Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 13

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 13:

சனிக்கிழமை காலை சமீரா வீட்டிற்கு சென்றிருந்தாள் திவ்யா. திவ்யாவை பார்த்ததும் கட்டி அணைத்துக்கொண்ட சமீராவுக்கு அவ்வளவு சந்தோஷம். 

“அண்ணி வாசம் தூக்குதே!” நேராக சமையலறைக்குள் திவ்யா நுழைய, சூடு சூடாக நெய் பொங்கலை கொடுத்தாள் சமீரா. திவ்யாவுக்கு பிடிக்கும் என அவளுக்கும் தெரியும். 

சாப்பிட்டுக்கொண்டே, “அப்புறம் அண்ணி… என் அண்ணன் ஏதாவது பிரச்சனை பண்றான்னா சொல்லுங்க… தூக்கிடுவோம். அவனுக்கெல்லாம் என்னோட ஒரு பொங்கல் போதும்” என்றதும் சமீரா மனம்விட்டு சிரித்தாள்.  

அவளின் சிரிப்பு திவ்யாவையும் நிம்மதியடையச் செய்தது. அவள் அண்ணன் அவளிடம் வேண்டியதே அதுதானே!

முந்தைய தினம் ராஜீவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சிறிய தயக்கம் திவ்யாவுக்கு இருந்தாலும், “இல்ல… அண்ணி மட்டும் தான் இருக்காங்க. அண்ணன் அப்பப்போ வருவார்” என்றவள் சற்று நிறுத்தி… “ரெண்டு பேருக்கும் கல்யாணம் இன்னும் ஆகல” என்றபோது… 

தன் வீட்டை எதிர்த்து, யாருமில்லாமல்… தன் காதலுக்காக அனைத்தையும் துறந்து தனிமரமாக வாழும் சமீராவின் மகிழ்வற்ற முகமே கண் முன் வந்தது. 

அதற்கு பின், ராஜீவ்வுடனான அந்த பயணத்தின் போது, தன் அண்ணன் அண்ணியின் காதல் பூரணத்தை படித்தாள். அவனிடம் அவன் குடும்பம் பற்றிக் கேட்டாள்.

இருவரும் பேருந்திலிருந்து இறங்கிய பின்னும், உணவகத்திற்குச் சென்று பேசினார்கள். ராஜீவ் குறித்து தெரிந்துகொண்ட பின், திவ்யாவால் சகஜமாக இருக்க முடியவே இல்லை. மனதை ஏதோ ஒன்று அழுத்தியது. ராஜீவ் தான் அவளை சகஜமாக்கினான். 

என்னதான் இப்போது சமீராவிடம் சாதாரணமாக இருப்பதாக திவ்யா தன்னை காட்டிக்கொண்டாலும், ராஜீவ் அவளின் எண்ணங்களை அவ்வப்போது சூழ்ந்திருந்தான். 

சமீராவும் திவ்யாவும் சாப்பிட்டு முடித்தபின், தீரன் இருவரையும் அழைத்து பேசிக்கொண்டிருந்தான். சமீராவின் தனிமைக்கு தற்காலிக வடிகால் போல இருந்தது திவ்யாவின் வருகை, தீரனின் அழைப்பு. 

அப்போது டைனிங் டேபிளில் ‘காஸ்ட் அக்கௌன்டிங்’ என்ற பெரிய புத்தகத்தைப் பார்த்த திவ்யா… “இன்னுமா இதை வச்சிருக்கீங்க? ஓ! காதல் சின்னமோ” என்று குறும்பு புன்னகையுடன் இருவரையும் பார்த்து கேட்க… அவளின் காதை திருகி முறைப்புடன் புன்னகைத்தாள் சமீரா.  

அழைப்பிலிருந்த தீரன் காதலுடன் சமீராவை பார்த்து சிரிக்க, “டேய் அண்ணா… நீயெல்லாம் ஒரு அண்ணனா? தங்கச்சி காதை திருகறாங்க… நீ ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியா?!” என்றதும் சமீராவிடம் இருந்து ஒரு செல்ல அடி பரிசாய் கிடைத்தது. 

“ஐயோ கொடும பண்றங்களே… கேட்க யாருமே இல்லையா” என வேண்டுமென்றே கத்தினாள் திவ்யா. 

“என்னால முடியாதத சமி எனக்காக செய்றா” என்றவன், “சமி… எனக்கும் சேர்த்து ரெண்டு எக்ஸ்ட்ரா குடு” என்று திவ்யாவை சீண்டினான். 

அவர்களின் பொழுது அழகாக கழிந்தது. சமீராவின் மலர்ந்த முகம் தீரனின் மன பாரத்தை மட்டுப்படுத்தியது. 

மதிய நேரம், பொங்கல் தன் வேலையே காட்டி, திவ்யாவின் கண்களை உறக்கத்திற்கு ஆழ்த்த முயன்றாலும்… ராஜீவ்வின் முகமே, அவன் குறித்த சிந்தனையே அவளை சுழற்றியது.

வெளியே இருந்த சமீராவுக்கு, அந்த டைனிங் டேபிள் மேல் இருந்த காஸ்ட் அக்கவுண்டிங் புக் தன்னை பார்த்து சிரிப்பது போல இருந்தது. 

திறந்தாள். உள்ளே S. தீரன் என்ற பெயர். அதை லேசாக வருடிக்கொடுக்க… அவனே அங்கிருப்பதுபோல ஓர் உணர்வு. கண்கள் கலங்கியது. அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது. 

——-

அன்று, அந்த சென்ட்டரில் வேலை செய்யும் அந்த பெண்ணுக்கு… தீரன் அவன் வீட்டில் சொல்லி உதவியிருந்ததை தெரிந்துகொண்ட சமீரா அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்ப…

“ஓய் நில்லு! தேங்க்ஸ்லாம் வேண்டாம். அதுக்கு பதிலா காஸ்ட் அக்கவுண்டிங்ல எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. சிலது புரியவே மாட்டேங்குது” என்றான். புன்னகையுடன் அவனைத் திரும்பிப்பார்த்தாள் சமீரா.

அந்த சென்டரில் காஸ்ட் அக்கௌன்டிங் ஓரளவிற்கு நன்றாக தெரிந்த ஒரு ஆள் என்றால் அது சமீரா தான் என்பார்கள் அனைவரும். தீரனுக்கு சந்தேகங்கள் நிறைய வர… அதற்கான ஆசிரியர் உடல்நலக் குறைவால் விடுப்பு எடுத்திருந்ததால், என்ன செய்வது என புரியவில்லை. 

உடன் இருந்தவர்கள் சமீராவை கேள் என்று முதலில் சொன்னபோது… ‘இவளிடமா?’ என்று அப்போது நினைத்தவன்… இப்போது, ‘இவளிடம் தான்’ என்று உறுதியாக இருந்தான். 

“என்ன… சொல்லித்தர்றையா?” கொஞ்சம் அதட்டலுடனும் கொஞ்சம் ஆர்வத்துடனும் கேட்டான். வேறு யாரவது இப்படி கேட்டிருந்தால் ‘போடா’ என்றிருப்பாள் சமீரா. ஆனால் தீரன் கேட்டதற்கு மறுக்கவில்லை. 

அந்த சென்டரிலேயே பெரிய கல்லூரியில் எம்பிஏ படித்துக்கொண்டு இங்கே பயில்வது அவன் ஒருவன் தான். அதுபோல கல்லூரியில் சேரவே நிறைய மெனக்கெட வேண்டும் என்பது அவளுக்கு தெரியும். அப்படி இருப்பவன் அவளிடம் சொல்லித்தரச் சொல்வது கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது. 

“உனக்கு சொல்லி தந்தா எனக்கென்ன யூஸ்?” அவன் ஒருமையில் பேசி, தனக்கு மரியாதை தராததால் அவனுக்கும் அதையே திரும்ப தந்தாள். 

முன்பு கோபத்தை தந்த அவளின் துடுக்குத்தனமான பேச்சு… இப்போது அவனை லேசாகக் கவர்ந்தது. கொஞ்சம் குட்டியாக இடுப்பில் கைகளை வைத்து, புருவத்தை ஏற்றி இறக்கி அவள் கேட்ட விதத்தில், ‘குட்டி பிசாசு’ என்று ரசிக்கத்தான் தோன்றியது. 

புன்னகையுடன், “யூஸ் – உனக்கு எதுலயாவது ஹெல்ப் வேணும்னா நான் பண்ணி தரேன்” என்று சொல்லிவிட்டான். இதனால் பின்னாளில் அவளுடைய டாக்குமெண்டேஷன் வேலையில் பாதி அவன் தான் செய்துகொடுத்தான். ஆனால் விரும்பியே தான் செய்தான். 

அன்றே அவன் கேட்ட சந்தேகங்களுக்கு பதிலளித்தாள் சமீரா. புருவங்களை உயர்த்தி… தலைசாய்த்து அவனை பார்த்து… மிகவும் தெளிவுடன் சொல்லித்தந்தது, அவனை வசீகரித்தது. 

அடுத்து வந்த நாட்களில் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக்கொண்டு இருவரும் மற்றவரின் சந்தேகங்களை, மற்ற பாடங்களில் இருந்தவற்றை தீர்த்துக்கொண்டார்கள். 

சமீராவுக்கு முதலில் அவனை பார்த்தபோது கடுகடுவென அவன் தெரிந்திருந்தாலும், இப்போது அப்படி தெரியவில்லை. அதுவும் அவனின் நடத்தை… யாரிடமும், எப்போதும் சற்று தள்ளியே தன்னை நிறுத்திப் பேசுவது, தேவையில்லாமல் எந்த வீண் பேச்சும் இல்லாமல், கேலி கிண்டல் என்று கூட இல்லாமல், தானுண்டு என்று இருப்பது அவளுக்கு பிடித்தது.  

ஆனால் அவளிடம் மட்டும் அவன் எடுக்கும் உரிமை அவளுக்கு புரிந்தது. அது பிடிக்கவும் செய்தது. 

உடன் உள்ளவர்கள்… முன்பு சமீராவை மட்டும் கிண்டல் செய்தார்கள், ஆனால் இப்போது… இருவரையும் சேர்த்து வைத்து கிண்டல் செய்தார்கள். அது பிடித்திருந்ததோ இல்லை பெரிதாகத் தெரியவில்லையோ… இருவரும் அதைத் தடுக்கவில்லை. 

நாட்கள் செல்ல செல்ல இருவருக்குள் ஒரு அழகான, மெல்லிய நெருக்கம் உருவானது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டனர். தேவை அறிந்து நடந்துகொண்டனர். 

சமீரா வார இறுதியில், அரசு பள்ளியில் பயிலும் சில மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் எடுப்பது தெரிந்து, விரும்பியே அவளுடன் சேர்ந்துகொண்டு பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தான் தீரன்.  

இருவரும் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் இருப்பது மற்றவரை வெகுவாக கவர்ந்தது. காஸ்ட் அகௌண்டிங் கற்றுத்தருவதில் ஆரம்பித்து காதல் அட்டெம்ப்டிங் செய்வதில் வந்து முடிந்தது. 

ஒருநாள் தீரனின் வீட்டில் மாலைப் பொழுதில்…  தீரனின் அம்மா மீனாட்சி அலுவலக வேலைப்பளுவின் காரணமாக அசதியில் சோபாவில் தலைசாய்த்து கண்கள் மூடியிருக்க… தீரனின் அப்பா சங்கர், சூடாக டீ மற்றும் அதனுடன் உண்பதற்கு தீனி தயார் செய்துகொண்டிருந்தார்.

அந்நேரம், தீரன் தன் நண்பர்களுடன் சமீராவையும் சேர்த்து தன் வீட்டிற்கு அழைத்துவந்திருந்தான். சமீராவை ஏற்கனவே அவன் வீட்டினருக்கு தெரியும். தீரன் சொல்லியிருக்கிறான். 

இவர்களை பார்த்ததும், மீனாட்சி எழுந்து வரவேற்க, அவரின் முகத்தில் தெரிந்த சோர்வை கண்ட தீரன்,  “என்னமா ஆச்சு?” கொஞ்சம் பதட்டத்துடன் அருகில் சென்று கேட்டான். 

“ஒன்னுமில்ல தீரா… பேங்க்ல ஆடிட் போயிட்டு இருக்கு. செம்ம ஒர்க்” எனும்போது தீனி மற்றும் தேநீருடன் வந்திருந்தார் சங்கர். மனைவிக்குத் தட்டில் வைத்து கொடுத்து டீயை ஊற்றிக்கொடுத்தவர், வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்.

சமீராவுக்கு அவர் இப்படி வேலை செய்வது ஆச்சரியமாக இருந்தது. அவள் வீட்டில்… கனவிலும் அவள் பார்த்திராத ஒன்று. 

“அப்பா… அம்மாக்கு முடியலைன்னு சொல்லி இருக்கலாமே… நான் இன்னொரு நாள் கூட்டிட்டு வந்திருப்பேன்” குறைபட்டுக்கொண்டான் தீரன். 

“பரவால்ல டா தீரா… இதுல என்ன இருக்கு. எப்பயாச்சும் தான் உன் ஃபிரெண்ட்ஸ் வராங்க” என்றவர், வந்தவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக உள்ளே செல்ல, சமீரா… “அங்கிள் நீங்க இருங்க நான் செய்றேன்” என்றாள்.

“அட இருக்கட்டும் மா… நீங்க பேசிட்டு இருங்க” என்றவர் சமையலறைக்குள் நுழைய, தீரனிடம் சைகையால் சொல்லிக்கொண்டு, சங்கர் பின்னோடு சென்றாள் சமீரா. தீரனுக்கு அவளின் இச்செயல் புன்னகையை தந்தது. 

பின் மீனாட்சி மிகவும் சோர்வுடன் தெரிவதைப் பார்த்தவன், அவரை வலுக்கட்டாயமாகத் தீட்டியபடி படுக்கை அறைக்கு இழுத்துச்சென்றான். அதை சமையலறையில் இருந்து பார்த்தாள் சமீரா. 

“தீரனுக்கு அம்மானா ரொம்ப பிரியம். சின்ன உடம்பு வலினா கூட பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணிடுவான். இப்போகூட திட்டிட்டே தைலம் தேய்ச்சு விட தான் கூட்டிட்டு போறான்” என்றார் சங்கர். 

ஒருமுறை தனக்கு மிகவும் தலைவலி என்று சமீரா புலம்பியபோது, தீரன் உடனே சென்று தலைவலி தைலம் வாங்கி வந்து, அவளை வலுக்கட்டாயமாகத் தேய்த்துக்கொள்ள சொன்னது நினைவிற்கு வந்தது. லேசாக புன்னகைத்தாள். 

சங்கர் ஏற்கனவே செய்த பாயசத்தைக் கிண்ணத்தில் ஊற்றப் போக, சமீரா அவரிடம் இருந்து வாங்கி அதை செய்தாள். பின் அதை தன் நண்பர்களுக்குக் கொடுக்க… அப்போது பள்ளி சீருடையில் ஒரு குட்டிப்பெண் வீட்டினுள் வந்தாள். அது தீரனின் தங்கை திவ்யபாரதி.  

வீட்டில் இந்த கூட்டத்தை பார்த்தவள் புருவம் சுருக்கியபடி வீட்டினுள் வர, “தீரன் ஃபிரெண்ட்ஸ் டா” என்று அறிமுகம் செய்தார் சங்கர். 

அந்நொடி தன் அப்பாவுக்கு உதவி கொண்டிருந்த சமீராவை பார்த்த திவ்யாவுக்கு சமீராவை பிடித்துவிட்டது. பாந்தமாக, தீரனின் சாயலிலிருந்த திவ்யாவை சமீராவுக்கு பிடித்துவிட்டது. தீரனும் அங்கே வந்திருந்தான். 

“ப்பா… நீங்க செய்த பாயசமா?” என்றபடி திவ்யா அப்படியே சாப்பிட எடுக்க… அவளை சுத்தம் செய்து வரச்சொல்லி அனுப்பி வைத்தார் சங்கர். சிடுசிடுவென உள்ளே சென்ற திவ்யாவை வம்பிழுக்கும் நோக்கில் தலையில் குட்டினான் தீரன். 

பதிலுக்கு நொடிப்பொழுதில், “டேய் அண்ணா!” என எகிறி தீரன் மண்டையில் குட்டிய திவ்யா, அவன் திரும்பித் தரும்முன் ஓடிவிட்டாள். சமீராவிற்கு இதையெல்லாம் பார்க்க அழகாக தெரிந்தது, ஆசையாகவும் இருந்தது. 

தீரனை கண்கள் மின்ன, ஆர்வத்துடன் பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த அந்த ஆர்வம் தீரன் மனதிலும் முகத்திலும் புன்னகையை பூக்கச்செய்தது. அந்த புன்னகை அவளுள் பல வண்ணத்துப்பூச்சிகள் ஒருசேர சிறகடித்த உணர்வைத் தந்தது. 

அடுத்து கொஞ்ச நேரத்தில் மீனாட்சியும் திவ்யாவுடன் சேர்ந்து வெளியே வர, அவ்விடமே கலகலப்பாக மாறியது. சமீராவுடன் சேர்ந்து தீரனை வம்பிழுத்தாள் திவ்யா. நண்பர்களுடன் சேர்ந்து இருவரையும் ஓட்டினான் தீரன். 

இரு குழுவிற்கு நடுவர்களாக மீனாட்சியும், சங்கரும். அழகாகக் கழிந்தது பொழுது. 

இதுபோல தன் வீட்டில் ஒருநாளும் தான் அனுபவித்ததில்லை என்ற நிதர்சனம் சமீராவின் மனதை அழுத்த, அது ஒருவித ஏக்கத்தைத் தந்தது. மனமேயில்லாமல் தீரன் வீட்டிலிருந்து புறப்பட்டாள். 

நாட்கள் வேகமாக நகர, இருவருக்கும் இடையேயான நெருக்கம் இன்னமும் கொஞ்சம் அதிகரித்தது. 

அடுத்து வந்த தேர்வில் காஸ்ட் அக்கவுன்டிங் பேப்பரில் சமீராவை விட அதிகமான மதிப்பெண்கள் எடுத்திருந்தான் தீரன். அவன் அதை எப்படி எடுத்துக்கொண்டானோ தெரியவில்லை, ஆனால் சமீரா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.  

“சூப்பர் தீரா!” என்றவள் அவன் தோள் தட்டி, “பரவால்ல. என் பேர காப்பாத்திட்ட. ப்ரவுட் ஆஃப் யூ மை பாய்! ” என்றாள் கள்ளப்பார்வையுடன். அவளின் தீரா என்ற அழைப்பு அவன் மனதை மலைச்சாரலாய் குளிர்விக்க… குறும்பு புன்னகையுடன் அவள் தலையில் பட்டும் படாமல் பேனாவால் அடிக்க கையை நீட்டினான்.

அதற்குள் அவள் நழுவ, அவன் கைகள் நீள… அங்குள்ளவர்கள் இருவரையும் பேர் சொல்லி கேலி செய்த நேரம் அந்த இடமே சிரிப்பொலியில் மிதந்தது. அனைத்துமே சாதாரணமாக நடக்க, அதற்கு திருஷ்டி வைத்தாற்போல வந்து நின்றான் சமீராவின் அத்தை மகன் செந்தில்.

அவனைப் பார்த்ததும் தான் அவளுக்கு காலையில் அவன் தன்னை அழைத்துச் செல்வதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. வந்தவனுக்கு, தீரன் சமீராவுக்கிடையில் இருந்த நெருக்கம், உடன் செய்தவர்களின் கேலி உவப்பாக இல்லை. அதை தன் செயலில் காட்டினான். 

சமீராவின் கையை அழுந்த பிடித்து, கிட்டத்தட்ட அவன் தரதரவென இழுக்க, அதை பார்த்த அனைவருக்குமே கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிந்தது. 

“மாமா! என்னதிது? கைய விடுங்க” என்ற சமீராவின் இறங்கி ஒலித்த குரல் காற்றில் கரைந்தது, அவன் காதில் ஏறவில்லை. அவளின் எதிர்ப்பு, அதையும் மீறி அவன் இழுத்துச் செல்வது தீரனை கோபமுறச்செய்தது. 

அதன் வெளிப்பாடு, “ஹலோ, யார் நீங்க? பொண்ணை மேனர்ஸ் இல்லாம இப்படி இழுத்துட்டு போறீங்க?” வழிமறித்து அவள் அத்தை மகன் முன் வந்து நின்றான் தீரன். 

“மனேர்ஸா யார்ரா நீ?” செந்திலின் வார்த்தைகள் தடித்து வந்தவுடன்… ‘ஐயோ, இதென்ன பிரச்சனை!’ என எண்ணிய சமீரா… தீரனிடம், “தீரன், என் மாமாதான். நான் பார்த்துக்கறேன். நீ போ” என்றதும், “ஓ… இவன் தான் அந்த தீரனா” என்றான் செந்தில், கோபம் தெறித்த குரலில். 

அவளை அழைத்துச் செல்ல வந்தபோது, அங்கே நிறைய பேர், தீரன் சமீரா என சேர்த்துவைத்து ஏதேதோ கிண்டல் செய்ததைக் கேட்டிருந்தான். இப்போது இவன் தான் தீரன், அதுவும் சமீராவுக்காக வக்காலத்து வேறு என தெரிந்ததும் செந்திலுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. 

சமீராவுக்கும் தனக்குமான உறவை அங்குள்ளவர்களுக்கும், தீரனுக்கும் திரையிட எண்ணி… செந்தில், “படிக்க அனுப்பினா கூத்தடிச்சிகிட்டு இருக்கியா…” என்றவன் புறங்கையால் அடிப்பதுபோல கையை ஓங்கி… “மரியாதையா… அமைதியா வா” என வெளியே தரதரவென இழுத்துச்சென்றான். 

பெண்ணிடம் இப்படி நடந்துகொள்பவனைப் பார்த்து தீரனுக்கு அவனை அடித்து வெளுக்கும் கோபம் வந்தாலும், இப்போது எது செய்தாலும் அது சமீராவுக்கு தான் பிரச்சனை என்பது புரிந்து கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருந்தான்.  

சமீராவுக்கு செந்தில் அவன் கையை அத்தனை பேர் முன்பு ஓங்கியது, தரைகுறைவாக பேசியது கொதிப்பை ஏற்படுத்த, கையை அவனிடம் இருந்து உதறிப் பிரித்தாள். 

“இனிமே இதுபோல இண்டீசெண்டா  நடந்துக்காதீங்க மாமா” காரின் பின் கதவை அறைந்து மூடி அவள் உட்கார, அதில் இன்னமும் கடுப்பான செந்தில்…

“நீ இனி எப்படி படிக்கறன்னு பார்க்கிறேன். ஏதோ போனா போகுதுனு படிக்க அனுப்பினா, ரொம்ப குதிக்கிற? வீட்டுக்கு வா, இந்த வாய்க்கும் காலுக்கும் பூட்டு போட வைக்கிறேன்” பற்களை நறநறத்தபடி காரை வேகமாக வீட்டிற்கு செலுத்தினான். 

சமீராவின் குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம்.  பல கிளைகள் கொண்ட லிங்கம் அண்ட் சன்ஸ் என்ற பெரிய நகைக்கடை மட்டும் இல்லாமல், ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர். 

சமீராவின் தாத்தா லிங்கேஸ்வரன் ஆரம்பித்த தொழில்… அவர்கள் மகன்களான சமீராவின் பெரியப்பா மகாலிங்கம், அப்பா தர்மலிங்கம் மற்றும் சித்தப்பா ஜோதிலிங்கம் விரிவடையச் செய்திருந்தார்கள். லிங்கம் சகோதரர்களுக்கு ஒரு சகோதரி. சொந்தத்தின் உள்ளேயே திருமணம் செய்து உடன் வைத்துக்கொண்டார்கள். அந்த சகோதரியின் மகன் தான் செந்தில். 

அக்குடும்ப ஆண்கள் மட்டுமே படிப்பு, தொழில் என வெளியுலகில் பரிச்சயமாகி இருக்க, பெண்கள் வெளியுலகம் அதிகம் தெரியாத அவ்வீட்டின் உள் நிர்வாகிகள். விரும்பியே வீட்டு நிர்வாகம் மட்டும் செய்து வந்த நிலையில், இந்த தலைமுறை பெண் பிள்ளைகள் போராடி பெற்றது படிப்பு சுதந்திரம் மட்டுமே. அவ்வீட்டுப் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி பெண்கள் படிப்பதில் பெரிய உடன்பாடு இல்லை என்றாலும், சம்மதித்திருந்தார்கள். 

லிங்கம் சகோதரர்களின் அப்பா லிங்கேஸ்வரன் தவறிய பின், அவர்களின் அம்மா, சமீராவின் பாட்டி தான் வீட்டின் பெரியவர். 

கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்த செந்தில், சமீரா வரும்வரை காத்திருந்து… பின் தன் அம்மா, சமீராவின் அம்மா, பெரியம்மா முன்னிலையில்… “இனி இவ வீட்லயே இருக்கட்டும். படிப்பு கிடிப்புலாம் எதுவும் வேண்டாம்” என்றான் திமிராக. 

அவர்கள் ஒன்றும் புரியாமல் பார்க்க, சமீரா… “மாமா, தேவ இல்லாம விஷயத்தை பெருசு பண்றீங்க” என்றாள். லேசாக எழுந்த பயத்தால் குரல் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது.  

“யாரு பெருசு பண்றா… நான் தான் அங்க நடந்த எல்லா கூத்தும் பார்த்தேனே” என்று அவன் கத்தும்போது அவ்வீட்டின் ஆண்களும் வந்திருந்தார்கள். செந்தில் தான் பார்த்த விஷயத்துடன் பார்க்காத கட்டுக்கதையையும் கோர்த்துவிட்டான்.  

அந்நேரம் செந்திலின் அம்மா, “நான் தான் சொன்னேனே ணா… சீக்கிரம் இதுகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. கேட்டீங்ளா?!” தன் அண்ணனிடம் குற்றம் வாசிக்க, சமீரா அதிர்ந்து விழித்தாள்.

இது அவள் செவிவரை வந்திருக்காத செய்தி. செந்தில் அம்மா விடுவதாக இல்லை. “இவ படிக்க போறாளோ… இல்ல, உன் பொண்ணு மாதிரி எந்த பொறுக்கி கூடையாவது ஓடிப்போகத் தயார் ஆகறாளோ… யார் கண்டா” அண்ணனிடம் குரூரமாக சொன்னார். 

“அத்தை!” என கோபத்தில் கத்திய சமீரா, “ரொம்ப தப்பா பேசறீங்க அத்தை” என விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய… தன் அம்மாவை கைநீட்டி பேசுகிறாள் என்ற கோபத்தில், சமீராவை கத்தியபடி அடிக்க நெருங்கினான் செந்தில். 

நொடிப்பொழுதில் கன்னத்தில் விழுந்த தாக்குதலில் நிலைகுலைந்து விழ போன சமீராவை தாங்கிய அவள் அம்மாவுக்கும் வன்முறை தாக்குதல் நடந்தது. தன் அக்காவை எதிர்த்துப் பேசியதை பார்த்த சமீராவின் அப்பா தர்மலிங்கம்… மகள், மனைவி என இருவரையும் தாக்கியிருந்தார். 

“பொண்ணையா வளர்த்து வச்சுருக்க?” என்று மறுபடியும் கையை தன் மனைவியிடம் ஓங்க… “அப்பா… மொதல்ல அம்மாவை அடிக்கிறத நிறுத்துங்க” என அவர் முன் தன் அம்மாவைக் காப்பாற்றும் பொருட்டு நின்றாள் சமீரா. 

“ஓ! எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துடுச்சா” என்றவர் கண்மண் தெரியாமல் இருவரையும் தாக்கினார். “இனி நீ படிக்க போகவேண்டாம். அதுனால தான் இவ்ளோ திமிர்” ஆத்திரத்துடன் கத்தினார்.  

சமீராவின் பெரியப்பா, தன் தம்பியை தடுத்தார். பாட்டியும் தடுத்தார். ‘இனி படிக்க செல்லவேண்டாம்’ என்று சொன்னபோது சமீராவுக்கு கண்களில் கண்ணீர் துளிர் விட்டது. 

அவளுடைய கனவு இது. படித்துவிட்டு வேலைக்கு செல்லமுடியுமா என்றெல்லாம் தெரியாது. குறைந்தபட்சம் படிக்கவாவது செய்யலாம் என எண்ணியிருந்தாள். 

தந்தையிடம், பெரியப்பாவிடம் மன்றாடினாள். பலனில்லை. அவளுடைய அக்காவை உதாரணமாகக் காட்டி மறுத்தனர்.  

சமீராவின் பெரியப்பா பெண், படித்துக்கொண்டிருந்த சமயம், காதல் வயப்பட்டு… வீட்டில் அதை பற்றிச் சொன்னபோது, தங்கள் இனத்தவர் இல்லை என சொல்லி மறுத்தனர். அப்பெண் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டாள். 

அக்காவுக்கு மனம் விரும்பிய வாழ்வு அமைந்ததை எண்ணி மிகவும் மகிழ்வுற்றாள் சமீரா. ஆனால் காலத்தின் கோலமோ… இல்லை சில பாதகர்களின் கொடிய செயலோ… திருமணமான மூன்றே மாதத்தில் தம்பதிகள் இருவரும் இரங்கல் செய்தியில் வந்திருந்தனர்.

எதனால் எப்படி என இன்று வரை யாருக்கும் தெரியாது. யாரும் அறிய முற்படவில்லை, முனையவில்லை. சமீராவுக்கு தன் குடும்பத்தின் மீது தான் பெரிய சந்தேகமே. அக்காவிற்காக வீட்டில் பேசினாள். அதற்காக சில அடிகளைப் பெற்றாள். இருந்தும் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.  

இப்போது சமீராவை படிப்பதற்கு அனுப்ப வீட்டில் உள்ளவர்கள் மறுக்க… சமீரா தஞ்சம் கொண்டது பாட்டியிடம். 

“பாட்டி… ரொம்ப கஷ்டப்பட்டு மூனரை வருஷம் படிச்சு முடிச்சிட்டேன். இன்னும் ரெண்டே வருஷம் பாட்டி” கெஞ்சி மன்றாடினாள் சமீரா. 

பாட்டி… அவருக்கு சிறுவயதில் படிக்க கொள்ளை ஆசை. படித்து தொழில் நிர்வகிக்க இன்னமும் ஆசை. ஆனால் பெண்கள் என்றாலே வீட்டு வேலைக்குத் தான் என்றிருக்கும் இந்த குடும்பத்தில்… அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அந்த ஒரு காரணத்திற்காகத் தான் பேத்திகளை படிக்க வைக்க முடிவெடுத்தார். 

அதுவும் சமீரா படிப்பில் கெட்டி. அவளை படிக்கவைத்து வீட்டோடு உள்ள செந்திலைத் திருமணம் முடித்து… அவளையும் தொழிலில் ஈடுபடுத்தவேண்டும் என மிகவும் விரும்பினார்.

சமீரா கெஞ்சியவுடன்… அவளிடம் கொஞ்சம் நேரம் பேசினார். பின் சமீராவுக்காக, தன் ஆசைக்காக… மகன்களிடம் பேசி, ஒப்புக்கொள்ள வைத்தார். ஒரு முழு நாள் தேவைப்பட்டது சமீராவுக்கு இதைச் சாத்தியமாக்க. 

ஒரு நாள் கழித்து தான் சென்டர் சென்றாள். 

அங்கே தீரனுக்கு சமீராவின் நினைவாகவே இருந்தது. அதுவும் சமீராவின் தோழி, அவனிடம்… அன்று நடந்த விஷயத்தால், சமீராவை வீட்டில் அடித்து… படிக்க அனுப்பாமல் இருப்பதாகச் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவன் மனமெங்கும் சமீராவின் எண்ணங்கள். 

‘தன்னால் தான்’ என்ற எண்ணம் மனதை வருத்தியது. அவளை எப்போது பார்ப்போம், அவளிடம் எப்போது பேசுவோம் என்ற எண்ணம் மனதை குடைந்தது.  

இன்றாவது வருவாளா என காத்திருந்தவனுக்கு, காலம் தாழ்த்தாமல் தரிசனம் தந்தாள் சமீரா. அவளை பார்க்கும் வரை… காண வேண்டும் என்றிருந்த ஆசை, அவளைப் பார்த்தவுடன் அப்படியே மாறியது. அவளின் முகம் லேசாக வீங்கியிருக்க… முகத்தில் எப்போதும் மிதக்கும் அந்த மிளிர்ச்சி மங்கியிருந்தது. 

அவளை பார்க்கப்பார்க்க அவன் நெஞ்சம் குற்றவுணர்வால் தவித்தது. அவளை பார்க்கும் முன் ‘அவளிடம் பேசி ஆகவேண்டும்’ என்றெண்ணிய மனம், அவளைக் கண்டதும் ‘தன்னால் தான் அனைத்தும்… தள்ளியே இரு’ என்றுரைத்தது. 

அவளும் அவனைப் பார்த்தாள். எப்போதும் போல இதழ் விரியப் புன்னகைத்தாள்… ஆனால் அந்த புன்னகையில் உயிர்ப்பு இல்லை. 

மனம் தள்ளியே இரு என்று அவனை அறிவுறுத்தினாலும், கால்கள் தானாக அவளிடம் சென்றது. அவள் முன் அமர்ந்தவன், “ஸாரி சமீரா… என்னால தான் எல்லாம்” என்றான் கண்கள் பனித்து. 

“தீரன்… அம் ஓகே. நீ என்ன செய்த ஸாரி கேட்க?” என்றாள் சாதாரணமாக. ஆனால் அவனால் தான் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 

அவளை ஒருதரம் உற்றுப் பார்த்தவன், “எப்படி இப்படி அடிக்க மனசு வருது சமி? ரொம்ப நோகுதா? எல்லாமே என்னால தான்” குரல் தளர்ந்து அவன் சொன்னது… சமீராவை ஏதோ செய்தது. தன் அம்மாவைத் தவிர… வீட்டில் கூட யாரும் இது குறித்து கேட்கவில்லை. மதிக்கக்கூட இல்லை. 

அதுவும் அவனின் ‘சமி’ என்ற விளிப்பு மனதிற்கு இதமாக இருந்தாலும், பாரத்தைக் கூட்டியது.  

“என்னால உன்னை இப்படி பார்க்க முடியல. நம்ம இனி தள்ளியே இருப்போம் சமீரா. அதுதான் உனக்கு நல்லது.” என்றவன், அவள் முகம் பார்க்காமல், மனதில் ஏற்பட்ட அழுத்தத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.  

செல்லும் அவனையே பார்த்திருந்தாள் சமீரா. அவனைத் தள்ளி நிறுத்திப் பார்க்கும் கட்டத்தையெல்லாம் எப்போதோ தாண்டிவிட்ட உணர்வு அவளுள். 

அவனுக்கும் இது அவ்வளவு எளிதல்ல, வேதனை மட்டும் தான் மிஞ்சும் என்பது புரிந்தது… ஆனாலும் சமீராவுக்காக அந்த வேதனையை விரும்பியே ஏற்க முடிவெடுத்தான். 

 

2 thoughts on “உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 13

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved