Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 25

இளகிய இளஞ்சிவப்பு – 6(1)

மிதுலா சொன்னது புரியாமல் மங்கையும், ஆதவனும் பார்க்க, மிதுலா தன் வாழ்க்கையின் இளகிய, மென்மையான, அழகான, காதல் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.

———————

மிதுலா, வந்திறங்கியதும், சக்தி ஏற்பாடு செய்ந்திருந்தவர் அவளை அழைத்துச் சென்றார்.

மேன்ஷனை அடைந்தவுடன் சக்திக்கு அழைத்தாள்.

“சக்தி…நா… வந்துட்டேன்” குரல் தத்தளித்தது. “மிது… நான் சொல்லியிருந்தவரு கரெக்ட்டா வந்துட்டாரா? எல்லாம் ஒகே தானே?” இத்தனை நாள் பக்கத்தில் கேட்ட குரல், இப்போது வெகு தொலைவில் கேட்பது போல் இருந்தது. கண்கள் கலங்கியது அவளுக்கு.

அவளிடம் பதில் வராமல் போக “மிதுஉஉ” சத்தமாக கூப்பிட “ஆன்… சொல்லு சக்தி…” என்றாள் எதுவும் காதில் செல்லாததது போல்.

“மிது… ஆர் யு ஆல்ரைட்? ஏதாச்சும் பிரச்சனையா” அவள் குரலின் மாற்றத்தை வைத்து அவன் பதட்டத்துடன் கேட்க, அவனின் இந்த அக்கரையில், எங்கே அழுதுவிடுவோமோ என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “எல்லாம் ஒகே சக்தி… ஏதாச்சும்ன்னா சொல்றேன்” என்றாள்.

அவளின் குரலே சொன்னது அவள் சரியில்லை என்று. “மிது… ஒரு நிமிஷம் திரும்ப கூப்பிடறேன்” என்று சொல்லி வைத்தவன், மறுபடியும் அழைத்தான். இம்முறை வீடியோ காலில்.

தன் நிலைமையை புரிந்துகொண்டு அழைக்கிறான் என்று தெரிந்துகொண்டவள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு, பச்சை பட்டனை அழுத்தினாள்.

அவன் முகம்…

“மிது… என்னாச்சு… எதை நினச்சும் கவலைப்படாத…” என்று நிறுத்தியவன் “நீ தைரியமா இருக்கனும்… ஆனா… நான்… எனக்கு தான்… தெரில… முழுசா ரெண்டு நாள் ஆகல… கஷ்டமா இருக்கு… ஏதோ ரொம்ப நாள் உன்ன பாக்காத மாதிரி…” வார்த்தைகள் கோர்வையாக வராமல், அவளுக்கு சமாதானம் சொல்ல அழைத்தவன், அவன் புலம்ப ஆரம்பித்தான்.

அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தானும் புலம்பினால் சரிவராது என்று “சக்தி… கொஞ்ச நாள் தான்…சீக்கரம் வந்துடறேன்” என சொல்ல

“எனக்கு இங்க இருக்கவே… பிடிக்கல… எப்படி இருக்கபோறேனோ… நான் பெங்களூருக்கே போறேன். இங்க இருந்தா ஒரே ஞாபகம்… முடில” என சிறுபிள்ளைபோல் புலம்பினான்.

“ஹ்ம்ம் சரி சக்தி…” என நிறுத்தியவள், தன் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி, அவன் முகம் பாராமல் “ஐ மிஸ் யு சோ மச்” என்றாள் சன்னமான குரலில்.

அவள் சொன்னதிற்கு சந்தோஷப்படுவதா… இல்லை வேதனைப்படுவதா? முதலில் குழம்பினாலும், தன்னைப் போல் அவளும் பிரிவை நினைத்து வருந்துகிறாள் என்ற எண்ணமே அவனை சந்தோஷப்படுத்தியது.

“ஒரு வருஷம் தான் மிது… சீக்கரம் ஓடிடும்” அவள் தந்த அதே சாமாதானத்தை அவளிடம் திருப்பினான். ஆனால் அவளின் இந்த புதிய பரிமாணம், அவன் மனதில் ‘எப்படியும் தன்னை அவள் ஏற்றுக்கொள்வாள்’ என்ற நம்பிக்கையைத் தந்தது…

கொஞ்ச நேரம் மெளனமாக கழிய… பின் மனமே இல்லாமல் சக்தி “சரி மிது. அலுப்பா இருக்கும். நீ ரெஸ்ட் எடு. ஒழுங்கா மருந்து எடுத்துக்கோ. நல்லா தூங்கணும்… தூக்கம் வரலைனா எப்போனாலும் என்ன கூப்பிடு. சரியா?”

“ஹ்ம்ம்” என்றாள் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டி. புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தான்.

மாதங்கள் தன் போக்கில் உருண்டன. தினமும் அவளின் காலை பொழுதை அவன் ஆரம்பித்துவைப்பான்… சரியாக மதியம் பனிரெண்டு மணி இந்திய நேரப்படி. அவன் உறங்கச்செல்வது அவளின் முகத்தை பார்த்தப்பின்…

முன்புபோல் அவன் பேச்சில் பெரிதாக வித்யாசம் தெரியவில்லை அவளுக்கு. தான் இல்லாத வாழ்க்கையை பழகிக்கொண்டான் என்று அவள் நினைத்தாள். அந்த எண்ணம் மிகவும் வலித்தது… இருந்தும் எதையும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.

இப்படியிருக்க, ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், பிரிவின் தாக்கம் அதிகமாக, வேண்டாம் என நினைத்தாலும் அவனையும் மீறி அவளிடம் தன் மனதை பட்டும் படாமலும் சொல்லிவிட்டான்…

“சக்தி… இன்னைக்கு இங்க என் காலேஜ் ஃபிரன்ட் கல்யாணம். போயிட்டு வந்தேன். ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு கிறிஸ்டியன் வெட்டிங் பாத்தேன்… சூப்பர்ரா இருந்துச்சு” எப்பொழுதும் போல் அன்றைய நிகழ்வுகளை சொன்னாள். அவன் ‘ஹ்ம்ம்’ கொட்டிக்கொண்டு இருந்தான்.

“அப்பறம் சக்தி… தமிழ், ஜூலியை பத்தி விசாரிச்சியா? எல்லாம் ஒகே தானே” அதற்கும் ஹ்ம்ம் என்ற பதிலே அவனிடம்.

“ஹாசினி குட்டி எப்படி இருக்கா… மத்த குட்டிஸ்லாம் எப்படி இருக்காங்க… ரொம்ப மிஸ் பண்றேன் அவங்கள…” முகத்தில் சின்ன கவலை… அதற்கும் அவனிடம் ஹ்ம்ம் மட்டுமே.

“இந்த கோர்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு இருக்கு சக்தி. கண்டிப்பா நம்ம நடத்தப்போற டேகேர்’ல நிறைய மாற்றம் கொண்டு வரலாம். அப்பா ஆசைப்பட்டது போல ஆதரவு தேவைப்படுற குழந்தைகளுக்கு உதவலாம் சக்தி… அவங்களுக்கு நல்ல ஆரம்பக்கல்வி குடுக்கலாம்…”

“ஹ்ம்ம்…” என்றான்… அது வாய்ஸ் கால் என்பதால், அவனின் முகவாட்டத்தை பார்க்க முடியவில்லை, ஆனால் அவன் பதில் அதை நன்றாக காட்டியது அவளுக்கு. “சக்தி… என்னாச்சு” ஆதரவாக கேட்க, சில நொடி மௌனத்துக்கு பின், கரகரத்த குரலுடன்…

“மிது… நீ சொல்றதெல்லாம் செய்யலாம்… சீக்கரம் வா மிது… என்னால முடியல. உன்ன பாக்கறதுக்கு முன்னாடி தனியா தான் இருந்தேன், ஆனா அது என்ன பெருசா பாதிக்கல. ஆனா… இப்போ… இந்த தனிமை என்ன கொல்லுது…”

“நீ சொல்ற மாதிரி எல்லாமே நம்ம செய்யலாம்… ஜோசப் ஸார் கேத்தி மேடம் மாதிரி… தமிழ் ஸார் ஜூலி ஆண்ட்டி மாதிரி… ஆனா அப்பப்போ, எங்க என் அம்மா மாதிரி எனக்கு தனி வாழ்க்கை தானோன்னு அடிக்கடிதோணுது…”

“அவங்களுக்கு நான் இருந்தேன்… ஆனா… நான் … எனக்கு… யாருமேயில்லை… சீக்கிரம் வா மிது” என்றான் கலங்கிய கண்களுடன், வலித்த மனதுடன், என்ன பேசினோம் என்று உணராமலேயே.

அதைக்கேட்ட மிதுலாவிற்கு சப்தநாடியும் அடங்கியது.

நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை விரும்புவாயா? என்ற வசனம் பேசினால் தான் அது காதலா? இதுபோதாது அவன் மனதை அவளுக்கு சொல்ல? 

எது அவன் வாழ்வில் நடக்கக்கூடாது என்று நினைத்தாளோ அதுவே நடந்தேறியது.

அவன் பேசிவிட்டு சில நொடிகள் மெளனமாக இருக்க, எந்த பதிலும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தாள்.

தன் பேச்சின் தீவிரத்தை உணர்ந்த சக்தி, அவனையே திட்டிக்கொண்டு அவளை அழைத்தான். சுவிட்ச்ட் அஃப் என்றது.

மிதுலாவோ, அவன் மனதில் ஏற்பட்ட தாக்கத்தை நினைத்து மருண்டாள். அது அவனுக்கு நல்லதில்லை. தான் ஒரு சரியான தேர்வு இல்லை. அவனுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல பெண்ணுடன் அமையவேண்டும். காலம் பார்த்துக்கொள்ளும்.

இதற்கு ஒரே வழி, இனி அவனிடம் பேசுவதை குறைத்துக்கொள்ளவேண்டும். இருவரும் பேசப்பேச, அது தேவையில்லாமல், அவன் மனதில் தேவையில்லாத எண்ணங்களை விளைவிக்கும். விலகி இருப்பதே நல்லது.

‘ஆனால் அது தன்னால் முடியுமா?’ என்ற கேள்வியும் எழுந்தது அவளுள். தன்னால் முடியுமோ இல்லையோ, சக்தியின் நல்வாழ்க்கையை கருதி இதை செய்தாகவேண்டும் என முடிவெடுத்தாள்.

அடுத்த சில நாட்கள், அவன் அழைப்பு வந்தால் எடுக்காமல் தவிர்த்தாள். அவனிடம் பேசாதது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

தனக்கு கடவுள் கஷ்டத்தை மட்டும் கொடுக்கிறாரே…? என்ன பாவம் செய்தோம்… ? அவனை மறக்க வேண்டும் என்று நினைத்தால் கனவில் வருகிறான்.

அதுபோதாது என்று, கதைகளிலும் படங்களிலும் வருவதுபோல், தன் முன்னே அவன் நிற்பது போலவும், ‘உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்று சொல்வதுபோல பிரம்மை வேறு.

முதலில் ‘நிஜமாக தன்னை பார்க்க வந்துவிட்டானோ?’ என்று ஏமாற்றமடைந்திருக்கிறாள். பின் அது சகஜமானது.

தினமும் அவன் குரலில் நாட்கள் தொடங்குவது என பழக்கமாகியிருந்தது. இப்போது அது இல்லாதது மறுபடியும் வாழ்வில் வெறுமை சூழ்ந்தது போல உணர்வு. இரவில் சில நாள் தூக்கம் வராமல் தவித்தாள்.

நாட்கள் ஓடின. முதலில் அவளை அழைத்தவன், போகப்போக அழைப்பதை நிறுத்திவிட்டான். ‘ஒருவேளை மறந்துவிட்டானோ?’ என்று எண்ணும்போது, இதயம் சுக்குநூறாகிப்போனது. கதறி அழுதாள்.

இருப்பினும், ‘அது அவனுக்கு நல்லது’ என்று மனதை தேற்றிக்கொண்டாள்.

அப்படியிருக்க, ஒரு நாள் காலை அவள் எழுந்து முகப்பிற்கு வர, அங்கே சுவற்றில் சாய்ந்து நிற்பது போல் அவனின் பிம்பம்.

“அடப்போடா. சும்மா காலங்காத்தால வந்துட்டு. பார்வையை பாரு. அப்படியே ஆள இழுக்கிற மாதிரி. பெரிய காதல் மன்னன்னு நினைப்பு” சத்தமாக புலம்பிவிட்டு சமலயறைக்குள் செல்ல எத்தனிக்க, மறுபடியும் திரும்பிப்பார்த்தாள் நிஜமாக வந்திருப்பானோ என நினைத்து.

அவன் அங்கு இல்லை. “இம்ச பண்றானே. மறக்கணும்ன்னு நினைச்சாலும் படுத்தறான். போன் பண்ண மாட்டாராம்… ஆனா தினமும் முன்ன வந்து நிப்பாராம்” என சொல்லிக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்தாள்.

சூடாக காஃபி போட்டு குடிக்க வாயருகே எடுத்துச்செல்லும்போது “எனக்கு இல்லையா மிது???” என்ற அவனின் காதல் சொட்டும் குரல் பக்கத்தில் கேட்டதில் தூக்கி வாரிப்போட்டது. கப்பை இறுக்க பிடித்துக்கொண்டு மேடைமேல் வைத்தாள்.

திரும்பி பார்க்கவில்லை. நிஜமா? இல்லை கற்பனையா? அவளால் யூகிக்கமுடியவில்லை. ஆனால் இத்தனை நாள் தொலைவில், போனில் கேட்ட குரல், இன்று மிக அருகில் கேட்டது.

திரும்ப வேண்டும். அவன் குரலை காதால் கேட்டு, அவனின் முகத்தை கண்களில் நிரப்பிக்கொள்ளவேண்டும். மறுபடியும் அழைத்தான் “மீது…”

அவளால் முடியவில்லை. திரும்பினாள். அவளையே பார்த்தபடி அவன். அவளும் பார்த்தாள். கண்கள் கலங்கியது. உதட்டை கடித்து அதை வரவிடாமல் தடுக்க, அவள் கண்மணிகள் அவனைப்பார்த்து அலை பாய்ந்தது.

அவளின் தவிப்பை பார்த்தவன், தாமதிக்காமல் அவளை தழுவிக்கொண்டான். அவள் தடுக்கவில்லை. அவனின் மார்பில் ஒண்டினாள். கண்களில் இருந்து கண்ணீர் விடுபட்டது. இருவருக்கும்!!!

———————

கேட்டுக்கொண்டிருந்த மங்கையின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது. மிதுலா அவள் அன்று எப்படி உணர்ந்தாலோ, அதே நிலைமையில் இருந்தாள் இப்பொழுதும். ஆனந்தம் கலந்த ஆனந்தக் கண்ணீர்!!!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved