உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 5A
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 5A:
வாரங்கள் சில கடந்து மாதம் ஒன்றை கடந்திருந்தது.
திவ்யா ஊரிலிருந்து திரும்பிய பின், இதுவரை ஒரு வார புதன்கிழமை மட்டுமே ராஜீவ்வை பார்த்திருந்தாள்.
ராஜீவ்வுக்கு, இடையில் இரண்டு வாரங்கள் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கூட்டம் நடைபெறாததால் இந்த கிளைக்கு அவன் வரவில்லை. ஆகையால் சந்திப்பும் நடக்கவில்லை.
திவ்யாவுக்கும் வேலை அதிகமாகிப்போனதால், அவளின் பணி நேரமும், உணவு நேரமும் மாறிக்கொண்டே இருந்தது.
அன்று அவள் ஹரிணியை தேர்வு செய்ததற்காக நன்றி சொல்லி அனுப்பிய குறுஞ்செய்திக்கு, உடனே அனுப்ப வேண்டும் என்பதற்காக முக்கிய வேலையின் நடுவில் வெறுமனே சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பியிருந்தான். வேலை முடிந்த பின் என்ன அனுப்புவது என தெரியாமல் அப்படியே விட்டுவிட்டான்.
அந்த சமயம் தான், தீரனுடன் ஊருக்குச் சென்று திரும்பி இருந்த திவ்யா, அதற்கு பின் வந்த புதன் கிழமை ராஜீவ்வை அழைத்திருந்தாள், உதவி செய்ததற்காக நேரில் நன்றி சொல்வதற்கு.
இம்முறை திவ்யா சீக்கிரமே வந்துவிட, ராஜீவ் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆனது.
பின்புறத்தை காட்டி அமர்த்திருந்தவளை, பின்னிருந்தே “ஸாரி பாரதி. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்று சொன்னபடி அவன் வர, அவன் குரலில் திருப்பிய திவ்யாவின் கண்களில் அவ்வளவு மலர்ச்சி. அது அவளின் இமை படபடப்பிலும் தெரிந்தது.
அது ஏனோ இவனை பார்க்கும்போது அவளுக்குள் ஏற்படும் உணர்வுகளுக்கு எல்லைக்கோடே விதிக்கமுடிவதில்லை. அதுவே தான் அவனுக்கும். இருவரும் மற்றவரை பார்க்காதவரை பெரிதாக தாக்கம் இருவருக்குள்ளும் ஏற்படுவதில்லை. ஆனால் பார்க்கும் தருணம் அதை தடுக்க முடிவதில்லை.
“ஓ! தட்ஸ் ஓகே” என்ற திவ்யா, “சாப்பாடு வாங்கிட்டு வரலாமா…” என புத்துணர்ச்சியுடன் கேட்டாள். அவளின் பிரகாசம் அவனுக்குள்ளும் பரவியது. மலர்ந்த புன்னகையுடன் உணவு வாங்குவதற்கு அவளுடன் சென்றான்.
“தேங்க்ஸ் ராஜீவ்! ஹரிணி இஸ் சோ ஹாப்பி. கண்டிப்பா நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவா” என்றதும், “ஹ்ம்ம்! இந்த வீக் ஒர்குக்கு வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்க” என்றான்.
இருவரும் உணவு சாப்பிடும்போது, “ஹரிணியும் இல்ல, இங்க புது ஃபிரெண்ட்ஸ் செட் ஆகிட்டாங்களா?” என ராஜீவ் கேட்டதற்கு, “ப்ச் இல்ல. தனியா தான் வந்துட்டு போயிட்டு இருக்கேன். எங்க டீம்ல இன்னும் யாரும் செட் ஆகல!” என்றாள்.
சட்டென யாருடனும் நெருங்க சற்றே யோசிக்கும் குணமுடையவள் திவ்யா. ஹரிணி வராத இந்த ஒரு வாரமும் தனியே தான் இருக்கிறாள், பெரிதாக நட்பு வட்டம் இல்லாமல்.
“ஹ்ம்ம், ஒர்க் எப்படி போகுது பாரதி?”
“கொஞ்சம் ஹெக்டிக் தான் ராஜீவ். ஒவ்வொரு வீக் ஒவ்வொரு டைமிங். மேனேஜ் பண்ணிடலாம். பட் ஏனோ தெரியல, என் ப்ராஜெக்ட்ல விமன் எம்ப்ளாயீஸ் ரொம்பவே கம்மியா இருக்காங்க. மே பி டைமிங் செட் ஆகலையானு தெரியல” என்றாள்.
“ஓ, இருக்கும். நைட் ஷிஃபிட்ஸ் இருக்கா?” என்றதற்கு ஆம் என்றாள். பின் அவன், “லேடீஸ்க்கும்?” என கேட்க, “இதுவரை எனக்கு வரல, வர வாய்ப்பு இருக்குனு லீட் ராகேஷ் சொன்னார்” என்றாள்.
“ஹ்ம்ம்! முடியலைன்னா நீங்க உங்க அப்ஜெக்ஷன் சொல்லலாம் பாரதி. பிகாஸ் நீங்க சேரறப்ப, நைட் ஷிஃபிட் இருக்கும்னு சொல்லி உங்களை எடுக்கல… இல்லையா?” என்றான்.
ஏனென்றால், அவளை தன் ப்ராஜெக்டுக்கு தான் எடுத்திருந்தான். ஆகையால் இரவு வேலை பார்க்க வேண்டும் என்பதை அவளிடம் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அவன் சொன்னதை திவ்யாவும் கேட்டுக்கொண்டாள்.
இருவரும் சிறிது நேரம் பேசினார்கள். இனிமையாக அந்த பொழுது கழிந்தது. இருவரும் கிளம்பி வெளியே வரும் நேரம், ஏதோ பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக ஆர்ப்பாட்டத்துடன் கொஞ்சம் கூட்டம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவள் செல்வதற்கு வழியை விட்ட ராஜீவ், கூட்டத்தின் ஓரமாக லாவகமாக எந்த ஒரு இடிபாடும் இல்லாமல் அவளை வெளியே கூட்டிச்சென்றான். அது கொஞ்சம் இதமாகவே இருந்தது திவ்யாவிற்கு.
அடுத்தவாரம் முடிந்தால் சந்திக்கலாம் என சொல்லி இருவரும் விடைபெற, அடுத்தவராம் ராஜீவ்வுக்கு மீட்டிங் இல்லாததால் அந்த கிளைக்கு வரவில்லை. அதுவே தான் அதற்கு அடுத்த வாரமும். தானாக வரமாட்டேன் என எப்படி சொல்வது, அவளாக கேட்டால் சொல்லலாம் என நினைத்தான். ஆனால் அவள் கேட்கவில்லை.
திவ்யாவிற்கு எப்போதும் தானே போய் பேசுவது கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அவன் மீது ஒரு நல்லெண்ணம் மற்றும் அவனை பார்க்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி அங்கும் இங்கும் உரசிக்கொண்டு ஓடுவதுபோல ஒரு குறுகுறுப்பு ஏற்படும். அவ்வளவே. தான் அடிக்கடி அழைத்து பேசுவதை அவன் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது என எண்ணியே அவனை தொடர்புகொள்ளவில்லை.
இருவருக்குள்ளும் இருந்த அந்த தொடர்பு கொஞ்சம் விட்டுப்போக, புதன் வந்தால் மற்றவரின் ஞாபகம் லேசாக துளிர்த்தாலும், யார் முதலில் அழைப்பது இல்லை பேசுவது என்று தயக்கமாகவே இருந்தது.
இப்படியே அடுத்த வாரமும் செல்ல, ராஜீவ்வுக்குள் ஓர் உந்துதல். அவளை பார்ப்பதற்கு முடிவு செய்து அவளை தொடர்புகொள்ள மெஸெஞ்சரை நாடினான். ஆனால் அவன் நேரம், அவள் ஸ்டேட்டஸ் ‘டு நாட் டிஸ்டர்ப் – தொந்தரவு செய்யவேண்டாம்’ என்று காட்டியது. ஆக, அந்த வாரமும் அவளை தொடர்புகொள்ள முடியவில்லை.
அவளை பார்க்கமுடியவில்லை என்றதும், லேசாக ஏதோ ஒன்று ராஜீவ் மனதில் இடறியது. திவ்யாவின் எண்ணங்கள் கொஞ்சம் அதிகமாகவே வருவதுபோல உணர்ந்தான். ஏன் இப்படி? இதுபோல இதற்கு முன்னெல்லாம் தோன்றியதில்லையே என்ற யோசனையுடனே உணவகத்திற்கு செல்ல, அங்கே அவளை கண்டுகொண்டான்.
யாராக இருந்தாலும் கண்டுகொள்ளும் அளவிற்கு, பாதையின் நடுவில் மொபைலை கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள்.
அவளை பார்த்ததும் ஆயிரம் புது அணுக்கள் உடலுக்குள் சட்டென சுரந்து பெருகியது போல ஒரு ஆனந்தம். அவனுக்கே ஏன் என புரியவில்லை. மனதின் மகிழ்வை கண்களில் ஏந்திக்கொண்டு, பக்கத்தில் சென்ற நொடி “ஹாய் பாரதி” என்றான்.
முன்பு சந்தித்தபோது, அவளை இப்படி அழைத்து… பின், அவளிடம் தெரிந்த மலர்ச்சியான முகத்தை எதிர்பார்த்திருந்தவனுக்கு, இப்போது அவளின் அதிர்ச்சியான முகம் பார்த்து அவனும் அதிர்ந்தான்.
தான் சட்டென அழைத்ததால் மிரண்டுவிட்டாள் போல என எண்ணி தன்னையே திட்டிக்கொண்டு, “ஐம் ஸா… ஸாரி, எக்ஸ்ட்ரீம்…லி ஸாரி” படபடப்புடன் மன்னிப்பை வேண்டினான். வார்த்தைகள் லேசாக தவறியது. இன்னமும் சொல்லப்போனால் மெல்லிய திணறல்.
அவனை பார்த்த நொடி, முதலில் அவனை கேள்வியாகத்தான் பார்த்தாள் ‘இவனாக இருக்குமோ!’ என எண்ணி.
பின், அவன் வந்து அழைத்தபோது… அவன் கண்ணாடியையும் மீறி அவன் கண்களில் தெரிந்த மலர்ச்சி, ஆனால் இப்போது அதே கண்கள் மன்னிப்பை யாசிப்பது… கூடவே அவனின் வார்த்தை இடறல், அவளை ஏதோ செய்தது. ‘இவனாக இருக்காது!’ என உறுதியாக சொன்னது அவள் மனம்.
அவன் அவளையே பதட்டத்துடன் பார்த்திருக்க, “நோ நோ! ஒன்னுமில்லை ராஜீவ்” என புன்னகையை வரவழைத்து சொன்னாள். அவன் சரியாக, சீராக வேண்டும் என எண்ணினாளோ?!
எளிதாக கணக்கிடும் அளவிற்கு தான் அவளை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் திவ்யாவின் இந்த முகம் ‘அவள் சரியில்லை’ என்பது அவனுக்கு சந்தேகமேயில்லாமல் புரிந்தது.
“உட்காருங்க பாரதி” என்று பக்கத்திலேயே இருந்த இருக்கையில் அவன் நகர்ந்து இடத்தை காட்ட, அமைதியாக யோசனையுடன் சென்று அமர்ந்தாள்.
அவனும் அமர்ந்து, “ரொம்ப ஸாரி!” என்றான் மறுபடியும். “இல்ல ராஜீவ். ஏதோ… ஏதோ யோசனைல இருந்தேன். அ… அவ்ளோதான்” என இப்போது தடுமாறியது அவள் வார்த்தைகள். அந்த யோசனையே அவளின் வார்த்தை தடுமாற்றத்துக்கு காரணம்.
அவள் ஏதோ பேசினாலும், அவள் கண்கள் அவனை தவிர மற்ற இடங்களை பார்வையிட்டுக்கொண்டே இருந்தது. சாதாரணமாக சுற்றி பார்ப்பதுபோல அவள் நினைத்தாலும், சுற்றி சுற்றி பார்ப்பதை அவனும் பார்த்தான்.
“ஆர் யூ ஓகே பாரதி?” லேசான பதட்டத்துடன் தான் கேட்டான். ஆனால் அவளோ, பார்வையை ஒருமுறை அவனிடம் திருப்பி “யஹ்!” என்றாள் மறுபடியும் கண்களை சுழலவிட்டபடியே!
“உங்களுக்கு ஓகேனா நான் உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு வரவா? யூ ரிலாக்ஸ்” என்றான். அவளின் நிலை சரியில்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.
அவளின் சிந்தனைகள் வேறு விஷயத்தில் திண்டாடிக்கொண்டிருக்க, தலையை மட்டும் சரி என்பதுபோல அசைத்தாள், அவள் அறியாமலேயே.
அவன் சென்றது கூட தெரியாமல், மறுபடியும் மொபைலை எடுத்து பார்த்தாள். பின் சுற்றியும் பார்த்தாள். ஆனால் எதுவுமே வித்தியாசமாக தெரியவில்லை.
மறுபடியும் திரும்பிப்பார்க்க, ராஜீவ் இரண்டு தட்டுக்களுடன் வந்துகொண்டிருந்தான். இப்போதுதான் ராஜீவிடம் உணவு வாங்கிவரச்சொன்னோம் என்பது புரிந்தது.
தலையில் அடித்துக்கொண்டு, அவசரமாக எழும்போது நாற்காலியில் தட்டி, தடுமாறி, பின் நிதானித்துக்கொண்டு அவனிடம் நெருங்கிய திவ்யா, “ஸாரி ராஜீவ்… குடுங்க” என்று சொல்ல, அவனோ அவளின் செயல்களை பார்த்தபடி… “நீங்க உட்காருங்க பாரதி! நான் எடுத்துட்டு வரேன்” என அவளிடம் தராமல் எடுத்துவந்து வைத்தான்.
“ஏதோ யோசிச்சிட்டு உங்கள வாங்கிட்டு வர சொல்லிட்டேன்” அவளுக்கு நிஜமாகவே மிகவும் சங்கடமாகிவிட்டது.
“மொதல்ல தண்ணிய குடிங்க” அவள் சொன்னதையெல்லாம் கேட்காமல் தண்ணீரைக் கொடுத்தான். அவளுக்கும் அப்போது அது தேவைப்பட்டது.
அவள் அமைதியாக இருக்க, அவன் எதுவும் கேட்கவில்லை. ‘விருப்பப்பட்டால் அவளே சொல்வாள். அப்படியில்லை என்றால் தன்னிடம் சொல்வதைத் தவிர்க்கிறாள், அவளை திரும்ப திரும்ப என்ன என்று கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம்’ என எண்ணி, உணவை அவள் புறம் வைத்தான்.
யோசனையுடனே அமைதியாக பெயருக்கு சாப்பிட்டாள். பின், “ராஜீவ், தப்பா எடுத்துக்காதீங்க. ஐ நீட் அ பிரேக்! நான் உங்களுக்கு அப்புறம் மெசேஜ் பண்ணவா?” என்றாள் கொஞ்சம் தெளிவானதுபோல.
“சுயர்! கேரி ஆன் பாரதி. வி வில் டாக் சம்டைம் லேட்டர்” என்றான் உடனே. அவளும் நன்றி கூறிவிட்டு வெளியேறிவிட்டாள்.
செல்லும் அவளையே பார்த்தபடி இருந்தான்.
அவளின் ஞாபகம் அவனுக்கு வந்தவண்ணம் இருக்க, அந்நேரம் அவனை அடைந்தது ஒரு செய்தி. ஹெச்ஆர் மாலினியிடம் இருந்து!
“‘ஹராஸ்மென்ட் கேஸ் வந்திருக்கு ஆர்கே! உன்கூட ஒன்னு ரெண்டு டைம் அந்த பொண்ண பார்த்த ஞாபகம்! அதான் உடனே உன்ன கான்டெக்ட் பண்ணேன்” என்றாள்.
ஒருவேளை அதிர்வை அளக்க அளவுகோல் இருந்திருந்தால் அவன் மனதின் அதிர்வலைகளை கணித்து அது உயர்நிலையை காட்டியிருக்கும்! முற்றிலுமாக அதிர்ந்தான் ராஜீவ்!
