வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 10
காழ்ப்பின் கருமை – 3(1)
ஆதவனும் மங்கையும் எதுவும் பேசாமல், என்ன பேசுவது என்று தெரியாமல் ஏதோ ஒரு இனம் புரியாத சங்கடத்துடன் மிதுலாவயே பார்க்க. அவளே புரட்ட தொடங்கினாள் காழ்ப்புணர்ச்சியால் விளைந்த கனமான கருப்பு பக்கங்களை.
———————
மிதுலா சொன்னதை கேட்டு நொறுங்கிப்போனான் சக்தி.
அன்றிலிருந்து நடந்த சம்பவங்களை, தன் வாழ்வின் ரகசியத்தை ஒருவரை தவிர யாரிடமும் சொல்லாத மிதுலா, சக்தியிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள். அந்த ஒருவர் யார் என்பதையும் பார்ப்போம்.
அந்த அறையில் இருந்தவன் கைகள் மிதுலாவிடம் அத்து மீற, என்னசெய்வதென்று தெரியாமல் அவனை அடிக்க ஆரம்பித்தாள். அனால் அதெல்லாம் எருமை மாட்டின் மேல் மழை பேய்ந்தது போல் இருந்தது அந்த தடியனுக்கு. மிதுலா துடித்துப்போனாள்.
அவனை எப்படி தடுப்பது என்று தெரியாமல் “நான் சாப்பிடறேன். என்னவிட்டுடு” என்று அவனிடம் கைகூப்பி கெஞ்ச, அவளை விட்டான். பின் அவளை தொந்தரவு செய்யாத போதிலும், அவன் கண்கள் அவளிடம் பட்டு பட்டு மீண்டன.
அவன் மனதில் ‘சரக்கு செம்மயா விலைபோகுமே. உன்னை இரண்டு நாள் மட்டும் வைத்திருந்து சம்பாதிப்பதை விட, விற்றால்?’ என்ற எண்ணம் மேலோங்கியது.
இரவு எட்டியது. மிதுலாவின் மனதில் ‘இன்னமும் ஒரே நாள் எப்படியாவது இங்கிருந்து போய்விட வேண்டும்’ என்று எண்ணினாள். ஆனால் நடந்ததோ!!!
அன்றைய இரவு, அவளுடன் மூன்று சிறுமியர் அடைக்கப்பட்டனர். நால்வரையும் நடுராத்திரியில், துணிகளை ஏற்றிச்செல்லும் லாரியில், கை கால்களையும், வாயையும் கட்டியவண்ணம் ஏற்றிக்கொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறினர்.
பதறிப்போன மிதுலா, ‘இரண்டு நாட்களில் சென்று விடுவோம்’ என்றெண்ணிலால் இதுயென்ன எங்கயோ கூட்டிச்செல்கிறார்கள் என்கிற பதட்டம், பயம். அவள் கண்கள் அந்த பீதியை காட்டியது.
இருப்பினும் அந்த சிறுமியால் என்ன செய்ய முடியும்? அதே நிலையில் அதே வயதில் இன்னமும் மூன்று சிறுமியர். நால்வர் கண்களில் அதே கலவரம். எதுவும் செய்யமுடியாத நிலை. ஏதோ அவர்களுக்கு சாப்பிட கொடுக்க, நால்வரும் சிறிதுநேரத்தில் ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தனர்.
மிதுலா, உறக்கத்தில் இருந்து கண்விழித்து எழுந்த பொது, ஒரு அறையின் பெரிய கட்டிலில் இருந்தாள். சுற்றியும் மங்கிய விளக்கின் வெளிச்சம். அறையினுள்ளேயே பாத்ரூம். அங்கே ஒரு டேபிள் மற்றும் ஒரு நாற்காலியே. ஏதோ அடைபட்டது போல் உணர்வு அவளுக்குள்.
எங்கு இருக்கிறோம். என்ன செய்யப்போகிறார்கள். என்ன நடக்கப்போகிறது. எதுவும் விளங்கவில்லை. பாவம் சின்ன பெண் ஆயிற்றே. சுற்றியும் பார்வையை சுழலவிட்டாள். மூச்சு முட்டியது.
அவளுக்கு அப்போது தெரியாத ஒன்று… இன்னமும் எட்டு ஆண்டுகள் அங்கேயே, அந்த அறைமட்டுமே என்று இருக்க போகிறாள் என்பதே.
இன்னமும் தெரியாத ஒன்று… தனக்கு ஓற்றை அறை வாழ்க்கை மட்டுமே வேண்டும் என்று அவள் வாழ போகும் வாழ்க்கையை பற்றி.
உள்ளே இருபது வயதில் இருக்கும் பெண்மணி வந்தாள். இவளுக்கு தேவையானதை உண்ணக்கொடுக்க, அவளிடம் “இது எந்த ஊரு? நான் எங்க இருக்கேன்? நீங்க யாரு?” என்று கேள்வி மேல் கேள்விகளை தொடுத்தாள்.
அந்த பெண், “அதெல்லாம் உனக்கு தெரிஞ்சு என்ன பண்ணப்போற? நீ சின்ன பொண்ணு உனக்கு உதவியா இருக்கப்போறேன். நான் பக்கத்து ரூம் தான்.” என ஏதோ சொல்லவேண்டுமே என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அந்த உணவயே வெறித்து பார்த்தாள். ‘இதை சாப்பிட வேண்டுமா?’ என்ற எண்ணம் தோன்றினாலும் அன்று அவள் சாப்பிடமாட்டேன் என்று சொன்னபோது அவன் அத்துமீறியது நினைவிற்கு வர, பயந்து போனவள், அள்ளி அள்ளி உணவை வாயில் அடைத்துக்கொண்டாள் எங்கே அவன் வந்துவிடுவானோ என்று.
அவள் அறியாதது அதில் கலந்திருந்த மயக்க மாத்திரை.
சிறிதுநேரத்தில் எப்படி உறங்கினோம் என தெரியாமல் உறங்கிவிட்டாள். யார் அறைக்குள் வந்தார்கள் சென்றார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. அவளுக்கே தெரியாமல் ஒரு நடுத்தர வயதுமிகுந்தவனுக்கு விற்கப்பட்டாள்.
அவளுக்கு தெரியாமலேயே அனைத்தும் முடிந்தது. அவன் வந்தான். அவள் மயக்கத்தில் இருக்கும்போதே செய்யவேண்டியதை செய்தான். பின் சென்றுவிட்டான்.
அவள் உறங்கிக்கொண்டிருக்கும் போது முன்பு வந்த பெண், அவளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்தாள். இடுப்பிற்கு கீழ் தையல். சில காயத்திற்கு மருந்து.
அந்த பெண்ணிற்கே தாங்கிக்கொள்ளமுடியவில்லை மிதுலாவை பார்க்கும்போது. முதலில் பார்த்த போது மலர்ந்து இல்லாவிட்டாலும் ஒரு அழகிய மலர் போல் இருந்தாள். ஆனா இப்போது, கசக்கி போட்டதுபோல் துவண்டுபோயிருந்தாள்.
சிறிது நேரத்தில் மிதுலாவிற்கு நினைவு வந்தது. அவ்வளவு வலி. கழுத்து கைகளில் எரிச்சல் ஏதோ மருந்தின் வாடை. கண்களை நன்றாக திறந்து பார்க்க, பக்கத்தில் அதே பெண்.
“எனக்கு என்ன ஆச்சு? ஏன் மருந்து போட்டுருக்கு? கீழ ஏன் இவளோ வலி” என ‘என்ன நடந்தது’ என்று தெரியாமல், புரியாமல், பாவமாக, கலங்கிய கண்களுடன் மிதுலா கேட்க, அது அந்த பெண்ணின் மனதை வதைத்தது. அவள் கண்கள் கலங்கியது மிதுலாவிற்காக.
*******************Start here********************
மிதுலாவின் முடியை ஆதரவாக கோதியவள், “இனி உன் வாழ்க்கை இப்படி தான்… நீ பொறுத்துட்டு தான் ஆகணும் ம்மா…” என்றாள். அவளுக்கு புரியவில்லை. புரிந்து கொள்ளும் வயதும் இல்லை.
அந்த விவரம் தெரியாத சிறுமிக்கு தெரியவில்லை, பூப்படையும் முன்பே அவள் சீரழிக்கப்பட்டாள் என்று.
நாட்கள் அமைதியாக கழிந்தன. உடல் தேறும்வரை அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. மிதுலாவிக்கு புரிந்துவிட்டது. இனி வீட்டிற்கு செல்லவே முடியாது என்பது.
அவள் ஊரில் இருந்தபோதே, ஒரு இடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருப்பாள். ஆனால் இங்கு!!!
ஒருநாள் அவளை பார்த்துக்கொள்ள வந்த அந்தப்பெண்ணிடம் “அக்கா. எனக்கு புருஞ்சுபோச்சு… என்ன இங்கேயிருந்து விட மாட்டாங்கன்னு. தலையே வெடிக்குது க்கா. என்கூட ஏதாச்சும் பேசுங்களேன். இந்த ரூம்லயே… சும்மாவே இருக்க முடில” என்று அந்த பெண்ணின் கைகளை பற்றிக்கொண்டு, கண்ணீர் மல்க மிதுலா கேட்ட விதத்தில் அந்த பெண் அவளை தழுவிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“நான் கிறிஸ்டி. என் ஊரு பாலக்காடு. நர்ஸ் வேல பாத்துட்டு இருந்தேன். இங்க மும்பைல வேல தேடி வந்தேன். இவனுங்க கிட்ட மாட்டிட்டேன். இதோ… இந்த மாதிரி மருத்துவம் பாக்கற வேல. அதில்லாம அப்பப்போ அதையும் செய்யசொல்வானுங்க” என்று அவள் முடிக்கும்முன்
“எதை செய்ய சொல்வாங்கக்கா?” என்று பரிதாபமாக கேட்ட மிதுலாவை பார்க்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
அடுத்தொருநாளும் மிதுலாவை மயக்குவித்து, முன்பு அவளிடம் வந்த அவனிடம், ‘அரக்கன் போல் நடந்துகொள்ளவேண்டாம், சிறிய பெண், அவள் உடம்பு தாங்காது’ என கிறிஸ்டி சொல்லி உள்ளே அனுப்பிவைத்தாள்.
அவனும் அனைத்தையும் முடித்துவிட்டு சென்றான்.
மயக்கம் தெளிந்து எழுந்த மிதுலாவிக்கு உடம்பில் அவ்வளவு வலி. சோர்வு. ஏதோ இரவு பகலாக வேலை செய்ததுபோல்.
இதே நடைமுறை ஆனது சிலநாட்களுக்கு. அவளுக்கு தெரியாமல் அவளை துவம்சம் செய்தான் அவன்.
மாதங்கள் நகர, அவளும் பெரிய பெண் ஆனாள். இருப்பது பத்தாது என்று நான்கு ஐந்து நாட்கள் அந்த வலி வேறு…
ஆனால் அவள் அப்போது அறியாதது இன்னும் சில நாட்களில் மயக்குவிக்காமல் அவளை அவன் அணுகப்போகிறான் என்று.
அந்த நாளும் வந்தது. அவன் உள்ளே நுழைந்ததும், பதறி போனாள் புது மனிதன் அறைக்குள் வந்ததை பார்த்து. பயம் உடம்பெங்கும் பரவியது.
அவனோ செய்ய வந்ததை செய்ய ஆரம்பிக்க, மிரண்டு போனாள் மிதுலா. தடுக்கவும் சக்தியில்லாமல்… நடப்பதை சகித்துக்கொள்ளவும் சக்தில்லாமல், தவித்தாள்.
அனைத்தும் முடிந்தது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல். அவன் வேலை முடிந்ததும் சென்றுவிட்டான்.
பேய் அடித்தது போல் இருந்தாள் மிதுலா. கிறிஸ்டி சொன்ன எதுவுமே அவள் காதுக்கு போகவில்லை. அந்த கொடூரத்தில் இருந்து மீள முடியாமல் பித்து பிடித்ததுபோல் இருந்தாள்.
இந்த வழக்கம் தொடர்ந்தது. முதலில் பயந்தவளுக்கு பழகிப்போனது. ஏதோ மிருகம் தன்னை சூறையாடுவதுபோல் நினைத்துக்கொண்டாள். தன்னையும் அறியாமல் கந்த சஷ்டி கவசத்தை சத்தமாக சொல்ல ஆரம்பித்தாள்.
அதிலேயே லயித்தாள். எதையும் பார்க்க கூடாது என்று கண்களை மூடிக்கொள்வாள். ஏனோ அது அவளுக்கு வலிமையை கொடுத்தது. எதையும் தாங்கும் வல்லமையை கொடுத்தது.
அனைத்தும் முடிந்து, வந்தவன் சென்றபின், நடந்ததை மறக்க, தனிமையை மறக்க, வீட்டின் நினைவை மறக்க, தன்னையே மறக்க அவள் தேர்ந்தெடுத்தது சஷ்டி கவசமே!!!
வருடங்கள் உருண்டது. தமிழ் தெரியாதவர்கள் அவளை அணுகும்போது, அவர்களுக்கு புரியவில்லை.
ஆனால் ஒரு நாள் தமிழ் தெரிந்தவன் வந்தபோது, அவளை நெருங்கும்போது, அவளை ஆட்கொள்ள நினைக்கும்போது, கவசத்தை அவள் ஆரம்பிக்க, பதறிக்கொண்டு அவள் மேல் இருந்து எழுந்தான்.
‘நிறுத்து’ என்று அவன் பல முறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளிடம் உக்கிரமாக நடந்துகொண்டான். பொறுத்துக்கொண்டு இன்னமும் சத்தமாக சொன்னாள். கோவத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றவன், அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அந்த நிலமையிலும், மிதுலாவின் இதழ்கள் சிரித்தது கவசத்தை சொன்னபடியே!!!
———————
இதை கேட்டுக்கொண்டிருந்த சக்தியின் இதயம் துடிக்க மறந்தது. அவளின் முகத்தை பார்க்கமுடியவில்லை. பதபதைத்தது!!!
“பாத்தியா சக்தி. நீ சொல்லிக்கொடுத்த சஷ்டி கவசத்தோட மகிமையை. நிறைய சஷ்டி கவச ராத்திரிகள்” இதை மட்டுமே சொன்னாள். இப்போது அவள் கையை அவன் இறுக பற்றிக்கொண்டான்.
