Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 12

காழ்ப்பின் கருமை – 3(3)

வருணோ அவள் அருகில் வந்து “மக்கு” என்று தலையில் குட்டிவிட்டு “ஒன்னு சொல்லவா…? இது வர நான் என்ன நல்லது செஞ்சுருக்கேன்னு தெரில. ஆனா உன்ன பாத்தவுடனே, உன்கூட பேசினவுடனே, உன் பத்தி கேட்டவுடனே, எனக்கு உன்ன ரொம்பவும் பிடுச்சுருச்சு”

“அதான் உனக்கு உதவறேன்னு சொல்லிட்டேன். அத கண்டிப்பா செய்வேன்” என்று அழுத்தமாக சொல்ல, அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் மிதுலா.

“ஹலோ ஹலோ… ரொம்ப ஃபீல் பண்ணாத. அந்த ப்ரோகருக்கு சந்தேகம் வந்துடும். போ போய் சீக்கரம் துணி எடுத்துவை…”

“அப்பறம் எல்லாத்தயும் எடுத்துக்காத. சந்தேகம் வந்துடும். உன் அக்காகிட்டயும் எதுவும் சொல்லாத இப்போ” என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டான்.

அவனையே வெறிக்க பார்த்துக்கொண்டு ‘யாரிவன்? நல்லவங்க கூட இங்க வருவாங்களா? நான் இங்க இருந்து போகப்போறேனா?’ பல கேள்விகள் மனதில். சில சொட்டு கண்ணீர் அவள் கண்களில். நன்றியுடன் அவனைப் பார்த்தாள்.

அவள் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்தவன் “இந்த கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா நெஜம்மா ஏதோ பண்ணுது. ப்ளீஸ். அழாத” என்றான் கனிவாக.

அவள் கைகள் தானாக கூப்பியது. அதை பிரித்துவிட்டவன் “அம்மா தாயே மாட்டிவிட்டுடாத ஃபீல் பண்றேன் சொல்லிட்டு” என்று இதழோரம் புன்னகையுடன் சொல்ல, அவளும் புன்னகைத்தாள்.

கிறிஸ்டிக்கோ, என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாமல் கிளம்பினாள். திடீரென அவளிடம் இருந்தவன், ஏதோ அழைப்பு வந்து, எடுத்துப்பேசியபின், அவளை நெருங்கவில்லை.

பின் ப்ரோக்கர் வந்து அவளையும் குழந்தைகளையும் கிளம்ப சொல்ல, ஒன்றுமே விளங்காமல் தயாரானாள்.

அதிகாலை நேரம் ஆகிவிட, இருவரும் வெளியே அழைத்துவரப்பட்டனர்!!

கிறிஸ்டியோ ‘இது என்னடா வாழ்க்கை. எவனெவனோ எங்கெங்கோ அழைத்துச்செல்கிறான்’ என்று நினைக்க, மிதுலாவிற்கோ, வருணை நம்பினாலும், ஏதோ ஒரு பயம் நெருடிக்கொண்டே இருந்தது.

இருந்தாலும் ‘தான் அனுபவிக்காததென்ன? புதிதாக ஒன்று வந்து என்ன செய்துவிடும்?’ என்ற எண்ணமும் இருந்தது.

வருணின் நண்பன் காரை ஓட்ட, நடு சீட்டில் வருணும் மிதுலாவும் உட்கார்ந்திருக்க, பின் சீட்டில் குழந்தைகளுடன் கிறிஸ்டி உட்கார்ந்திருந்தார்கள். அப்போது கிறிஸ்டியின் பிள்ளைகளுக்கு நான்கு வயது.

“ஆமா உன் பேரு என்னனு நான் கேட்கவே இல்லையே” என்று வருண் கேட்க, புன்னகைத்த மிதுலா தன் பெயரை சொன்னாள். “நைஸ் நேம். ஐம் வருண்” என்று தன்னை அறிமுக படுத்திக்கொண்டான். விசித்திரமாக பார்த்தாள் கிறிஸ்டி இதையெல்லாம்.

“இப்போ எங்க போறோம் வருண்?” மிதுலா கேட்க “நான் சொன்ன கெஸ்ட் ஹவுஸ்க்கு தான். விடுஞ்சதும் நீங்க எங்க போகணும்ன்னு சொல்லுங்க, அதுக்கான ஏற்பாடு பண்றேன்” என்று சொல்லும்போது தான் கிறிஸ்டிக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது.

மனது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. சுதந்திரம் கிடைத்ததுபோல் உணர்வு. ஆண்டவர் அனுப்பிவைத்த தேவதையாகவே பார்த்தாள் வருணை.

மிதுலாவிற்கோ, என்னவென்று விளங்கிக்கொள்ள முடியாத உணர்வு. ‘விடியும் விடியல் புது வாழ்விற்கான விடியல்’ என்றே நினைத்தாள்.

எட்டு வருடத்தில் முதல் முறை வெளியே வந்திருந்தாள். தூரத்தில் சூரிய உதயம். கண்கள் கூசியது.

பார்க்க முடியாமல் முகத்தை வருண் புறம் திருப்ப, அவன் என்ன என்பது போல் கண்களால் கேட்க, “எட்டு வருஷம்… சூரிய உதயம் கூட மறந்துடுச்சு இந்த கண்களுக்கு. அதுதான் கூசுது” என்றாள் மறுபடியும் உதயத்தைப் பார்த்து.

“ஒரு நாள் கூட வெளிய வந்ததில்லையா?” அதிர்ச்சியுடன் கேட்க “ஹாஹாஹா. ரூம விட்டு, நாலு சுவரை விட்டு வெளிய வந்ததில்லை வருண்” என்றாள் சாதாரணமாக. ஆனால் குரலில் அத்தனை வலி.  

ஏனோ அவளால் சூரிய வெளிச்சத்தை பார்க்கமுடியவில்லை. இருக்கையில் தலைசாய்த்து கண்கள் மூடி அமைதியாக இருந்தாள். அவளின் ஒவ்வொரு செயலும் வருணைக் கவர்ந்தது. புன்னகையுடன் அவளையே பார்த்திருந்தான்.

கெஸ்ட் ஹவுஸும் வர, அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவன், நண்பனை கிளம்பச்சொல்லிவிட்டு, கிறிஸ்டியை ஒரு அறைக்கு அனுப்பி, மிதுலாவை மேலே இருந்த அறைக்கு கூட்டிச்சென்றான்.

“நான் அக்கா கூடவே இருந்துக்கறேனே” என்று அவள் கேட்டும் விடாமல் மேலே அழைத்துச்சென்றான்.

அவளை தனியாக அழைத்துவந்தது, வயிற்றில் ஒரு மூலையில்  பீதியாக இருந்தாலும் ஏனோ அவனை நம்பினாள்.

ஒரு அறையை காட்டி “நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. தூக்கம் வரலைனா, பால்கனிக்கு போ. நீ அதுக்கு பழகணும்” என்று சொல்லிவிட்டு கீழே சென்றுவிட்டான்.

‘என்ன மாதிரி ஆண்மகன் இவன்? சந்தித்த இடம் சரியான இடமில்லை… ஆனால் கண்ணியம் தவறவில்லையே…’ மனதில் வருணை மெச்சிக்கொண்டவள், உள்ளே சென்றாள்.

‘அப்படி என்ன தான் இருக்கிறது அந்த பால்கனியில்’ என்று பார்க்க, அசந்து போய் நின்றாள்.

சூரியன் ஒளிக்கதிர்கள் கடலை சீண்டிக்கொண்டிருக்க, அதை பார்த்த வானம் வெட்கப்பட்டு சிவந்திருக்க, அந்த சீண்டலில் கடலின் அலைகள் குதூகலித்துக்கொண்டிருந்தது.

அழகான அந்த காட்சியை பார்த்தவள், திடீரென ஏதோ தோன்ற, அவசரமாக உள்ளே வந்து கதவுகளை அடைத்துக்கொண்டாள். வெளிச்சம் உள்ளே வரக்கூடாது என்று.

அப்போதே புரிந்துகொண்டாள் வருண் ஏன் தன்னை இந்த அறைக்கு அழைத்துவந்தான் என்று. புன்னைகை தானாக ஒட்டிக்கொண்டது.

ஆனால் ஏனோ அந்த சூரிய வெளிச்சம் அவளை அவஸ்தையுறச்செய்தது. மனம் இருளையே நாடியது. எவ்வளவு நேரம் கட்டிலில் அமைதியாக உட்கார்ந்திருந்தாலோ, கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள். வாசலில் வருணும் கிறிஸ்டியும்.

கிறிஸ்டியிடம் வருண் அனைத்தையும் சொல்லியிருந்தான்.

இருவரும் உள்ளே வர ” மிதுலா. நம்ம எங்க போகனும்ன்னு கேட்கறாரு. பிள்ளைங்களை வெச்சுட்டு நான் என் ஊருக்கு போக முடியாது. அதுனால பெங்களூருக்கு ட்ரெயின் பிடிச்சுவிட சொல்லிருக்கேன். நீயும் என்கூட வந்துடு”

“சரிக்கா” என்று அவள் சொல்ல வர, “உனக்கு உன் வீட்டிக்கு போகணும்ன்னு இல்லையா மிதுலா?” கேட்டான் வருண்.

அதற்கு வெற்றுப்புன்னகையை உதிர்த்தவள் “இந்த நிலமைல அவங்க முன்னாடி போய் நிக்கறதும் அவங்கள உயிரோட கொல்றதும் ஒன்னு வருண். மனச தேத்திருப்பாங்க இந்த எட்டு வருஷத்துல”

“இப்போ போய் இந்த கோலத்துல நின்னேன்னா துடுச்சுப்போயிடுவாங்க. நான் அக்காகூடவே போறேன்” என முடித்துவிட்டாள்.

அவனும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. கிறிஸ்டியும், மிதுலாவும் புறப்பட்டனர்.

“நீ எப்படி புரோக்கர் கிட்ட சமாளிக்கப்போற?” மிதுலா கேட்க “அவன்லாம் ஒரு ஆளே கிடையாது. பணத்தை தூக்கிப்போட்டா பொறுக்கிட்டு ஓடிடுவான். மீறி பேச மாட்டான். அப்பாமேல பயம் இருக்கும் அவனுக்கு” என்றான்.

“அவளோ பெரிய ஆளா உன் அப்பா?” மிதுலா விழிகள் விரிந்து கேட்க …

அவள் கண்களை பார்த்து புன்னகைத்து “அப்பா… MP” என்றான். அவளுக்கு அந்த பதவியின் ஆற்றல் பற்றி தெரியவில்லை. கிறிஸ்டி அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

” ஓ… போலீஸ விட பெரிய வேலையோ?” அப்பாவியாக கேட்ட, மிதுலாயை பார்த்த வருணிற்கு அவள் வெளியுலக அனுபவமே இல்லாமல் இருப்பது வருத்தமாக இருந்தது.

“மிதுலா. MP’ங்கிறவங்க, பெரிய ஆளுங்க. போலீஸ்லாம் அவங்ககிட்ட வேலைபாக்கறவங்க” என்று விளக்க உரை அளிக்க கிறிஸ்டி ஆரம்பிக்க “நான் தெருஞ்சுட்டு என்ன பண்ண போறேன்” சலிப்பாக பதிலளித்தாள்.

வருண் கிறிஸ்டியிடம், “நீங்க அவளைப் பத்திரமா பாத்துக்கோங்க. வெளி உலகமே தெரியாம இருக்கா” என்று சொல்லிவிட்டு, மிதுலாவிடம் ஒரு கவரை நீட்டினான்.

அவள் என்ன என்பது போல் பார்க்க “இதுல பணம் இருக்கு. நீங்க செட்டில் ஆகற வர தேவைப்படும் இல்லையா? அதுக்கு தான்” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு போனை நீட்டினான்.

“இதுல என் நம்பர் ஸ்டோர் பண்ணி வெச்சுருக்கேன். ஒரு வருஷத்துக்கு ரிச்சார்ஜ் பண்ணிருக்கேன். ஏதாச்சும்னா உடனே கூப்பிடனும்… தயங்காம…” அக்கறையாக சொன்னான்.

“இதெல்லாம் எதுக்கு வருண்?” மிதுலா தயங்க “ப்ச்… ஏதோ உதவனும்ன்னு தோணுச்சு. அவ்ளோதான். உண்மைய சொல்லணும்ன்னா இது ஒரு பெரிய விஷயமே இல்ல எனக்கு” புன்னகையுடன் சொல்லி அவள் கையில் திணித்தான்.

‘தெரிந்தவர்களுக்கே உதவ யோசிக்கும் காலத்தில், சம்மந்தமே இல்லாத எங்களுக்கு உதவ முன்வருகிறானே? இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை சிறு வயதில் இங்கு கூட்டிவந்தவன் போலவும் மனிதர்கள் இருக்கிறார்கள்’ என்று எண்ணிக்கொண்டாள் மிதுலா.

இருவரும் வருணுக்கு நன்றிகள் கூறிவிட்டு, புறப்பட்டனர்!!!!

———————

தான் அந்த சிறை வாழ்க்கையில் இருந்து, வருண் என்ற ஒரு நல்ல மனிதன் மூலம் வெளியில் வந்ததை, சக்தியிடம் சொல்லிக்கொண்டிருந்த மிதுலா, அவனைப் பார்த்து “இதோட என் கஷ்டம் முடிஞ்சதுன்னு நினச்சேன் சக்தி. ஆனா விட்டாரா அந்த ஆண்டவர்?” வெறுப்புடன் சொன்னாள் மிதுலா.

அவளையே பார்த்திருந்தான். ‘அப்போது என்ன வயது இருக்கும் அவளுக்கு. பார்க்ககூடாததையெல்லாம் பார்த்துவிட்டாள். இன்னமும் என்ன?’ என்பது போல் பதட்டத்துடன் பார்த்தான் சக்தி.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved