் பார்த்து, அந்த பையன மனு குடுக்க சொல்லு தீரா. எந்த காலேஜ்ல படிக்கணும், அப்புறம் என் பேங்க் பேரு போட்டு லோன் வேணும்ன்னு மனு தர சொல்லு. படிப்புக்குன்னா சீக்கிரம் லோன் அப்ரூவல் குடுப்பாங்க. அதை எடுத்துட்டு வந்து எங்க மேனேஜரை பார்க்க சொல்லு. நானும் இது பத்தி சொல்லி வைக்கிறேன்” என்றார். 

அதை அப்படியே அந்த பெண்மணியிடம் சொன்னான் தீரன். அவனுக்கு நன்றி சொன்ன அப்பெண், அப்போதுதான் சமீராவை பற்றியும் சொன்னார். 

“அந்த பொண்ணு தான் காலைல சாயிங்காலம்னு என் பைனுக்கு எல்லாமே சொல்லி குடுத்துச்சு. அதுனால தான் என் பையன் ரொம்ப நல்ல மார்க் எடுத்திருக்கான். இப்போ அந்த பொண்ணுனால தான் நீங்க உதவி பண்ணிருக்கீங்க” 

அவர் சொன்னபோது நிஜமாகவே சமீரா மீது மிகுந்த நல்லெண்ணம் தீரனுக்குள் உண்டானது. நல்லெண்ணம் மட்டும் தான் என அவன் நினைத்திருந்தான். ஆனால் அதற்கு மேலும் என்று அவனுக்கு தெரியவில்லை.  

அவனிடம் நன்றி சொல்லிவிட்டு திரும்பிய சமீராவிடம் தீரன்…“ஓய் நில்லு! தேங்க்ஸ்லாம் வேண்டாம். அதுக்கு பதிலா காஸ்ட் அகௌண்டிங்ல எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. சிலது புரியவே மாட்டேங்குது” என்றான். புன்னகையுடன் அவனை திரும்பிப்பார்த்தாள் சமீரா!

வீடியோ காலில் சமீராவுடன் கடந்த கால நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்த தீரன், அவள் பேசியபடியே சிறிது நேரத்தில் உறங்கியதும், அவளின் வாடிய முகத்தைப் பார்த்து அவன் கண்கள் கலங்கியது!

———

திவ்யா புது கிளைக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. 

அன்று ராஜீவ்வுடன் காஃபி குடிப்பதற்கு அந்த அழகான இடத்திற்கு சென்று திரும்பியபோது திவ்யாவினுள் இருந்த வருத்தம் கொஞ்சம் மறந்திருந்தது. அந்த கிளை தூரம் என்ற எண்ணம் கூட கொஞ்சம் மறைந்திருந்தது. 

கூடவே ராஜீவ், ‘தன் ப்ராஜெக்ட் அவளின் கெரியருக்கு எப்படியெல்லாம் உதவும்’ என்று சொன்னான். உண்மையாகவே அவன் வேலைசெய்யும் அந்த ப்ராஜெக்டில் திவ்யா நிறைய கற்றுக்கொள்ளலாம். அதை அவன் சொன்னபோது அவளுக்கும் புரிந்தது.

இதெல்லாம் அவன் சொல்லவேண்டும் என்ற அவசியமே இல்லை என்பதும் அவளுக்கு புரிந்தது. அவன் சொல்கிறான் என்றால், அது தன் நலனிற்காக என்று நினைத்தாள். அவனின் ஒவ்வொரு அணுகுமுறையும் அவளை ஈர்த்தது. ரசிக்க வைத்தது. 

இன்று வெள்ளிக்கிழமை… அவள் முதலில் வந்திருந்தாள். ராஜீவ் கொஞ்ச நேரம் கழித்து வந்தான். 

வந்தவன் திவ்யாவை பார்த்ததும், அவன் கண்கள் அவளிடம் இருந்து விலக மறுத்தது. கொஞ்சம் அடர் நீல நிறமும், மஞ்சள் கலந்த பச்சை பார்டர் வைத்த காட்டன் புடவை கட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவளுக்கு அழகாக, நேர்த்தியாக இருந்தது. 

அவனை பார்த்தவுடன், “குட் மார்னிங்!” என்றாள். அவனும் புன்னகையுடன் “மார்னிங் பாரதி!” என்றான். கை மடித்துவிடப்பட்ட கேசுவல் கருப்பு நிற ஷர்ட் மற்றும் ஜீன் உடையில், அவனும் பார்க்க வசீகரமாகவே இருந்தான்.

அப்போது அவர்களுடன் வேலை பார்க்கும் பெண், “திவ்யா என்ன ஸ்பெஷல்? வெள்ளிக்கிழமைனு சாரீல வந்திருக்கயா?” என்று கேட்டபடி அவளிடம் வந்தாள். 

“ஸ்பெஷல்லாம் இல்ல. அடிக்கடி சாரீ கட்டுவேன். எனக்கு பிடிக்கும்” என்றாள். அப்பெண்ணிற்கு அவள் பதில் சொல்ல, இதை ராஜீவ் மனதில் குறித்துக்கொண்டான். ‘அடுத்து அவள் புடவையில் எப்போது?!’ என்ற கேள்வி அவனையும் மீறி மனதில் எழுந்தது. சிரித்தான்.

அப்பெண், “கலர் காம்போ சூப்பர்! எங்க எடுத்தது?” சில பெண்களுக்கே உரிய கேள்விகளை கேட்டாள். திவ்யாவும் பதில் தந்தவண்ணம் வேலையில் கவனம் செலுத்தினாள். 

ராஜீவ் திவ்யாவிடம் வேலை குறித்து அவ்வபோது பேசினாலும், அவளின் இந்த தோற்றம் அவனை கவரவே செய்தது.

மதிய நேரம் ஆக, உணவு சாப்பிடுவதற்கு ராஜீவ்வை அழைக்க வினய் வந்தான். அங்கே திவ்யாவை பார்த்ததும், அவளையும் அழைத்தான் வினய். ஓரக்கண்ணால் ராஜீவ்வை கிண்டல் செய்வதுபோல பார்த்துவைத்தான். 

வந்த முதல் நாள் நேர்காணலில் சந்தித்த கவினுடன் சாப்பிட்டாள். அடுத்த நாள் ராஜீவ் ஏதோ அழைப்பிலிருந்த போது… திவ்யா தனியாக சாப்பிட சென்றுவிட்டாள். நடுவில் கவின் அவளுடன் சேர்ந்துகொண்டான். 

ஹரிணியின் உணவு நேரம் மாறியிருக்க, வேறு ஒரு குழுவுடன் உணவு சாப்பிட பழகியிருந்தாள் ஹரிணி. அவர்களுடன் செல்வதற்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது திவ்யாவுக்கு. 

இப்போது ராஜீவ், வினய்  திவ்யாவின் பதிலுக்காக அவளை பார்த்திருக்க, முதலில் மறுத்தாள். பின் ராஜீவ்வும் அழைக்க, தயக்கத்துடன் சரி என்றாள். ராஜீவ் முகத்தில் புன்னகை. வினய் யாரும் உணராவண்ணம் ராஜீவ்வை கிள்ளினான்! 

‘இவன் வேறு எதற்கெடுத்தாலும் கிள்ளிக்கொண்டு!’ என்பதுபோல முறைத்தான் ராஜீவ்! 

மூவரும் கிளம்ப, கூடவே இன்னொரு ப்ராஜெக்ட் லீடரான ஜேசன் அவர்களுடன் சேர்ந்துகொண்டான். 

ஜேசன் உணவு வாங்க சென்றிருக்க, திவ்யா செல்லும்முன்… ராஜீவ், “பாரதி… சப்பாத்தி மட்டும் வாங்கிக்கோங்க. கிரேவி நாங்க எடுத்துட்டு வந்திருக்கோம்” என்றான். 

“இல்ல… பரவால்ல… இருக்கட்டும்” திவ்யா தயங்கி மறுக்கும்போது, வினய்… “பயப்படாதீங்க திவ்யா… ஆர்கே சமைச்சதை விட நான் செய்தது நல்லா இருக்கும்” என்றான். இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி இருக்கிறார்கள். 

ராஜீவ், ‘ஏன்டா’ என்பதுபோல பார்த்தான்! 

இருவரையும் பார்த்து திவ்யா சிரித்தாள். பின் அவள் உணவு வாங்க செல்ல, ஜேசன் தன் காதலி ஷீலாவுடன் வந்திருந்தான். இருவரும் ஒன்றாக உட்கார்ந்துகொண்டனர். 

வினய்யும் ராஜீவ்வும் மற்றொரு புறம் இருக்க, ராஜீவ் பக்கத்தில் ஒரே ஒரு இடம் இருந்தது. 

திவ்யா வரவும், ஒரு நொடி தயங்கினாள். உள்ளுக்குள் ஒருவித இன்ப படபடப்பு. எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராஜீவ் அருகினில் அமர்ந்துகொள்ள, ஜேசன் மற்றும் ஷீலாவுக்கு திவ்யாவை அறிமுகப்படுத்தினான் ராஜீவ். 

ஷீலாவும் திவ்யாவின் புடவையை பற்றி தான் பேசினாள். “நெக்ஸ்ட் வீக் நான் சாரீ எடுத்துட்டு வரேன். எனக்கு கட்டிவிடு திவ்யா” என்றதும், ஜேசன்… “எதுக்கு இந்த விபரீத ஆசை ஷீலா உனக்கு” என்று கிண்டல் செய்தான். 

திவ்யா உடனே, “சாரீ யார் கட்டினாலும் செட் ஆகும். ஷீலாவுக்கு இன்னமும் சூப்பரா இருக்கும். நான் உங்களுக்கு கட்டிவிடறேன்” என்று ஷீலாவுக்காக பேசினாள். அவளின் அமைதியான பதில் ராஜீவ்வுக்குள் இதமான உணர்வையும், புன்னகையையும் தந்தது. 

இவர்கள் பேசும் நேரத்தில் வினய் உணவை எடுத்து வைத்திருக்க, திவ்யாவுக்கு ராஜீவ் எடுத்து அவள் தட்டில் வைத்தான். 

“இது எக் புர்ஜி, இது வெஜ் கிரேவி” என்றவன் சட்டென திரும்பி அவளை பார்த்து… “எக் சாப்பிடுவீங்க தானே” என்று கேட்க… இவ்வளவு நெருக்கத்தில் இருவரும் மற்றவரை பார்த்ததில்லை. வயிற்றில் பசியை மீறி, ஒருவித பரவச உணர்வு. 

அவன் கண்ணாடி, மற்றும் அவன் மனதை பிரதிபலிக்கும் கண்கள் அவளை எப்போதும் போல ஏதோ செய்ய, தலையை மட்டும் மந்திரித்துவிட்டது போல அசைத்தாள். அவனும் அவளை பார்த்த நொடி, அவளுள் மூழ்கி வெளிவந்ததுபோல பார்த்தான். 

இதனைத்தும் ஒருநொடி தான். தங்களை மீட்டுக்கொண்டு சகஜமாக இருக்க முற்பட்டனர். 

வினய் எட்டிப்பார்த்து… “திவ்யா சரியா சொல்லுங்க… நான் செய்தது எது, ஆர்கே செய்தது எதுன்னு?” என்றதும் திவ்யா விழித்தாள். ராஜீவ்வும் அவளை பார்க்க… ஜேசன், “டேய் இதென்ன இன்டெர்வியூ பேனலா? அவங்கள சாப்பிட விடுங்க” என்றான். 

“அதெல்லாம் முடியாது… சொல்லித்தான் ஆகணும்” விடாமல் கேட்டான் வினய். 

ராஜீவ் முட்டையை பற்றி குறிப்பிட்டு கேட்டது, அவன் கண்களில் தெரிந்த அந்த ஆர்வம், எதிர்பார்ப்பு, அவளைச் சரியாக சொல்ல வைத்தது. 

“நீங்க செய்தது வெஜ் கிரேவி… சரியா?” வினயிடம் கேட்டாள்.

“வாவ்!” என்ற வினய், ராஜீவ்விடம்… “சொன்னேன்ல ஆர்கே! நான் செய்தது நல்லா இருக்கு. அதை வச்சு தான் சரியா சொல்லிருக்காங்க” என பெருமைப்பட்டுக்கொண்டான். 

“அச்சோ அப்படி இல்ல” என திவ்யா அவசரமாக ராஜீவ்வை பார்க்க, ‘உன் படபடப்பு அனாவசியம்’ என்பதுபோல சிரித்தான். காந்தப் புன்னகை போல தெரிந்தது திவ்யாவுக்கு. அது அவளை அப்படி ஈர்த்தது.   

ராஜீவ்வுக்கு திவ்யா கண்டுபிடித்த விதம் ஓரளவிற்கு புரிய, அதை எண்ணித்தான் சிரித்தான். 

ஷீலா உடனே, “கர்த்தரே! போதும்… அவங்கள விடு. இனி நீங்க செய்தீங்கனு சொன்னாலே பத்தடி தள்ளி போய் உட்கார்ந்துக்குவாங்க” என தலையில் அடித்துக்கொள்ள, திவ்யா நன்றாகவே சிரித்தாள். தவறாமல் அது ராஜீவ்வினுள் சென்று பதிந்தது.

அனைவரும் அவளிடம் நன்றாக பேசியதுபோல உணர்ந்தாள். ராஜீவ் கேட்டுக் கேட்டு அவளுக்கு கொஞ்சம் அதிகமாகவே வைத்து சாப்பிடச்சொன்னேன். அவனின் செயல்கள் அனைத்தும் அவள் அறியாமலேயே மனதினுள் ஆணித்தமனாக பதிய ஆரம்பித்தது. 

உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் வேலையில் மூழ்கியிருக்க, அவர்களுடன் வேலைபார்க்கும் ஒருவன் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்தான். வந்தவன் சாக்லேட் எடுத்து வந்திருந்தான்.

ராஜீவ்வுக்கு எப்போதும் போல அவனின் கிளைன்ட் தனியாக சாக்லேட் கொடுத்திருந்தார். அந்த ஐம்பத்தி ஐந்து வயது அம்மையாருக்கு ராஜீவ் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் அங்கே சென்றிருந்த போது, சில முக்கியமான நேரங்களில் அவருக்கு உதவி செய்திருக்கிறான். 

அனைவரும் சாக்லெட் எடுத்துச்செல்ல, திவ்யா சென்றபோது சில காலி கவர்கள் தான் இருந்தது. அதில் ஒன்றை பார்த்து லேசான ஏமாற்றம் அவளுள். வேறு சிலதை எடுத்துக்கொண்டு தன்னிடத்தில் வந்தமர… ராஜீவ் அவளிடம் வந்தான். 

வந்தவன் கையை நீட்டி… “வாண்ட் ஸம் கிஸ்ஸஸ்?” என்றதும், அவள் “வாட்?” என அவன் முகத்தைப் பார்த்து மிரண்டு விழித்தாள். கண்கள் படபடத்தது. 

அவளின் பதட்டம் மற்றும் அதற்கான காரணம் நொடியில் அவனுக்கு புரிந்துபோக… “நோ நோ” என்று பதறி… தன் கையை நன்றாக அவள் முன் காட்டினான். 

அவன் கையில்… அழகாக வெள்ளி மற்றும் தங்க நிற காகிதத்தில் சுற்றி இருந்த, பூச்சட்டி பட்டாசு போல இருக்கும் ‘ஹெர்ஷிஸ் கிஸ்ஸஸ்’ சாக்லேட்! அவளுக்கு மிகவும் பிடித்தது! நேர்காணலின் போது, அவன் அவளை எடுத்துக்கொள்ளச் சொன்னபோது அவள் எடுத்தது!

அவளின் கூற்றை எண்ணி அவன் சிரிக்க, தன் நினைப்பை எண்ணி அவளும் லேசான நாணத்துடன் புன்னகைத்தாள்! 

2 thoughts on “உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 8

  • Wow akka 😍 RK Barathi pair super
    Theera samee flashback perisa irukum polave…… Pavi epo varuva 🤔

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved