Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 5B

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 5B:

திவ்யா தீரனுடன் ஊருக்கு சென்று திரும்பி வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், அந்த வார இறுதியில் திருச்சிக்கு செல்லலாம் என நினைத்தாள். 

அவ்வப்போது புதன்கிழமை அன்று ராஜீவ் ஞாபகம் வந்தாலும்,  பேச அழைப்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. விட்டுவிட்டாள்.

ஊருக்கு செல்லலாம் என அவள் நினைக்க, திடீரென முக்கிய வேலை, சனிக்கிழமை வர வேண்டும் என அவளுக்கு சொல்லப்பட்டது. வேறு வழியில்லாமல் ஊருக்கு செல்லாமல் வேலை செய்வதற்கு சென்றிருந்தாள்.

அவள் வேலை பார்க்கும் அந்த இன்டெர்னல் ப்ராஜெக்ட், அந்நிறுவனத்தின் உள் ஊழியர்கள், அவர்களின் தகவல்கள் மற்றும் அவர்களுக்கான இதர சேவைகளுக்கான ப்ராஜெக்ட். எப்போதும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். 

எதுவும் தவறாக தெரியாமல் அனைத்தும் சரியாக போவதுபோலவே இருந்தது திவ்யாவுக்கு, அந்த ஒரு குறுஞ்செய்தி வரும்வரை.

ஒரு நாள் வேலைக்கு அலுவலகம் நுழைந்த சில நொடிகளில், மொபைல் சத்தமிட… எடுத்துப்பார்த்த திவ்யாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

ஏதோ ஒரு இணையதள தகவல் வந்திருக்க, அதன் பெயரை வைத்தே அது ஒரு தவறான இணையதளம் என்பது தெளிவாக தெரிந்தது. கூடவே ஆபாச மெஸேஜும் சேர்ந்து வந்திருந்தது. யாரிடம் இருந்து வந்தது என தெரியவில்லை.

அதை பார்த்தவுடன் இது தேவையில்லாத ஏதோ ஒன்று என உடனே டெலீட் செய்துவிட்டாள்.  

தொடர்ந்து இதுபோலவே வந்துகொண்டிருக்க, யார் அனுப்புவது என குழம்பினாள் திவ்யா. அனானிமஸ் டெக்ஸ்டிங் சைட்டில் (anonymous texting site) இருந்து அனுப்பப்பட்டது போல இருந்தது. என்ன முயன்றும் யார் என்பது தெரியவில்லை. 

அடுத்து, ஆபாச விஷயங்களை அனுப்பாமல், திவ்யாவை நேரடியாகக் குறிக்கும் அந்தரங்க பேச்சுக்கள் அடங்கிய குறுஞ்செய்தி வர ஆரம்பித்தது. 

அவள் அணிந்திருக்கும் உடையில் ஆரம்பித்து, எம்மாதிரி உடைகள் அணியலாம் என்ற கீழ்த்தரமான பரிந்துரைகள், உடல் கூசும் வார்த்தைகளுடன்… அருவருக்கத்தக்க உடல் வர்ணனைகள் என மிகவும் தரங்கெட்டு இருந்தது. அருவருப்பாக உணர்ந்தாள் திவ்யா. யாரோ தன்னை எங்கோ நோட்டமிடுகிறார்கள் என புரிந்தது.

வெளியாளா இல்லை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆளா என்று கணிக்க முடியவில்லை. யாரிடம் சொல்வது என கூட தெரியவில்லை. வீட்டில் சொன்னால் நிச்சயம் வருந்துவார்கள், பயப்படுவார்கள்… தேவையில்லாமல் அவர்களை கலங்கடிக்க விரும்பவில்லை. அண்ணனிடம் வேண்டவே வேண்டாம்; அவனே நொந்துபோய் இருக்கிறான் என தானே முடிவெடுத்தாள். தோழி காயத்ரியிடம் சொல்லாலும் என்றால் ஏற்கனவே காதல் தோல்வியை சந்தித்து புது மண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவளிடம் இதை சொல்லி குழப்ப விரும்பவில்லை. 

இப்படி இருக்கையில் அடுத்த கட்டமாக, அவளுடன் உடலளவில் சேர்ந்தால் என்ற ரீதியில் குறுஞ்செய்தியை பார்க்கையில் பகிர் என்றது. ஏற்கனவே அளவுக்கு மீறி தான் இருந்தது. ஆனால் இப்போது வரைமுறையை இல்லாமல் ஏதேதோ படுக்கையறை காட்சியைப்போல வருவதை பார்க்கையில் படபடப்பானது. 

அலுவலக ஆள் என்றால் அலுவலகத்தில் முறையிடலாம், அப்படி இல்லையென்றால் என்ன செய்வது? மனரீதியாக தளர்ந்தாள். ஒருவித பதட்டம் மனதளவில். 

அன்றைய தினம் புதன்கிழமை அடுத்தகட்ட மிரட்டல் குறுஞ்செய்தி வந்தது.

அவளுடைய அந்தரங்க புகைப்படத்தை சொல்லுமிடத்தில் உடனே பதிவேற்றம் செய்யவேண்டும்; இல்லையேல் அவளின் புகைப்படத்தை தவறான முறையில் எடிட் செய்து அவளுடைய எண்ணை அத்துடன் இணைத்து, ஆபாசப்படம் இருக்கும் தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என வந்திருத்தது. 

புகைப்படம் வைத்திருக்கும் அளவிற்கு தன்னை நெருங்கியிருக்கிறானா என்று நினைக்கையிலே மண்டையே வெடித்தது. இந்த ஒரு வாரமாக தன்னை யாரோ வேறு எண்ணத்துடன் தனக்கு தெரியாமலேயே வேவு பார்க்கிறார்கள்; அதுவும் மிகவும் கேவலமாக நோக்கத்துடன் பார்க்கிறார்கள் என எண்ணுகையில் நெஞ்சம் அடைத்தது. 

வெளியில் தைரியமாக, சாதாரணமாக தன்னை காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் மிகவும் உளைச்சலுக்கு ஆளானாள். உள்ளே குளிர்ந்த இடத்தில்… ஓர் அடைபட்ட உணர்வு. மூச்சு முட்டியது. பசி ஒருபக்கம் மயக்கத்தை ஏற்படுத்தியது. 

காற்றாட வெளியே சென்று நின்றாள். வெளியில் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. மழையைப் பார்த்தாலே; மண்வாசனை நாசியை அடைந்தாலே ஒருவித அமைதி அவளுக்குள் எப்போதும் ஏற்படும்! 

இப்போதும் சாரல் மேலே பட்டு எரிந்துகொண்டிருந்த மனதைக் கொஞ்சம் லேசாக்கி யோசிக்க வைத்தது. ஒரு முடிவுக்கு வந்தாள். 

அலுவலகத்திலிருந்து மதிய உணவுக்கு பின் விடுப்பு எடுத்துக்கொண்டு… முதலில் எண்ணை மாற்றலாம், பின் யாருக்கு தருகிறோம் என்பதைக் குறித்துக்கொண்டாலே கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை அதுவும் நடக்கவில்லை என்றால் வீட்டில் சொல்வோம் என்ற முடிவை எடுத்தாள். 

மழையில் கையை நீட்டி மழைநீரை ஸ்பரிசித்துவிட்டு உள்ளே நுழைந்தாள். மனதில் எழுந்த புது தைரியம்… அது அவள் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. 

அது… அந்த தைரியம், கூடவே இந்நிலையில் கூட மழையில் பார்த்து எப்படி இவளால் ரசிக்க முடிகிறது என்ற எண்ணம் தான் திவ்யாவின் லீட் ராகேஷை காட்டிக்கொடுத்துவிட்டது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என சும்மாவா சொன்னார்கள்!

இவ்வளவு பகிரங்கமாக மிரட்டியும் அவள் அதை சட்டைசெய்யாமல் இருப்பதைப் பார்த்தவனுக்கு அகங்காரம் மேலோங்க, அவளை தரக்குறைவாக எடிட் செய்த புகைப்படத்தை ஒரு ரகசிய இடத்தில் அவள் எண்ணுடன் பதிவேற்றினான். 

அடுத்து பதிவேற்றம் செய்த அந்த இடத்தை அவளுக்கு குறுஞ்செய்தியாகப் பகிர்ந்து, கூடவே மிரட்டவும் செய்தான். 

‘இவ்வளவு சொல்லியும் உனக்கு இதன் விபரீதம் புரியவில்லை போல. மழையை ரசிக்கிறாயோ? இதோ இந்த புகைப்படத்தை பார்ன் சைட்டில் அப்லோட் செய்வேன். அதை சமூக வலைத்தளத்தில் பகிரவும் செய்வேன். அதில் உன்னை ***** கோலத்தில் பலரும் ரசித்து, பின் உன் நம்பரை அழைப்பார்கள் பார். மரியாதையாக நான் சொன்னதுபோல  புகைப்படத்தை அனுப்பாவிடில், இதை பதிவேற்றம் செய்வது நிச்சயம். இன்னமும் அடுத்த கட்டமாக உன் வீட்டில் உள்ளவர்களுக்கும் அனுப்புவேன்! உன் அப்பாவின் எண் இதுதானே ***?’ என அனுப்பிவைத்தான். 

திவ்யா சேர்ந்த நாள் முதல், ராகேஷுக்கு அவளை பார்க்கும்போது, வேறு விதமான ஆபாசமான எண்ணங்கள் தலைதூக்கியது. எப்போதும் அவளிடம் பேசுவது போல சென்று, அவளை வேறுமாதிரி பார்க்க ஆரம்பித்திருந்தான். மாலையில் அவள் வெகு நேரம் இருக்கும்படி வேலை தந்து, மற்றும் வார இறுதி நாட்கள் என வேலை பார்க்க வைத்தான். அவளுடன் சில சமயம் அவன் மட்டுமே இருப்பான். 

புதிதாக சேர்ந்திருந்ததால், வேலையை கற்றுக்கொள்வதில் கருத்தாக இருந்த திவ்யாவிற்கு இதெல்லாம் தெரியவேயில்லை. ஆனால் ராகேஷ் குணம் அவளுடைய டீமில் பல வருடங்கள் வேலைபார்க்கும் சிலருக்கு அரசல் புரசலாகத் தெரிந்திருந்தது. 

திவ்யா பல சமயம் ராகேஷுடன் தனியாக இருப்பதை பார்த்து திவ்யாவை கூட சந்தேகிக்கும் கண்ணுடன் பார்த்தார்கள். புது இடம் என்பதால் யாருடனும் அதிகம் பேசாமல் ராகேஷ் உடன் பேசிக்கொண்டிருந்தவளுக்கு இது எதுவும் தெரியவில்லை. 

 

இன்னும் சில நாட்களில், இந்த பேச்சுக்கள் அவளுக்கே தெரியவர வாய்ப்புகள் அதிகம் இருந்த சமயத்தில் தான் ராகேஷ் இப்படியொரு அசிங்கமான செயலில் ஈடுபட்டிருந்தான். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தை தவறான நோக்கத்தில் பயன்படுத்த ஆரம்பித்தான். 

கொஞ்சம் கொஞ்சமாக திவ்யாவை மிரட்ட ஆரம்பிக்க, அதை பயப்படாமல் சாதாரணமாகக் கையாண்ட திவ்யாவை பார்த்தான்.

அடுத்து இன்னமும் அதிகமாக மிரட்டி, அவளிடம் காரியத்தை சாதிக்க எண்ணியிருந்தவன் ஓரளவு மாட்டிக்கொண்டது… அவள் அலுவலகத்தில் செய்த செயலை சொல்லி மிரட்டிய போதுதான். 

திவ்யா உணவு சாப்பிடுவதற்கு உணவகத்திற்குள் நுழைந்த சமயம், அவளுக்கு அந்த குறுஞ்செய்தி வந்தது. அதை திறந்து பார்த்தவள், ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். 

வழியில் நிற்கிறோம் என்று கூட தெரியாமல் மொபைலை வெறித்துக்கொண்டு நின்றாள். அவன் சொன்ன செய்தி… அவளை அவன் அனுப்பிய அந்த தளத்தைத் திறந்துபார்க்க வைத்தது. பார்த்தாள். அதிர்ந்தாள். அவளின் ஆபாச புகைப்படம். எடிட் செய்யப்பட்டதுதான்… இருந்தாலும் அவள் முகம் சரியாக பொருத்தப்பட்டு, அவள் எண் அதில் இருந்தது. 

மூளை செயலிழந்தது போல, கீழே தரை நழுவுவது போல… ‘யார் செய்த வேலை இது?!’ என எண்ணி தலையே சுற்றியபோதுதான், பின்னிருந்து “ஹாய் பாரதி” என்ற குரல்.

அதிர்ந்து திரும்பினாள். அங்கே ராஜீவ்! அவள் இருந்த மனநிலையில், அன்று புதன்கிழமை என்றெல்லாம் ஞாபகமே இல்லை. 

அவன் அழைத்த அந்நொடி, ‘இவனுடைய வேலையாக இருக்குமோ?!’ ஒரே ஒரு நொடிதான் அந்த எண்ணம் அவளுள் வந்தது. ஆனால் முதலில் அவன் கண்களில் தெரிந்த பிரகாசம், பின் பயப்படுத்திவிட்டோமே என்ற எண்ணத்தில் அவன் கண்களில் தெரிந்த கலக்கம், ‘நிச்சயமாக ராஜீவ் இல்லை’ என அவள் மனம் அடித்துச் சொன்னது.  

அவன் வார்த்தைகள் திணறி மன்னிப்பைக் கேட்டதும், அது அவளை ஏதோ செய்தது. 

பின், அவன் ஏதோ பேசினான். ஒன்றும் அவள் கருத்தினில் அதிகமாக பதியவில்லை. ‘அலுவலகத்தில் யாராவது செய்த வேலையா? யாரேனும் தன்னை நோட்டம் விடுகிறார்களா?’ என்று சுற்றி பார்த்தபடி இருந்தாள். பசியெல்லாம் எங்கோ பறந்திருந்தது. 

அப்போதுதான் ராஜீவ் உணவு வாங்கிவர, ‘அவன் என்ன பேசினான்’ என்பது நினைவிற்கு வந்தது. பின் அவன் உணவைக் கொடுத்து அவளை உண்ண சொல்ல, அவள் இருந்த மனநிலையில் தொண்டையில் இறங்கவே இல்லை. அடைத்தது.

யோசித்துக்கொண்டே இருந்தாள். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது! அந்த பாதகன் அனுப்பிய குறுஞ்செய்தியில், ‘மழையை ரசிக்கிறாயா?’ என்றிருந்தது. 

மழையைப் பார்த்தது இப்போதுதான். அதை அவன் குறிப்பிட்டு அனுப்பி இருக்கிறான் என்றால் அலுவலகத்தில் உள்ள எவனோ ஒருவன்… தான் செய்ததைப் பார்த்துவிட்டு அனுப்பி இருக்கிறான் என தெள்ளத்தெளிவாக புரிந்தது.

எதிரே எதுவும் புரியாமல் இருந்த ராஜீவிடம், தான் கிளம்புவதாக சொல்லிவிட்டு, அவள் செய்த அடுத்த காரியம்… ஹெச்ஆர் ஹெல்ப் மெயில் ID… அதாவது அதை பார்த்துக்கொள்ளும் மாலினி மெயில் ID’க்கு விஷயத்தை மேலோட்டமாக சொல்லி, அவளை பார்க்கவேண்டும் என ஈமெயில் அனுப்பினாள்.  

அடுத்த ஐந்து நிமிடத்தில் ‘ஹெச்ஆர் ஹெட்’ மாலினி முன் இருந்தாள் திவ்யா.

திவ்யாவை பார்த்ததும் ராஜீவுடன் அவளை பார்த்தது மாலினிக்கு நினைவிற்கு வந்தது. காரணம் இந்த கிளையில் ராஜீவுடன் பெண்களை பார்ப்பதே அரிது! கூடவே ராஜீவுடன் வேலை பார்ப்பதால், அவனை பற்றியும் ஓரளவிற்கு நன்றாகவே தெரியும். அதனால் திவ்யாவின் முகம் மாலினி மனதில் பதிந்திருந்தது. 

திவ்யா, இந்த ஒரு வாரமாக தனக்கு வந்த அனைத்து குறுஞ்செய்தியையும் கூடவே இன்று அனுப்பிய குறுஞ்செய்தியையும் மாலினியிடம் காட்டினாள்.

“ஆஃபீஸ்ல யாரோ செய்த வேலை தான் இது. இப்போ ஏதோ பார்ன் சைட்ல போட்டோ அப்லோட் பண்ணபோறானாம். அவன் யார்னு கண்டுபிடிக்கணும்” என்றாள். அவள் கண்களில் பயம் இல்லை. ஒருவித கோபம் தான் தெரிந்தது. 

மாலினி அனைத்தையும் குறித்துக்கொண்டு, ஆதாரங்களை வாங்கிக்கொண்டாள். 

பின், “ஐம் சாரி தட் யூ ஆர் கோயிங் த்ரூ திஸ்! ஆரம்பத்துல அவன் அனுப்பினது செக்ஸ்டிங் திவ்யபாரதி! இதுவும் ஹராஸ்மென்ட் தான். அவன் கடைசியா செய்யப்போறேன்னு சொன்னது, கிரிமினல் அஃபென்ஸ்! உங்களுக்கு வேணும்னா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் இல்ல, நம்ம இன்வெஸ்டிகேட் பண்ணலாம்” என்றாள். 

போலீஸ் என்றதும் தடுமாறினாள் திவ்யா. பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் நிலை? நினைக்கவே லேசாக பயம் ஏற்பட்டது. இருந்தும் அவனை அப்படியே விட மனமில்லை.

ஆகையால், “நீங்க சீக்கிரம் கண்டு பிடிக்க பாருங்க. முடியலைன்னா அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். நான் இப்போவே இந்த நம்பரை டீஆக்டிவேட் பண்றேன். புது நம்பர் வாங்கறேன் ” என்ற திவ்யாவின் அமைதியான, தெளிவான பேச்சு மாலினிக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. 

“நிச்சயம் சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் திவ்யபாரதி, ஏதாவது தேவைனா உங்களை கான்ட்டேக்ட் பண்றேன்!” என்றாள் மாலினி நம்பிக்கையுடன். 

திவ்யா சென்றவுடன் மாலினி அழைத்தது ராஜீவை தான். திவ்யாவை அவனுக்கு தெரியும் என்ற காரணத்தைக் காட்டிலும் மற்றொரு காரணம், எம்பிளாயி வெல்ஃபேர் கமிட்டியில் அவனும் ஒரு உறுப்பினர்.

அவனிடம் விஷயத்தைச் சொன்னதும், அவன் உடனே மாலினியை பார்க்க வந்தான். வந்தவன் கண்களிலேயே அவ்வளவு கோபம். 

இருவரும் சேர்ந்தாலோசித்தனர். அனுப்பியது அலுவலக ஆள் என்பது தெரிந்தாலும், யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அடுத்த வந்த நாட்களிலேயே ராகேஷை ஸ்கெட்ச் போட்டு பிடித்துவிட்டார்கள்!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved