உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -2A
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 2A:
வேலையில் மூழ்கியிருந்த ராஜீவ்வின் கவனத்தை மொபைலின் சத்தம் தன்புறம் திருப்பியது. எடுத்துப் பேசினான்.
“ஹ்ம்ம் திலீ!” ராஜீவ் ஆரம்பிக்க…
“பொண்ணு வீட்ல இருந்து பேசினாங்க ஜீவா. என்ன ஆச்சு? என்ன பண்ணி வச்ச?” ராஜீவ்வின் அண்ணன் திலீப் கொஞ்சம் காட்டமாகவே கேட்டான்.
“ப்ச்! எதையும் மறைக்கக்கூடாதுன்னு சொன்னேன் திலீ. இதுல என்ன தப்பு? பின்னாடி தெரிஞ்சு பிரச்சனை ஆயிடுச்சுனா?”
“இதுல என்ன பிரச்சனை வரப்போகுது ஜீவா? என்னமோ போ! அம்மா உன் மேல கோபமா இருக்காங்க! உன் அண்ணி தங்கச்சியை பேசலாம்னு சொல்றாங்க…” திலீப் தந்த தகவலில் கோபமுற்ற ராஜீவ்,
“சேட்டா ப்ளீஸ்! இப்போ எதுவும் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். சரி, நான் உன்ன அப்புறம் கூப்பிடறேன். முக்கியமான வேலை இருக்கு” சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டான் ராஜீவ்.
‘சேட்டா!’ என மரியாதை நிமித்தமாக ராஜீவ் அழைத்தாலே, ‘அவன் பேசும் மனநிலையில் இல்லை’ என்பது திலீப்புக்கு நன்றாகத் தெரியும். அதனால் மறுபடியும் அழைக்கவில்லை.
ராஜீவ்வுடன் பேசிவிட்டு, அந்த எண்ணங்களுடன் இருந்த திலீப்பை “காஃபி” என்ற குரல் திருப்பியது.
அவன் மனைவி பவித்ரா அங்கிருந்த டேபிள் மேல் காபியை வைத்துவிட்டு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அச்சமயம் அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. காபியை பருகினான், பின் வெளியே கிளம்பத் தயாரானான்.
அப்போது கூடத்திலிருந்து “பவித்ராஆஆ” என்ற பெருங்குரல் கேட்க, வேலையே அப்படியே விட்டுவிட்டு பரபரப்புடன் வேகமாக வெளியே சென்றாள்.
அங்கு சென்றது தான் தாமதம்… ஓடிக்கொண்டிருந்த டிவியில் கவனம் இருந்தாலும், திலீப்பின் அம்மா ஜானகி, “சும்மா எப்ப பார்த்தாலும் ரூம்லயே இருப்பயா? அப்படி என்னதான் பகல் நேரத்துலயோ! இந்தா… இந்த காபி கிளாஸ் எடுத்துட்டு போ… அப்புறம் கீர்த்தியும் பசங்களும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. வேலை சீக்கிரம் ஆகட்டும்” அழுத்தமான குரலில் கிட்டத்தட்ட அதட்டினார். கூடவே கூடுதல் விபரமும் சேர்த்துக்கொண்டார்.
எதுவும் பேசாமல், தலையசைத்துவிட்டு கிளாசை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் பவித்ரா.
ஒரு இயந்திரத்தைப் போல், எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் வேலை செய்துகொண்டிருந்தவளுக்கு அழைப்பு மணியின் சத்தமும் கேட்டது… கூடவே ஆர்ப்பாட்டமான குரலும்.
திலீப்பின் தங்கை கீர்த்தி தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தாள். வார நாட்களில் குறைந்தது மூன்று முறை வந்துவிடுவார்கள்.
கீர்த்திக்கு பள்ளி செல்லும் வயதில் கிஷன், நடை பழகி ஓடக் கற்றுக்கொள்ளும் வயதில் திஷா. கீர்த்தியின் மகனும், திலீப் பவித்ராவின் மகன் தருணும் பள்ளிக்கூடம் முடிந்து ஒரே பேருந்தில் தான் வீடு வந்து சேருவார்கள்.
பெரும்பாலும் பவித்ரா தான் இருவரையும் வீட்டிற்கு அழைத்துவருவாள். இன்று கீர்த்தி தனது மகனைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆகையால் கிஷன் அவளுடன் வந்திருந்தான்.
வீட்டினுள் நுழைந்த அடுத்த நொடி… கீர்த்தி, “அம்மா! இந்த ஜீவா பண்ண காரியத்தை பார்த்தியா மா? நான் அப்போவே சொன்னேன்ல… அவன் இப்படி தான் பண்ணுவான்னு. பெரிய உண்மை விளம்பி… எல்லாம் நடிப்பு! யார்கிட்டயுமே அவனுக்கு மரியாதை இல்லை” கத்தியபடி தன் அம்மா அருகினில் அமர்ந்தாள் கீர்த்தி.
ராஜீவ் மீது ஜானகிக்கு கோபம் தான். ஆனால் இந்த சம்மந்தம் தானாக தேடி வந்தது. அது தட்டிப்போனதில் பெரிய வருத்தம் இல்லை. ஆகையால், “சரி, அவனை பத்தி தான் தெரியுமே. விடு கீர்த்தி… அதான் உன் நாத்தனாரை கேட்கலாம்னு பேசினோம்ல. அதை செய்வோம்” அவள் காதில் ஏதோ கிசுகிசுக்க வர, அந்நேரம்…
கீர்த்தியின் குரல் கேட்டதுமே குடிக்கக் காப்பியை கலந்து எடுத்து வந்திருந்தாள் பவித்ரா. அதை வாங்கிய கீர்த்தி, “அண்ணி, இவளை கொஞ்சம் பிடிங்களேன். தூக்கிட்டே வந்தது மூச்சு வாங்குது” என தன் மகள் திஷாவை பவித்ராவிடம் கொடுத்தாள்.
“அப்படியே கொஞ்சம் கஞ்சியும் வச்சு குடுத்துடுங்க” முதலில் பேச்சிலிருந்த பணிவு இப்போது இல்லை. கொஞ்சம் ஓங்கியே ஒலித்தது. பவித்ரா எதுவும் பேசாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுப்பங்கரைக்கு சென்றாள்.
மாமியாரிடமும் நாத்தனாரிடமும் அதிகம் எதிர்த்துப் பேசமாட்டாள். ஒன்று அவளின் குணமே அப்படி… மற்றொன்று, தன் அண்ணன் மனைவி தான் கீர்த்தி. பெண் கொடுத்து பெண் எடுத்திருந்தார்கள்.
இவர்களிடம் இப்படி என்றால், கணவன் திலீப்புடன் அதிகம் பேசவே மாட்டாள். அதற்கான காரணமும் இருந்தது.
குழந்தைக்கு கஞ்சி காய்ச்சும்போதுதான் தன் மகன் தருணின் ஞாபகமும் வர, கணவனைத் தேடி கூடத்திற்கு வந்தாள்.
அங்கே ஜானகி, “ஜீவா கிட்ட பேசினயா திலீ? மாப்பிள்ளையோட தங்கைய பத்தி என்ன சொன்னான்?” என்றதும், அப்போது கூடத்திற்கு வர இருந்த பவித்ராவிற்கு திக் என்றது.
ராஜீவ் மிகவும் நல்லவன், தங்கைக்குப் பொருத்தமாக இருப்பான் என்பதில் அவளுக்கு சந்தேகமே இல்லை. ஆனால் இந்த வீடு?! எதற்கு இப்படி அனைத்திலும் அவசரம்? வேறு பெண்ணா இல்லை? தங்கையின் விருப்பத்தைக் கேட்டார்களா?! என்ற கேள்விகள் மனதில்.
அவளின் இந்த கல்யாணம் குறித்த யோசனைக்கு அவசியமே இல்லை என்பது போல திலீப் பேசினான்.
“இப்போ எதுவும் பேச வேண்டாம்னு சொல்லிட்டான் மா. கொஞ்ச நாள் இந்த கல்யாண பேச்சை நிறுத்தி வைப்போமே! எல்லாத்துக்கும் அவசர படவேண்டாம். அவசரத்தில செய்து…” என்று சொல்லும்போது அங்கே வந்திருந்தாள் பவித்ரா. அவளை பார்த்ததும் அப்படியே சுவிட்ச் தட்டியதுபோல நிறுத்திவிட்டான்.
‘என்ன பேச இருந்தோம்?!’ என எண்ணும்போது, தன்னையே திட்டிக்கொள்ளத்தான் தோன்றியது திலீப்புக்கு.
அவன் பேசியது, பின் நிறுத்தியது என அனைத்தையும் பார்த்திருந்தாலும், மனம் அதை எண்ணி எப்பொழுதும் போல வேதனை கொண்டாலும், வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாத பவித்ரா,
“திஷாக்கு கஞ்சி குடுக்கணும். தருண் வந்துடுவான். கூட்டிட்டு வந்திடுங்க” மகனை அழைத்துவரச்சொல்லி மெல்லிய குரலில் திலீப்பிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அவனும் தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான்.
ஆனால் அங்கே கீர்த்தியின் குரல் மட்டும் நின்றபாடில்லை.
“பாத்தியாம்மா? நல்லவேளை என் வீட்டுக்காரர் கிட்ட இன்னும் இதை பத்தி பேசல. நான் எப்பவும் சொல்றது தான் மா. யார் பேச்சை ஜீவா கேட்டிருக்கான்?! அதுவும் உன் பேச்சை மதிக்கிறதே இல்ல. எல்லாம் திமிர்”
கூடவே இன்னமும் நிறைய வசைபாடி, எப்பொழுதும் போல ஜானகியின் எரியும் மனதில் எண்ணெய்யை விடும் வேலையை செவ்வனே செய்தாள் கீர்த்தி.
“நான் சொல்லி, அதெப்படி அவன் கேட்காம போவான்? எதை சொன்னா அவன் கேட்பான்னு எனக்கு தெரியும். உன் அப்பா வரட்டும்” கீர்த்தியின் தூபம் நன்றாவே ஜானகியிடம் வேலை செய்தது.
அடுப்பங்கரையில் திலீப் பேசவந்ததை நினைத்து லேசான கண்ணீர் தடங்களுடன் வருந்திக்கொண்டிருந்த பவித்ராவுக்கு, இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டதும் எரிச்சலாக வந்தது. ராஜீவ் மேல் எதற்கு இவ்வளவு வன்மம்! என்ற எண்ணமே அவள் மனதில்.
சிறிது நேரத்தில் மகனுடன் திரும்பிய திலிப், அடுப்பங்கரை வாசலில் நின்று, பவித்ராவிடம் பட்டும் படாமல், அவள் முகம் கூட பாராமல், “நைட் வர லேட் ஆகும்!” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
இதெல்லாம் அடிக்கடி நடப்பதுதான். அவன் பேசுவதே அப்படிதான். ஆகையால் அது அவளைப் பெரிதாக பாதிக்கவில்லை. போதாததற்கு வேலை முழுவதுமாக பவித்தாராவை ஆட்கொண்டது.
சாதாரண நாட்களிலேயே வேலை கண்ணைக்கட்டும், இதில் கீர்த்தி வரும் நாட்கள் உடலைச் சுருட்டி புரட்டிப்போடும் அளவுக்கு அதிகமாக இருக்கும். உடல் வலியுடன் அவ்வப்போது மனதின் வலியும் சேர்ந்து, இரவை எட்டும்போது முற்றிலுமாக தளர்ந்துவிடுவாள்.
அன்றும் முழுவதுமாக வதங்கி இரவு ஆன பின், மகனை அவன் கட்டிலில் உறங்கவைத்தபின், தரையில் கால் நீட்டி உட்கார்ந்துவிட்டாள். கொஞ்ச நாட்களாக காலில் வலி அதிகமானதை போல இருந்தது.
மணியை பார்க்க, அது பதினொன்று எனக் காட்டியது. இன்னமும் திலீப் வந்து சேரவில்லை. அவனுக்கு இரவு உணவு பரிமாறிய பின், அவள் சாப்பிடவில்லையெனில் உண்டுவிட்டு, அடுக்களையை ஒதுக்கிவைத்துவிட்டு உறங்கவேண்டும் என்பது அவ்வீட்டின் எழுதப்படாத நியதி.
காத்திருந்தாள்… ஆனால் உடலின் அசதி, உட்கார்ந்தபடியே அவளை உறங்கச்செய்துவிட்டது. திடீரென இருட்டில் ஏதோ சத்தம் கேட்டு கண்விழித்தவள், வந்திருந்த திலீப்பின் கோலம் கண்டு அதிர்ந்தாள்.
இதுவரை தள்ளாடும் அளவிற்கு குடித்து அவள் பார்த்ததில்லை திருமணமான இத்தனை வருடங்களில். இன்று என்ன ஆயிற்று?!
தன்னை தான் பார்க்கிறாள் என்பதை உணர்ந்த திலீப், “எனக்கு சாப்பாடு வேணாம்… நீ படு” என்பதை மட்டும் சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துகொண்டான்.
அவனையே பார்த்திருந்தவள் மனது கோபத்திலும் வேதனையிலும் தவித்தது. இந்த புது பழக்கம் வழக்கமாகக் கூடாது என்ற வேண்டுதலுடன் அடுப்பங்கரைக்கு சென்றாள்.
அவள் தந்தைக்கு அடிக்கடி செய்தது, அதையே கணவனுக்கும் செய்யும் நாள் வரும் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆற்றாமையுடன், எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக்கொண்டு, அடுக்களை சுத்தம் செய்தபின், தங்கள் அறைக்கு சென்றபோது அவனும் குளித்துமுடித்து வந்திருந்தான்.
எதையும் பேசாமல், கோபத்தை அந்த கிளாஸை டேபிள் மேல் வைப்பதில் காட்டி, அமைதியாகப் படுத்துக்கொண்டாள். அவளின் கோபம் அவனுக்கும் நன்றாகவே புரிந்தது.
எலுமிச்சை சாற்றைக் குடித்துவிட்டு படுத்தவன் மனது ஒருநிலையிலேயே இல்லை. தவிப்பு, ஏமாற்றம், இயலாமை என அவனை புரட்டிப்போட்டிருந்தது. வெறித்து விட்டதை பார்த்துக்கொண்டிருந்தவனை, திரும்பிப்படுத்த போது அவளும் பார்த்தாள். அவள் பார்வையை அவனும் உணர்ந்தான்!
———
வாரங்கள் சில கடந்திருந்தன.
ராஜீவ் திவ்யபாரதி என்ற பெண்ணை கிட்டத்தட்ட மறந்திருந்தான். நேர்காணலுக்கான தினத்தன்று அவளைப் பார்த்தான், அவள்மேல் ஏதோ ஒரு நல்லெண்ணம். கூடவே ஈர்ப்பு! பின் அவள் அங்கு சேர விருப்பமில்லை என்று சொன்னதைத் தெரிந்துகொண்டபின், பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்குமுன் சிலர் இப்படி சேராமல், வேலையை நிராகரித்துப் பார்த்துள்ளான். ஆகையால் திவ்யா செய்தது பெரிய தாக்கத்தைத் தரவில்லை.
அதே தான் திவ்யாவிற்கும். அன்று ராஜீவ்வின் திறமையால் ஈர்க்கப்பட்டாள். அவ்வளவே! அவன் பெயர் கூட அவளுக்கு தெரியாது. அந்த நிறுவனத்தின் ராஜீவ் வேலைபார்த்த கிளை தூரமாகவுள்ளது என தவிர்த்தாளே தவிர, தனது இருப்பிடத்தின் அருகில் உள்ள கிளை என்றால் சேருவதற்கு சம்மதம் என்றே சொல்லி இருந்தாள். அதன் பொருட்டு அவளை ராஜீவ் நிறுவனத்திலேயே வேலைக்கு எடுத்திருந்தனர், ஆனால் வேறு கிளையில்.
அவளும் சேர்ந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது.
புதன்கிழமை, அன்றைய தினம் இருவருமே எதிர்பார்க்கவில்லை இருவருக்குள் இப்படி இரு சந்திப்பு ஏற்படுமென! இனி இது தொடர் சந்திப்பாக மாறுமெனவும் எதிர்பார்க்கவில்லை!

Unga narration always semma than ka..apdiye visualise panniralam..
Dileep – pavi next pair vanthachu .
Sila sil Keerthi Mari ipdi than irukanga..
Annan, Thambi wife ah velaikariya mathiranga..
Pavi – Dileep ku nadula enna nadanthu irukum?
Ponnu solrathu sariya thapa nu think pannama apdiye kekra Amma Nala family la evlo issues varuthula..
Rajeev – Divya seekiram meet panna porangala..
Thankyou so much da ❤️
Dileep and Pavi parts poga poga varum and konja konjama reveal aagum 😊
Much awaiting for future episodes..❤❤❤❤ wat happened btwn dhilip and pavi ☹☹☹
Thank you da ❤️ Dileep and Pavi parts/problems will come in future episodes da 🙂