உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 15
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 15:
திவ்யா மற்றும் ராஜீவ் ப்ராஜக்ட் குழு சென்ற ரிசார்ட் ட்ரிப் முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது.
அன்று முக்கிய வேலையில் இருந்தனர் அந்த ப்ராஜக்ட் குழுவினர். திவ்யா மற்றும் அவளுடன் எப்போதும் சேர்த்து வேலைபார்க்கும் கவினும் மிகவும் பரபரப்பாக வேலையில் மூழ்கி இருந்தனர்.
கவின் வேலையில் கவனத்தைச் செலுத்தினாலும், அவன் கேட்டிருந்த, பார்த்திருந்த செய்தி அவன் மனதை லேசாக வருத்தியது. ராஜீவ் திவ்யா நெருக்கம் எப்போதுமே அவன் மனம் ஏற்காத ஒன்று. எப்படியாவது திவ்யாவிடம் தன் மனதைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
திவ்யா… ராஜீவ், வினய், ஹரிணிக்கு அடுத்து நல்ல நெருக்கமாகப் பேசுவது கவினிடம். மிக நல்ல நண்பனாகவே அவனை பார்த்திருந்தாள்.
அதுவும் ஒருமுறை ட்ரீட் என மதிய உணவு சாப்பிட ஒரு நட்சத்திர உணவகத்துக்குச் சென்றிருந்தார்கள். ராஜீவ், வினய் வேலை இருந்ததால் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்துகொள்வதாக சொல்லி இருந்தார்கள்.
அன்று கவின் திவ்யாவுடனே இருந்தான். கொஞ்சம் உடல் ஒவ்வாமை… ஒருவித மயக்கம் காரணமாக முன்னமே கிளம்ப எண்ணிய திவ்யா, அவ்வுணவகத்தின் வெளியே சென்று லிஃப்ட் ஏற காத்திருந்தாள். அப்போது அங்கே வந்த கவின் தானும் துணைக்கு வருவதாகச் சொல்ல, புன்னகையுடன் மறுத்திருந்தாள்.
செல்லும்வரை அவளுடன் இருக்கலாம் என எண்ணி அவன் நிற்க, திவ்யா லிஃப்ட் வந்தவுடன் ஏறிக்கொண்டாள். அவள் ஏறிய சில நொடிகளில் திடீரென மதுவின் பிடியிலிருந்த ஒரு கூட்டம் கவினை கடந்து லிஃப்டுள் நுழைந்தது. கிட்டத்தட்ட திவ்யாவை நெருக்கும் அளவிற்கு நின்றார்கள்.
அதை உணர்ந்த திவ்யா, ‘ஏற்கனவே உடம்பு முடியவில்லை, தேவையில்லாமல் எதற்குப் பிரச்சனை, வெளியேறலாம்’ என நினைக்க, லிஃப்ட் மூட காத்திருந்த நேரம்… அங்கு நடப்பவற்றைப் பார்த்து கவின் உள்ளே சென்றுவிட்டான். அனைவரையும் தன் பலங்கொண்டு தள்ளி திவ்யாவுடன் நின்றான்.
திவ்யா நன்றியுடன் புன்னகைத்தாள்.
பொதுவாகவே பகல் நேரத்தில் இதுபோல மது அருந்த அங்கே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பணம் செய்த மாயம். தரைதளம் வந்தவுடன், திவ்யாவை சிரத்தையுடன் லிப்ட் உள்ளே இருந்து வெளியே அழைத்துவந்தான்.
அப்போதுதான் ராஜீவ், வினய் சாப்பிட வந்திருந்தார்கள். ‘குடி’மகன்களை பார்த்து பகலிலேயா என இருவரும் கிண்டல் செய்ய, பின்னே திவ்யாவை அழைத்துவந்த கவினைப்பார்த்து லேசாக பதற்றமடைந்தான் ராஜீவ்.
விசாரித்தபோது அவள் உடல்நிலை பற்றி தெரியவந்தது. ராஜீவ் அவளை பிஜி’யில் விடுவதாகச் சொல்ல, அது கவினுக்கு கோபத்தைக் கிளப்பியது. உடனே, “நீங்க சாப்பிட போங்க ஆர்கே. பக்கத்துல தான், நானே விட்டுடறேன்” என்றான்.
ராஜீவ் திவ்யாவை பார்க்க… அவளும் ராஜீவ் சாப்பிடவேண்டும் என எண்ணி… “ஆமா ராஜீவ் பக்கத்துலதான்… நானே போய்டுவேன். பட் கவின் கேட்க மாட்டேங்குறான்” என்றாள்.
கவின் மேல் நூறு சதவிகிதம் ராஜீவ்வுக்கு நம்பிக்கை இருந்தது. அனுப்பிவைத்தான். மிக நல்ல நண்பன் என்ற எண்ணத்தில் அவனுடன் அவள் வண்டியில் சென்றாள்.
ஆனால் ராஜீவ்வை மறுத்து தன்னுடன் வந்ததை எண்ணி… அன்று முதல் கவினுக்கு திவ்யா மேல் பிடித்தம் இன்னமும் அதிகமானது. நல்ல நாளுக்காக, நல்ல சமயத்திற்காகக் காத்திருந்தான் திவ்யாவிடம் மனம் திறக்க.
இதோ இன்று ஏனோ மனதின் ஆசைகள் அதிகமாக… திவ்யாவிடம் தயங்கி “திவி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். மதியம் நம்ம சேர்ந்து சாப்பிடலாமா?” என கேட்டான். என்னடா இது என யோசித்தாலும் சரி என்றாள்.
ராஜீவ்விடம் சொல்லிவிட்டு கவினுடன் சென்றாள்.
இருவரும் சாப்பிட ஆரம்பிக்க, கவின் தைரியத்தை வரவழைத்து… மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டான். அதை கேட்டு அதிர்ந்தாள் திவ்யா. நிச்சயம் அவள் எண்ணவில்லை கவின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என.
ஏனோ அந்நேரமும் ராஜீவ் முகமே அவள் கண் முன் வந்து நின்றது. இதை வளரவிடக்கூடாது என நினைத்து, “உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் என்னால உருவாகும்னு நினைக்கல. ஸாரி கவின்! நீ என்னோட ஒரு நல்ல ஃபிரெண்ட் .
எனக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இல்லவே இல்ல. வரவும் வராது.” என்றவள், கொஞ்சம் மூச்சை ஆழயிழுத்து, “ஐம் ஆல்ரெடி இன் லவ் வித் சம்ஒன்” என்று சொல்லிவிட்டாள்.
இதை சொன்னபோது அவள் மனத்திலும் சரி சிந்தையிலும் சரி நிச்சயம் ராஜீவ் முகம் தான் மின்னியது. அதைக் கேட்ட கவினின் இதயம் உடைந்தது. ‘யார் ராஜீவ் தானே’ என கேட்கயெண்ணி உதடுவரை வந்துவிட்டது. ஆனால் கேட்கவில்லை.
மாறாக, “யார் அதுன்னு தெரிஞ்சுக்கலாமா திவி…” அவன் கேட்டதற்கு, “சீக்கிரம் சொல்றேன்” என்றாள்.
பின் அவன் முக வாட்டத்தைப் பார்த்து… “கவின், லெட் அஸ் பி அ குட் ஃபிரெண்ட்ஸ் ப்ளீஸ்” அவன் பதிலுக்காக அவன் முகம் பார்க்க, அவனுக்கு புன்னகைக்கத் தோன்றவில்லை இருந்தாலும் புன்னகைத்தான்.
ஆனால் ‘தான் காதலிக்கிறேன்’ என்று கவினிடம் சொன்னபோது… தன்னுள் வந்த மின்னிய ராஜீவ்விடமும் தன் காதலை மறைக்கப்போகிறாள் என அப்போது எண்ணிக்கூடப் பார்க்கவில்லை.
அடுத்தநாள் திவ்யா ராஜீவ்வை பார்த்தபோது.. எப்போதும் போல மனதுக்குள் மத்தாப்பு. அவளை முற்றிலுமாக தன்வசமாக்கி இருந்தான் ராஜீவ்.
யாரையும் கவரும் அவன் கண்களில் ஆரம்பித்து… அவன் புன்னகையில் கரைந்து… அவனின் ஒவ்வொரு செயலிலும் தன்னையே தொலைத்திருந்தாள் திவ்யா. கேட்கும் பாடலில் எல்லாம் ராஜீவ் முகமே நர்த்தனம் ஆடியது.
மாலை ராஜீவ் அவனிடத்தில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட பின்னர் கிளம்பினாள். காரணம், ‘தன்னுடன் கேட் வரை வருவேன் என்று சொல்வான். தேவையில்லாத நடை’ என நினைத்தாள். அதைப் பலமுறை அவனிடம் சொல்லியும் இருக்கிறாள்.
காதில் இனிமையான பாடல் ஓட, நடக்க ஆரம்பித்தாள்.
‘உன்னுடன் நடக்கையிலே என் நிழல் வண்ணமாய் மாறியதே… முன்னே முன்னே நம் நிழல்கள்… ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே’ திவ்யா கேட்டுக்கொண்டிருந்த தாமரை வரிகளை நிஜமாக்கினான் ராஜீவ்.
அவள் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான். இருவரின் நிழலும் கலந்தது.
ஒருபக்க காதிலிருந்து இயர்பீஸை அவள் கழற்ற, “சொல்லாம கிளம்பிட்டீங்க பாரதி? அப்படியெல்லாம் உங்களை நிம்மதியா பாட்டு கேட்க விடமாட்டேன்” அவள் செவியில் குறும்பாக அவன் குரல்.
மற்றொரு செவியில்… ‘நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன். உன் சுவாசக் காற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்’
அவனைப் பார்த்து புன்னகைத்தாள். நிஜமாகவே அவன் பேசும் வார்த்தைகளை காலம் முழுக்க கேட்க ஆசை தான் என்றது அவள் மனம். “என்ன பாட்டு?” என கேட்டபடி அவள் கழற்றிய இயர்பீஸ் பாகத்தை அவன் தன் காதருகில் எடுத்துச்செல்ல…
‘நிஜம் தானே கேளடி… நினைவெல்லாம் நீயடி… நடமாடும் பூச்செடி… நீ என்னை பாரடி… உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி’ புருவங்கள் உயர்த்தி அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். பார்வைகள் கலந்தன. மௌனங்கள் மொழியாகின.
‘நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் வரங்கள் நீ கொடுத்தாய்… நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்’ பாட்டின் வரிகளிலிருந்த உண்மை இருவரையும் இனிமையாகக் குளிரச்செய்தது!
அடுத்த ஓரிரு நாட்களில் திவ்யாவின் பிறந்தநாளும் வந்தது. புதன்கிழமை ஆகையால் ராஜீவ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் சந்திப்பிற்காக திவ்யா முன் வேலை பார்த்த அந்த கிளைக்கு சென்றிருந்தான்.
திவ்யா அன்று சாம்பல் நிற புடவையில் வந்திருந்தாள். என்றும் இருக்கும் அந்த புத்துணர்ச்சி பிறந்தநாள் அன்று காணாமல் போயிருந்தது.
முதலில் கவின் வாழ்த்தினான். லேசாக புன்னகைத்து நன்றி சொன்னாள். அதே தான் ஹரிணிக்கும், வினையுக்கும். மனம் ஏனோ ராஜீவ்வை அதிகமாகத் தேடியது. தேடுவது தவறு என அறிவு ஆணி அடித்தாற்போல எடுத்துரைத்தாலும் மனம் தேடியது.
தவித்தாள். பிறந்தநாளிற்காகக் காலையில் வீட்டிலிருந்து அழைத்து அவளை வாழ்த்திய சங்கர் மற்றும் மீனாட்சி அடுத்து சொன்ன தகவல் தான் அவளை நிலைகுலையச் செய்திருந்தது.
“அம்மாடி… பர்த்டே அன்னைக்கு இன்னொரு குட் நியூஸ் டா” என்ற சங்கர், “மதியம் உன்னை பார்க்க ஒரு முக்கியமான ஆள் வரப்போறாங்க” என்றார்.
திவ்யாவுக்கு புரியவில்லை. மீனாட்சி தொடர்ந்தார். “தரகர் மூலமா ஒரு சம்மந்தம் வந்திருக்கு பாரதி. உன்ன பிடிச்சிருக்குனு சொல்லி நம்ம வீட்ல வந்து பேசினாங்க. பையனும் சென்னை தான். ஐடி தான். இன்னைக்கு உன்ன பார்க்க வரேன்னு சொல்லிருக்கார். உன் நம்பர் கொடுக்கறோம் பாரதி” என்றார்.
பின் சங்கர்… “தீரன் சமீரா விஷயம் தெரியும்னு சொன்னாங்க. நீ வேலைக்கு போறதுக்கு கூட சரினு சொல்லிட்டாங்க டா. நல்ல இடமா தெரியுது. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது முடிஞ்சா ரொம்ப நிம்மதி. நல்லபடியா முடியணும்னு கடவுளை வேண்டிக்கறேன் பாரதி” மனதில் இருப்பதை அப்படியே சொன்னார்.
பதில் எதுவும் சொல்லாத திவ்யா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்க்கச் சரி என்று சொன்னபோது கூட ராஜீவ் மேல் லேசாக பிடித்தம் இருந்தது. ஒரு ஈர்ப்பு. ஆனால் நாளாக நாளாக அது காதல் எனும் விருட்சமாக வளரும் என அவள் அப்போது எண்ணவில்லை.
பிறந்தநாள் என்பதையும் தாண்டி, அன்றைய நாள் ஒருவித பயத்தை அவளுக்குத் தந்தது. ராஜீவ்வை எண்ணி மனதில் அழுத்தம் அதிகமானது.
அந்நேரம், ஒரு அழைப்பு வர எடுத்தாள். அந்த வரன். பேசியவன் அவள் அலுவலகத்தின் கேட் அருகில் இருக்கும் உணவகத்தில் சந்திக்கலாம் என்றான். மறுக்க முடியவில்லை. வீட்டின் சிபாரிசாயிற்றே!
நேரம் நெருங்க நெருங்க உள்ளுக்குள் இதயம் வெடித்துச் சிதறும் அளவிற்கு துடித்தது. கவினிடம் மறுத்ததுபோல இப்போதும் மறுக்க முடியாது. காரணம் பெற்றோர்.
ஏற்கனவே அண்ணன் பிரச்சனையால் தளர்ந்து இருக்கும் பெற்றோரிடம் தானும் காதலிப்பதாகச் சொல்லி அவர்களை பயம் கொள்ள செய்ய, நோகச்செய்ய… அவள் விரும்பவில்லை.
மனதில் எழுந்த அழுகையைக் கண்களில் காட்டாவண்ணம் நாயர் டீ கடை அருகிலிருந்த அந்த உணவகத்துக்கு சென்றாள்.
அங்கே ராஜீவ் எப்போது கிளம்புவோம் என காத்திருந்தான். திவ்யாவை பார்க்க மனம் ஏகத்துக்கும் ஏங்கியது. ஆனால் அவன் நேரமோ இல்லை திவ்யாவின் நேரமோ… மதியம் நடக்கவிருந்த சந்திப்பு கொஞ்சம் தாமதமாக நடந்தது. முடிந்ததும் அங்கிருந்து கிட்டத்தட்ட பறந்து தன் அலுவலகத்திற்கு வந்தான்.
திவ்யா இல்லாதது பெரும் ஏமாற்றத்தைத் தர, அவளுக்கு தர இருந்த பிறந்தநாள் பரிசை அவள் மேசை ட்ராவரில் வைத்தான். அதை அவள் திறக்கும்போது… பரிசை கண்டபின் அவள் முகம் காட்டப்போகும் பாவங்களைக் காண ஆவலாக இருந்தான்.
ஆனால் திவ்யா சிறிதுநேரம் ஆகியும் வரவில்லை.
அங்கே திவ்யா அந்த வரனுக்காகக் காத்திருக்க, சில நிமிடம் கழித்து வந்தான். பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான் அவன். பெரிய பதவி. கொஞ்சம் அதிக போஷாக்கு… பொலிவு! கூடவே பார்வையில் கொஞ்சம் ஏளனம், கர்வம் எட்டிப்பார்த்தது!
திவ்யாவை பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கியது. அவளெதிரில் உட்கார்ந்தவன் தன்னை அறிமுகம் செய்துவிட்டு அவளின் அறிமுகத்திற்காக அவளை பார்த்தான். மருந்திற்கும் பிறந்தநாள் வாழ்த்து வரவில்லை.
பேசவே பிடிக்கவில்லை என்றாலும் தன்னை பற்றி சொன்னாள்.
சில நொடிகள் கழித்து… அவன், “உன் அண்ணன் விஷயம் பத்தி சொன்னாங்க. எங்க வீட்ல அதெல்லாம் ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு, வீட்லயும் பிடிச்சிருக்கு. கல்யாண தேதி குறிக்கலாம்னு சொல்லிட்டாங்க” வெளிப்படையாகச் சொன்னான்.
அமைதியாக இருந்தாள் திவ்யா. சிறிது நேரம் சென்றிருக்கும். அவனே, “இன்னைக்கு நான் பார்க்கவரேன்னு தெரியும்ல?” என்று கேட்க, அவள் ஆம் என தலையசைத்தாள்.
அவன் உடனே, “ஹ்ம்ம்… ஐடில வேலை பார்த்துட்டு ஊர்நாட்டான் மாதிரி எதுக்கு சாரீ? ஏதாவது வீட்ல விசேஷமா… புடவை கட்ட? கொஞ்சம் பெட்டெர் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் வேணும் திவ்யா” என்றான்.
“வாட்?” அவள் இருந்த அழுத்தமான மனநிலை இப்போது மாறியது.
“என்ன வாட்? இருக்கிற இடத்துக்கு ஏத்த மாதிரி நம்மள மாத்திக்கணும். மாடர்னா இல்லைனாலும் அட்லீஸ்ட் பட்டிக்காடா இல்லாம இருக்கலாம்.”
இதுவே வேறு யாராவது சொல்லி இருந்தால் திவ்யாவின் பதிலே வேறாக இருந்திருக்கும். ஆனால் வீட்டில் நடக்கவேண்டும் என எண்ணும் சம்மந்தம் ஆயிற்றே. எதுவும் அவள் சொல்லவில்லை. அது அவனுக்கு வசதியாகிப்போனது.
“சரி, நான் இம்ப்ரெஸ் ஆகணும்னு ஏதோ ஹோம்லி லுக் ட்ரை பண்ணிருக்கன்னே வச்சுப்போம். இதென்ன கலர்? பிளாக் அண்ட் க்ரே… ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றோம். கொஞ்சம் பெட்டெர், பிலெசன்ட் கலர்ல வரணும்னு தெரியாதா?” அவன் எண்ணங்களை அடுக்கினான்.
‘போடா நீயும் உன் சென்சும்!’ உரக்கச் சொல்ல தோன்றியது. ஆனால் அவன் மட்டுமே பேசினான்.
“என்னமோ போ! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். கல்யாணத்துக்கு அப்புறம் உன் ஆஃபீஸ் கிட்டன்னு சொல்லி இந்த ஏரியாக்கு வீடு மாற முடியாது. இந்த கம்பெனிலயே உனக்கு வேற பிரான்ச் மாத்தி கொடுப்பாங்களானு கேளு. முடியாதுனா நீ ஓஎம்ஆர்ல இருக்கிற வேற ஏதாவது கம்பெனிக்கு ட்ரை பண்ணு… இல்ல, இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ண ஓகேனா உன் இஷ்டம்” என்றான் விட்டேத்தியாக.
இன்னமும் நிறைய பேசினான். தனக்காக மட்டுமே பேசினான். அவள் எப்படி இருக்க வேண்டும் என பேசினான். தலையே சுற்றியது திவ்யாவுக்கு.
இவன் பேசிய ஒவ்வொன்றுக்கும் ராஜீவுடன் ஒப்பிட்டுப் பார்த்தது அவள் மனம். இதுவரை எதுவுமே அவன் திணித்ததில்லை என ராஜீவ்வுக்காக பேசியது அவள் மனம். ஆனால் சிந்தையில் அவள் அப்பா சொன்னது ஓடியது. இரண்டுபக்க தாக்குதலில் தவித்தாள். கூடவே இவன் பேச்சு! முடிவுக்கே வராதா என்ற எரிச்சலைத் தந்தது. மூச்சு முட்டியது.
அவள் எண்ணம் புரிந்தது போல அவன் பேச்சை முடித்தான். லேசாக மூச்சை வெளியிட்டாள் திவ்யா.
அவன் தன்னை ரெஃப்ரெஷ் செய்துகொண்டு வருகிறேன் என்று சொன்னதும், “நான் வெளிய வெயிட் பண்றேன்” என சொல்லி வெளியேறிவிட்டாள்.
அதேநேரம் வினய் அழைத்தான் என சொல்லி நாயர் டீ கடைக்கு அவனுடன் வந்திருந்தான் ராஜீவ். பக்கத்திலிருந்த உணவகத்தில் திவ்யா வெளிவருவதைப் பார்த்ததும் அதிர்வு, ஆச்சரியம் கூடவே ஆனந்தம்!
வினய்யிடம் சொல்லிவிட்டு… எப்போதும்போல திவ்யா பின்னாலிருந்து… ஆழ்ந்த குரலில்… “ஹாப்பி பர்த்டே பாரதி” என்றான்.
அவன் தான் என தெரியும். இருந்தும் அவள் இருந்த மனநிலையில் அதிர்ந்து திரும்பினாள். அவன் கண்ணாடியைத் தாண்டி அவன் கண்கள் மின்னியது.
அவள் எதுவும் பேசவில்லை. அவனே, “யூ லுக் வெரி ப்ரெட்டி இன் திஸ் சாரீ!” அவன் கண்களில் தான் எவ்வளவு ஆசை, காதல்.
இதுபோலவெல்லாம் சொல்லவேண்டும் என இதுவரை அவள் எதிர்பார்த்ததில்லை. ஆனால் உள்ளே இருந்த ஒருவன் அவளை அவள் உடைக்காகச் சாடியபின், அதையே ராஜீவ் மெச்சியது ஏனோ அவனிடம் தஞ்சம் புகை மனம் விரும்பியது.
கட்டுப்படுத்திக்கொண்டு, “தேங்க்ஸ் ராஜீவ்” என்றாள் வெறுமையாக. அது புரிந்ததுபோல… “என்னாச்சு… ஏன் டல்லா இருக்கீங்க?” அவன் கேட்டபோது உணவகத்திலிருந்து வெளியே வந்தான் அந்த வரன்.
வந்தவன், திவ்யாவிடம் நேரடியாக… “யாரிது?” என்று கேட்டான். இந்த நாள் எப்போது முடியும் என்றாகிவிட்டது அவளுக்கு. ராஜீவ் புருவம் உயர்த்தி அவனைப் பார்த்தான்.
“என்னோட ப்ராஜக்ட் லீட்… ராஜீவ்” என்றாள் அவனிடம். ராஜீவ்வுக்கு யாரிவன் என்ற கேள்வி இருந்தாலும் அமைதியாக புன்னகைத்தான்.
“லீட்டா… நல்லதா போச்சு” என்றவன், “எங்களுக்கு கல்யாணம் பேசிருக்காங்க மிஸ்டர் ராஜீவ்” இந்த வாக்கியம் ராஜீவ் உயிர்க்கூடு வரை சென்று எதிரொலித்தது. சொல்லமுடியாத ஒரு அதிர்வு உள்ளுக்குள் பரவ, கண்கள் தானாக திவ்யாவை பார்த்தது.
“நீங்க தான் ஓஎம்ஆர்ல ப்ராஜக்ட் சேஞ் பண்ண ஹெல்ப் பண்ணணும்” அந்த வரன் சொன்னது ராஜீவ் காதில் விழுந்தாலும், பதிலுக்குத் தலையை மட்டும் அசைத்தாலும், கண்கள் திவ்யாவை விட்டு அகலவில்லை.
திவ்யாவின் பார்வையில் இயலாமை. அவளால் ராஜீவ்வை அந்நிலையில் பார்க்கமுடியவில்லை.
ஓரிரு நொடிதான் தன்னை சுதாரித்துக்கொண்ட ராஜீவ், “ஸ்ச..ரி, ந்நா…ன் வரேன்” என அங்கிருந்து நகர்ந்துவிட்டான். வார்த்தைகள் இடறியது.
அன்று அந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியின் போது… மேடையில் ராஜீவ் பேசிய வசனம் அவள் காதில் எதிரொலித்தது.
‘இப்போகூட சில ரிஜெக்க்ஷன்ஸ் வர்றப்ப, நெகடிவிட்டி ஃபீல் பண்றப்ப, இல்ல கொஞ்சம் பதட்டமான சூழ்நிலைல ஸ்டேமர் (stammer) ஆகிறதுக்கு வாய்ப்பு இருக்கு’ இப்போது அவன் வார்த்தைகளிலிருந்த தடுமாற்றத்துக்கான காரணம் புரிய, திவ்யா இதயம் சில்லுசில்லானது.
அதே நிலை தான் ராஜீவ்வுக்கும். தொண்டை அடைத்தது. வினய் அழைக்க அழைக்க… அலுவலகம் உள்ளே நடந்தான். அவசரமாக திவ்யா ட்ராவரில் வைத்த பரிசை எடுத்து தன் ட்ராவருக்கு மாற்றினான். இதயம் கனத்தது. வெளியே சென்றுவிட்டான்.
திவ்யாவும் அங்கே வந்தாள். ராஜீவ் அவனிடத்தில் இல்லை என்பதைப் பார்த்தாள். வலித்தது. அப்போது வினய் திவ்யாவை அவள் எக்ஸ்டன்க்ஷன் ஃபோனுக்கு அழைத்து…
“திவ்யா, என் ஹெட்போன் ஒர்க் ஆகல. ஆர்கே ட்ராவ்ல அவனோடது இருக்கும். கொஞ்சம் எடுத்து தர்றீங்களா? மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுது” என்றான்.
திவ்யாவும் அதைத் திறக்க… அவள் கண்ணில் கண்டது, ஒரு சிறிய போட்லி வடிவிலிருந்த பாக்கெட். அதில் முழுவதும் அவளுக்கு பிடித்த ‘கிஸ்ஸஸ்’ சாக்லேட். அந்த பாக்கெட் மேல்…“ஹாப்பி பர்த்டே மை டியர் ரதி!” “வித் லாட்ஸ் ஆஃப் லவ்… செண்டிங் யூ ஸ்வீட் கிஸ்ஸஸ்… ஃபிரம் யுவர் ராஜு!” என எழுதி இருந்தது.
அவளின் மனநிலையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்ததால் அதைக் கொடுக்க நினைத்தான்.
ரதி… ராஜு! பார்த்தவளுக்கு அழுகையே வந்துவிட்டது. திவ்யா என்ற வினய்யின் அழைப்பு கேட்டவுடன் அவசரமாக அந்த ஹெட்செட்டை அவனிடம் தந்தாள்.
அவளால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை கிளம்பிவிட்டாள். இதுவரை கட்டுப்படுத்திய அழுகை கரைபுரண்டது. இரவு துளியும் உறங்கவில்லை. ராஜீவ்வாலும் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தளர்ந்துவிட்டான்.
அடுத்தநாள் ராஜீவ் அலுவலகம் வரவில்லை. வினய்யிடம் திவ்யா கேட்க, ‘இரவு தூங்காததால் இப்போது தூங்குகிறான்’ என்றான் வினய். அன்று முழுவதும் ஏதோ ஒன்றை இழந்த உணர்வு. அந்த ஏதோ ஒன்று ராஜீவ் என்பதும் தெரிந்தது. ஆனால் எதுவும் செய்யமுடியவில்லை. மனது கிடந்து தவித்தது.
அன்றைய தினம் முழுவதும் மனதில் அழுத்தம் அதிகமானது. அடுத்தநாள்… வெள்ளிக்கிழமை. ஊருக்கு செல்லவேண்டும். ராஜீவ்வை இன்றாவது பார்க்க அவள் மனம் ஏங்கியது.
அவளை மேலும் தவிக்க விடாமல் மதியம் வந்தான் ராஜீவ். இதுவரை அவள் அவனிடத்தில் பார்த்திராத முகம். அவளை வதைத்தது. அவன் பார்ப்பதைத் தவிர்த்தான். காரணம் பெரிதாக இல்லை.
‘தான் தான் அவளை தவறாகப் புரிந்துகொண்டதாகவும்… அவளுக்கு தன்னைப்போல ஒரு எண்ணம் இல்லாமல் கூட இருக்கலாம். மனம் விட்டு அவள் இதுவரை எதுவும் சொல்லவில்லையே. தேவையில்லாமல் அவள் வாழ்க்கையில் தொந்தரவாக இருக்கக்கூடாது’ என நினைத்தான்.
அவனை பார்ப்பதற்குத் தவித்த தருணங்கள்… இப்போது பார்த்ததும் அவன் தன்னை தவிர்க்கும் தருணங்கள் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மனதிற்குள் பல முடிவுகள் எடுத்தாள். அந்த முடிவின் வெளிப்பாடாக… அவள் மனம் இப்போது இருக்கும் தருணங்களை அவனுடன் கழிக்க அரற்றியது.
நேராக ராஜீவ்விடம் சென்றாள். பின், “என்னை எக்மோர்ல ட்ரோப் பண்ண முடியுமா ராஜீவ்?” என கேட்டாள்.
நிச்சயமாக அவனால் முடியவில்லை. அவளிடம் இருந்து ஒதுங்க நினைத்தான். ஆனால் அவளோ இப்படி கேட்டது… என்ன சொல்ல என தெரியவில்லை. மறுக்க எண்ணி வாயைத் திறக்கும்முன்… “ப்ளீஸ்” என்ற அவளின் குரல்.
மனதைத் திடமாக்கி அவளுடன் புறப்பட்டான். இம்முறை சங்கோஜமில்லாமல் அவன் பின்னால் அமர்ந்தாள். இருவருக்கிடையில் எந்த ஒரு தடுப்பும் இல்லை. ஆனால் முன்பு பயணத்தின் போது ஏற்பட்ட உணர்வுகள் துளியும் இப்போது இல்லை.
“ராஜீவ்… ஹாஸ்டல் போயிட்டு போலாமா ப்ளீஸ்?” கண்ணாடி வழியே அவளை பார்த்தான். அவளின் கண்கள் கூட கெஞ்சியது. அடைத்த இதயத்தைக் கண்கள் மூடி மூச்சை சீர் செய்து… சரி என்றான்.
அன்றைப்போல வேகமாகலெல்லாம் அவன் செல்லவில்லை. அவனும் இத்தருணங்களை மணப்பெட்டகத்தில் சேமிக்க எண்ணினான்.
ஊருக்கு எடுத்துச்செல்லும் பையை காலையே அலுவலகத்துக்கு எடுத்துவந்திருந்தாள். ஹாஸ்டெலில் எடுக்க எதுவுமே இல்லை. இருந்தும் வெறுமனே விடுதி உள்ளே சென்று விட்டு திரும்பி வந்தாள்.
பின்… “காஃபி?” அவள் கேட்க அவன் மறுப்பானா? அன்று தன் கடந்தகாலத்தை அவன் சொன்ன போது சென்ற இடத்திற்கே சென்றார்கள். பழைய நினைவுகள் மனதை அழுத்தியது.
பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். எதுவுமே பேசாமல் அடுத்த பத்து நிமிடம் மற்றவரின் அருகாமையில் கழித்தார்கள்.
அதேபோல எக்மோர் வரை சென்றாகிவிட்டது. அவள் அவனை கிளம்பச்சொல்லிச் சொன்னாள். அவன் கேட்கவில்லை. பையை வாங்கிக்கொண்டு அவன் நடக்க… உடன் நடந்தாள். அவனை இப்படி பார்க்க பார்க்க மனதின் பாரம் அதிகமானது.
அவனிடம் பேசியே ஆகவேண்டும் என்ற உந்துதல். வண்டி கிளம்பக் கொஞ்ச நேரம் இருக்க, அவனை அங்கிருந்த இருக்கையில் உட்கார சொன்ன திவ்யா… அவளும் அமர்ந்தாள்.
சிறிது நேரம் சென்றிருக்கும்… “அண்ணா விஷயம் தெரிஞ்சு கல்யாணம் பேச அவங்களே வந்திருக்காங்கனு அப்பா சொன்னாரு. மோஸ்ட்லி… இந்த சம்மந்தம் முடிஞ்சிடும்” கடைசி வாக்கியம் சொன்னபோது அவள் குரல் கமறியது.
ராஜீவ் அவள் பேசுவதை கேட்டபடி செய்வதறியாது வேறெங்கோ வெறித்தான்.
“தெரில. இதையெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னு தெரியல. ஆனா சொல்லணும்னு மனசு கடந்து அடிச்சுக்குது” இப்போது ராஜீவ் அவளை பார்த்தான்.
அவளோ ரயிலைப் பார்த்தபடி, “எனக்கு இது பிடிக்கலனு வீட்ல சொல்ல முடியல. வெளியே எதுவும் அவங்க காட்டிக்கலைனாலும், அண்ணனோட லைஃப் நினைச்சு பீல் பண்ணிட்டு தான் இருக்காங்க. அவங்க கிட்ட போய் எனக்கும் ஒருத்தரை பிடிச்சிருக்குனு என்னால சொல்ல முடியல”
இதை கேட்டவுடன் விழிவிரித்து திகைத்தான். ‘யாரைப் பற்றி வீட்டில் சொல்லமுடியவில்லை இவளால்? தன்னை பற்றியா?’ இதுவரை இருந்த மனநிலை மாறி இன்ப படபடப்பை அதிகப்படுத்தியது அவனுள்.
“ஐ நோ! உங்களை ரொம்ப அலக்கழிக்கிறேன்… எனக்கு புரியுது. ஆனா…” என்றவளால் அதற்கு மேல் பேசமுடியவில்லை. அருகில் அமர்ந்திருந்த அவனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள்.
கலங்கிய கண்களுடன் அவன் கண்களை பார்த்து… “எனக்கு தெரியல… என்ன செய்யன்னு… ஐம் சாரி ராஜு!” கண்களில் மன்னிப்பை ஏந்தி, வழிய இருந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடி, எழுந்து கிளம்பத்தயாரான ரயிலில் ஏறிவிட்டாள்.
அவள் செல்வதையே பார்த்திருந்த ராஜீவ், சில நொடிகளில் ரயில் பெட்டிகள் நகர ஆரம்பிப்பதை உணர்ந்துதான் நிகழ்வுக்கு வந்தான்.
—–
அடுத்தநாள் அவள் ஊருக்கு சென்ற அதே நேரம் ராஜீவ்வும் அவள் ஊரை அடைந்திருந்தான்!

Sema , waiting eagerly next episode
Thank you 🙂