உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 9
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 9:
வாரம் ஒன்று கடந்திருந்தது. திவ்யா ஓரளவிற்கு அந்த இடத்தில் தன்னை பொருத்திக்கொண்டாள். ராஜீவ், ஹரிணி, வினய், ஜேசன், ஷீலா மற்றும் கவின் என அவளுக்கென்று ஒருசில நண்பர்களை சேர்த்துக்கொண்டாள்.
இதில் ராஜீவ் மற்றும் வினயுடன் உணவு சாப்பிடவும் செல்வதால் இன்னமும் அதிகம் பழகி இருந்தாள்.
என்றும் போல அன்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அவர்களின் அலுவலகம். டெக்னிகல் லீட் ராஜீவ், டீம் லீட் வினய், மற்றும் இன்னொருவன் என மூவரும் கலந்து ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள்.
குறுகிய நாட்களில் செய்யவேண்டிய ஒரு சிறிய வேலை வந்திருந்தது. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அது முடியவேண்டும். இவர்கள் மூவரும் அந்த வேலை செய்வதற்கான தகவல்களை சேகரித்திருந்தனர்.
வினய் மற்றும் இன்னொருவன்… அனுபவம் வாய்ந்த யாரையேனும் அதில் வேலை செய்ய சொல்லலாம் என சொல்ல, ராஜீவ் அதை மறுத்தான்.
“புதுசா சேர்ந்தவர்களை க்ரூம்(தயார்) செய்யணும். அதுக்கு இதுதான் ஒரு நல்ல வாய்ப்பு. கவின், பாரதி டெவலப்மென்ட்ல ஒர்க் பண்ணட்டும்” என்றவன், புதிதாக சேர்ந்த இன்னும் இருவரை ‘டெஸ்டிங் செய்யட்டும்’ என்றான்.
பொதுவாக மென்பொருள் நிறுவனத்தில் ஒரு வேலை வருகிறதென்றால், அதை பகுதிகளாகப் பிரித்து வேலைபார்ப்பார்கள். வேலைக்கான தகவல்களைத் திரட்டுவது (ரெக்வயர்மெண்ட்), திரட்டிய தகவல்களை கோடிங் மூலம் செயல் படுத்துவது (டெவலப்மென்ட்), பின் அதை பரிசோதிப்பது(டெஸ்டிங்), முடிவாக நடைமுறை படுத்துவது(ப்ரொடக்ஷன்) என்பது சில முக்கியமான கட்டங்கள்.
“ரிஸ்க் எடுக்கறோமோனு தோணுது ஆர்கே. டெட்லைன் ரொம்பவே கம்மி… அவங்களால முடியுமான்னு அவங்களே யோசிப்பாங்க” என்றான் வினய் யோசனையாக… மறுப்பாக.
“நெவர்! கண்டிப்பா ஸ்போர்ட்டிவா எடுத்துட்டு செய்வாங்க வினய். கவினுக்கு பாரதியை விட ரெண்டு வருஷ அனுபவம் அதிகம். வேணும்னா, நம்ம அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம். அண்ட் டெஸ்டிங் டீம்… புதுசா சேர்ந்தவங்களுக்கு தேவைப்படும் போது ஹெல்ப் பண்ணட்டும்.
பட், அம் ஷுயர்… இது எதுவும் நான் சொன்ன ரிசோர்ஸ்க்கு தேவைப்படாது. அவங்களே முடிச்சிடுவாங்க வினய். அவங்க பொட்டன்ஷியல்’க்கு இதுபோல சின்ன சின்ன ஸ்டெப்ஸ் போதும்… அதை யூஸ் பண்ணி ஈஸியா க்ரோ ஆயிடுவாங்க” என்றான் ராஜீவ் நம்பிக்கையுடன்.
அடுத்து, வேலை செய்யப்போகும் அனைவரையும் அழைத்துப் பேசினார்கள்.
ராஜீவ் சொன்னதுபோலவே… யோசனை துளியும் இல்லாமல், அனைவரும் ஆர்வமுடன் வேலையை செய்ய தயார் ஆனார்கள்.
கவின் பாரதி இருவரும் வேலையை எப்படி செய்வது, எதை செய்வது என பேசினார்கள்.
கவின், “திவ்யா… இதேபோல ஒரு வேலைய என்னோட முந்தின கம்பெனில பண்ணிருக்கேன். உனக்கு கஷ்டமாவோ இல்லை நெருக்கடியாவோ இருந்தா சொல்லு… டே, நைட்னு நானே பண்ணிடறேன்”
உண்மையில் அவன் பேச்சில் அவள் மேல் இருந்த அக்கறை தான் தெரிந்தது. அது திவ்யாவிற்கும் புரிந்தது.
ஆனால் அந்நேரம் அவளுக்கு ஞாபகம் வந்தது… ராஜீவ் சொன்ன விஷயங்கள். ‘இந்த ப்ராஜக்ட்ல நீங்க நிறைய கத்துக்கலாம். உங்க கெரியர் க்ரோத்’க்கு நிச்சயம் உதவும் பாரதி’ என்பது மனதில் ஓடியது.
கவின் சொன்னதற்கு திவ்யா புன்னகையுடன், “தட்ஸ் ஓகே கவின்! உனக்கு இது ஏற்கனவே தெரியும்னு சொல்ற… பட் அத நானும் கத்துக்கணும்ல? ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம்” என்றாள்.
ராஜீவ் இதழ்களில் புன்னகை விரிந்தது. பக்கவாட்டில் தானே அவன் இருக்கிறான். என்னதான் மெதுவாக திவ்யாவும் கவினும் பேசினாலும், அங்கு நிலவும் அமைதியால் ராஜீவ்வுக்கு இவர்கள் பேசுவது நன்றாகவே காதில் விழுந்தது.
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருவருக்கும் இருக்கிறது… இருவராலும் நிச்சயம் முடியும் என்று தெரிந்து தான் இந்த வேலையைக் கொடுத்தான். திவ்யாவின் பதில் அவனுக்கு புன்னகையைத் தந்தாலும், கவினின் இப்பேச்சு ராஜீவ்வுக்கு உவப்பாக இல்லை.
காரணம், கவினை கொஞ்சம் மெருகேற்றினால்… இன்னும் சில காலத்தில் அவனை லீட் பதவிக்கு தயார் செய்யமுடியும் என எண்ணியிருந்தான்.
லீடர் பதவி என்பது, தனக்கு கீழ் இருப்பவர்களுக்கு வேலையை பற்றி கற்றுத்தந்து, பின் தட்டிக்கொடுத்து, தேவையென்றால் உதவி செய்து… வேலையை செய்யவைக்க வேண்டும். தானே அனைத்தையும் இழுத்துப்போட்டு செய்வதில்லையே!
ஆனால் ராஜீவ்வுக்கு அப்போது தெரியவில்லை, கவினின் இந்த கரிசனம் திவ்யாவிடம் மட்டுமே என்று! ராஜீவ்வை திவ்யா கவர்ந்ததுபோலவே, ஏதோ ஒருவகையில் கவினுக்கும் திவ்யாவை பிடித்திருந்தது. அந்த பிடித்ததை இப்படி அவளிடம் கிடத்துகிறான்!
கவின் திவ்யா இருக்கைகளுக்கு இடையில் ஒரு தடுப்பு மட்டுமே. ஆகையால் அவ்வப்போது இருவரும் பேசி வேலையை செய்துகொண்டிருந்தார்கள்.
இன்று திவ்யாவுடன் உணவு சாப்பிட போகலாம் என்று நினைத்திருந்த கவினின் எண்ணத்தில் மண்ணை போடுவதுபோல திவ்யா, “கவின்… சாப்பிட்டுட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு எழ, ராஜீவ்வும் எழுந்தான்.
வினய் தான் இருவரையும் மெஸெஞ்சரின் மூலம் உணவு சாப்பிட அழைத்திருந்தான். ஆனால் கவினுக்கு, ராஜீவ் தான் அவளை அழைத்திருக்கிறான் என எண்ணி ராஜீவ் மேல் லேசான கோபம், கூடவே பொறாமையும் எழுந்தது.
திவ்யா ராஜீவ் இருவரும் கிளம்ப, வினய் சேர்ந்துகொண்டான். இன்று அவர்களுடன் உணவு சாப்பிடும் ஜேசன் மற்றும் ஷீலா வரவில்லை. இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது.
இன்று சாப்பிட அசைவத்தில் ஏதோ செய்துவந்திருந்தார்கள் ராஜீவ்வும் வினயும்.
திவ்யா அதை சாப்பிட ஆரம்பிக்க, எதிரிலிருந்த வினயிடம்… “வாவ்! வினய் நீங்க செய்தீங்களா?” என்று கேட்க, வினய் தன் பக்கத்திலிருந்த ராஜீவ்வை ஒருமுறை பார்த்துவிட்டு… அவசரமாக ஆம் என்றான்.
“சூப்பர்ங்க! ரொம்ப நல்லா இருக்கு. எப்படி செய்தீங்க? ஏதாவது food blog பார்த்தா?” ஆர்வமாகக் கேட்டாள்.
வினய் ஒரு மாதிரியாக ஆம் என தலையை அசைத்தான். ராஜீவ் புன்னகையுடன் இவர்கள் பேசுவதைக் கேட்டபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
திவ்யா, “வாவ்… நான் எதை பார்த்து செஞ்சாலும் சொதப்பிடுது. நீங்க எப்படி செய்தீங்கனு சொல்லுங்க வினய்… நான் நோட் பண்ணிக்கறேன். இந்த வாரம் ஊருக்கு போகும்போது வீட்ல செஞ்சு அசத்தப்போறேன்” மனதில் தன் அண்ணன் தீரனின் கிண்டலை எண்ணி சபதம் எடுத்தாள்.
அப்போது உணவு சாப்பிட்டுக்கொண்டே சிரித்த ராஜீவ்வுக்கு லேசாக புரை ஏறியது. உடனே தண்ணீரைக் கொடுத்தாள் திவ்யா… திருதிருவென விழித்தான் வினய்.
தண்ணீரைக் குடித்தபின் ராஜீவ், “சொல்லுங்க வினய்… எப்படி செய்றதுன்னு. நானும் கத்துக்கறேன்” என்றான் அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டு.
அவனை முறைத்த வினய், “போதும்… நீயே சொல்லு” என்றான் ராஜீவ்விடம். அப்போதுதான் புரிந்ததுபோல… “ஓ! இது நீங்க செய்ததா ராஜீவ்!?” என்றாள் திவ்யா இப்போது ராஜீவ்வை பார்த்து.
அவன் புன்னகைக்க, “அப்போ உங்க இடத்துக்கு வந்து நோட் பண்ணிக்கறேன்” என்றாள் அதே ஆர்வத்துடன்.
‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்!’ என்பதுபோல ராஜீவ்வை பார்த்து… “நடத்து” என்றான் சன்னமான குரலில். இப்போது முறைப்பது ராஜீவ்வின் முறை ஆயிற்று.
திவ்யா கேட்கவேண்டும் என்றெல்லாம் ராஜீவ் சமைக்கவில்லை. முன்பு போல தான் இருவரும் உணவு செய்து எடுத்து வருகிறார்கள். என்ன… இப்போது கொஞ்சம் அதிகமாக… திவ்யா மற்றும் அவ்வப்போது ஜேசன், ஷீலாவிற்கும் சேர்த்து எடுத்துவருகிறார்கள்.
உணவு முடித்து… வேலை என வந்தபின், சமையல் குறிப்பெல்லாம் மறந்துபோனது திவ்யாவுக்கு. ராஜீவ் காஃபிக்கு அழைத்தும், வேலையைக் காரணம் காட்டி மறுத்துவிட்டாள். பின் வீட்டிற்கு கிளம்ப சிறிது நேரத்துக்கு முன், கவினுடன் சென்று குடித்துவிட்டு கிளம்பினாள்.
ராஜீவ் அதை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் கவினுக்கு… அவள் ராஜீவ்வை மறுத்து தன்னுடன் வந்தது… மனதில் ஒரு இதமான உணர்வு.
அடுத்த நாள், புதன்கிழமை என்பதால் ராஜீவ் மதியம் தான் வந்திருந்தான். அதற்குள் திவ்யா மற்றும் வினய் உணவை முடித்திருந்தார்கள். பின் திவ்யாவும் அன்றே முடிக்க வேண்டிய வேலையில் கவனம் ஆகிவிட, கொஞ்சம் சீரியஸாகவே இருந்தாள்.
அவ்வப்போது அவள் முகம் அதைக் காட்டிக்கொடுக்க, அவளை கொஞ்சம் சகஜமாக்க எண்ணி அவளிடம் சென்ற ராஜீவ் “டீயா காஃபியா பாரதி?” என்றான்.
அன்று காஃபி குடிக்க அந்த கட்டிடங்களை இணைக்கும் பாதைக்கு அழைத்துச்சென்றான். பின் அவள் புடவை கட்டிக்கொண்டு வந்த அன்று ‘டீ குடிக்க’ என்று சொல்லி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் வினயும், ராஜீவ்வும்.
இப்போது அவள் வருகிறாளா? இல்லையா? என்றெல்லாம் ராஜீவ் கேட்காமல், எங்கு செல்லலாம் என்பது போல கேட்க, திவ்யா நினைத்திருந்தால் மறுத்திருக்கலாம் ஆனால் மறுக்கவில்லை. பதிலுக்கு ‘டீ’ என்றாள்.
அவனுடன் புறப்பட்ட திவ்யாவின் மனதில் அன்று ராஜீவ் கேட்ட கேள்வி வந்து சென்று புன்னகையைத் தந்தது.
அன்று புடவை கட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்ட திவ்யாவிடம், “இந்த இடம் கொஞ்சம் தூரம் பாரதி. சாரீல நடக்க முடியும்ல?” என்று கேட்டவுடன், சிரிப்பே வந்துவிட்டது திவ்யாவுக்கு.
ஏன் இப்படி ஒரு கேள்வி என எண்ணி, அதை அவனிடம் கேட்க, “இல்ல, என்னோட சில ஃபிரெண்ட்ஸ் சொல்லிருக்காங்க… ஈவன் ஷீலா கூட சொல்லி இருக்கா… சாரீ கட்டிட்டு நடக்கவே சிரமமா இருக்கும்னு. அதான் கிளம்பறதுக்கு முன்னாடியே சொல்லிடலாம்னு சொன்னேன்” என்றான்.
அன்று அவன் அப்படி கேட்டது இன்று அவளுக்கு நினைவிற்கு வர, புன்னகைத்தபடியே அவனுடன் நடந்தாள். மழை பெய்து ஓய்ந்திருக்கும் போல. சில்லென்ற காற்று வீசியது. கொஞ்சம் நடந்து அந்த வளாகத்தின் நுழைவாயிலுக்கு சென்றால், அங்கே இருக்கும் அந்த நாயர் டீ கடை.
அதற்கு கொஞ்சம் பக்கத்திலேயே பேருந்து நிறுத்தம். கடை சிறியதுதான் என்றாலும் கூட்டம் எப்போதும் களைக்கட்டும்.
இருவரும் பேசிக்கொண்டே நடக்க, மழையால் ஏற்பட்ட சேறு இருந்ததை கவனிக்காமல் அதில் திவ்யா காலை வைத்த நொடி லேசாக சறுக்கியது. உடனே, அவளின் கையை எதார்த்தமாக பற்றிய ராஜீவ்,
“வாட்ச் யுவர் ஸ்டெப் பாரதி! வழுக்கும்” என்றவன், அவள் கொஞ்சம் நிதானம் அடைந்தவுடன் கையை விட்டுவிட்டான். அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடக்க, திவ்யாவிற்கு தான் அவனின் அந்த ஸ்பரிசம் ஒருமாதிரி இருந்தது. அவனை பார்ப்பதற்கு லேசான தயக்கம்.
பேச்சு கூட அதிகம் பேசாமல், மிகவும் கவனமாகவே நடந்தாள். இருவரும் அந்த இடத்தை அடைந்தார்கள்.
ராஜீவ்வை பார்த்ததும் அக்கடை உரிமையாளர்… “வா வா ரஜீவா!” என்றார்.
போன வாரம் வந்த போது அவர் இல்லை. அதனால் ராஜீவ், “போன வீக் சேட்டா எவ்வட போயி?” கேட்டான் அவரிடம். அதற்கு அவர் ஊருக்கு சென்றதாக சொல்ல, இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள். திவ்யா அவனையே பார்த்தாள்.
இதுவரை அவன் தமிழில் லேசான மலையாள சாயல் இருந்தது. இப்போதுதான் அவன் மலையாளம் பேசி பார்க்கிறாள். அடுத்து அவர் அழைத்த ரஜீவா என்ற பெயர். இவனை எவ்வளவு பெயர்கள் வைத்து அழைப்பார்கள்? என நினைத்தபோது, ராஜீவ் அவள் முன் கையசைத்தான்.
“என்ன யோசனை?” என்று கேட்டபடி டீயை அவளிடம் தந்தான்.
“இல்லை ராஜீவ்க்கு எத்தனை பேரு இருக்குனு கணக்கு போட்டுட்டு இருந்தேன்” என்றாள் குறும்பாகப் பார்த்து.
“ஹாஹாஹா! ஆஃபீஸ்ல வினய் ஆர்கேனு செட் பண்ணிட்டான். வீட்ல ஜீவானு கூப்பிடுவாங்க. இவர் கேரளா ஸ்டைல்ல ரஜீவா. நீங்க, இன்னும் சில பேர்… ராஜீவ்” என்றான் தோள்களைக் குலுக்கி… புன்னகையுடன்.
அவளும் புன்னகைக்க, அப்போது ஒருவன் ராஜீவ்விடம் பேச வந்தான். திவ்யாவின் எண்ணங்கள், ‘அவனுக்கு தான் என்ன பெயர் வைக்க?!’ என்ற திசையில் சென்றது.
‘அதென்ன நானும் சிலரும் ராஜீவ்… நானும் ஸ்பெஷலா ஒரு பேரு வைக்கிறேன்’ என்று தீவிரமாக யோசித்தவள்… ‘ராஜ்… ஹூஹூம். ஜீவ்… ப்ச்! ராஜா நல்லா இல்லை’ என நன்றாக யோசிக்க… சட்டென உதித்தது… ‘ராஜு!’ லேசாக முணுமுணுத்தபோது நன்றாகவே இருந்தது.
அப்போது அவளின் புறம் கவனத்தைத் திருப்பிய ராஜீவ், “ஹ்ம்ம்? என்ன பாரதி?” என்றிட, ஒரு நொடி பக் என்றது திவ்யாவுக்கு… எங்கே அவன் கேட்டுவிட்டானோ என்று.
அவள் ஒருமாதிரி ஒன்றும் இல்லை என்பதுபோல சிரித்துவைக்க… ராஜீவ், “பாரதியை வீட்ல எப்படி கூப்பிடுவாங்க?” அடுத்த கேள்விக்கு சென்றான்.
‘உப்ப்’ என்று உள்ளுக்குள் நிம்மதியான திவ்யா… “வீட்ல பாரதினு தான் கூப்பிடுவாங்க” என்றாள். அவனுக்குள் ஒரு இன்ப மின்னல் வெட்டிச் சென்றது. நல்ல மனநிலையுடன் இருவரும் புறப்பட்டார்கள்.
பின் அவள் வீட்டு உறுப்பினர்களைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்டான். அவளும், “நீங்க தமிழ் நல்லா பேசறீங்க… மலையாளம் கூட பேசறீங்க” என்றதும்… “எங்க பூர்விகம் தமிழ்நாடு தான் பாரதி… பட் கேரளால செட்டில்ட். வீட்ல தமிழ். வெளிய மலையாளம். சோ ரெண்டுமே வரும்” என்றான்.
“அச்சோ! மறந்தே போய்ட்டேன் அந்த டிஷ்…” என அவனை குறுகுறுவென அவள் பார்க்க… சத்தமாகச் சிரித்த ராஜீவ் அவளுக்கு அந்த உணவு செய்யும் குறிப்புகளைச் சொன்னான்.
பின், “பாரதியோட சமையல் எப்படி இருக்கும்?” என வேண்டுமென்றே கேட்க… தீரன் அடிக்கடி சொல்லும் ‘ஜெலுசில் மற்றும் ஈனோ’ சாப்பிடும் அளவிற்கு இருக்கும் என்று சொல்ல வாய் வந்தாலும், மிடுக்காக… “நல்லா சமைப்பேன். புதுசு புதுசா நிறைய செய்வேன்” என்றாள்.
மறுபடியும் சிரித்த ராஜீவ், “உங்க வீட்ல இருக்கவங்ககிட்ட கேட்டா தான் உண்மை வரும்னு நினைக்கறேன்” என்றான் அவளை போலவே குறுகுறுவென பார்த்து. அவள் முறைக்க முயன்று அது அவனிடம் முடியாமல் போக, புன்னகையுடன் திரும்பிக்கொண்டாள்.
இருவரும் அப்படியே பேசியபடி அலுவலகம் வந்து சேர்ந்தார்கள். அடுத்து அவள் வேலையில் இறங்கிவிட, கவினும் அவளும் பேசியதுபோல அன்றே இருவரும் வேலையே முடித்திருந்தார்கள்.
அப்போது ஹரிணி திவ்யாவை வம்படியாக அழைத்துக்கொண்டு கேன்டீன் சென்றாள்.
திவ்யா என்ன ஆயிற்று என்று பலமுறை கேட்டபின், யாரும் பக்கத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு… “என்ன திவி மேடம்கிட்ட மலையாள வாடை ரொம்ப அடிக்குதே! சேர்ந்து போறதென்ன… வர்றதென்ன… சிரிப்பென்ன” என கேலி செய்ய, கடினப்பட்டு புன்னகையை அடக்கிய திவ்யா…
“ஹலோ… என்ன கிண்டலா?” என்று தீவிரமாக திவ்யா கேட்டாலும் சிரிப்பு வந்தது. “கிண்டலே தான்… சந்தேகம் வேற இருக்கா? சொல்லு சொல்லு உங்களுக்குள்ள என்ன நடக்குது?” ஆர்வத்துடன் கேட்டாள் ஹரிணி.
“ஹே! சும்மா சைட் தான் ஹரிணி. உனக்கே தெரியுமே… ஒரு க்ரஷ் அவர் மேல ஆல்ரெடி இருந்தது… இப்போ பக்கத்திலயே சைட் அடிக்க ஒரு வாய்ப்பு” என்று புருவத்தை உயர்த்திய திவ்யாவை, நம்பாமல் பார்த்தாள் ஹரிணி.
“நம்பு மேன்! அவ்ளோதான்… ரெண்டு பேருக்குள்ள வேற எதுவும் இல்ல”
“ஹ்ம்ம் நம்பிட்டேன் திவி” மறுபடியும் கிண்டல் தொனியில் சொன்னாள் ஹரிணி.
ஆனால் ஹரிணி பேசிய பின், திவ்யாவினுள் ஒரு சின்ன கேள்வி எழுந்ததென்னவோ உண்மை தான்… ‘இது வெறும் ஈர்ப்பு, க்ரஷ் மட்டுமா!?’ என்று. பிறகு, ‘அவ்வளவுதான்’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
அடுத்து ஷீலா மற்றும் ஜேசனின் திருமண நாள் வந்தது. அவர்கள் ப்ராஜக்ட்டில் இருந்து சிலர் செல்வதாக இருந்தது. வினய் வேலை காரணமாக சீக்கிரம் அலுவலகம் வந்திருக்க, ராஜீவ் சற்று நேரம் கழித்து வந்தான்.
திருமணத்திற்கு டிரஸ் கோட் (dress code) சொல்லி இருந்தார்கள். ஆண்கள் வெளிர் நீல நிற சட்டை அல்லது சாம்பல் நிற சட்டை அணிந்துவர சொல்லி இருக்க, பெண்களுக்கும் அதே நிறத்தில் உடை உடுத்த சொல்லி இருந்தார்கள்.
ராஜீவ் கடல் நீல நிறை சட்டையில் வந்த பின்… வினய்யின் டேபிள் மேல் உட்கார… அவனை பார்த்ததும் வினய், “மன்மதன் ரதி தேவிய மயக்க… வந்துட்டார்” என்றான் நக்கலாக.
“ஷட் அப் டா வினய். நீ நினைக்கிற மாதிரி இல்லைனு எவ்ளோ…” அவன் முடிக்கும்முன், திவ்யா அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தாள்.
லைட் ஸ்டீல்ப்ளூ சாஃப்ட் சில்க் புடவையில் வந்தவள், வினய் ராஜீவ்வை கடந்து செல்லும்போது… புன்னகையுடன் “குட் மார்னிங்” சொல்லிவிட்டு நடக்க… ராஜீவ் மந்தகாசமாகப் புன்னகைத்தான்.
வினய் மெதுவாக ராஜீவ்விடம், “ஹ்ம்ம்… ரதிதேவியும் மன்மதன வீழ்த்த வந்துட்டாங்க! நடக்கட்டும் நடக்கட்டும்” விஷமமாக காதில் ஓதி சிரித்தான்.
அவளிடம் மூழ்கியது போல, உண்மையிலேயே ராஜீவ் சில நொடிகள் வைத்தகண் எடுக்காமல் தான் பார்த்திருந்தான். கிட்டத்தட்ட இருவரும் ஒரே நிறத்தில் உடை. வினய் சொன்ன ‘ரதி’ போல தான் ராஜீவ்வுக்கு தெரிந்தாள்.
‘ரதி…’ மனதில் சொல்லிப்பார்த்த ராஜீவ், பின் ‘பாரதி… ரதி! வாவ்… ஹவ் லவ்லி!’ புன்னகையுடன் அவளுக்கான பெயரை மனதில் சொன்னபடி அவனிடத்திற்கு சென்றான்.
அங்கே திவ்யாவுக்கு ராஜீவ்வை பார்த்த தருணம், ஒரு சில்லென்ற உணர்வு உடல் முழுவதும் பரவியது. அதுவும் அவனின் வசீகரிக்கும் புன்னகையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி அணிந்த கண்கள்… அதை எண்ணும்போது அவள் மனம், ‘சோ சார்மிங்!’… ‘…ராஜு!’ என அவனையே சுற்றியது.
‘இது ஈர்ப்பு, ரசித்தல்… க்ரஷ் டைப்ஸ்’ என இருவரும் எண்ணி இருக்க… இது கொஞ்சம் கொஞ்சமாக, அடுத்த கட்டத்தை எட்டுகிறது… தனிப்பட்ட பெயர்கள் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது என்பது புரியாமல் இருவரின் நெருக்கமும் அதிகரித்துக்கொண்டே சென்றது!
