உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 11
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 11:
அன்று கீர்த்தி தன் திருமணத்திற்கு பணம் தரவில்லை என சொல்லி பேசியபோது நிஜமாகவே அவனுக்கு உள்ளுக்குள் வலித்தது. அவளின் திருமண சமயத்தில்… ஜானகி சில பெண்களுடன் சேர்ந்து சீட்டு நடத்தி அதில் ஏமாந்துபோக, வீட்டில் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என எண்ணி ராஜீவ்விடம் கேட்டார்.
அவனிடம் கேட்டால் மறுக்கமாட்டான், கூடவே யாரிடமும் சொல்லாதே என்றாலும் சொல்லமாட்டான் என அவருக்கு நன்றாகவே தெரியும். எதை சொல்லி அவனை உணர்ச்சி வசப்படுத்தி வாங்க முடியும் என்பதும் தெரியும்.
அப்போது ராஜீவ் வேலையில் குறைந்த சம்பளமே பெற்றுவந்தான். ஜானகி கேட்டதும், லோன் எடுத்து அவருக்குப் பணம் தந்திருக்க, கீர்த்தியின் திருமணத்திற்கு அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கீர்த்தி இதை சொல்லி காட்டி அவனை காயப்படுத்திய போதெல்லாம், பொதுவில் ஜானகி வாயை திறந்ததில்லை. ஆனால் மகளிடம் தனியாக சொன்னார்… ராஜீவ் தர முடியாததற்கான காரணத்தை.
அவர் சொன்னது கீர்த்திக்கு வசதியாகிப்போனது. எப்போதெல்லாம் பணம் தேவையோ, ராஜீவ்வை நாடுவாள். தன் அம்மாவை போலவே யாரிடமும் சொல்லவேண்டாம் என அவனிடம் சொல்லிவிடுவாள்.
ராஜீவ் மறுக்காமல் தந்ததற்கும், தருவதற்கும் அவனிடம் இருக்கும் காரணம் பெரியது என்பதை உபயோகித்துக்கொண்டாள்.
தன்னால் சம்பாதிக்க முடியவில்லை என்பதைச் சொல்லி, தொழில் செய்கிறேன் என்ற பெயரில், பிரமிட் ஸ்கீம், கடை வைத்து… சம்பாதிக்கப் போகிறேன் என சில தொழில்களை செய்து… அதில் நஷ்டம் ஆன போது, வீட்டில் யாருக்கும் தெரியாமல் ராஜீவ்விடம் கீர்த்தி கேட்டிருக்கிறாள்.
அவனும் லட்சத்தில் பணம் தந்திருக்கிறான். திலீப்பிடம் கூட ராஜீவ் சொன்னதில்லை. வீட்டில் முதலுக்கு பாதிப்பில்லை என சொல்லி கீர்த்தி ஏமாற்றிவிட்டாள்.
இப்போது கூட வீட்டைப் பற்றி பேசியதும், மறுக்காமல் எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டான் ராஜீவ். திலீப்புக்கு தான் மனமே கேட்கவில்லை. அன்று மாலை ராஜீவ்விடம் தனியாக பேசினான்.
“ஏன் ஜீவா, அவ இன்டென்க்ஷன் தெரிஞ்சும் ஏன் சரினு சொன்ன? நீ எதுவும் இதை பத்தி இனி பேசாத. அவளை எப்படி ஹேண்டில் பண்ணணுமோ நான் பண்றேன். நீ எதுக்கு உன் உரிமையை விட்டுக்கொடுக்கணும்?” என மனம் தாளாமல் சொன்னான் திலீப்.
“பரவால்ல திலீ. நம்ம கீர்த்தி தானே! அவளுக்கு இல்லாததா… இதை இன்னும் பேசி பெரிசு பண்ண வேண்டாம் திலீ. கல்யாண பேச்சு அப்புறம் இதுபோல பிரச்சனைக்கு யோசிச்சு தான் நான் வர்றதயே வருஷத்துக்கு ரெண்டு தடவைனு குறைச்சிட்டேன்” உணர்ச்சிகள் துடைத்த குரலில் சொன்னான் ராஜீவ்.
“நீ ஏன் ஜீவா இதெல்லாம் யோசிச்சிட்டு வராம இருக்க? இப்போதான் எனக்கு புரியவே புரிது… ஏன் உன் அண்ணி தங்கச்சியை உனக்கு பேசறதுக்கு அவ்ளோ ஆர்வம் காட்டினானு” என்றவன்…
“ஆமா கல்யாணம்னு சொன்னதும் தான் ஞாபகமே வருது… நீ ஏன் உனக்கு பெரிய பிரச்சனை இருக்கிற மாதிரி நினைச்சுக்கற? சின்ன வயசுல உனக்கு ப்ராப்லம் இருந்ததுதான்… ஆனா இப்போ இல்ல தானே டா! சும்மா எல்லாத்துகிட்டயும் இதை சொல்லிட்டு இருக்காத… சொல்லிட்டேன்”
ராஜீவ்வை பாசத்தோடு எச்சரித்து மிரட்டிய திலீப் மட்டும் தான் சிறுவயதிலிருந்தே ராஜீவ்வுக்கு துணையாய் இருப்பவன்.
திலீப் மகன் தருண் பட்டம் விடுவதற்கு உதவி கேட்க, திலீப் மற்றும் ராஜீவ் அவனுடன் நின்றிருந்தார்கள்.
அப்போது குடிக்க டீயுடன் தின்பண்டங்களையும் எடுத்துவந்திருந்தாள் பவித்ரா. வந்தவளிடம் வாங்கிய ராஜீவ்… “அண்ணி… அந்த டிஷ்ல தயிர் ஆட் பண்ணவுடனே டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்ததுனு என் ஃபிரெண்ட் சொன்னாங்க” என்றான்.
“சூப்பர் ஜீவா. தயிர் சேர்க்கலாம்… இல்ல, காய்கறி, உருளைக்கிழங்கை வெட்டி போட்டா கூட உப்போ காரமோ அதிகமா இருந்தா குறையும்” என்றாள் புன்னகையுடன்.
சொல்லிவிட்டு அவள் திரும்ப, அவளை தடுத்த ராஜீவ்… “சாரி அண்ணி. உன் சிஸ்டர வேணும்னே நான் வேணாம்னு சொல்லல. அவங்க ரொம்ப சின்ன பொண்ணு. கொஞ்ச நாள் வேலைக்கு போகட்டும்… அவங்களுக்குனு ஒரு கான்ஃபிடன்ஸ் வந்தப்புறம் கல்யாணம் பண்ணி வைங்க” என்றான்.
“நீங்க சொல்றது ரொம்ப சரி ஜீவா! நானும் அவகிட்ட இதை தான் சொன்னேன். என்னை போல அவளும் ஆயிடக்கூடாது” என்று சொன்னதும் அவளை புருவங்கள் லேசாக இடுங்கி பார்த்தான் திலீப்.
அவளின் பேச்சு மனதை நெருடியது. அவள் சொன்ன ‘அவளும் என்னை போல ஆகிவிடக்கூடாது’ என்றது, நல்ல குணம் கொண்ட எந்த ஆணுக்குமே வலியை ஏற்படுத்தும். திலீப்புக்கும் அப்படியே.
ஆனால் அவளுக்கு… அவன் வெறும் நல்ல குணம் கொண்ட ஆணாக மட்டும் இருந்தால் போதுமா?! நல்ல கணவனாகவும் இருக்க வேண்டுமே!
அவனுடைய கஷ்ட நேரங்களில் துணை நின்றிருக்கிறாள். அவன் மறுக்கவில்லை. அவளுடன் சகஜமாக இருக்க மிகவும் முயற்சிக்கிறான். ஆனால் இதுவரை போட்டுக்கொண்ட தடுப்பை உடைத்து முன்னேற கொஞ்சம் தயக்கம் நிறைய குற்றுணர்வு.
பவித்ரா சென்றவுடன், திலீப்புக்கு டீயை கொடுத்த ராஜீவ்… சற்று தயக்கத்துடன், “உன் பெர்சனல் விஷயத்துல தலையிட கூடாது தான் திலீ. பட் வேற வழி தெரியல. அண்ணி ரொம்ப பாவம். உனக்கு புரியும்னு நினைக்கிறன்” என்றதும் சில நொடிகள் கழித்து, ஆமோதிப்பதுபோல தலையசைத்தான் திலீப்.
திலீப் திருமணத்துக்கு பின் அதிகமாக ராஜீவ் ஊருக்கு வரவில்லை. மூன்று வருடங்கள் ஆன்சைட் எனப்படும் வெளிநாட்டு வேலையாக, அமெரிக்காவில் இருந்தான். திரும்பி வந்ததிலிருந்து, கேரளா வரும் சமயமெல்லாம் வீட்டில் கீர்த்தியால் பூகம்பம் வெடிக்கும். ஆதலால் வருவதையே குறைத்துக்கொண்டான்.
வந்த சமயமெல்லாம் தன்னுடைய பிரச்சனைகள் பெரிதாகத் தெரிந்தாலும், அவ்வப்போது பவித்ரா வீட்டில் செய்யும் வேலைகள், படும் அவஸ்தைகள் என பார்த்திருக்கிறான். திலீப்பிடம் மேலோட்டமாக சொல்லியிருக்கிறான்.
ஆனால் இத்தனை வருடங்களில் எதுவும் மாறவில்லை என்பதுதான் ராஜீவ்வுக்கு வருத்தமே!
அன்று ராஜீவ் சென்னைக்கு கிளம்பி இருந்தான். அன்றிரவு வேலை முடித்து வந்த திலீப் அறைக்குள் வர, அங்கே கால்களை நீட்டி தரையில் சாய்ந்தமர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் பவித்ரா.
அறைக்குள் இருந்த குளியலறையை உபயோகித்தால், அவள் உறக்கம் தடைப்படும் என எண்ணி பின் பக்கம் இருந்த குளியலறையில் குளித்துவிட்டு, அடுக்களைக்கு சென்றான்.
அங்கே தோசைக்கான மாவு வெளியே இருக்க, சட்னி வகைகள் பக்கத்தில் மூடப்பட்டிருந்தது. பொதுவாக சூடாக பரிமாறவேண்டும் என பவித்ரா தான் செய்துகொடுப்பாள். மெதுவாக சமையலறை வெளியே எட்டி பார்த்தான். ஜானகியின் அறை கொஞ்சமாக மூடப்பட்டிருந்தது.
அவர் உறங்கியிருப்பார் என எண்ணி, பவித்ராவை எழுப்ப விரும்பாமல் அவனே அடுப்பைப் பற்ற வைத்தான். அவ்வளவுதான்.
“பாவிஈ” என்ற பெருங்குரல். அதிர்ந்து அவன் திரும்ப, பதட்டத்துடன் பவித்ரா வெளியே வர, ஜானகி… “காலைல இருந்து ராத்திரி வரை வேலை பார்த்துட்டு சோர்ந்து போய் வரான். உன்னால செய்து கூட குடுக்க முடியாதா?” அடிக்குரலில் கத்தினார்.
ஏற்கனவே விடாது கால் வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தவள், லேசாக தடுமாறியபடி சமையலறைக்குள் நுழைந்தாள். காலையிலிருந்து செய்த வேலையின் அசதியாக கண்ணசந்து, சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்குள்ளும் சென்றுவிட்டாள். கண்கள் காதுகள் என அடைத்தது.
அதற்குள் ஜானகி உணவு சாப்பிடும் இடத்திற்கு சென்றுவிட, அவர் பின்னாலேயே சென்ற திலீப், “அம்மா… ஏன்மா? நான் வந்தது அவளுக்கு தெரியக்கூட தெரியாது. எதுக்கு இப்போ இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க?” இரவென்பதால் சத்தம் எழுப்பாமல் கேட்டான்.
ஆனால் அதற்கும் கத்திய ஜானகி… “ஆமாம் டா. என் மகன் எனக்கு பெருசு. உன் முகத்தை பாரு. எவ்ளோ அசதியா இருக்கனு. அவளுக்கென்ன வீட்ல தானே இருக்கா… இதை விட வேற என்ன…” அவர் முடிக்கவில்லை…
“வரவர ஏன்டா சாப்பிடறோம்னு இருக்கு. எனக்கு சாப்பாடே வேணாம்” என முணுமுணுத்தபடி அவன் எரிச்சலுடன் எழ எண்ணும்போது, அவசரமாகத் தட்டை அவன் முன் வைத்து, தட்டில் சட்னியை வைத்தாள் பவித்ரா. அவனை பார்க்ககூடயில்லை. அவள் கவனம் அவளிடமே இல்லை. பின் எங்கே அவனை கவனிப்பது.
கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட திலீப், ‘அவள் வைத்தபின் எழுந்தால் சரியாக இருக்காது’ என அவளுக்காக எண்ணி, அமைதியாக இருக்க, இவன் செய்வதெல்லாம் அவளுக்கு தெரிந்தால் தானே! இவனும் தெரியும்படி நடந்துகொண்டால் தானே!
இயந்திரம் போல தோசைகளை அடுக்கினாள் பவித்ரா. அவளை பார்த்த திலீப், ‘இவள் சாப்பிட்டாளா?’ என மனதில் மட்டுமே கேட்டுக்கொண்டான். பெரும்பாலான ஆண்களின் பிரச்சனையே இதுதான்! மனம்விட்டு பேசமாட்டார்கள்… கேட்கவும் மாட்டார்கள். இவர்கள் மனதைப் படிக்க பெண்கள் என்ன உளவியல் நிபுணர்களா?!
திலீப் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் நிலையில் இருக்க, இத்தனை நாட்கள் அவனின் பாராமுகம் பார்த்தவளுக்கு அவனின் மாறுதலைக் கணிக்க முடியவில்லை. முக்கியமாக அவனை கவனிக்க தோன்றவும் இல்லை.
இவர்கள் இருவரும் இப்படி என்றால், மகன் தனக்கு எதிராக பேச ஆரம்பித்தது… தனக்கு பெரிய சரிவை போல உணர்ந்தார் ஜானகி.
உணவை அவன் சாப்பிட்டு முடித்தவுடன், மிச்ச வேலைகளை முடித்த பவித்ரா, பின் பக்கம் சென்றுவிட்டாள். என்ன வாழ்க்கை இது என்ற எண்ணங்களை எல்லாம் தாண்டி… வெறும் வெறுமையே மிஞ்சி இருந்தது. மனம் இறுகிவிட்டது. உடல் ஒரு இயந்திரம் போல ஆகிவிட்டது.
திண்ணை போல கட்டப்பட்டிருக்கும் மேடையில் உட்கார்ந்துவிட்டாள். கண்ணுக்கு எதிரில் பசுமை செடிகள். மரங்கள். அதில் பூத்து குலுங்கிய பூக்கள். அதற்கெல்லாம் மேலே வானம், நிலா. நட்சத்திரம்… ஹும்ஹும்! எதுவுமே அவள் கருத்தினில் பதியவில்லை. காலின் வலி படுத்தியெடுத்தது.
எப்போதும் அதிகம் அவளை எதிர்பார்க்க மாட்டான் திலீப். ஆனால் இன்று நடந்த சம்பவங்கள், அவனை எதிர்பார்க்க வைத்தது. அவள் வரவில்லை என்றதும் சமையலறையில் பார்த்தான். பின் அதை ஒட்டி இருந்த பின் புற விளக்கின் ஒளி தெரிந்ததும் எட்டி பார்க்க, அங்கே எதையோ வெறித்துப்பார்த்த பவித்ராவை பார்த்தான்.
ஓரிரு முறை அவளை இந்நிலையில் பார்த்திருக்கிறான். ஆனால் காரணத்தை ஆராய்ந்ததில்லை. இப்போது யோசனையுடன் குடிக்க தண்ணீரை எடுத்துக்கொண்டு, “தூங்கலையா?” என்று கேட்க, அவன் குரல் கேட்டு கொஞ்சம் அதிர்ந்து அவனை பார்த்தாள்.
அவனையும் கையிலிருந்த தண்ணீரையும் பார்த்தபடி, லேசாக சரி என தலையசைத்தாள்.
அவனுக்கு அவளின் பதில் நிச்சயமாக புரியவில்லை. இருந்தாலும் அதற்கு மேல் என்ன பேச என்ன கேட்க என்று தெரியவில்லை. சென்றுவிட்டான்.
இருவருக்குள் இருக்கும் இந்த தடுப்பு உடையவேண்டும்… முக்கியமாக அவளின் இறுக்கம் தளரவேண்டும். நடக்குமா…?!
விடுமுறை முடிந்து அலுவலகம் வந்திருந்தான் ராஜீவ். நடந்த நிகழ்வுகள் மனதில் உழன்று கொண்டே இருந்தது. உடன் வந்த வினய்யிடம் கூட சரியாக பேசவில்லை.
வேலை செய்யும் இடத்தில் எதையும் அசாதாரணமாக கையாள்பவன், கொஞ்சம் இடறுவது தன் சொந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனையில் தான். குடும்பம் அவனின் பலமாக இருக்க வேண்டும் என நினைத்தவனுக்கு, அது பலகீனமாக மாறிக்கொண்டிருந்தது.
இதே மனநிலையில் தன் இடத்திற்கு வந்தவன் அங்கே திவ்யாவை பார்த்ததும் புன்னகைத்தான். இத்தனை நாட்களில் அவனிடம் அவள் கண்டது… மனதில் பதிந்தது, அவன் கண்களை எட்டும் புன்னகை தான். ஆனால் இன்று அது மிஸ்ஸிங்!
நொடிப்பொழுதில் அதை புரிந்துகொண்டாள். அதனால் அவளே, “மார்னிங் ராஜீவ்!” எப்போதும் அவன் ஆரம்பித்து வைக்கும் அவர்களின் தினத்தை அவள் ஆரம்பித்துவைத்தாள்.
அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான் ராஜீவ். மனதை ஒருநிலைப்படுத்த தீவிரமாக வேலையில் கவனத்தை செலுத்தினான்.
எப்போதும் ஏதாவது பேசுபவன், அல்லது யாரிடமேனும் பேசுபவன்… முக்கியமாக அவள் அவனிடம் கேட்டு செய்திருந்த உணவைப் பற்றி ஏதேனும் பேசுவான் இல்லை அவனை அழைத்து சந்தேகம் கேட்டதற்கு கிண்டல் செய்வான் என நினைத்திருந்தவளுக்கு அவனின் அமைதி வித்தியாசமாக இருந்தது.
அவனை இப்படி பார்க்கவும் பிடிக்கவில்லை. உடனே, “ராஜீவ்… காஃபி?” அவள் இடத்திலிருந்தே கேட்டாள். அவளை ஒருநொடி பார்த்தவன், மறுக்க வாயெடுக்கும் முன், அவளிடத்தில் இருந்து எழுந்த திவ்யா…
“ஜெர்னி பண்ணது ரொம்ப டையர்டா இருக்கு. ஐ நீட் அ காஃபி… வாங்களேன்” அவனின் பதிலை எதிர்பார்க்காமல் முன்னே நடக்க… இப்போதுதான் அவன் நிஜமாகவே புன்னகைத்தான்.
நேர்காணல் நாளில், அவளை பார்க்கும் முன்பு இருந்த மனநிலையில் தான் இன்றும் இருந்தான். ஆனால் அன்று போலவே இன்றும் அவளின் இச்செயல் மனதைக் குளுமையாகியது. ‘யாரிவள்?!’ என்ற கேள்வி அவனுள் இனிமையாக ஒலித்தது.
முன்னொருமுறை அவன் பின்னே அவள் சென்றாள். இன்று அவள் முன்னே பேன்ட்ரிக்கு சென்றிருந்தாள். இதுவரை அவன் எடுக்கும் அளவுகளை பார்த்திருந்தவள், அதே அளவில் அவனுக்கு தர, “தேங்க்யூ!” என்றவனின் கண்கள் கூட அவனின் சொல்லை பிரதிபலித்தது.
இரண்டு கட்டிடங்களை இணைக்கும் அதே பாலம். லேசான வெயில். அவன் சென்று நிற்க, அவளும் சேர்ந்துகொண்டாள்.
எதுவும் பேசவில்லை. இரண்டு மூன்று மிடறுகள் குடித்திருப்பார்கள்.
“சம்திங் இஸ் பாதரிங் யூ’ல ராஜீவ்” என கேட்டபடி அவனை பார்க்க, அவனும் அமைதியாக பார்த்தான். “உங்களுக்கு சொல்லணும்னு இல்ல… ஜஸ்ட் லெட் இட் கோ!” அவள் சொன்னதும், புருவங்கள் சுருங்கிப் புன்னகைத்தான்.
“உங்கள பார்த்துத்தான் நிறைய பேர் இங்க பூஸ்ட் குடுச்ச மாதிரி எனெர்ஜைஸ் ஆறோம். நீங்க இப்படி இருக்கிறதால ப்ராஜக்ட் ஏரியாவே டல் அடிக்குது” புன்னகையுடன் சொன்னாள். கிண்டல் கொஞ்சமாக இருந்தாலும் அதில் உண்மை நிறைய இருந்தது.
அவன் வாய்விட்டு சிரித்தான். இது போதுமே! அந்த சிரிப்பு, உள்வரை சென்று அவளை இனிமையாக்க, அதன் வெளிப்பாடாக அவள் முகம் பிரகாசமானது.
‘சிரிப்பிலே உன் சிரிப்பிலே; சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை!’ பாடல் வரிகள் வேறு வந்து இம்சித்தது.
அவளின் பேச்சு இப்போது… ‘தனக்கு யாரிவள்?!’ என்ற என்ற கேள்வியை மனதினில் எழுப்ப, என்னவென்று கிரகிக்க முடியாத உணர்வு, ஒரு சிலிர்ப்பு அவனுள் பரவியது. அவன் நலனில் அக்கறை காட்டும் திவ்யா, அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமாகலாகத் தெரிந்தாள்.
இதழ்கள் பேச மறுத்த வார்த்தைகளை, இருவர் கண்களும் அவ்வப்போது சந்தித்துப் பேசிக்கொண்டது. இருவர் இடையில் இடைவெளி இருந்தாலும், மனதளவில் ஒரு நெருக்கம் உண்டானது.
‘உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே. உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே’ எவ்வளவு தடுக்க முயன்றும் முடியாமல், நா முத்துக்குமாரின் வரிகள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.
பக்கத்தில் முதல்தளத்தைத் தாண்டி வளர்ந்திருந்த வேப்பமரத்தின் காற்று இருவரையும் வருடிச்சென்றது.
அடுத்த ஓரிரு நாட்கள் நகர்ந்த நிலையில், அன்று வெள்ளிக்கிழமை. முன்னமே முடிவெடுத்தது போல, அன்றைய காலைப் பொழுதில் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருந்தான் ராஜீவ்.
தூக்கத்திலிருந்து எழுந்த வினய் அவனின் கோலம் கண்டு ஒரு நொடி அதிர்ந்து “என்னடா ஆர்கே இது?” என்றான் விழிகள் விரித்து.
“உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் வினய். என்னோட காலேஜ் ஃபிரண்டுக்கு இன்னைக்கு மேரேஜ். நான் அங்க போயிட்டு அப்படியே ஆஃபீஸ் வந்துடறேன்” என்றவனை இன்னமும் விழி எடுக்காமல் தான் பார்த்திருந்தான் வினய்.
காரணம், வேஷ்டி சட்டை என கிளம்பி இருந்தான். முதலில் சாதாரண பேண்ட் ஷர்ட் என தான் யோசித்திருந்தான் ராஜீவ். ஆனால் திவ்யா கடந்த சில வாரங்களாக வெள்ளிக்கிழமைகளில் புடவையில் வந்திருந்ததால், ‘அவளின் பாரம்பரிய உடையுடன் தானும் அப்படி இருந்தால்?!’ என்ற விபரீத ஆசையின் விளைவே வேஷ்டி சட்டை.
திருமணம் முடிந்து அதே உடையில் அலுவலகமும் வந்தாயிற்று. இதுவரை பொங்கல், தீபாவளி, ஓணம், யுகாதி போன்ற நாட்களில், ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து வருவது வழக்கம் தான். ஆனால் இன்று தனியாகத் தெரிந்தான் ராஜீவ்.
அடர் சிவப்பு நிற சட்டை, மெல்லிய கரை வைத்த வேஷ்டி… அவனின் நடை மற்றும் உடல்மொழிக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. பல பெண்களின் கண்கள் அவனை வட்டமிட்டபடி இருக்க, அவன் கண்களோ அவள் இடம் நோக்கியே இருக்க… கால்கள் அதன் வேலையை விரைவாகச் செய்தது.
ஆவலுடன் திவ்யாவை பார்த்தவன் மனம்… அந்த நொடி, கையில் இருக்கும் பலூன் திடீரென உடைந்தால் எப்படி இருக்குமோ அப்படி உடைந்தது.
பாவம், அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக, முதல் முறையாக மாடர்ன் உடையில்… ஜீன்ஸ் மற்றும் வெளிர் வெள்ளை காட்டன் சட்டை என வந்திருந்தாள் திவ்யா.
அவன் அவளை ஏமாற்றத்துடன் பார்த்தான் என்றால், அவனின் இந்த தோற்றத்தில் தன்னை மறந்து அவனை ஓரிரு நொடிகள் ரசித்துப் பார்த்தாள் திவ்யா. ‘சோ ஹென்சம் ராஜு!’ என மூடிய இதழ்களுக்குள் வார்த்தைகள் முட்டியது.
ஆனால் அவனின் புண்பட்ட நெஞ்சம், சில மணிநேரத்திலேயே… ‘ராஜு’ என அவள் மனதின் மொழி வார்த்தைகளாக வெளிவந்ததைக் கேட்ட பின்பு, ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது!
