உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -2B
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 2B:
ராஜீவ் அந்நிறுவனத்தின் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் எனப்படும் பேச்சுக்கலை, பொது பேச்சாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் குழுவில் செயலாளராக இருந்தான்.
அந்த குழு வாரம் ஒருமுறை, புதன்கிழமைகளில் மதியவேளை கூடும். பொதுவாக இதற்கென தனி கான்ஃபெரென்ஸ் ரூம் புக் செய்திருப்பார்கள்.
அன்றைய புதன்கிழமை நாளில் ராஜீவ் அந்த கிளைக்கு காலையிலேயே வந்திருந்தான். மதியம் வரை வேலை பார்த்துவிட்டு, பின் அந்த கூட்டத்திற்கு செல்ல நினைத்திருந்தான்.
அவன் வேலை செய்துகொண்டிருந்த நேரம் ஒருவன்,
“ஆர்கே! சின்ன பிரச்சனை ஆயிடுச்சு. ப்ராஜக்ட் டெலிவரி டென்ஷன்ல இருந்தப்ப ரூம் புக் பண்ணிருக்கேன் போல… தப்பான பிரான்ச்ல புக் பண்ணிட்டேன்! இப்போ இங்க எல்லா ரூம்ஸ் புக்ட் ஆர்கே… நம்ம மீட்டிங் இப்போ என்ன பண்றது? ப்ரெசிடெண்ட்க்கு தெரிஞ்சா…” நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்விடம் படபடத்தான். கண்களில் லேசான பதட்டம்.
அதை புரிந்துகொண்ட ராஜீவ் உடனே, “ஹே மேன்! எதுக்கு இவ்ளோ டென்ஷன்? இன்னைக்கு உன் ஸ்பீச் இருக்குல்ல? ரிலாக்ஸ்!” என்றவன் ஓரிரு நொடிகள் மட்டுமே யோசித்தான்.
பின், “நான் சொல்ற மாதிரி எல்லாருக்கும் மெயில் பண்ணு! ‘டோஸ்ட்மாஸ்டர்ஸ் எம்ப்லாயீ மெம்பர்ஷிப்ஸ் அதிகப்படுத்தும் நோக்கத்துல, அண்ட் டு அட்ராக்ட் எம்பிலாயீஸ்… இன்னைக்கு ஃபோர் அ செஞ், நம்ம மீட்டிங் கேஃபிடேரியால நடக்கப்போகுது! லெட்ஸ் ராக்!’ அப்படினு மெயில் பண்ணு! அதுக்கு நானும் ரிப்லை பண்றேன். அப்புறம் அட்மின் கிட்ட சொல்லி, சின்ன மைக் செட்டப் அண்ட் ப்ரொஜெக்டர் மட்டும் சீக்கிரம் அரேஞ் பண்ண சொல்லிடு! டன், அவ்ளோதான்” என்றான் சாதாரணமாக.
இதற்கு இவ்வளவு எளிதான, அதுவும் அருமையான யோசனை சொன்ன ராஜீவ்வை வியப்புடன் பார்த்தவன், நிம்மதியுடன் தலையசைத்துவிட்டு சென்றான்.
பத்தாவது தளம் முழுவதும் உணவகம். அதில் ஓர் இடத்தில் இவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். ஊழியர்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருந்தார்கள்.
மீட்டிங் தொடங்குவதற்குத் தயாரான நிலையில், அன்று பேசவிருந்த ஆட்களின் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஒருமுறை நினைவுபடுத்தினான். அதில் அனுபவம் மிக்கவர்களும், புதியவர்களும் அடக்கம்.
முதலில் அனைத்தும் சரியாகவே சென்றது.
நிறைய தகவல்கள் பகிரப்பட்டது. பேச்சாளர்கள் பேசப் பேச, உணவு சாப்பிட வந்த சிலரின் கவனம் இங்கே திரும்பியது. இன்னும் சிலர் இதில் ஈடுபாட்டுடன் நாற்காலியை கூட்டத்தின் அருகில் போட்டபடி கவனித்துக்கொண்டிருந்தனர். இன்னமும் சிலர் அங்கே நின்றிருந்தனர்.
கூட்டம் கொஞ்சம் அதிகம் ஆன போது, அன்று பேச இருந்த நபருக்கு லேசான தயக்கம் பேசுவதற்கு.
காரணம், இம்ப்ராம்டூ ஸ்பீச் எனப்படும் முன்னேற்பாடின்றி திடீரென கொடுக்கப்படப்போடும் தலைப்பில் பேசவேண்டும். பொதுவாக இருபது இருபத்தைந்து மக்களுக்கு மத்தியில், அதுவும் குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையில் தான் பேசவேண்டும். ஆனால் இப்போது இவ்வளவு பேர் முன்னிலையில் என்பதை அந்த நபர் எதிர்பார்க்கவில்லை. தயக்கம் மேலோங்கியது.
ராஜீவ் தேற்ற முயன்றான், ஆனால் சிறிய கூச்சம் அந்த நபரை பேசவிடவில்லை.
அதேநேரம் மதிய உணவிற்காக தன்னுடன் வேலைபார்க்கும் ஹரிணியுடன் அங்கே வந்திருந்தாள் திவ்யா. எப்போதும் சாப்பிட மட்டுமே உபயோகிக்கப்பட்டிருந்த இடத்தை இன்று இந்நிகழ்வு ஆக்கிரமித்திருந்ததால் அவளின் கவனமும் அங்கே சென்றது.
அந்நேரம், வேறு வழியில்லாமல் இம்ப்ராம்டூ ஸ்பீச் இடத்தை நிரப்ப… கொஞ்சம் அனுபவமுள்ள பேச்சாளர் தேவைப்பட, ராஜீவ் பேச வேண்டியதாயிற்று.
அவன் பெயரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.
இளநீல நிற சட்டையும் சாம்பல் நிற பேண்டும் அவனுக்கு கச்சிதமாகவே பொருந்தி இருக்க, அதுவரை கையில் மடித்துவிட்டிருந்த சட்டையை நேர்த்தியாக மாற்றியபின், கூட்டத்தின் முன் வந்து நின்றான் ராஜீவ்.
அவனை பார்த்தவுடன் திவ்யாவின் கண்கள் தானாக விரிந்தது. ‘ராஜீவ்’ என்ற பெயர் அனுமதியின்றி அவள் சிந்தையில் தானாகவே புகுந்து, பதிந்தது. சன்னமாக பெயரை முணுமுணுத்தாள்.
அப்போது ராஜீவ்வுக்கு ‘ஹவ் டஸ் பப்ளிக் ஸ்பீக்கிங் பெனிஃபிட் யூ பெர்சனலி? (பொது பேச்சாற்றல் எவ்வாறு உங்கள் வாழ்விற்கு சாதகமாக அமைந்தது?)’ என அந்நேரத்துக்கு பொருத்தமான, மற்றவர்களுக்கு உதவக்கூடிய தலைப்பை தந்தார்கள்.
புன்னகையுடன், ஸ்டாண்டில் மாட்டப்பட்டிருந்த மைக்கை கைக்கு மாற்றி, ஆங்கிலத்தில் பேச துவங்கினான்.
“ஹலோ ஆல்! இந்த டாபிக் பத்தி பேசறதுக்கு முன்னாடி, ஒரு குட்டி 2 மினிட் ஸ்டோரி!” என்றவன் மணியைப் பார்த்துவிட்டு, சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் பார்த்தபடி, “சின்ன வயசுல ரொம்ப சுட்டியா, எல்லா விஷயங்களையும் சரியா செய்துட்டு வந்த ஒரு சிறுவனுக்கு, பேச்சு மட்டும் வர கொஞ்சம் தாமதமாச்சு.
தட்டு தடுமாறி பேச ஆரம்பிச்ச சமயம், திடீர்னு நடந்த ஒரு இன்சிடெண்ட்ல வந்த பேச்சும் சரியா வராம போய்டுச்சு. திக்கி திக்கி தான் பேசுவான். வீட்ல இருந்தவங்களே திக்குவாய்ன்னு கிண்டல் பண்ணினாங்க. ஸ்கூல்ல இன்னமும் மோசம். நிறைய இடத்துல இதுனால அந்த பையன ரிஜெக்ட் பண்ணிடுவாங்க.
அப்போதான், ஏன்ஜெல் மாதிரி ஒரு லேங்வேஜ் டீச்சர் அவனுக்கு கைகொடுத்து தூக்கிவிட முயற்சி பண்ணாங்க. ஸ்பீச் தெரபில ஸ்டார்ட் பண்ணி, எப்படி பேசணும்னு சொல்லிக்கொடுத்து, திடீர்னு ஒருநாள் மேடைல ஏத்தி விட்டுட்டாங்க. அந்த பையனுக்கு பயம். நடுக்கம். பேச்சுலையும், உடலையும்.
ஏதோ கஷ்டப்பட்டு பேசிட்டு வந்துட்டான். ஆனா அந்த டீச்சர் அத்தோட விடல. எல்லாவிதமான ப்ராக்டிஸ் கொடுத்து கொடுத்து, எல்லா நிகழ்ச்சிகளிலும் அவனை மேடை ஏத்தி விட்டுடுவாங்க. முதல்ல பயந்து, திக்கி திக்கி பேச பழகி இருந்தவனுக்கு, மேடை எப்போ பழகுச்சோ, அப்போவே அவனுக்கு தயக்கம் போய் துணிச்சலும், தன்னம்பிக்கையும் வளர்ந்துச்சு.
தன்னம்பிக்கை எப்போ வந்துச்சோ, பேச்சும் கொஞ்சம் சரளமான வர ஆரம்பிச்சுது. அந்த பையன் ஒருவேளை தன்னம்பிக்கை இல்லாம, பயத்தோட, இன்செக்யூர்டாவே இருந்திருந்தா, இந்நேரம் இப்படி உங்க முன்னாடி நின்னு பேசிட்டு இருக்கறது சந்தேகம் தான்!”
இதை அனைத்தையும் அவன் சொன்னபோது குழு உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என அனைவரின் கவனமும் ராஜீவ் மேலே ஆச்சரியமாக பதிந்திருந்தது. திவ்யா மட்டும் விதிவிலக்கா என்ன? அவளின் பார்வை அசையவில்லை… அவனையே பார்த்திருந்து.
இவனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்க வாய்ப்பே இல்லை என்பதுபோல இருந்தது அவன் பேச்சு. நேர்பார்வையுடன், நிறுத்தி நிதானமாக, தெளிவாக, சரளமாக, கோர்வையாக பேசினான்.
“இப்போகூட சில ரிஜெக்க்ஷன்ஸ் வர்றப்ப, நெகடிவிட்டி ஃபீல் பண்றப்ப, இல்ல கொஞ்சம் பதட்டமான சூழ்நிலைல ஸ்டேமர் (stammer) ஆகிறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்போ என்னை வேற விஷயத்துல இன்வோல்வ் பண்ணிப்பேன். இல்ல, சுத்தி இருக்கவங்க கிட்ட இருந்து பாசிடிவிடிய க்ராஸ்ப் பண்ணிப்பேன்”
அவன் இதை சொன்னபோது, அவன் மனதில் தனக்கு இந்த பிரச்சனையால் தட்டிப்போன சம்மந்தம் ஞாபகம் வந்தது. அப்போது தானாகவே திவ்யாவும், அன்று அவள் பேசிய பேச்சும் ஞாபகம் வந்தது. அதுமட்டுமா… இப்போது கூட்டத்தில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளும் அவன் கண்களில் பட்டாள்.
அவன் திகைத்து அவளை விழித்துப் பார்க்க… அவளும், ‘தன்னை கண்டுகொண்டான்’ என எண்ணி அவனை பார்த்தாள். பின், லேசான தலையசைப்புடன் புன்னகைத்தாள். இருவருக்குள்ளும் ஏதோ ஒரு பரபரப்பு, சிலிர்ப்பு!
இதனைத்தும் ஓரிரு நொடிகளில் அரங்கேற, அவளின் புன்னகைக்கு மென்னகையை பதிலாக்கி, ஒரு சின்ன செருமலுடன் மீண்டும் தொடர்ந்தான்.
“சோ பப்ளிக் ஸ்பீக்கிங்ல எப்படி பேசறோம் அப்படிங்கறது விட, எவ்ளோ காண்ஃபிடென்டா பேசறோம் அப்படிங்கறதுதான் முக்கியம். அந்த தன்னம்பிக்கை வந்துடுச்சுன்னா, மத்த எல்லா குவாலிட்டிஸ் தானா வந்துடும்.
அந்த சமயம் எனக்கு பப்ளிக் ஸ்பீக்கிங்ல உதவ ஒரு டீச்சர் கிடைச்சாங்க. அதேபோல இப்போ நிறைய பேருக்கு இந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் இருக்கு!” என்று சொல்லி அவன் முடித்தபோது மூன்று நிமிடங்கள் கடந்திருந்தது.
அங்கே மிதமான கைதட்டல்கள். அதைத் தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டு விடைபெற்றுக்கொண்டான். அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன.
அவ்வப்போது ராஜீவ் கண்களும் திவ்யாவை தொட்டு மீண்டது. தன்னை பார்க்கிறாள் என்பதை அவனும் உணர்ந்தான்.
அப்போது, “வாவ்! அவ்ஸம் ஸ்பீச்ல திவ்யா?” என்றாள் திவ்யாவுடன் வந்திருந்த, அவளுடன் வேலைப்பார்க்கும் ஹரிணி.
“ஹ்ம்ம்” என்று பதில் தந்தாலும் திவ்யாவின் கவனம் முழுவதும் ராஜீவ் மேல் தான் இருந்தது. மறுபடியும் அவளை ஈர்த்தான். ஹரிணி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
அங்கே அந்த குழுவின் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது. அனைவரும் இப்படி ஒரு இடத்தில் இன்றைய நிகழ்ச்சியை நடத்தியதற்காக ஒருங்கிணைப்பாளரை பாராட்ட, ராஜீவ்வும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவனை பாராட்டினான்.
சில நொடிகளில் அவன் ராஜீவ்விடம், “ஆர்கே! இந்த அப்ரிஷியேஷன்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டியது!” என்றதும், “ஓ ஓ! கமான்! இதுல என்ன இருக்கு?! இவ்ளோ ஷார்ட் டைம்ல, இதை ப்ராபரா ஆர்கனைஸ் பண்ணி, சூப்பரா முடிச்சது நீ தானே! யூ டிசேர்வ் இட்”
அதற்கு மேல் நேரம் தாழ்த்தாமல் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு, திவ்யாவை நோக்கி நடந்தான். முழங்கை வரை சட்டையை மடித்துவிட்டபடி வந்துகொண்டிருந்தவனை திவ்யாவுடன் சேர்ந்து ஹரிணியும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அவன் இங்க வர்ற மாதிரியே இருக்கு திவ்யா” ஹரிணி சொன்னதற்கு “ஹ்ம்ம்” என்றும், தன்னை நோக்கி வரும் ராஜீவ்வுக்கு அழகான புன்சிரிப்பை பதிலாக தந்தாள்.
அவளை நிச்சயமாக அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை. அவளை நெருங்கும்வரை, அவளை கண்கள் விலகாது பார்த்தபடி வந்தான்.
மிகவும் சாதாரணமாக, உயர்த்தி போடப்பட்டிருந்த போனிடெயில், மிதமான நிறத்தில் உடை, மற்றும் பார்த்தவுடன் தெரியும் மென்மையான புன்னகையுடன் கூடிய நிமிர்வு என அவளை உள்வாங்கியபடி வந்தான் ராஜீவ். அவளை நெருங்க நெருங்க மனதில் இனம்புரியாத மெல்லிய மழைச்சாரல்!
“ஹலோ பாரதி! டிண்ட் எக்ஸ்பெக்ட் யூ ஹியர். எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடி வர, அவனின் குரல், மற்றும் அழைத்த விதம் அவளை உள்ளவரை இன்பமாக படபடக்க வைத்தது.
“நல்லா இருக்கேன். டூ வீக்ஸ் பேக் தான் இங்க சேர்ந்தேன்” இருவரின் பேச்சு சில மணித்துளிகள் நீண்டது.
——
அன்றைய தினம் அதற்குப்பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், சந்தித்தபோது பேசியவை மனதில் அவ்வப்போது வந்து ஆட்டம் காட்டியது. கூடவே அடுத்தவார புதன்கிழமைக்காக லேசாக எழுந்த ஆவலுடன், இருவருமே காத்திருந்தார்கள்!
